Sunday, October 25, 2026

36. போர்வைகள்

ஸ்டேஷனுக்குக் கொஞ்ச தூரம் இருக்கும்போதே, மழை பெரிதாகத் தூற ஆரம்பித்து விட்டது. 

சற்று முன் வரை, 'அப்பாடா, இன்றைக்குப் பிழைத்தோம்!' என்று நிம்மதி அடைந்திருந்த ராமரத்தினம், இந்த திடீர்த் தாக்குதலை எதிர்பார்க்கவில்லை.

இன்றைக்கும் நனையாமல் அலுவலகத்துக்குப் போக முடியாது.

மழை பெய்ய ஆரம்பித்து நான்கைந்து நாட்கள் ஆகி விட்டன. இந்த நான்கைந்து நாட்களில் ஒரு நாள் கூட, அவரால் மழையில் நனையாமல் அலுவலகத்தைச் சென்றடைய முடிந்ததில்லை.

அவரும் எவ்வளவோ ஜாக்கிரதையாகத்தான் இருந்திக்கிறார். காலை 8 மணிக்கே தயாராகி, வீட்டில் இருந்து கொண்டே 9 மணி வரை மழையை கவனித்துக் கொண்டு, அது சற்றே ஓயும்போது அவசரமாகக் கிளம்பி, வேகமாக ஓடி, மழையைச் சந்திக்காமல் ஸ்டேஷனை அடைந்து விட வேண்டும் என்று அவர் செய்யும் முயற்சி தினமும் எப்படியோ தோற்று விடுகிறது.

மழை ஆரம்பித்த முதல் நாள், 9 மணி வரை காத்திருந்து பார்த்து விட்டு, அதுவரை மழை நிற்காததால், நனைந்து கொண்டே ஸ்டேஷனுக்கு நடந்து போய், ரயிலைத் தவற விட்டு, அடுத்த ரயில் பிடித்து அலுவலகத்தை அடைந்தபோது, ஐந்து நிமிடம் தாமதமாகி விட்டது. மழையில் தெப்பமாக நனைந்து விட்டார். 

அக்கவுன்டன்ட் கூடக் கேட்டார், “ஏன் சார், லேட் ஆனது என்னவோ ஆகிவிட்டது.  இன்னும் கொஞ்சம் பொறுத்து, மழை நின்ற பிறகு நனையாமல் வந்திருக்கக் கூடாதா?” என்று, ஏதோ இவர் மழை விடுவதற்காகக் காத்திருந்து, மழை விடாததால், மழையில் நனைந்து வந்து, அலுவலகத்துக்கு தாமதமாக வந்ததன் பலனை இழந்து விட்டதைச் சுட்டிக் காட்டுவது போல்!

அப்போதுதான், டைப்பிஸ்ட் நித்யா அந்தப் பிரச்னையைக் கிளப்பினாள்: “ஏன் சார், குடை எடுத்து வந்திருக்கக் கூடாது?”

இந்த கேள்விக் கணையிலிருந்து தன்னை காத்துக் கொள்ள ஒரு குடை இல்லையே என்று நினைத்துக் கொண்டார் ராமரத்தினம்.

“கிளம்பும்போது மழை அவ்வளவாக இல்லை. பெரிதாக வராது என்று நினைத்தேன்” என்று மழுப்ப முயற்சி செய்தார்.

இந்த பதில் குப்புசாமிக்கு ஒரு வாய்ப்பு அளித்து விட்டது. “மழை அவ்வளவாக இல்லையாவது? இரவலிருந்தே சரியான மழையாயிற்றே! வெதர் ஃபோர்காஸ்ட் படிக்கவில்லையா நீங்கள்? இன்னும் இரண்டு நாள் ஹெவி ரெயின் என்று போட்டிருக்கிறானே!” என்று தனது பத்திரிகைப் புலமையைப் பறை சாற்றினார்.

ராமரத்தினத்துக்கு பகீரென்றது. இன்னும் இரண்டு நாட்கள்  எப்படிச் சமாளிக்க போகிறோம்?

மழை பெய்வது என்பது அப்படி ஒன்றும் பெரிய விஷயம் இல்லை ராமரத்தினத்துக்கு இது ஒரு பெரிய பிரச்னையாக இருந்திருக்க வேண்டியதும் இல்லை – அவரிடம் ஒரு குடை இருந்திருந்தால்!

அவரிடம் அது இல்லை. ரெயின் கோட் போன்ற வேறு மழைப் பாதுகாப்பு சாதனமும் இல்லை. எப்போதோ வாங்கிய குடைகள் குற்றுயிரும் குலை உயிருமாக இயன்ற வரை வாழ்ந்து, தங்கள் உயிரை விட்டு விட்ட பிறகு, அவர் புதிதாகக் குடை வாங்கவில்லை அது எவ்வளவு பெரிய “குற்றம்” என்பது இப்போதுதான் தெரிந்தது.

அப்போது என்னவோ, ‘குடை பிடித்துக் கொண்டுதான் போக வேண்டும் என்கிற அளவுக்கு அப்படி என்ன பெரிய மழையா வந்து விடப் போகிறது?’ என்ற அசட்டுத்தனமான, இப்போது நினைக்கும் போது முட்டாள்தனமான நம்பிக்கையில், அதில் போய் பணத்தைச் செலவு செய்வானேன் என்று இருந்து விட்டார்.

அதுவும் அவர் தொடங்கி அவர் கடைக்குட்டி ஸ்ரீதர் வரை உபயோகிப்பதற்கு, அவருடைய குடும்பத்துக்குக் குறைந்தது மூன்று குடைகள் வாங்க வேண்டும். அத்தகைய வலுவான விற்பனையைக் குடை வியாபாரிக்குக் கொடுப்பதற்கு அவருடைய வரவு செலவுத் திட்டத்தில் வகை செய்ய இயலவில்லை.

‘ஒரு குடையாவது வாங்கித் தொலைத்திருக்கலாம்!’ என்று தலையில் படிந்திருந்த நீர்த்துளிகளை உதறியவாறே, இப்போது நினைத்துக் கொண்டார் ராமரத்தினம். 

பாதி நனைந்தபடி பள்ளிக்கூடம் போய் வரும் அவர் குழந்தைகளின் தோற்றம் அவர் மனதில் எழுந்தது. 

சில நாட்கள் எல்லாம் சரியாகத்தான் நடந்து வந்தது - பெரிய மழை எதுவும் வராததால். இப்போது இந்த மழை வந்துதான், அதை ஒரு பெரிய பிரச்னையாக ஆக்கி விட்டது.  

அன்றைக்கு, “ஆமாம், அது எதற்கு ஒரு தெண்டச் செலவு?” என்று அவருடன் ஒத்துப் பாடிய அவர் மனைவி கமலா, இப்போது “ஆனாலும், அவசரத்துக்கென்று ஒரு குடையாவது வாங்கிப் போட்டிருக்க வேண்டாமா நீங்கள்?” என்று குற்றம் சாட்டுவது போல் கேட்கிறாள்.

குழந்தைகள் பாடு பரவாயில்லை. கொஞ்சம் முணுமுணுத்து விட்டு, எங்கோ கிடைத்த பிளாஸ்டிக் பேப்பரையும், பைகளையும், பழைய கோணிகளையும் தலைமேல் போட்டுக் கொண்டு பள்ளிக்குப் போய் விட்டு விட்டு வந்து விடுகிறார்கள். ஆனால், அவரால் அப்படிச் செய்ய முடியவில்லை.

கொட்டும் மழையிலும், தலையையும், முதுகையும் ஒரு கோணிப்பையின் பாதுகாப்பில் மறைத்துக் கொண்டு, தினமும் பால் கொடுத்து விட்டுப் போகும் பால்காரனை நினைத்துக் கொண்டார்.

அவனைப் போல் ஏன் தன்னால் ஒரு கோணிப்பையைத் தலையில் போட்டுக் கொண்டு ஆஃபீசுக்குப் போக முடிவதில்லை?

காரணம், அவர் ஆஃபீஸில் ஹெட் கிளார்க். மானேஜருக்கு அடுத்தபடியாம்! அதனால், மழையில் நனையத்தான் வேண்டும் போல் இருக்கிறது.

அவர் ஆஃபீஸ் பியூன் சண்முகம் கூட ஒரு பழைய கல்யாணத் தாம்பூலப் பையைத் தலையில் குல்லாய் போல் கவிழ்த்துக் கொண்டு வந்து விடுகிறான்.

அந்த அலுவலகத்தில், அவரிடமும், பியூன் சண்முகத்திடமும் மட்டும்தான் குடை இல்லை என்று தோன்றியது. மற்றவர்கள் குடையோ, மழைக் கோட்டோ வைத்திருக்கிறார்கள்.

காரில் வந்து இறங்கும் மானேஜருக்கு குடைப் பிரச்னை இல்லை. அவருக்குக் கூட, அவர் காரிலிருந்து இறங்கும்போது மழையில் நனையாமல் இருக்க, அக்கவுன்டன்ட்  கல்யாணத்தின் குடையை விரித்துப் பிடித்துக் கொண்டு காரின் கதவருகே நிற்பான் பியூன் சண்முகம்.

இந்த குடை பற்றிய கேள்வி அதன் பிறகு தினமும் எழ ஆரம்பித்தது. சண்முகம் தன்னிடம் குடை இல்லை என்பதைப் பட்டவர்த்தனமாகச் சொல்லிவிட்டது போல், அவரால்  சொல்லிவிட முடியுமா? என்னவோ ஒரு தயக்கம்.

“குடை இல்லை” என்று சொன்னால், “ஏன் இல்லை?” என்பார்கள் அதற்கு என்ன பதில் சொல்வது? குடை வாங்கத் தனக்கு வசதி இல்லை என்று சொன்னால், அதற்கான வரவேற்பு எப்படி இருக்குமோ? அந்த அனுதாபப்  பார்வைகளை அவரால் தாங்கிக் கொள்ள முடியாது.

இரண்டாவது நாள் அவர் மழையில் நனைந்து அலுவலகத்துக்கு வந்தபோது, “இன்றைக்காவது குடை எடுத்து வந்திருக்கக் கூடாது?” என்று அவர் அசிஸ்டன்ட் ரமேஷ் கேட்டான்.

“குடையை இரவல் கொடுத்தேன். நான் கிளம்புவதற்குள் அது திரும்ப வரவில்லை” என்றார் ராமரத்தினம்.

இப்படிப்பட்ட பொய்ச் சமாதானங்கள் தனக்கு எப்படி இவ்வளவு சரளமாக உதிக்கின்றன என்பது அவருக்கு வெட்கம் கலந்த ஆச்சரியத்தைக் கொடுத்தது. சுய கௌரவத்தை காப்பாற்றிக் கொள்ள முனையும்போது, மூளை எவ்வளவு அற்புதமாக ஒத்துழைக்கிறது!

அவரிடம் குடை இல்லை என்பது ஒரு சாதாரண விஷயம். இந்த நாட்டில், லட்சக்கணக்கான நபர்களிடம் குடை இல்லை, ஆனால், அதை ஒப்புக். கொள்ள முடியாமல் தடுக்கும் தன் அந்தஸ்தையும், கௌரவத்தையும் அந்த நிமிடத்தில் அவர் வெறுத்தார்.

குறிப்பிட்ட அந்தஸ்து நிலையில் இருப்பவர்கள், அல்லது அப்படி இருப்பதாக கருதப்படுபவர்கள், கௌரவக் குறைவு என்ற குளிரிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள எத்தனை போர்வைகளை போர்த்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.

‘அடுத்த மாதம் ஒரு குடை வாங்கி விட வேண்டும்.’ 

ரயிலிலிருந்து அவர் இறங்கியபோது, மழை முழுவதுமாக நின்று விட்டது. ஆனால், வீட்டிலிருந்து ஸ்டேஷனுக்கு நடந்தபோது மழையில் நனைந்த ஈரம் இன்னும் காயவில்லை. இன்றும் அவர் அலுவலகத்துக்கு தாமதாமாகத்தான் போகப் போகிறார். அதே கேள்விகளைச் சந்திக்கத்தான் போகிறார்!

‘இன்றைக்கும் ஏன் குடை எடுத்து வரவில்லை?

‘இன்றைக்கும் ஏன் குடை எடுத்து வரவில்லை?

‘இன்றைக்கும் ஏன் குடை எடுத்து வரவில்லை?

இன்றைக்கும் ஏன்...

...சே! இது என்ன கேள்வி? தேவையற்ற, பொருளற்ற, பயனற்ற கேள்வி. ஆனாலும், அது கேட்கப்படும். அதற்கு அவர் பதில் கூறித்தான் ஆக வேண்டும். காரணங்களைத் தேடி அவருடைய அறிவு தன் பெட்டகத்தை அலசிப் பார்த்து விட்டுக் கைவிரித்து விட்டது.

அப்படியே இன்று ஏதாவது சொல்லிச் சமாளித்தாலும், இன்னும் எத்தனை நாளைக்கு இப்படிச் சமாளிக்க முடியும்? என்றாவது ஒருநாள், உண்மையைக் கூறித்தானே ஆக வேண்டும்? அதை இன்றைக்கே சொல்லி விட்டால்...

ஓ! அதை அவரால் நினைத்துப் பார்க்க முடியவில்லை.

அலுவலகம் சென்றடையும் வரை, அவர் சிந்தனை பொருத்தமான காரணத்தைக் கற்பனை செய்யும் முயற்சியில் வெற்றி பெறவில்லை.

அலுவலகத்துக்குள் நுழைந்ததும், “குட் மார்னிங்” சொல்லக் கூடப் பொறுமை இல்லாமல் நித்யா கேட்டு விட்டாள்.

“ஏன் சார் இப்படி தினமும் நனைந்து கொண்டே வருகிறீர்கள்? இன்றைக்காவது குடை... “ (அவர் எதிர்பார்த்த அதே கேள்வி!)

“நான் கூட அதிகமாகக் குடையை வெளியே எடுத்து வருவதில்லை. எங்கேயாவது தொலைத்து விடுவேனோ என்று என் மனைவிக்கு பயம்” என்றார் அக்கவுன்டன்ட்.

ராமரத்தினத்தின் மூளை தன் முயற்சியில் வெற்றி பெற்று விட்டது.

அதுவும், இந்தப் பிரச்னைக்கு நிரந்தரமாகத் தீர்வு காணும் விதத்தில்.

“அதை ஏன் கேட்கிறாய்? இன்றைக்கு வீட்டிலிருந்து கிளம்பம்போது, குடையை எடுத்துக் கொண்டுதான் வந்தேன். ரயிலில் ஏறும்போது, குடையுடன்தான் ஏறினேன். இறங்கும்போது மழை நின்று விட்டதால், குடையின்  நினைவே மறந்து விட்டது. நல்ல குடை. பழங்காலத்துத் துணி ஸ்ட்ராங்காக இருந்தது.. ஹ்ம்... “ என்று சொல்லி ஒரு பெருமூச்சு விட்டார் ராமரத்தினம்.

அப்போதுதான் அலுவலகத்துக்குள் நுழைந்த ரமேஷ், எல்லோருக்கும் வணக்கம் சொல்லி விட்டு, “ஹெட் கிளார்க் சார் ஏதோ கதை சொல்லிக் கொண்டிருந்தார் போலிருக்கிறதே!” என்றான்.

“கதை இல்லையப்பா! அவருடைய குடை தொலைந்து விட்டதைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்” என்றார் குப்புசாமி.

”தொலைந்து விட்டதா? எப்படி?” என்றான் ரமேஷ் அவனுடைய வியப்பு ராமரத்தினத்துக்கு சற்று அதிகப்படியாகத் தோன்றியது.

”ரயிலில் மறந்து வைத்து. விட்டு வந்து விட்டேன் போலிருக்கிறது" என்றார் ராமரத்தினம், பாதி வார்த்தைகளை விழுங்கிக் கொண்டே. பொய் சொல்வது, அதுவும் பொய்யைத் திரும்பச் சொல்வது எவ்வளவு கடினமாக இருக்கிறது!

“பாவம்! குடை விற்கிற விலையில்...யார் கையில் கிடைத்ததோ!” என்றாள் நித்யா. ராமரத்தினத்தின் குடை தொலைந்து விட்ட வருத்தத்தை விட, அது தன் கையில் கிடைத்திருக்கக் கூடாதா என்ற ஏக்கமே அவள் குரலில் அதிகமாக இருந்ததாகத் தோன்றியது.

“வேறு யார் கையிலும் கிடைக்கவில்லை. என் கையில்தான் கிடைத்தது” என்றான் ரமேஷ், சிரித்தபடி. தன் கக்கத்தில் பிடித்து வைத்திருந்த குடையை, ராமரத்தினத்திடம் சிரித்துக் கொண்டே நீட்டினான்.

ராமரத்தினத்துக்குத் தன்னை யாரோ பளீரென்று கன்னத்தில் அறைந்தது போல் இருந்தது. ரமேஷை ஏறிட்டுப் பார்த்தார்.

“நீங்கள் ரயிலில் விட்டு விட்டு வந்த குடை என் கையில் எப்படிக் கிடைத்து என்று ஆச்சரியப்படுகிறீர்களா? நீங்கள் வந்த அதே பெட்டியில்தான் நானும் வந்தேன். இறங்கும்போது, நீங்கள் குடையை வைத்து விட்டுப் போனதை கவனித்து எடுத்துக் கொண்டு வந்தேன். ஸ்டேஷனிலேயே உங்களிடம் கொடுக்க வேண்டும் என்றுதான் நினைத்தேன் அதற்குள் நீங்கள் வேகமாகப் போய் விட்டீர்கள்.”

“எனக்குத் தெரிந்து, குடையைத் தொலைத்துவிட்டு, அதைத் திரும்ப பெற்ற அதிர்ஷ்டசாலி இந்த உலகத்திலேயே நீங்கள் ஒருவர்தான், சார்!” என்றார் அக்கவுன்டன்ட்.

சொல்லி விட்டுத் தான் இதுவரை தொலைத்த நான்கைந்து குடைகளை நினைத்து, ஒரு பெருமூச்சு விட்டார்.

ராமரத்தினம் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார்.

‘தொலைத்த குடை திரும்பக் கிடைக்கப் பெற்ற ஒரே அதிர்ஷ்டசாலி நான்தான் என்று அக்கவுன்டன்ட் ஆச்சரியப்படுகிறார். குடையைத் தொலைக்காமலே திரும்பப் பெற்ற ஒரே அதிர்ஷ்டசாலி நான்தான் என்று தெரிந்தால், இன்னும் எவ்வளவு ஆச்சரியப்படுவாரோ!’

மதிய உணவு இடைவேளையின்போது, ரமேஷ் அவர் சீட்டுக்கு வந்தான். “என்னை மன்னித்து விடுங்கள், சார் காலையில் உங்களைக் கொஞ்சம் திணறடித்து விட்டேன் உங்களிடம் குடை இல்லை என்பது எனக்குத் தெரியும். அது புரியாமல், ஆஃபீசில் தினமும் பலரும் உங்களைக் கேள்வி கேட்டு, உங்களைச் சங்கடத்துக்கு ஆளாக்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து வருந்திக் கொண்டிருந்தேன். இன்று ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததும், என் குடையைத் தொலைந்து போன உங்கள் குடை என்று சொல்லி, உங்களிடம் கொடுத்து விட்டேன். அந்தக் கணத்தில் தோன்றியபடி நடந்து கொண்டு விட்டேன். யோசிக்கக் கூட இல்லை. தவறாக இருந்தால், என்னை மன்னித்து விடுங்கள். இந்தக் குடை உங்களிடமே இருக்கட்டும். என்னை உங்கள் மகன் போல் நினைத்து, அதை ஏற்றுக் கொள்ளுங்கள்.”

அவர் பதிலை எதிர்பார்க்காமல், அங்கிருந்து அகன்றான் ரமேஷ்.

அவரிடம் குடை இல்லாதது அலுவலகத்தில் மற்றவர்ளுக்குத் தெரியாவிட்டால் என்ன? இதோ இந்த ரமேஷுக்குத் தெரிந்து விட்டதே! 

அவர் போர்த்தியிருந்த போர்வைளைத் துளைத்துக் கொண்டு அவமானக் குளிர் அவரைச் சட்டென்று தாக்கியது. 

(1975-இல் எழுதப்பட்டது)

அடுத்த பதிவு: 37. மௌனம் கலைந்தபோது
முந்தைய பதிவு: 35. மழித்தலும் நீட்டலும்

No comments:

Post a Comment