Saturday, November 21, 2026

38. கற்சலையின் கண்ணீர்

 

கற்சிலையின் கண்ணீர்

கதைக் காட்சி


காட்சித் துவக்கம்

(கௌதமர் ஆசிரமத்துக்கு வெளியே, கௌதமர் கோபத்துடன் நிற்கிறார். எதிரே அகலிகை உடல் கூசி, ஒடுங்கி நிற்கிறாள். அருகே, இந்திரன் வேறுபுறம் பார்த்து நிற்கிறான்.)

அகலிகை: நாதரே! என் மீது குற்றமில்லை. இந்தக் காமுகன்தான் கள்ள வேடத்தில் வந்து என்னை ஏமாற்றி விட்டான். விடிந்து விட்டது என்று நினைத்து ஆற்றில் நீராடக் கிளம்பிய தாங்கள், சற்று தூரம் நடந்து சென்றபின், இன்னும் பொழுது புலரவில்லை என்று கண்டறிந்து குடிலுக்குத் திரும்பி வந்து விட்டீர்கள் என்று தவறாக நினைத்து ஏமாந்து விட்டேன். இந்தத் தவறுக்கு தாங்கள் என்ன பிராயச்சித்தம் விதித்தாலும் ஏற்றுக் கொள்கிறேன்.

கௌதமர்: பிராயச்சித்தமா? அறியாமல் செய்த தவறுக்குத்தான் பிராயச்சித்தம் உண்டு. காமத்தினால் மதியிழந்து, கணவனுக்கும் கள்வனுக்கும் வேறுபாடு காணாமல் இச்சித்த உனக்கு மன்னிப்பே கிடையாது. ஒரு ரிஷிபத்தினி தன்னைத் தீண்டியவன் ஒரு அந்நியன் என்று உணரவில்லை என்பதை இந்த உலகம் ஒப்பாது. உண்மை உன் உள்மனதுக்குப் புரிந்தும், அதை அலட்சியம் செய்து, ஏமாந்தவள் போல் நடித்து, இன்பத்தை நாடி விட்டாய்.

அகலிகை: சுவாமி! தங்கள் மீது ஆணையாகக் கூறுகிறேன்.

கௌதமர்: நிறுத்து. என் மீது ஆணையிடும் உரிமை உனக்கு இல்லை. இரு. அன்னியன் முன்னிலையில் உன்னைத் தண்டிக்க விரும்பவில்லை. முதலில் அவனை அனுப்புகிறேன். (இந்திரனிடம் திரும்பி) தேவேந்திரா! வானுலகத்தில் மேனகை, ரம்பை, ஊர்வசி, திலோத்தமை என்று இன்னும் எத்தனையோ தேவமகளிர் உன் ஏவலுக்கும் ஆவலுக்கும் காத்திருந்தும், நீ தீராத காமப்பசி கொண்டவனாய், ஒரு மானிடப் பெண்ணை, அதுவும் ஒரு ரிஷிபத்தினியை, இச்சித்து, அவளை வஞ்சத்தால் ஏமாற்றி, உன் மோகத்தைத் தீர்த்துக் கொண்டாய். எந்தக் கண்கள் உன் காமத்துக்கு வாசலாக அமைந்தனவோ, அந்தக் கண்கள் ஆயிரமாகப் பரவி, உன் உடல் முழுவதும் வியாபிக்கட்டும். ஆயிரம் கண்கள் கொண்டவனாக, உடலில் வேறு உறுப்புகளுக்கு இடமில்லாதவனாக, இனி உன் காம வேட்கையைக் கண்களாலேயே தீர்த்துக் கொண்டிரு.

(இந்திரனின் தோற்றம் மாறுகிறது.)

இந்திரன்: மகரிஷி, இதென்ன கொடுமை? என்னை வெறும் சல்லடையாக ஆக்கி விட்டீர்களே! ஐயோ, இந்தக் கோலம் எனக்கே சகிக்கவில்லையே. இந்த உடலோடு நான் எப்படி நடமாடுவேன்?

கௌதமர்: ஏன் நடமாடிப் பாரேன்? உன் கண்கள் பத்துத் திசையிலும் பரவி, ஈரேழு உலகங்களிலும் உள்ள எல்லா அழகுகளையும் பருகட்டும். உன் உடலழகில் மயங்கி, இன்னும் பல பெண்களும் உன் காம வலையில் விழுவார்களே! காமுகனே! இனியும், என் கண் முன் நின்றால், இன்னும் கொடுமையான சாபத்துக்கு ஆளாவாய். உடனே போய் விடு.

(இந்திரன் மறைகிறான். கௌதமர் மீண்டும் அகலிகையிடம் திரும்புகிறார்.)

அகலிகை: சுவாமி, அந்தப் பாதகனுக்கு விதித்தது போன்ற கொடும் தண்டனை எதையும் எனக்கு விதித்து விடாதீர்கள்.

கௌதமர்: ஆணுக்கும் பெண்ணுக்கும் நீதி ஒன்றுதான். ஆனால், தண்டனை அவரவர் இயல்புக்கும், நிலைமைக்கும், குற்றத்துக்கும் ஏற்றதாக இருக்க வேண்டும். அகலிகை! உய்த்துணரும் அறிவை இறைவன் மானிடப் பிறவிகளுக்குக் கொடுத்திருக்கிறான். ஆனால், நீ அதைப் பயன்படுத்தத் தவறி விட்டாய். மணாளன் தீண்டுவதற்கும் மாற்றான் தீண்டுவதற்கும் வித்தியாசம் தெரியாமல், ஜடமாக நடந்து கொண்டாய். அதனால், நீ ஒரு ஜடப்பொருளாக, ஒரு கல்லாக ஆகக் கடவாய்.

(அகலிகை கல்லாகிறாள்.

அகலிகை: சுவாமி, இதென்ன கொடுமை? அந்தப் பாதகனுக்கு வழங்கியதை விடக் கொடுமையான தண்டனையை எனக்கு வழங்கி விட்டீர்களே!

கௌதமர்: அகலிகை! தவறு செய்பவர்கள் தண்டனை பெற்றுத்தான் ஆக வேண்டும். ஆயினும், எதற்கும் ஒரு எல்லை, முடிவு, விடுதலை உண்டு. இந்தக் கல்லாகவே நீ சாஸ்வதமாக இருந்து விடப் போவதில்லை. இந்த பூமியில் ஒரு புனிதன் நடந்து செல்லப் போகிறான். அவன் பாதம் பட்ட இடமெல்லாம் புனிதமடையும். அப்போது அவன் திருவடியால் தீண்டப்பட்டு, நீ உயிர்த்தெழுவாய். அதுவரை, நீ உருவத்தில் கல்லாக இருந்து, உள்ளத்தில் அவன் வருவதற்காகப் பிரார்த்தனை செய்து கொண்டிரு.

காட்சி மாற்றம்

(அகலிகை கல்லாகக் கிடக்கிறாள். அங்கே இந்திரன் வருகிறான். சுற்றுமுற்றும் யாரையோ தேடுகிறான். ஆயிரம் கண்களும் சுழன்று, எல்லாக் கோணங்களிலும் நோக்குகின்றன. அப்போது அவன் காலடியில் அந்தக் கல் இடறுகிறது.)

அகலிகை: அட, காமாந்தகாரா, என்னை இந்நிலைக்குக ஆளாக்கியது போதாது என்று மீண்டும் இங்கே ஏன் வந்தாய்? உன் கை பட்டதால் நான் கல்லாகிப் போக நேர்ந்தது. இப்போது இந்தக் கல்லிலும் உன் கால் பட்டு விட்டதே. நான் இன்னும் எந்தக் கீழ்நிலைக்குப் போக நேருமோ, தெரியவில்லையே!

இந்திரன்: அகலலிகை! நீயா பேசினாய்? நீ... நீ இந்தக் கல்லா? என்ன கொடுமை இது?

அகலிகை: ஆமாம், கொடுமைதான். நீ இழைத்த கொடுமையின் விளைவுதான் இது. உன் சல்லடைக் கண்கள் இப்போது திருப்தி அடைந்தனவா?

இந்திரன்: ரிஷிபத்தினியே! என் இச்சைக்கு உன்னை பலியாக்கியது என் குற்றம்தான். மற்ற சாதாரண மானிடப் பெண்களைப் போல் உன்னையும் எண்ணி விட்டேன். அதனால், முனிவரின் கொடிய சாபத்துக்கு இருவருமே ஆளாகி விட்டோம்.. என்னைப் பற்றிக் கூட நான் கவலைப்படவில்லை. உனக்கு ரிஷி என்ன தண்டனை அளித்து விட்டாரோ என்று அறிந்து கொள்ளத்தான் கவலையுடன் இங்கே வந்தேன். ஆனால், தவசிகளையும் மயக்கும் அழகு கொண்ட உன் மேனி, இன்று நாய் வந்து உரசும் கல்லாகி விட்டதை நினைத்தால்தான் எனக்கு வேதனை பொறுக்கவில்லை.

அகலிகை: உன் பரிவுக்கு நன்றி. தயவுசெய்து இந்த இடத்தை விட்டுப் போகிறாயா? நீ இங்கே நிற்கும் வரை, உன் பாவத்தின் கிரணங்கள் என்மீது பாய்ந்து கொண்டேதான் இருக்கும்.

இந்திரன் (யோசனை செய்தபடி): அகலிகை!.. ம்.. என்ன சொன்னாய்? 

ம்… போகிறேன். ஆனால் ஒன்று. நான் இங்கு வந்ததன் நோக்கம், என்னால் உனக்கு நேர்ந்து விட்ட கொடுமைக்கு, ஏதாவது ஒரு வகையில் பிராயச்சித்தம் செய்ய வேண்டும் என்பதுதான்.

அகலிகை என்ன பிராயச்சித்தம்? என்னைப் பொடியாக்கி நீரில் கரைத்துக் குடிக்கப் போகிறாயா?

இந்திரன்: அகலிகை! முனிவர் உன்னை என்னவென்று சபித்தார்? கல்லாக வேண்டும் என்றுதானே? கல் என்றால் காலில் இடறும் கல்லாகத்தான் இருக்க வேண்டுமா என்ன? காண்போர் மயங்கும் கற்சிலையாக ஏன் இருக்கக் கூடாது?

அகலிகை: இந்திரா, என்ன சொல்கிறாய் நீ?

இந்திரன்: முனிவர் சாபத்தை மாற்ற முடியாதுதான். ஆனாலும், அகலிகை! நீ மனதளவில் களங்கப்படவில்லை. என்னை உன் கணவன் என்று கருதித்தான் உன்னைத் தீண்ட அனுமதித்தாய். அதனால், மனதளவில் நீ கற்புள்ளவள்தான். உன் கற்பின் சக்தியைப் பயன்படுத்தி, நீ உன் பழைய உருவத்துடன் ஒரு கற்சிலையாக மாற வேண்டுமென்று உன் கணவனை நினைத்து, தியானம் செய். முனிவரின் சாபம் பொய்க்காத வகையில்,  உன் கற்பின் வலிமையால் உன் விருப்பம் நிறைவேறும். கண்டவர் கால்களில் மிதிபட்டும், உதைபட்டும், அழுந்தியும் நோகாமல், உன் நிஜ ரூபத்துடன் உன் அழகை முழுமையாகப் பிரதிபலிக்கும் சிலையாக நின்றால், உனக்கு மேன்மைதானே? வரமளிக்கும் சக்தி எனக்கு இல்லை. ஆனால், உன் விருப்பம் நிறைவேற வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

(இந்திரன் மறைகிறான்.)

அகலிகை (மனதுக்குள்): போய் விட்டான் பாதகன். ஆனால், காமாந்தகாரனா  இருந்தாலும், கொஞ்சம் நல்ல சிந்தையும் கலந்திருக்கிறது போலும்! இல்லாவிட்டால், என் நலனில் அக்கறை கொண்டு, இப்படி ஒரு நல்ல யோசனையைச் சொல்லி விட்டுப் போயிருப்பானா? (மனதில் கணவரை தியானித்து) முனி சிரேஷ்டரே! நான் இத்தனை ஆண்டுகளாகத் தங்களையே தெய்வமாகப் பூஜித்து, சிறிதும் மனச் சலனமின்றி என் கடமைகளைச் செய்து வந்தது உண்மையானால், தாங்கள் விதித்த  தண்டனையை, நான் ஒரு கோணல் வடிவக் கல்லாக இல்லாமல், என் நிஜ ரூபத்திலேயே ஒரு கற்சிலையாக இருந்து அனுபவிக்க வேண்டும் என்று அருள் புரியுங்கள்.

(அகலிகை உடனே தோற்றம் மாறி, கற்சிலையாக வடிவம் பெறுகிறாள்.)

அகலிகை: ஆஹா! என் கணவரின் கருணையே கருணை! என் மீது எவ்வளவு கோபம் இருந்தும், என் வேண்டுக்களை நிறைவேற்றி விட்டாரே! முனி சிரேஷ்டரே! விரைவிலேயே என் சாபம் நீங்கி, மீண்டும் நான் தங்களை அடைந்து, தங்களுக்கு பணி செய்யும் பேற்றைப் பெற அருள வேண்டும்.

காட்சி மாற்றம்

.(காலப்போக்கில் பல காட்சிகள்..

கற்சிலையாக மாறிய அகலிகை  காற்றிலும், மழையிலும், வெயிலிலும் பல ஆண்டுகள் அப்படியே நிற்கிறாள். அவை அவளைப் பாதிக்கவில்லை. ஆனால்...

ஒருமுறை அந்தப் பக்கமாக இரண்டு யாத்ரீகர்கள் வருகிறார்கள் – ஒரு ஆணும் பெண்ணும். புதுமணம் புரிந்த தம்பதி போலும்! அகலிகையின் அருகில் வந்ததும், சிலையின் அழகிய தோற்றத்தில் இருவரும் சற்று நேரம் ஆழ்ந்து வியந்து நிற்கிறார்கள்.

கணவன் தன் புது மனைவியிடம், “அன்புள்ளவளே! உன்னைத் தவிர வேறு எந்தப் பெண்ணையும் என் உடலாலும், மனதாலும் தீண்ட மாட்டேன் என்று உனக்கு அளித்த வாக்குறுதியை இப்பொழுது மீறப் போகிறேன்” என்று கூறி, அகலிகையின் சிலையைக் கட்டித் தழுவியபடி, மனைவியைப் பார்த்துச் சிரிக்கிறான். அவள் பொய்க் கோபம் கொண்டு, ஆனால் நிஜச் சிரிப்பை அடக்க முடியாமல், அதைப் பார்த்து ரசிக்கிறாள்.

அகலிகையின் நெஞ்சம் பதறுகிறது. “ஐயோ! இந்தப் பாவி என்னைத் தீண்டுகிறானே! மூடா, நான் உணர்ச்சியற்ற கல்லல்ல. உயிர்த் துடிப்புள்ள பேதை. முனி சிரேஷ்டரே!”

இன்னொரு முறை, அவள் அழகில் மயங்கிய ஒரு சிற்பி, அவளைப் போலவே இன்னொரு சிலை வடிக்க எண்ணி, அவள் சிலைக்கு அருகிலேயே தன் பணியைத் துவக்குகிறான். அந்த முயற்சியில், அவன் அகலிகையின் உடலின் ஒவ்வொரு அங்கத்தையும் கைகளால் தீண்டியும், அளந்தும், தான் வடித்த சிலையுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறான். அகலிகையின் உயிர் அந்தச் சிலையிலிருந்து வெடித்துக் கிளம்ப எத்தனிப்பதுபோல் துடிக்கிறது.

அவள் தலை மீது காகங்கள் எச்சில் இடுகின்றன. குருவிகள் கூடு கட்டுகின்றன. கட்டுச் சோற்றை உண்ட வழிப்போக்கர்கள் தங்கள் கைகளை அவள் மீது தேய்த்து, சுத்தப்படுத்திக் கொள்கிறார்கள். களைப்படைந்தவர்கள் அவள் காலடியில் அமர்ந்து, அவள் மீது முதுகைச் சாய்த்து ஓய்வெடுக்கிறார்கள்.)

அகலிகை (மனதுக்குள்): ஓ! ஒரு முறை இந்திரனால் தீண்டப்பட்டதற்காகக் கல்லாகி நிற்கும் கொடிய தண்டனையை அனுபவிக்கும் நான், இந்த தண்டனைக் காலத்திலேயே மேலும் பல முறை என் தூய்மையை  இழந்து கொண்டிருக்கிறேனே! இந்தப் பாவங்களுக்காக, நான் மீண்டும் தண்டனை பெற வேண்டி வரும் என்றால், ஐயோ! எத்தகைய கொடிய தண்டனையாக இருக்கும் அது?

(முனிவரை நினைத்துப் புலம்புகிறாள்.)

காட்சி மாற்றம்.

(பல வருடங்கள் கழிகின்றன. ஒருநாள், விஸ்வாமித்திர முனிவரும், அவர் பின் ராம இலக்குவர்களும் வருகிறார்கள். தூரத்தில் அவர்களைப் பார்த்துமே, அகலிகையின் மனதில் ஒரு சிலிர்ப்பு ஏற்படுகிறது.)

அகலிகை (மனதுக்குள்): “ஓ! எந்தப் புண்ணியனின் பாதம் பட்டு என் பாவம் நீங்கும் என்று என் கணவர் கூறினாரோ, அந்தப் புண்ணிய புருஷர் இவராகத்தான் இருக்க வேண்டும். முனிவர்களின் பின்னே வரும் அந்தப் புருஷனின் முகத்தில் என்ன ஒரு தேஜஸ்! சூரியன் பூமியிலிருந்து பிரகாசிப்பது போல், அவர் முகத்திலிருந்து அப்படி ஒரு ஒளி பாய்ந்து வருகிறதே. இவர் மானிடப் பிறவிதானா, அல்லது மாறுவேடம் தாங்கி வரும் பரம்பொருளா? தெய்வமே, நான் அனுபவித்த தண்டனை போதும். எனக்கு விமோசனம் கொடு. உன் கருணையை விரைந்து அனுப்பு,” என்று முனிவரை மனதில் தியானித்து, இறைஞ்சுகிறாள். மூவரும் அவள் அருகில் வருகிறார்கள்.)

விஸ்வாமித்திரர்: ராமா! இந்தச் இந்தச் சிலையைப் பார்த்தாயா?

ராமர்: பார்த்தேன். எவ்வளவு அழகான தோற்றம்! இந்தக் காட்டில் இப்படி ஒரு அற்புதச் சிலையைச் செய்தவர் யார்? வியப்பாக இருக்கிறதே! 

விஸ்வாமித்திரர்: அதை அப்புறம் சொல்கிறேன். அதற்கு முன், நீ ஒன்று செய்ய வேண்டும். உன் காலால் இந்தப் பதுமையைச் சற்றே இடற வேண்டும்.

ராமர்: சிலையைக் காலால் இடறுவதா? சுவாமி, இதென்ன விபரீதம்! முதலில் ஒரு பெண்ணைக் கொல்லச் சொன்னீர்கள். அவள் பெண்ணல்ல, இரக்கம் காட்டத் தகுதியற்றவள் என்ற தங்கள் சமாதானத்தை ஏற்று, அவளைக் கொன்றேன். இப்போதோ, லட்சுமிகரமாகத் தோற்றமளிக்கும் இந்தக் கற்சிலையின் மீது என் பாதம் படியப் பணிக்கிறீர்கள். கல்லாக இருந்தாலும், இந்தச் சிலை உயிருள்ள ஒரு பெண் போல்தான் தோற்றமளிக்கிறது. என்னை மன்னிக்க வேண்டும், சுவாமி. இதனால் தாங்கள் என் மீது கோபம் கொண்டாலும் சரி, தாங்கள் கூறியதை என்னால் செய்ய இயலாது.

விஸ்வாமித்திரர்: (மனதுக்குள்) மாயவா, இதுவும் உன் லீலைதான் போலும். சரி, உன் விருப்பப்படியே நடக்கட்டும். (ராமனிடம்) சரி, ராமா. உனக்கு விருப்பம் இல்லாவிட்டால் வேண்டாம். வா, போகலாம்.

(மூவரும் போகிறார்கள். அகலிகை மனம் பதைத்து நிற்கிறாள். ஏமாற்றத்தின் அழுத்தத்தால், தான் வெடித்துத் தூள் தூளாகி, மணலாகப் பொடிமணலாக ஆகப் போவது போல் உணர்கிறாள். மனதில் கௌதமரை நினைக்கிறாள்.

அகலிகை (மனதுக்குள்): முனிவரே, இன்னும் ஏன் இந்தக் கொடுமை? இந்தக் கொடும் சாபத்திலிருந்து எனக்கு விடுதலையே இல்லையா?

(கௌதமர் அவள் முன் தோன்றுகிறார். அவர் முகம் கோபத்தில் சிவந்திருக்கிறது.)

கௌதமர்: அகலிகை! உனது பாவத்துக்கான தண்டனையை நீ அனுபவித்து முடிந்ததும், அந்தப் புனிதன் ராமபிரானின் பாதம் பட்டுச் சாபம் நீங்கித் தூய்மை அடைந்து விடுவாய் என்று நினைத்தேன். ஆனால், உன் ரூப சௌந்தர்யத்தின் மீது உனக்கிருந்த மோகத்தினாலும், அகந்தையினாலும், உன்னை வஞ்சித்த அந்த இந்திரனின் துர்போதனைக்குச் செவிசாய்த்து, உன்னைச் சிலையாக மாற்றிக் கொண்டாய். வெறும் கல்லாக நீ பூமியில் கிடந்திருந்தால், ராமனின் பாதம் பட்டு உயிர் பெற்றிருப்பாய். ஆனால், சிலையாக நின்றதால், அவன் திருப்பாதம் உன்  மீது படும் பாக்கியம் உனக்குக் கிட்டவில்லை. சிலையாக உன்னைக் கண்டு மோகித்த பலராலும் தீண்டப்பட்டு, இப்போது மேலும் களங்கப்பட்டு நிற்கிறாய். இது உனக்கு நீயே விதித்துக் கொண்ட தண்டனை.

(அகலிகையின் கண்களில் நீர் பெருகிச் சிலை முழுவதுமாக நனைகிறது)

அகலிகை: சுவாமி, நான் பாவி. என் சிந்தனைக் குழப்பத்தால் எனக்குக் கேடு விளைவித்துக் கொண்டு விட்டேன். சுவாமி, இவ்வளவு காலமாக நான் மனதினால் அனுபவித்த வேதனை கொஞ்ச நஞ்சம் இல்லை. தங்களிடம் நான் வேண்டிக் கொள்வது ஒன்றுதான். என் மீது கருணை வைத்து, என் பிறவி முடிந்து, நான் நரகம் செல்ல அருள் புரியுங்கள். அந்த நரக தண்டனை கூட, இப்போது நான் அனுபவிக்கும் தண்டனையைவிடக் கொடியதாக இருக்க முடியாது. நரகத்தில் உழன்ற பிறகாவது, என் பாவம் நீங்கினால் போதும்.

கௌதமர் (கோபம் தணியாமல்): அகலிகை, நீ பாவம் செய்ததோடு திருப்தி அடையாமல் என்னையும் பாவம் செய்யத் தூண்டுகிறாய். உன்னை  நரகத்துக்கு அனுப்புவதோ, உன் பிறவியை முடிப்பதோ என் கையில் இல்லை. உன் பாவத்தைப் போக்கிக் கொள்ளாமல், இந்தப் பிறவியிலிருந்து உன்னால் விடுதலை பெற முடியாது. இத்தனை காலம் நீ சிலையாக நின்று, மேலும் பாவத்தைப் பெருக்கிக் கொண்டாய். இனி உடைந்து சிதிலமாகக் கீழே விழுந்து கிட.

(கௌதமர் கோபத்துடன் தன் கால்களால் அகலிகையின் சிலையை எட்டி உதைக்க, சிலை கீழே விழுகிறது. 

என்ன விந்தை! அகலிகை தன் பழைய தோற்றத்துடன் எழுந்து நிற்கிறாள். வியப்பு நீங்காமல், கணவரை வணங்குகிறாள்.).

அகலிகை: சுவாமி, இதென்ன விந்தை? நான் எப்படி சாபம் நீங்கப் பெற்றேன்? ஓ! எனக்குப் புரிகிறது. எந்தப் புனிதரின் பாதம் பட்டு என் சாபம் நீங்கும் என்று தாங்கள் விதித்தீர்களோ, அந்தப் புனிதர் தாங்களேதான். தங்கள் பாதம் பட்டுத்தான் என் சாபம் நீங்கியது. நான் இவ்வளவு காலம் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தாங்கள் விரும்பியதால்தான், எனக்கு விமோசனம் அளிக்க இவ்வளவு காலம் கடத்தினீர்கள் போலும்!

கௌதமர் (அகலிகையைத் தூக்கி நிறுத்தி): அகலிகை, நீ அறியாமல் பேசுகிறாய். என் பாதம் பட்டு, பூமியில் ஊரும் ஜந்துக்கள் மடிந்திருக்கின்றனவே தவிர, எந்தப் பொருளும் உயிர் பெற்றதில்லை. நீ சாபம் நீங்கி உயிர் பெற்றதற்குக் காரணம், என் பாத ஸ்பரிசம் அல்ல. நீ கீழே விழுந்த இந்த மண்ணைப் பார். இது சாதாரண மண் அல்ல. சற்று முன்புதான் இங்கே நடந்து சென்ற ராமனின் திருவடிகளால் தீண்டப்பட்ட மண். உன்னை உயிர்ப்பித்தவை அவன் திருவடித் துகள்கள்தான். பேரருளாளனின் திருவடிக்கு உள்ள மகிமை, அந்தத் திருவடியில் ஒரு கணம் ஒட்டி விழுந்த மண் துகளுக்கும் உண்டு என்பதை அவன் நமக்கு உணர்த்தி விட்டான். மனதால் ஒரு முறை நினைக்கப்பட்டாலே, நினைத்தவர்களின் பாவத்தைப் போக்கும் பெருமை பெற்ற அந்தத் திருவடிப் பொடியின் தீண்டலால்தான் நீ புனிதமாகி விட்டாய். விஸ்வாமித்திரரும், ராம லட்சுமணர்களும் வெகு தூரம் போயிருக்க மாட்டார்கள். அவர்களைச் சென்றடைந்து, ராமபிரானை நேரில் வணங்கிப்  பேரின்பம் பெறுவோம், வா!

(இருவரும் ராமன் சென்ற திக்கில் நடக்கிறார்கள்.)

காட்சி முடிவு

(1982-ஆம் ஆண்டு எழுதப்பட்டது)

Monday, October 26, 2026

37. மௌனம் கலைந்தபோது

மூன்று மணிக்கு இரங்கல் கூட்டம் என்று சுற்றறிக்கை வந்தது. இரங்கப்பட இருந்தவர் எங்கள் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் டைரக்டர் காலம் சென்ற திரு வர்மா.

அவரது மரணம் நேற்று சம்பவித்ததாகக் காலையில் செய்தி வந்தது. விடுமுறையை எதிர்பார்த்திருந்த பலருக்கும், இரங்கல் சுற்றறிக்கை சற்று ஏமாற்றமாகவே இருந்தது.

மூன்று மணிக்கு எல்லா செக்‌ஷன்களிலிருந்தும் வேலையை முடித்துக் கொண்டு, இரங்கல் கூட்டத்துக்குக்  கிளம்பினர்.

இரண்டாம் மாடியிலிருந்த நாங்களும், இரங்குவதற்காக, முதல் மாடிக்கு இறங்கி வந்தோம்.

இரங்கல் கூட்டம், பாராட்டுக் கூட்டம், கொண்டாட்டக்  கூட்டம் எல்லாவற்றுக்குமே எங்களுக்கு இடமளித்து வரவேற்கும் அந்த ஹாலில், எங்கள் கிளையின் இருநூற்றுச் சொச்ச ஊழியர்களும் குழுமி இருந்தனர்.

யாருக்கும் இருக்கைகள் போடப்படவில்லை.

எங்கள் கிளை மேலாளர், ஒரு மோசமான புதுமுக நடிகனைப் போல், முகத்தில் செயற்கையான சோகத்தை வரவழைத்து விட்டதாக நினைத்து, அந்த நினைப்பின் பெருமிதமே முகத்தில் பெரிதும் வெளிப்பட்டிருப்பதை உணராதவராக, ஒரு சோகச் சிலை போல் போஸ் கொடுத்து நின்று கொண்டிருந்தார்.

அருகில், நான்கைந்து அதிகாரிகள், மேலாளரின் முகத்தில் தெரிந்த சோகத்தின் டிகிரியை அளந்து, தங்கள் முகபாவத்தை அதற்கேற்ப அட்ஜஸ்ட் செய்து கொள்ள முயன்று கொண்டிருந்தனர்.

மற்ற ஊழியர்கள் அதிகப் பாசாங்கு இல்லாமல், கொஞ்சம் சீரியஸ்னஸை வரவழைத்துக் கொள்ள முயன்றனர். கசமுச பேச்சுக்கள் மிக மெலிதாக எழுந்தன.

கிளை மேலாளர் தொண்டடையைச் செருமி விட்டுப் பேச ஆரம்பித்தார். முதலில் தொண்டை அடைத்துக் கொள்வது போல் துவங்கி, அப்புறம் சமநிலைக்கு வந்தார்.

மறைந்த திரு வர்மாவின் சேவைகளையும், சாதனைகளையும் குறிப்பிட்டு விட்டு, அவரது மறைவு தனக்குத் தனிப்பட்ட முறையில் ஒரு பெரும் இழப்பு என்று முடித்தார் (ஒருவேளை தனது பதவி உயர்வுக்கு அவரைத்தான் நம்பி இருந்தாரோ?)

பிறகு, திரு வர்மாவுடன் பரிச்சயம் உள்ளவர்களாகக் காட்டிக் கொள்ள விரும்பிய இரண்டு அதிகாரிகள் சோக கீதம் பாடி முடித்தனர்.

ஐந்து நிமிடங்களில் பேச்சுக்கள் முடிந்து விட்டன.

அனைவரும் ஒரு நிமிடம் மௌனம் அனுஷ்டித்து விட்டுப் பிறகு கலையலாம் என்று கிளை மேலாளர் அறிவித்தார்.

மௌன அஞ்சலி முடிந்ததும், நாங்கள் அனைவரும் எங்கள் பணிக்குத் திரும்பச் செல்லாமல், வீட்டுக்குப் போகலாம் என்று அவர் தொடர்ந்து அறிவித்தது, மௌனம் அனுஷ்டிக்க ஒரு ஊக்கப் பரிசாகத் தோன்றியது.

மேலாளர் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்த அந்தக் கணமே மௌன அஞ்சலியின் துவக்கமாயிற்று. பேசுவதையே மூச்சாகக் கொண்டோர் உட்பட அனைவரும் ஒரு நிமிடம் அசையாமல், பேசாமல் “சும்மா” இருக்கத் தொடங்கினோம்.

மௌனம் - எவ்வளவு அற்புதமான விஷயம் இது! இதோ எல்லோரும் மௌனமாக இருக்கிறார்களே – நான் கூடத்தான்! நானுமா?... அப்படியானால், இப்போது பேசியது, பேசுவது யார்? இல்லை. என் வாய் பேசவில்லை. மனம் நினைக்கிறது. 

அப்படியானால், இதெல்லாம் ஒரு பேச்சைப் போல் என் காதில் ஒலிக்கிறதே, அது எப்படி? அதுவும் இந்த மௌனமான சூழலில், மிகத் தெளிவாக, துல்லியமாக, உரக்கக் கேட்கிறதே, அது எப்படி?

இல்லை. இது மௌனம்தான். மௌனம். திரு. வர்மாவின் மரணத்துக்காக மௌனம். ஆமாம், இந்த மௌனம் அவருக்கு எப்படி உதவப் போகிறது?அவருடைய ஆத்மாவின் அமைதி எங்களுடைய அந்த ஒரு நிமிட மௌனத்தையா சார்ந்திருக்கிறது?

இல்லை. இது ஒரு வகை மரியாதை.

மரியாதையா? எப்படி? ஒருவரிடம் பேசாவிட்டால், முகம் கொடுத்துப் பேசவில்லை, மரியாதை தெரியாதவன் என்றெல்லாம் சொல்வோமே! பேசாமல் இருப்பது எப்படி மரியாதையாகும்?

இல்லை. அப்படி இல்லை. அவர் இருந்தால், அவரிடம் பேசுவோம். அவர் இல்லை என்பதை அங்கீகரித்துப் பேசாமல் இருக்கிறோம் என்று கொள்ளலாமே! இது ஒரு வகை மரியாதைதான்.

ஒருவர் இல்லை என்பதை அங்கீகரிப்பது எப்படி அவருக்கு மரியாதை செலுத்துவதாக ஆகும்? ஒருவேளை இறந்த நபரைப் பற்றி வம்பு பேசாமல், ஒரு நிமிடம் மௌனமாக இருந்து, அவருக்கு நம் மரியாதையைத் தெரிவிக்கிறோமா?

இந்த மரியாதை எல்லோருக்கும் கிடைக்குமா? நான் இறந்து போனால், எனக்காக மௌனம் அனுஷ்டிப்பார்களா? சந்தேகம்தான்! எனக்கு அவ்வளவு தகுதி இல்லை. இறந்தபின் மௌனம் அனுஷ்டிக்கப்படுவதற்குக் கூட ஒரு தகுதி வேண்டும். வேடிக்கைதான்!

ஆனால் இந்த மானேஜர் இறந்தால், அவருக்கு நிச்சயம் மௌன அஞ்சலி உண்டு.

இந்தக் கூட்டமே இந்த மானேஜருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இருந்து, மானேஜர் நிற்கும் இடத்தில் அவருக்கு பதிலாக, இப்போது அவருக்கு அருகில் நிற்கும்  அசிஸ்டன்ட் மானேஜர் நின்றால், எப்படி இருக்கும்?

சிரிப்பு வந்தது.

சிரிக்கக் கூடாது. இது சீரியசான சூழ்நிலை.

ஒரு வேடிக்கை. ஒருவர் இறந்து விட்டால், கூட்டம் போட்டு அவரைப் பற்றிப் பேசுகிறார்கள். அது அவருக்குச் செலுத்தும் மரியாதை. ஒரு நிமிடம் எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தால், அதுவும் மரியாதை!

இது முரண்பாடாக இல்லை?

இருப்பவர்கள் இந்த முரண்பாட்டைப் பற்றிச் சிந்திப்பதில்லை. இறந்தவர்கள் இது பற்றிப் பேச முடியாது.

ஐயோ! மௌனம் முடியப் போகிறது. நான் அனுஷ்டித்தது மௌனமா? மனதுக்குள் இவ்வளவு சுறுசுறுப்பாக உரையாடல்கள் நடப்பது மௌனத்துக்கு முரணானது இல்லையா?

நான் மட்டும்தான் இப்படியா?  மற்றவர்களும் ஏதாவது நினைத்துக் கொண்டுதானே இருந்திருப்பார்கள்? மானேஜர் இப்போது என்ன நினைத்துக் கொண்டிருப்பார்? புதிய காட்ஃபாதராக யாரை சுவீகரிக்கலாம் என்றா?

மானேஜர் மீண்டும் தன் மணிக்கட்டைப் பார்த்து விட்டு, மௌனம் முடிந்ததாக அறிவிக்கும் விதத்தில் தலையாட்ட, ஒரு இருக்கமான தளையிலிருந்து விடுபட்டது போல், அனைவரும் சேர்ந்தாற்போல் பேசத் துவங்க, பெரும் சத்தம் எழுந்தது.

என் மனத்தின் ஓட்டம் ஒரு கணம் நிறுத்தப்பட்டு, அடுத்து எங்கே பாய்வது என்று புரியாமல் தடுமாற,  ஒரு கணம்....ஒரே ஒரு கணம் எந்த நினைவும் இல்லாமல், எந்தச் சலனமும் இல்லாமல்...

மௌனம் கலைந்த அந்த வேளையில், நான் மௌனத்தை தரிசித்தேன்.  

Sunday, October 25, 2026

36. போர்வைகள்

ஸ்டேஷனுக்குக் கொஞ்ச தூரம் இருக்கும்போதே, மழை பெரிதாகத் தூற ஆரம்பித்து விட்டது. 

சற்று முன் வரை, 'அப்பாடா, இன்றைக்குப் பிழைத்தோம்!' என்று நிம்மதி அடைந்திருந்த ராமரத்தினம், இந்த திடீர்த் தாக்குதலை எதிர்பார்க்கவில்லை.

இன்றைக்கும் நனையாமல் அலுவலகத்துக்குப் போக முடியாது.

மழை பெய்ய ஆரம்பித்து நான்கைந்து நாட்கள் ஆகி விட்டன. இந்த நான்கைந்து நாட்களில் ஒரு நாள் கூட, அவரால் மழையில் நனையாமல் அலுவலகத்தைச் சென்றடைய முடிந்ததில்லை.

அவரும் எவ்வளவோ ஜாக்கிரதையாகத்தான் இருந்திக்கிறார். காலை 8 மணிக்கே தயாராகி, வீட்டில் இருந்து கொண்டே 9 மணி வரை மழையை கவனித்துக் கொண்டு, அது சற்றே ஓயும்போது அவசரமாகக் கிளம்பி, வேகமாக ஓடி, மழையைச் சந்திக்காமல் ஸ்டேஷனை அடைந்து விட வேண்டும் என்று அவர் செய்யும் முயற்சி தினமும் எப்படியோ தோற்று விடுகிறது.

மழை ஆரம்பித்த முதல் நாள், 9 மணி வரை காத்திருந்து பார்த்து விட்டு, அதுவரை மழை நிற்காததால், நனைந்து கொண்டே ஸ்டேஷனுக்கு நடந்து போய், ரயிலைத் தவற விட்டு, அடுத்த ரயில் பிடித்து அலுவலகத்தை அடைந்தபோது, ஐந்து நிமிடம் தாமதமாகி விட்டது. மழையில் தெப்பமாக நனைந்து விட்டார். 

அக்கவுன்டன்ட் கூடக் கேட்டார், “ஏன் சார், லேட் ஆனது என்னவோ ஆகிவிட்டது.  இன்னும் கொஞ்சம் பொறுத்து, மழை நின்ற பிறகு நனையாமல் வந்திருக்கக் கூடாதா?” என்று, ஏதோ இவர் மழை விடுவதற்காகக் காத்திருந்து, மழை விடாததால், மழையில் நனைந்து வந்து, அலுவலகத்துக்கு தாமதமாக வந்ததன் பலனை இழந்து விட்டதைச் சுட்டிக் காட்டுவது போல்!

அப்போதுதான், டைப்பிஸ்ட் நித்யா அந்தப் பிரச்னையைக் கிளப்பினாள்: “ஏன் சார், குடை எடுத்து வந்திருக்கக் கூடாது?”

இந்த கேள்விக் கணையிலிருந்து தன்னை காத்துக் கொள்ள ஒரு குடை இல்லையே என்று நினைத்துக் கொண்டார் ராமரத்தினம்.

“கிளம்பும்போது மழை அவ்வளவாக இல்லை. பெரிதாக வராது என்று நினைத்தேன்” என்று மழுப்ப முயற்சி செய்தார்.

இந்த பதில் குப்புசாமிக்கு ஒரு வாய்ப்பு அளித்து விட்டது. “மழை அவ்வளவாக இல்லையாவது? இரவலிருந்தே சரியான மழையாயிற்றே! வெதர் ஃபோர்காஸ்ட் படிக்கவில்லையா நீங்கள்? இன்னும் இரண்டு நாள் ஹெவி ரெயின் என்று போட்டிருக்கிறானே!” என்று தனது பத்திரிகைப் புலமையைப் பறை சாற்றினார்.

ராமரத்தினத்துக்கு பகீரென்றது. இன்னும் இரண்டு நாட்கள்  எப்படிச் சமாளிக்க போகிறோம்?

மழை பெய்வது என்பது அப்படி ஒன்றும் பெரிய விஷயம் இல்லை ராமரத்தினத்துக்கு இது ஒரு பெரிய பிரச்னையாக இருந்திருக்க வேண்டியதும் இல்லை – அவரிடம் ஒரு குடை இருந்திருந்தால்!

அவரிடம் அது இல்லை. ரெயின் கோட் போன்ற வேறு மழைப் பாதுகாப்பு சாதனமும் இல்லை. எப்போதோ வாங்கிய குடைகள் குற்றுயிரும் குலை உயிருமாக இயன்ற வரை வாழ்ந்து, தங்கள் உயிரை விட்டு விட்ட பிறகு, அவர் புதிதாகக் குடை வாங்கவில்லை அது எவ்வளவு பெரிய “குற்றம்” என்பது இப்போதுதான் தெரிந்தது.

அப்போது என்னவோ, ‘குடை பிடித்துக் கொண்டுதான் போக வேண்டும் என்கிற அளவுக்கு அப்படி என்ன பெரிய மழையா வந்து விடப் போகிறது?’ என்ற அசட்டுத்தனமான, இப்போது நினைக்கும் போது முட்டாள்தனமான நம்பிக்கையில், அதில் போய் பணத்தைச் செலவு செய்வானேன் என்று இருந்து விட்டார்.

அதுவும் அவர் தொடங்கி அவர் கடைக்குட்டி ஸ்ரீதர் வரை உபயோகிப்பதற்கு, அவருடைய குடும்பத்துக்குக் குறைந்தது மூன்று குடைகள் வாங்க வேண்டும். அத்தகைய வலுவான விற்பனையைக் குடை வியாபாரிக்குக் கொடுப்பதற்கு அவருடைய வரவு செலவுத் திட்டத்தில் வகை செய்ய இயலவில்லை.

‘ஒரு குடையாவது வாங்கித் தொலைத்திருக்கலாம்!’ என்று தலையில் படிந்திருந்த நீர்த்துளிகளை உதறியவாறே, இப்போது நினைத்துக் கொண்டார் ராமரத்தினம். 

பாதி நனைந்தபடி பள்ளிக்கூடம் போய் வரும் அவர் குழந்தைகளின் தோற்றம் அவர் மனதில் எழுந்தது. 

சில நாட்கள் எல்லாம் சரியாகத்தான் நடந்து வந்தது - பெரிய மழை எதுவும் வராததால். இப்போது இந்த மழை வந்துதான், அதை ஒரு பெரிய பிரச்னையாக ஆக்கி விட்டது.  

அன்றைக்கு, “ஆமாம், அது எதற்கு ஒரு தெண்டச் செலவு?” என்று அவருடன் ஒத்துப் பாடிய அவர் மனைவி கமலா, இப்போது “ஆனாலும், அவசரத்துக்கென்று ஒரு குடையாவது வாங்கிப் போட்டிருக்க வேண்டாமா நீங்கள்?” என்று குற்றம் சாட்டுவது போல் கேட்கிறாள்.

குழந்தைகள் பாடு பரவாயில்லை. கொஞ்சம் முணுமுணுத்து விட்டு, எங்கோ கிடைத்த பிளாஸ்டிக் பேப்பரையும், பைகளையும், பழைய கோணிகளையும் தலைமேல் போட்டுக் கொண்டு பள்ளிக்குப் போய் விட்டு விட்டு வந்து விடுகிறார்கள். ஆனால், அவரால் அப்படிச் செய்ய முடியவில்லை.

கொட்டும் மழையிலும், தலையையும், முதுகையும் ஒரு கோணிப்பையின் பாதுகாப்பில் மறைத்துக் கொண்டு, தினமும் பால் கொடுத்து விட்டுப் போகும் பால்காரனை நினைத்துக் கொண்டார்.

அவனைப் போல் ஏன் தன்னால் ஒரு கோணிப்பையைத் தலையில் போட்டுக் கொண்டு ஆஃபீசுக்குப் போக முடிவதில்லை?

காரணம், அவர் ஆஃபீஸில் ஹெட் கிளார்க். மானேஜருக்கு அடுத்தபடியாம்! அதனால், மழையில் நனையத்தான் வேண்டும் போல் இருக்கிறது.

அவர் ஆஃபீஸ் பியூன் சண்முகம் கூட ஒரு பழைய கல்யாணத் தாம்பூலப் பையைத் தலையில் குல்லாய் போல் கவிழ்த்துக் கொண்டு வந்து விடுகிறான்.

அந்த அலுவலகத்தில், அவரிடமும், பியூன் சண்முகத்திடமும் மட்டும்தான் குடை இல்லை என்று தோன்றியது. மற்றவர்கள் குடையோ, மழைக் கோட்டோ வைத்திருக்கிறார்கள்.

காரில் வந்து இறங்கும் மானேஜருக்கு குடைப் பிரச்னை இல்லை. அவருக்குக் கூட, அவர் காரிலிருந்து இறங்கும்போது மழையில் நனையாமல் இருக்க, அக்கவுன்டன்ட்  கல்யாணத்தின் குடையை விரித்துப் பிடித்துக் கொண்டு காரின் கதவருகே நிற்பான் பியூன் சண்முகம்.

இந்த குடை பற்றிய கேள்வி அதன் பிறகு தினமும் எழ ஆரம்பித்தது. சண்முகம் தன்னிடம் குடை இல்லை என்பதைப் பட்டவர்த்தனமாகச் சொல்லிவிட்டது போல், அவரால்  சொல்லிவிட முடியுமா? என்னவோ ஒரு தயக்கம்.

“குடை இல்லை” என்று சொன்னால், “ஏன் இல்லை?” என்பார்கள் அதற்கு என்ன பதில் சொல்வது? குடை வாங்கத் தனக்கு வசதி இல்லை என்று சொன்னால், அதற்கான வரவேற்பு எப்படி இருக்குமோ? அந்த அனுதாபப்  பார்வைகளை அவரால் தாங்கிக் கொள்ள முடியாது.

இரண்டாவது நாள் அவர் மழையில் நனைந்து அலுவலகத்துக்கு வந்தபோது, “இன்றைக்காவது குடை எடுத்து வந்திருக்கக் கூடாது?” என்று அவர் அசிஸ்டன்ட் ரமேஷ் கேட்டான்.

“குடையை இரவல் கொடுத்தேன். நான் கிளம்புவதற்குள் அது திரும்ப வரவில்லை” என்றார் ராமரத்தினம்.

இப்படிப்பட்ட பொய்ச் சமாதானங்கள் தனக்கு எப்படி இவ்வளவு சரளமாக உதிக்கின்றன என்பது அவருக்கு வெட்கம் கலந்த ஆச்சரியத்தைக் கொடுத்தது. சுய கௌரவத்தை காப்பாற்றிக் கொள்ள முனையும்போது, மூளை எவ்வளவு அற்புதமாக ஒத்துழைக்கிறது!

அவரிடம் குடை இல்லை என்பது ஒரு சாதாரண விஷயம். இந்த நாட்டில், லட்சக்கணக்கான நபர்களிடம் குடை இல்லை, ஆனால், அதை ஒப்புக். கொள்ள முடியாமல் தடுக்கும் தன் அந்தஸ்தையும், கௌரவத்தையும் அந்த நிமிடத்தில் அவர் வெறுத்தார்.

குறிப்பிட்ட அந்தஸ்து நிலையில் இருப்பவர்கள், அல்லது அப்படி இருப்பதாக கருதப்படுபவர்கள், கௌரவக் குறைவு என்ற குளிரிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள எத்தனை போர்வைகளை போர்த்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.

‘அடுத்த மாதம் ஒரு குடை வாங்கி விட வேண்டும்.’ 

ரயிலிலிருந்து அவர் இறங்கியபோது, மழை முழுவதுமாக நின்று விட்டது. ஆனால், வீட்டிலிருந்து ஸ்டேஷனுக்கு நடந்தபோது மழையில் நனைந்த ஈரம் இன்னும் காயவில்லை. இன்றும் அவர் அலுவலகத்துக்கு தாமதாமாகத்தான் போகப் போகிறார். அதே கேள்விகளைச் சந்திக்கத்தான் போகிறார்!

‘இன்றைக்கும் ஏன் குடை எடுத்து வரவில்லை?

‘இன்றைக்கும் ஏன் குடை எடுத்து வரவில்லை?

‘இன்றைக்கும் ஏன் குடை எடுத்து வரவில்லை?

இன்றைக்கும் ஏன்...

...சே! இது என்ன கேள்வி? தேவையற்ற, பொருளற்ற, பயனற்ற கேள்வி. ஆனாலும், அது கேட்கப்படும். அதற்கு அவர் பதில் கூறித்தான் ஆக வேண்டும். காரணங்களைத் தேடி அவருடைய அறிவு தன் பெட்டகத்தை அலசிப் பார்த்து விட்டுக் கைவிரித்து விட்டது.

அப்படியே இன்று ஏதாவது சொல்லிச் சமாளித்தாலும், இன்னும் எத்தனை நாளைக்கு இப்படிச் சமாளிக்க முடியும்? என்றாவது ஒருநாள், உண்மையைக் கூறித்தானே ஆக வேண்டும்? அதை இன்றைக்கே சொல்லி விட்டால்...

ஓ! அதை அவரால் நினைத்துப் பார்க்க முடியவில்லை.

அலுவலகம் சென்றடையும் வரை, அவர் சிந்தனை பொருத்தமான காரணத்தைக் கற்பனை செய்யும் முயற்சியில் வெற்றி பெறவில்லை.

அலுவலகத்துக்குள் நுழைந்ததும், “குட் மார்னிங்” சொல்லக் கூடப் பொறுமை இல்லாமல் நித்யா கேட்டு விட்டாள்.

“ஏன் சார் இப்படி தினமும் நனைந்து கொண்டே வருகிறீர்கள்? இன்றைக்காவது குடை... “ (அவர் எதிர்பார்த்த அதே கேள்வி!)

“நான் கூட அதிகமாகக் குடையை வெளியே எடுத்து வருவதில்லை. எங்கேயாவது தொலைத்து விடுவேனோ என்று என் மனைவிக்கு பயம்” என்றார் அக்கவுன்டன்ட்.

ராமரத்தினத்தின் மூளை தன் முயற்சியில் வெற்றி பெற்று விட்டது.

அதுவும், இந்தப் பிரச்னைக்கு நிரந்தரமாகத் தீர்வு காணும் விதத்தில்.

“அதை ஏன் கேட்கிறாய்? இன்றைக்கு வீட்டிலிருந்து கிளம்பம்போது, குடையை எடுத்துக் கொண்டுதான் வந்தேன். ரயிலில் ஏறும்போது, குடையுடன்தான் ஏறினேன். இறங்கும்போது மழை நின்று விட்டதால், குடையின்  நினைவே மறந்து விட்டது. நல்ல குடை. பழங்காலத்துத் துணி ஸ்ட்ராங்காக இருந்தது.. ஹ்ம்... “ என்று சொல்லி ஒரு பெருமூச்சு விட்டார் ராமரத்தினம்.

அப்போதுதான் அலுவலகத்துக்குள் நுழைந்த ரமேஷ், எல்லோருக்கும் வணக்கம் சொல்லி விட்டு, “ஹெட் கிளார்க் சார் ஏதோ கதை சொல்லிக் கொண்டிருந்தார் போலிருக்கிறதே!” என்றான்.

“கதை இல்லையப்பா! அவருடைய குடை தொலைந்து விட்டதைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்” என்றார் குப்புசாமி.

”தொலைந்து விட்டதா? எப்படி?” என்றான் ரமேஷ் அவனுடைய வியப்பு ராமரத்தினத்துக்கு சற்று அதிகப்படியாகத் தோன்றியது.

”ரயிலில் மறந்து வைத்து. விட்டு வந்து விட்டேன் போலிருக்கிறது" என்றார் ராமரத்தினம், பாதி வார்த்தைகளை விழுங்கிக் கொண்டே. பொய் சொல்வது, அதுவும் பொய்யைத் திரும்பச் சொல்வது எவ்வளவு கடினமாக இருக்கிறது!

“பாவம்! குடை விற்கிற விலையில்...யார் கையில் கிடைத்ததோ!” என்றாள் நித்யா. ராமரத்தினத்தின் குடை தொலைந்து விட்ட வருத்தத்தை விட, அது தன் கையில் கிடைத்திருக்கக் கூடாதா என்ற ஏக்கமே அவள் குரலில் அதிகமாக இருந்ததாகத் தோன்றியது.

“வேறு யார் கையிலும் கிடைக்கவில்லை. என் கையில்தான் கிடைத்தது” என்றான் ரமேஷ், சிரித்தபடி. தன் கக்கத்தில் பிடித்து வைத்திருந்த குடையை, ராமரத்தினத்திடம் சிரித்துக் கொண்டே நீட்டினான்.

ராமரத்தினத்துக்குத் தன்னை யாரோ பளீரென்று கன்னத்தில் அறைந்தது போல் இருந்தது. ரமேஷை ஏறிட்டுப் பார்த்தார்.

“நீங்கள் ரயிலில் விட்டு விட்டு வந்த குடை என் கையில் எப்படிக் கிடைத்து என்று ஆச்சரியப்படுகிறீர்களா? நீங்கள் வந்த அதே பெட்டியில்தான் நானும் வந்தேன். இறங்கும்போது, நீங்கள் குடையை வைத்து விட்டுப் போனதை கவனித்து எடுத்துக் கொண்டு வந்தேன். ஸ்டேஷனிலேயே உங்களிடம் கொடுக்க வேண்டும் என்றுதான் நினைத்தேன் அதற்குள் நீங்கள் வேகமாகப் போய் விட்டீர்கள்.”

“எனக்குத் தெரிந்து, குடையைத் தொலைத்துவிட்டு, அதைத் திரும்ப பெற்ற அதிர்ஷ்டசாலி இந்த உலகத்திலேயே நீங்கள் ஒருவர்தான், சார்!” என்றார் அக்கவுன்டன்ட்.

சொல்லி விட்டுத் தான் இதுவரை தொலைத்த நான்கைந்து குடைகளை நினைத்து, ஒரு பெருமூச்சு விட்டார்.

ராமரத்தினம் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார்.

‘தொலைத்த குடை திரும்பக் கிடைக்கப் பெற்ற ஒரே அதிர்ஷ்டசாலி நான்தான் என்று அக்கவுன்டன்ட் ஆச்சரியப்படுகிறார். குடையைத் தொலைக்காமலே திரும்பப் பெற்ற ஒரே அதிர்ஷ்டசாலி நான்தான் என்று தெரிந்தால், இன்னும் எவ்வளவு ஆச்சரியப்படுவாரோ!’

மதிய உணவு இடைவேளையின்போது, ரமேஷ் அவர் சீட்டுக்கு வந்தான். “என்னை மன்னித்து விடுங்கள், சார் காலையில் உங்களைக் கொஞ்சம் திணறடித்து விட்டேன் உங்களிடம் குடை இல்லை என்பது எனக்குத் தெரியும். அது புரியாமல், ஆஃபீசில் தினமும் பலரும் உங்களைக் கேள்வி கேட்டு, உங்களைச் சங்கடத்துக்கு ஆளாக்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து வருந்திக் கொண்டிருந்தேன். இன்று ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததும், என் குடையைத் தொலைந்து போன உங்கள் குடை என்று சொல்லி, உங்களிடம் கொடுத்து விட்டேன். அந்தக் கணத்தில் தோன்றியபடி நடந்து கொண்டு விட்டேன். யோசிக்கக் கூட இல்லை. தவறாக இருந்தால், என்னை மன்னித்து விடுங்கள். இந்தக் குடை உங்களிடமே இருக்கட்டும். என்னை உங்கள் மகன் போல் நினைத்து, அதை ஏற்றுக் கொள்ளுங்கள்.”

அவர் பதிலை எதிர்பார்க்காமல், அங்கிருந்து அகன்றான் ரமேஷ்.

அவரிடம் குடை இல்லாதது அலுவலகத்தில் மற்றவர்ளுக்குத் தெரியாவிட்டால் என்ன? இதோ இந்த ரமேஷுக்குத் தெரிந்து விட்டதே! 

அவர் போர்த்தியிருந்த போர்வைளைத் துளைத்துக் கொண்டு அவமானக் குளிர் அவரைச் சட்டென்று தாக்கியது. 

(1975-இல் எழுதப்பட்டது)

அடுத்த பதிவு: 37. மௌனம் கலைந்தபோது
முந்தைய பதிவு: 35. மழித்தலும் நீட்டலும்

Saturday, October 24, 2026

35. மழித்தலும் நீட்டலும்

வெள்ளிக்கிழமை காலை அலுவலகத்துக்கு வந்த வங்கி மேலாளர் கிருஷ்ணகுமார், தனது இருக்கையில் அமர்ந்து, மேஜை மீது கண்ணாடித் தட்டுக்கு கீழே இருந்த எல்லா தெய்வ உருவங்களையும் வரிசையாக வணங்கிவிட்டு, “இன்றைக்காவது ஒரு நல்ல டெபாசிட்டர் வர மாட்டாரா?” என்று நம்பிக்கை இல்லாமல் வேண்டிக் கொண்டிருந்தார்.

அப்போது அவரது அறைக் கதவைத் திறந்து கொண்டு, அந்த மனிதர் வந்தார்.

“நான் சுந்தரம்” என்று அவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டதும், 'இவருக்கு கூல் டிரிங்க் வரவழைத்துக் கொடுப்பதா, அல்லது முத்து விலாஸின் உயிரற்ற டீயே போதுமா? அல்லது, சீக்கிரமே விரட்டி அடிக்கப்பட வேண்டிய கேஸா?' என்று அவரை எடை போட முயன்றார் கிருஷ்ணகுமார்.

வந்தவர் தனது பிரீஃப்கேஸைத் திறந்து, சில காகிதங்களை மேஜை மீது எடுத்துப் போட்டார். இது ஏதோ வில்லங்க விவகாரம்தான் என்று முடிவு செய்த கிருஷ்ணகுமார், “வாட் கேன் ஹ டூ ஃபார் யூ?” என்று பணிவாக வினவினார்.

“உங்கள் கையை நீட்டுங்கள்” என்றார் சுந்தரம். 

தயக்கத்துடன் கிருஷ்ணகுமார் தன் கையை நீட்டியதும், அவருடைய இரண்டு கைகளையும் பற்றிக் கொண்டு,  அவருடைய விரல்களைப் பார்த்தார் சுந்தரம்.

“ஏன் சார், உங்களுக்கு நகத்தைக் கடிக்கும் பழக்கம் கிடையாதா?”

“கிடையாது.”

“இருந்திருந்தால், நகத்தையெல்லாம் கடித்துத் துப்பியிருக்க மாட்டீர்களா? இவ்வளவு நீளமாக நகத்தை வளர்த்துக் கொண்டு, நகக்கணுக்குள் அழுக்கு புகுந்து கொண்டு—எத்தனை சுகாதாரக் கேடு!”

அவர் யார் என்று அனுமானிக்க முடியாமல், கிருஷ்ணகுமார் சற்றுத் தடுமாறினார்.

‘ஒருவேளை இவர் ஹெட் ஆபீஸிலிருந்து வந்திருப்பாரோ? நாம் சுகாதாரமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஹெட் ஆஃபீசால் அனுப்பபட்டிருப்பாரோ? 

கிருஷ்ணகுமார் தன் மேஜையின் மீதிருந்த குண்டூசி குஷனிலிருந்து ஒரு குண்டூசியை எடுத்துத் தன் நகங்களைச் சுத்தம் செய்ய ஆரம்பித்தார்.

‘த்சூ, த்சூ’ என்று சூள் கொட்டிய சுந்தரம் “இப்படித்தான்: சில பேர் குண்டூசியால் நகத்தைச் சுத்தம் செய்து விட்டுப் பிறகு, ஞாபகம் இல்லாமல், அதே குண்டூசியை பல் குத்தவும் பயன்படுத்துகிறார்கள். இதனால் நக இடுக்குகளில் இருந்த அழுக்கு, பல்லிடுக்குகளுக்கு இடமாற்றப்பட்டுப் பல் வியாதிகளும், தொடர்ந்து வேறு சில வியாதிகளும் வர வழிவகுக்கிறது” என்று பற்பசை விளம்பரத்தில் வரும் டாக்டர் போல் விஸ்தாரமாக விளக்க ஆரம்பித்தார்.

கிருஷ்ணகுமார் கொஞ்சம் பொறுமை இழந்தார். இவர் ஹெட் ஆஃபீஸிலிருந்து ஹெல்த் இன்ஸ்பெக்‌ஷனுக்கு வந்திருப்பாரோ என்ற சந்தேகம் இப்போது நீங்கி விட்டது. தன் எரிச்சலை வெளிக்காட்டினார் அவர்.

“வந்த விஷயத்தைச் சொல்கிறீர்களா?”

“அதைத்தானே சொல்லிக் கொண்டிருக்கிறேன்!” என்றார் சுந்தரம். “இப்படி விளக்கமாகச் சொன்னால்தானே, நான் ஆரம்பிக்கப் போகும் நக சுத்தி தயாரிப்புத் தொழிலின் முக்கியத்துவத்தை உங்களுக்குப் புரியவைக்க முடியும்!”

“என்ன சொன்னீர்கள், நகசுத்தித் தயாரிப்பா?”

“புரியவில்லையா? நெயில் கட்டரைத்தான் அப்படிச் சொன்னேன். ஓ! மொழிபெயர்ப்பு சரியில்லையோ? நக வெட்டி என்று சொல்லியிருக்க வேண்டுமோ? அதை விடுங்கள். விஷயத்திற்கு வருகிறேன். சுமார் பத்து லட்ச ரூபாய் செலவில், நெயில் கட்டர் தயாரிப்புத் தொழிற்சாலை துவங்கப் போகிறேன். எனக்கு நிதியுதவி அளிக்கும் பெருமை உங்கள் வங்கியைத்தான் சேரப் போகிறது.”

கிருஷ்ணகுமார் நிம்மதியடைந்தார்- நல்லவேளை, சுலபமாக நிராகரிக்கப்படக் கூடிய விண்ணப்பம் என்று.

“அதற்கெல்லாம் நிறையஃபார்மாலிடீஸ் இருக்கே. முதலில், நீங்கள் தயாரிக்கப் போகும் நெயில் கட்டருக்கு அப்படியொன்றும் பிரமாதமான மார்க்கெட் இருப்பதாகத் தெரியவில்லையே!” என்று சொல்லித் துவக்கத்திலேயே அவரைத் தவிர்க்கப் பார்த்தார் கிருஷ்ணகுமார். 

“உங்கள் கண் முன்னாலேயே ஒரு டெமோ செய்து காட்டுகிறேன், பாருங்கள்” என்றார் சுந்தரம்.

அடுத்த சில நிமிடங்களில், சுந்தரம் கேட்டுக்கொண்டபடி, எல்லா வங்கி ஊழியர்களும் கிளை மேலாளரின் அறைக்கு அழைக்கப்பட்டனர். சுவாரஸ்யமாக ஏதோ நடக்கப் போகிறது என்பதாலும், கொளுத்தும் வெயிலில், கிளை மேலாளரின் ஏசி அறை கொஞ்சம் நேரம் இதமளிக்கும் என்பதாலும், கவுன்ட்டர்கள் முன்னே காத்திருந்த வாடிக்கையாளர்களை அம்போ என்று விட்டுவிட்டு அனைவரும் கிளை மேலாளரின் அறைக்குள் குழுமி விட்டனர்.

ஒவ்வொரு ஊழியராகக் கையைப் பிடித்துப் பார்த்தார் சுந்தரம். ஏதோ கைரேகை பார்த்துப் பலன் சொல்லப் போகிறார் என்ற ஊழியர்களின் எதிர்பார்ப்பைப் பொய்யாக்கி விட்டு, ஊழியர்களின் விரல் நுனிகளை மட்டும் பார்த்து விட்டுப் பிறகு கிருஷ்ணகுமாரைப் பார்த்து, உதட்டைப் பிதுக்கினார் சுந்தரம். எல்லா ஊழியர்களின் கைகளும் பரிசோதிக்கப்பட்ட பின், சஸ்பென்ஸ் விளக்கப்படாமல், ஊழியர்கள் தங்கள் இருக்கைகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.

“பார்த்தீர்களா? எல்லோருமே நீண்ட நகங்களும் நிறைந்த அழுக்கமாகத் திகழ்கிறார்கள். இதிலிருந்தே நெயில் கட்டருக்கான தேவை எவ்வளவு இருக்கிறது என்று தெரிகிறதே! டிமாண்ட் சைடைப் பார்த்து விட்டோம். இப்போது சப்ளை சைடைப் பார்க்கலாம்,” என்றார் சுந்தரம், தேர்ந்த பொருளாதார நிபுணரைப் போல்.

கிருஷ்ணகுமாரிடம் சொல்லி வங்கி பியூனை அழைக்கச் சொல்லி, பக்கத்துக் கடை எதிலிருந்தாவது ஒரு நெயில் கட்டர்  வாங்கி வரும்படி சொன்னார் சுந்தரம்.

அரை மணி நேரம் கழித்துத் திரும்பி வந்த பியூன், “எந்தக் கடையிலும் நெயில் கட்டர் இல்லையாம், சார். தெரு முழுவதும் போய்ப் பார்த்துவிட்டேன்,” என்றார்.

இதற்குள் இரண்டு முறை காப்பி குடித்துவிட்டுத் தன் நிலையை ஸ்திரப்பபடுத்திக் கொண்டு விட்ட சுந்தரம், தன் பொருளாதார விரிவுரையைத் தொடர்ந்தார்.

“பார்த்தீர்களா? உங்கள் அலுவலகத்திலேயே எவ்வளவு பேருக்கு நெயில் கட்டர் தேவையாக இருக்கிறது? ஆனால், இந்தத் தெருவில் ஒரு கடையில்கூட நெயில் கட்டர் இல்லை. இதிலிருந்தே தெரியவில்லையா, நெயின் கட்டரின் தேவை எவ்வளவு என்று?” என்று கூறித் தன் உரையை முடித்தார் சுந்தரம்.

“இந்தத் தெருவில் பெரிய கடை எதுவும் இல்லை. பெரிய கடைகளில் நிச்சயம் கிடைக்குமே” என்று சமாளிக்க முயன்றார் கிருஷ்ணகுமார்.

“அதுதான் சார் பாயின்ட்! பெரிய டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர்களில் மட்டுமே நெயில் கட்டர் விற்கப்படுவதற்குக் காரணம் அது ஒரு அழகு சாதனமாகக் கருதப்படுவதால்தான். இதை ஒரு ஆரோக்கிய சாதனமாக மாற்றி, பீடி, சிகரெட் போல் எல்லா வெற்றிலை பாக்குக் கடைகளிலும் கிடைக்கச் செய்வதுதான் என் நோக்கம். இதைப் பற்றி நான் நிறைய மார்க்கெட் சர்வே எல்லாம் பண்ணியிருக்கிறேன். அவற்றையெல்லாம் என் கடன் விண்ணப்பத்துடன் இணைத்துக் கொடுக்கிறேன். நிறைய. மார்க்கெடிங் ஐடியாக்களையும் யோசித்து வைத்திருக்கிறேன். கல்லூரி மாணவர்களைக் கவர, ரேடியோ, டிவி விளம்பர வாசகங்கள் கூடத் தயார் செய்து விட்டேன். உதாரணத்துக்கு ஒன்று சொல்லட்டுமா? ‘மாணவர்களே, நீங்கள் வகுப்புக்குப் போகாமல் அடிப்பது கிளாஸ் கட். உங்களிடம் யாராவது மோதினால் அவர்களுக்குக் கிடைக்கும் நோஸ் கட். நீங்கள் எப்போதாவது செய்து கொள்வது ஹேர் கட். எப்போதும் செய்ய வேண்டியது நெயில் கட்.'  எப்படி?

கிருஷ்ணகுமார் யோசிக்க ஆரம்பித்தார்.  அந்த மனிதர் ஒரு சரியான வாய்ச் சவடால் பேர்வழி என்று புரிந்தது. அவரைப் போன்றவர்கள் வியாபாரத் தந்திரங்களில் தேர்ந்தவர்களாக இருப்பார்கள். எனவே, இந்த ப்ராஜக்ட் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது. எப்படியும் மேல் மட்டங்களுக்குச் சென்று தன் பேச்சுத் திறனைப் பயன்படுத்தி லோன் சாங்ஷன்  வாங்கிவிடுவார். எனவே, அவருடைய கடன் விண்ணப்பத்தைப் பெற்றுக் கொண்டு மேலிடத்துக்குப் பரிந்துரை செய்வது என்று தீர்மானித்தார்.

அவர் தீர்மானத்துக்கு இன்னொரு காரணம் இருந்தது. இரண்டு நாட்களுக்கு முன்புதான் அவருடைய கிளைக்கு வந்திருந்த ரீஜனல் மானேஜர், “ஏன்யா, டெபாசிட்தான் கொண்டு வர முடியல? ஏதாவது லோன் கீனாவது கொடுத்துத் தொலைக்கக் கூடாதா? உங்கள் பிராஞ்ச் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. உங்கள் பிராஞ்சசை மூடி விட்டு, உங்களை பஞ்சாபில் ஒரு பிராஞ்சசுக்கு மாற்றி விடலாமா என்று ஹெட் ஆஃபீசில் யோசித்துக் கொண்டிருக்கிறார்களாம். இப்போது யோசிக்க ஆரம்பித்தால், இன்னும் ஆறு மாதத்தில் யோசித்து முடித்துவிடுவார்கள். அதற்குள் ஏதாவது இம்ப்ரூவ்மெனட் காட்ட முடியுமா என்று பாருங்கள்,” என்று சொல்லி விட்டுப் போயிருந்தததுதான் அது.

அடுத்த சில தினங்களில், சுந்தரம் தவணை முறையில் பல காகிதங்களைக் கொண்டு வந்து கொடுத்தார்.

பத்து லட்ச ரூபாய் முதலீடு என்பதை இருபது லட்ச ரூபாய் என்று உயர்த்தி விட்டதாகக் கூறினார் அவர். காரணம், உள்நாட்டு இயந்திரங்களுக்குப் பதிலாக வெளிநாட்டு இயந்திரங்களை வாங்கப் பயன்படுத்தத் தீர்மானித்ததுதான். இறக்குமதிகளை தாராளமாக அனுமதிக்க முடிவெடுத்திருக்கும் அரசின் பொருளாதாரக் கொள்கைக்குத் நான் தார்மீக ஆதரவு அளிக்க விரும்புவதும் ஒரு காரணம் என்றார்.

கிருஷ்ணகுமார் பொறுமையாக எல்லாக் காகிதங்களையும் சேகரித்து ஒன்றாகக் கட்டி, ரீஜனல் ஆஃபீசுக்கு அனுப்பி வைத்தார். சுந்தரம் ரீஜனல் ஆஃபீசுக்கும், ஹெட் ஆஃபீசுக்கும் சென்று தனது ‘டெமோ’க்களைச் செய்து காட்டிய பின், லோன் சாங்ஷன் ஆகியது.

அடுத்த ஆறு மாதங்கள் சுந்தரம் தனது தொழிற்சாலையைத் தொடங்குவதில் மும்முரமாக இருந்தார்.

ஆறு மாதங்களுக்குப் பிறகு, சோதனை உற்பத்தி தொடங்கியது. முதலில் உற்பத்தியான நக வெட்டிகள் மிகவும் கூர்மையாக இருந்ததால், நகத்துடன் சேர்ந்து விரல்களும் வெட்டப்படும் அபாயம் இருந்தது.

அடுத்த சில மாதங்களில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. பல மாற்றங்களுக்குப் பின், ஒருவழியாக, ஏற்றுக் கொள்ளத் தகுந்த விதத்தில் நக வெட்டிகள் தயாராகின.

தனது தொழிற்சாலையில் உற்பத்தியான சில நக வெட்டிகளை சுந்தரம் கொண்டு வந்து காட்டியபோது, கிருஷ்ணகுமார் அகமகிழ்ந்து போனார்.

ஆனால், இதற்குள் ஒரு வருடம் ஓடியிருந்தது. அடுத்த நாளே உற்பத்தி முழு அளவில் தொடங்கும் என்றும், அடுத்த மாதத்திலிருந்து வங்கிக் கடன் தவணையைச் செலுத்திப் போவதாகவும் சொல்லிவிட்டுச் சென்றார் சுந்தரம். 

சென்றவர் சென்றவர்தான். பலமுறை முயன்றும், கிருஷ்ணகுமாரால்  சுந்தரத்தைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. தொழிற்சாலைக்கு ஒருமுறை சென்றபோது, அங்கே வேலை செய்தவர்களைப் போல் (அதாவது எந்த வேலையும் செய்யாமல் அமர்ந்திருந்தவர்களைப் போல்!), இயந்திரங்களும் மௌனமாக இருந்தன.

உற்பத்தி செய்யப்பட்டிருந்த சில நக வெட்டிகள் ஒரு குவியலாகக் கிடந்தன. அவற்றுக்குத் துருவுடன் நட்புறவு ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறிகள் தெரிந்தன.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு சுந்தரம் வங்கிக் கிளைக்கு வந்தார்.

“என்ன சார் ஆயிற்று உங்கள் தொழில் முயற்சி?” என்றார் கிருஷ்ணகுமார், கவலையுடன்.

“நம் நாட்டு மக்களை நம்பி உருப்படியான எந்தக் காரியத்தையும் தொடங்க முடியாதே! ஏதோ மக்கள் ஆரோக்கியமாக இருக்கட்டுமே என்று நெயில் கட்டர்கள் தயார் செய்தால், ஒரு பயலும் வாங்க மாட்டானாம். எப்படிப்பட்ட மனப்பான்மை பார்த்தீர்களா? மக்கள் இப்படி இருந்தால், நம் நாடு எப்படி உருப்படும்? தொழில் வளர்ச்சி எப்படி ஏற்படும்? ஏற்றுமதி வர்த்தகம் எப்படிப் பெருகும்? அமெரிக்காக்காரன் சூப்பர்  301*-ஐ வைத்து ஏன் மிரட்ட மாட்டான்? சொல்லுங்கள்."

சுந்தரம் அதட்டலாகக் கேட்ட கேள்விகளுக்கு முதலில் பதில் சொல்வதா அல்லது தான் கேட்க வேண்டியவற்றைக் கேட்பதா என்று கொஞ்சம் குழம்பிய கிருஷ்ணகுமார், “அது சரி, ஏதோ மார்க்கெட் சர்வே, விளம்பர உத்தி என்றெல்லாம் பேசினீர்களே?” என்றார்.

“அதைப் பற்றி இப்போது என்ன? “ஏதோ விரலுக்கு வந்தது நகத்தோடு போயிற்று என்று விடாமல், மறுபடியும் சேற்றில் காலை விடுவதா என்ன?” என்றார் சுந்தரம், அலட்சியகமாக.

“எங்களையும் அல்லவா சேற்றில் இறக்கி விட்டு விட்டீர்கள்?” என்றார் கிருஷ்ணகுமார், கோபத்துடன்.

“ஓ! உங்கள் வங்கிக் கடனைச் சொல்கிறீர்களா??” என்றார் சுந்தரம், அப்போதுதான் அந்த விஷயம் ஞாபகத்துக்கு வந்தது போல்!

“கடன் என்ன சார், பிச்சைக் கடன்? எல்லாம் மக்கள் பணம்தானே? எனக்கு இவ்வளவு அந்நியச் செலாவணி கொடுத்த அரசே அந்நியச் செலாவணி வீணானது பற்றி ஒரு வார்த்தை கேட்கவில்லை. நீங்கள் ஏதோ பெரிதாக...”

கிருஷ்ணகுமார் கோபமாக ஏதோ சொல்வதற்குள், சுந்தரம் அவரை இடைமறித்தார்.

“ஒரு நிமிஷம் இருங்கள். உங்கள் கடனை ரத்து செய்யச் சொல்லி நான் கேட்கவில்லை. அதுக்கும் ஒரு திட்டம் இருக்கிறது. ஒரு பிரச்னையிலேயே அதற்கான தீர்வு இருக்கிறது என்பார்கள் அறிஞர்கள். நகத்தை வெட்டிச் சுத்தமாக வைத்துக் கொள்ளத் தெரியாத மக்களிடம் வியாபாரம் செய்ய, வேறொரு வழி கண்டுபிடித்து விட்டேன். நகத்தை வெட்டத்தான் மாட்டீர்கள். பாலிஷ் போட்டு அழகாகவாவது வைத்துக் கொள்ளுங்கள் என்ற பிரசாரத்துடன் நெயில் பாலிஷ்  தயாரிக்கும் திட்டத்தை உருவாக்கி இருக்கிறேன். முப்பது லட்ச ரூபாய் முதலீடு. உங்கள் வங்கி இதற்கு கடன் கொடுத்து உதவினால், இதில் கிடைக்கும் லாபத்திலிருந்து உங்கள் பிசாத்துப் பழைய கடனையும் அடைத்து விடுவேன். என்ன சொல்கிறீர்கள்?”

கிருஷ்ணகுமார் யோசிக்க ஆரம்பித்தார். இந்த முறை அவர் யோசித்தது, தான் பஞ்சாபில் ஏதாவது ஒரு கிளக்கு மாற்றப் படுவோமா அல்லது வீட்டுக்கு அனுப்பிவிடுவோமா என்பதைப் பற்றி.

*சூப்பர் 301 என்பது அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது அதிக இறக்குமதி வரி விதிக்கும் நாடுகள் மீது வணிக ரீதியான நடவடிக்கைகள் எடுக்க வகை செய்யும் அமெரிக்க வர்த்தக சட்டத்தின் பிரிவு.

(ஜனவர் 1992-இல் எழுதப்பட்டது)

(குங்குமம் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டது)

அடுத்த பதிவு: 36. போர்வைகள் 

முந்தைய பதிவு: 34. இயந்தரம் மனிதனாகிறது