Sunday, August 13, 2017

25. பயணம் (நாடகம்)


இந்த நாடகம் ஒரு பஸ்ஸுக்குள் நடப்பதாக அமைக்கப்பட்டிருக்கிறது. பஸ்ஸில் வெவ்வேறு இடங்களில் நடைபெறும் சம்பவங்களைக் காட்ட மேடையை இரண்டு பகுதிகளாகப் பிரித்துக் காட்சிகள் மாற்றி மாற்றிக் காட்டப்படலாம்.

காட்சி 1
 ஒரு பயணி 'ஹோல்டான்' என்று கூவிக்கொண்டே ஒடி வந்து நகரும் பஸ்ஸில் தொற்றிக் கொள்ளும் அசைவுகளைக் காட்டுகிறார். பஸ்ஸுக்குள் அவர் ஏறி விட்டதான தோற்றத்தை ஏற்படுத்திய பின், விளக்குகள் அணைக்கப்பட்டு, மீண்டும் விளக்குகள் எரியும்போது பஸ்ஸின் ஒரு இருக்கையில் மூவர் அமர்ந்திருக்க, கடைசியாக ஏறியவர் அந்த இருக்கையின் பக்கத்தில் நிற்கிறார்.

இருக்கையில் அமர்ந்திருப்பவருள் ஒருவர்: என்னய்யா இவ்வளவு அவசரம்? இப்படியா ஓடற பஸ்ஸில ஒடி வந்து ஏர்றது?

ஏறியவர்: ஸ்டாப்பிங்கில பஸ் நிக்கல. நான் கைகாட்டியும் நிக்காம போயிட்டாங்க. அதுதான் நிறுத்தச் சொல்லிச் சத்தம் போட்டுக்கிட்டே ஒடி வந்து ஏறினேன்.

இன்னொருவர்: நல்ல ஆளுய்யா!

மூன்றாமவர்: ஏன், நீங்களும் இப்படித்தானே ஏறினீங்க?

(இரண்டாமவர் மூன்றாமவரை முறைக்கிறார்.)

ஏறியவர்: ஆமாம், இந்த பஸ் எங்கே போகுது?

முதலாமவர்: சரியாப் போச்சு! அது கூடத்  தெரியாமயா  இந்த பஸ்ல ஏறின?....ஆமாம் நீ எங்கே போகணும்?

ஏறியவர்:  இன்னும் தீர்மானிக்கல!

இரண்டாமவர்: எங்க போறதுன்னு கூடத் தீர்மானிக்காம ஏன்யா இந்த பஸ்ல ஏறின?

ஏறியவர்: எவ்வளவு நேரம்தான் பஸ்ஸுக்காகக் காத்துக்கிட்டிருக்கறது?  ரொம்ப நேரமா எந்த பஸ்ஸும் வரல. அப்புறம் இந்த பஸ் வந்தது. அதனால இதிலேயே ஏறிட்டேன் - இந்த பஸ் எங்கே போகுதோ அங்கேயே போயிக்கலாம்னு!

மூன்றாமவர்: அதுவும் சரிதான்! வேணும்னா வழியில இறங்கி வேற பஸ்ல போய்க்கிட்டாப் போச்சு! அப்படி நெனைச்சுத்தான் நானும் ஏறினேன்.

ஏறியவர் (முதலாமவரைப் பார்த்து):  நீங்க எங்கே போறீங்க?

முதலாமவர்: ம்ம்ம்ம்... எனக்கு எப்படித் தெரியும்?

இரண்டாமவர்: என்னது? எங்கே போறதுன்னு தெரியாமயா பஸ்ல ஏறினீங்க?

முதலாமவர்: பஸ் எங்கே போகுதோ அங்கே போய்க்கறேன். வழியிலேயே இறங்கினாலும் இறங்கிடுவேன்! அது சரி, இந்த பஸ் எங்கே போகுது?

இரண்டாமவர்:  என்னைக் கேட்டா? கண்டக்டரைத்தான் கேக்கணும்!

ஏறியவர்: அப்ப உங்களுக்கும் நீங்க போற இடம் தெரியாதுன்னு சொல்லுங்க! அப்ப, கண்டக்டரைக் கேக்கலாமா?

முதலாமவர்: கண்டக்டருக்கு எப்படித் தெரியும்? அவரா பஸ்ஸை ஓட்றாரு? டிரைவரைத்தான் கேக்கணும்!

மூன்றாமவர்: டிரைவர் எங்கே?

இரண்டாமவர்: அவரோட சீட்ல இருப்பாரு.

ஏறியவர்: அவரோட சீட்டு எங்கே?

முதலாமவர்: இது கூடத் தெரியாதா? முன்னாலதான் இருக்கும்!

ஏறியவர்: இங்கேயிருந்து பாத்தா தெரியலியே?

மூன்றாமவர்: அப்ப முன்னால போய்ப் பாரு!

ஏறியவர்: முன்னால போக முடியாது போலருக்கே! ஒரே இருட்டா இருக்கு. எதுவுமே தெரியல!

இரண்டாமவர்: அப்ப கண்டக்டரையே கேட்டுப் பாரு!

ஏறியவர்: கண்டக்டர் எங்கே இருப்பாரு?

முதலாமவர்: அவர் எங்கே வேணும்னாலும் இருப்பாரு!

ஏறியவர்: அவரை எப்படித் தேடறது?

இரண்டாமவர்: நீ இருந்த இடத்திலேயே இரு. அவரே உன்னைத் தேடி வருவாரு. எப்படியும் டிக்கட் கொடுக்கணும் இல்ல?

மூன்றாமவர்: அவரு வர மாட்டாரு. நீதான் அவரைத் தேடிப்  போகணும்!

ஏறியவர்: ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரிச் சொல்றீங்களே!

முதலாமவர்: நாங்க அப்படித்தான் சொல்லுவோம். நீதான் உனக்கு எது சரிங்கறதைத் தீர்மானிக்கணும்!

ஏறியவர்: ஆமாம், நீங்கள்ளாம்  டிக்கட் வாங்கிட்டீங்களா?

இரண்டாமவர்: ஏன்யா, நீதான் கண்டக்டரா? நீ எதுக்கு எங்களை டிக்கட் வாங்கிட்டீங்களான்னு கேக்கற?

ஏறியவர்: என்ன இது, ஒண்ணுமே புரியலையே! தலையைச் சுத்துது. ஏங்க, நான் பஸ்ல ஏறி இவ்வளவு நேரமாச்சே, எனக்கு யாராவது ஒக்கார எடம் கொடுக்க மாட்டீங்களா?

(மூவரும் பெரிதாகச் சிரிக்கிறார்கள்.)

ஏறியவர்: எதுக்காகச் சிரிக்கிறீங்க?

முதலாமவர்: ஏம்ப்பா, யாராவது ஒன்னைக் கூப்பிட்டு ஒக்கார எடம்  கொடுப்பாங்களா? நீயாதான் எடம் புடிச்சுக்கணும்!

மூன்றாமவர்: அழுத புள்ளதான் பால் குடிக்கும்!

இரண்டாமவர்:  கேளுங்கள் தரப்படும்!

ஏறியவர்:  அப்ப, எனக்கு ஒக்காரக் கொஞ்சம் எடம்  கொடுங்களேன், ப்ளீஸ்!

மூவரும் சேர்ந்து:  இங்கே இடமே இல்ல.

முதலாமவர்: வேற எங்கியாவது போ!

மூன்றாமவர்: நாங்களே இங்க நெருக்கமா ஒக்காந்துக்கிட்டிருக்கோமே, தெரியல?

இரண்டாமவர்:  இங்கே இன்னொரு ஆள் வேற வர வேண்டியிருக்கு.

ஏறியவர்:  வேற எங்கியாவது எடம் இருக்கா?

முதலாமவர்: போய்ப் பார்!

மூன்றாமவர்: முயற்சி திருவினையாக்கும்!

இரண்டாமவர்:  தேடுபவன் கண்டடைவான்!

காட்சி 2 
(பஸ்ஸில் கடைசியாக ஏறியவர் - இவரை அகரம் என்று அழைக்கலாம் - மேடைக்குள் நுழையும்போது பஸ்ஸில் சிலர் கீழே உட்கார்ந்திருக்கிறார்கள். இவர்களை இகரம், உகரம், மகரம், சிகரம் போன்ற பெயர்களால் அழைக்கலாம்.)

அகரம்: ஐயா! நீங்கள்ளாம் ஏன் இங்கே உக்காந்துக்கிட்டிருக்கீங்க?

இகரம்:  பின்னே வேற என்ன பண்ணச்  சொல்றே?

அகரம்:  ஏன் கீழே உக்காந்துக்கிட்டிருக்கீங்கன்னு கேட்டேன்.

உகரம்:  எங்களுக்கு சீட் கொடு. அங்க போயி உக்காந்துக்கறோம்!

அகரம்:  அப்பிடின்னா, உங்களுக்கு உக்கார சீட் இல்லாததாலதான் கீழே உக்காந்திருக்கீங்களா?

மகரம்: ஆமாம், பாத்தா தெரியல?

அகரம் (சுற்றுமுற்றும் பார்த்து விட்டு) :  அங்கல்லாம் நிறைய சீட் காலியா இருக்கற மாதிரி இருக்கே?

சிகரம்:  காலியாயிருக்குன்னு உனக்கு எப்படித் தெரியும்?

அகரம்:  அங்க யாரும் உக்காந்திருக்கலியே?

இகரம்:  யாரும் உக்காந்திருக்கலேன்னா காலியாயிருக்குன்னு அர்த்தமா??

அகரம்:  பின்னே?

உகரம்:  அதையெல்லாம் யாராவது ரிசர்வ் பண்ணியிருப்பாங்க!

சிகரம்:  இல்லேன்னா, ஒத்தருக்கே ரெண்டு மூணு சீட்டு இருக்கும்!

அகரம்:  அது எப்படி? இங்கே இத்தனை பேரு உக்கார இடமில்லாம இருக்கறப்ப, சில பேருக்கு மட்டும் ரெண்டு மூணு சீட்டா? இது என்ன அக்கிரமம்? இதை நீங்க தட்டிக் கேக்க வேண்டாமா?

மகரம்:  நீயேதான் தட்டிக் கேளேன் அவங்களை!

அகரம்:  நிச்சயமா தட்டிக் கேக்கத்தான் போறேன். மொதல்ல நான் கொஞ்சம் உக்காரணும். எனக்குக் கால் வலிக்குது. கொஞ்சம் நகர்ந்து எனக்கு இடம் விடறீங்களா?

இகரம்:  என்ன, நீ இங்கே உக்காரப் போறியா?

உகரம்:  அது அவ்வளவு சுலபம் இல்லப்பா!

மகரம்:  இங்கே எங்கே இடம் இருக்கு?

அகரம்:  அதுதான் இவ்வளவு இடம் இருக்கே!

சிகரம்:  இடம் இருந்தா, நீ வந்து உக்காந்துடறதா? அதெல்லாம் எங்க எடம்ப்பா!

அகரம்:  என்னது உங்க இடமா?  நீங்கள்ளாம் ஒக்காந்தது போக மீதி இருக்கிற இடத்தைத்தானே நான் கேக்கறேன்?

உகரம்:  அப்படில்லாம் உக்கார முடியாது!

இகரம்:  இதை வேற சில பேருக்காக நாங்க வச்சிருக்கோம்.

அகரம்:  இங்கேயும் ரிஸர்வேஷனா? அப்ப நான்  எங்கேதான் ஒக்காரறது? வேற எங்கே இடம் இருக்கு?

மகரம்:  படிக்கட்டில  கொஞ்சம் பேரு  உக்காந்திருக்காங்க பாரு, அங்கே போய்க் கேட்டுப் பாரு!

அகரம்: படிக்கட்டில பயணம் பண்றது சட்ட விரோதமாச்சே!

இகரம்: உனக்கு சட்டத்தை மீறாம இருக்கறது முக்கியமா, ஒக்காந்து பயணம் செய்யறது முக்கியமான்னு தீர்மானம் பண்ணிக்க!

அகரம்:  படிக்கட்டில உக்கார்ந்தா, பஸ்ஸில ஏறுகிறவங்களுக்கும், பஸ்ஸிலிருந்து இறங்கறவங்களுக்கும் இடைஞ்சலா இருக்குமே!

உகரம்:  நீதான் பஸ்ஸில ஏறியாச்சே, இனிமே பஸ்ஸில ஏறப்போறவங்களைப் பத்தி உனக்கு ஏன் கவலை?

சிகரம்:  நீ படிக்கட்டில் உட்கார்ந்தா உனக்கு இறங்கறதுக்கு வசதியா இருக்குமே! ஆமாம், நீ எங்கே போறே?

அகரம்:  அதுதான் எனக்கும் புரியல. இந்த பஸ்ல ஏன் ஏறினோம்னு கூட இருக்கு!

இகரம்:  எல்லோருக்கும் அப்படித்தான்! நாங்க மட்டும் இஷ்டப்பட்டா பஸ்ல ஏறினோம்?

சிகரம்:  நீ போய்ப் படிக்கட்டிலேயாவது ஒக்கார எடம் கிடைக்குமான்னு பாரு. பாவம் ரொம்ப  நேரமா நின்னுக்கிட்டே இருக்கே போலிருக்கே!

அகரம்:  படிக்கட்டிலேயும் இடம் கிடைக்காட்டா என்ன செய்யறது?

மகரம்:  படிக்கட்டிலிருந்து குதிச்சிட வேண்டியதுதான். சில பேரு அப்படித்தான் பண்றாங்க!

உகரம்:  அடுத்த ஸ்டாப்பிங் வர வரை கூடப் பொறுக்க முடியாதவங்க!

அகரம்:  ஏன் அப்படிச் செய்யணும்? உள்ளே இவ்வளவு இடம் காலியா இருக்கறப்ப ஏன் சில பேர் தரையிலேயும், படிக்கட்டிலேயும் உட்கார்ந்து பயணம் செய்யணும்? இதை எதிர்த்து நான் போராடப் போறேன்.

(அங்கே இப்போது இன்னொருவர் வருகிறார். அவரைப் 'பச்சை' என்று அழைக்கலாம்)

பச்சை:  சபாஷ் தம்பி! உன்னைப் போன்ற எழுச்சி மனப்பான்மை கொண்டவர்கள்தான் நமக்குத் தேவை! என்னுடன் வா. நாம் ஒரு புதிய அமைப்பை உருவாக்குவோம்!

(தரையில் உட்கார்ந்திருந்தவர்கள் அவசரமாக எழுந்து பச்சைக்கு வணக்கம் தெரிவித்து விட்டு, சில பேர் கை கூப்பிக்கொண்டும், சில பேர்  கை  கட்டிக் கொண்டும் நிற்கிறார்கள்.)

அகரம்:  ஐயா! நீங்க யாரு?

உகரம்:  ஏம்ப்பா, இவரையா யாருன்னு கேக்கறே? இவரை உனக்குத் தெரியாது?

இகரம்:  இவர்தாம்ப்பா தலைவரு!

சிகரம்:  நம்ம தலைவரு!

அகரம்:  ஓ! அப்படியா? இவங்களுக்கு நீதி கிடைக்க நீங்களாவது உதவி செய்யக் கூடாது?

பச்சை: தம்பி! என்ன இப்படிக் கேட்டுட்டே? நான் மூச்சுக்காத்தா  சுவாசிக்கிறதே இவங்களுடைய பிரச்னையைத்தான்.  நான் வெளியே விடுகிற மூச்சு இவங்களோட அவல நிலையை நினைச்சு நான் விடுகிற பெருமூச்சுதான்!

அகரம்: இவர்களுக்காக என்ன செய்யப் போறீங்க?

பச்சை:  என்ன செய்யப் போறேனா? இவர்களுக்காக நான் செஞ்சிருக்கிற தியாகங்களும், தீரச்செயல்களும் என்னென்னன்னு இவங்களையே கேட்டுப்  பாரு!

(கை கூப்பிக்கொண்டும், கை கட்டிக்கொண்டும் நிற்பவர்கள் தலையாட்டுகிறார்கள்.)

பச்சை:  தனி ஒருவனுக்கு இருக்கை  இல்லையெனில் இந்த பஸ்ஸையே கொளுத்திடுவோம்கிறதுதான் நம்ம தாரக மந்திரம்! வா, போகலாம்!

அகரம்:  எங்கே?

காட்சி 3 
(நான்கு பேர் உட்காரக் கூடிய ஒரு இருக்கை. அது காலியாக இருக்கிறது. அகரமும், பச்சையும் அங்கே வருகிறார்கள்.)

பச்சை:  வா தம்பி, ஒக்காரு!

அகரம்:  இது யாரோட சீட்டு?

பச்சை:  என்னோடதுதான்!

அகரம்:  ஒங்களோடதா? நாலு பேரு உட்காருகிற சீட்டாச்சே இது?  வேற யாராவது இருக்காங்களா?

பச்சை:  இல்லை. இது என்னோட சீட்டு மட்டும்தான். ஒக்காரு.

அகரம்:  என்ன சார் இது? ஒக்கார எடம் இல்லாதவங்களுக்காகப் போராடறதா சொல்லிட்டு நீங்களே இவ்வளவு பெரிய இடத்தை வச்சுக்கிட்டிருக்கீங்களே?

பச்சை:  தம்பி! புரியாம பேசாதே! சுவரை வச்சுக்கிட்டுத்தான் சித்திரம் வரையணும். அடிப்படை வலுவாக இல்லாத எந்த அமைப்பும் டீசல் இல்லாத பஸ் மாதிரின்னு என்னோட அரசியல் ஆசான் சொல்லியிருக்காரு. நமக்கு அடிப்படை வசதிகளை அமைச்சுக்காட்டா, மத்தவங்களுக்காக நம்மால எப்படிப் போராட முடியும்? உன்னை மாதிரி துடிப்புள்ள நண்பர்கள் வரப்ப அவங்களை ஒக்காத்தி வச்சுப் பேச இடம் வேண்டாமா? நெருக்கடியில் பயணம் செஞ்சுக்கிட்டு பிரச்னைகளைப் பத்தி சிந்திக்கக் கூட முடியாது. அப்புறம் எங்கே பிரச்னைகளைத் தீர்க்கிறது? நான் சௌகரியமாப் பயணம் செஞ்சாத்தான் மத்தவங்க பிரச்னையைத் தீர்க்கிற வலுவும் மனநிலையும் எனக்குக் கிடைக்கும். புரியுதா?

அகரம்:  புரிய ஆரம்பிச்சிருக்கு! (சுற்றுமுற்றும் பார்த்தபடி) ஆமாம், இந்த பஸ்ஸில மொத்தம் எத்தனை பேரு உக்காரலாம்?

பச்சை:  அறுபது பேர்.

அகரம்:  எத்தனை பேர் உக்காந்திருக்காங்க?

பச்சை:  இருபது பேர்.

அகரம்:  அப்படீன்னா இன்னும் நாற்பது பேர் ஒக்கார எடம் இருக்கே?

பச்சை:  ஆனா அறுபதுபேர் சீட்டு இல்லாம நின்னுக்கிட்டிருக்காங்களே? இன்னும் கூட சில பேரு பஸ்ல ஏறுவாங்க!.

அகரம்:  ஆனா இன்னும் நாற்பது பேர் ஒக்காரலாமே?

பச்சை:  மீதி இருபது பேரு என்ன பண்ணுவாங்க?

அகரம்:  அப்ப உட்கார்ந்திருக்கிறவங்களும் எழுந்து நிக்கட்டும். எல்லோருமே நின்னுக்கிட்டுப் பயணம் பண்ணுவோம்!

பச்சை:  இது கூட நல்லாத்தான் இருக்கு! நான் இந்த யோசனையைச் சொன்னா, நின்னுக்கிட்டிருக்கிற நாற்பது பேரும் என்னை ஆதரிப்பாங்க.

அகரம்:  ஆனா உட்கார்ந்துக்கிட்டிருக்கிற இருபது  பேரும் உங்களை எதிர்ப்பாங்களே?

பச்சை: எதிர்த்தா என்ன? அறுபது பேர்ல நாற்பது பேர் நம்ம பக்கம். இருபது பேர் எதிர்ப்பக்கம். பெரும்பான்மை நமக்குத்தான்.

அகரம்:  அந்த இருபது பேர்ல நீங்களும் ஒருத்தர்ங்கறதை  மறந்துட்டீங்களா?

பச்சை:  ஓ! (தனக்குள்)  அப்ப நானும் இல்ல நிக்க வேண்டியிருக்கும்! (வெளியில்) ஆங்.. ஆமாம்...இல்ல..  நீ சொல்றது நல்ல யோசனைதான். ஆனா நடைமுறைக்கு ஒத்து வராது.

அகரம்:  ஏன்?

பச்சை:  நம்ம நோக்கமெல்லாம் நிற்கிறவங்களை உட்கார வைக்கறதா இருக்கணுமே தவிர, உட்கார்ந்திருக்கிறவங்களை நிற்க வைக்கிறதா இருக்கக் கூடாது. இது நெகட்டிவ் அப்ரோச். எதிர்மறையான சிந்தனை!

அகரம்:  கொஞ்ச நேரம் முன்னால நீங்களே இது நல்ல யோசனைன்னு சொன்னீங்களே?

பச்சை:  'எதிர்மறை எண்ணங்கள் கதிர்வீச்சைப் போல் அவ்வப்போது நம்மை வந்து தாக்கும். வெள்ளமென வரும் இத்தகைய எண்ணங்களை நாம்தான் திசை திருப்பி ஆக்கப்பணி என்னும் வயல்களில் பாய்ச்சி வளம் சேர்க்க வேண்டும்' என்று தீர்க்கதரிசியான என் அரசியல் ஆசான் அன்றே சொல்லி வைத்திருக்கிறார்.

அகரம்:  அப்ப உங்களோட ஆக்கபூர்வமான சிந்தனைதான் என்ன?

பச்சை:  உட்கார இடம் கிடைக்காதவர்கள் நீதி கேட்டுப் போராட்டம் நடத்த வேண்டியதுதான்!

அகரம்:  எவ்வளவு காலம் போராடறது?

பச்சை: வெற்றி கிடைக்கும் வரை!

அகரம்:  அதுக்குள்ளே பயணமே முடிஞ்சுட்டா?

பச்சை:  அப்புறம் போராட்டத்துக்கு அவசியமே இருக்காது. (பார்வையாளர்களைப்  பார்த்து) அநேகமா அப்படித்தான் நடக்கும்னு நினைக்கிறேன்.

காட்சி 4
(மேடையில் அகரம் தனியே நிற்கிறார். அப்போது தோளில் பையுடன் ஒருவர் அங்கே வருகிறார். அவரை மஞ்சள் என்று அழைக்கலாம்.)

மஞ்சள்:  ஏன்யா, நீ எங்கே போகணும்?

அகரம்:  நீங்கதான் இந்த பஸ்ஸோட கண்டக்டரா?

மஞ்சள்:  ஆமாம். காசை எடு. எங்கே ஏறினே?

அகரம்:  நான் ஏறினப்ப உங்களைத் தேடினேன். உங்களைக் காணோம்.

மஞ்சள்:  அதைப்பத்தி இப்ப என்ன? காசைக் கொடுத்து டிக்கட்டை வாங்கு முதல்ல.

அகரம்:  எங்கே போறதுன்னே இன்னும் தெரியலியே!

மஞ்சள்:  அப்புறம் ஏன்யா பஸ்ஸில ஏறின? எங்கியாவது ஒரு இடத்துக்கு டிக்கட் வாங்கிக்க.

அகரம்:  ஆமாம், நீதான் கண்டக்டர்னு நான் எப்படி நம்பறது? 

மஞ்சள்:  நான்தானே டிக்கட் கேக்கறேன்? கண்டக்டர்தானே டிக்கட் கேப்பான்!

அகரம்: அப்ப டிக்கட் கேக்கறவங்கள்ளாம் கண்டக்டரா?

மஞ்சள்:  ஏன் வேற யாராவது உன்கிட்ட டிக்கட் கேட்டாங்களா என்ன?

அகரம்:  நீ இப்படிக் கேக்கறதைப் பாத்தா, நீதான் கண்டக்டரான்னே எனக்கு சந்தேகமா இருக்கு!

மஞ்சள்:  சந்தேகப்படாதேப்பா! மனுஷனுக்கு நம்பிக்கை வேணும். என்னைப் பாத்தா கண்டக்டர்னு தெரியல?

அகரம்:  தெரியலியே!

மஞ்சள்: இதோ பாரு. டிக்கட் எல்லாம் வச்சிருக்கேன். 

அகரம்:  சரி, நீதான் கண்டக்டர்னா ஒக்கார எனக்கு ஒரு இடம் பிடிச்சுத் தர முடியுமா உன்னால?

மஞ்சள்:  என்ன ஆளுய்யா நீ? டிக்கட் குடுக்கறதுதான் என் வேலை. எங்கியாவது எடம் இருந்தா போய் உக்காந்துக்க. இல்லாட்டி நின்னுக்கிட்டே வா. இல்லாட்டி பஸ்ஸிலிருந்து இறங்கிடு.

(அப்போது அங்கே இன்னொருவர் வருகிறார். அவரைக் கருப்பு என்று அழைக்கலாம்,)

கருப்பு:  என்னய்யா தகராறு இங்கே?

மஞ்சள்:  இந்த ஆளு பஸ்ஸில ஏறிட்டு டிக்கட் வாங்க மாட்டேன்னு தகராறு பண்றாரு.

அகரம்:  நான் தகராறு ஒண்ணும் பண்ணல. டிக்கட் வாங்கினா எனக்கு உட்கார இடம் கொடுக்கணும்னுதான் கேட்டேன்.

மஞ்சள்: இப்படித்தான் தகராறு பண்றாரு. 

கருப்பு:  சரி, சரி. நான் பாத்துக்கறேன். நீ போ!

(மஞ்சள் போகிறார்.)

கருப்பு:  ஏம்ப்பா பஸ்ஸில ஏறிட்டு டிக்கட் வாங்க மாட்டேன்னா எப்படி?

அகரம்:  நீங்க யாரு சார்? இந்த பஸ்ஸோட ஓனரா?

கருப்பு (பெரிதாகச் சிரித்து விட்டு):  ஓனரா? நீ என்னப்பா பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சொல்றே! ஓனர்னு ஒருத்தர் இருக்காறாங்கறதே சந்தேகம்தான்! அப்படி ஒருத்தர் இருக்காருன்னு சில பேரு சொல்றாங்க.  சில பேரு அதை நம்பறாங்க. சில பேரு நம்ப மட்டேங்கறாங்க.

அகரம்:  அப்ப நீங்க யாரு? நீங்க சொன்னதுமே அந்த ஆளு போயிட்டாரே!

கருப்பு:  அதுதான் நான்! நான் இந்த பஸ்ஸுக்குள்ளே ஒரு செல்வாக்குள்ள ஆளு.

அகரம்:  ஒங்க செல்வாக்கை  உபயோகிச்சு நீங்க எனக்கு ஒரு சீட் வாங்கித்தர முடியுமா? ரொம்ப நேரமா நிக்கறேன் சார். காலெல்லாம் வலிக்குது!

கருப்பு:  உன் காரியத்திலேயே குறியா இருக்கியே!  நீ இன்னும் டிக்கட் கூட வாங்கலே!

அகரம்:  வாங்கறேன் சார். எனக்கு உக்கார ஒரு எடம்  பிடிச்சுக் கொடுங்க!

கருப்பு:  டிக்கட் வாங்கறியா? உன்னால அது முடியுமா?

அகரம்:  ஏன் சார்?

கருப்பு:  டிக்கட் என்ன விலை தெரியுமா உனக்கு?

அகரம்:  என்ன விலை?

கருப்பு (கைகளை விரித்துக் காட்டி):  நூறு ரூபா!

அகரம்:  என்னது ஒரு டிக்கட் நூறு ரூபாயா?

கருப்பு:  ஆமாம்!

அகரம்:  இந்த பஸ்ஸில இருக்கிறவங்க எல்லாரும் நூறு ரூபா கொடுத்து டிக்கட் வாங்கி இருக்காங்களா?

கருப்பு:  அப்படியெல்லாம் பொதுப்படையாகக் கேட்கக் கூடாது தம்பி! இந்த பஸ் கிளம்பின இடத்தில ஏறினவங்க டிக்கட்டே வாங்கியிருக்க மாட்டாங்க. ஏன்னா, அப்பல்லாம் டிக்கட்டே கிடையாது. அப்புறம் பஸ்ஸில கூட்டம் ஏற ஏற  டிக்கட் வாங்கணும்னு ஒரு முறை வந்துச்சு. டிக்கட்டோட விலை ஆரம்பத்திலே  ஒரு பைசா, ரெண்டு பைசான்னு இருந்தது. அப்புறம் ஒரு ரூபா, ரெண்டு ரூபா, பத்து ரூபான்னு ஏறி இப்ப நூறு ரூபா ஆயிருக்கு.

அகரம்:  அக்கிரமமா இருக்கே! நூறு ரூபா கொடுத்து எத்தனை பேரால டிக்கட் வாங்க முடியும்?

கருப்பு:  வாங்க முடிஞ்சவங்க வாங்குவாங்க. முடியாதவங்க வித்தவுட்ல வருவாங்க. யாராவது டிக்கட் கேட்டா பயந்து போய் பஸ்ஸிலிருந்து குதிச்சுடுவாங்க. அதோட அவங்க பயணமே முடிஞ்சு போயிடும். இன்னும் சில பேரு இருக்காங்க. அவங்க கிட்ட யாராவது டிக்கட் கேட்டா அவங்க கத்தியைக் காட்டுவாங்க. கண்டக்டர், டிக்கட் செக்கர் எல்லாருமே அவங்ககிட்ட பயந்துகிட்டு அவங்ககிட்டயே வர மாட்டாங்க. இன்னும் சில பேரு கெஞ்சிக் கூத்தாடி கண்டக்டர் அவங்களைக் கீழ இறக்கி விடற வரையிலும் கொஞ்ச தூரமாவது பயணம் பண்ணுவாங்க.

அகரம்:  இந்த மாதிரி எதையுமே செய்ய முடியாதவங்க அல்லது செய்ய விரும்பாதவங்க?

கருப்பு:  அவங்களுக்காகத்தான் நான் இருக்கேன்!

அகரம்:  நீங்க எப்படி உதவுவீங்க?

கருப்பு :  நீ டிக்கட்டே வாங்க வேண்டாம். எங்கிட்ட பத்து ரூபா கொடுத்துடு. உன்கிட்ட யாரும் டிக்கட் கேக்க மாட்டாங்க..

அகரம்:  ஒங்ககிட்ட  நான்  எதுக்குப் பணம் கொடுக்கணும்? நீங்க யாரு?

கருப்பு:  நான் யாரா இருந்தா உனக்கென்ன? நான் சொன்னதும் கண்டக்டர் போயிட்டதை நீ பாத்த இல்ல?

அகரம்:  எனக்கு ஒரே குழப்பமா இருக்கு!

கருப்பு:  நான்தான் இந்த பஸ்ஸோட ஒனர்னே வச்சுக்கயேன்!

(அப்போது தொப்பி அணிந்த ஒருவர் இன்னொருவரைப் பிடித்து அடித்து இழுத்துக்கொண்டு வருகிறார். அடிப்பவரை சிவப்பு என்றும் அடிபடுபவரை வெள்ளை என்றும் அழைப்போம்.)

அகரம் (திடுக்கிட்டு):  ஏன் இப்படி இவரைப்போட்டு அடிக்கிறீங்க?

சிவப்பு:  இவன் டிக்கட் வாங்காம பிரயாணம் பண்றான். அதோட, இன்னொருத்தர் சீட்ல உட்கார்ந்து வேற வந்திருக்கான்.

(அகரம் பயத்துடன் கருப்பைப் பார்க்க, அவர் சிரிக்கிறார்.)

அகரம்:  அதுக்காக இப்படிப் போட்டு அடிப்பீங்களா?

சிவப்பு:  வேற என்ன செய்யச் சொல்றே? அதுக்காகத்தானே எனக்கு சம்பளம் கொடுத்து வேலைக்கு வச்சிருக்காங்க? தப்புப் பண்ணினா தண்டனை கொடுக்க வேண்டாமா? இந்த அடியெல்லாம் ஒரு ஆரம்பம்தான். இதுக்கு மேலே அவனுக்கு தண்டனையும் உண்டு.

அகரம்:  என்ன தண்டனை?

சிவப்பு:  அதோ இருக்கே அந்தப் பெரிய பொட்டி அதுக்குள்ளே இவனைப் போட்டுப் பூட்டிடுவோம்!

அகரம்:  குத்தம் செஞ்சவங்களை உள்ளே போட்டுப் பூட்டினீங்கன்னா அவங்களால மூச்சுக்கூட விட முடியாதே?

சிவப்பு:  அதுக்கெல்லாம் பொட்டியில ஓட்டை போட்டு காத்துப் போக வழி பண்ணி இருக்காங்க. அதைத் தவிர அப்பப்ப அவங்களைக் கொஞ்ச நேரம் வெளியில எடுத்து விடுவோம்.

அகரம்:  குத்தம் செய்யறவங்களைப் பொட்டிக்குள்ள வச்சுப் பூட்டறதனால என்ன பயன்?

சிவப்பு:  அப்பதானே குத்தம் செய்யணும்னு நினைக்கிறவங்களுக்கு ஒரு பயம் இருக்கும்? அதோட இவனை மாதிரி ஆளுங்களை வெளிய விட்டா, இவங்க மத்தவங்க சீட்டையெல்லாம் திருடிடுவாங்க. சீட்டில் உக்காந்து போற பயணிகளுக்குப் பாதுகாப்பே இல்லாம போயிடும். அதனாலதான் இவனை மாதிரி ஆளுங்களையெல்லாம் நாங்க பெட்டிக்குள்ள பூட்டி வச்சு பஸ்ஸுக்குள்ள சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கிறோம்.

(சிவப்பு வெள்ளையைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளிக்கொண்டு போகிறார்)

அகரம்:  வேடிக்கையைப் பாத்தீங்களா? ஒத்தன் டிக்கட் வாங்கலைங்கறதுக்காக அவனைப் பாதுகாப்பா ஒரு பெட்டிக்குள்ள வச்சு அவன் போக வேண்டிய இடத்துக்கு அவனை பத்திரமா அழைச்சுக்கிட்டுப் போறாங்க! வேற ஒருத்தரோட சீட்டில் உக்காந்துக்கிட்டாங்கறதுக்காக அவனுக்குத் தனியா இடம் கொடுத்துப் பாதுகாப்பா அழைச்சிக்கிட்டுப் போறாங்க!

கருப்பு:  அப்ப நீயும் அவனை மாதிரியே டிக்கட் வாங்காம பயணம் பண்றியா?

அகரம்:  அய்யய்யோ! வேணாங்க. இந்தாங்க பத்து ரூபா. ஆனா ஒரு வேண்டுகோள்.  எனக்கு உட்கார ஒரு இடம் வேணும்.

கருப்பு:  அதுக்கு நீ இன்னொரு பத்து ரூபா கொடுக்கணுமே!

அகரம்:  இந்தாங்க!.

கருப்பு:  வா! உனக்கு ஒரு சீட்டு ஏற்பாடு பண்ணித் தரேன்..

காட்சி 5
(அகரம் கருப்புடன் மேடையில் பிரவேசிக்கும்போது, மேடையில் நால்வர் அமரும் இருக்கை இருக்கிறது. அதில் ஒருவர் எங்கோ பார்த்தபடி அமர்ந்திருக்கிறார்.)

கருப்பு:  இதோ, இதான் உன் சீட். இங்க உக்காரு!

அகரம்:  தாங்க்ஸ் சார்!

(பச்சை போக யத்தனிக்கிறார்.)

அகரம் (எழுந்து):  சார்! ஒரு நிமிஷம்.

கருப்பு:  என்னப்பா?

அகரம்:  இல்லே..வந்து.. பணம் கொடுத்தேன். நீங்க டிக்கட் எதுவும் கொடுக்கலியே!

கருப்பு:  டிக்கட்டா? எதுக்கு?

அகரம்:  இல்லே! இப்பத்தான் ஒரு ஆளை அவர்கிட்ட டிக்கட் இல்லைன்னு சொல்லி இழுத்துக்கிட்டுப் போனாங்க...அது மாதிரி எனக்கும் ஆயிடக் கூடாதில்ல?

கருப்பு:  ஒங்கிட்ட யாரும் டிக்கட் கேக்க மாட்டாங்க. அப்படி யாராவது கேட்டா என்னைக் கூப்பிடு. நான் இந்த பஸ்ஸுக்குள்ளேயேதானே இருக்கேன்? அதோ பாரு. அங்கதான் நான் உக்காந்திருப்பேன்.

அகரம்:  இருட்டா இருக்கே, அங்கியா?

கருப்பு:  இருட்டா இருந்தா என்ன? ஒரு குரல் கொடு. நான் வந்துடுவேன்!

அகரம்:  ஒருவேளை நீங்க எனக்கு முன்னாலேயே இறங்கிப் போயிட்டா?

கருப்பு (சிரித்து):  இந்த பஸ்ல கடைசி வரை நான் இருப்பேன். ஏன்னா என்னோட சேவை எல்லோருக்கும் தேவையாச்சே?

அகரம்:  ஒங்களை எப்படிக் கூப்பிடறது? ஒங்க பேர் கூட எனக்குத் தெரியாதே!

கருப்பு:  ம்ம்ம்... மாமான்னு கூப்பிடு. வேண்டாம். ஒரு மாதிரியா இருக்குல்ல? அங்க்கிள்னு  கூப்பிடு! எங்கே இருந்தாலும் ஒடி வந்துடுவேன்.

(போகிறார்)

(சில நொடிகள் விளக்கு அணைந்து மீண்டும் எரியும்போது அகரம் இருக்கையில் அமர்ந்திருக்கிறான். அவன் பக்கத்தில் உட்கார்ந்திருந்தவர் - இத்தனை நேரமும் வேறு எங்கோ வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தவர் - இப்போது அவனை நோக்கித் திரும்புகிறார். அவர் பெயரை நீலம் என்று வைத்துக்கொள்ளலாம்.)

நீலம்: தம்பி, எங்கே போறே?

அகரம்:  (தனக்குள்) மறுபடியும் இதே கேள்வியா? (உரக்க) எங்கேயோ போறேன்! இந்த பஸ் எங்கே போகுதுன்னே யாருக்கும் தெரியலே! நான் எங்கே போனா என்ன?

நீலம்: நீ எங்கே வேணா போயிக்க. ஆனா இப்ப கொஞ்சம் எழுந்திருக்கிறாயா?நான் காலை நீட்டிக்கணும்.

அகரம்:  என்னது? நீங்க காலை நீட்டிக்கறதுக்காக நான் எழுந்து நிக்கணுமா? ஏன் நீங்க எழுந்திருங்களேன்! நான் காலை நீட்டி உக்காந்துக்கறேன்!

(இப்போது பச்சை அங்கே வருகிறார்.)

பச்சை: என்னப்பா! ஒரு வழியா உட்கார எடம் பிடிச்சுட்டியா? சாமர்த்தியசாலிதான்ப்பா நீ!

அகரம்:  வாங்க! நல்ல சமயத்துலதான் வந்திருக்கீங்க. இந்த ஆளு என் சீட்டில காலை நீட்டிக்கணுமாம். அதுக்காக என்னை எழுந்து நிக்கச் சொல்றாரு! நீங்க தட்டிக் கேட்க வேண்டிய இன்னொரு அநீதி இது!

பச்சை: அப்படியா? (நீலத்திடம்) ஏன் அப்படிச் சொன்னீங்க?

நீலம் (புன்சிரிப்புடன்):  ஏன் அதுல என்ன தப்பு?

பச்சை: என்ன தப்பா? நீங்க காலை நீட்டிக்கணுங்கறதுக்காக இன்னொரு மனுஷன் தன்னோட சீட்டையே இழக்கணும்னா அது எப்படிப்பட்ட அநீதி? தனி ஒருவனுக்கு சீட் இல்லையெனில்....

நீலம்:  நிறுத்துப்பா! இதையெல்லாம் நிறையக்  கேட்டுட்டேன். நான் யாருன்னு தெரிஞ்சா எங்கிட்ட நீ இப்படிப் பேச மாட்டே!

பச்சை: யாரு நீங்க?

நீலம்:  அதுக்கு முன்னால நீ யாருன்னு சொல்லு!

பச்சை: நான் யாரா?  என்னைத் தெரியாதவங்க இந்த பஸ்லியே இருக்க முடியாதே!

நீலம்:  நீ யாருன்னே உன்னால சொல்ல முடியல! நீ யாருங்கறது உனக்கே தெரியாதப்போ, நீ யாருங்கறது மத்தவங்களுக்குத் தெரிஞ்சு என்ன பிரயோஜனம்?

பச்சை: சாமி!

நீலம்:  ஆங்! இப்பதான் உனக்கு நான் யாருன்னு புரிஞ்சிருக்கு! நீ இப்ப கூப்பிட்டியே, அதுதான் நான்! சாமி...கடவுள்...

அகரம்: இல்லை. நீங்க  ஒரு ஏமாத்துப் பேர்வழி!

பச்சை: ஆமாம். 'கடவுள்ங்கறது ஒரு ஏமாத்துக்காரன் மனதில் உருவான கற்பனை' என்று என்னோட ஆசான் சொல்லியிருக்காரு!

அகரம்:  இல்லை. கடவுள் உண்டு. ஆனா அது இவர் இல்லை.

நீலம்:  நீங்க ரெண்டு பேருமே முட்டாள்கள். உங்களையெல்லாம் நல்லா மூளைச்சலவை பண்ணியிருக்காங்க.  நாம ஒவ்வொத்தருமே கடவுள்தான். இதை யார் புரிஞ்சுக்கறாங்களோ அவங்களைத்தான் கடவுள்னு மத்தவங்க எல்லாம் ஏத்துக்கணும். நீங்க ரெண்டு பேரும் இதைப்  புரிஞ்சுக்கலை. ஆனா நான் புரிஞ்சுக்கிட்டிருக்கேன். அதனால நான்தான் கடவுள்!

அகரம்: கடவுள்ங்கறவர் இந்த பஸ்ஸுக்குள்ள இல்ல. அவர் எங்கேயோ இருந்துக்கிட்டு இந்த பஸ்ஸை இயக்கறாரு.

பச்சை:  முட்டாள்தனம்! இந்த பஸ்ஸை இயக்கறது அதோட எஞ்சின். எஞ்சினை இயக்கறது அதுக்குள்ளே இருக்கற எண்ணெய். பஸ்ஸை இயக்குகிறவர் டிரைவர்.  வெளியிலிருந்து ஒத்தர் இந்த பஸ்ஸை எப்படி இயக்க முடியும்?

அகரம்:  எஞ்சினையும் டிரைவரையும் இயங்க வைக்கிறது யாரு?

நீலம்:  நான்தான்!

அகரம், பச்சை இருவரும் ஒரே குரலில்: என்னது நீங்களா?


நீலம்:  எனக்காகத்தானே  இந்த பஸ் இயங்குது?  எனக்காக, உனக்காக, நமக்காக. நாம எல்லாரும் இறங்கிப் போயிட்டா இந்த பஸ் இயங்குமா? இந்த பஸ்ஸு க்குள்ள  இருந்துக்கிட்டு அதை இயக்கறது நாமதான். இந்த ஞானம் உங்களுக்கு வரலே. ஞானம் வந்த நான்தான் கடவுள்!

(அகரம், பச்சை இருவரும் சில வினாடிகள் மௌனமாக யோசிக்கிறார்கள்.)

பச்சை:  நீங்க எங்கே போறீங்க?

நீலம்:  நான் எங்கேயும் போகலே ! ஒரே இடத்திலதான் இருக்கேன். இந்த பஸ்தான் போகுது.

பச்சை (நீலத்தின் அருகில் வந்து அவர் காதில்): சாமி! நீங்க கடவுள்னு நான் ஏத்துக்கறேன். இந்த பஸ்ல இருக்கறவங்க எல்லோரும் எனக்குக் கட்டுப்பட நீங்கதான் உதவணும்!


நீலம்:  அப்ப உனக்குக் கடவுள் நம்பிக்கை வந்துடுச்சா?

பச்சை:  நான் கடவுளை நம்பறதுங்கறது கடவுள் என்னை நம்பறதைப்  பொறுத்துத்தான்! நான் என்ன செய்யணும்? சொல்லுங்க!

நீலம்:  இவனை எழுந்து போகச் சொல்லு. எனக்குத் தனிமை வேணும். நிறைய இடம் வேணும். இந்தப் பகுதி முழுக்க என்னோடது. இங்க யாரும் வரக்கூடாது.

பச்சை:  (தனக்குள்) ஒருத்தருக்கு இவ்வளவு இடமா? (வெளியில்) சாமி! இவன் பாவம். ரொம்ப நேரம் நின்னுக்கிட்டே வந்திருக்கான். இப்பதான் இவனுக்கு உக்கார இடம் கிடைச்சிருக்கு. அவன் பாட்டுக்கு ஒரு ஓரமா உக்காந்துக்கிட்டு இருக்கட்டுமே!

நீலம்:  ஒன்னோட சீட்ல நிறைய இடம் இருக்கே! அங்கே இவனை உட்கார வைக்கலாமே!

பச்சை:  சரி சரி. (அகரத்திடம்) இங்க பாருப்பா! இது சாமியோட இடம். நீ வேற எங்கியாவது போ.

அகரம்:  நான் எதுக்குப் போகணும்? இது என்னோட எடம்!

பச்சை:  இது சாமியோட இடம்.

அகரம்:  அவருதான் இங்க உக்காந்திருக்காரே? இது நாலு பேர் உட்காருகிற இடம். நான் ஒரு ஓரமா உக்காந்திருக்கேன்?  மீதி மூணு சீட்டையும் அவர்தான் ஆக்கிரமிச்சுக்கிட்டிருக்காரு. என் இடத்தையும் அவர் ஏன் கேக்கறாரு?

பச்சை:  மரியாதையாச் சொன்னா போக மாட்டே?

அகரம்:  நான் எங்கே போறது? பணம் கொடுத்து இந்த இடத்தை வாங்கியிருக்கேன்.

பச்சை:  பணம் கொடுத்தியா? யாருகிட்ட? அது இருக்கட்டும். உன்கிட்ட டிக்கட் இருக்கா முதல்ல? ஏன் முழிக்கறே? டிக்கட் இல்லாம பிரயாணம் பண்ணிக்கிட்டு, தகராறா பண்றே?

அகரம்:  என்கிட்டே டிக்கட் கேட்க நீங்க யாரு? உங்ககிட்ட டிக்கட் இருக்கா? இந்தப் போலிக் கடவுள்கிட்ட டிக்கட் இருக்கா?

நீலம்: இவன் ரொம்ப ஆபத்தானவன். இவனை மொதல்ல அப்புறப்படுத்து!

பச்சை:  டேய்! மரியாதையா இங்கேயிருந்து போறியா... இல்லை..?

அகரம்:  ஐயோ! என்ன கொடுமை இது? நான் அவரைக் கூப்பிடுறேன். மாமா.....இல்லை..அங்க்கிள்...

பச்சை:  யாருடா அது அங்க்கிள்?

அகரம்:  அவருதான் எனக்கு இங்க இடம் பிடிச்சுக் கொடுத்தாரு.

பச்சை: ஓ! அவனா? அவன் ஏன் வரப்போறான் இப்ப?

அகரம்:  குரல் கொடுத்தா வருவேன்னாரே?

பச்சை: என் குரலைக் கேட்டதும் எங்கியாவது ஓடியிருப்பான்!

அகரம்:  இல்ல. அவரு இங்கேதான் இருப்பாரு. அங்க்கிள் ...அங்க்கிள்!

(அழைத்துக்கொண்டே போகிறான். அவன் திரையிலிருந்து மறைந்த சில வினாடிகளில் 'டமால்' என்று ஒரு சத்தம் கேட்கிறது.)

பச்சை:  என்ன ஆச்சு?

நீலம்:  அவன் பஸ்ஸிலிருந்து கீழே விழுந்திருப்பான்.

பச்சை:  அடப்பாவமே!

நீலம்: இதில பாவப்படறதுக்கு என்ன இருக்கு? எல்லோரும் எங்கேயாவது இறங்க வேண்டியதுதானே? காலால இறங்காம அவன் உடம்பால் இறங்கியிருக்கான். அவ்வளவுதான்! சில பேரு நிதானமா இறங்குவாங்க. சில பேரு வேகமா இறங்குவாங்க. சில பேரு தடுமாறிக்கிட்டே இறங்குவாங்க. சில பேரு இவனை மாதிரி விழுவாங்க. சில பேரு வேணும்னே குதிப்பாங்க. சில பேரை யாராவது புடிச்சுத் தள்ளி விடுவாங்க. ஆகக்கூடி எல்லோருமே ஏதோ ஒரு சமயத்தில பஸ்ஸிலிருந்து இறங்கித்தான் ஆகணும்!

பச்சை:  நாம எப்ப இறங்கப் போறோம்?

நீலம்:  சபாஷ்! உனக்கும் ஞானம் வர ஆரம்பிச்சிடுச்சே!

காட்சி 6
(கீழே விழுந்து கிடக்கும் அகரத்தின் மீது வெளிச்சம் விழுகிறது. அகரம் மெல்ல எழுந்திருக்கிறான்.)

அகரம்:  எனக்கு என்ன ஆச்சு? ஓடற பஸ்ஸிலிருந்து விழுந்துட்டேன் போலிருக்கு. என்  பயணம் என்ன ஆறது? முடிஞ்சு போச்சா? அப்ப நான் போக வேண்டிய இடம்? அதோ இன்னொரு பஸ் வருதே! அதில ஏறிப் போகலாமா? எங்கே போறது? எங்கேயாவது... எங்கே போறதுங்கறதா முக்கியம்? எங்கேயாவது போய்க்கிட்டுத்தான்  இருக்கணும் - பயணம் முடியற வரை. பயணம் எப்ப முடியும்? ஒருவேளை முடிஞ்சு போச்சோ? ஓ! இந்த பஸ்ஸும் நிக்காம போகுதே! ஹோல்டான்...ஹோல்டான்...

(அகரம் ஓடும் பஸ்ஸைத் தொடர்ந்து ஒடி அதில் ஏற முயல்வது போன்ற அசைவுகளைச்  செய்கிறான். சட்டென்று அசைவுகள் நின்று உறைந்து போகிறான்.)

பின்னணியில் பாடல் ஒலிக்கிறது:

எங்கே வாழ்க்கை தொடங்கும்?
அது எங்கே எவ்விதம் முடியும்?
இதுதான் பாதை இதுதான் பயணம்
என்பது யாருக்கும் தெரியாது.
பாதையெல்லாம் மாறி வரும்
பயணம் முடிந்து விடும்....

(பாடல் சட்டென்று நிற்க, திரை விழுகிறது.)

(1988ஆம் ஆண்டு எழுதப்பட்டது.)