வெள்ளிக்கிழமை காலை அலுவலகத்துக்கு வந்த வங்கி மேலாளர் கிருஷ்ணகுமார், தனது இருக்கையில் அமர்ந்து, மேஜை மீது கண்ணாடித் தட்டுக்கு கீழே இருந்த எல்லா தெய்வ உருவங்களையும் வரிசையாக வணங்கிவிட்டு, “இன்றைக்காவது ஒரு நல்ல டெபாசிட்டர் வர மாட்டாரா?” என்று நம்பிக்கை இல்லாமல் வேண்டிக் கொண்டிருந்தார்.
அப்போது அவரது
அறைக் கதவைத் திறந்து கொண்டு, அந்த மனிதர் வந்தார்.
“நான் சுந்தரம்”
என்று அவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டதும், 'இவருக்கு கூல் டிரிங்க் வரவழைத்துக்
கொடுப்பதா, அல்லது
முத்து விலாஸின் உயிரற்ற டீயே போதுமா? அல்லது,
சீக்கிரமே விரட்டி அடிக்கப்பட வேண்டிய
கேஸா?' என்று அவரை எடை போட முயன்றார்
கிருஷ்ணகுமார்.
வந்தவர் தனது
பிரீஃப்கேஸைத் திறந்து, சில காகிதங்களை மேஜை மீது எடுத்துப் போட்டார். இது ஏதோ
வில்லங்க விவகாரம்தான் என்று முடிவு செய்த கிருஷ்ணகுமார், “வாட் கேன் ஹ டூ ஃபார் யூ?” என்று
பணிவாக வினவினார்.
“உங்கள் கையை நீட்டுங்கள்” என்றார் சுந்தரம்.
தயக்கத்துடன் கிருஷ்ணகுமார் தன் கையை நீட்டியதும், அவருடைய இரண்டு கைகளையும் பற்றிக் கொண்டு,
அவருடைய விரல்களைப்
பார்த்தார் சுந்தரம்.
“ஏன் சார், உங்களுக்கு
நகத்தைக் கடிக்கும் பழக்கம் கிடையாதா?”
“கிடையாது.”
“இருந்திருந்தால்,
நகத்தையெல்லாம் கடித்துத் துப்பியிருக்க
மாட்டீர்களா? இவ்வளவு நீளமாக
நகத்தை வளர்த்துக் கொண்டு, நகக்கணுக்குள்
அழுக்கு புகுந்து கொண்டு—எத்தனை சுகாதாரக் கேடு!”
அவர் யார் என்று
அனுமானிக்க முடியாமல், கிருஷ்ணகுமார் சற்றுத் தடுமாறினார்.
‘ஒருவேளை இவர் ஹெட் ஆபீஸிலிருந்து வந்திருப்பாரோ? நாம் சுகாதாரமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஹெட் ஆஃபீசால் அனுப்பபட்டிருப்பாரோ?
கிருஷ்ணகுமார் தன்
மேஜையின் மீதிருந்த குண்டூசி குஷனிலிருந்து ஒரு குண்டூசியை எடுத்துத் தன் நகங்களைச் சுத்தம் செய்ய
ஆரம்பித்தார்.
‘த்சூ, த்சூ’ என்று சூள் கொட்டிய சுந்தரம் “இப்படித்தான்: சில பேர் குண்டூசியால் நகத்தைச் சுத்தம் செய்து விட்டுப் பிறகு, ஞாபகம் இல்லாமல், அதே குண்டூசியை பல் குத்தவும் பயன்படுத்துகிறார்கள். இதனால் நக இடுக்குகளில் இருந்த அழுக்கு, பல்லிடுக்குகளுக்கு இடமாற்றப்பட்டுப் பல் வியாதிகளும், தொடர்ந்து வேறு சில வியாதிகளும் வர வழிவகுக்கிறது” என்று பற்பசை விளம்பரத்தில் வரும் டாக்டர் போல் விஸ்தாரமாக விளக்க ஆரம்பித்தார்.
கிருஷ்ணகுமார்
கொஞ்சம் பொறுமை இழந்தார். இவர் ஹெட் ஆஃபீஸிலிருந்து ஹெல்த் இன்ஸ்பெக்ஷனுக்கு
வந்திருப்பாரோ என்ற சந்தேகம் இப்போது நீங்கி விட்டது. தன் எரிச்சலை
வெளிக்காட்டினார் அவர்.
“வந்த விஷயத்தைச்
சொல்கிறீர்களா?”
“அதைத்தானே
சொல்லிக் கொண்டிருக்கிறேன்!” என்றார் சுந்தரம்.
“இப்படி விளக்கமாகச் சொன்னால்தானே, நான் ஆரம்பிக்கப் போகும் நக சுத்தி தயாரிப்புத்
தொழிலின் முக்கியத்துவத்தை உங்களுக்குப் புரியவைக்க முடியும்!”
“என்ன சொன்னீர்கள், நகசுத்தித் தயாரிப்பா?”
“புரியவில்லையா?
நெயில் கட்டரைத்தான் அப்படிச் சொன்னேன். ஓ!
மொழிபெயர்ப்பு சரியில்லையோ? நக வெட்டி என்று
சொல்லியிருக்க வேண்டுமோ? அதை விடுங்கள்.
விஷயத்திற்கு வருகிறேன். சுமார் பத்து லட்ச ரூபாய் செலவில், நெயில் கட்டர்
தயாரிப்புத் தொழிற்சாலை துவங்கப் போகிறேன். எனக்கு நிதியுதவி அளிக்கும் பெருமை
உங்கள் வங்கியைத்தான் சேரப் போகிறது.”
கிருஷ்ணகுமார்
நிம்மதியடைந்தார்- நல்லவேளை, சுலபமாக நிராகரிக்கப்படக் கூடிய விண்ணப்பம் என்று.
“அதற்கெல்லாம் நிறையஃபார்மாலிடீஸ் இருக்கே. முதலில், நீங்கள் தயாரிக்கப் போகும் நெயில் கட்டருக்கு அப்படியொன்றும் பிரமாதமான மார்க்கெட் இருப்பதாகத் தெரியவில்லையே!” என்று சொல்லித் துவக்கத்திலேயே அவரைத் தவிர்க்கப் பார்த்தார் கிருஷ்ணகுமார்.
“உங்கள் கண்
முன்னாலேயே ஒரு டெமோ செய்து காட்டுகிறேன், பாருங்கள்”
என்றார் சுந்தரம்.
அடுத்த சில
நிமிடங்களில், சுந்தரம்
கேட்டுக்கொண்டபடி, எல்லா வங்கி ஊழியர்களும் கிளை மேலாளரின் அறைக்கு
அழைக்கப்பட்டனர். சுவாரஸ்யமாக ஏதோ நடக்கப் போகிறது என்பதாலும், கொளுத்தும் வெயிலில், கிளை மேலாளரின் ஏசி அறை கொஞ்சம்
நேரம் இதமளிக்கும் என்பதாலும், கவுன்ட்டர்கள்
முன்னே காத்திருந்த வாடிக்கையாளர்களை அம்போ என்று விட்டுவிட்டு அனைவரும் கிளை
மேலாளரின் அறைக்குள் குழுமி விட்டனர்.
ஒவ்வொரு ஊழியராகக் கையைப் பிடித்துப் பார்த்தார் சுந்தரம். ஏதோ கைரேகை பார்த்துப் பலன் சொல்லப் போகிறார் என்ற ஊழியர்களின் எதிர்பார்ப்பைப் பொய்யாக்கி விட்டு, ஊழியர்களின் விரல் நுனிகளை மட்டும் பார்த்து விட்டுப் பிறகு கிருஷ்ணகுமாரைப் பார்த்து, உதட்டைப் பிதுக்கினார் சுந்தரம். எல்லா ஊழியர்களின் கைகளும் பரிசோதிக்கப்பட்ட பின், சஸ்பென்ஸ் விளக்கப்படாமல், ஊழியர்கள் தங்கள் இருக்கைகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.
“பார்த்தீர்களா?
எல்லோருமே நீண்ட நகங்களும் நிறைந்த அழுக்கமாகத்
திகழ்கிறார்கள். இதிலிருந்தே நெயில் கட்டருக்கான தேவை எவ்வளவு இருக்கிறது என்று
தெரிகிறதே! டிமாண்ட் சைடைப் பார்த்து விட்டோம். இப்போது சப்ளை சைடைப் பார்க்கலாம்,”
என்றார் சுந்தரம், தேர்ந்த பொருளாதார நிபுணரைப்
போல்.
கிருஷ்ணகுமாரிடம்
சொல்லி வங்கி பியூனை அழைக்கச் சொல்லி, பக்கத்துக் கடை எதிலிருந்தாவது ஒரு நெயில்
கட்டர் வாங்கி வரும்படி சொன்னார் சுந்தரம்.
அரை மணி நேரம்
கழித்துத் திரும்பி வந்த பியூன், “எந்தக் கடையிலும் நெயில்
கட்டர் இல்லையாம், சார். தெரு
முழுவதும் போய்ப் பார்த்துவிட்டேன்,” என்றார்.
இதற்குள் இரண்டு
முறை காப்பி குடித்துவிட்டுத் தன் நிலையை ஸ்திரப்பபடுத்திக் கொண்டு விட்ட சுந்தரம், தன் பொருளாதார விரிவுரையைத் தொடர்ந்தார்.
“பார்த்தீர்களா?
உங்கள் அலுவலகத்திலேயே எவ்வளவு பேருக்கு நெயில் கட்டர்
தேவையாக இருக்கிறது? ஆனால், இந்தத் தெருவில் ஒரு கடையில்கூட நெயில் கட்டர்
இல்லை. இதிலிருந்தே தெரியவில்லையா, நெயின் கட்டரின்
தேவை எவ்வளவு என்று?” என்று கூறித் தன்
உரையை முடித்தார் சுந்தரம்.
“இந்தத் தெருவில் பெரிய
கடை எதுவும் இல்லை. பெரிய கடைகளில் நிச்சயம் கிடைக்குமே” என்று சமாளிக்க முயன்றார்
கிருஷ்ணகுமார்.
“அதுதான் சார் பாயின்ட்! பெரிய டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர்களில்
மட்டுமே நெயில் கட்டர் விற்கப்படுவதற்குக் காரணம் அது ஒரு அழகு சாதனமாகக் கருதப்படுவதால்தான்.
இதை ஒரு ஆரோக்கிய சாதனமாக மாற்றி, பீடி, சிகரெட் போல் எல்லா வெற்றிலை பாக்குக் கடைகளிலும்
கிடைக்கச் செய்வதுதான் என் நோக்கம். இதைப் பற்றி நான் நிறைய மார்க்கெட் சர்வே
எல்லாம் பண்ணியிருக்கிறேன். அவற்றையெல்லாம் என் கடன் விண்ணப்பத்துடன் இணைத்துக் கொடுக்கிறேன்.
நிறைய. மார்க்கெடிங் ஐடியாக்களையும் யோசித்து வைத்திருக்கிறேன். கல்லூரி
மாணவர்களைக் கவர, ரேடியோ, டிவி விளம்பர வாசகங்கள் கூடத் தயார் செய்து விட்டேன்.
உதாரணத்துக்கு ஒன்று சொல்லட்டுமா? ‘மாணவர்களே,
நீங்கள் வகுப்புக்குப் போகாமல் அடிப்பது கிளாஸ்
கட். உங்களிடம் யாராவது மோதினால் அவர்களுக்குக்
கிடைக்கும் நோஸ் கட். நீங்கள் எப்போதாவது
செய்து கொள்வது ஹேர் கட். எப்போதும் செய்ய வேண்டியது
நெயில் கட்.' எப்படி?
கிருஷ்ணகுமார் யோசிக்க
ஆரம்பித்தார். அந்த மனிதர் ஒரு சரியான வாய்ச் சவடால் பேர்வழி என்று புரிந்தது. அவரைப் போன்றவர்கள் வியாபாரத்
தந்திரங்களில் தேர்ந்தவர்களாக இருப்பார்கள். எனவே, இந்த ப்ராஜக்ட் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது. எப்படியும் மேல் மட்டங்களுக்குச் சென்று
தன் பேச்சுத் திறனைப் பயன்படுத்தி லோன் சாங்ஷன் வாங்கிவிடுவார்.
எனவே, அவருடைய கடன் விண்ணப்பத்தைப் பெற்றுக் கொண்டு மேலிடத்துக்குப் பரிந்துரை
செய்வது என்று தீர்மானித்தார்.
அவர் தீர்மானத்துக்கு
இன்னொரு காரணம் இருந்தது. இரண்டு நாட்களுக்கு முன்புதான் அவருடைய கிளைக்கு வந்திருந்த
ரீஜனல் மானேஜர், “ஏன்யா, டெபாசிட்தான் கொண்டு வர முடியல? ஏதாவது லோன் கீனாவது கொடுத்துத் தொலைக்கக் கூடாதா? உங்கள் பிராஞ்ச் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. உங்கள் பிராஞ்சசை மூடி விட்டு,
உங்களை பஞ்சாபில் ஒரு பிராஞ்சசுக்கு மாற்றி
விடலாமா என்று ஹெட் ஆஃபீசில் யோசித்துக் கொண்டிருக்கிறார்களாம். இப்போது யோசிக்க
ஆரம்பித்தால், இன்னும் ஆறு
மாதத்தில் யோசித்து முடித்துவிடுவார்கள். அதற்குள் ஏதாவது இம்ப்ரூவ்மெனட் காட்ட
முடியுமா என்று பாருங்கள்,” என்று
சொல்லி விட்டுப் போயிருந்தததுதான் அது.
அடுத்த சில தினங்களில், சுந்தரம் தவணை முறையில் பல காகிதங்களைக் கொண்டு வந்து
கொடுத்தார்.
பத்து லட்ச ரூபாய்
முதலீடு என்பதை இருபது லட்ச ரூபாய் என்று உயர்த்தி விட்டதாகக் கூறினார் அவர். காரணம்,
உள்நாட்டு இயந்திரங்களுக்குப் பதிலாக வெளிநாட்டு
இயந்திரங்களை வாங்கப் பயன்படுத்தத் தீர்மானித்ததுதான். இறக்குமதிகளை
தாராளமாக அனுமதிக்க முடிவெடுத்திருக்கும் அரசின் பொருளாதாரக் கொள்கைக்குத் நான் தார்மீக ஆதரவு அளிக்க விரும்புவதும் ஒரு காரணம் என்றார்.
கிருஷ்ணகுமார் பொறுமையாக எல்லாக் காகிதங்களையும் சேகரித்து ஒன்றாகக் கட்டி, ரீஜனல் ஆஃபீசுக்கு அனுப்பி வைத்தார். சுந்தரம் ரீஜனல் ஆஃபீசுக்கும், ஹெட் ஆஃபீசுக்கும் சென்று தனது ‘டெமோ’க்களைச் செய்து காட்டிய பின், லோன் சாங்ஷன் ஆகியது.
அடுத்த ஆறு மாதங்கள் சுந்தரம் தனது தொழிற்சாலையைத் தொடங்குவதில் மும்முரமாக இருந்தார்.
ஆறு மாதங்களுக்குப்
பிறகு, சோதனை உற்பத்தி தொடங்கியது. முதலில் உற்பத்தியான நக வெட்டிகள் மிகவும்
கூர்மையாக இருந்ததால், நகத்துடன் சேர்ந்து
விரல்களும் வெட்டப்படும் அபாயம் இருந்தது.
அடுத்த சில மாதங்களில்
பல மாற்றங்கள் செய்யப்பட்டன. பல மாற்றங்களுக்குப் பின், ஒருவழியாக, ஏற்றுக் கொள்ளத் தகுந்த விதத்தில்
நக வெட்டிகள் தயாராகின.
தனது தொழிற்சாலையில்
உற்பத்தியான சில நக வெட்டிகளை சுந்தரம் கொண்டு வந்து காட்டியபோது, கிருஷ்ணகுமார் அகமகிழ்ந்து போனார்.
ஆனால், இதற்குள் ஒரு வருடம் ஓடியிருந்தது. அடுத்த நாளே உற்பத்தி முழு அளவில் தொடங்கும் என்றும், அடுத்த மாதத்திலிருந்து வங்கிக் கடன் தவணையைச் செலுத்திப் போவதாகவும் சொல்லிவிட்டுச் சென்றார் சுந்தரம்.
சென்றவர்
சென்றவர்தான். பலமுறை முயன்றும், கிருஷ்ணகுமாரால் சுந்தரத்தைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.
தொழிற்சாலைக்கு ஒருமுறை சென்றபோது, அங்கே வேலை
செய்தவர்களைப் போல் (அதாவது எந்த வேலையும் செய்யாமல் அமர்ந்திருந்தவர்களைப் போல்!),
இயந்திரங்களும் மௌனமாக இருந்தன.
உற்பத்தி
செய்யப்பட்டிருந்த சில நக வெட்டிகள் ஒரு குவியலாகக் கிடந்தன. அவற்றுக்குத் துருவுடன்
நட்புறவு ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறிகள் தெரிந்தன.
இரண்டு
மாதங்களுக்குப் பிறகு சுந்தரம் வங்கிக் கிளைக்கு வந்தார்.
“என்ன சார் ஆயிற்று
உங்கள் தொழில் முயற்சி?” என்றார் கிருஷ்ணகுமார்,
கவலையுடன்.
“நம் நாட்டு மக்களை
நம்பி உருப்படியான எந்தக் காரியத்தையும் தொடங்க முடியாதே! ஏதோ மக்கள் ஆரோக்கியமாக
இருக்கட்டுமே என்று நெயில் கட்டர்கள் தயார் செய்தால், ஒரு பயலும் வாங்க மாட்டானாம். எப்படிப்பட்ட மனப்பான்மை பார்த்தீர்களா?
மக்கள் இப்படி
இருந்தால், நம் நாடு எப்படி உருப்படும்? தொழில்
வளர்ச்சி எப்படி ஏற்படும்? ஏற்றுமதி வர்த்தகம்
எப்படிப் பெருகும்? அமெரிக்காக்காரன்
சூப்பர் 301*-ஐ வைத்து ஏன் மிரட்ட மாட்டான்? சொல்லுங்கள்."
சுந்தரம்
அதட்டலாகக் கேட்ட கேள்விகளுக்கு முதலில் பதில் சொல்வதா அல்லது தான் கேட்க வேண்டியவற்றைக்
கேட்பதா என்று கொஞ்சம் குழம்பிய கிருஷ்ணகுமார், “அது சரி, ஏதோ மார்க்கெட் சர்வே,
விளம்பர உத்தி என்றெல்லாம் பேசினீர்களே?” என்றார்.
“அதைப் பற்றி
இப்போது என்ன? “ஏதோ விரலுக்கு
வந்தது நகத்தோடு போயிற்று என்று விடாமல், மறுபடியும் சேற்றில் காலை விடுவதா என்ன?”
என்றார் சுந்தரம், அலட்சியகமாக.
“எங்களையும் அல்லவா
சேற்றில் இறக்கி விட்டு விட்டீர்கள்?” என்றார்
கிருஷ்ணகுமார், கோபத்துடன்.
“ஓ! உங்கள் வங்கிக்
கடனைச் சொல்கிறீர்களா??” என்றார்
சுந்தரம், அப்போதுதான் அந்த விஷயம் ஞாபகத்துக்கு வந்தது போல்!
“கடன் என்ன சார்,
பிச்சைக் கடன்? எல்லாம் மக்கள் பணம்தானே? எனக்கு இவ்வளவு அந்நியச் செலாவணி கொடுத்த அரசே அந்நியச் செலாவணி வீணானது பற்றி ஒரு
வார்த்தை கேட்கவில்லை. நீங்கள் ஏதோ பெரிதாக...”
கிருஷ்ணகுமார்
கோபமாக ஏதோ சொல்வதற்குள், சுந்தரம் அவரை
இடைமறித்தார்.
“ஒரு நிமிஷம்
இருங்கள். உங்கள் கடனை ரத்து செய்யச் சொல்லி நான் கேட்கவில்லை. அதுக்கும் ஒரு
திட்டம் இருக்கிறது. ஒரு பிரச்னையிலேயே அதற்கான தீர்வு இருக்கிறது என்பார்கள்
அறிஞர்கள். நகத்தை வெட்டிச் சுத்தமாக வைத்துக் கொள்ளத் தெரியாத மக்களிடம்
வியாபாரம் செய்ய, வேறொரு வழி கண்டுபிடித்து விட்டேன். நகத்தை வெட்டத்தான் மாட்டீர்கள்.
பாலிஷ் போட்டு அழகாகவாவது
வைத்துக் கொள்ளுங்கள் என்ற பிரசாரத்துடன் நெயில் பாலிஷ் தயாரிக்கும் திட்டத்தை உருவாக்கி இருக்கிறேன்.
முப்பது லட்ச ரூபாய் முதலீடு. உங்கள் வங்கி இதற்கு கடன் கொடுத்து உதவினால்,
இதில் கிடைக்கும் லாபத்திலிருந்து உங்கள் பிசாத்துப்
பழைய கடனையும் அடைத்து விடுவேன். என்ன
சொல்கிறீர்கள்?”
கிருஷ்ணகுமார்
யோசிக்க ஆரம்பித்தார். இந்த முறை அவர் யோசித்தது, தான் பஞ்சாபில் ஏதாவது ஒரு கிளக்கு மாற்றப் படுவோமா அல்லது வீட்டுக்கு
அனுப்பிவிடுவோமா என்பதைப் பற்றி.
*சூப்பர் 301
என்பது அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது அதிக இறக்குமதி
வரி விதிக்கும் நாடுகள் மீது வணிக ரீதியான நடவடிக்கைகள் எடுக்க வகை செய்யும்
அமெரிக்க வர்த்தக சட்டத்தின் பிரிவு.
(ஜனவர் 1992-இல் எழுதப்பட்டது)
(குங்குமம் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டது)

No comments:
Post a Comment