Monday, July 24, 2017

24. மகன் தந்தைக்கு....


"எல்லோரும் வந்து விட்டார்களா?" என்றார்  வக்கீல்.

அறையில் கூடியிருந்த ஒவ்வொருவரும் மற்றவர்கள் மீது பார்வையைச் சுழல விட்டனர்.

ஃப்ரேம் இல்லாத மூக்கு கண்ணாடி அணிந்திருந்த நடுத்தர வயதுக்காரர் புன்முறுவலுடன் வக்கீலைப் பார்த்தார். "என்ன கேட்டீர்கள்?"

அவர் ஹியரிங் எயிட் அணிந்திருக்கிறாரா என்று கூர்ந்து பார்த்த வக்கீல் "சம்பந்தப்பட்ட எல்லோரும் வந்து விட்டார்களா என்று கேட்டேன்" என்றார் உரக்க.

"இப்போதுதான் உங்கள் கேள்வி லீகலி கரெக்ட்" என்றார் கண்ணாடிக்காரர்     புன்னகை மாறாமல். "உண்மையில், இங்கே சம்பந்தமே இல்லாத சில பேர் கூட வந்திருக்கிறார்கள்."

"பிள்ளை இல்லாதவரின் சொத்துக்கு யாரும் ஏகபோக உரிமை கொண்டாட வேண்டாம்" என்றாள் சற்றே வயதான ஒரு அம்மாள். 

அதற்கு மேல் வாக்குவாதத்தை வளர்த்த விடாமல் வக்கீல் இடைமறித்தார். "சம்பந்தப்பட்டவர்கள் யார் என்பது  நான் உயிலைப் படித்ததுமே தெரிந்து விடப் போகிறது. அதற்குள் ஏன் வீணான சர்ச்சைகள்? நான் உயிலைப் படிக்கலாமா?"

"ப்ளீஸ் கோ அஹெட். ஆனால் ஒரு வேண்டுகோள். உங்கள் லீகல் வளவளாவையெல்லாம் தவிர்த்து விட்டு, உயிலின் முக்கியமான பகுதியைப் படித்தால் போதும், உங்கள் கையிலுள்ள பேப்பர் கற்றையின் கனத்தைப் பார்த்தால் எனக்குக்  கவலையாக இருக்கிறது"  என்றார் இன்னொருவர்.

"நீங்கள் ஒருவர் மாற்றி ஒருவர் பேசுவதை நிறுத்தினால், நான் உயிலைப் படிக்க ஆரம்பிக்கிறேன்.  இந்த உயிலை, காலஞ்சென்ற சுந்தரம் தன் கைப்பட எழுதியிருக்கிறார். அவர் சட்டம் படிக்காதவர் என்பது உங்களுக்குத் தெரியும். அதனால் இந்த உயிலில் லீகல் வளவளாவெல்லாம் இல்லை. உயிலின் வாசகம் ஒரு வாக்கியத்தில் முடிந்து விடுகிறது. .ஆனால்."

சஸ்பென்ஸ் வைத்துத் தன் பேச்சை நிறுத்தி விட்டு வக்கீல் கூடியிருந்தவர்களைப் பார்த்தார். 

வியப்பு தூவப்பட்ட முகங்களில் புருவங்கள் கேள்விக்குறிகளாகியிருந்தன.

"ஆனால், உயிலின் பின்குறிப்பாக, ஒரு கதை இருக்கிறது."

"கதையா?"

"மாமா ஒரு கதாசிரியர் என்பது இத்தனை நாட்களாக நமக்குத் தெரியாமல் போய் விட்டதே!"

"ஒருவேளை இந்தக் கதையை யார் பத்திரிகையில் பிரசுரிக்கச் செய்கிறாரோ அவருக்குத்தான் சொத்து என்று உயில் எழுதியிருப்பாரோ?"

கேலி ததும்பிய விமர்சனங்கள் அவரவர் மனப்போக்குப்படி வெளிப்பட்டன.

"உங்கள் செவிப்புலன்களைக் கூர்மையாக்கிக் கொள்ளுங்கள். நான் இப்போது உயிலின் முக்கியப் பகுதியைப் படிக்கப் போகிறேன்" என்று  வக்கீல் அறிவித்த அக்கணமே நிசப்தத்தின் ஆட்சி துவங்கியது.

அடுத்த சில வினாடிகளில் அனைவரின் செவிப்புலன்களும் வெடிகுண்டுத் தாக்குதலுக்கு ஆளாயின.

அதிர்ச்சியும், ஏமாற்றமும் கடுமையான சொற்களில் வெளிப்பட்டன.

"ஃபென்டாஸ்டிக்!"

"சுந்தரம் எப்போதுமே கொஞ்சம் மனநிலை சரியில்லாதவன் மாதிரிதான்  இருப்பான். ஆனால் இந்த அளவுக்கு அவனுக்கு மூளை குழம்பியிருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை!"

"ஹிப்போக்ரஸி ஆஃப்  த ஹையஸ்ட் ஆர்டர்!"

"நம் எல்லோரையும் முட்டாளாக்குவதற்காக அவர் செய்த பைத்தியக்காரத்தனம்!"

ஊசிச்சரம் போல் வந்து தெறித்த ஏமாற்றத்தின் வெடிப்புகளை வக்கீல் ரசித்துக் கொண்டிருந்தார்.

"உயிலைப் பற்றிய உங்கள் விமர்சனம் முடிந்து விட்டதா? இப்போது நான் கோயிலின் பின்குறிப்பை - கதையைப் படிக்கப் போகிறேன்.அதைப் படித்ததும் என் கடமை முடிந்து விடும். உயிலை விமர்சித்தது போல் கதையையும் விமர்சித்தால் உங்கள் கடமையும் முடிந்து விடும். 'வளவளாவைக் கேட்க விரும்பாதவர்கள் எழுந்து போகலாமே!"

வக்கீல் சில வினாடிகள் தாமதித்தார். யாரும் எழுந்து போகவில்லை. ஒரு புதிரின் விடையைத் தெரிந்து கொள்ளும் ஆவலுடன் அனைவரும் அமர்ந்திருப்பதாகத் தோன்றியது.

வக்கீல் உயிலின் பின்குறிப்பைப் படிக்க ஆரம்பித்தார்.

ப்போது அவனுக்கு வயது பன்னிரண்டு இருக்கும்.ஆறாவது வகுப்ப்பில் படித்துக்  கொண்டிருந்தான். வயதுக்கேற்ற உடல் வளர்ச்சி இல்லாததால் உருவத்தில் சிறியவனாகத் தோன்றினாலும் அவன் அறிவு மட்டும் அவன் வயதுக்கு மீறி வளர்ந்திருந்தது.

வகுப்பில் ஆசிரியர் ஒரு விஷயத்தை விளக்கும்போது அவர் விளக்கத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே அவர் சொல்ல வந்த கருத்தை முழுமையாகப் புரிந்து கொண்டு விடுவான்.அவருடைய விரிவான விளக்கங்கள் எல்லாம் அவனுக்குத் தேவையற்றவையாகப் படும்.

ஆசிரியர் விளக்கம் அளித்துக்கொண்டிருக்கும்போதே அவன் சிந்தனை முன்னேறிச் சென்று, அந்த விஷயத்தின் ஆழமான பகுதிகளுக்குச் சென்று துழாவி விட்டு வந்து விடும். ஆசிரியர் ஒரு விஷயத்தை விளக்கி முடித்திருக்கும்போது, தான் சொல்லிக் கொடுத்த விஷயத்தைத் தன்னை விடவும் நுணுக்கமாக அறிந்து கொண்டுள்ள மாணவன் ஒருவன் வகுப்பில் இருப்பதை அவர் அறிந்திருக்க மாட்டார்.

குறிப்பாக, விஞ்ஞானப் பாடங்களில் அவனுக்கு இருந்த ஆர்வம் பிரமிப்பூட்டுவதாக இருந்தது. சோதனைக்கூடத்தில் சில எளிய பரிசோதனைகளை விஞ்ஞான ஆசிரியர், எதோ தாமே அவற்றை உருவாக்கிய பெருமிதத்துடன் செய்து காட்டி விளக்கும்போது, அவன் கண்களை அகல விரித்தபடி அவற்றை  கவனிப்பான்.

ஒரு விசைப்பலகை போல் தண்ணீர்த் தொட்டியில் நீந்திப் பாயும் சோடியம் கொழுந்தின் எழிலையும், ரசாயனச் சேர்க்கைகள் விளைவிக்கும் வர்ண ஜாலங்களையம் காணும்போது எதோ ஒரு தனி உலகுக்குப் பயணம் செய்வது போன்ற உணர்வு ஏற்படும். அந்தத் தருணங்களில், பிறவி எடுத்ததன் பயனையே அடைந்து விட்டதாகத் தோன்றும். இரவில் தூக்கம் பிடிக்காமல் அந்த இனிய அனுபவங்களை அசை போடும்போது அவனுக்கு உடல் சிலிர்க்கும்.

விஞ்ஞானத்தின் விந்தைகளை அவன் மேலும் மேலும் உணர ஆரம்பித்தபோது பக்தர்கள் தெய்வ தரிசனத்தின்போது அடையும் பரவச நிலை அவனை ஆட்கொள்ளத் தொடங்கியது.

து ஆங்கில வகுப்பு. அதில் நியூட்டனைப் பற்றிய ஒரு பாடம் வந்திருந்தது. நவீன விஞ்ஞானத்தின் சிற்பிகளில் ஒருவர் என்ற அளவில் நியூட்டனைப் பற்றி அவன் முன்பே  ஓரளவு அறிந்து வைத்திருந்ததால்  அந்தப் பாடத்தில் அவன் அதிக ஆர்வம் செலுத்தினான்.

நியூட்டன் எப்படி உலகம் புகழும் விஞ்ஞானி ஆனார்? மரத்திலிருந்து ஆப்பிள் விழுந்ததைப்  பார்த்து புவி ஈர்ப்பு விசை இருப்பதை (தற்செயலாக!)க்  கண்டு பிடித்தவர் என்று மட்டுமே பரவலாக அறியப்பட்டிருந்த அவரைப் பற்றிய உண்மைகளை அந்தப் பாடத்தில் படித்தபோது அவனுக்குப் பெரும் பிரமிப்பு ஏற்பட்டது. ஒரு லட்சிய வாழ்க்கைக்கான வித்தையும் அந்தப் பாடம் அவன் மனதில் ஊன்றி விட்டது.

நியூட்டன்! இள வயதிலேயே எவ்வளவு விஞ்ஞான ஆர்வம் அந்தச் சிறுவனுக்கு! சிறு கருவிகளையும், உபகரணங்களையும் கழற்றி மாற்றுவதில் உண்டான ஆர்வத்தில் துவங்கி, காற்றில் இயங்கும் இயந்திரங்கள், வானத்தை அருகில் காட்டும் தொலைநோக்கிக் கருவிகள் என்று படிப்படியாகப் பல கருவிகளை இரவும் பகலும் உழைத்து உருவாக்கும் அளவுக்கு வளர்ந்த திறமை, பிற்காலத்தில் மாபெரும் விஞ்ஞான உண்மைகளை உலகுக்கு எடுத்துரைக்கும் அளவுக்கு வளர்ந்தது.

திடீரென்று தான் நியூட்டனாக மாறி விட்ட ஒரு பிரமையில் அவன் லயித்துப் பார்த்தான். 'நான் நியூட்டனாக இருந்தால் இப்போது என்ன செய்து கொண்டிருப்பேன்?' என்று தன்னையே கேட்டுக்கொண்டான்.  கேள்விக்கு விடை கிடைக்கவில்லை. ஆனால் அந்தக் கேள்வி அவன் மனதில் திரும்பத் திரும்ப எழுந்து இனம் புரியாத ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தியது.

அதற்குப் பிறகு விஞ்ஞானத்தில் அவனது ஆர்வம் இன்னும் பல மடங்காயிற்று. உலகையும், அதை இயக்கும் சக்திகளையும், உலகில் உள்ள பல்வகைப் பொருட்களையும் பற்றி உடனே தெரிந்து கொண்டு வீட வேண்டும் என்று ஒரு துடிப்பு.

அவனுடைய விஞ்ஞானப்  பாடப்புத்தகங்களால் அவனது ஆர்வப்பசியைத் தணிக்க முடியவில்லை. முன்பு பிரமிப்பூட்டிய பரிசோதனைகள் எல்லாம் இப்போது சிறுபிள்ளை விளையாட்டுகளாகத் தோன்றின. பள்ளி நூல்நிலையத்தில் இருந்த விஞ்ஞானப் புத்தகங்களுடன் அவன் செய்துகொண்ட அறிமுகம் நாளடைவில் இணைபிரியாத நட்பாக மாறியது. இந்த நண்பர்கள் அவனைப் பல அற்புதமான உலகங்களுக்கெல்லாம் அழைத்துச் சென்றனர்.

காலத்தின் ஓட்டத்தில் அவன் வகுப்புகளை இயந்திரமாகக் கடந்து கொண்டிருந்தான். பாடப்புத்தகங்களில் அவன் அதிகம் அக்கறை செலுத்தாததால்,  அதிக மதிப்பெண்கள் பெறாவிட்டாலும், தேர்ச்சி பெற்று அடுத்த வகுப்புகளுக்குச் சென்று கொண்டிருந்தான்.

ருநாள் செய்திப் பத்திரிகையைப் புரட்டிக்கொண்டிருந்தபோது, தற்செயலாக ஒரு செய்தி அவன் கவனத்தைக் கவர்ந்தது. அந்த ஆண்டு நோபல் பரிசு பெற்றவர்களைப் பற்றிய செய்தி அது. பௌதிகம், ரசாயனம், கணிதம் உட்படப் பல்வேறு துறைகளிலும் நோபல் பரிசு பெற்றவர்களின் பட்டியல் அடங்கிய செய்தி அது..

அந்தச் செய்தியைப் படித்ததும் , எதோ ஒரு உணர்வினால் தீண்டப்பட்டவனாக ஒரு கணம் அவன் கண்களை மூடி ஒருவித லயிப்பில் ஆழ்ந்தான். சில தெளிவற்ற உருவங்கள் அவன் மனதில் வந்து போயின. உருவங்கள் தெளிவற்று இருந்தாலும் அவனால்அந்த  நபர்களை அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. நியூட்டன், ஐன்ஸ்டீன், சி,வி,ராமன்.....இன்னும்  பலர்.

அப்போது மின்னல்போல அவன் மனதில் ஒரு ஆசை எழுந்தது. எழுந்த வேகத்திலேயே அது வேகமாக வளர்ந்து ஒரு தீவிர நம்பிக்கையாக, நிச்சயம் அடைந்தே தீர வேண்டிய ஒரு லட்சியமாக உருமாறியது,

'நான் நோபல் பரிசு பெற வேண்டும்.'

ஒரு லட்சியத்தை உணர்ந்து ஏற்றுக்கொண்டதும், அவன் வாழ்க்கைக்கு ஒரு புதிய அர்த்தம் பிறந்து விட்டதாகத் தோன்றியது. அந்த லட்சியத்தை எப்படி அடையப்போகிறோம் என்பதைப்பற்றி அவன் யோசிக்கவில்லை. லட்சியத்தை எப்படியும் அடைந்தே தீர வேண்டும் என்பதை ஒரு விதியாக அவனே வகுத்துக்கொண்ட பிறகு,  எப்படி என்ற சிந்தனையே அவசியமற்றதாக ஆயிற்று.

வன்  எஸ்.எஸ்.எல்,சி தேர்வு எழுதியதும், கல்லூரியில் சேர்வது பற்றித் தன் தந்தையிடம் பேச நினைத்தான். ஆனால் அவனை முந்திக்கொண்டு அவன் தந்தை "படிச்சது போதும். நாளையிலிருந்து நீயம் என்னோட கடைக்கு வந்து வியாபாரத்தைக் கத்துக்க" என்றார்.

தன் விஞ்ஞான ஆர்வத்தையும், லட்சியத்தையும் பற்றி அவன் பேசியது அவன் தந்தையின் காதுகளில் ஏறவில்லை. "என்ன படிப்புப் படிச்சாலும், படிப்பு முடிஞ்சதும்  வியாபாரத்தை நீதானே பாத்துக்கணும்? அதுக்கு எதுக்குப் படிக்கணும்? நம்ம வியாபாரத்தைப் பாத்துக்கறதுக்கு எஸ் எஸ் எல் சியே போதும்." என்று அடித்துச் சொல்லி விட்டார்.

ஒரு வருடம் தந்தை சொன்னபடி வியாபாரத்தைப் பார்த்துக்கொண்டு விட்டு அதற்குப் பிறகு தனக்கு வியாபாரத்தில் ஆர்வம் இல்லை என்று சொல்லி விட்டு அடுத்த ஆண்டு கல்லூரியில் சேரலாம் என்று முடிவு செய்தான். வேறு வழி இல்லையே!

ஆனால் அடுத்த சில மாதங்களிலேயே அவன் தந்தை இறந்து விட்டார். தந்தைக்கு ஒரே மகன் என்ற நிலையில் வியாபாரத்தையும் பார்த்துக்கொண்டு, தாய்க்கு ஆதரவாகவும் இருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டான்.

வியாபாரப்  பொறுப்பு ஒரு பெரும் சுமையாக வெளியிலிருந்து அவனை அழுத்த, அடக்கி வைக்கப்பட்ட விஞ்ஞான ஆர்வம் மற்றோரு பெரும் சுமையாக உள்ளிருந்து அழுத்தியது. இயந்திரம்  போல வாழ்க்கையை ஒட்டிக்கொண்டிருந்தான்.

ப்போது அவனுடைய வயதில் பல வருடங்கள் கூடி விட்டன. அவனுக்கு ஒரு பிள்ளை பிறந்து பள்ளியில் படித்துக்கொண்டிருந்தான். இனி அவனை 'அவர்' என்றே குறிப்பிடுகிறேன்.

சுமையாகத் தொழில் விழுந்த குடும்பப் பொறுப்பும் மனதில் புதைந்து அழுத்திக் கொண்டிருந்த ஏமாற்றமும் ஒருசேர அவரை அழுத்திக் கொண்டிருந்த நிலையில்  அவரால் வாழ்க்கையில் பெரிதாக எதையும் சாதிக்க முடியவில்லை. வியாபாரம் பெரிதாக முன்னேறாவிட்டாலும் அவர் தந்தை போட்டு வைத்திருந்த பலமான அஸ்திவாரத்தின் பலத்தில் தாக்குப் பிடித்துக்கொண்டிருந்தது.

'சாதனைகளை புரியக்கூடிய திறமையை இறைவன் எனக்கு கொடுத்திருந்தும்  அந்தத் திறமையைப் பயன்படுத்தாமல் வீணாக்கி விட்டேனே!' என்று ஆங்கிலக் கவிஞர் மில்டன் புலம்பியதைப் போல் அவர் உள்மனமும் அவரது லட்சியக்கனவின் சிதைந்த துகள்களை நினைத்து  எப்போதும் புலம்பிக் கொண்டே இருந்தது.

பள்ளியில் படித்துக்கொண்டிருந்த அவர் மகன் ஒருநாள் அவரிடம் உற்சாகத்துடன் ஒடி வந்தான்.

"அப்பா!..அப்பா!..."

"என்னடா?"

"அப்பா! நம் வீட்டில் இனிமேல் நெருப்புப் பேட்டி வாங்க வேண்டாம்."

"என்?" என்றார் அவர் புரியாமல்

"நெருப்புக்குச்சி இல்லாமலே நெருப்பை வரவழைக்கும் வழியை நான் கண்டு பிடித்து விட்டேன்!"

அவர் மனதில் இன்னதென்று தெரியாத ஒரு சிலிர்ப்பு. மழைத்துளி மண்ணில் விழும் சமயம் குப்பென்று ஒரு மணம் எழுந்து மழை வரப்போவதை உணர்த்துவது போல், எதோ ஒரு பெரிய நிகழ்வின் முன்னோடியாக அவர் மனதுக்குள் உற்சாக உற்று பெருக்கெடுத்தது.

"சொல்லு."

அவன் சொல்லவில்லை. செய்து காட்டினான்.

அது அப்படி ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. ஒரு லென்ஸின் மூலம் சூரிய ஒளியை  சிறிதளவு பஞ்சின் மீது பாய்ச்சி அதைப்  பற்றி எறியச்செய்யும் சாதாரணச் செயல்தான்.

ஆனால் அதைச் செய்வதில் அவன் காட்டிய ஆர்வமும் , உற்சாகமம் எப்போதோ அடைத்துப் போன அவர் மனக்கதவுகளையும் சாளரங்களை  சடார் சடாரென்று அடித்துத் திறந்தன.

"டேய் நியூட்டன்!"

அவர் அவனைத் தூக்கிப் பந்தாடினார். அவரது லட்சியம் நிறேவேறாமலா போய் விட்டது? யார் சொன்னது?

அவரது லட்சியத்தை நிறைவேற்ற, இதோ ஒருவன் - அவரது ரத்தத்துக்கும்   சதைக்கும் சொந்தம் கொண்டாடக்கூடிய ஒருவன், அவருடைய மகன் - வந்து விட்டானே!  அவருடைய தோல்வியை வெற்றியாக்கி, அவர் எய்தியதை  எட்டிப்பிடித்து அவருக்கு வெற்றி தேடித் தரப்போகிறான்.

பல வருடங்களுக்குப் பின் அவர் ஒரு புதிய உற்சாகத்தை உணர்ந்தார்.

தனது லட்சியத்தை அவனிடம் அவர் பலமுறை சொல்லி அதை அவன்தான் நிறைவேற்ற வேண்டும் என்று  திரும்பத் திரும்பக் கூறி வந்தார். நாள் ஆக ஆக, அவனுக்கு அவர் கூறியதன் பொருள் விளங்கத்  தொடங்கியது.

அவன் மீது அவருக்குப்  புதிய நம்பிக்கை ஏற்பட்டக் காரணமான அந்த நிகழ்ச்சியை அவர் வர்ணிக்கும்போதெல்லாம் அவனுக்குச் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. பூதக்கண்ணாடியை வைத்துக்கொண்டு அவன் விளையாட்டாகச் செய்த ஒரு செயலை அவர் விஞ்ஞான  ஆர்வமென்று புரிந்து கொண்டதை என்ன வென்று சொல்வது! விஞ்ஞானப் பாடம் என்றால் தனக்கு வேப்பங்காய் என்று தந்தையிடம் சொல்லி அவரைப் பெருத்த ஏமாற்றத்துக்கு ஆளாக்க அவனுக்கு மனம் துணியவில்லை.

ஆயினும் ஒருநாள் அது அவருக்குத் தெரிந்து விட்டது. விஞ்ஞானப் பாடத்தில்  தேர்ச்சி பெறாததால் அவனால் அடுத்த வகுப்புக்குப் போக முடியவில்லை. உடைந்த பொம்மையை ஓட்ட வைத்த பின் அது மீண்டும் உடைந்தும் குழந்தைக்கு ஏற்படும் ஏமாற்றத்தைப் போல் அவருக்குப் பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டது.

அந்த அதிர்ச்சி அவரைச் சற்று அதிகமாகவே தாக்கி அவரது உடல் நிலை மனநிலை இரண்டையும் ஒருங்கே பாதித்தது. தன் பரம்பரைக்கு நோபல் பரிசு கிடைக்கும் வாய்ப்பு  சமீபத்தில் இல்லை என்ற சாதாரண உண்மை அவரை அந்த அளவுப்பு பாதித்திருக்க வேண்டியதில்லை!

ற்று அதிசயமான ஒற்றுமையுடன் அவனும் அவன் தந்தையைப் போலவே குடும்பப் பொறுப்பை ஏற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டான் - அவன் தந்தையின் திடீர் மரணத்தினால். ஆயினும் ஒரு வித்தியாசம் இருந்தது. குடும்பப் பொறுப்பை ஏற்க வேண்டிய கட்டாயத்தால் தன் படிப்பு தடைப்பட்டுப் போனது அவன் தந்தைக்கு ஏமாற்றமாக இருந்தது. ஆனால் குடும்பப் பொறுப்பை ஏற்பதற்காகப் படிப்பைக் கைவிடுவது அவனுக்கு மிகவும்  ஆறுதலாக இருந்தது!

ஒருவேளை தன்னிடம் எதிர்பார்ப்பை உருவாக்கிக் கொள்ளாமல் அதனால் கிடைத்த ஏமாற்றத்தால் பாதிக்கப்படாமல் இருந்திருந்தால் அவர் இன்னும் சில ஆண்டுகள் உயிரோடு இருந்திருப்பாரோ என்று அவனுக்குச் சில சமயம் தோன்றும். தான் தவறு எதுவும் செய்யவில்லை என்று அவன் உணர்ந்தாலும், தந்தையைப் பெரிய ஏமாற்றத்துக்கு ஆளாக்கி விட்டோமே என்ற மனக்குறை அவனை வாட்டிக்கொண்டே இருந்தது.

காலம் எதற்கும் கவலைப்படாமல்  எல்லாச் சுமைகளையும் ஏற்றுப் பறந்துகொண்டே இருந்தது

தொழில் துறைக்கென்று ஒரு நோபல் பரிசு ஏற்படுத்தப்படவில்லை.  அப்படி ஏற்படுத்தப்பட்டிருந்தால் அந்தப் பரிசை அவன் வென்றிருக்க வாய்ப்பு உண்டு. தொழிலிலும், வியாபாரத்திலும் அவன் செய்த சாதனைகள் அத்தனை!

இந்தியாவின் மிக முக்கியமான தொழிலதிபர்களின் ஒருவனாக அவன் கருதப்பட்டான். 'பிசினஸ் இந்தியா' பத்திரிகை  ஒருமுறை அவனை ஆண்டின் சிறந்த தொழிலதிபராகத் தேர்ந்தெடுத்தது. ஃபார்ச்சூன் பத்திரிகையின் உலகின் தலைசிறந்த 500 நிறுவனங்களில் அவனுடைய நிறுவனமும் இடம் பெற்றது. அவனுக்குக் கிடைத்த பரிசுகள், பாராட்டுக்கள், கௌரவங்கள் பலப்பல. அத்தனையும் உள்ளே நைந்து போன உள்ளத்துடன் வெளியே சிரித்தும், பேசியும், உதவியும், வாழ்ந்தும் அவன் நிகழ்த்தியவை.

இந்த வெற்றிகளின் பின்னணியில், தந்தையின் லட்சியத்துக்குத் துணை போக முடியாத குற்றஉணர்வின் நிழல் அவனை விடாமல் துரத்தி அவன் வாழ்வையே அர்த்தமற்றதாக உணரச் செய்தது. தனது வாழ்க்கையையே அர்த்தமற்றதாக அவன் கருதியதால் அர்த்தமுள்ள வாழ்க்கையுடன் தொடர்புடையதாகக் கருதப்படும்  திருமணத்திலும், குடும்ப வாழ்க்கையிலும் அவன் ஈடுபடவில்லை.

தன் தந்தையின்  சிதைத்து போன  கனவுகளின் துகள்களைக் காற்றில் கைகளை  அளைந்து பிடிக்க முயலும் மாயைச் சிந்தனைகளில் அவன் ஈடுபட்டிருந்தபோதுதான் ஒரு மின்னலைப் போல் அந்த வெளிச்சம் அவன் மனதுக்குள் புகுந்தது.

அவனுக்கு ஒரு வழி தோன்றி விட்டது. தன தந்தையின் லட்சியத்தை அவனால் நேரடியாக நிறைவேற்ற முடியாவிட்டாலும், வேறு வழியில் அதற்கு ஒரு பரிகாரம் செய்யும் யோசனை அவனுக்குத் தோன்றி விட்டது.

ஒரு பெரிய விஞ்ஞானியாகி நோபல் பரிசு பெற வேண்டும் என்று அவன் தந்தை கனவு கண்டார். தன்னால் அது முடியாது என்ற நிலை வந்தபோது, தன மகன் மூலம் தன லட்சியம் நிறைவேறும் என்று எதிர்பார்த்து ஏமாந்தார். அவனால் அந்தப் பாதையில் அடியெடுத்துக்கூட வைக்க முடியவில்லை.

ஆனால் இந்த உலகம் நோபல் பரிசையும் அவன் தந்தையையும் இணைத்துப் பேசும்படி அவனால் செய்ய முடியும். செய்யத்தான் போகிறான்.

தனால்தான்......

என் தந்தையின் நினைவாக 'சதாசிவம் மெமோரியல் இன்டர்நேஷனல் ப்ரைஸ் ஃபார் சயன்ஸ்' என்ற பரிசை உருவாக்கி  ஒவ்வொரு ஆண்டும் விஞ்ஞானத்தின் பல பிரிவுகளிலும் சிறந்த விஞ்ஞானிகளைத் தேர்ந்தெடுத்து அவர்கள் ஒவ்வொருவருக்கும் நோபல் பரிசுக்கு இணையான, சமமான பரிசை  வழங்குவதற்காக ஒரு டிரஸ்டை ஏற்படுத்தி ஷெட்யூல் 1ல் குறிப்பிடப்பட்டுள்ள என்னுடைய எல்லா அசையும், அசையா சொத்துக்களையும்  அந்த டிரஸ்டுக்கே எழுதி  வைக்கிறேன். டிரஸ்ட் உறுப்பினர்களை நியமிப்பது, டிரஸ்டை நிர்வகிப்பது போன்ற விவரங்கள் ஷெட்யூல் 2ல் கொடுக்கப்பட்டுள்ளன....:

வக்கீல் ஒரு நிமிடம் படிப்பதை நிறுத்தி விட்டு அமர்ந்திருந்தவர்களின் முகத்தைப் பார்த்தார்.

'த்சூ' என்று யாரோ சூழ் கொட்டினார்கள்.

(1982ஆம் ஆண்டில் எழுதப்பட்டது.)