கற்சிலையின் கண்ணீர்
கதைக் காட்சி
(கௌதமர் ஆசிரமத்துக்கு வெளியே, கௌதமர் கோபத்துடன் நிற்கிறார். எதிரே அகலிகை
உடல் கூசி, ஒடுங்கி நிற்கிறாள். அருகே, இந்திரன் வேறுபுறம் பார்த்து நிற்கிறான்.)
அகலிகை: நாதரே! என் மீது குற்றமில்லை. இந்தக் காமுகன்தான் கள்ள வேடத்தில் வந்து என்னை
ஏமாற்றி விட்டான். விடிந்து விட்டது என்று நினைத்து ஆற்றில் நீராடக் கிளம்பிய
தாங்கள், சற்று தூரம் நடந்து சென்றபின், இன்னும் பொழுது புலரவில்லை என்று
கண்டறிந்து குடிலுக்குத் திரும்பி வந்து விட்டீர்கள் என்று தவறாக நினைத்து ஏமாந்து விட்டேன்.
இந்தத் தவறுக்கு தாங்கள் என்ன பிராயச்சித்தம் விதித்தாலும் ஏற்றுக் கொள்கிறேன்.
கௌதமர்: பிராயச்சித்தமா? அறியாமல் செய்த தவறுக்குத்தான் பிராயச்சித்தம் உண்டு. காமத்தினால் மதியிழந்து,
கணவனுக்கும் கள்வனுக்கும்
வேறுபாடு காணாமல் இச்சித்த உனக்கு மன்னிப்பே கிடையாது. ஒரு ரிஷிபத்தினி தன்னைத்
தீண்டியவன் ஒரு அந்நியன் என்று உணரவில்லை என்பதை இந்த உலகம் ஒப்பாது. உண்மை உன்
உள்மனதுக்குப் புரிந்தும், அதை அலட்சியம் செய்து, ஏமாந்தவள் போல் நடித்து, இன்பத்தை நாடி விட்டாய்.
அகலிகை: சுவாமி! தங்கள் மீது ஆணையாகக் கூறுகிறேன்.
கௌதமர்: நிறுத்து. என் மீது ஆணையிடும் உரிமை உனக்கு இல்லை. இரு. அன்னியன் முன்னிலையில்
உன்னைத் தண்டிக்க விரும்பவில்லை. முதலில் அவனை அனுப்புகிறேன். (இந்திரனிடம்
திரும்பி) தேவேந்திரா! வானுலகத்தில் மேனகை, ரம்பை, ஊர்வசி, திலோத்தமை என்று இன்னும் எத்தனையோ தேவமகளிர் உன் ஏவலுக்கும் ஆவலுக்கும்
காத்திருந்தும், நீ தீராத காமப்பசி கொண்டவனாய், ஒரு மானிடப் பெண்ணை, அதுவும் ஒரு ரிஷிபத்தினியை, இச்சித்து, அவளை வஞ்சத்தால்
ஏமாற்றி, உன் மோகத்தைத் தீர்த்துக் கொண்டாய். எந்தக் கண்கள் உன் காமத்துக்கு வாசலாக
அமைந்தனவோ, அந்தக் கண்கள் ஆயிரமாகப் பரவி, உன் உடல் முழுவதும் வியாபிக்கட்டும். ஆயிரம் கண்கள் கொண்டவனாக, உடலில் வேறு உறுப்புகளுக்கு
இடமில்லாதவனாக, இனி உன் காம வேட்கையைக் கண்களாலேயே தீர்த்துக் கொண்டிரு.
(இந்திரனின் தோற்றம் மாறுகிறது.)
இந்திரன்: மகரிஷி, இதென்ன கொடுமை? என்னை வெறும் சல்லடையாக ஆக்கி விட்டீர்களே! ஐயோ, இந்தக் கோலம் எனக்கே சகிக்கவில்லையே. இந்த உடலோடு
நான் எப்படி நடமாடுவேன்?
கௌதமர்: ஏன் நடமாடிப் பாரேன்? உன் கண்கள் பத்துத் திசையிலும் பரவி, ஈரேழு உலகங்களிலும் உள்ள எல்லா அழகுகளையும் பருகட்டும். உன்
உடலழகில் மயங்கி, இன்னும் பல பெண்களும் உன் காம வலையில் விழுவார்களே! காமுகனே! இனியும், என் கண்
முன் நின்றால், இன்னும் கொடுமையான சாபத்துக்கு ஆளாவாய். உடனே போய் விடு.
(இந்திரன் மறைகிறான். கௌதமர் மீண்டும் அகலிகையிடம் திரும்புகிறார்.)
அகலிகை: சுவாமி, அந்தப் பாதகனுக்கு விதித்தது போன்ற கொடும் தண்டனை எதையும் எனக்கு விதித்து விடாதீர்கள்.
கௌதமர்: ஆணுக்கும் பெண்ணுக்கும் நீதி ஒன்றுதான். ஆனால், தண்டனை அவரவர் இயல்புக்கும்,
நிலைமைக்கும், குற்றத்துக்கும் ஏற்றதாக இருக்க வேண்டும். அகலிகை! உய்த்துணரும்
அறிவை இறைவன் மானிடப் பிறவிகளுக்குக் கொடுத்திருக்கிறான். ஆனால், நீ அதைப்
பயன்படுத்தத் தவறி விட்டாய். மணாளன் தீண்டுவதற்கும் மாற்றான் தீண்டுவதற்கும்
வித்தியாசம் தெரியாமல், ஜடமாக நடந்து கொண்டாய். அதனால், நீ ஒரு ஜடப்பொருளாக,
ஒரு கல்லாக ஆகக் கடவாய்.
(அகலிகை கல்லாகிறாள்.
அகலிகை: சுவாமி, இதென்ன கொடுமை? அந்தப் பாதகனுக்கு வழங்கியதை விடக் கொடுமையான தண்டனையை எனக்கு வழங்கி விட்டீர்களே!
கௌதமர்: அகலிகை! தவறு செய்பவர்கள் தண்டனை பெற்றுத்தான் ஆக வேண்டும். ஆயினும், எதற்கும் ஒரு
எல்லை, முடிவு, விடுதலை உண்டு. இந்தக்
கல்லாகவே நீ சாஸ்வதமாக இருந்து விடப் போவதில்லை. இந்த பூமியில் ஒரு புனிதன் நடந்து செல்லப் போகிறான். அவன் பாதம் பட்ட இடமெல்லாம்
புனிதமடையும். அப்போது அவன் திருவடியால் தீண்டப்பட்டு, நீ உயிர்த்தெழுவாய். அதுவரை,
நீ உருவத்தில் கல்லாக இருந்து, உள்ளத்தில் அவன் வருவதற்காகப் பிரார்த்தனை செய்து கொண்டிரு.
காட்சி மாற்றம்
(அகலிகை கல்லாகக் கிடக்கிறாள். அங்கே இந்திரன் வருகிறான். சுற்றுமுற்றும்
யாரையோ தேடுகிறான். ஆயிரம் கண்களும் சுழன்று, எல்லாக்
கோணங்களிலும் நோக்குகின்றன. அப்போது அவன் காலடியில் அந்தக் கல் இடறுகிறது.)
அகலிகை: அட, காமாந்தகாரா, என்னை இந்நிலைக்குக ஆளாக்கியது போதாது என்று மீண்டும் இங்கே ஏன் வந்தாய்?
உன் கை பட்டதால் நான்
கல்லாகிப் போக நேர்ந்தது. இப்போது இந்தக் கல்லிலும் உன் கால் பட்டு விட்டதே. நான்
இன்னும் எந்தக் கீழ்நிலைக்குப் போக நேருமோ, தெரியவில்லையே!
இந்திரன்: அகலலிகை! நீயா பேசினாய்? நீ... நீ இந்தக் கல்லா? என்ன கொடுமை இது?
அகலிகை: ஆமாம், கொடுமைதான். நீ இழைத்த கொடுமையின் விளைவுதான் இது. உன் சல்லடைக் கண்கள்
இப்போது திருப்தி அடைந்தனவா?
இந்திரன்: ரிஷிபத்தினியே! என் இச்சைக்கு உன்னை பலியாக்கியது என் குற்றம்தான். மற்ற சாதாரண
மானிடப் பெண்களைப் போல் உன்னையும் எண்ணி விட்டேன். அதனால், முனிவரின் கொடிய
சாபத்துக்கு இருவருமே ஆளாகி விட்டோம்.. என்னைப் பற்றிக் கூட நான் கவலைப்படவில்லை.
உனக்கு ரிஷி என்ன தண்டனை அளித்து விட்டாரோ என்று அறிந்து கொள்ளத்தான் கவலையுடன்
இங்கே வந்தேன். ஆனால், தவசிகளையும் மயக்கும் அழகு கொண்ட உன் மேனி, இன்று நாய்
வந்து உரசும் கல்லாகி விட்டதை நினைத்தால்தான் எனக்கு வேதனை பொறுக்கவில்லை.
அகலிகை: உன் பரிவுக்கு நன்றி. தயவுசெய்து இந்த இடத்தை விட்டுப் போகிறாயா? நீ இங்கே நிற்கும் வரை, உன்
பாவத்தின் கிரணங்கள் என்மீது பாய்ந்து கொண்டேதான் இருக்கும்.
இந்திரன் (யோசனை செய்தபடி): அகலிகை!.. ம்.. என்ன சொன்னாய்?
ம்… போகிறேன். ஆனால் ஒன்று. நான் இங்கு வந்ததன் நோக்கம், என்னால் உனக்கு நேர்ந்து விட்ட
கொடுமைக்கு, ஏதாவது ஒரு வகையில் பிராயச்சித்தம் செய்ய வேண்டும் என்பதுதான்.
அகலிகை என்ன பிராயச்சித்தம்? என்னைப் பொடியாக்கி நீரில் கரைத்துக் குடிக்கப் போகிறாயா?
இந்திரன்: அகலிகை! முனிவர் உன்னை என்னவென்று சபித்தார்? கல்லாக வேண்டும் என்றுதானே? கல் என்றால் காலில் இடறும் கல்லாகத்தான் இருக்க
வேண்டுமா என்ன? காண்போர் மயங்கும் கற்சிலையாக ஏன் இருக்கக் கூடாது?
அகலிகை: இந்திரா, என்ன சொல்கிறாய் நீ?
இந்திரன்: முனிவர் சாபத்தை மாற்ற முடியாதுதான். ஆனாலும், அகலிகை! நீ மனதளவில்
களங்கப்படவில்லை. என்னை உன் கணவன் என்று கருதித்தான் உன்னைத் தீண்ட அனுமதித்தாய்.
அதனால், மனதளவில் நீ கற்புள்ளவள்தான். உன் கற்பின் சக்தியைப் பயன்படுத்தி, நீ உன் பழைய உருவத்துடன் ஒரு
கற்சிலையாக மாற வேண்டுமென்று உன் கணவனை நினைத்து, தியானம் செய். முனிவரின் சாபம்
பொய்க்காத வகையில், உன் கற்பின் வலிமையால் உன்
விருப்பம் நிறைவேறும். கண்டவர் கால்களில் மிதிபட்டும், உதைபட்டும், அழுந்தியும் நோகாமல்,
உன் நிஜ ரூபத்துடன் உன் அழகை
முழுமையாகப் பிரதிபலிக்கும் சிலையாக நின்றால், உனக்கு மேன்மைதானே? வரமளிக்கும் சக்தி எனக்கு
இல்லை. ஆனால், உன் விருப்பம் நிறைவேற வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.
(இந்திரன் மறைகிறான்.)
அகலிகை (மனதுக்குள்): போய் விட்டான் பாதகன். ஆனால், காமாந்தகாரனா இருந்தாலும், கொஞ்சம் நல்ல சிந்தையும் கலந்திருக்கிறது போலும்!
இல்லாவிட்டால், என் நலனில் அக்கறை கொண்டு, இப்படி ஒரு நல்ல யோசனையைச் சொல்லி விட்டுப்
போயிருப்பானா? (மனதில் கணவரை தியானித்து) முனி சிரேஷ்டரே! நான் இத்தனை ஆண்டுகளாகத்
தங்களையே தெய்வமாகப் பூஜித்து, சிறிதும் மனச் சலனமின்றி என் கடமைகளைச் செய்து வந்தது உண்மையானால், தாங்கள் விதித்த தண்டனையை, நான் ஒரு கோணல் வடிவக் கல்லாக
இல்லாமல், என் நிஜ ரூபத்திலேயே ஒரு கற்சிலையாக இருந்து அனுபவிக்க வேண்டும் என்று அருள்
புரியுங்கள்.
(அகலிகை உடனே தோற்றம் மாறி, கற்சிலையாக வடிவம் பெறுகிறாள்.)
அகலிகை: ஆஹா! என் கணவரின் கருணையே கருணை! என் மீது எவ்வளவு கோபம் இருந்தும், என் வேண்டுக்களை நிறைவேற்றி
விட்டாரே! முனி சிரேஷ்டரே! விரைவிலேயே என் சாபம் நீங்கி, மீண்டும் நான் தங்களை அடைந்து, தங்களுக்கு பணி
செய்யும் பேற்றைப் பெற அருள வேண்டும்.
காட்சி மாற்றம்
.(காலப்போக்கில் பல காட்சிகள்..
கற்சிலையாக மாறிய அகலிகை காற்றிலும்,
மழையிலும், வெயிலிலும் பல ஆண்டுகள்
அப்படியே நிற்கிறாள். அவை அவளைப் பாதிக்கவில்லை. ஆனால்...
ஒருமுறை அந்தப் பக்கமாக இரண்டு யாத்ரீகர்கள் வருகிறார்கள் – ஒரு ஆணும்
பெண்ணும். புதுமணம் புரிந்த தம்பதி போலும்! அகலிகையின் அருகில் வந்ததும், சிலையின் அழகிய தோற்றத்தில் இருவரும் சற்று நேரம் ஆழ்ந்து வியந்து நிற்கிறார்கள்.
கணவன் தன் புது மனைவியிடம், “அன்புள்ளவளே! உன்னைத் தவிர வேறு எந்தப் பெண்ணையும் என் உடலாலும், மனதாலும்
தீண்ட மாட்டேன் என்று உனக்கு அளித்த வாக்குறுதியை இப்பொழுது மீறப் போகிறேன்” என்று
கூறி, அகலிகையின் சிலையைக்
கட்டித் தழுவியபடி, மனைவியைப் பார்த்துச் சிரிக்கிறான். அவள் பொய்க் கோபம் கொண்டு,
ஆனால் நிஜச் சிரிப்பை அடக்க
முடியாமல், அதைப் பார்த்து ரசிக்கிறாள்.
அகலிகையின் நெஞ்சம் பதறுகிறது. “ஐயோ! இந்தப் பாவி என்னைத் தீண்டுகிறானே! மூடா,
நான் உணர்ச்சியற்ற கல்லல்ல.
உயிர்த் துடிப்புள்ள பேதை. முனி சிரேஷ்டரே!”
இன்னொரு முறை, அவள் அழகில் மயங்கிய ஒரு சிற்பி, அவளைப் போலவே இன்னொரு சிலை வடிக்க எண்ணி, அவள் சிலைக்கு அருகிலேயே
தன் பணியைத் துவக்குகிறான். அந்த முயற்சியில், அவன் அகலிகையின் உடலின் ஒவ்வொரு அங்கத்தையும்
கைகளால் தீண்டியும், அளந்தும், தான் வடித்த சிலையுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறான். அகலிகையின் உயிர் அந்தச்
சிலையிலிருந்து வெடித்துக் கிளம்ப எத்தனிப்பதுபோல் துடிக்கிறது.
அவள் தலை மீது காகங்கள் எச்சில் இடுகின்றன. குருவிகள் கூடு கட்டுகின்றன. கட்டுச்
சோற்றை உண்ட வழிப்போக்கர்கள் தங்கள் கைகளை அவள் மீது தேய்த்து, சுத்தப்படுத்திக்
கொள்கிறார்கள். களைப்படைந்தவர்கள் அவள் காலடியில் அமர்ந்து, அவள் மீது முதுகைச் சாய்த்து ஓய்வெடுக்கிறார்கள்.)
அகலிகை (மனதுக்குள்): ஓ! ஒரு முறை இந்திரனால் தீண்டப்பட்டதற்காகக்
கல்லாகி நிற்கும் கொடிய தண்டனையை அனுபவிக்கும் நான், இந்த
தண்டனைக் காலத்திலேயே மேலும் பல முறை என் தூய்மையை இழந்து கொண்டிருக்கிறேனே! இந்தப் பாவங்களுக்காக,
நான் மீண்டும் தண்டனை பெற வேண்டி வரும் என்றால், ஐயோ! எத்தகைய கொடிய தண்டனையாக இருக்கும் அது?
(முனிவரை நினைத்துப் புலம்புகிறாள்.)
காட்சி மாற்றம்.
(பல வருடங்கள் கழிகின்றன. ஒருநாள், விஸ்வாமித்திர முனிவரும், அவர் பின் ராம இலக்குவர்களும்
வருகிறார்கள். தூரத்தில் அவர்களைப் பார்த்துமே, அகலிகையின் மனதில் ஒரு சிலிர்ப்பு
ஏற்படுகிறது.)
அகலிகை (மனதுக்குள்): “ஓ! எந்தப் புண்ணியனின் பாதம் பட்டு என் பாவம் நீங்கும் என்று என் கணவர்
கூறினாரோ, அந்தப் புண்ணிய புருஷர் இவராகத்தான் இருக்க வேண்டும். முனிவர்களின் பின்னே
வரும் அந்தப் புருஷனின் முகத்தில் என்ன ஒரு தேஜஸ்! சூரியன் பூமியிலிருந்து
பிரகாசிப்பது போல், அவர் முகத்திலிருந்து அப்படி ஒரு ஒளி பாய்ந்து வருகிறதே. இவர் மானிடப்
பிறவிதானா, அல்லது மாறுவேடம் தாங்கி வரும் பரம்பொருளா? தெய்வமே, நான் அனுபவித்த தண்டனை போதும். எனக்கு விமோசனம் கொடு. உன் கருணையை
விரைந்து அனுப்பு,” என்று முனிவரை மனதில் தியானித்து, இறைஞ்சுகிறாள். மூவரும் அவள் அருகில்
வருகிறார்கள்.)
விஸ்வாமித்திரர்: ராமா! இந்தச் இந்தச் சிலையைப் பார்த்தாயா?
ராமர்: பார்த்தேன். எவ்வளவு அழகான தோற்றம்! இந்தக் காட்டில் இப்படி ஒரு அற்புதச் சிலையைச் செய்தவர் யார்? வியப்பாக இருக்கிறதே!
விஸ்வாமித்திரர்: அதை அப்புறம் சொல்கிறேன். அதற்கு முன், நீ ஒன்று செய்ய வேண்டும். உன் காலால் இந்தப்
பதுமையைச் சற்றே இடற வேண்டும்.
ராமர்: சிலையைக் காலால் இடறுவதா? சுவாமி, இதென்ன விபரீதம்! முதலில் ஒரு
பெண்ணைக் கொல்லச் சொன்னீர்கள். அவள் பெண்ணல்ல, இரக்கம் காட்டத் தகுதியற்றவள் என்ற
தங்கள் சமாதானத்தை ஏற்று, அவளைக் கொன்றேன். இப்போதோ, லட்சுமிகரமாகத் தோற்றமளிக்கும் இந்தக் கற்சிலையின்
மீது என் பாதம் படியப் பணிக்கிறீர்கள். கல்லாக இருந்தாலும், இந்தச் சிலை உயிருள்ள ஒரு பெண் போல்தான்
தோற்றமளிக்கிறது. என்னை மன்னிக்க வேண்டும், சுவாமி. இதனால் தாங்கள் என் மீது கோபம் கொண்டாலும்
சரி, தாங்கள் கூறியதை
என்னால் செய்ய இயலாது.
விஸ்வாமித்திரர்: (மனதுக்குள்) மாயவா, இதுவும் உன் லீலைதான் போலும். சரி, உன் விருப்பப்படியே நடக்கட்டும். (ராமனிடம்) சரி, ராமா. உனக்கு விருப்பம்
இல்லாவிட்டால் வேண்டாம். வா, போகலாம்.
(மூவரும் போகிறார்கள். அகலிகை மனம் பதைத்து நிற்கிறாள். ஏமாற்றத்தின் அழுத்தத்தால்,
தான் வெடித்துத் தூள் தூளாகி,
மணலாகப் பொடிமணலாக ஆகப் போவது
போல் உணர்கிறாள். மனதில் கௌதமரை நினைக்கிறாள்.
அகலிகை (மனதுக்குள்): முனிவரே, இன்னும் ஏன் இந்தக் கொடுமை? இந்தக் கொடும் சாபத்திலிருந்து எனக்கு விடுதலையே
இல்லையா?
(கௌதமர் அவள் முன் தோன்றுகிறார். அவர் முகம் கோபத்தில் சிவந்திருக்கிறது.)
கௌதமர்: அகலிகை! உனது பாவத்துக்கான தண்டனையை நீ அனுபவித்து முடிந்ததும், அந்தப் புனிதன் ராமபிரானின்
பாதம் பட்டுச் சாபம் நீங்கித் தூய்மை அடைந்து விடுவாய் என்று நினைத்தேன். ஆனால்,
உன் ரூப சௌந்தர்யத்தின் மீது
உனக்கிருந்த மோகத்தினாலும், அகந்தையினாலும், உன்னை வஞ்சித்த அந்த இந்திரனின் துர்போதனைக்குச்
செவிசாய்த்து, உன்னைச் சிலையாக மாற்றிக் கொண்டாய். வெறும் கல்லாக நீ பூமியில்
கிடந்திருந்தால், ராமனின் பாதம் பட்டு உயிர் பெற்றிருப்பாய். ஆனால், சிலையாக நின்றதால், அவன் திருப்பாதம் உன் மீது படும் பாக்கியம் உனக்குக் கிட்டவில்லை.
சிலையாக உன்னைக் கண்டு மோகித்த பலராலும் தீண்டப்பட்டு, இப்போது மேலும் களங்கப்பட்டு நிற்கிறாய். இது
உனக்கு நீயே விதித்துக் கொண்ட தண்டனை.
(அகலிகையின் கண்களில் நீர் பெருகிச் சிலை முழுவதுமாக நனைகிறது)
அகலிகை: சுவாமி, நான் பாவி. என் சிந்தனைக் குழப்பத்தால் எனக்குக் கேடு விளைவித்துக் கொண்டு விட்டேன். சுவாமி, இவ்வளவு
காலமாக நான் மனதினால் அனுபவித்த வேதனை கொஞ்ச நஞ்சம் இல்லை. தங்களிடம் நான்
வேண்டிக் கொள்வது ஒன்றுதான். என் மீது கருணை வைத்து, என் பிறவி முடிந்து, நான் நரகம் செல்ல அருள் புரியுங்கள்.
அந்த நரக தண்டனை கூட, இப்போது நான் அனுபவிக்கும் தண்டனையைவிடக் கொடியதாக இருக்க
முடியாது. நரகத்தில் உழன்ற பிறகாவது, என் பாவம் நீங்கினால் போதும்.
கௌதமர் (கோபம் தணியாமல்): அகலிகை, நீ பாவம் செய்ததோடு திருப்தி அடையாமல் என்னையும் பாவம்
செய்யத் தூண்டுகிறாய். உன்னை நரகத்துக்கு அனுப்புவதோ,
உன் பிறவியை முடிப்பதோ என்
கையில் இல்லை. உன் பாவத்தைப் போக்கிக் கொள்ளாமல், இந்தப் பிறவியிலிருந்து உன்னால்
விடுதலை பெற முடியாது. இத்தனை காலம் நீ சிலையாக நின்று, மேலும் பாவத்தைப்
பெருக்கிக் கொண்டாய். இனி உடைந்து சிதிலமாகக் கீழே விழுந்து கிட.
(கௌதமர் கோபத்துடன் தன் கால்களால் அகலிகையின் சிலையை எட்டி உதைக்க, சிலை கீழே விழுகிறது.
என்ன
விந்தை! அகலிகை தன் பழைய தோற்றத்துடன் எழுந்து நிற்கிறாள். வியப்பு நீங்காமல்,
கணவரை வணங்குகிறாள்.).
அகலிகை: சுவாமி, இதென்ன விந்தை? நான் எப்படி சாபம் நீங்கப் பெற்றேன்? ஓ! எனக்குப் புரிகிறது. எந்தப் புனிதரின் பாதம் பட்டு என் சாபம்
நீங்கும் என்று தாங்கள் விதித்தீர்களோ, அந்தப் புனிதர் தாங்களேதான். தங்கள் பாதம் பட்டுத்தான் என்
சாபம் நீங்கியது. நான் இவ்வளவு காலம் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தாங்கள்
விரும்பியதால்தான், எனக்கு விமோசனம் அளிக்க இவ்வளவு காலம் கடத்தினீர்கள் போலும்!
கௌதமர் (அகலிகையைத் தூக்கி நிறுத்தி): அகலிகை, நீ அறியாமல் பேசுகிறாய். என் பாதம் பட்டு, பூமியில் ஊரும்
ஜந்துக்கள் மடிந்திருக்கின்றனவே தவிர, எந்தப் பொருளும் உயிர் பெற்றதில்லை. நீ சாபம் நீங்கி உயிர் பெற்றதற்குக்
காரணம், என் பாத ஸ்பரிசம் அல்ல. நீ கீழே விழுந்த இந்த மண்ணைப் பார். இது சாதாரண
மண் அல்ல. சற்று முன்புதான் இங்கே நடந்து சென்ற ராமனின் திருவடிகளால் தீண்டப்பட்ட
மண். உன்னை உயிர்ப்பித்தவை அவன் திருவடித் துகள்கள்தான். பேரருளாளனின் திருவடிக்கு
உள்ள மகிமை, அந்தத் திருவடியில் ஒரு கணம் ஒட்டி விழுந்த மண் துகளுக்கும் உண்டு என்பதை அவன்
நமக்கு உணர்த்தி விட்டான். மனதால் ஒரு முறை நினைக்கப்பட்டாலே, நினைத்தவர்களின் பாவத்தைப்
போக்கும் பெருமை பெற்ற அந்தத் திருவடிப் பொடியின் தீண்டலால்தான் நீ புனிதமாகி விட்டாய்.
விஸ்வாமித்திரரும், ராம லட்சுமணர்களும் வெகு தூரம் போயிருக்க மாட்டார்கள். அவர்களைச்
சென்றடைந்து, ராமபிரானை நேரில் வணங்கிப் பேரின்பம் பெறுவோம், வா!
(இருவரும் ராமன் சென்ற திக்கில் நடக்கிறார்கள்.)
காட்சி முடிவு
(1982-ஆம் ஆண்டு எழுதப்பட்டது)

No comments:
Post a Comment