Tuesday, November 2, 2010

1. நான் ஒரு முட்டாளுங்க!


நான் ஒன்றும் என்னைப்பற்றி ரொம்பவும் பெரிதாக நினைத்துக் கொண்டிருக்கும் ஆள் இல்லை.

ஆனாலும், என் நண்பர் முத்துசாமி திடீரென்று ஒரு நாள் என்னிடம் வந்து, "நான் ஆரம்பிக்கப்போகும் 'முட்டாள்கள் முன்னேற்ற முன்னணி'யில்  முதல் உறுப்பினராக நீங்கள்தான் சேர வேண்டும் என்று கேட்டதும், எனக்குக் கோபம்தான் வந்தது.

"என்ன வனாமுனா (வ. முத்துசாமியை நான் அப்படித்தான் அழைப்பது வழக்கம்!), விளையாடுகிறீர்களா?" என்றேன் கோபத்தை வெளிக்காட்டி.

"விளையாட்டு இல்லை சார், சீரியஸாகத்தான் சொல்லுகிறேன். உண்மையைச் சொல்லுங்கள். உங்களை யாரும் முட்டாள் என்று அழைத்ததில்லையா? அல்லது மனதுக்குள்ளாவது உங்களைப்பற்றி அப்படி யாரும் நினைத்ததில்லையா?" என்றார் வனாமுனா.

அவர் இப்படிக் கேட்டதும் என் கோபம் சங்கடமாக மாறி விட்டது. அன்று பள்ளி ஆசிரியரிலிருந்து, இன்று ஆஃபீஸிசில் என் பக்கத்து சீட்டில் உட்கார்ந்து வேலை செய்யும் (அதாவது வேலை செய்யாமல் உட்கார்ந்திருக்கும்) பத்மநாபன் வரை, பலரின் ஒருமித்த கருத்துதான் இது. வனா முனா குறிப்பிட்டதைப்போல், என் பள்ளி ஆசிரியரைப் போல் ஒரு சிலர் இதை வெளியே சொல்லியிருக்கிறார்கள். பத்மநாபனைப் போல் சிலர் மனதுக்குள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவ்வளவுதான் வித்தியாசம்!

 என் மௌனத்தைப் பொருட்படுத்தாமல், வனாமுனா அடுத்த குண்டை வீசினார்.

"அப்படி அவர்கள் உங்களைப்பற்றி நினைப்பது சரிதான் என்று உங்களுக்கே சில சமயம்  தோன்றியதில்லையா?"

சில சமயம் என்ன, பல சமயம் அப்படித்தான் தோன்றியிருக்கிறது! அதற்காக இதையெல்லாம் இவரிடம் ஒப்புக்கொள்ள முடியுமா என்ன?

மீண்டும் மௌனம் சாதித்தேன்.

"கேள்வியை மாற்றிக்  கேட்கிறேன். மற்றவர்கள் நினைப்பது ஒருபுறம் இருக்கட்டும். நீங்களே சில சமயம் உங்களை முட்டாள் என்று கருதியிருக்கிறீர்களா  இல்லையா?" என்றார் வனாமுனா.

"வனாமுனா, இந்த வாவன்னா மூவன்னா - அதாவது வாக்குமூலம் -  எல்லாம்   எதற்கு?" என்றேன் நான் பொறுமையிழந்து.

"வேறு எதற்கு? மு.மு.மு. வில் முதல் உறுப்பினராகச் சேர்வதற்கு நீங்கள் முற்றிலும் தகுதிடையவர் என்பதை உங்களுக்கு உணர்த்துவதற்குத்தான்" என்று விளக்கினார் வ.மு.

நான் பிடி கொடுக்காமல், "என் கதை இருக்கட்டும். உங்கள் சமாசாரம் என்ன? நீங்கள் ஏன்   முதல் உறுப்பினராகச் சேரக்கூடாது?" என்று அவரை மடக்கினேன்.

வனாமுனாவா மடங்குகிறவர்? "எல்லாம் ஒரு தன்னடக்கம்தான்! நீங்கள் முதல் உறுப்பினராகச் சேர்ந்தால், உங்களைப்  பின்பற்றும் முதல் ஆளாக நான் இருப்பேன்" என்றவர், சற்று நிறுத்தி விட்டு, "அதாவது, நான் முன்னணியின் கன்வீனர் அல்லது அமைப்பாளர்.  நீங்கள் தலைவர்" என்று ஜனநாயக (!) முறையில் பதவி விநியோகத்தைத துவக்கினார்.

"அப்படியானால் நீங்கள் ஒரு முட்டாள் என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?"  என்றேன்  நான் விடாமல்.

"ஒப்புக்கொள்ளவில்லை. அறிவிக்கிறேன். ஒப்புக்கொள்வது என்பது இன்னொருவர் சொல்வதை அங்கீகரிப்பது. 'நான் ஒரு முட்டாள்' என்பது  என்னுடைய டிக்ளரேஷன் - கன்பெஷன் இல்லை." என்றார் வ.மு. சளைக்காமல்.
(என்னதான் வ.மு. தன்னை ஒரு முனா என்று கூறிக்கொண்டாலும், வார்த்தைகளைப் பயன்படுத்துவதில் தேர்ந்தவர்தான்!)

கடைசியில் அவரை மடக்கும் முயற்சிகளைக் கைவிட்டுப் பணிவாக, "உங்கள் நோக்கம்தான் என்ன?' என்றேன்.

"அப்படிக் கேளுங்கள்" என்றார் வ.மு. இதைச் சொல்லிவிட்டு அவர் கொஞ்சம் இடைவெளி விட்டது அவர் ஒரு நீண்ட விளக்கத்தை அளிக்கப் போகிறார் என்பதைக் காட்டியது.

"நாம் ஒவ்வொருவரும்,  நம்மைச் சுற்றியிருக்கும் ஒவ்வொருவரையும் எதாவது ஒரு சமயத்திலாவது முட்டாள் என்று கருதியிருக்கிறோம். அவ்வாறே நாம் ஒவ்வொருவரும் நம்மை அறிந்த ஒவ்வொருவராலும் ஒரு சந்தர்ப்பத்திலாவது முட்டாள் என்று நினைக்கப் பட்டிருக்கிறோம்.  இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால் ஒவ்வொருவருமே சில சமயங்களில் முட்டாளாக இருந்திருக்கிறோம். இதைத்தான் ஒரு அறிஞன் சொன்னான்: 'ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்வில் ஐந்து நிமிடமாவது முட்டாளாக இருக்கிறான். இந்த அளவைத் தாண்டாமல்  இருப்பதில்தான் நமது புத்திசாலித்தனம் இருக்கிறது' என்று. முட்டாள்தனம் என்பது மனிதனின் இயல்பான குணம் என்று இதிலிருந்து  தெளிவாகிறது. இந்த உண்மையை நாம் ஏன் ஏற்றுக்கொள்ளக் கூடாது?

"எதற்காக ஏற்றுக்கொள்ள வேண்டும்?"

"நமது அறியாமையை அறிந்திருப்பதுதான் அறிவு என்று வேதம் கூடக் கூறுகிறது. அது போல் நான் ஒரு முட்டாள் என்பதை உணர்ந்திருப்பதுதான் விவேகம் என்று நான் நினைக்கிறேன்."

'சரி.  இந்த முன்னணியை அமைத்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்?"

"மக்கள் தங்கள் அறியாமையை உணர்ந்து  அதைப்போக்க முயற்சி செய்வார்கள். உண்மையை ஒப்புகொள்ளும் பக்குவத்தையும் பெறுவார்கள். ஆனால் இதெல்லாம் பொதுவான விஷயங்கள். குறிப்பாகப் பார்த்தால் பல சாதனைகளுக்கு இது வழி வகுக்கும். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் அளிக்கப்படும் கல்வியைப் புரிந்து கொள்ளாமலே கற்பதை விட்டு விட்டு, 'நாங்கள் முட்டாள்கள். எங்களுக்குப் புரிகிற மாதிரி கல்வியை   எளிமையாக்குங்கள்' என்று கோரலாம். மக்களுக்குப் புரியாத வண்ணம் எழுதி அதன் மூலமே தங்களைச் சிறந்த படைப்பாளிகளாகக்   காட்டிக் கொள்ளும் கவிஞர்களையும்,  படைப்பாளிகளையும் நமக்குப் புரியும்படி எழுதுமாறு தைரியமாகக் கேட்கலாம். தேர்தல் சமயத்தில் எந்தக் கட்சி வேட்பாளர் நம்மைப் பெரிய முட்டாளாக நினைத்துச் செயல்பட்டார் என்பதை பகிரங்கமாக அறிவிக்கலாம். இன்னும் எவ்வளவோ! ஏன், நாம்  தவறாக எதாவது செய்து விட்டால் கூட, மற்றவர்கள் அதைப் பெரிது படுத்தாமல், "பாவம், முட்டாள்தானே!' என்று விட்டு விடுவார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, நம்மை யாராவது முட்டாள் என்று திட்டும்போது - மேலதிகாரியோ, பக்கத்து  வீட்டுக்காரரோ, நாம் சாலையில் ஓரமாக நடந்து போகும்போது நம் மீது மோதப் பார்த்து மயிரிழையில் வாய்ப்பைத்  தவற விட்ட ஆட்டோ டிரைவரோ அல்லது வேறு எவரோ நம்மை அடிக்கடி 'முட்டாள்' என்று திட்டிக்கொண்டுதான் இருக்கப் போகிறார்கள்! - கோபப்படாமல் மகிழ்ச்சி அடையலாம். இதனால் ரத்தக்கொதிப்பு நோய் வருவதைத் தவிர்க்கலாம்."

முட்டாளாக இருப்பதில் இவ்வளவு சௌகரியங்கள் இருப்பது இவ்வளவு விஸ்தாரமாக  வனாமுனா பட்டியலிட்டுக் காட்டியபிறகுதான் எனக்குப் புரிந்தது. எனினும், விட்டால், விடாமல் மேலும் மேலும் சொல்லிக்கொண்டேயிருப்பார் என்று தோன்றியதால், நான் பிரேக் போட்டு அவர் பேச்சை நிறுத்த வேண்டியிருந்தது.

"சரி. முன்னணியின் தொடக்க விழாவுக்கு யார் யார் வரப்போகிறார்கள்? முக்கியமான விருந்தினர் யாராவது உண்டா?"

"ஒரு அமைச்சரை அழைக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் ஒரு அமைச்சரை அழைத்தால், மற்ற அமைச்சர்கள், 'எங்களுக்கு மட்டும் தகுதி இல்லையா?" என்று கோபித்துக் கொள்ளக் கூடும்! வேறு வி.ஐ.பி.களை அழைத்தாலும் சிக்கல்கள் வரலாம். அதனால், தனக்கு 21 வயது ஆனதிலிருந்து  பொதுத்தேர்தல், இடைத்தேர்தல், பஞ்சாயத்துத் தேர்தல், கூட்டுறவு சங்கத்தேர்தல் என்று ஒரு தேர்தல் பாக்கியில்லாமல் எல்லாத் தேர்தல்களிலும் வாக்களித்து வந்திருக்கும் ஒரு எளிய மனிதரை ('அப்பாவியை' என்று சொன்னால் அவர் கோபித்துக் கொள்ளப் போகிறார்!) முக்கிய விருந்தினராக அழைத்து கௌரவிக்க உத்தேசம்."

"மு.மு.மு. வின் முழக்கம் என்று எதாவது உண்டா?'

"உலக முட்டாள்களே ஒன்று படுங்கள். இழப்பதற்கு உங்களிடம் முட்டாள்தனத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை - இந்த கோஷம் எப்படி?"

"ரொம்பப் பொருத்தம்!'

"அப்படியானால் மு.மு.மு. வின் முதல் உறுப்பினராகச் சேர உங்களுக்கு முழுச்  சம்மதம்தானே?" என்று பாயிண்ட்டுக்கு வந்தார் வ.மு.

நான் கொஞ்சம் யோசித்தேன்.

"யோசிக்காதீர்கள். முட்டாள்கள் யோசிக்கக் கூடாது!"

"சரி.

"அப்படியானால் வருகிற சனிக்கிழமை காலை பத்து மணிக்கு என் வீட்டுக்கு  எதிரே இருக்கும்  மைதானத்துக்கு  வந்து விடுங்கள். அங்கேதான் துவக்க விழா" என்று சொல்லி விடைபெற்றார் வனாமுனா.

வனாமுனா என்னை யோசிக்கக்கூடாது   என்று சொல்லியிருந்தாலும், அவர் சென்று நெடு நேரம் வரை அவர் சொன்ன விஷயங்களைப் பற்றித்தான் நான் யோசித்துக் கொண்டிருந்தேன்.

காலண்டரைப் பார்த்தேன். அடுத்த வாரம் சனிக்கிழமை.

அட, அன்று ஏப்ரல் முதல் தேதி அல்லவா?

மு.மு.மு. வைத் துவக்க   முட்டாள்கள் தினம்தான் பொருத்தமாக  இருக்கும் என்று அந்த நாளை  வ.மு.  தேர்ந்தெடுத்தாரா? அல்லது இந்த மு.மு.மு. சமாசாரமே என்னை முட்டாளாக்குவதற்காகத்    திரிக்கப்பட்ட கயிறா?

இரண்டில் எது உண்மையானாலும், வனாமுனா என்னை ஒரு வனாமுனாவாக - வடிகட்டிய முட்டாளாக - ஆக்கி விட்டார் என்பது மட்டும் நிச்சயம்.

(ஏப்ரல் 2 , 1989   கல்கி இதழில் வெளியானது. எழுதியவர் : விஜயசாரதி.)

மற்ற கதைகள்:
 ஒரு தபால்காரர் ஒய்வு பெறுகிறார் 


 ,