அந்தச் சிறிய ஹோட்டலுக்குள் அந்தப் பெண் தயங்கிக் கொண்டே நுழைந்தாள் அங்கே கூட்டம் அதிகம் இல்லை. ஒன்றிரண்டு மேஜைகளைத் தவிர, மற்றவை எல்லாம் காலியாகவே இருந்தன.
ஃபேமிலி ரூம் இருக்கிறதா என்று பார்ப்பது போல், அவள் சுற்றுமுற்றும் பார்த்தாள். அங்கே அப்படி எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை.
”இங்கே வந்து உட்காருங்கள், அம்மா!” என்று ஒரு சர்வர் அவளை அழைத்தான். அவள் அவனைத் திரும்பிப் பார்த்து விட்டு, மறுபடியும் கொஞ்சம் தயங்கி விட்டு, அவன் காட்டிய இடத்துக்குப் போனாள். அது ஒரு ஓரமாக இருந்தது. பக்கத்து மேஜைகள் எல்லாமே காலியாக இருந்தன.
சற்றுத் தள்ளி அமர்ந்திருந்த முத்துசாமி அவளை கவனித்தார் அவளுக்கு வயது 25க்குள் இருக்கும் என்று தோன்றியது. ஏதோ ஒரு அலுவலகத்தில் வேலை செய்யும் பெண் போல் தோற்றமளித்தாள்.
இது போன்ற ஒரு சிறிய ஹோட்டலுக்கு அவள்
தனியாக வந்திருப்பது அவருக்கு வியப்பாக இருந்தது. உடன் வேலை செய்யும் மற்ற
பெண்களுடன் வந்திருக்கலாமே! ஒருவேளை இவள் வேலை செய்யும் இடத்தில், இவளைத் தவிர
வேறு பெண்கள் இல்லாமல் இருக்கலாம், அல்லது அவர்கள் எல்லோரும் தங்கள் வீட்டிலிருந்து
மதிய உணவு கட்டி எடுத்து வந்திருக்கலாம்.
பக்கத்தில் பெரிய ஹோட்டல்களில், பெண்களுக்கு வசதியாக, ஃபேமிலி ரூம்கள இருக்குமே! அவற்றை விட்டு விட்டு, அவள் இந்தச் சின்ன
ஹோட்டலுக்கு ஏன் வந்தாள்?
அவளுடைய செய்கை அவருக்குச் சற்று விசித்திரமாக இருந்தது.
தனியே வரும் பெண்களை, இளைஞர்களும், ரவுடிகளும் சீண்டுவதை அடிக்கடி பார்த்து, அதனால் சீற்றமடைந்தவர் அவர். பெண்கள் வெளியே பயமில்லாமல் நடமாடவே நம் நாடு லாயக்கற்றது என்ற எண்ணம் அவருக்கு உண்டு. அதனாலேயே, தன் பெண்ணின் படிப்பை எஸ்.எஸ்.எல்.சியோடு நிறுத்தி விட்டு, அவளை வீட்டிலேயே இருத்திக் கொண்டார் அவர்.
தான் போகிற இடங்களிலெல்லாம், தனியாக வரும் பெண்களை யாராவது அணுகி வம்பு செய்கிறார்களா என்று கவலையோடு கவனிப்பதை அவரால் தவிர்க்க முடியவில்லை. தான் இந்தப் பெண்களுக்கு ‘பாடிகார்டா’ என்று அவரே வேடிக்கையாக நினைத்துக் கொண்டாலும், இந்த விஷயத்தில் தனது கவலையையும் மன உந்துதலையும் அவரால் புறக்கணிக்க இயலவில்லை.
இப்போது, அந்தப் பெண் கொஞ்சம்
சுவாதீனம் அடைந்து விட்டதாகத் தோன்றியது. முதலில் இருந்த மருட்சி இப்போது நீங்கி
இருந்தது.
கைப்பையைத் திறந்து, அதில் இருந்த கைக்குட்டையை
எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டாள்.
‘முட்டாள் பெண்ணே! உன் கைப்பையை இப்படிப் பொது இடத்தில் திறந்து பார்க்காதே! அதில் நீ வைத்திருக்கக் கூடிய பணத்துக்கும், விலை உயர்ந்த பொருட்களுக்கும் ஆபத்து ஏற்படக் கூடும். அதோ பார்! அந்த கிளீனர் பையன் மேஜையைத் துடைக்கிற சாக்கில், அந்தப் பக்கம் வந்து, உன் பையை எட்டிப் பார்க்கிறான்!’
அவளே அங்கே அழைத்து உபசரித்து உட்கார
வைத்த சர்வர், இப்போது தண்ணீர் எடுத்துக் கொண்டு அவளிடம் வந்தான். வழக்கமாகச்
செய்வது போல், விரலை தம்ளருக்குள் விடாமல், நாசூக்காக அவன் தம்ளரை எடுத்து வந்து
வைத்ததைப் பார்த்த முத்துசாமி, பல்லைக் கடித்தார்.
‘அயோக்கியன்கள்! ஒரு இளம் பெண்ணைக் கண்டாலே
இவன்களுக்கெல்லாம் ஒரு இது வந்து விடுகிறது!’
‘என்ன சாப்பிடறீங்க?’
‘என்ன இருக்கு?’
‘இட்லி, பொங்கல், வடை, தோசை, பூரி,
போண்டா, பஜ்ஜி, ரவா தோசை...’
‘ம்.. சரி.ரெண்டு இட்லி.’
‘இவ்வளவுதானே பேச வேண்டும்? இதற்கு
எவ்வளவு நேரம் ஆகும்?’ என்று முத்துசாமி மனதுக்குள் கணக்குப் போட்டுப் பார்த்தார்.
அவர் கணக்கில் வந்த நேரத்தை விட
அதிகமான நேரத்துக்கு அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள் - அதாவது அவன் பேசிக் கொண்டிருந்தான்.
‘அந்த முட்டாள் பெண் கேட்டுக் கொண்டிருக்கிறாள்!’
அவர்கள் பேச்சு அவருக்குக் காதில்
விழவில்லை.
‘ஆனால், ஒரு சர்வருக்கு ஒரு
வாடிக்கையாளரிடம் இவ்வளவு நேரம் பேச என்ன இருக்கிறது?’
அவள் ஏதோ சொல்ல, அவன் சிரித்துக்
கொண்டே உள்ளே போனான். திரும்பி வரும்போது, ஒரு பிளேட்டில் ஜாங்கிரி எடுத்துக்
கொண்டு வந்தான்.
‘இதற்குத்தான் இவ்வளவு நேரம் உபசாரம்
செய்தானோ? ஏதோ, வியாபாரத்தையாவது நன்றாக நடக்கச் செய்கிறானே!’
இனிப்பை வைத்து விட்டு, அங்கேயே நின்றான்.
அவள் ஏதோ சொல்ல (அடுத்த ஐட்டத்துக்கு ஆர்டர்?), இவன் ஏதோ பதில் சொன்னான்.
‘போண்டா வேண்டாம், அது போன வாரம்
போட்டது!’
மறுபடி அவள் ஏதோ சொல்லி, அவனைப் ‘போ’ என்று சைகை
காட்டினாள்.
‘அப்பாடா! இப்போதுதான் அவள் ரியாக்ட்
பண்ணுகிறாள்!'
அவன் முகம் சுருங்கி விட்டது போல்
தோன்றியது. உள்ளே போவது போல் போய் விட்டு, மறுபடியும் திரும்பி வந்தான். அவள்
மீண்டும் அவனை சைகை காட்டி அனுப்பி விட்டாள்.
சற்று நேரம் கழித்து, ஒரு தோசையை எடுத்துக் கொண்டு வந்தான். மறுபடி அவளிடம் ஏதோ பேச்சு. மறுபடியும் அவள் விரட்டினாள். அதற்குப் பிறகு, காப்பி கொண்டு வந்து வைத்து விட்டு, பில்லை எடுத்து வந்தான்.
அப்போதுதான், முத்துசாமி அதை கவனித்தார்
அந்தப் பெண் தன் கழுத்தை வருடியபோது, மஞ்சள் கயிறு வெளியே தெரிந்தது.
அடப்பாவி! கல்யாணமான பெண்ணிடமா, இந்தப் போக்கிரி
பல்லிளிக்கிறான்?
அவள் எழுந்திருந்தபோது, அவன் பில் கொடுக்கும்
சாக்கில், அவள் கைகளைப் பற்றினான். அவள் சட்டென்று தன்னை விடுவித்துக் கொண்டு, வேகமாகப் போய்
விட்டாள்.
அவள் பில்லுக்குப் பணம் கொடுத்து
விட்டு வெளியேறும் வரை காத்திருந்த முத்துசாமி, எழுந்திருந்து அந்த சர்வரிடம்
சென்றார்.
“ஏண்டா, அயோக்கியப் பயலே! கல்யாணமான
பெண்ணிடமா, உன் கைவரிசையைக் காட்டுகிறாய்?” என்று சொல்லி, அவனைப் பளீரென்று அறைந்தார்.
மாலையில், அவன் வீட்டுக்குத்
திரும்பியபோது, அவன் மனைவி கேட்டாள். “ஏதோ மத்தியானம் கொஞ்சம் பேசிக் கொண்டிருக்கலாமே
என்று ஹோட்டலுக்கு வரச் சொன்னீர்கள். அதற்காக, அப்படியா பல பேர் முன்னிலையில் நெருக்கம்
காட்டுவது? என் கணவர் ஒரு ஹோட்டல் சர்வர் என்று தெரிந்தால், எனக்கு எவ்வளவு அவமானம்?”
என்றாள்.
“நீ என் மனைவி என்று மற்றவர்களுக்குத் தெரிந்தால்,
அது உனக்கு அவமானம். தெரியாததால், எனக்கு அவமானம்!” என்றான் அவன்.
அடுத்த பதிவு: அவன் செய்த சிபாரிசு
முந்தைய பதிவு: சிறைக்குப் போகும் கண்டம்
No comments:
Post a Comment