Sunday, December 30, 2018

27. தபாலில் வந்த கடிதம்


"மாமி! உங்களுக்கு ஈமெயில் வந்திருக்கு!"

பக்கத்து வீட்டுப்  பெண் தீக்ஷிதா, அச்சடித்த கம்ப்யுட்டர் செய்தியை எடுத்துக்கொண்டு உற்சாகத்துடன் வந்தாள்.

'ராமுவிடமிருந்து கடிதம், இல்லை, ஈமெயில்!'

மீராவிடம் ஒரு கணம் தொற்றிக்கொண்ட உற்சாகம் உடனே வடிந்து விட்டது.

வலிய வரவழைத்துக்கொண்ட புன்சிரிப்புடன் கடிதத்தைப் பெற்றுக்கொண்ட மீரா, அதை ஆர்வம் இல்லாமல் படித்தாள்.

இயந்திரமயமான கடிதம், இயந்திரமயமான வாசகங்கள், இயந்திரமயமான பாசம்!

கடித வாசகத்தை ஒருமுறை கம்ப்யூட்டரில் உருவேற்றி விட்டு, வாரம் ஒருமுறை தேதியை மாற்றி, ஒரு சில வரிகளை மாற்றி அனுப்பப்படுவதை அப்பட்டமாக வெளிக்காட்டியபடி, தவறாமல் வந்து கொண்டிருக்கும் மின்னணுக் கடிதங்கள்!

"அங்கிள் என்ன எழுதியிருக்கார் மாமி?"

தீக்ஷிதாவின் கேள்வி மீராவுக்கு வேடிக்கையாகத் தோன்றியது. அவள் வீட்டு கம்யூட்டரில் ஈமெயிலாகத் தோன்றி, அவள் வீட்டு பிரிண்ட்டரில் அச்சுப்பிரதி எடுக்கப்பட்டு தன்னிடம் எடுத்து வரப்பட்ட கடிதத்தில் என்ன எழுதியிருக்கிறது என்பது கல்லூரி மாணவியான தீக்ஷிதாவுக்குத் தெரியாதா? இது பண்பாட்டுக்காகக் கேட்கப்படுகிற ஒரு கேள்வி. அவ்வளவுதான்!

கடிதம் என்பது எவ்வளவு அந்தரங்கமான விஷயம்! மீராவைப் பொருத்தவரை புனிதமான விஷயமும் கூட! அவள் வாழ்க்கையே கடிதங்களால் வடிவமைக்கப்பட்டது போல் அவளுக்குச் சில சமயம் தோன்றும்.

மீராவுக்குக் கடிதங்களுடன் நெருக்கம் ஏற்பட்டது அவளுக்கு நினைவு தெரிந்த வயதிலிருந்தே என்று சொல்லலாம்.

திருச்சிக்கு அருகே ஒரு சிறிய கிராமத்தில்அவள் தந்தை போஸ்ட் மாஸ்டராக இருந்தார். மீரா பிறந்ததிலிருந்து அவளுக்குத் திருமணம் ஆகும் வரை, அவள் இருந்தது அந்த ஊரில்தான்.

அவர்கள் குடும்பம் வசதியானது என்று சொல்ல முடியாது. வறுமையில் வாடிய குடும்பமும் இல்லை.

கிராமத்தில் பிராஞ்ச் போஸ்ட் மாஸ்டர் வேலை என்பது ஒரு கௌரவ உத்தியோகம். ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் வேலை. கௌரவ (சொற்ப) சம்பளம். பரம்பரையாக இருந்து வந்த சொந்த வீடும். அவர்கள் குடும்பத்துக்கு  சாப்பாட்டுக்குத் தேவையான அளவுக்கு அரிசி கிடைக்கும் வகையில் கொஞ்சம் நிலமும் இருந்ததால், சமாளிக்கக் கூடிய வகையில் ஓடிய வாழ்க்கை.

பிராஞ்ச் போஸ்ட் மாஸ்டருக்கு சம்பளம் மட்டும்தான் உண்டு. போஸ்ட் ஆஃபீஸ் நடத்த இடம், மேசை நாற்காலிகள் எல்லாம் அவரே தான் ஏற்பாடு செய்து கொள்ளவேண்டும்! இவற்றுக்கு அரசாங்கம் பொறுப்பேற்காது, பணமும் கொடுக்காது.

கிராம வாழ்க்கை நடைமுறையில் இவை ஒரு பிரச்னையாக இல்லை. இவர்கள் வீட்டுக்கு நான்கு வீடு தள்ளி, பாதி இடிந்து போயிருந்த ஒரு வீட்டின் திண்ணையில் மூங்கில் தடுப்புகளால் ஒரு அலுவலகம் அமைத்து அவள் அப்பா செயல்பட்டுக் கொண்டிருந்தார்.

காலை 10 மணி சுமாருக்கு தபால் பை வந்து சேரும் அது பிரிக்கப்பட்டு, கடிதங்கள் முத்திரையிடப்படும் சத்தம் இரண்டு தெருக்களுக்கு தாராளமாகக்  கேட்கும். தங்களுக்குக்  கடிதம் வரும் என்று எதிர்பார்ப்பவர்கள் தபால் முத்திரை சத்தம் கேட்டதும் போஸ்ட் ஆபிஸ் வந்து, தங்கள் கடிதங்களை தபால்காரரிடம் அங்கேயே கேட்டு வாங்கிக் கொண்டு போய் விடுவார்கள்.

பள்ளிக்கூடத்தில் சேர்வதற்கு முன் எல்லா நாட்களிலும், பள்ளிக்கூடத்தில் படித்தபோது பள்ளி விடுமுறை நாட்களிலும், தபால் முத்திரைச் சத்தம் கேட்டதும் மீராவும் போஸ்ட் ஆஃபீசுக்கு ஓடி விடுவாள்.

அங்கே, ரன்னர் (என்ன ஒரு பொருத்தமான பெயர்! தபால்களை எடுத்துக் கொண்டு விரைவாக ஓடி வருபவர் அல்லவா?) தபால் பையிலிருந்து  எடுக்கப்பட்ட கடிதங்களின் மீது படபடவென்று வேகமாக முத்திரை குத்துவதையும், முத்திரை குத்தப்பட்ட கடிதங்களைத் தபால்காரர் தெருவாரியாக அடுக்குவதையும், மணி ஆர்டர், பதிவுத் தபால், பார்சல் போன்றவற்றின் விவரங்களை அவள் தந்தை சரி பார்ப்பதையும் ஒரு அற்புதக் காட்சியைப் போல் அவள் கண்டு பிரமிக்கத் தவறுவதில்லை.

எவ்வளவு நாட்கள் ஆனாலும், இந்த பிரமிப்பு  அவளை விட்டு நீங்கியதில்லை எங்கெங்கிருந்தோ யார் யாரோ யார் யாருக்கெல்லாமோ போடும் கடிதங்கள் எல்லாம் முறையாகப் பிரிக்கப்பட்டு, ரயில்களிலும், பஸ்களிலும், வேன்களிலும், சைக்கிள்களிலும் பயணம் செய்து ஓரிரு நாட்களில் சேர வேண்டியவர்களிடம் போய்ச் சேருவதை ஒரு வியக்கத்தக்க சாதனையாகவே அவள் எப்போதும் கருதி வந்திருக்கிறாள்.

இதனுடன் ஒப்பிடும்போது, இன்று இன்டர்நெட் மூலம் உலகம் முழுவதும் ஒரு நொடிக்குள் இணைக்கப்படுவது கூட அவளுக்கு ஒரு பெரிய அற்புதமாகத் தோன்றவில்லை.

சிறு வயது முதல் கடிதங்களால் ஈர்க்கப்பட்டதாலோ என்னவோ, கடிதம் என்பது மீராவுக்கு வாழ்க்கையில் ஒரு முக்கியமான அம்சமாக ஆகிவிட்டது. போஸ்ட் ஆபீஸ் போகும் போதெல்லாம் அவள் அப்பாவிடம் அவள் கேட்கும் கேள்வி "நமக்கு ஏதாவது லெட்டர் இருக்கா?" என்பது தான்.

அவர்களுக்குக் கடிதம் வருவது எப்போதோ ஒரு முறைதான். அவர்களுடைய உறவினர்கள், தாங்கள் உயிரோடு இருக்கிறோம் என்பதைச் சில மாதங்களுக்கு ஒருமுறை அறிவித்துக் கொள்கிற ஒரு சடங்காகவே கடிதங்கள் பயன்படுத்தப்படுவதாக அவளுக்குத் தோன்றும்.

அவ்வாறு கடிதம் வரும் நாட்களில் அவளுக்கு உற்சாகம் கரை புரளும் - கடிதம் யாரிடமிருந்து வந்தாலும் சரிதான். பெரும்பாலும் தபால் கார்டுதான் வரும். எப்போதாவது இன்லாண்ட் கடிதம் வரும். ஒட்டப்பட்ட கவர் வருவது என்பது மிக அரிது. ஜாதகம், கோவில் பிரசாதம் போன்று ஏதாவது உள்ளே வைத்து அனுப்ப வேண்டியிருந்தாலொழிய, கவருக்கு என்ன வேலை? உலகச் செய்திகள் அனைத்தையும் ஒடுக்கி ஒடுக்கி இன்லாண்ட் லெட்டரிலேயே எழுதி விடலாமே!

எல்லாக் கடிதங்களிலும் இவளைப் பற்றிய விசாரிப்பு தவறாமல் இருக்கும். "ரகு, மீரா, சாந்தியை ரொம்பவும் விசாரித்ததாகச்  சொல்லவும்" என்று இவள் அண்ணன், இவள், இவள் தங்கை  மூவரையும் விசாரித்து எழுதப்படும் வரிகளைப் படிக்கும்போது, இவளுக்குப் புளகாங்கிதம் ஏற்படும்.

எப்போதாவது ஒரு கடிதத்தில், யாராவது இவளைப் பற்றி விசாரிக்கத்  தவறி விட்டால், ஏக்கம் வந்து பற்றிக்கொள்ளும். "ஏம்மா பெரியம்மா என்னைப் பத்தி  விசாரிக்கவே இல்லை?" என்று ஆற்றாமையுடன் கேட்பாள்.

"போடி அசடே! ஒரு லெட்டர்ல ஓராயிரம் விஷயம் எழுதணும்னு மனசில நெனச்சுண்டு எழுதறா. அதுல ஒண்ணு ரெண்டு விட்டுப் போறது சகஜம்தான் உன்னைத் தனியா விசாரிக்காட்டா என்ன, அதான் 'அங்கே உங்கள் எல்லோர் சௌக்கியத்துக்கும் பதில் போடவும்'னு எழுதியிருக்காளே, அது உன்னையும் சேத்துத்தானே?"  என்ற அம்மாவின் பதில் இவளுக்கு சமாதானம் அளிக்காது.

அவள் அம்மாவோ அப்பாவோ தங்கள் உறவினர்களுக்குக் கடிதம் எழுதினால் அதில் மீரா தன் கைப்பட எழுதும் சில வரிகளாவது இடம் பெற்றாக வேண்டும் தபால் கார்டில் எழுதினால் கூட, விலாசம் எழுதும் இடத்துக்குப்  பக்கத்தில் இருக்கும் அரை கார்டில் ஒரு பகுதியாவது இவளுக்கு ஒதுக்கப்படவேண்டும்!.

எப்போதாவது மீரா பள்ளிக்குப் போயிருக்கும்போது, அவள் அம்மா யாருக்காவது கடிதம் எழுதி இவள் வருவதற்குள் போஸ்ட் செய்து விடுவாள். விஷயம் தெரிந்தால், மீராவினால் அந்த ஏமாற்றத்தைத் தாங்க முடியாது. என்னதான் அவசரமாக எழுதி போஸ்ட் செய்து விட்டதாக அம்மா சமாதானம் சொன்னாலும் இவளுக்கு மனச்சமாதானம் ஏற்படாது.

கடிதத்தில் இவள் எழுதுவதை உ றவினர்கள் பெரும்பாலும்  கண்டு கொள்ள  மாட்டார்கள். சில சமயம், சில உறவினர்கள் தங்கள் பதில் கடிதத்தில் "மீரா எழுதியிருந்ததையும் படித்தேன்" என்று எழுதி விட்டால்,இவளுக்குப் பெருமகிழ்ச்சி ஏற்படும்.

பெரியவர்களுக்கு எழுதினால் பொருட்படுத்த மாட்டார்கள் என்பதால், மீரா  தன் வயதை ஒத்த தன் கஸின்களுக்குக் கடிதம் எழுத ஆரம்பித்தாள். அவையும் அம்மா எழுதும் கடிதங்களில் ஒரு பகுதியாகத்தான் இருக்கும். சித்திக்கு எழுதுவதை விட்டு, சித்தி பையன் பாலுவுக்கு எழுதுவது என்று பழக்கத்தை மாற்றிக் கொண்டாள்.

ஆயினும், பாலுவோ மற்ற கஸின்களோ, இவளைப் போல் கடிதம் எழுதுவதில் ஆர்வம் காட்டியதில்லை. எப்போதாவது ஒரு முறை - இவள் பத்து கடிதம் எழுதினால், ஒரு கடிதத்துக்கு - பதில் போடுவார்கள்.

கடிதம் வந்தாலும் வராவிட்டாலும் கடிதத்தை எதிர்பார்க்கும் ஆர்வம் மீராவிடம் சற்றும் குறைந்ததில்லை. தினமும் பள்ளியிலிருந்து வந்ததும், அவள் கேட்கும் முதல் கேள்வி, "இன்னிக்கு  ஏதாவது லெட்டர் வந்ததா?" என்பதுதான்.

"தினம் தினம் யார் கிட்டேந்துடி நமக்கு லெட்டர் வரும்?" என்று அவள் அம்மா அலுத்துக் கொள்வாள்.

எப்போதாவது ஒரு கடிதம் வந்து விட்டால் அன்று மீராவுக்கு ஏற்படும் உற்சாகமே தனிதான். அந்தக் கடிதத்தை வாங்கிப் பலமுறை படிப்பாள். புரியாத விஷயங்களை அம்மாவிடம் கேட்டுக் கொள்வாள். வந்த கடிதங்களை ஒரு கம்பியில் கோர்த்து வைப்பதும் அவள்தான்.

பள்ளிப்பாடங்களில் கூட எப்போதாவது காம்போசிஷன் நோட்புக் என்ற கட்டுரைப் புத்தகத்தில் கடிதம் எழுதும் பயிற்சி வந்து விட்டால் அவளுக்குத்  தனி உற்சாகம் தான். அந்த உற்சாகக் களிப்பில் அவள் எழுதிய உயிரோட்டம் ததும்பிய 'கடிதக் கட்டுரைகள்' அதிக மதிப்பெண்கள் பெறத் தவறியதில்லை.

கடிதத்தின் மீது மீராவுக்கு இருந்த ஆர்வம் காரணமாகவோ என்னவோ பள்ளி நாட்களிலேயே அவளுக்குக் கதைகள் எழுதுவதிலும் ஆர்வம் ஏற்பட்டது.  ஒரு சில கதைகள் எழுதி அவற்றைப் பத்திரிகைகளுக்கு அனுப்பி, அவை பிரசுரத்துக்கு ஏற்றவையல்ல என்ற குறிப்புடன் திரும்பி வந்தன. தன்  கதைகள் திரும்பி வந்ததால் ஏற்பட்ட ஏமாற்றத்தையும் மீறித் தன் பெயருக்குக் கடிதம் வந்த பெருமையே விஞ்சி நின்றது.

ல்லூரிப் படிப்புக்கு திருச்சி தான் என்ற நிலை. பள்ளி இறுதித்தேர்வில்  அவள் நிறைய மதிப்பெண்கள் வாங்கி இருந்ததால், கல்லூரிக் கட்டணம் மட்டுமின்றி, விடுதியில் தங்கிப் படிக்கும் செலவையும் ஈடுகட்டும் அளவுக்கு, அவளுக்கு உதவித் தொகை கிடைத்தது.

கடிதங்களின் மீது மீரா கொண்ட காதல் முழு வடிவம் பெற்றது கல்லூரி விடுதியில் தங்கிப் படித்த காலத்தில்தான்.

வாரம் ஒருமுறையாவது தவறாமல் அம்மாவிடம் இருந்து வரும் கார்டு, ஒரு சில பள்ளி நண்பர்கள், ஒத்த வயதுடைய உறவினர்கள் என்று சிலரிடமிருந்து அவ்வப்போது வரும் கடிதங்கள், இவை தவிர, மீரா கண்டு பிடித்த ஒரு புதிய கடிதச் சுரங்கம்!

இலவசமாக அனுப்பப்படும் சஞ்சிகைகள், ஒரு கார்டு எழுதிப் போட்டால் அனுப்பப்படும் கத்தை கத்தையான விவரப் புத்தகங்கள் என்று தினமும் ஒரு சில கடிதங்கள் வருவதற்கு மீரா வகை செய்து கொண்டாள்.

"என்னடி உனக்கு இவ்வளவு லெட்டர் வருது?" என்று வியந்த நண்பர்களும், "உனக்காகவே நான்  ஒரு நாள் தவறாம நான் இந்த விடுதிக்கு வர வேண்டியிருக்கும்மா!" என்று பாதி விளையாட்டாகவும், பாதி  உண்மையாகவும் அலுத்துக்கொண்ட தபால்காரரும் அவள் ஆர்வத்தை மேலும் தூண்டவே செய்தனர்.

ஒரு கட்டத்தில் 'மீராவுக்கு கன்னாபின்னாவென்று தினமும் ஏகப்பட்ட கடிதங்கள் வருகின்றனவாம்' என்ற வதந்தி கிளம்பி, விடுதிக் கண்காணிப்பாளர்களின் காதுகளுக்கு எட்டி, ஓரிரு நாட்கள் தபால்காரரிடம் சொல்லி, மீராவுக்கு வந்த கடிதங்களைத் தானே நேரில் வாங்கிப் பார்த்து, அவையெல்லாம் ஒரு துடிப்பான மாணவியின் ஆர்வத்துக்குத் தீனியே தவிர கட்டுப்பாடற்ற மாணவிக்கு வரும் காதல் ஓலைகள் அல்ல என்று விடுதிக் கல்மாணிப்பாளர் திருப்தி அடைந்தார் அதற்குப் பிறகு மீராவின் மீது அவருக்கு ஒரு பெரிய மதிப்பு ஏற்பட்டது.

அவள் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்துவிட்ட கடிதங்கள் அவள் திருமண முயற்சிகளிலும் பெரும் பங்கு வகித்தன. ஜாதகங்களைத் தாங்கி இருபுறமும் பயணம் செய்த கடிதங்கள் எத்தனை! 'ஜாதகப் பொருத்தமில்லை,' 'உங்கள் ஜாதகம் வருவதற்கு முன்பே எங்கள் பையனுக்கு இன்னொரு இடத்தில் நிச்சயமாகி விட்டது' போன்ற செய்திகளைத் தாங்கி வந்த பொறுப்புள்ள மனிதர்களின் பண்பாடான கடிதங்கள், பெண் பார்த்து விட்டுப்  போகும்போது, 'எல்லாரையும் கலந்து பேசி விட்டுக் கடிதம் போடுகிறோம்' என்ற தேர்தல் வாக்குறுதி போன்ற வாய்மொழியைக் காப்பாற்ற நினைத்தவர்களிடமிருந்து 'உங்கள் பெண் எங்கள் மகனுக்குப் பொருத்தமாகப் படவில்லை' போன்ற நாசூக்கான நிராகரிப்புக் கடிதங்கள்!

இந்த நிலையைக் கடந்து, பன்னாட்டு நிறுவனத்தில் மார்க்கெட்டிங் எக்சிக்யூடிவாகப் பணிபுரிந்த ராஜாராமனுடன் அவளுக்குத் திருமணம் நிச்சயாமாகியது. கல்யாணம் நிச்சயமானதை விட அவளுக்கு அதிக சந்தோஷத்தைக் கொடுத்தது கல்யாணப் பத்திரிகைகளை அனுப்பும் வேலைதான்.

உறவினர்கள், உடன் படித்தவர்கள், சொந்த ஊர்க்காரர்கள், குடும்ப நண்பர்கள் என்று பெரிய பட்டியல்  தயார் செய்து ஒவ்வொருவர்  விலாசத்தையும் எழுதி ஸ்டாம்ப் ஒட்டிப்  பத்திரிகை அனுப்பியது மீராவுக்கு, ஏதோ தன் அப்பாவின் பிராஞ்ச் போஸ்ட் ஆஃபீஸைத் தானே சில நாட்கள் தனியாக நிர்வகித்தது போன்ற சந்தோஷத்தை ஏற்படுத்தியது!

ராஜாராமனுடனான குடும்ப வாழ்க்கை, கலைந்து விட்ட இன்பக்கனவு போல் சட்டென்று முடிந்து விட்டது. ஒரு வருடம்தான் என்றாலும் அன்பும், அரவணைப்பும், களிப்பும், குதூகலமும் நிறைந்த அற்புதமான வாழ்க்கை அது!

வேலை நிமித்தமாக மாதத்தில் இருபது  நாட்கள் ராஜாராமன் சுற்றுப் பயணத்தில் இருந்தது அவளுக்குப் பிரிவுத் துயரைத் தந்தாலும், எந்த ஊரில் இருந்தாலும் அவள் விரும்பியபடி, தினமும் அவன் எழுதி போஸ்ட் செய்த கடிதங்கள் அவளுக்குப்  பெரிதும் ஆதரவாக இருந்தன.

கடிதத்தில் பேசிக்கொள்வது நேரில் பேசுவது போல் இல்லைதான். ஆனால்  கடிதத்தில் எழுதுவதையெல்லாம் நேரில் சொல்ல முடியுமா? 'என் உயிருக்குயிரான மீரா' என்ற துவக்கமே அவளை நெகிழ வைக்கும். இதையே  நேரில் சொன்னால் கொஞ்சம் செயற்கையாகத்தானே இருக்கும்!

ஒருநாள் கூட அவனிடமிருந்து கடிதம் வரத் தவறியதில்லை - ஒருநாள் தவிர அந்த ஒரு நாள்தான் அவன் உயிரோடு இருந்த கடைசி நாள். அலுவலகப் பணியாக நாக்பூர்  சென்றவனுக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு, அவன் நிறுவனத்தின் கிளை அலுவலக ஊழியர்கள் அவனை அங்கேயே ஒரு மருத்துவமனையில் சேர்த்தனர்.

எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில் மீராவிடம் சொல்ல வேண்டாம் என்று ராஜாராமன் கேட்டுக் கொண்டிருந்தான். ஆனால் மறுநாள் காலை அவனுக்கு திடீரென்று மீண்டும் ஒரு அட்டாக் வந்து, சில நிமிடங்களில் அவன்உயிர் பிரிந்து  விட்டது.

அன்று மீராவுக்குக் கடிதம் வரவில்லை. மாறாக, ராஜாராமன் வேலை செய்த நிறுவனத்திலிருந்து ஒரு உயர் அதிகாரி அவள் வீட்டுக்கு நேரில் வந்து அவளிடம் தகவல் சொன்னார்.

ராமு அப்போது அவள் வயிற்றில் இருந்தான். ஒரு மாதம் கழித்து ராமு  பிறந்ததும், ராஜாராமன் விருப்பப்படி அவனுக்கு ராமகிருஷ்ணன் என்று பெயர் வைத்தாள் மீரா. ("எங்கள் குடும்பத்தில் பெயர்கள் சங்கிலித் தொடராக வரும் என் தாத்தா கல்யாணசுந்தரம், என் அப்பா சுந்தரராஜன், நான் ராஜாராமன், நமக்குப் பையன் பிறந்தால் ராமகிருஷ்ணன் என்று பெயர் வைக்க வேண்டும், அப்போதுதான் அவன் தன் பிள்ளைக்கு, கிருஷ்ணமூர்த்தி என்று பெயர் வைக்க வசதியாக இருக்கும்! பெண் பிறந்தால் உன் விருப்பப்படி பெயர் வைத்துக் கொள்.")

ராமு பிறந்து மூன்று மாதங்கள் கழித்து, ராஜாராமன் வேலை பார்த்த நிறுவனத்திலேயே அவளுக்கு வேலை அளிக்க முன் வந்தார்கள். வேலையில் சேர்ந்ததும், அவளுக்கு முதலில் கொடுக்கப்பட்ட பொறுப்பு "தபால்"தான்! கடிதங்களை வாங்கி வகைப்படுத்தி அனுப்புவதும், அனுப்ப வேண்டிய கடிதங்களை விலாசம் எழுதி, ஸ்டாம்ப் ஒட்டி தபாலில் சேர்ப்பதுமான பணிதான் அந்த நிறுவனத்தில் "தபால்" என்று அழைக்கப்பட்டது.

குழந்தையை வீட்டிலிருந்தபடியே மீராவின் அம்மா கவனித்துக் கொள்ள, ராஜாராமன் இறந்த துக்கத்தை ஓரளவுக்காவது குறைத்துக் கொள்ள,  அவளுடைய கடித நிர்வாக வேலை மீராவுக்கு உதவியது.

கடிதங்கள் தன் வாழ்கையில் எந்த அளவுக்குத் துணை நிற்கின்றன என்று நினைத்துப் பார்த்தபோது, கடிதங்கள் தனக்குத் தாயாகவும் தந்தையாகவும் உற்ற தோழியாகவும் விளங்கி வந்தது அவளை நெகிழச் செய்து கண்ணில் நீர் துளிர்க்கச் செய்தது.

காலம் ஒடி விட்டது, ஓடிக்கொண்டே இருக்கிறது. கடிதங்களைப்  போட்டு விட்டு விரைந்து போய்க்கொண்டிருக்கும் தபால்காரரைப் போல, காலம் பல நிகழ்ச்சிகளை வழங்கி விட்டுப் பறந்து கொண்டே இருக்கிறது!

பெற்றோரின் மறைவு, திருமணத்திற்குப் பின் விலகிப் போய் விட்ட, மேலும் மேலும் விலகிப் போய்க் கொண்டிருக்கிற அண்ணனும் தங்கையும், வானவில் போல் அவ்வப்போது தலை காட்டிவிட்டு மறையும் பிற உறவுகள், பள்ளியிலும், கல்லூரியிலும் நெருங்கிய தோழிகளாக இருந்துவிட்டு, இன்று  அந்நியமாகி விட்ட உயிர்(!)த் தோழிகள், ராமு என்கிற ராமகிருஷ்ணனின் வேகமான வளர்ச்சி, படிப்பில் அவன் காட்டிய சூட்டிகை, வலுவான பொருளாதாரப் பின்னணியோ, உதவி செய்ய மனிதர்களோ இல்லாத நிலையில் பையனை எப்படிக் கரை சேர்க்கப் போகிறோம் என்று அவள் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும்போதே, ஏதோ மாயாஜாலம் போல் அவன் என்னென்னெவோ படிப்பெல்லாம் படித்து, அமெரிக்காவுக்கு வேலைக்குப் போய், இவளையும் மூன்று மாதம் அமெரிக்காவுக்கு அழைத்து வந்து வைத்திருந்து அனுப்பிய அதிசயங்கள்!

த்தனை மாற்றங்களிலும், மீராவைப் பொறுத்தவரை மாறாமல் இருந்த ஒரே விஷயம் சாவித்திரியின் நட்பு. கிராமத்தில் இவளுடைய இளம் வயதுத் தோழியாக இருந்து, கிராமத்திலேயே வாழ்க்கைப்பட்டு வறுமையில் உழன்று கொண்டிருந்தாலும், மாதம் ஒருமுறையாவது மீராவுக்குக் கடிதம் எழுதத்  தவற மாட்டாள் சாவித்திரி.

சாவித்திரியின் கடிதம் ஒவ்வொன்றும் ஒரு கவிதை. தனது கஷ்டங்களைப்  பற்றிய புலம்பலோ, சம்பிரதாயமான விசாரிப்புகளோ இல்லாமல், நேரில் பேசுவது போல் மனத்தைக் கொட்டி இப்படி எழுதுவது எப்படி சாத்தியமென்று ஒவ்வொரு கடிதத்தைப் படிக்கும்போதும் மீராவால் வியக்காமல் இருக்க முடிந்ததில்லை.

சாவித்திரிக்கு ஒரு நாள் நல்ல காலம் பிறக்கும், அவள் பிள்ளைகளும் தலையெடுத்து, அவளும் சென்னையில் வந்து குடியேறுவாள், அதன் பிறகு தங்கள் இள வயது நட்பு  மீண்டும் புதிய வடிவம் பெற்று புத்துணர்வுடன் பூத்துக் குலுங்கும் என்பது மீராவின் நம்பிக்கை.

தன மகன் ராமு விஷயத்தில் மீராவுக்கு எப்போதுமே ஒரு குறை உண்டு. அவள் எவ்வளவுதான் வற்புறுத்தினாலும், அவன் கடிதம் போட மாட்டான் அமெரிக்கா போன பிறகுதான்  என்பதில்லை, படித்த காலத்தில், வெளியூரில் ஹாஸ்டலில் இருந்த போதும் அப்படித்தான்.

அக்கம்பக்கத்தில் ஃபோன் வைத்திருப்பவர்கள் வீட்டுக்கு ஃபோன் செய்து அவளைக் கூப்பிடுவான், அல்லது திடீரென நினைத்துக்கொண்டு நேரில் வந்து விடுவான்.

"ஒரு கார்டு போடக் கூடாதா?" என்றால், "போம்மா! எழுதணும்னாலே போரா இருக்கு" என்பான்.

அமேரிக்கா போனதும் பெரும்பாலும் ஃபோன்தான். அவள் கடிதம் எழுதச்  சொல்லி வற்புறுத்தியதால், ஈமெயில் அனுப்புவதாகச் சொல்லி, வீட்டில் கம்ப்யூட்டரும், இன்டர்நெட்டும் அமைத்துக் கொடுப்பதாகச் சொன்னான்.

"உன் ஈமெயில், கொசு மெயில் எல்லாம் யாருக்கு வேணும்? எனக்கு வேண்டியது உன் கைப்பட எழுதிய கடிதம்" என்று அவள் பிடிவாதமாக மறுத்து விட்டாள். ஆயினும், எப்போதாவது பக்கத்து வீட்டுக்கு ஈமெயில் அனுப்புகிறான். அவர்களும் அதை பிரிண்ட் அவுட் எடுத்து அவளிடம் கொண்டு வந்து கொடுக்கிறார்கள். இந்த ஈமெயிலையெல்லாம் விட்டொழித்து விட்டு, எப்போதோ ஒருநாள் கடிதம் போட ஆரம்பிப்பான் என்ற நப்பாசை அவளுக்கு உண்டு.

இப்போதைக்கு, கடிதம் வருவது சாவித்திரியிடமிருந்து மட்டும்தான். அவளிடமிருந்து கூடக்  கடிதம் வந்து ஒரு மாதம் ஆகி விட்டது. அடுத்த கடிதம் வரும் நேரம்தான்.

"போஸ்ட்!"
ஒவ்வொரு முறை ஒலிக்கும்போதும் அவள் காதில் தேனைப் பாய்ச்சத் தவறாத அந்த வார்த்தையைக் கேட்டதும் வாசலுக்கு ஒடினாள் மீரா.

கதவில் செருகப்பட்டிருந்த கடிதத்தின் மீது பார்வை பட்டதுமே பகீரென்றது. ஒரு வெள்ளை நிற கார்டு - கருப்பு எழுத்துக்களைத் தாங்கி.

அவசரமாகக் கடிதத்தை எடுத்துப் படித்தாள். அவள் தோழி சாவித்திரியின் மரணச் செய்தியைத் தாங்கி வந்திருந்தது அந்தக் கடிதம்.

(2003ஆம் ஆண்டு எழுதப்பட்டது)