Sunday, July 3, 2016

17. தாமதம்

மாலை வகுப்பு முடிந்து வெளியே வரும்போதே இருட்டத் தொடங்கியிருந்தது. நேரம் என்னவோ ஐந்தரை மணிதான். குளிருக்குப் பயந்து முன்னமே விடை பெற்றுக்கொண்டு விட்ட சூரியன்!

இரண்டு  மூன்று பேராகச் சேர்ந்து மற்றவர்கள் கலைய, அரவிந்தன் தனியாக நின்றான். தனியாக நின்றபோதுதான் தனியாக நிற்கும் மற்றொரு நபரைக் கவனித்தான்.அந்த ஆண்கள் கூட்டத்தில் எப்படியோ தனி ஆளாக இடம் பெற்றுவிட்ட ஒரே பெண் - பெண்மணி. அவள் - அவர்கள் பெயர் கூட .....ஆங் விமலா.

சற்றுத் தள்ளி வேறு புறம் பார்த்துக்கொண்டு நின்றவளை வலுவில் அணுகிப் பேசுவது குறித்துக் கொஞ்சம் தயக்கத்துடனேயே அவளை நெருங்கினான்.

காலடிச் சத்தம் கேட்டுத் திரும்பியவள் முகத்தில் அனிச்சையாகத் தோன்றிய பய உணர்ச்சி கண நேர ரசாயன மாற்றத்தில் புன்னகையாக உருமாறியது.

"ஹலோ" என்றாள் அவள்.

"என்ன இப்படித் தனியாக...?"

"எல்லோரும் போய் விட்ட பிறகு மீதம் இருப்பவர்கள் தனியாகத்தானே இருக்க முடியும்?"

அவளது இயல்பான பேச்சினால் இறுக்கம் தளரப் பெற்றவனாக அவன் சிரித்தான்.

மேலே என்ன பேசுவது என்று யோசித்து விட்டு "எங்கே, ரூமுக்குத்தானே போகிறீர்கள்?" என்றான்.

அவள் பதில் சொல்லாமல் தலையாட்டினாள்.

"இந்த க்ரூப்பில் நீங்கள் தனியாக வந்து மாட்டிக் கொண்டிருக்கக் கூடாது." என்றான் அவன்.

"தனியாக எங்கே? அதுதான் இருபத்தைந்து பேர் இருக்கிறோமே!"

"ஐ மீன், இந்த க்ரூப்பில் நீங்கள் ஒருவர்தான் பெண்."

"ஆமாம். காலையில் வகுப்பைத் துவக்கும்போது கோர்ஸ் டைரக்டர் 'லேடீஸ் அண்ட் ஜென்டில்மென்' என்று துவங்கி விட்டு, அப்புறம், 'ஐ மீன் லேடி அண்ட்  ஜெண்டில்மேன்' என்று மாற்றி, மீண்டும் 'ஐ மீன் ஜெண்டில்மென்' என்று திருத்திக் கொண்டு மீண்டும் 'ஐ மீன் லேடி அண்ட் ஜெண்டில்மென்' என்று மிகவும் சிரமப்பட்டு விளித்ததைப் பார்க்கப் பரிதாபமாகத்தான் இருந்தது" என்று அவள் சிரிக்காமல் சொன்னபோது அவன் குபீரென்று சிரித்து விட்டான்.

அப்போதுதான் தான் செய்ய வந்த வேலை நினைவுக்கு வந்தவனாக கடிகாரத்தைப் பார்த்தான்.

"நீங்கள் கடிகாரத்தைப் பார்ப்பதைப் பார்த்தால் அவசரமாக எங்கேயோ போகிறவரை நான் தடுத்து நிறுத்தி வைத்து விட்டிருப்பதாகத் தோன்றுகிறது." என்றாள் அவள்.

அவன் சட்டென்று மீண்டும் இறுக்கமாகி "அப்படி ஒன்றும் இல்லை. நான் கொஞ்சம் ஜி.பி.ஒ. வரை போக வேண்டியிருக்கிறது. என் மனைவிக்கு எழுதிய கடிதத்தை போஸ்ட் பண்ண வேண்டும். உணவு இடைவேளையின்போது பக்கத்தில் இருக்கும் போஸ்ட் பாக்ஸில் போட மறந்து விட்டேன். இப்போது நேரமாகி விட்டதால் ஜி.பி.ஓவில் போஸ்ட் செய்தால்தான் இன்றைய தபாலில் போகும்" என்றான்.

"அதற்கு ஏன் இவ்வளவு சங்கடப்படுகிறீர்கள்? விளக்கம் கேட்க உங்கள் மனைவி கூடப் பக்கத்தில் இல்லையே! உங்களிடமிருந்து தினம் கடிதம் வராவிட்டால் உங்கள் மனைவி மிகவும் கவலைப் படுவார்களோ? உங்கள் மீது அவ்வளவு அன்பு போலிருக்கிறது!"

அவன் வெளியே தெரியாமல் மூச்சை ஆழமாக இழுத்து விட்டான்.

ஆமாம். மிகவும் அன்புதான். அன்பு என்று சொன்னால் போதாது. அன்பு வெறி என்றுதான் சொல்ல வேண்டும்! ஆனால் இலக்குத் தெரியாத அன்பு. அன்பு என்பது செலுத்தப்படுபவர்களின் உள்ளத்தைத் தொட வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளாத அன்பு. உள்ளத்தைத் தொடுவதற்கு பதில் உள்ளத்தைத் துளைத்து அங்கே நிலை பெறும் யற்சியில் அம்பாக மாறி விடுகிற அன்பு!

அவனுடைய விருப்பங்கள், ஆர்வம், இலட்சியங்கள், மனப்போக்கு இவற்றைப் பிடிவாதமாகப் புரிந்து கொள்ள  மறுக்கும் அன்பு. அவனுக்கு மனம், அறிவு போன்றவை இருப்பதை அலட்சியம் செய்து வெளியே இருக்கும் கூட்டின் மீது பொழியப்படும் அன்பு. செலுத்தப்படும் நபரிடமிருந்து பிரதிபலிப்பாக அன்புக்குப் பதிலாக எரிச்சல், ஆத்திரம்,வெறுப்பு, இயலாமை, ஏமாற்றம் ஆகியவற்றையே வெளிக்கொணரும் அன்பு!

"என்ன யோசனை? மனைவி ஞாபகத்தில் ஆழ்ந்து விட்டீர்களா?"

"ஆமாம். அவள் ஞாபகம்தான்." சுதாரித்துக்கொண்டு அவளைப் பார்த்தான்.

இது போன்று  யோசித்துக்  கொண்டிருக்கும்  சந்தர்ப்பங்களில் "என்ன யோசனை?" என்று கூடக் கேட்க மாட்டாள் அவன் மனைவி லக்ஷ்மி. "என்னங்க, உடம்பு சரியில்லையா? ஆஃபிசுக்கு லீவு போட்டுடுங்களேன்! டாக்டர் கிட்டே போயிட்டு வாங்க. உடம்பு விஷயத்தில் அலட்சியமா இருக்காதீங்க" என்று படபடவென்று அவன் பதிலை எதிர்பாராமலேயே பொரிந்து தள்ளி விடுவாள்.  எரிச்சல் தாங்காமல் 'இந்த இடத்தை விட்டு எங்காவது போனால் சரி' என்று சட்டையை மாட்டிக்கொண்டு கிளம்பி விடுவான் அவன்.

"நீங்கள் ஜி.பி.ஒ. போவதாக இருந்தால் இந்தக் கடிதத்தையும் தபாலில் சேர்த்து விடுகிறீர்களா? - இஃப் யூ டோன்ட் மைண்ட்" என்று கைப்பையிலிருந்து ஒரு கடிதத்தை எடுத்து நீட்டினாள் விமலா.

"ஒ! வித் ப்ளெஷர்" என்று அதை வாங்கிக் கொண்டவன் "யாருக்கு இந்தக் கடிதம்?" என்றான். கேட்ட பிறகுதான் அப்படிக் கேட்டிருக்க வேண்டாமோ என்று தோன்றியது.

"ஏன் நீங்கள் உங்கள் மனைவிக்கு எழுதுவது போல நான் என் கணவருக்கு எழுதக் கூடாதா?" என்றாள் விமலா.

அவள் பேச்சிலும் சிரிப்பிலும் தளும்பிய குரும்பிலிருந்து அவள் உண்மையாகச் சொல்கிறாளா அல்லது விளையாட்டுக்காகச் சொல்கிறாளா என்று அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.

"நாளை வகுப்பில் சந்திக்கலாம்" என்று சொல்லி அவள் அவனிடம் விடை பெற்றுக் கொண்டாள்.

அவள் விடைபெற்றுச் சென்றவுடனேயே லக்ஷ்மியைப் பற்றிய நினைவுகள் அவன் மனதை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டன.

வெவ்வேறு அரசு அலுவலகங்களிலிருந்து இளநிலை அதிகாரிகள் இருபத்தைந்து பேரைத் தேர்ந்தெடுத்து நிர்வாக இயல் பயிற்சிக்காக ஹைதராபாதில் உள்ள ஒரு பிரபல பயிலகத்துக்கு இரண்டு வாரங்கள் அவர்களை அனுப்பி வைத்திருந்தது அரசு.

தங்கும் அறைகள், உணவகம் ஆகியவை கூடிய பயிலகத்தில்  முதல் நாள் வகுப்புகள் முடிந்ததும் துவங்கிய அவர்கள் சந்திப்பு தினமும் தொடர்ந்தது. வகுப்பில் போதிக்கப்பட்ட சித்தாத்தங்கள், வழிமுறைகள் ஆகியவற்றைப் பற்றி விவாதித்துக் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வது இருவருக்கும் ஒரு தினசரி நிகழ்ச்சியாக நடந்து வந்தது.

அவ்வப்போது விமலா அவனுடைய 'அன்பான மனைவி'யைப் பற்றி விசாரிப்பாள்.

"என்ன சார், உங்கள் மனைவியிடமிருந்து கடிதம் வந்து கொண்டிருக்கிறதா?"

"ஓ! இன்று கூட வந்தது. எண்ணெய்  தேய்த்துக் கொள்கிறீர்களா, அதற்கான வசதிகள் எல்லாம் அங்கே இருக்கிறதா?' என்று கேட்டு எழுதி இருக்கிறாள்...அது இருக்கட்டும், அன்று ஒரு கடிதம் கொடுத்து அதைத் தபாலில் சேர்க்கச் சொன்னீர்களே, அது உங்கள் கணவருக்குத்தானா?"

"என் அதில் என்ன சந்தேகம் உங்களுக்கு?"

"அதில்லை. அன்று நீங்கள் எதோ விளையாட்டுக்காகச் சொன்ன மாதிரி இருந்தது."

அவள் அவனைச் சில வினாடிகள் குறுகுறுப்புடன் பார்த்து விட்டு, "உங்கள் சந்தேகம் என்ன என்பது எனக்குப் புரிகிறது.  எனக்குக் கல்யாணம் ஆகி விட்டது" என்றாள். அவள் முகத்தில் எப்போதும் இருக்கும் சிரிப்பு மறைந்து விட்டாற்போலிருந்தது.

"ஓ!"

தனக்குக் கல்யாணம் ஆகி விட்டதை அவள் உறுதிப்படுத்தியது தனக்கு ஏன் இவ்வளவு ஏமாற்றத்தை அளிக்க வேண்டும் என்பது அவனுக்குப் புரியவில்லை.

"உங்கள் கணவரிடமிருந்து பதில் வந்ததா?"

"அதற்கெல்லாம் அவருக்கு நேரம் எது? அவர் சார்பில் அவருடைய அந்தரங்கக் காரியதரிசி எழுதினால் உண்டு!"

"ஓ! உங்கள் கணவர் மிகவும் பிஸியான மனிதர் என்று சொல்லுங்கள். என்ன செய்கிறார் அவர்?"

"அதுதான் நீங்களே சொல்லி விட்டீர்களே, பிஸியான மனிதர் என்று. பிஸினஸ்மேன்."

'பிஸினஸ்மேன்கள் கல்யாணம் செய்து கொள்ளக்கூடாது என்று சட்டம் இயற்றினால் தேவலை' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள். அந்த நினைப்பின் அழுத்தம் அவள் கணவன் பலராமன் பற்றிய சிந்தனைகளைத் தூண்டியது.

'இதோ இந்த அந்நியன் இந்த ஐந்து நாட்களில் என்னிடம் பேசிய அளவுக்குக் கூட இந்த ஐந்து வருட தாம்பத்தியத்தில் மொத்தமாக என்னிடம் பேசியிருப்பாரா பலராம்? அவர் என்னிடம் பேசியதில் பெரும்பகுதி தொலைபேசிக் கம்பி வழியாகத்தான். குடும்ப வாழ்க்கைக்கு நேரம் ஒதுக்க முடியாதவர்களுக்கு மனைவி எதற்கு? சமூக அந்தஸ்துக்காகவா?'

"என்ன மௌனமாகி விட்டிர்கள்? கணவரைப் பற்றிய நினைவுகளில் முழ்கி விட்டீர்களோ?" என்றான் அரவிந்தன் தனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி.

"ஆமாம். அவர் நினைவு வந்ததும் மௌனமும் வந்து விட்டது."

எதேச்சையாக வந்த பதிலில் தன்னை அறியாமலேயே புகுந்து விட்ட உண்மை அவளை வாய்விட்டுச் சிரிக்க வைத்தது.

 முதல் வார இறுதியில் வந்த விடுமுறை நாளில் இருவரும் வெளியே சென்றார்கள். கோல்கொண்டா கோட்டை, சாலார் ஜங் மியூஸியம், பப்ளிக் கார்ட்னஸ், பிர்லா மந்திர், டாங்க்  பண்ட் என்று  பல இடங்களுக்கும் அழைத்துச் சென்ற டூரிஸ்ட் பஸ்ஸில்  சென்றார்கள். பஸ்ஸில் தனித்தனியே உட்கார்ந்து வந்ததால் பேச அதிக சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

மியூசியத்தைச் சுற்றிப் பார்க்கும்போது விளையாட்டாகக் கேட்டாள்."இந்த இடத்துக்கு உங்கள் மனைவியுடன் வந்திருக்க வேண்டும் என்று தோன்றவில்லையா?"

அவன் உடனே பதில் சொல்லவில்லை. என்ன சொல்வது என்று யோசிப்பது போல் தோன்றியது.

சில வினாடிகளுக்குப் பிறகு, "நீங்கள் கேட்பதில் அர்த்தம் இருக்கிறது" என்றான்.

அவன் என்ன சொல்ல விழைந்தான் என்று அவளுக்குப் புரியவில்லை.

கண்ணாடி அறை என்ற பகுதியில் அழகிய வேலைப்பாடுடன் கூடிய கண்ணாடிகளை பார்த்துக் கொண்டிருந்தபோது அரவிந்தன் சொன்னான் "என் மனைவி என்னுடன் இந்த மியூசியத்துக்கு வந்திருந்தால் அவளுக்கு இந்த அறையைப் பார்ப்பதில்தான் ஆர்வம் அதிகமாக இருந்திருக்கும்."

"ஏன், அலங்காரப் பிரியையா உங்கள் மனைவி?"

'அப்படி இல்லை. மற்ற இடங்களில் உள்ள கலைப்படைப்புகளை ரசிப்பதில் அவளுக்கு ஆர்வம் இருக்காது."

அவளுக்கு எதிலாவது ஆர்வம் இருக்குமா என்று கடந்த ஏழு வருடங்களாகத் தேடிய அழுத்தத்தின் சோர்வை அப்போது அவன் உணர்ந்தான்.

அவன் அப்படி ஒன்றும் பெரிய கலாரசிகனோ இலக்கிய ஆர்வலனோ இல்லை. ஆயினும் சராசரி ரசனை கூட இல்லாத ஒரு பெண்ணுடன் வாழ்கை நடத்துவதில் உள்ள சோர்வு - அப்பப்பா!

தன்னுடன் தன் கணவன் அதிகம் பேசுவதில்லை என்று அவன் மீது அவன் மனைவி லக்ஷ்மிக்கு ஒரு குறை உண்டு. எதைப்பற்றிப் பேசுவது? அவள் அழகைப் பற்றி, அவர்களுடைய குழந்தையைப் பற்றி, குடும்ப வரவு செலவு பற்றி, அண்டை வீட்டுச் செய்திகள் பற்றி..தினமும் எவ்வளவு நேரம் பேச முடியும்? அவன் அலுவலகத்தில் நடந்த விஷயங்கள் பற்றிப் பேசினால் அதைக் கேட்பதில் அவளுக்கு ஆர்வமோ அவன் சொல்வதைப் புரிந்துகொண்டு ரசிப்பதில் ஈடுபாடோ அவளிடம் கிடையாது. அப்புறம் ஏன் கணவன் தன்னிடம் அதிகம் பேசுவதில்லை என்று குறைப்பட்டுக்கொள்ள வேண்டும்? 

சராசரி மனிதர்களின் ஆர்வ மையமான சினிமா விஷயத்தில் கூட அவளது ரசனை மேலோட்டமாகக் கூட இல்லை. கதாநாயகியை வில்லன் துரத்தினால் "கடவுளே! அவளைக் காப்பாத்தேன்!" என்று தியேட்டரிலேயே வாய் விட்டு வேண்டிக்கொள்கிற குழந்தைத்தனம்!

"வாருங்கள். மணி பன்னிரண்டு ஆகப்போகிறது. மியூசிகல்  க்ளாக்கில்  மணி அடிப்பதைப்  பார்க்க வேண்டாமா?" என்று விமலா அவன் சிந்தனையைக் கலைத்தாள்.

ரண்டாவது வாரம் மிக வேகமாகவே பறந்தது.

கடைசி நாளுக்கு முதல் நாள்.

"ஆச்சரியம். என் கணவரிடமிருந்து கடிதம் வந்திருக்கிறது" என்றாள் விமலா.

"என்னவென்று? உங்கள் வரவை ஆவலுடன் எதிர்பார்க்கிறாராமா?"

"ஆன்  தி அதர் ஹேண்ட், என்னை வர வேண்டாம் என்று எழுதி இருக்கிறார்!"

"என்ன?"

"பயப்படாதீர்கள்! அவர் பிசினஸ் விஷயமாக நாளை இரவு இங்கே வருகிறாராம். நாளை மறு நாள் இரவு அவருடனேயே போகலாம் என்று எழுதியிருக்கிறார்."

"எதிர்பாராத சந்தர்ப்பம்தான்."

"ஆனால் நான் திட்டமிட்டபடி அவர் நாளை இரவே கிளம்புவதாக இருக்கிறேன். அவருக்கு ஒரு தந்தி கொடுத்து விட வேண்டியதுதான்."

"ஏன் அப்படி?" என்றான் அரவிந்தன் திகைப்புடன்.

"வாட் இஸ் தி யூஸ்? அவர் இங்கே தங்கப் போகிற 24 மணி நேரத்தில் 25 மணி நேரத்துக்கு எங்கேஜ்மென்ட் வைத்திருப்பார். என்னுடைய எங்கேஜ்மென்ட் எப்போதோ முடிந்து போன ஒன்றுதானே! இங்கே ஹோட்டல் அறையில் தனியாகக் கொட்டுக் கொட்டென்று உட்கார்ந்திருப்பதற்கு பதிலாக ஊருக்குப் போய் வீட்டிலேயே உட்கார்ந்திருக்காலாம். அது பழகிப் போனதாகவாவது இருக்கும்."

ஏதோ சொல்ல நினைத்து வாய் திறந்து விட்டுப் பிறகு என்ன சொல்வதென்று தெரியாமல் வாயை  மூடிக் கொண்டான் அரவிந்தன். அவன் முகத்தில் தெரிந்த பச்சாதாபத்தைப் பார்த்தபோதுதான் விமலாவுக்குத் தன் மனக்குமுறல்களைக் கொட்டி விட்டோமோ என்று தோன்றியது.

"ஐ ஆம் சாரி" என்றாள்.

"அது நான் சொல்ல வேண்டியது" என்றான் அரவிந்தன்.

கடைசி நாள் வகுப்புகள் முடிந்த பிறகு, ஊருக்குக் கிளம்புமுன் இன்னொரு முறை பிர்லா மந்திர போக வேண்டும் என்று விமலா விரும்பினாள். இருவரும் போனார்கள்.

அன்று கோவிலில் கூட்டம் அதிகம் இல்லாமல் அமைதியாக இருந்தது. நிதானமாகப் படிகளில் ஏறிப் பிரகாரத்தில் நடந்தபோது அரவிந்தனைச் சட்டென்று ஒரு வெறுமை பற்றியது.

"விமலா!" முதல் முறையாக அவளைப் பெயர் சொல்லி அழைத்தான்.

"சொல்லுங்கள்."

"இந்த அழகான, அற்புதமான, ஆனந்தமான இடத்துக்கு நாம் இருவரும் இனி சேர்ந்து  வரப்போவதில்லை என்ற நினைவு எனக்குத் தாங்க முடியாததாக இருக்கிறது." என்றான் அவன்.

"ஆமாம்" என்றாள் அவள். "வர முடியாது என்பதில்லை. ஆனால் சந்தர்ப்பம் கிடைப்பது அரிது."

"நிதானமாகப் பெருமாளைத்  திருப்தியுடன் சேவித்து விட்டு வெளியே வந்து படிகளில் சற்று நேரம் அமர்ந்து விட்டு விடுதிக்குத் திரும்பும் வரை இருவரும் பேசவில்லை.

விமலாதான் முதலில் ஊருக்குக் கிளம்பினாள். அரவிந்தன்தான் ஆட்டோ     ரிக் ஷாவை அழைத்து வந்து அவள் பெட்டியை அதில் வைத்தான். ஆட்டோ ரிக் ஷாவில்  ஏறுமுன் விமலா ஒருமுறை அரவிந்தனின் கண்களை நேராகப் பார்த்து, "நைஸ் மீட்டிங் யூ!" என்றாள்.

அரவிந்தன் பதில் சொல்லவில்லை.

இறுக்கத்தைத் தளர்த்த விரும்பியவளாக, "ஆனால் நீங்கள் அப்படி நினைக்கவில்லை போலிருக்கிறதே!" என்றாள் விமலா.

"இல்லை. இன்னும் ஏழெட்டு வருடங்களுக்கு முன் உங்களைச் சந்தித்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமே என்று நினைத்துக் கொண்டேன்" என்றான் அரவிந்தன். பார்வை அவளை நோக்கி இருந்தாலும் அது எங்கோ தொலைவில் நிலை குத்தி இருந்தது.

விமலா ஆட்டோவில் ஏறிக்கொண்டாள்.

(1990ஆம் ஆண்டு எழுதப்பட்டது.) "