Saturday, November 17, 2012

10. நாளைய செய்தி இன்றே!


பொதுவாகவே எதையும் உடனே நம்பி விடாதாவன் நான். எதையுமே தீர விசாரித்து விட்டுத்தான் நான் ஒரு முடிவுக்கு வருவேன்.

அதனால்தான் பிரபல மாஜிக் நிபுணர் சுரேந்திராவின் சில சாதனைகளை என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை.

தற்செயலாக அவரை ஒரு பார்ட்டியில் சந்தித்தபோது அவரது அறிமுகம் எனக்குக் கிடைத்தது. நான் ஒரு பத்திரிகையாளன் என்று அறிந்ததும், என்னுடன் நெருக்கமாகப் பழகுவதில் அவர் ஆர்வம் காட்டினார்.

அந்தப் பார்ட்டிக்குப் பிறகும் எங்கள் தொடர்பு நீடித்தது. சிலநாட்கள் பழக்கத்துக்குப் பிறகு ஒருநாள் சற்று உரிமை எடுத்துக்கொண்டு அவரிடம் கேட்டேன். "உண்மையைச் சொல்லுங்கள் சுரேந்திரா. உங்கள் சாதனைகள் எல்லாம் மக்களைக் கவர்வதற்காக நீங்கள் செய்கிற சின்ன ஏமாற்று வேலைதானே?" ('சின்ன' என்ற பெயர்ச்சொல் சுரேந்திரா அதிகம் புண்பட்டு விடக்கூடாது என்பதற்காக என்னால் அனிச்சையாகச் சேர்க்கப்பட்டது!)


சுரேந்திராவின் முகம் சட்டென்று வாடி விட்டது. "ராகவ், நீங்கள் இப்படிக் கேட்பீர்கள் என்று நான் எதிர்பர்க்கவில்லை. என்னுடைய 'மாஜிக் காட்சிகளில்' நான் செய்பவை எல்லாம் தந்திரங்கள்தான். அதைத் தவிர, தனிப்பட்ட முறையில் நான் ஒரு கிளார்வாயன்ட். நீங்கள் எதை ஏமாற்று வேலை என்று சொல்கிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை" என்றார் வருத்தமும் கோபமும் கலந்த குரலில்.

"'கிளார்வாயன்ட்' என்றால்...?"

"பின்னால் நடக்கப் போகும் சில விஷயங்களை மனதால் உணர்ந்து கூறும் ஆற்றல்" என்று 'கிளார்வாயன்ஸியை' வரையறுத்தார் சுரேந்திரா.

நான் பெரிதாகச் சிரித்து, "கடைசியில் நீங்கள் ஜோசியத்தையும் விட்டு வைக்கவில்லையா?" என்றேன்.

"ஜோதிடக்கலை என்பது வேறு. அது ஒருவகை விஞ்ஞானம். அதற்கென்று சில விதிகள், வரைமுறைகள், சூத்திரங்கள் எல்லாம் இருக்கின்றன. ஜோதிடத்தை ஒரு பாடமாக, ஆர்வமுள்ளவர்கள்  யார் வேண்டுமானாலும் படித்து ஒரு ஜோதிடர் ஆக முடியும். மற்ற துறைகளில் இருப்பதுபோல் ஜோதிடத்திலும் மிகத் திறமையானவர்கள் என்று ஒரு சிலரே இருப்பார்கள். ஆனால் 'வரும் பொருள் உரைத்தல்' என்று சொல்லக்கூடிய கிளார்வாயன்ஸி இவ்வுலகில் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலருக்கு மட்டுமே இறைவன் அளித்திருக்கும் ஒரு வரம். ஒருவருக்கு இயல்பாகவே அமைந்தாலொழிய இந்த ஆற்றலைப் பெறுவது என்பது பெரும்பாலும் இயலாத ஒரு செயல். தற்காலத்தில், கிளார்வாயன்ஸியைக் கூடக் கற்பிக்கிறோம் என்று சிலர் இறங்கியிருக்கிறார்கள். இவ்வாறு கற்றுக் கொடுக்க முனைபவர்களுக்கே இந்த ஆற்றல் இருக்கிறதா என்பது கேள்விவிக்குறிதான்!" என்று சுருக்கமாக(!) ஒரு விரிவுரை ஆற்றினார் சுரேந்திரா.

"உங்களுக்கு இந்த ஆற்றல் இருக்கிறது என்பதை எப்படிக் கண்டறிந்தீர்கள்?"

"சில நிகழ்ச்சிகள் அவை நடப்பதற்குச் சிறிது காலம்  முன்பே என் மனதில் தோன்றியிருக்கின்றன என்ற உணர்வு என்க்குச் சிலமுறை ஏற்பட்டது.அதன்  பிறகு என் மனதில் தோன்றும் சில குறிப்பிட்ட நிகழ்வுகளை ஒரு டயரியில் குறித்து வைத்துக் கொள்ள ஆரம்பித்தேன். சிறிது காலம் கழித்து அவை உண்மையாகவே நிகழ்ந்தபோது என் ஆற்றலை உறுதிப் படுத்திக் கொண்டேன். அதன் பிறகு என் ஆரூடங்களை வெளிப்படையாகச் சொல்ல ஆரம்பித்தேன்."

"குறிப்பாக நீங்கள் சொன்னபடி நடந்த சில விஷயங்கள்?"

"ராஜீவ் காந்தி மரணம். தேவ கவுடா பதவி இழந்தது...."

"மன்னியுங்கள். இது போன்ற பல அரசியல் நிகழ்வுகளை, பல்வகையான ஜோதிட முறைகளின்படி கண்டறிந்து சொன்னதாகக் கூறிக்கொள்பவர்கள் பலர் இருக்கிறார்கள்.."

"சரி. நான் ஒரு பந்தயத்துக்கு ஒப்புக் கொள்கிறேன். இன்று தேதி பத்து. வரும் இருபதாம் தேதி 'ஹிந்து' பத்திரிகையின் தலைப்புச் செய்தி எதுவாக இருக்கும் என்பதை ஒரு பேபரில் எழுதி உங்கள் முன்பே ஒரு கவரில் போட்டு சீல் செய்து  கொடுக்கிறேன். இருபதாம் தேதி காலை ஹிந்து பத்திரிகையின் தலைப்புச் செய்தி எது என்று பார்த்து விட்டு, அதன் பிறகு இந்தக் கவரைத் திறந்து பார்த்து இரண்டும் ஒன்றாக இருந்தால் அன்று இரவு செம்பியன் ஹோட்டலில் எனக்கு ஒரு பெரிய விருந்து கொடுப்பீர்களா?"

பந்தயத்தை ஏற்றுக்கொண்டேன்.

"இருபதாம் தேதி நடக்கப்போகும், இந்தப் பேப்பரில் எழுதாத இன்னொரு நிகழ்வை உங்களுக்கு நான் இப்போது சொல்லப் போகிறேன்." என்றார் சுரேந்திரா

"என்ன அது?" என்றேன்

"இருபதாம் தேதி இரவு செம்பியன் ஹோட்டலில் நீங்கள் எனக்கு ஒரு பெரிய விருந்து கொடுக்கப் போகிறீர்கள்" என்றார் அவர் சிரித்தபடி.

அடுத்த சில நிமிடங்களில் அவர் கொடுத்த சீல் வைத்த கவருடன் வெளியேறினேன்.

ருபதாம் தேதி காலை ஹிந்து பத்திரிகையில் மட்டுமல்ல எல்லா பத்திரிகைகளிலும் ஒரே செய்திதான் வந்திருந்தது. டில்லிக்கு அருகே 19ஆம் தேதி நள்ளிரவு நடந்த கோரமான ரயில் விபத்தைப் பற்றிய செய்திதான் அது.

இந்தச் செய்தியை சுரேந்திராவால் நிச்சயம் 'முன் உணர்ந்திருக்க' முடியாது என்ற நிச்சயத்துடன் நான் பாதுகாப்பாக வைத்திருந்த சுரேந்திராவின் 'ஆரூடம்' அடங்கிய சீல் வைத்த கவரைப் பிரித்துப் படித்தேன்.

என்னால் நம்ப முடியவில்லை. ரயில் விபத்து குறித்த செய்தியைத்தான் சுரேந்திரா எழுதியிருந்தார்!

சுரேந்திரா பந்தயத்தில் ஜெயித்து விட்டார். அவர் எழுதிக் கொடுத்த ஆரூடம் பலித்து விட்டது. ஆனால் அவர் வாயால் சொன்ன ஆரூடம் பலிக்கவில்லை. என்னால் அவருக்கு இருபதாம் தேதி இரவு செம்பியன் ஹோட்டலில் விருந்து கொடுக்க முடியவில்லை - இரண்டு காரணங்களால்.

முதல் காரணம், முதல் நாள் இரவு நடந்த ஒரு தீ விபத்தில் செம்பியன் ஹோட்டல் பெரும் சேதம் அடைந்து தாற்காலிகமாக முடப்பட்டு விட்டது.

இரண்டாவது காரணம் 19-ஆம் தேதி இரவு சுரேந்திரா மாரடைப்பால் இறந்து போய் விட்டார்.


Thursday, November 1, 2012

9. பலி

பிரபல ஆங்கிலப் பத்திரிகையின்  ஒன்பதாம் பக்கத்தில் அந்தச் செய்தி வெளியாகியிருந்தது:

"ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு விற்கச் சதி செய்ததாக நடந்த வழக்கில், பிரபல விஞ்ஞானி பரமெஸ்வரன் மீது சாட்டப்பட்ட குற்றத்துக்கு ஆதாரம் இல்லை என்று சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பளித்தது."

பரமேஸ்வரன் செய்தித்தாளை மூடி வைத்தார். இரண்டு ஆண்டுகளாக அவரது வாழ்க்கையில் வீசிய கடும்புயல் இப்போது ஓய்ந்து விட்டது. ஆனால் அது விளைவித்த சேதங்கள்?

பரமேஸ்வரன் மெல்ல எழுந்தார். ஐம்பது வயதிலும் இருபது வயது இளைஞனைப் போன்ற அவரைச் செயல் பட வைத்த உற்சாகமும், உடல் வலுவும், மனவலிமையும்  இந்த இரண்டாண்டு சம்பவங்களால் அடியோடு பறி போய் விட்டன.

எழுந்திருக்கும்போதே இடுப்பின் கீழ்ப்புறம் 'சுருக்'கென்று வலி. இனி ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும், பாதங்களிலிருந்து கால்களை மேல் உடலில் இணைக்கும் மூட்டுக்கள் வரை பல இடங்களிலிருந்தும் குரல் கொடுக்கப்ப்போகும்  உடல் வேதனைகளுக்கு இது ஒரு முன்னுரை. வெளி உடல் உறுப்புகள் தவிர, ஜீரண உறுப்புகள், இதயம், நுரையீரலென்று உடலுக்குள்ளும் பாதிப்புகள்.

போலிஸ் 'விசாரணை' மற்றும் சிறைவாழ்க்கையின் தழும்புகள் இவை!

தன்மீது குற்றம் இல்லை என்று நிரூபிக்கப்பட்டு விட்டதால், இந்தத் தழும்புகள் மறைந்து விடுமா, அல்லது தான் அனுபவித்த உடல் வேதனையும், மன வேதனையும்தான் அகன்று விடுமா?

பௌதீகத்தில் 'மீள முடியாத மாற்றம்' என்று படித்தது அவர் நினைவுக்கு வந்தது. ஒரு ரப்பர் வளையத்தை இழுத்து விட்டால் அது மீண்டும் பழைய நிலைக்கு வந்து விடும். ஆனால் ஒரு இரும்புக் கம்பியை வளைத்து நிமிர்த்தினால் அது நிச்சயம் பழைய நிலைக்கு வராது என்று கல்லுரியில் பேராசிரியராக இருந்தபோது மாணவர்களுக்கு 'எலாஸ்டிஸிடி' பற்றி எளிமையாக விளக்கியிருக்கிறார். அப்போதெல்லாம் கடினமான தத்துவங்களையும்  எளிமையாக விளக்கும் அவரது திறமை மாணவர்களிடையே பெரும் வரவேற்பையும், பிரமிப்பையும் ஏற்படுத்தி அவருக்குப் பாராட்டுகளை வாங்கித்தரும்.

ஆனால் அவரது எந்த விளக்கத்தாலும்  தான் குற்றமற்றவர் என்பதை அவரால் போலிசாருக்குப் புரிய வைக்க முடியவில்லை.

கல்வித் துறையிலிருந்து, ராணுவ ஆராய்ச்சித் துறைக்கு வந்ததில், தான் எவ்வளவு இழந்து விட்டோம் என்று நினைத்துப் பார்த்தார். அரசு இயந்திரத்தின் சிவப்பு நாடாக்களியும் மீறி, தேசப் பாதுகாப்புக்காக உழைக்கிறோம் என்ற பெருமிதத்துடனும், உற்சாகத்துடனும் செயல்பட்டு, கடந்த இருபத்தைந்து வருடங்களில் அவர் தம் ஆராய்ச்சியின் மூலம் ஏற்படுத்திய முன்னேற்றங்களும், மாற்றங்களும் பல. ராணுவத் தலைமையகத்திலிருந்து அவருக்குப் பாராட்டுக் கடிதங்கள் கூட வந்திருக்கின்றன. ஏன், குடியரசுத் தலைவரிடமிருந்து  பத்ம பூஷண் விருது கூட வாங்கியிருக்கிறார்.

   எல்லாமே இரண்டு வருடங்களுக்கு முந்திய அந்த மே மாதத்தில் மாறி விட்டது. இன்று இவர் விடுதலை செய்யப்பட்ட செய்தியை ஒன்பதாம் பக்கத்தில் கடமைக்காகப் பிரசுரித்திருக்கும் இதே பத்திரிகை  அன்று முதல் பக்கத்தில்  'பிரபல விஞ்ஞானி கைது - ராணுவ ரகசியங்களைக் கடத்தியதில் உடந்தை' என்று இவர் கைதான செய்தியைக் கம்பீரமாகப் பிரசுரித்திருந்தது.

அப்போது ஒரு திருமணத்துக்காக அவர் விடுமுறையில் சென்னைக்கு வந்திருந்தார். அவர் பணி செய்த ஆராய்ச்சி நிறுவனம் இருந்தது  பெங்களூரில். சென்னையில் தனது தங்கையின்  வீட்டில் தங்கித் திருமணத்தில் கலந்துகொண்டு விட்டு அன்று இரவே சென்னையிலிருந்து கிளம்பி பெங்களூருக்கு வந்து விட்டார்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு சில முக்கியமான ராணுவ ரகசியங்கள் ஒரு ராணுவ ஆராய்ச்சி நிறுவனத்திலிருந்து ஒற்றர்கள்  மூலம் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட இருந்ததாகவும், பாகிஸ்தானின் பெண் ஒற்றரைக் கைது செய்ததன் மூலம் கர்நாடக மாநில போலிஸ் இந்தச் சதியை முறியடித்து விட்டதாகவும் பத்திரிகையில் வந்த செய்தியைப் பார்த்துப் பரமேஸ்வரன் திடுக்கிட்டார்.

எந்த ராணுவ ஆராய்ச்சி நிலையம் என்று செய்தியில் குறிப்பிடப்படாவிட்டாலும், அது இவரது தலைமையில் இயங்கும் ராணுவ ஆராய்ச்சி நிலையம்தான் என்பதில் அவருக்குச் சந்தேகமில்லை. தனது தலைமையில் இயங்கும் ஒரு அமைப்பில், தனக்குத் தெரியாமல் இப்படி ஒரு சதியா? அதுவும் பத்திரிகையில் செய்தி வந்த பிறகும் இதுபற்றித் தனக்கு எதுவும் தெரிய வரவில்லை என்றால்? அவர் குழம்பினார்.

ஆனால் அவர் அதிக நேரம்  குழம்ப வேண்டி இருக்கவில்லை. அவர் தனது அலுவலகத்துக்குச் சென்ற சற்று நேரத்துக்கெல்லாம் அவரைத் தேடிப் போலிஸ்காரர்கள் வந்தார்கள். அவர் புரிந்து கொள்ள முடியாத பல கேள்விகளைக் கேட்டார்கள். ஒரு பாகிஸ்தானியப் பெண்ணின் படத்தைக் காட்டி, 'இவளைத் தெரியுமா?' என்று கேட்டார்கள். ராணுவ ரகசியங்களை விற்றதற்காகக் கிடைத்த பணத்தை என்ன செய்திருக்கிறார் என்று வினவினார்கள். அவரது சென்னைப் பயணத்தைப் பற்றித் திரும்பத் திரும்பக் கேட்டார்கள். 'ஒரு திருமணத்தில் கலந்து கொள்ள' என்று அவர் சொன்னதைப் புறக்கணித்துப் பயண நோக்கம் பற்றிப் பல முறை திரும்பத் திரும்பக் கேட்டார்கள்.

அவர் சென்னையில் கழித்த 16 மணி நேரத்துக்கும் கணக்குக் கேட்டார்கள். திருமணத்துக்குச் சென்று வந்த பிறகு, உறவினர் வீட்டில் படுத்துத் தூங்கியதாகச் சொன்னதைக் கேட்டுச் சிரித்தார்கள். கடைசியாக, "ஓட்டலில் ரஸியாவைப் பார்த்து ரகசியப் பேப்பர்களின் நகலகளைக் கொடுத்து விட்டு உடனே வர வேண்டியதுதானே? ரொம்ப நேரம் ஓட்டல் அறையில் தங்கியது  அவளுடன் சல்லாபம் செய்யவா அல்லது தொடர்ந்து சதி வேலைகளுக்கான திட்டம் தீட்டவா?" என்று அவர்கள் கேட்டபோது அவர் முதல் முறையாக அதிர்ந்து போனார்.

"என்னையா சந்தேகப் படுகிறீர்கள்?" என்று அவர் அதிர்ச்சியிலிருந்து மீளாமல் கேட்டபோது, சினிமாவில் சொல்வது போல் "யூ ஆர் அண்டர் அரெஸ்ட்" என்றார்கள். அவர் கண்ணியமாக நடத்தப்பட்டது  அதுதான் கடைசி முறை!

போலீஸ் ஸ்டேஷனை அடைந்ததுமே விசாரணை முறை மாறிற்று. அதுவரை 'சார்' என்று மரியாதையாக விளித்து வந்தவர்கள், அதற்குப் பிறகு அவரை விளிக்கப் பயன் படுத்திய வார்த்தைகளிலேயே மிகவும் மரியாதையான வார்த்தை 'ஏண்டா' என்பதுதான். கன்னடத்திலும், தமிழிலும் அவர் கேட்டிருந்த, மற்றும் கேட்டே அறிந்திராத அனைத்து வசவுச் சொற்களும் அவர் மீது பிரயோகிக்கப் பட்டன.

மரியாதைக் குறைவாக நடத்தப் படுகிறோமே என்ற வருத்தம் சிறிது நேரமே நீடித்தது. பழகி விட்டது என்பதால் அல்ல. அதைவிடக் கொடூரமான விஷயங்களை அவர் அனுபவிக்க ஆரம்பித்து விட்டதால்தான்.

காவல் நிலையங்களில் பயன்படுத்தப்படும் சித்திரவதை முறைகளைப் பற்றி அவர் கேள்விப்பட்டிருக்கிறார். ஆனால், அவை இவ்வளவு கொடூரமாக, நம்ப முடியாத அளவுக்கு மோசமாக, தாங்க முடியாத அளவுக்கு வேதனை அளிப்பவையாக இருக்கும் என்று அவர் அறிந்திருக்கவில்லை.

பொதுவாக அவரால் வலியைத் தாங்கிக்கொள்ள முடியாது. அவரது குழந்தைகள் சிறு வயதில் விளையாட்டாக அவர் முதுகில் அடித்தால் கூட வலி தாங்காமல் அவர்களைக் கடிந்து கொள்வார். 'குழந்தை விளையாட்டாக அடிப்பதைக்கூடப் பொறுத்துக்கொள்ள முடியவில்லையே உங்களால்!' என்று அவர் மனைவி கூட அங்கலாய்த்துக் கொள்வாள். அப்படிப்பட்டவர் உடல் வேதனையின் உச்சக் கட்டங்களுக்குச் சென்று மீண்டு வந்தார்.

தினமும் இரவில் தொடர்ந்த சித்தரவைகளால் பொழுது சாயும்போதே அவரது உடல் முழுவதும் ஒரு கிலி பரவத் தொடங்கி விடும். இன்று விடுதலையாகி வீட்டில் இருக்கும்போது கூட, மாலை வந்தாலே, தன்னையறியாமல் உடலில் ஒருவித பயமும், நடுக்கமும் பரவ ஆரம்பித்து விடுகிறது.

அவர் குற்றவாளி என்பதில் போலிசாருக்குச் சிறிதளவும் சந்தேகம் இருக்கவில்லை.

அவர்கள் தெரிந்து கொள்ள விரும்பியதெல்லாம்  அவருக்கு எவ்வளவு பணம் கிடைத்தது, அதை என்ன செய்தார், எங்கே வைத்திருக்கிறார், ஸ்விஸ் வங்கி எதிலாவது  அவர் பெயரில் பணம் போடப்பட்டிருக்கிறதா என்பதுதான்.

சில மாதங்களில் வழக்கு நீதிமன்றத்துக்கு வந்தது. அவருக்கு எதிராகச் சொல்லப்பட்ட சாட்சிகள் அவரை மலைக்க வைத்தன. அலுவலக ஜிராக்ஸ் அறைக்கு அவர் அடிக்கடி சென்றதாகவும், வீட்டுக்குப் போகும்போது சில அலுவலகத் தாள்களை அவரது கைப்பெட்டியில் போட்டு எடுத்துச் சென்றதைத் தான் பார்த்ததாகவும் அவருக்குக் கீழே பணி புரிந்த இளம் விஞ்ஞானி மஞ்சுநாத் சாட்சி சொன்னான்.

குறிப்பிட்ட தேதியில் 'அவரைப் போல் தோற்றம் கொண்ட' ஒருவரைக்  குறிப்பிட்ட ஓட்டலில் பார்த்ததாக ஓரிரு சாட்சிகள் கூறினர்.
பரமேஸ்வரனை யாரும் நம்பியதாகத் தெரியவில்லை. 'ஒரு தேசத்துரோகியின் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டேனே!' என்று அவரது மாப்பிள்ளை அவரது  மகளிடம் அங்கலாய்த்துக் கொண்டானாம்.
சிறையில் வந்து அவரைப் பார்த்த அவரது ஒரே மகன் "பணம் வேண்டுமானால் என்னிடம் கேட்டிருக்கலாம்" என்று ஒரே வரியில் சொல்லி விட்டுப் போனான்.

அவர் மனைவி கூட "நாம் இரண்டு பேர்தானே இருக்கிறோம்? இந்த வயதில் இப்படிச் செய்து ஏன் மாட்டிக் கொண்டீர்கள்?" என்று அழுதாள். "ஏன் இப்படிச் செய்தீர்கள்?" என்று கேட்கிறாளா அல்லது "ஏன் இப்படி மாட்டிக் கொண்டீர்கள்?" என்று கேட்கிறாளா என்று அவருக்குப் புரியவில்லை.

ஒரு வக்கீலை அமர்த்த முயன்றார். அவர் கேட்ட ஃபீஸ் இவருக்குக் கட்டுபடியாகவில்லை. "என்ன செய்வது? தப்பு செய்து மாட்டிக்கொண்டு விட்டால், 'சம்பாதித்த பணத்தில் கொஞ்சம் செலவு செய்துதான் ஆக வேண்டும்" என்று நியாயம் பேசினார் வக்கில்.

வக்கீலுக்குக் கொடுக்கப் பணம் இல்லாத நிலையில், மகனிடமோ வேறு யாரிடமோ  பணம் கேட்க அவருக்கு விருப்பம் இல்லை. வக்கீல் வைத்துக் கொள்ளாமல் தானே வாதாடிக் கொள்வது என்று முடிவு செய்தார்.

அவருக்கு ஒரு நம்பிக்கை இருந்தது. அவர் குற்றம் செய்திருந்தால் அவர் நிறையப் பணம் சம்பாதித்திருக்க வேண்டும்.

 ஆனால் போலிஸ் அவர் வீட்டைச் சோதனை செய்தபோது அவருடைய பொருளாதார நிலை சராசரி அளவில்தான் இருந்ததை உணர்ந்திருப்பார்கள். இந்த ஒரு உண்மையே தனக்குச் சாதகமாக இருக்கும் என்று அவர் நினைத்தார்.

ஆனால் ரஸியாவின் சாட்சியம் அவரது நம்பிக்கையை உலுக்கி விட்டது. அவர் ஒருமுறை கூடப் பார்த்திராத அந்த பாகிஸ்தானியப் பெண் அவர் தன்னை ஓட்டலில் வந்து சந்தித்ததாகவும், தான் அவரிடமிருந்து  சில ரகசிய ஆவணங்களைப் பெற்றுக் கொண்டதாக ஒப்புக் கொண்டாள். அவளிடமிருந்து ஆவணங்கள் போலிசாரால் கைப்ப்ற்றப்பட்டிருந்தன. அந்த ஆவணங்கள் பரமேஸ்வரன் பெயருக்கு வந்திருந்த ஒரு கவருக்குள் வைக்கப்பட்டிருந்ததால், அவர்தான் அந்த ஆவணங்களை அவளிடம் கொடுத்திருப்பார் என்று சந்தேகிக்க ஏதுவாயிற்று. அவருக்குக் கொடுக்க வேண்டிய பணம் அந்த சமயம் தனக்கு வந்து சேரவில்லை என்பதால் அவருக்குத் தான் பணம் ஏதும் கொடுக்கவில்லை என்று அவள் கூறியது இவருக்குச் சாதகமாக இருந்த ஒரே விஷயத்துக்கும் உலை வைத்து விட்டது.

பரமேஸ்வரன் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு அவருக்கு ஐந்தாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் தனது வசதிக்கேற்ற வகையில் ஒரு வக்கீலை ஏற்பாடு செய்து அவர் மூலம் ஹைகோர்ட்டுக்கு அப்பீல் செய்தார். ஆனால் ஹைகோர்ட் கீழ்க் கோர்ட்டின் தீர்ப்பை உறுதி செய்து விட்டது. பின்பு மிகுந்த பிரையாசையுடன் சில நண்பர்களின் உதவியுடன் வேறொரு வக்கீலை வைத்து சுப்ரீம் கோர்ட்டுக்கு அப்பீல் செய்தார். இதற்கிடையில் பாகிஸ்தானியப் பெண் சிறையில் இறந்து போனாள். அது இயற்கையான மரணமா, தற்கொலையா, கொலையா என்ற சர்ச்சை எழுந்தது.

சுப்ரீம் கோர்ட் அவர் நிரபராதி என்று இப்போது தீர்ப்பளித்துள்ளது. போலிசுக்குக் கடுமையான கண்டனமும், நாட்டின் மிகச் சிறந்த விஞ்ஞானி ஒருவருக்கு இத்தகைய கொடுமை நேர்ந்தது பற்றிய தனது வருத்தத்தையும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்திருந்தது.

இப்போது இவர் வேலை பார்த்த அரசு நிறுவனம் இவரை மீண்டும் வேலையில் சேர அழைத்திருக்கிறது.

மீண்டும் வேலையில் சேர்வதா என்பது பற்றிய சிறிய குழப்பத்துக்குப் பிறகு பரமேஸ்வரன் வேலையில் சேர முடிவு செய்தார். அவர் செய்து முடிக்க வேண்டிய   முக்கியமான பணி ஒன்று இருந்தது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மீண்டும் தனது அலுவலக அறைக்குள் நுழைந்தார். அவர் இடத்தை அரசாங்கம் இன்னும் நிரப்பாமல் வைத்திருந்ததால், இடையில் வேறு யாரும் அவர் நாற்காலியில் உட்காரும் வாய்ப்பு வரவில்லை.

அவர் கைது செய்யப்பட்ட பின், அவரது அலுவலக அறை சோதனை போடப்பட்டதை அவர் அறிந்திருந்தார். சோதனைக்குப் பின் ஒழுங்கு படுத்தப்படாமல் பூட்டியே வைக்கப்பட்டிருந்த அவரது அறை அவர் மீண்டும் பணியில் சேருகிறார் என்று தெரிந்ததும் அவசரமாக ஒழுங்கு படுத்தப் பாட்டிருந்தது.

ஊழியர்கள் ஒவ்வொருவராக வந்து அவரை  வாழ்த்தி வணக்கங்களையும் , வாழ்த்துக்களையும், மகிழ்ச்சியையும்  தெரிவித்து விட்டுப் போனார்கள். அவருக்கு எதிராகச் சாட்சி சொன்ன மஞ்சுநாத் வந்தான். அவனுடைய தயக்கத்தையும், சங்கடத்தையும் அவனால் மறைக்க முடியவில்லை. "சார், உங்களிடம் தனியாகப் பேச வேண்டும்" என்றார்.

"உணவு இடையேளையின்போது வா" என்றார் பரமேஸ்வரன்.

உணவு இடைவேளை வந்தது. மஞ்சுநாத்தும் வந்தான். சற்று நேரம் தலை குனிந்து உட்கார்ந்திருந்தவன், "சார், என்னை மன்னித்து விடுங்கள். போலிஸ் என்னை நிர்ப்பந்தித்ததால்தான் அப்படி சாட்சி சொன்னான். நீங்கள் என்னை ஒரு மகன் போல் நடத்தினீர்கள். உங்களுக்கு துரோகம் செய்து விட்டேன்" என்றான் எழும்பாத குரலில்.

பரமேஸ்வரன் அவனை உற்றுப் பார்த்தார். அவன் சொன்னது சரிதான். அவர் அவனைத் தன் மகன் போல் பாவித்துத்தான் அன்பு செலுத்தி வந்தார். சிறகு முளைத்துக் குஞ்சுகள் பறந்து விட்ட பிறகு, தாய்ப்பறவைக்கு (தந்தைப் பறவைக்கும்தான்!) தன் அன்பை வெளிக்காட்ட வேறொரு ஜீவன் தேவைப்படுகிறது. அவர் இப்போது இங்கே வந்திருப்பது கூட அந்த தந்தைப் பாசத்தினால்தான்.

"மஞ்சு, நான் நிறையக் கொடுமைகளை அனுபவித்து விட்டேன். இந்தக் கொடுமைகள் வேறு யாருக்கும் நிகழக்கூடாது...குறிப்பாக நான் மகன்போல் நினைத்து அன்பு செலுத்தும் உனக்கு நிகழக்கூடாது."


"சார்..."

"எனக்கு உண்மை தெரியாது மஞ்சு. எல்லாம் என் யூகம்தான். நான் மாட்டிக் கொள்வதால், நீ உன் வேலையைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கலாம். யாருக்கும் சந்தேகம் வந்திருக்காது. அதனாலேயே ரஸியாவும் எனாக்கெதிராகச் சாட்சி சொல்லும்படி அறிவுறுத்தப் பட்டிருக்கலாம். எப்படியோ ஒரு அப்பாவியின் வாழ்வைச் சிதைத்து விட்டீர்கள்.."

"சார் நான் சொல்ல வதை..."

"நான் எதையும் கேட்க விரும்பவில்லை. எனது யூகம் எல்லாம் தவறாகவே இருக்கலாம். ஆனால் நான் சொல்ல வந்ததைச் சொல்லியே ஆக வேண்டும். ரகசியங்களை விற்பதை இன்னமும் தொடர்ந்து செய்து வந்தால், தயவு செய்து உடனே அதை நிறுத்தி விடு. தேசப்பற்றினால் நான் இதைச் சொல்லவில்லை. தேசப்பற்றோடு செயலாற்றி வந்த எனக்கு இப்படிப்பட்ட பரிசுகள் கிடைத்த பிறகு, மற்றவர்களிடம் கடமை, தேசப்பற்று போன்ற விஷயங்களைப் பற்றி நான் பேசுவதில் அர்த்தமில்லை. உன் மீது நான் வைத்திருக்கும் அன்பினாலும், பாசத்தாலும், அக்கறையாலும் சொல்கிறேன். கடந்த இரண்டு வருடங்களாக எனக்கு நேர்ந்த அனுபவங்களை இப்போது நினைத்துப் பார்த்தால் கூட உடல் சில்லிட்டுப் போய் விடுகிறது.....

"தவறு செய்பவன் ஒருநாள் பிடிபடுவான். எந்தத் தவறும் செய்யாத எனக்கே இவ்வளவு கொடுமைகள் நிகழ்ந்தபோது, தவறே செய்யாத, இன்னும் செய்து கொண்டிருக்கும் உனக்கு அத்தகைய அனுபவங்கள் ஏற்படாது என்று சொல்ல முடியாது. என் அன்புக்குரிய உனக்கு அத்தகைய கொடுமைகள் நிகழ்வதை  என்னால் நினத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. எனவே தயவு செய்து  நிறுத்தி விடு. இப்போதே ...உடனேயே! இதை உன்னிடம் சொல்லிவிட்டுப் போகத்தான் வந்தேன். நான் வேலையில் சேராமல் உன்னை வெளியே எங்கேயாவது சந்தித்துப் பேசியிருந்தால் அது உன் மீது மற்றவர்களுக்குச் சந்தேகங்களை ஏற்ர்படுத்தி இருக்கும். மற்றபடி தொடர்ந்து வேலை செய்வதில் எனக்கு எந்த ஆர்வமும் இல்லை."

அவன் பதிலை எதிர்பார்க்காமல் அவர் கிளம்பினார். அவரது ராஜினாமாக் கடிதத்தைஅன்று காலையிலேயே அவர் மேலதிகாரிக்கு அனுப்பி விட்டார்.