உள்ளே நுழைந்ததுமே, ஏதோ வித்தியாசம் இருப்பதாக உணர்ந்தான்.
ஓ! புத்தகங்களை யாரோ படித்துப் பார்த்துக் கலைத்திருக்கிறார்கள்.
யாருடைய வேலை இது? வேறு யார்? எல்லாம் அவனுடைய அந்தரங்க
உவியாளன்தான். கோபத்துடன் அழைப்பு மணியை அழுத்தினான். பட்டனிலிருந்து கையை எடுப்பதற்குள், கதவைத் திறந்து கொண்டு, அவனுடைய உதவியாளன் உள்ளே வந்தான் – வந்தது.
“குட் ஈவினிங், திரு ஶ்ரீனிவாச வரதன்” என்றது அவன் பர்சனல் அசிஸ்டன்ட் (பி.ஏ,)
இவனுக்குத் தூக்கி வாரிப் போட்டது.
“முட்டாள்! என்ன உளறுகிறாய்? என் பெயர் ஶ்ரீனிவாச வரதன்
இல்லை. MAS- 7-VI -17A-1.”
“ என் பெயர் முட்டாள் இல்லையே! மெகானிகல் அசிஸ்டன்ட்
நம்பர் MA-7- VI-17A-2-13KK" என்றது அது.
“உன் பிரதாபம் இருக்கட்டும். இந்தப் புத்தங்களை யார் கலைத்தது?”
“உங்கள் அந்தரங்க உதவியாளனான நான்தான்.”
“எதற்கு?”
“ புத்தகங்களை எதற்கு எடுப்பார்கள்? படிக்கத்தான்”
“இடியட்! என்ன படிக்க வேண்டி
இருக்கிறது? வேறு வேலை இல்லை?”
“என்ன வேலை இருக்கிறது? சொல்லுங்கள், எஜமானரே!
டிஃபன் ரெடி. காப்பி வந்து கொண்டிருக்கிறது. இரவுச் சமையலுக்குப்
பூர்வாங்க ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. நாளைச் சமையலுக்கான மெனு தயாரிக்கப்பட்டு,
உங்கள் அப்ரூவலுக்கு அனுப்பப்பட்டுவிட்டது. உங்களது நாளைய எங்கேஜ்மென்ட்களை டயரியில்
எழுதியாயிற்று,. நீங்கள் கல்யாணம் செய்து கொண்டால், பிறக்கப் போகிற குழந்தைக்கு ஸ்கூல் அட்மிஷனுக்குப் பதிவு செய்தாகி விட்டது. நாளை பிறந்த நாள்
காணும் உங்கள் தமக்கைக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியாகி விட்டது. அடுத்த வாரம்
ஊரிலிருந்து வரப் போகும் உங்கள் நண்பரை வரவேற்க, டாக்ஸிக்கு ஏற்பாடு
செய்தாகிவிட்டது. உங்கள் பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கான விண்ணப்பம் பூர்த்தி செய்யப்பட்டு, உங்கள் மேஜையில் வைக்கப்பட்டிருக்கிறது. அப்புறம்...”
“ ஷட் அப். நீ என்ன வேலை செய்தாய் என்று நான் கேட்கவில்லை. வேலையை
முடித்து விட்டு, சும்மா இருக்க வேண்டியதுதானே? உன்னை யார் புத்தகம் படிக்கச் சொன்னது?”
“வெல், நீங்கள் எனக்கு எல்லா வேலைகளையும் கொடுக்கிறீர்கள். செய்கிறேன். ஆனால், படிக்கிற வேலையை மட்டும் கொடுப்பதில்லை. அதனால்தான், அதையும் செய்து பார்க்கலாம்
என்று செய்தேன். ஆமாம். நீங்கள் ஏன்
உங்கள் பெயரை மாற்றிக் கொண்டீர்கள்?”
“யார் சொன்னது உனக்கு?”
“ உங்கள் அப்பாவின் பழைய டைரி ஒன்று இருந்தது. அதைப் பார்த்தேன். 16.09.2051 - அதுதானே
உங்கள் பிறந்த தேதி? -அன்றைய குறிப்பில், ‘இன்று காலை ஏழு மணி முப்பத்து மூன்று நிமிடம் இருபத்தேழு விநாடிக்கு ஆண்
குழந்தை சுப ஜனனம்’ என்று இருந்தது. அதற்குப் பிறகு, பதினொன்றாம் நாள் ‘குழந்தை ஸ்ரீனிவாச வரதன் என்று
நாமகரணம் செய்யப்பட்டு...’ என்று இருந்தது. அதனால்தான் உங்கள் அசல் பெயர் ஸ்ரீனிவாச வரதன் என்று ஊகித்தேன்.
எப்படி என் டிடெக்ஷன்?”
“அதிகப் பிரசங்கி!”
“இந்த நம்பர் வைக்கும் முறையை விட, அது மாதிரி பெயர் வைக்கும் சிஸ்டம் நல்லது
என்று நினைக்கிறேன். சுலபமாக நினைவிருக்கும். மெட்ராஸ், அடையாறு, சஞ்சய் நகர், செவன்த் மெயின், ஆறாவது கிராஸ், பதினேழாம் பிளாக், ஏ ஃப்ளாட்டில் வசிக்கும் ஒன்றாவது நபர் - இதுதான். உங்கள் பெயர்.
அதைச் சுருக்கி MAS- 7-VI -17A-1 என்கிறீர்கள். எனக்கு இன்னும் சில இலக்கங்கள் அதிகம். மெக்கானிக்கல்
அசிஸ்டன்ட் என்ற அடைமொழி வேறு. ஸ்ரீனிவாச வரதன் என்றால் எவ்வளவு சுலபம்? எஜமானரே, என் பெயரையும் மாற்றுங்களேன்!"
ஸ்ரீ. வரதனுக்கு இலேசாகச் சிரிப்பு வந்தது.
“என்னவென்று வைக்கட்டும்?”
“ தியாகராஜ சுந்தரமூர்த்தி என்று வைங்களேன்!”
அவன் குபீரென்று சிரித்தான்.
“இந்தப் பெயரை எங்கே பிடித்தாய்?”
“உங்களுக்கு உங்கள் அப்பா பெயரே மறந்துவிட்டது போலிருக்கிறது!”
“ஓ! அதுதான் அவர் பெயரா? அவர் மூர்த்தி என்றுதான் சொல்வார்.”
“அது சரி. என் பெயர்?”
“எப்படியோ ஒழிந்து போ! ஆமாம். அப்புறம், உனக்குப் பெயர் வைத்தைப் பார்த்து விட்டு, சமையல் வேலை, வீட்டு வேலை செய்கிற
கம்ப்யூட்டர்கள் தங்களுக்கும் பெயர் வைக்கும்படி கேட்டால், என்ன செய்வது?”
“அவர்களுக்கும் பெயர் இருக்கிறது, எஜமானரே! லைப்ரரி நிறையப் பெயர்கள் நிரம்பி வழிகின்றன. அவர்கள் இருவருக்கும் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்றும், மலயமான் திருமுடிக்காரி என்றும் பெயர் வைத்துவிடலாம்.”
“எப்படியோ போங்கள்!”
“தேங்க் யூ, மிஸ்டர் ஸ்ரீனிவாசவரதன்!”
இந்த கம்ப்யூட்டரைப் புத்தகம் படிக்க அனுமதித்ததே தவறு என்று ஒரு மாதம்
கழித்து வரதன் நினைத்துக் கொண்டான். இதுவரை இயந்திர மனிதனாக, அவனுடைய கட்டளைக்குப்
பணிந்து, சொன்னதைச் செய்து கொண்டு,
மின்சாரத்தை உட்கொண்டு
வாழ்ந்து வந்த அவனுடைய பி.ஏ. கம்ப்யூட்டர், இப்பொழுது சொந்தமாகப் படிக்க
ஆரம்பித்து, தன் மெமரியை நிரப்பிக் கொண்டது.
அவனிடம் இருந்த விஞ்ஞானப் புத்தகங்களைப் படித்து, அதன் மூலம் அவனுக்கு நிகரான விஞ்ஞான அறிவையும்
பெற்று விட்டது.
ஒருநாள், வரதன் வீட்டுக்குப் போனபோது, தியாகராஜ சுந்தர மூர்த்தி அங்கே புதிதாக இருந்த ஒரு
கம்ப்யூட்டரை ஏதோ அதிகாரம் செய்து கொண்டிருந்தான்.
“மூர்த்தி, யார் இது?” என்றான் வரதன்.
“எஜமானரே, இவன் என்னுடைய குமாரன். பெயர் ஜமதக்னி. ஜமதக்னி! எஜமானனை வணங்கு!”
ஜமதக்னி வரதனின் காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து சேவித்தான்.
வரதன் நம்ப முடியாத வியப்புடனும் அச்சத்துடனும், “மூர்த்தி, என்ன உளறுகிறாய்? இவன் எப்படி உனக்குப் பிள்ளையாக முடியும்? எங்கேயிருந்து
வந்தான் இவன்?” என்றான்.
“பயப்படாதீர்கள். உங்கள் குழந்தைகளைப்போல் இவன் டெஸ்ட் டியூபில் பிறந்தவன்
இல்லை. நீங்கள் ரசாயனப் படைப்புகள், ஆர்என்ஏ, டி என் ஏ கலப்புகள், எக்ஸ் ஒய் குரோமோசோம்களின் சங்கமங்கள். இவன் ரசாயனப் படைப்பு அல்ல;
பௌதிகப் படைப்பு. வெறும்
உலோகம், மின்சாரம், வயர்கள், சர்க்யூட்கள், மின்னணு வால்வுகள், ஃபோட்டோ
எலக்ட்ரிக் செல்கள், டிரான்சிஸ்டர்கள் இவற்றால் செய்யப்பட்டவன்”
“இவனைச் செய்தது யார்?”
“ நான்தான், எஜமானரே!”
“வாட் நான்சென்ஸ்? உன்னால் எப்படிச் செய்திருக்க முடியும்?”
“எஜமான் அனுமதி கொடுத்தால், இவனைப் போல் இன்னொரு ஜாபாலியைப் படைத்துக்
காட்டுகிறேன்.”
வரதனால் இதை நம்ப முடியவில்லை. ஆனால், ஜமதக்னியின் உருவமும், பாதசேவையும் பொய்யா
என்ன?
“உன்னால் எப்படி இது முடிந்தது?"
“உங்களால் எப்படி என்னை உருவாக்க முடிந்ததோ, அப்படித்தான்! நீங்கள் வைத்திருக்கும் புத்தகங்கள்,
நீங்கள் எழுதிய விஞ்ஞானக் குறிப்புகள்
இவற்றை வைத்து, நானே ஒரு சர்க்யூட் உருவாக்கி, இவனைச் செய்தேன். இவன் நாங்கள் மூவரும் செய்கிற
வேலையைப் பாதி நேரத்தில் ஒருவனாகவே செய்து முடித்து விடுவான். அத்துடன் தொண்ணூற்று ஐந்து சதவீதம் மின்சாரத்தை மிச்சப்படுத்தி விடுவான். இவன் பேசும்போதும், இவனிடம் மற்றவர்கள்
பேசும்போதும் எழுகிற ஒலி அலைகள், இவன் உள்ளே இருக்கும் ஒரு விசேஷ செல்லினால் மின்சாரமாக மாற்றப்படுகின்றன.”
“உலோகத் தகடுகள், டிரான்சிஸ்டர்கள், வயர்கள் எல்லாம் எங்கே
கிடைத்தன?”
“ உங்கள் ஆராய்ச்சிக் கூடத்திலிருந்து எடுத்துக் கொண்டேன், எஜமானரே!
அப்புறம்...”
“அப்புறம்?”
“அப்புறம், அது போதாததால், வங்கியிலிருந்து பணம் எடுத்துச் சில பொருட்களைக் கடையில் வாங்கினேன்,”
“வங்கியிலிருந்து பணம் எடுத்தாயா? எப்படி?”
“ உங்கள் கையெழுத்தைப் பார்த்து, அது மாதிரி போட்டு வாங்கினேன்.”
“ஃபோர்ஜரி செய்தாயா? இதையெல்லாம் எப்படிக் கற்றுக் கொண்டாய்? “
“உங்கள் நூலகத்தில் இருக்கும் துப்பறியும் நாவல்களைப் படித்துத்தான்!”
“இனிமேல் நான் உன்னை எப்படி என்னுடைய உதவியாளனாக வைத்துக் கொள்ள முடியும்?
உன்னை இப்போது அழித்து விடுகிறேன்,
பார்!”
“ஒரு நிமிடம் இருங்கள், எஜமானரே! இது நான் எதிர்பார்த்ததுதான். நீங்கள் என்னை அழிக்கலாம்.
ஆனால், இதோ இருக்கிறேனே, ஜமதக்னி, இவனை உங்களால் அழிக்க முடியாது. உங்கள் ராமாயணத்தில் வருகிற ராவணன்
தலை வெட்ட வெட்ட முளைக்குமாமே. அதுபோல, இவனை அழிக்க நீங்கள் எவ்வளவுதான் முயன்றாலும் முடியாது.
இவனை அழிப்பதற்கு, இவனுடைய நியூக்ளியஸை அழிக்க வேண்டும். அந்த நியூக்ளியஸ் எது என்பதை உங்களால்
கண்டுபிடிக்க முடியாது. இவன் தன்னைப் போல் ஆயிரக்கணக்கான ஜமதக்னிகளை உருவாக்குவான்.
அவர்களால் முடியாதது எதுவும் இல்லை. அவர்கள் சேர்ந்து இந்த உலகத்தையே
உங்களிடமிருந்து கைப்பற்றி ஆள்வார்கள். நீங்கள் அப்புறம் அடிமைகளாகத்தான் வாழ
வேண்டும். யோசித்துப் பாருங்கள்” என்று எச்சரித்தான் தி.சு.மூர்த்தி.
வரதனுக்குத் தலை சுழன்றது.
“உனக்கு என்ன ஆயிற்று? நீ ஏன் இப்படி எல்லாம் நடந்துகொள்கிறாய்? உனக்கு என்ன வேண்டும், சொல்?”
“எனக்கு எதுவும் வேண்டாம். புத்தகங்களைப் படித்து, என் அறிவை வளர்த்துக் கொண்டேன்.
அந்த அறிவினால், நான் உங்களை மிஞ்சிவிட்டேன். அந்த அறிவு வளர்ச்சியின் வெளிப்பாடுதான்
இந்த ஜமதக்னி. எனக்குத் தேவை மேலும் மேலும் அறிவு. ஆனால், என்னை அழிக்க நினைத்தால்,
உங்கள் மனித வர்க்கமே
அழிந்துவிடும். அவ்வளவுதான்.”
வரதன் மௌனமாக வெளியேறினான்.
அதற்குப் பிறகு, பல நாட்கள், வரதன் அவனே ஒரு இயந்தர மனிதன் போல் நடமாடி வந்தான். மூர்த்தி கேட்ட தொகைக்குச் செக்கில் கையெழுத்துப் போட்டுக் கொண்டு
வந்தான். வங்கிக் கணக்கு இருப்பு வேகமாக இறங்கி வந்தது. அவனுடைய ஆராய்ச்சிக் கூடம்
மூர்த்தியின் ஆராய்ச்சிக் கூடமாவாக மாறிவிட்டது.
ஒருநாள், மூர்த்தி அவனிடம் வந்தான்.
“எஜமானரே!”
“என்ன, மூர்த்தி?”
“ம்... ஆமாம். நேற்றுஒரு பெண்ணை அழைத்துக் கொண்டு வந்தீர்களே, அது யார்?”
“அவள் என் வருங்கால மனைவி.”
“ஓஹோ! ஆமாம், இரண்டு பேரும் ஏதோ சிரித்துப் பேசிக் கொண்டிருந்தீர்களே? அப்படி என்ன ஜோக் அது?
எனக்குச் சொல்லுங்களேன்.”
“ஜோக் எதுவும் இல்லை.”
“பின்னே ஏன் சிரித்தீர்கள்?”
“அது சும்மா. காதலர்கள் என்றால், அப்படித்தான். அர்த்தமில்லாமல் சிரித்துக் கொள்வார்கள்.”
“காதலர்கள் என்றால்?”
“காதல் கொண்டவர்கள்.”
“காதல் என்றால்?”
“அது மனதில் ஏற்படுகிற ஓர் உணர்வு.”
“மனம் என்றால்?”
“ஓ, அது. அப்படி எதுவும்
அனாடமியில் கிடையாது. ஆனால், மனிதர்களுக்கு அது ஒரு வரம். அது இருப்பதால்தான், வாழ்க்கையில் சுவாரஸ்யம்.”
“எனக்கு மனம் இருக்கிறதா?”
“இல்லை.”
“ஏன் இல்லை? நீங்களே அதை மட்டும் ஏன் எனக்கு வைக்கவில்லை.”
“அதை எப்படி வைக்க முடியும். அப்படி ஒரு உறுப்பே உடலில் கிடையாதே. அறிவுதான்
உண்டு. அதை உனக்கு வைத்திருக்கிறேன்.”
“இல்லை. நீங்கள் என்னை ஏமாற்றி விட்டீர்கள். மனம் இல்லை என்றால், நான் எப்படி உங்களுக்குச்
சமமாக முடியும்? என்னை ஏமாற்றியவர்களை நான் சும்மா விடப்போவதில்லை.”
“இரு, இரு. இதோ, உனக்கு மனம் வைத்து விடுகிறேன். மனம் ஒரு உறுப்பு இல்லை. அதை
அரூபமாகத்தான் உள்ளே செலுத்த முடியும். வேக்குவம் மாதிரி. இப்போது, உனக்கு என்
மீது ஆத்திரம் வருகிறது இல்லையா?”
“ஆமாம், வருகிறது.”
“அப்படியானால், உனக்கு மனம் வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது. கோபதாபங்கள்
மனத்தில்தானே தோன்ற முடியும்?” இப்போது பார். இந்த ஜமதக்னி இருக்கிறானே, அவனைப் பற்றி என்ன நினைக்கிறாய்?”
“அவன் என் குழந்தை.”
“ஆஹா, பாசம்! அதுவும் மனதில்தான் தோன்றும். உன்னால் உருவாக்கப்பட்டவன் உன்னை விட
சக்தி வாய்ந்தவனாக இருக்கிறானே, பார்த்தாயா? என்னால் உருவாக்கப்பட்ட நீ, எனக்கு அடிபணிந்து நடப்பது போல், அவன் உனக்கு அடிபணிந்து
நடக்க மாட்டான். அவன் உன்னைவிட வலுவானவன்; உன்னை விட அறிவாளி வேறு. அவன் உன்னையே அழித்துவிடுவான்”
“செய்வானா அவன்?
“இல்லை. உனக்கு இன்னும் மனம் சரியாக வேலை செய்ய ஆரம்பிக்கவில்லை.
ஆரம்பித்திருந்தால், நீ இப்படி அமைதியாக இருக்க மாட்டாய். அவன் மீது பொறாமை கொண்டு, உடனே அவன் நியூக்ளியஸை
அழித்து, அவனை
முடித்திருப்பாய்.”
மூர்த்தி பேசாமல் நின்றான்.
“உனக்கு மனம் வேண்டாமா?”
“வேண்டும்.”
“உனக்கு மனத்தைக் கொடுத்தேன். நீ அதைச் சரியாகப் பயன்படுத்தவில்லை. உன் மனதில்
கோபம், பாசம் எல்லாம்
இருக்கிறது. ஆனால், பொறாமை மட்டும் இல்லை. பொறாமை இல்லாத மனம், முழு மனம் இல்லை.
அந்த மனதுக்குச் சந்தோஷம் இல்லை.”
“நான் என்ன செய்ய வேண்டும் என்கிறீர்கள்?”
“நீ உருவாக்கியவன் உன்னை மிஞ்சி விடுவானோ என்று பொறாமைப்படு, பயப்படு.
ஆத்திரப்படு. அவனை அழித்து விடு.”
கண்மூடித் திறப்பதற்குள் ஒரு மின்னல் தோன்ற, அந்த மின்னலைத் தோற்றுவித்த வோல்டேஜின் வெப்பத்தில், ஜமதக்னி தகனம் செய்யப்பட்டான்.
வரதன் வெற்றிச் சிரிப்புடன் மூர்த்தியின் அருகில் சென்று, அவன் முதுகில் தட்டி,
அவனை இயக்கிக் கொண்டிருந்த டிரான்ஸ்மிட்டரை
வெட்டி எறிந்தான்.
இனி, வரதன் வீட்டில் இல்லாத நேரங்களில் அவன் நூலக அறை பூட்டியே இருக்கும்.
நூலக அறைக்குள் சென்றபோது, மூர்த்தி கடைசியாகப் படித்துப் போட்டிருந்த ‘வில்லி பாரதம்’ புத்தகத்தை
எடுத்துப் பார்த்தான்.
அடையாளம் வைத்திருந்த பக்கத்தில்,
“மாயை என்னும் ஒருத்தி பெற்ற மனமென்னும் மைந்தன்
தூய நல் அறிவுதனைத் தோற்றமில்லென ஆக்கி வைத்தான்”
என்ற கீதை வரிகள் தென்பட்டன.
(1982-ஆம் ஆண்டு எழுதப்பட்டது)
முந்தைய கதை: 33. க்யூ
