Monday, October 26, 2026

37. மௌனம் கலைந்தபோது

மூன்று மணிக்கு இரங்கல் கூட்டம் என்று சுற்றறிக்கை வந்தது. இரங்கப்பட இருந்தவர் எங்கள் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் டைரக்டர் காலம் சென்ற திரு வர்மா.

அவரது மரணம் நேற்று சம்பவித்ததாகக் காலையில் செய்தி வந்தது. விடுமுறையை எதிர்பார்த்திருந்த பலருக்கும், இரங்கல் சுற்றறிக்கை சற்று ஏமாற்றமாகவே இருந்தது.

மூன்று மணிக்கு எல்லா செக்‌ஷன்களிலிருந்தும் வேலையை முடித்துக் கொண்டு, இரங்கல் கூட்டத்துக்குக்  கிளம்பினர்.

இரண்டாம் மாடியிலிருந்த நாங்களும், இரங்குவதற்காக, முதல் மாடிக்கு இறங்கி வந்தோம்.

இரங்கல் கூட்டம், பாராட்டுக் கூட்டம், கொண்டாட்டக்  கூட்டம் எல்லாவற்றுக்குமே எங்களுக்கு இடமளித்து வரவேற்கும் அந்த ஹாலில், எங்கள் கிளையின் இருநூற்றுச் சொச்ச ஊழியர்களும் குழுமி இருந்தனர்.

யாருக்கும் இருக்கைகள் போடப்படவில்லை.

எங்கள் கிளை மேலாளர், ஒரு மோசமான புதுமுக நடிகனைப் போல், முகத்தில் செயற்கையான சோகத்தை வரவழைத்து விட்டதாக நினைத்து, அந்த நினைப்பின் பெருமிதமே முகத்தில் பெரிதும் வெளிப்பட்டிருப்பதை உணராதவராக, ஒரு சோகச் சிலை போல் போஸ் கொடுத்து நின்று கொண்டிருந்தார்.

அருகில், நான்கைந்து அதிகாரிகள், மேலாளரின் முகத்தில் தெரிந்த சோகத்தின் டிகிரியை அளந்து, தங்கள் முகபாவத்தை அதற்கேற்ப அட்ஜஸ்ட் செய்து கொள்ள முயன்று கொண்டிருந்தனர்.

மற்ற ஊழியர்கள் அதிகப் பாசாங்கு இல்லாமல், கொஞ்சம் சீரியஸ்னஸை வரவழைத்துக் கொள்ள முயன்றனர். கசமுச பேச்சுக்கள் மிக மெலிதாக எழுந்தன.

கிளை மேலாளர் தொண்டடையைச் செருமி விட்டுப் பேச ஆரம்பித்தார். முதலில் தொண்டை அடைத்துக் கொள்வது போல் துவங்கி, அப்புறம் சமநிலைக்கு வந்தார்.

மறைந்த திரு வர்மாவின் சேவைகளையும், சாதனைகளையும் குறிப்பிட்டு விட்டு, அவரது மறைவு தனக்குத் தனிப்பட்ட முறையில் ஒரு பெரும் இழப்பு என்று முடித்தார் (ஒருவேளை தனது பதவி உயர்வுக்கு அவரைத்தான் நம்பி இருந்தாரோ?)

பிறகு, திரு வர்மாவுடன் பரிச்சயம் உள்ளவர்களாகக் காட்டிக் கொள்ள விரும்பிய இரண்டு அதிகாரிகள் சோக கீதம் பாடி முடித்தனர்.

ஐந்து நிமிடங்களில் பேச்சுக்கள் முடிந்து விட்டன.

அனைவரும் ஒரு நிமிடம் மௌனம் அனுஷ்டித்து விட்டுப் பிறகு கலையலாம் என்று கிளை மேலாளர் அறிவித்தார்.

மௌன அஞ்சலி முடிந்ததும், நாங்கள் அனைவரும் எங்கள் பணிக்குத் திரும்பச் செல்லாமல், வீட்டுக்குப் போகலாம் என்று அவர் தொடர்ந்து அறிவித்தது, மௌனம் அனுஷ்டிக்க ஒரு ஊக்கப் பரிசாகத் தோன்றியது.

மேலாளர் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்த அந்தக் கணமே மௌன அஞ்சலியின் துவக்கமாயிற்று. பேசுவதையே மூச்சாகக் கொண்டோர் உட்பட அனைவரும் ஒரு நிமிடம் அசையாமல், பேசாமல் “சும்மா” இருக்கத் தொடங்கினோம்.

மௌனம் - எவ்வளவு அற்புதமான விஷயம் இது! இதோ எல்லோரும் மௌனமாக இருக்கிறார்களே – நான் கூடத்தான்! நானுமா?... அப்படியானால், இப்போது பேசியது, பேசுவது யார்? இல்லை. என் வாய் பேசவில்லை. மனம் நினைக்கிறது. 

அப்படியானால், இதெல்லாம் ஒரு பேச்சைப் போல் என் காதில் ஒலிக்கிறதே, அது எப்படி? அதுவும் இந்த மௌனமான சூழலில், மிகத் தெளிவாக, துல்லியமாக, உரக்கக் கேட்கிறதே, அது எப்படி?

இல்லை. இது மௌனம்தான். மௌனம். திரு. வர்மாவின் மரணத்துக்காக மௌனம். ஆமாம், இந்த மௌனம் அவருக்கு எப்படி உதவப் போகிறது?அவருடைய ஆத்மாவின் அமைதி எங்களுடைய அந்த ஒரு நிமிட மௌனத்தையா சார்ந்திருக்கிறது?

இல்லை. இது ஒரு வகை மரியாதை.

மரியாதையா? எப்படி? ஒருவரிடம் பேசாவிட்டால், முகம் கொடுத்துப் பேசவில்லை, மரியாதை தெரியாதவன் என்றெல்லாம் சொல்வோமே! பேசாமல் இருப்பது எப்படி மரியாதையாகும்?

இல்லை. அப்படி இல்லை. அவர் இருந்தால், அவரிடம் பேசுவோம். அவர் இல்லை என்பதை அங்கீகரித்துப் பேசாமல் இருக்கிறோம் என்று கொள்ளலாமே! இது ஒரு வகை மரியாதைதான்.

ஒருவர் இல்லை என்பதை அங்கீகரிப்பது எப்படி அவருக்கு மரியாதை செலுத்துவதாக ஆகும்? ஒருவேளை இறந்த நபரைப் பற்றி வம்பு பேசாமல், ஒரு நிமிடம் மௌனமாக இருந்து, அவருக்கு நம் மரியாதையைத் தெரிவிக்கிறோமா?

இந்த மரியாதை எல்லோருக்கும் கிடைக்குமா? நான் இறந்து போனால், எனக்காக மௌனம் அனுஷ்டிப்பார்களா? சந்தேகம்தான்! எனக்கு அவ்வளவு தகுதி இல்லை. இறந்தபின் மௌனம் அனுஷ்டிக்கப்படுவதற்குக் கூட ஒரு தகுதி வேண்டும். வேடிக்கைதான்!

ஆனால் இந்த மானேஜர் இறந்தால், அவருக்கு நிச்சயம் மௌன அஞ்சலி உண்டு.

இந்தக் கூட்டமே இந்த மானேஜருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இருந்து, மானேஜர் நிற்கும் இடத்தில் அவருக்கு பதிலாக, இப்போது அவருக்கு அருகில் நிற்கும்  அசிஸ்டன்ட் மானேஜர் நின்றால், எப்படி இருக்கும்?

சிரிப்பு வந்தது.

சிரிக்கக் கூடாது. இது சீரியசான சூழ்நிலை.

ஒரு வேடிக்கை. ஒருவர் இறந்து விட்டால், கூட்டம் போட்டு அவரைப் பற்றிப் பேசுகிறார்கள். அது அவருக்குச் செலுத்தும் மரியாதை. ஒரு நிமிடம் எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தால், அதுவும் மரியாதை!

இது முரண்பாடாக இல்லை?

இருப்பவர்கள் இந்த முரண்பாட்டைப் பற்றிச் சிந்திப்பதில்லை. இறந்தவர்கள் இது பற்றிப் பேச முடியாது.

ஐயோ! மௌனம் முடியப் போகிறது. நான் அனுஷ்டித்தது மௌனமா? மனதுக்குள் இவ்வளவு சுறுசுறுப்பாக உரையாடல்கள் நடப்பது மௌனத்துக்கு முரணானது இல்லையா?

நான் மட்டும்தான் இப்படியா?  மற்றவர்களும் ஏதாவது நினைத்துக் கொண்டுதானே இருந்திருப்பார்கள்? மானேஜர் இப்போது என்ன நினைத்துக் கொண்டிருப்பார்? புதிய காட்ஃபாதராக யாரை சுவீகரிக்கலாம் என்றா?

மானேஜர் மீண்டும் தன் மணிக்கட்டைப் பார்த்து விட்டு, மௌனம் முடிந்ததாக அறிவிக்கும் விதத்தில் தலையாட்ட, ஒரு இருக்கமான தளையிலிருந்து விடுபட்டது போல், அனைவரும் சேர்ந்தாற்போல் பேசத் துவங்க, பெரும் சத்தம் எழுந்தது.

என் மனத்தின் ஓட்டம் ஒரு கணம் நிறுத்தப்பட்டு, அடுத்து எங்கே பாய்வது என்று புரியாமல் தடுமாற,  ஒரு கணம்....ஒரே ஒரு கணம் எந்த நினைவும் இல்லாமல், எந்தச் சலனமும் இல்லாமல்...

மௌனம் கலைந்த அந்த வேளையில், நான் மௌனத்தை தரிசித்தேன்.  

No comments:

Post a Comment