Sunday, December 2, 2012

11. தேவை ஒரு காரணம்


தினமும் எப்படியோ தாமதமாகி விடுகிறது.

மூர்த்திக்கு அலுவலகம் பத்து மணிக்குத்தான். மெதுவாக எழுந்து, குளித்து, சாப்பிட்டு நேரத்துக்கு அலுவலகத்துக்குப் போவது சுலபமானதாகத்தான் இருக்க வேண்டும்.

ஆனால் அப்படி இல்லை.

தினமும் அவன் அலுவலகத்துக்குள் நுழையும்போது நேரம் 10-10 அல்லது 10-15 ஆகி விடுகிறது.

இத்தனைக்கும் மூர்த்தி அலுவலகத்துக்குப் போவது அவனுடைய ஸ்கூட்டரில்தான். அதனால் பஸ்ஸுக்காகக் காத்து நின்று தாமதம் ஏற்படுவது என்பதும் இல்லை.

மூர்த்தி தினமும் நினைத்துக் கொள்வான் - நாளை முதல் தாமதமாகப் போகக்கூடாது என்று. ஆனால் அந்த 'நாளை' இன்னும் வரவில்லை!

நினைத்துப் பார்த்தால் அவனுக்கு வியப்பாகத்தான் இருக்கிறது. காலையில் ஆறரை மணிக்கு எழுந்து நிதானமாக எட்டு மணிக்குக் குளிக்கப்போகும்போது, 'இன்னும் நிறைய நேரம் இருக்கிறது. இன்றைக்குச் சீக்கிரம் போய் விடலாம்' என்றுதான் தோன்றும்.

ஆனால் அடுத்த ஒன்றரை மணி நேரத்துக்குள் ஏதாவது நிகழ்ந்து விடுகிறது.

யாராவது நண்பர்கள், விருந்தாளிகள் வருவார்கள். அல்லது எதையாவது தேட ஆரம்பித்து,  போவதே தெரியாமல் நேரம் பறந்து விடும். அடித்துப் பிடித்து அலுவலகம் சென்றடைவதற்குள் மணி பத்தைத் தாண்டி விடும்.

'தாமதமாக வருவது என்பது உனக்கு ஒரு பழக்கமாகப் போய் விட்டது. பழக்கங்களைக் கை விடுவது கடினம்' என்பார் அவனுடைய அலுவலகத்தின் முந்தைய நிர்வாகி சிரித்துக்கொண்டே.

இப்போது அவர் இல்லை.  அவர் இடத்தில் புதிதாக வந்திருப்பவருக்கு மிகவும் பிடித்த ஆங்கில வார்த்தை 'டிஸிப்ளின்.' பிடிக்காத வார்த்தை (எல்லா மொழிகளிலும்) 'நகைச்சுவை.' அவர் அந்த அலுவலகத்துக்கு வந்த புதிதில், அவர் 'டிஸிப்ளின்' 'டிஸிப்ளின்' என்று திரும்பத் திரும்பச் சொன்னதைக் கேட்டு, ஒருமுறை மூர்த்தி விளையாட்டாக, " 'கடமை, கண்ணியம், கட்டுப்பாடு' என்று சொன்ன அண்ணாவின் கடைசித் தம்பியா சார் நீங்கள்? அவர் சொன்ன மூன்று வார்த்தைகளில் கடைசி வார்த்தையை மட்டும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறீர்களே?" என்று சொல்லப்போக, அலுவலகத்தில் அரசியல் பேசுவது, அதிகப்பிரசங்கித்தனம் செய்வது  ஆகிய இரண்டு கட்டுப்பாடு மீறிய செயல்களை அவன் செய்து விட்டதாக அவர் சுட்டிக் காட்டினார்.

அவர் நிர்வாகத்தில் தாமதமாக வருவது ஒரு பெரும் குற்றமாகக் கருதப்பட்டது. ஆயினும், மூர்த்தியால் அவ்வளவு சுலபமாகத் தன் பழக்கத்தை மாற்றிக்கொள்ள முடியவில்லை.

தாமதமாக வந்த ஒவ்வொரு நாளும் நிர்வாகியின் முன் போய் நின்று காரணம் சொல்ல வேண்டியிருந்தது.

இன்றைக்கும் தாமதமாகி விட்டது. அநேகமாக எல்லா விதமான இயல்பான காரணங்களையும் முன்பே சொல்லியாகி விட்டது.

'இன்று ஒருநாள் ஒரு நம்பத்தக்க காரணத்தைச் சொல்லி விட வேண்டும். நாளை முதல் நிச்சயம் தாமதமாக வரப்போவதில்லை' என்று முடிவு செய்து கொண்டான்.

நிர்வாகியின் முன் நின்றபோது ஒரு அருமையான காரணம் மனதில்  தோன்றி விட்டது. "சார்! சொன்னால் நம்ப மாட்டீர்கள். இன்றைக்கு நான் ஒன்பதே முக்கால் மணிக்கெல்லாம் அலுவலகத்தில் இருந்திருக்க வேண்டும். பாதி தூரம் வந்ததும்தான் தெரிந்தது - மேஜை டிராயர் சாவியை வீடிலேயே மறந்து வைத்து விட்டேன் என்று. மறுபடியும் வீட்டுக்குப் போய் எடுத்து வந்ததில்  பத்து நிமிடம் தாமதமாகி விட்டது."

நிர்வாகி ஏதும் சொல்லத் தோன்றாமல் தலையசைத்தார்.

மூர்த்தி வெற்றிக் களிப்புடன் தன் இருக்கைக்குப் போனான். சாவியை எடுப்பதற்காக பேண்ட் பைக்குள் கை விட்டதும்தான், மேஜை சாவியை வீட்டிலேயே வைத்து விட்டு வந்தது தெரிந்தது!

Saturday, November 17, 2012

10. நாளைய செய்தி இன்றே!

பொதுவாகவே எதையும் உடனே நம்பி விடாதாவன் நான். எதையுமே தீர விசாரித்து விட்டுத்தான் நான் ஒரு முடிவுக்கு வருவேன்.

அதனால்தான் பிரபல மாஜிக் நிபுணர் சுரேந்திராவின் சில சாதனைகளை என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை.

தற்செயலாக அவரை ஒரு பார்ட்டியில் சந்தித்தபோது அவரது அறிமுகம் எனக்குக் கிடைத்தது. நான் ஒரு பத்திரிகையாளன் என்று அறிந்ததும், என்னுடன் நெருக்கமாகப் பழகுவதில் அவர் ஆர்வம் காட்டினார்.

அந்தப் பார்ட்டிக்குப் பிறகும் எங்கள் தொடர்பு நீடித்தது. 

சில நாட்கள் பழக்கத்துக்குப் பிறகு, ஒருநாள் சற்று உரிமை எடுத்துக் கொண்டு அவரிடம் கேட்டேன். 

"உண்மையைச் சொல்லுங்கள் சுரேந்திரா. உங்கள் சாதனைகள் எல்லாம் மக்களைக் கவர்வதற்காக நீங்கள் செய்கிற சின்ன ஏமாற்று வேலைதானே?" ('சின்ன' என்ற பெயர்ச்சொல் சுரேந்திரா அதிகம் புண்பட்டு விடக்கூடாது என்பதற்காக என்னால் அனிச்சையாகச் சேர்க்கப்பட்டது!)

சுரேந்திராவின் முகம் சட்டென்று வாடி விட்டது. 

"ராகவ், நீங்கள் இப்படிக் கேட்பீர்கள் என்று நான் எதிர்பர்க்கவில்லை. என்னுடைய 'மாஜிக் காட்சிகளில்' நான் செய்பவை எல்லாம் தந்திரங்கள்தான். அதைத் தவிர, தனிப்பட்ட முறையில் நான் ஒரு கிளார்வாயன்ட். நீங்கள் எதை ஏமாற்று வேலை என்று சொல்கிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை" என்றார் வருத்தமும் கோபமும் கலந்த குரலில்.

" 'கிளார்வாயன்ட்' என்றால்...?"

"பின்னால் நடக்கப் போகும் சில விஷயங்களை மனதால் உணர்ந்து கூறும் ஆற்றல்" என்று 'கிளார்வாயன்ஸியை' வரையறுத்தார் சுரேந்திரா.

நான் பெரிதாகச் சிரித்து, "கடைசியில் நீங்கள் ஜோசியத்தையும் விட்டு வைக்கவில்லையா?" என்றேன்.

"ஜோதிடக்கலை என்பது வேறு. அது ஒருவகை விஞ்ஞானம். அதற்கென்று சில விதிகள், வரைமுறைகள், சூத்திரங்கள் எல்லாம் இருக்கின்றன. ஜோதிடத்தை ஒரு பாடமாக, ஆர்வமுள்ளவர்கள்  யார் வேண்டுமானாலும் படித்து ஒரு ஜோதிடர் ஆக முடியும். மற்ற துறைகளில் இருப்பதுபோல் ஜோதிடத்திலும் மிகத் திறமையானவர்கள் என்று ஒரு சிலரே இருப்பார்கள். 

"ஆனால் 'வரும் பொருள் உரைத்தல்' என்று சொல்லக் கூடிய கிளார்வாயன்ஸி இவ்வுலகில் விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலருக்கு மட்டுமே இறைவன் அளித்திருக்கும் ஒரு வரம். ஒருவருக்கு இயல்பாகவே அமைந்தாலொழிய இந்த ஆற்றலைப் பெறுவது என்பது பெரும்பாலும் இயலாத ஒரு செயல்.

"தற்காலத்தில், கிளார்வாயன்ஸியைக் கூடக் கற்பிக்கிறோம் என்று சிலர் இறங்கியிருக்கிறார்கள். இவ்வாறு கற்றுக் கொடுக்க முனைபவர்களுக்கே இந்த ஆற்றல் இருக்கிறதா என்பது கேள்விவிக்குறிதான்!" என்று சுருக்கமாக(!) ஒரு விரிவுரை ஆற்றினார் சுரேந்திரா.

"உங்களுக்கு இந்த ஆற்றல் இருக்கிறது என்பதை எப்படிக் கண்டறிந்தீர்கள்?"

"சில நிகழ்ச்சிகள் அவை நடப்பதற்குச் சிறிது காலம் முன்பே என் மனதில் தோன்றியிருக்கின்றன என்ற உணர்வு எனக்குச் சிலமுறை ஏற்பட்டது. அதன் பிறகு என் மனதில் தோன்றும் சில குறிப்பிட்ட நிகழ்வுகளை ஒரு டயரியில் குறித்து வைத்துக் கொள்ள ஆரம்பித்தேன். சிறிது காலம் கழித்து அவை உண்மையாகவே நிகழ்ந்தபோது என் ஆற்றலை உறுதிப்படுத்திக் கொண்டேன். அதன் பிறகு என் ஆரூடங்களை வெளிப்படையாகச் சொல்ல ஆரம்பித்தேன்."

"குறிப்பாக நீங்கள் சொன்னபடி நடந்த சில விஷயங்கள்?"

"ராஜீவ் காந்தி மரணம், தேவ கவுடா பதவி இழந்தது..."

"மன்னியுங்கள். இது போன்ற பல அரசியல் நிகழ்வுகளை, பல்வகையான ஜோதிட முறைகளின்படி கண்டறிந்து சொன்னதாகக் கூறிக் கொள்பவர்கள் பலர் இருக்கிறார்கள்."

"சரி. நான் ஒரு பந்தயத்துக்கு ஒப்புக் கொள்கிறேன். இன்று தேதி பத்து. வரும் இருபதாம் தேதி 'ஹிந்து' பத்திரிகையின் தலைப்புச் செய்தி எதுவாக இருக்கும் என்பதை ஒரு பேப்பரில் எழுதி உங்கள் முன்பே ஒரு கவரில் போட்டு சீல் செய்து கொடுக்கிறேன். இருபதாம் தேதி காலை ஹிந்து பத்திரிகையின் தலைப்புச் செய்தி எது என்று பார்த்து விட்டு, அதன் பிறகு இந்தக் கவரைத் திறந்து பார்த்து, இரண்டும் ஒன்றாக இருந்தால் அன்று இரவு செம்பியன் ஹோட்டலில் எனக்கு ஒரு பெரிய விருந்து கொடுப்பீர்களா?"

பந்தயத்தை ஏற்றுக் கொண்டேன்.

"இருபதாம் தேதி நடக்கப் போகும், இந்தப் பேப்பரில் எழுதாத இன்னொரு நிகழ்வை உங்களுக்கு நான் இப்போது சொல்லப் போகிறேன்" என்றார் சுரேந்திரா

"என்ன அது?" என்றேன்

"இருபதாம் தேதி இரவு செம்பியன் ஹோட்டலில் நீங்கள் எனக்கு ஒரு பெரிய விருந்து கொடுக்கப் போகிறீர்கள்" என்றார் அவர் சிரித்தபடி.

அடுத்த சில நிமிடங்களில் அவர் கொடுத்த சீல் வைத்த கவருடன் வெளியேறினேன்.

ருபதாம் தேதி காலை ஹிந்து பத்திரிகையில் மட்டுமல்ல எல்லா பத்திரிகைகளிலும் ஒரே செய்திதான் வந்திருந்தது. டில்லிக்கு அருகே 19ஆம் தேதி நள்ளிரவு நடந்த கோரமான ரயில் விபத்தைப் பற்றிய செய்திதான் அது.

இந்தச் செய்தியை சுரேந்திராவால் நிச்சயம் 'முன் உணர்ந்திருக்க' முடியாது என்ற நிச்சயத்துடன் நான் பாதுகாப்பாக வைத்திருந்த சுரேந்திராவின் 'ஆரூடம்' அடங்கிய சீல் வைத்த கவரைப் பிரித்துப் படித்தேன்.

என்னால் நம்ப முடியவில்லை. ரயில் விபத்து குறித்த செய்தியைத்தான் சுரேந்திரா எழுதியிருந்தார்!

சுரேந்திரா பந்தயத்தில் ஜெயித்து விட்டார். அவர் எழுதிக் கொடுத்த ஆரூடம் பலித்து விட்டது. 

ஆனால் அவர் வாயால் சொன்ன ஆரூடம் பலிக்கவில்லை. என்னால் அவருக்கு இருபதாம் தேதி இரவு செம்பியன் ஹோட்டலில் விருந்து கொடுக்க முடியவில்லை - இரண்டு காரணங்களால்.

முதல் காரணம், முதல் நாள் இரவு நடந்த ஒரு தீ விபத்தில் செம்பியன் ஹோட்டல் பெரும் சேதம் அடைந்து தற்காலிகமாக முடப்பட்டு விட்டது.

இரண்டாவது காரணம், 19-ஆம் தேதி இரவு சுரேந்திரா மாரடைப்பால் இறந்து போய் விட்டார்.



Thursday, November 1, 2012

9. பலி

பிரபல ஆங்கிலப் பத்திரிகையின் ஒன்பதாம் பக்கத்தில் அந்தச் செய்தி வெளியாகியிருந்தது:

"ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு விற்கச் சதி செய்ததாக நடந்த வழக்கில், பிரபல விஞ்ஞானி பரமேஸ்வரன் மீது சாட்டப்பட்ட குற்றத்துக்கு ஆதாரம் இல்லை என்று சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பளித்தது."

பரமேஸ்வரன் செய்தித்தாளை மூடி வைத்தார். இரண்டு ஆண்டுகளாக அவரது வாழ்க்கையில் வீசிய கடும்புயல் இப்போது ஓய்ந்து விட்டது. ஆனால் அது விளைவித்த சேதங்கள்?

பரமேஸ்வரன் மெல்ல எழுந்தார். ஐம்பது வயதிலும் இருபது வயது இளைஞனைப் போல் அவரைச் செயல்பட வைத்த உற்சாகமும், உடல் வலுவும், மனவலிமையும் இந்த இரண்டாண்டு சம்பவங்களால் அடியோடு பறி போய் விட்டன.

எழுந்திருக்கும்போதே இடுப்பின் கீழ்ப்புறம் 'சுருக்'கென்று வலி. இனி ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும், பாதங்களிலிருந்து கால்களை மேல் உடலில் இணைக்கும் மூட்டுக்கள் வரை பல இடங்களிலிருந்தும் குரல் கொடுக்கப் போகும் உடல் வேதனைகளுக்கு இது ஒரு முன்னுரை. வெளி உடல் உறுப்புகள் தவிர, ஜீரண உறுப்புகள், இதயம், நுரையீரல் என்று உடலுக்குள்ளும் பாதிப்புகள்.

போலீஸ் 'விசாரணை' மற்றும் சிறை வாழ்க்கையின் தழும்புகள் இவை!

தன்மீது குற்றம் இல்லை என்று நிரூபிக்கப்பட்டு விட்டதால், இந்தத் தழும்புகள் மறைந்து விடுமா, அல்லது தான் அனுபவித்த உடல் வேதனையும், மன வேதனையும்தான் அகன்று விடுமா?

பௌதீகத்தில் 'மீள முடியாத மாற்றம்' என்று படித்தது அவர் நினைவுக்கு வந்தது.

'ஒரு ரப்பர் வளையத்தைக் கையால் இழுத்து, அப்புறம் விட்டால் அது மீண்டும் பழைய நிலைக்கு வந்து விடும். ஆனால் ஒரு இரும்புக் கம்பியை வளைத்து நிமிர்த்தினால் அது நிச்சயம் பழைய நிலைக்கு வராது' என்று கல்லுரியில் பேராசிரியராக இருந்தபோது மாணவர்களுக்கு 'எலாஸ்டிஸிடி' பற்றி எளிமையாக விளக்கியிருக்கிறார். 

அப்போதெல்லாம் கடினமான கோட்பாடுகளையும் எளிமையாக விளக்கும் அவரது திறமை மாணவர்களிடையே பெரும் வரவேற்பையும், பிரமிப்பையும் ஏற்படுத்தி அவருக்குப் பாராட்டுகளை வாங்கித் தரும்.

ஆனால் தனது எந்த விளக்கத்தாலும் தான் குற்றமற்றவர் என்பதை அவரால் போலீசாருக்குப் புரிய வைக்க முடியவில்லை.

கல்வித் துறையிலிருந்து, ராணுவ ஆராய்ச்சித் துறைக்கு வந்ததில், தான் எவ்வளவு இழந்து விட்டோம் என்று நினைத்துப் பார்த்தார். 

அரசு இயந்திரத்தின் சிவப்பு நாடாக்களியும் மீறி, தேசப் பாதுகாப்புக்காக உழைக்கிறோம் என்ற பெருமிதத்துடனும், உற்சாகத்துடனும் செயல்பட்டு, கடந்த இருபத்தைந்து வருடங்களில் அவர் தன் ஆராய்ச்சியின் மூலம் ஏற்படுத்திய முன்னேற்றங்களும், மாற்றங்களும் பல. 

ராணுவத் தலைமையகத்திலிருந்து அவருக்குப் பாராட்டுக் கடிதங்கள் கூட வந்திருக்கின்றன. ஏன், குடியரசுத் தலைவரிடமிருந்து பத்ம பூஷண் விருது கூட வாங்கியிருக்கிறார்.

எல்லாமே இரண்டு வருடங்களுக்கு முந்திய அந்த மே மாதத்தில் மாறி விட்டன.

இன்று இவர் விடுதலை செய்யப்பட்ட செய்தியை ஒன்பதாம் பக்கத்தில் கடமைக்காகப் பிரசுரித்திருக்கும் இதே பத்திரிகை அன்று முதல் பக்கத்தில் 'பிரபல விஞ்ஞானி கைது - ராணுவ ரகசியங்களைக் கடத்தியதில் உடந்தை' என்று இவர் கைதான செய்தியைக் கம்பீரமாகப் பிரசுரித்திருந்தது.

அப்போது ஒரு திருமணத்துக்காக அவர் விடுமுறையில் சென்னைக்கு வந்திருந்தார். அவர் பணி செய்த ஆராய்ச்சி நிறுவனம் இருந்தது பெங்களூரில். சென்னையில் தனது தங்கையின் வீட்டில் தங்கித் திருமணத்தில் கலந்து கொண்டு விட்டு அன்று இரவே சென்னையிலிருந்து கிளம்பி பெங்களூருக்கு வந்து விட்டார்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு சில முக்கியமான ராணுவ ரகசியங்கள் ஒரு ராணுவ ஆராய்ச்சி நிறுவனத்திலிருந்து ஒற்றர்கள் மூலம் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட இருந்ததாகவும், பாகிஸ்தானின் பெண் ஒற்றரைக் கைது செய்ததன் மூலம் கர்நாடக மாநில போலீஸ் இந்தச் சதியை முறியடித்து விட்டதாகவும் பத்திரிகையில் வந்த செய்தியைப் பார்த்துப் பரமேஸ்வரன் திடுக்கிட்டார்.

எந்த ராணுவ ஆராய்ச்சி நிலையம் என்று செய்தியில் குறிப்பிடப்படாவிட்டாலும், அது தனது தலைமையில் இயங்கும் ராணுவ ஆராய்ச்சி நிலையம்தான் என்பதில் அவருக்குச் சந்தேகமில்லை. 

தனது தலைமையில் இயங்கும் ஒரு அமைப்பில், தனக்குத் தெரியாமல் இப்படி ஒரு சதியா? அதுவும் பத்திரிகையில் செய்தி வந்த பிறகும் இது பற்றித் தனக்கு எதுவும் தெரிய வரவில்லை என்றால்? அவர் குழம்பினார்.

ஆனால் அவர் அதிக நேரம் குழம்ப வேண்டி இருக்கவில்லை. 

அவர் தனது அலுவலகத்துக்குச் சென்ற சற்று நேரத்துக்கெல்லாம் அவரைத் தேடிப் போலீஸ்காரர்கள் வந்தார்கள். அவர் புரிந்து கொள்ள முடியாத பல கேள்விகளைக் கேட்டார்கள். 

ஒரு பாகிஸ்தானியப் பெண்ணின் படத்தைக் காட்டி, 'இவளைத் தெரியுமா?' என்று கேட்டார்கள். 

'ராணுவ ரகசியங்களை விற்றதற்காகக் கிடைத்த பணத்தை என்ன செய்தாய்?' என்று வினவினார்கள். 

அவரது சென்னைப் பயணத்தைப் பற்றித் திரும்பத் திரும்பக் கேட்டார்கள். 'ஒரு திருமணத்தில் கலந்து கொள்ள' என்று அவர் சொன்னதைப் புறக்கணித்துப் பயண நோக்கம் பற்றிப் பலமுறை திரும்பத் திரும்பக் கேட்டார்கள்.

அவர் சென்னையில் கழித்த 16 மணி நேரத்துக்கும் கணக்குக் கேட்டார்கள். திருமணத்துக்குச் சென்று வந்த பிறகு, உறவினர் வீட்டில் படுத்துத் தூங்கியதாகச் சொன்னதைக் கேட்டுச் சிரித்தார்கள். 

கடைசியாக, "ஓட்டலில் ரஸியாவைப் பார்த்து ரகசியப் பேப்பர்களின் நகல்களைக் கொடுத்து விட்டு உடனே வர வேண்டியதுதானே? ரொம்ப நேரம் ஓட்டல் அறையில் தங்கியது அவளுடன் சல்லாபம் செய்யவா அல்லது தொடர்ந்து சதி வேலைகளுக்கான திட்டம் தீட்டவா?" என்று அவர்கள் கேட்டபோது அவர் முதல் முறையாக அதிர்ந்து போனார்.

"என்னையா சந்தேகப் படுகிறீர்கள்?" என்று அவர் அதிர்ச்சியிலிருந்து மீளாமல் கேட்டபோது, சினிமாவில் சொல்வது போல் "யூ ஆர் அண்டர் அரெஸ்ட்" என்றார்கள். அவர் கண்ணியமாக நடத்தப்பட்டது அதுதான் கடைசி முறை!

போலீஸ் ஸ்டேஷனை அடைந்ததுமே விசாரணை முறை மாறிற்று. அதுவரை 'சார்' என்று மரியாதையாக விளித்து வந்தவர்கள், அதற்குப் பிறகு அவரை விளிக்கப் பயன் படுத்திய வார்த்தைகளிலேயே மிகவும் மரியாதையான வார்த்தை 'ஏண்டா' என்பதுதான். கன்னடத்திலும், தமிழிலும் அவர் கேட்டிருந்த, மற்றும் கேட்டே அறிந்திராத பல வசவுச் சொற்கள் அவர் மீது பிரயோகிக்கப் பட்டன.

மரியாதைக் குறைவாக நடத்தப் படுகிறோமே என்ற வருத்தம் சிறிது நேரமே நீடித்தது. பழகி விட்டது என்பதால் அல்ல. அதைவிடக் கொடூரமான விஷயங்களை அவர் அனுபவிக்க ஆரம்பித்து விட்டதால்தான்.

காவல் நிலையங்களில் பயன்படுத்தப்படும் சித்திரவதை முறைகளைப் பற்றி அவர் கேள்விப்பட்டிருக்கிறார். ஆனால், அவை இவ்வளவு கொடூரமாக, நம்ப முடியாத அளவுக்கு மோசமாக, தாங்க முடியாத அளவுக்கு வேதனை அளிப்பவையாக இருக்கும் என்று அவர் அறிந்திருக்கவில்லை.

பொதுவாக அவரால் வலியைத் தாங்கிக்கொள்ள முடியாது. அவரது குழந்தைகள் சிறு வயதில் விளையாட்டாக அவர் முதுகில் அடித்தால் கூட வலி தாங்காமல் அவர்களைக் கடிந்து கொள்வார். 'குழந்தை விளையாட்டாக அடிப்பதைக் கூடப் பொறுத்துக் கொள்ள முடியவில்லையே உங்களால்!' என்று அவர் மனைவி கூட அங்கலாய்த்துக் கொள்வாள். அப்படிப்பட்டவர் உடல் வேதனையின் உச்சக் கட்டங்களுக்குச் சென்று மீண்டு வந்தார்.

தினமும் இரவில் தொடர்ந்த சித்திரவதைகளால் பொழுது சாயும்போதே அவரது உடல் முழுவதும் ஒரு கிலி பரவத் தொடங்கி விடும். இன்று விடுதலையாகி வீட்டில் இருக்கும்போது கூட, மாலை வந்தாலே, தன்னையறியாமல் உடலில் ஒருவித பயமும், நடுக்கமும் பரவ ஆரம்பித்து விடுகன்றன.

அவர் குற்றவாளி என்பதில் போலீசாருக்குச் சிறிதளவும் சந்தேகம் இருக்கவில்லை.

அவர்கள் தெரிந்து கொள்ள விரும்பியதெல்லாம் அவருக்கு எவ்வளவு பணம் கிடைத்தது, அதை என்ன செய்தார், எங்கே வைத்திருக்கிறார், ஸ்விஸ் வங்கி எதிலாவது அவர் பெயரில் பணம் போடப்பட்டிருக்கிறதா என்பவைதான்.

சில மாதங்களில் வழக்கு நீதிமன்றத்துக்கு வந்தது. அவருக்கு எதிராகச் சொல்லப்பட்ட சாட்சிகள் அவரை மலைக்க வைத்தன. அலுவலக ஜிராக்ஸ் அறைக்கு அவர் அடிக்கடி சென்றதாகவும், வீட்டுக்குப் போகும்போது சில அலுவலகத் தாள்களை அவரது கைப்பெட்டியில் போட்டு எடுத்துச் சென்றதைத் தான் பார்த்ததாகவும் அவருக்குக் கீழே பணி புரிந்த இளம் விஞ்ஞானி மஞ்சுநாத் சாட்சி சொன்னான்.

குறிப்பிட்ட தேதியில் 'அவரைப் போல் தோற்றம் கொண்ட' ஒருவரைக் குறிப்பிட்ட ஓட்டலில் பார்த்ததாக ஓரிரு சாட்சிகள் கூறினர்.

பரமேஸ்வரனை யாரும் நம்பியதாகத் தெரியவில்லை. 'ஒரு தேசத்துரோகியின் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டேனே!' என்று அவரது மாப்பிள்ளை அவரது மகளிடம் அங்கலாய்த்துக் கொண்டானாம்.

சிறையில் வந்து அவரைப் பார்த்த அவரது ஒரே மகன் "பணம் வேண்டுமானால் என்னிடம் கேட்டிருக்கலாம்" என்று ஒரே வரியில் சொல்லி விட்டுப் போனான்.

அவர் மனைவி கூட "நாம் இரண்டு பேர்தானே இருக்கிறோம்? இந்த வயதில் இப்படிச் செய்து ஏன் மாட்டிக் கொண்டீர்கள்?" என்று அழுதாள். "ஏன் இப்படிச் செய்தீர்கள்?" என்று கேட்கிறாளா அல்லது "ஏன் இப்படி மாட்டிக் கொண்டீர்கள்?" என்று கேட்கிறாளா என்று அவருக்குப் புரியவில்லை.

ஒரு வக்கீலை அமர்த்த முயன்றார். அவர் கேட்ட ஃபீஸ் இவருக்குக் கட்டுபடியாகவில்லை. "என்ன செய்வது? தப்பு செய்து மாட்டிக்கொண்டு விட்டால், 'சம்பாதித்த' பணத்தில் கொஞ்சம் செலவு செய்துதான் ஆக வேண்டும்" என்று 'நியாயம்' பேசினார் வக்கீல்.

வக்கீலுக்குக் கொடுக்கப் பணம் இல்லாத நிலையில், மகனிடமோ வேறு யாரிடமோ பணம் கேட்க அவருக்கு விருப்பம் இல்லை. வக்கீல் வைத்துக் கொள்ளாமல் தானே வாதாடிக் கொள்வது என்று முடிவு செய்தார்.

அவருக்கு ஒரு நம்பிக்கை இருந்தது. அவர் குற்றம் செய்திருந்தால் அவர் நிறையப் பணம் சம்பாதித்திருக்க வேண்டும்.

ஆனால் போலீஸ் அவர் வீட்டைச் சோதனை செய்தபோது அவருடைய பொருளாதார நிலை சராசரி அளவில்தான் இருந்ததை உணர்ந்திருப்பார்கள். இந்த ஒரு உண்மையே தனக்குச் சாதகமாக இருக்கும் என்று அவர் நினைத்தார்.

ஆனால் ரஸியாவின் சாட்சியம் அவரது நம்பிக்கையை உலுக்கி விட்டது. அவர் ஒருமுறை கூடப் பார்த்திராத அந்த பாகிஸ்தானியப் பெண் அவர் தன்னை ஓட்டலில் வந்து சந்தித்ததாகவும், தான் அவரிடமிருந்து  சில ரகசிய ஆவணங்களைப் பெற்றுக் கொண்டதாகவும் ஒப்புக் கொண்டாள்.

அவளிடமிருந்து சில ஆவணங்கள் போலீசாரால் கைப்பற்றப்பட்டிருந்தன. அந்த ஆவணங்கள் பரமேஸ்வரனின் முகவரி எழுதப்பட்டிருந்த ஒரு பழைய கவருக்குள் வைக்கப்பட்டிருந்ததால், அவர்தான் அந்த ஆவணங்களை அவளிடம் கொடுத்திருப்பார் என்று சந்தேகிக்க ஏதுவாயிற்று. 

அவருக்குக் கொடுக்க வேண்டிய பணம் அந்த சமயம் தனக்கு வந்து சேரவில்லை என்பதால் அவருக்குத் தான் பணம் ஏதும் கொடுக்கவில்லை என்று அவள் கூறியது இவருக்குச் சாதகமாக இருந்த ஒரே விஷயத்துக்கும் உலை வைத்து விட்டது.

பரமேஸ்வரன் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு அவருக்கு ஐந்தாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் தனது வசதிக்கேற்ற வகையில் ஒரு வக்கீலை ஏற்பாடு செய்து அவர் மூலம் ஹைகோர்ட்டுக்கு அப்பீல் செய்தார். ஆனால் ஹைகோர்ட் கீழ்க் கோர்ட்டின் தீர்ப்பை உறுதி செய்து விட்டது.

பின்பு மிகுந்த பிரையாசையுடன் சில நண்பர்களின் உதவியுடன் வேறொரு வக்கீலை வைத்து சுப்ரீம் கோர்ட்டுக்கு அப்பீல் செய்தார். இதற்கிடையில் பாகிஸ்தானியப் பெண் சிறையில் இறந்து போனாள். அது இயற்கையான மரணமா, தற்கொலையா, கொலையா என்ற சர்ச்சை எழுந்தது.

அவர் நிரபராதி என்று சுப்ரீம் கோர்ட் இப்போது தீர்ப்பளித்துள்ளது. போலிசுக்குக் கடுமையான கண்டனத்தையும், நாட்டின் மிகச் சிறந்த விஞ்ஞானி ஒருவருக்கு இத்தகைய கொடுமை நேர்ந்தது பற்றிய தனது வருத்தத்தையும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்திருந்தது.

இப்போது இவர் வேலை பார்த்த அரசு நிறுவனம் இவரை மீண்டும் வேலையில் சேர அழைத்திருக்கிறது.

மீண்டும் வேலையில் சேர்வதா என்பது பற்றிய சிறிய குழப்பத்துக்குப் பிறகு பரமேஸ்வரன் வேலையில் சேர முடிவு செய்தார். அவர் செய்து முடிக்க வேண்டிய முக்கியமான பணி ஒன்று இருந்தது.

ரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மீண்டும் தனது அலுவலக அறைக்குள் நுழைந்தார். அவர் இடத்தை அரசாங்கம் இன்னும் நிரப்பாமல் வைத்திருந்ததால், இடையில் வேறு யாரும் அவர் நாற்காலியில் உட்காரும் வாய்ப்பு வரவில்லை.

அவர் கைது செய்யப்பட்ட பின், அவரது அலுவலக அறை சோதனை போடப்பட்டதை அவர் அறிந்திருந்தார். சோதனைக்குப் பின் ஒழுங்கு படுத்தப்படாமல் பூட்டியே வைக்கப்பட்டிருந்த அவரது அறை அவர் மீண்டும் பணியில் சேர்கிறார் என்று தெரிந்ததும் அவசரமாக ஒழுங்கு படுத்தப்பட்டிருந்தது.

ஊழியர்கள் ஒவ்வொருவராக வந்து அவரை வாழ்த்தி வணக்கங்களையும் , வாழ்த்துக்களையும், மகிழ்ச்சியையும் தெரிவித்து விட்டுப் போனார்கள். அவருக்கு எதிராகச் சாட்சி சொன்ன மஞ்சுநாத் வந்தான். அவனுடைய தயக்கத்தையும், சங்கடத்தையும் அவனால் மறைக்க முடியவில்லை. "சார், உங்களிடம் தனியாகப் பேச வேண்டும்" என்றான்.

"உணவு இடைவேளையின்போது வா" என்றார் பரமேஸ்வரன்.

உணவு இடைவேளை வந்தது. மஞ்சுநாத்தும் வந்தான். சற்று நேரம் தலை குனிந்து உட்கார்ந்திருந்தவன், "சார், என்னை மன்னித்து விடுங்கள். போலீஸ் என்னை நிர்ப்பந்தித்ததால்தான் அப்படி சாட்சி சொன்னேன். நீங்கள் என்னை ஒரு மகன் போல் நடத்தினீர்கள். உங்களுக்கு துரோகம் செய்து விட்டேன்" என்றான் எழும்பாத குரலில்.

பரமேஸ்வரன் அவனை உற்றுப் பார்த்தார். அவன் சொன்னது சரிதான். அவர் அவனைத் தன் மகன் போல் பாவித்துத்தான் அன்பு செலுத்தி வந்தார். சிறகு முளைத்துக் குஞ்சுகள் பறந்து விட்ட பிறகு, தாய்ப்பறவைக்கு (தந்தைப் பறவைக்கும்தான்!) தன் அன்பை வெளிக் காட்ட வேறொரு ஜீவன் தேவைப்படுகிறது. அவர் இப்போது இங்கே வந்திருப்பது கூட அந்த தந்தைப் பாசத்தினால்தான்.

"மஞ்சு, நான் நிறையக் கொடுமைகளை அனுபவித்து விட்டேன். இந்தக் கொடுமைகள் வேறு யாருக்கும் நிகழக் கூடாது...குறிப்பாக நான் மகன் போல் நினைத்து அன்பு செலுத்தும் உனக்கு நிகழக் கூடாது."

"சார்..."

"எனக்கு உண்மை தெரியாது மஞ்சு. எல்லாம் என் யூகம்தான். என் மீது பொய்யாகப் பழி போடப்பட்டு நான் சிறைக்கு அனுப்பப்பட்டால், ராணுவ ரகசியங்களை விற்கும்  வேலையை நீ தொடர்ந்து செய்து கொண்டிருக்கலாம். யாருக்கும் சந்தேகம் வராது. அதனால் நான் பலிகடா ஆக்கப்பட்டேன். ரஸியாவும் எனக்கெதிராகச் சாட்சி சொல்லும்படி வற்புறுத்தப்பட்டிருக்கலாம். எப்படியோ ஒரு அப்பாவியின் வாழ்வைச் சிதைத்து விட்டீர்கள்.,."

"சார், நான் சொல்ல வருவதை..."

"நான் எதையும் கேட்க விரும்பவில்லை. எனது யூகம் எல்லாம் தவறாகவே இருக்கலாம். ஆனால் நான் சொல்ல வந்ததைச் சொல்லியே ஆக வேண்டும். ரகசியங்களை விற்பதை இன்னமும் நீ தொடர்ந்து செய்து வந்தால், தயவு செய்து உடனே அதை நிறுத்தி விடு. தேசப்பற்றினால் நான் இதைச் சொல்லவில்லை. தேசப்பற்றோடு செயலாற்றி வந்த எனக்கு இப்படிப்பட்ட பரிசுகள் கிடைத்த பிறகு, மற்றவர்களிடம் கடமை, தேசப்பற்று போன்ற விஷயங்களைப் பற்றி நான் பேசுவதில் அர்த்தமில்லை. உன் மீது நான் வைத்திருக்கும் அன்பினாலும், பாசத்தாலும், அக்கறையாலும் சொல்கிறேன். கடந்த இரண்டு வருடங்களாக எனக்கு நேர்ந்த அனுபவங்களை இப்போது நினைத்துப் பார்த்தால் கூட உடல் சில்லிட்டுப் போய் விடுகிறது...

"தவறு செய்பவன் ஒருநாள் பிடிபடுவான். எந்தத் தவறும் செய்யாத எனக்கே இவ்வளவு கொடுமைகள் நிகழ்ந்தபோது, தவறு செய்த, இன்னும் செய்து கொண்டிருக்கும் உனக்கு அத்தகைய அனுபவங்கள் ஏற்படாது என்று சொல்ல முடியாது. என் அன்புக்குரிய உனக்கு அத்தகைய கொடுமைகள் நிகழ்வதை என்னால் நினத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. எனவே தயவு செய்து  நிறுத்தி விடு. இப்போதே ...உடனேயே! இதை உன்னிடம் சொல்லி விட்டுப் போகத்தான் வந்தேன். நான் வேலையில் சேராமல் உன்னை வெளியே எங்கேயாவது சந்தித்துப் பேசியிருந்தால் அது உன் மீது மற்றவர்களுக்குச் சந்தேகங்களை ஏற்படுத்தி இருக்கும். அதனால் உன்னை அலுவலகத்தில் தனியாகப் பார்த்து இதைச் சொல்லி விட்டுப் போவதற்காகத்தான் நான் மறுபடி வேலையில் சேர்ந்தேன்.மற்றபடி தொடர்ந்து வேலை செய்வதில் எனக்கு எந்த ஆர்வமும் இல்லை."

அவன் பதிலை எதிர்பார்க்காமல் அவர் கிளம்பினார். தன் ராஜினாமாக் கடிதத்தை அன்று காலையிலேயே தன் மேலதிகாரிக்கு அவர் அனுப்பி விட்டார்.

('கல்கி' பத்திரிகையில் விஜயசாரதி என்ற என் புனைபெயரில் வெளியானது.)



Monday, October 29, 2012

8. ஆற்றங்கரை மரம்

பூஞ்சோலை ஸ்டேஷனில் ரயில் நின்றபோது ரகுவையும் சேர்த்து மூன்று பேர் இறங்கினார்கள். ரயிலில் இருந்தவர்களில் பத்து சதவீதத்தினர் இறங்கினார்கள் என்றும் சொல்லலாம்! 

முப்பது பேர் பயணம் செய்வதற்காக, எட்டு பெட்டிகளுடன், இந்தத் தடத்தில் தினமும் இந்த ரயிலை விடுகிறது மத்திய அரசாங்கம்.

லாப நஷ்டத்தைக் கருதாமல் மக்கள் வசதியைக் கருத்தில் கொள்ளும் ரயில்வே நிர்வாகத்தின் செயல்பாட்டைப் பாராட்ட வேண்டும் என்று நினைத்தான் ரகு.

ரயில்வேயின் உயர் அதிகாரி ஒருவர் ஒருநாள் திடீரென்று விழித்துக் கொண்டு இந்த ரயிலை நிறுத்தி விடலாம். அப்புறம் இந்த 60 கிலோமீட்டர் பாதையில் உள்ள பத்து ரயில் நிலையங்களுக்கு என்ன வேலை? 

ஒருவேளை இந்த ரயிலை நிறுத்தினால் இந்தப் பத்து ரயில் நிலையங்களையும் மூட வேண்டியிருக்குமே என்பதற்காகத்தான் இந்த ரயில் விடப்படுகிறதோ?

ஆனால் முன்பு இப்படியில்லை. முன்பு என்றால், ஒரு முப்பது வருடங்கள் முன்பு. அவன் சிறுவனாக, பள்ளி மாணவனாக இருந்தபோது. அப்போதெல்லாம் இந்த ரயிலில் கூட்டம் இருக்கும். உட்கார இடமில்லாமல் சிலர் நின்று கொண்டு கூட வருவார்கள்

இத்தனைக்கும், எட்டு கிலோமீட்டர் (அப்போது ஐந்து மைல் என்று சொல்வார்கள்) தொலைவில் இருக்கும் அவனுடைய கிராமத்திலிருந்து இந்த ஸ்டேஷனுக்கு வந்து ரயில் ஏறுவது என்பது எப்போதோ ஒருமுறை நடக்கிற விஷயம்தான். 

ரயிலில் ஏறி ஊருக்குப் போகப் போகிறோம் என்ற எதிர்பார்ப்பே அந்தக் கால வாழ்க்கையின் மிகப் பெரிய சந்தோஷங்களில் ஒன்று. ரயில் பயணம் பற்றிய நினைவின் கிளுகிளுப்பில் பயணத்துக்கு முதல் நாள் இரவு முழுவதும் உறக்கமே வராது.

பழைய நிகழ்ச்சிகள் ஒரு வேகமான நினைவோட்டமாக அவன் மனதில் ஓடின.

எந்த ஊருக்குப் போவதானாலும் அவனுடைய கிராமத்திலிருந்து ஐந்து மைல் தள்ளி இருக்கும் பூஞ்சோலை ஸ்டேஷனுக்குத்தான் வர வேண்டும். 

பல வருடங்களுக்குப் பிறகுதான் அவன் ஊருக்கு பஸ் வசதி வந்தது. அதனால் ரயில்வே ஸ்டேஷன் போவதற்கு மாட்டு வண்டி ஒன்றுதான் வழி.

பயண ஏற்பாடுகள் பத்து நாட்கள் முன்பே தொடங்கி விடும். துணிகளைத் துவைத்துக் காய வைத்து மடித்துப் பெட்டியில் அடுக்கி வைத்தல், போகும் இடத்துக்கு எடுத்துச் செல்வதற்கும், வழியில் உண்பதற்கும் என்று வகைவகையான பலகாரங்கள், உணவுவகைகள் பற்றித் திட்டமிடுதல், நான்கைந்து பெண்களின் உதவியோடு அவன் அம்மாவும், பாட்டியும் நான்கைந்து நாட்கள் ஓயாமல் வேலை செய்து உணவுவகைகளைத் தயார் செய்தல், பாத்திரங்களிலும், துணிமூட்டைகளிலும் அவற்றை நிரப்புதல் என்று ஏகப்பட்ட வேலைகள் - வீட்டுப் பெண்களுக்கு. ஆண்களுக்கு மாட்டு வண்டி ஏற்பாடு செய்வது ஒன்றுதான் வேலை.

ஒரு வாரம் முன்பே அவன் அப்பா வண்டிக்கு ஏற்பாடு செய்து விடுவார். ஊரில் ராமசாமி, கண்ணாயிரம் என்று இரண்டு வண்டிக்காரர்கள் இருந்தார்கள்.

கண்ணாயிரத்தின் வண்டியை அவனுக்குக் கட்டோடு பிடிக்காது. ஆமை வேகத்தில் நடக்கும் மாடுகள். (இந்த பாசஞ்சர் ரயிலைக் கூட அவன் ஊர்க்காரர்கள் 'கண்ணாயிரம் வண்டி' என்றுதான் சொல்வார்கள்!) பலமான சத்தங்களுடன், ஏகப்பட்ட ஆட்டங்களுடன், அசைந்து அசைந்து செல்லும் பழுது பார்க்கப்படாத வண்டி. ஐந்து மைல் பிரயாணம் செய்து ஸ்டேஷனில் போய் இறங்குவதற்குள் உடம்பெல்லாம் வலி எடுத்து விடும்.

ராமசாமியின் வண்டி இதற்கு நேர் எதிர். வில் வண்டி என்றால் அதுதான். பார்ப்பதற்கே கட்டுமஸ்தாக, கம்பீரமாக இருக்கும். ராமசாமி தார்க்குச்சியை உயர்த்தி 'டிர்ர்ர்..' என்று சப்தம் எழுப்பியதுமே மாடுகள் பறக்கத் துவங்கி விடும். பூஞ்சோலை ஸ்டேஷனில் நிற்காமல் போகும் எக்ஸ்பிரஸ் ரயில் போல அப்படி ஒரு வேகம்! 

இவ்வளவு வேகத்துக்கும் வண்டியில் ஒரு சிறு ஆட்டம் இருக்க வேண்டுமே! ஊஹூம். சும்மா ரோடுக்கு மேல் மிதந்து போகிற மாதிரி அற்புதமான சவாரி. வண்டி ஸ்டேஷனை அடைந்தவுடன், வண்டிப் பயணம் முடிந்து  விட்டதே என்று ஏக்கமாக இருக்கும்.

வண்டிக்காரர்களும் வண்டியைப் போலத்தான். வண்டி ஓட்டும்போது ராமசாமி உற்சாகமாகச் சிரித்துப் பேசிக்கொண்டே வருவான். அவனுக்கு இரண்டு பெண்டாட்டிகள் என்று இவன் நண்பர்கள் சிலர் சொல்வார்கள். 

ராமசாமியிடம் இதுபற்றிக் கேட்க ரகுவுக்கு ஆசை. ஆனால் ஏதோ ஒரு தயக்கம். என்னதான் உற்சாகமாகப் பேசினாலும், ராமசாமி கொஞ்சம் முரட்டுத்தனமானவன். கோபம் வந்தால் தார்க்குச்சியை மாடுகளின் மீது வேகமாகப் பாய்ச்சி விடுவான். அதனாலேயே ரகுவுக்கு அவனிடம் உள்ளூர ஒரு பயம் உண்டு.

இதற்கு மாறாக, கண்ணாயிரம் சுரத்து இல்லாமல் இருப்பான். அதிகம் பேச மாட்டான். பேச்சில் அலுப்புதான் தெரியும். மாடுகளை ஒன்றும் செய்ய மாட்டான். அதட்டக் கூட மாட்டான். அவை பாட்டுக்குத் தம் மனம் போல் போய்க் கொண்டிருக்கும். ரகு அவனிடம் ஏதாவது கேட்டால் சிடுசிடுப்பான்.

இப்போது நினைத்துப் பார்க்கும்போது ரகுவுக்கு அவர்கள் இருவருமே அப்படித்தான் இருந்திருக்க முடியும் என்று தோன்றியது. அந்த இருவரின் வண்டிகளும், மாடுகளும், வண்டியோட்டும் விதமும் அவர்கள் வாழ்க்கையின் பிரதிபலிப்பாக இருந்திருக்கக் கூடும்.

ஸ்டேஷனுக்கு வெளியே வந்தான் ரகு. வெறிச்சோடியிருந்தது. முன்பெல்லாம் ஸ்டேஷனுக்கு வெளியே பஸ் நிற்கும். இப்போது பஸ் இந்தப் பக்கம் வருவதில்லை. ஸ்டேஷன் பக்கம் திரும்பாமல் மெயின் ரோடில் நேரே போய் விடுகிறது. 

உலகத்தில் எல்லாமே அவசரமாகிக் கொண்டு வருகின்றன. மனிதர்களைப் போலவே இயக்கங்களும் அலட்சிய பாவத்தை வளர்த்துக் கொள்கின்றன. 'உன்னை ஏற்றிக் கொள்வதற்காக நான் ஸ்டேஷனுக்கெல்லாம் வர முடியாது. மெயின் ரோடுக்கு வந்து ஏறிக் கொள்' என்கிறது பஸ்!

இவன் ஊருக்கு வருவதாக பால்ய நண்பன் கிருஷ்ணனுக்கு எழுதியபோது அவனும் இப்படித்தான் பதில் எழுதியிருந்தான். 

'நீ நேரே பஸ் பிடித்து  வீட்டுக்கு வந்து விடு. நான் கொஞ்சம் பக்கத்து ஊர் வரை போய் விட்டு வர வேண்டியிருக்கிறது. வீட்டில் என் மனைவி இருப்பாள். நான் வர தாமதமானால் சாப்பிட்டு விட்டு ஓய்வெடுத்துக் கொள்.'

நல்ல வேளை. 'நான் வருவதற்குள் உன் வேலை முடிந்து விட்டால், நீ ஊருக்குக் கிளம்பி விடு' என்று எழுதவில்லை.

இதே கிருஷ்ணனுடன் சேர்ந்து இந்த கிராமத்தில் எவ்வளவு காலம் சுற்றியிருக்கிறான்! ரகுவையும் கிருஷ்ணனையும் தனியே பார்க்க முடியாது என்று மற்றவர்கள் சொல்கிற அளவுக்கு நெருக்கம். இத்தனைக்கும் இருவரின் குடும்பத்துக்கும் பொருளாதார அந்தஸ்தில் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு!

கிருஷ்ணனின் அப்பா மளிகைக் கடையில் கணக்கு எழுதிப் பிழைப்பு நடத்தியவர். ரகுவின் குடும்பமோ அந்த ஊரிலேயே அதிக செல்வமும், செல்வாக்கும், மதிப்பும் நிறைந்த குடும்பம். 

அவன் தாத்தா பொன்னம்பலத்தின் பெயரைச் சொன்னவர்கள் யாரும் அந்த ஊரில் இல்லை. 'பெரிய ஐயா' என்றுதான் அவரைச் சொல்வார்கள். ரகுவின் வீட்டு மனிதர்களுக்கும் கூட அவர் 'பெரிய ஐயா' ஆகி விட்டார். 

அந்தக் காலத்தில் அந்த ஊரிலேயே மிகப் பெரிய வீடு ரகுவின் வீடுதான். (பிற்காலத்தில் சில புதுப் பணக்காரர்கள் இன்னும் பெரிதாக, நவீனமாக வீடுகளைக் கட்டிக் கொண்டார்கள்) வீட்டு உறுப்பினர் யார், வேலைக்காரர் யார், விருந்தினர் யார் என்று இனம் காண முடியாத அளவுக்கு வீடு முழுவதும் நிறைந்திருக்கும் கூட்டம்.

சமையலறையில் குடும்ப உறுப்பினர்களுக்காகச் செய்யப்படும் சமையலைத் தவிர, வீட்டு முற்றத்தில் கோட்டை அடுப்பை வைத்து நாள் முழுவதும் பெரும் கலயங்களில் சோறும், குழம்பும் பொங்கிக் கொண்டிருக்க, வீட்டுக் கூடத்தில் ஒரு புறம் சாப்பாட்டுப் பந்தி, மறு புறம் காய்கறிகள் நறுக்குதல் என்று அமர்க்களப்படும்.

நினைத்துப் பார்த்தபோது ரகுவுக்கு எல்லாமே மலைப்பாக இருந்தது. அவன் சென்னையில் வசிக்கும் ஒற்றைப் படுக்கையறைக் குடியிருப்புக்கு எப்போதாவது ஒரு விருந்தாளி வந்து விட்டாலே இவன் மனைவிக்கு மூச்சு முட்டி விடும். இரண்டு முறை குக்கர் வைத்து, மிக்ஸியில் எதையோ அரைத்து, எரிவாயு அடுப்பில் ஒரு குழம்பு வைப்பதற்குள் பெரிய சோர்வு வந்து விடுகிறது அவன் மனைவிக்கு.

அவனுக்கும்தான்!

பட்ஜெட்டில் ஏற்கெனவே விழுந்திருக்கும் துண்டு இன்னும் சற்று அகலமாக விரிந்து கொள்ளும்போது, எப்படி அதை நிரப்பப் போகிறோம் என்ற கவலை. இவர்கள் இருவரின் கவலைகளும் இவர்கள் முகத்தில் பிரதிபலிக்கும்போது 'முகம் திரிந்து நோக்கக் குழையும் விருந்து' என்ற வள்ளுவரின் கூற்றை அறியாமலேயே அதன்படி செயல்படும் விருந்தாளி அடுத்த வேளைச் சாப்பாட்டுக்குள் ஊருக்குக் கிளம்பி விடுவார்.

விருந்தாளி கிளம்பிச் சென்றதும், அவர் இவன் வகையாக இருந்தால் இவன்  மனைவி இவன் மீதும், இவன் மனைவி வகையாக இருந்தால் இவன் தன் மனைவி மீதும் குற்றம் சொல்லி ஒரு சிறிய சண்டை போட்டுக் கொள்வார்கள். 

ஆனால் விருந்தாளி கிளம்பிச் சென்றதில் இருவருக்குமே நிம்மதிதான் என்பது இருவருக்குமே தெரியும். 

'இப்போதே இப்படி இருக்கிறதே, இன்னும் ஒரு குழந்தை பிறந்தால் எப்படிச் சமாளிக்கப் போகிறோம்?' என்ற இவர்கள் கவலையை அறிந்துதானே என்னவோ இவர்கள் வாழ்க்கையில் இன்னும் குழந்தை பிரவேசிக்கவில்லை!

மெல்ல நடந்து மெயின் ரோடுக்கு வந்தான். வழியில் ஒரு மாட்டு வண்டி நின்றிருந்தது. அசப்பில் பார்த்தால் வண்டிக்காரன் கண்ணாயிரம் போல் இருந்தான். 

'ஒருவேளை கண்ணாயிரத்தின் மகனாக இருப்பானோ? சேச்சே! வண்டிக்காரனின் மகன் வண்டிக்காரனாகத்தான் இருக்க வேண்டுமா என்ன? என்ன ஒரு பிரபுத்துவ நோக்குச் சிந்தனை!'

இவன் வண்டியைத் தாண்டிச் சென்றபோது, 'வண்டி வேண்டுமா?' என்பதுபோல் வண்டிக்காரன் இவனைப் பார்த்தான். 

'அனேகமாக எல்லா ஊர்களுக்கும் பஸ் வசதி இருக்கும் இந்தக் காலத்தில் மாட்டு வண்டியில் யார் போவார்கள்? ஒருவேளை மெயின் ரோட் வரை நடக்க முடியாதவர்கள் பஸ் நிறுத்தம் வரை போவதற்கு இந்த வண்டியைப் பயன் படுத்தலாம்.' 

கடந்து போன காலத்தின் அடையாளமாக நின்ற வண்டிக்காரனை வியப்புடனும், பரிதாபத்துடனும் பார்த்தபடி ரகு விரைந்தான்.

சில நிமிடங்கள் காத்திருந்த பின் பஸ் வந்தது. சென்னை பஸ்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பது போல் பஸ் நிரம்பி வழிந்தது. 

குண்டும் குழியுமான சாலைகளில் நெருக்கமாக நின்றபடியே 20 நிமிடப் பயணம். ரகுவுக்கு கண்ணாயிரத்தின் வண்டியில் பயணம் செய்தது நினைவுக்கு வந்தது.

"பெருங்குடி எல்லாம் இறங்குங்க" என்று கண்டக்டர் அறிவித்ததும், ரகு முண்டியடித்து இறங்கினான். தரையில் கால் வைத்ததும் சிலீர் என்ற உணர்வு உடலில் பரவியது. 

பஸ் கிளம்பிச் சென்றதும் எதிரே பரந்திருந்த ஊரைப் பார்த்தான். ஊரில் அதிக மாற்றம் இல்லை - புதிதாக முளைத்திருந்த ஒரு சில கடைகளைத் தவிர.

மெயின் ரோடில் இருந்து பிரிந்த சாலையில் நடந்து கிருஷ்ணன் வீட்டை அடைந்தான். 

போகும்போது எதிர்ப்பட்டவர்களும், திண்ணைகளில் உட்கார்ந்திருந்தவர்களும் இவனை உற்றுப் பார்த்தனர். 

15 வருடம் கழித்து ஊருக்கு வந்தவனை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. இவனுக்குச் சிலரை அடையாளம் தெரிந்தாலும் காட்டிக் கொள்ளாமல் மேலே நடந்தான்.

கிருஷ்ணன் வீடு திறந்திருந்தது. தயங்கியபடியே உள்ளே நுழைந்தான். 

ஒரு காலத்தில் எப்போது நினைத்தாலும் சுதந்திரமாக உள்ளே போய் வந்த வீடுதான். ஆனால் இப்போது அந்த சுதந்திர உணர்வு இல்லை. அனுமதியின்றி அந்நியர் வீட்டில் நுழையும் தயக்கம்தான் இருந்தது. 

காலடி ஓசை கேட்டு, "யாரது?" என்று அதட்டலான ஆண்குரல் வந்தது. கிருஷ்ணன்தான். நல்ல வேளை வீட்டில் இருக்கிறான்!

"யாரு நீங்க?"

"என்ன கிருஷ்ணா? என்னைத் தெரியலையா?"

"அடேடே ரகுவா? வா வா!"

ரகுவுக்குச் சற்று ஏமாற்றமாக இருந்தது. 'நான் வருவேன் என்று தெரிந்திருந்தும் ஒரு எதிர்பார்ப்பு இல்லையே! ஏதோ எதிர்பாராமல் வந்து விட்ட விருந்தாளியை வரவேற்பது போல் அல்லவோ பேசுகிறான்!'

"நீ எங்கேயோ பக்கத்து ஊருக்குப் போகப் போறதா எழுதியிருந்தியே?"

"போகலை. அதை விடு கழுதை. நாளைக்குப் பாத்துக்கலாம். எப்படி இருக்கே? பாத்து ரொம்ப நாள் ஆச்சு. ம்ம்ம்.. நீ எல்லாம் மெட்ராஸ்ல செட்டில் ஆயிட்டே. வசதியான வாழ்க்கை. ஆஃபீஸ், சினிமா, பீச், டிவி, கிளப்னு உல்லாசமா இருப்பீங்க. நம்மள மாதிரி வயக்காட்டில கெடந்து அல்லல் பட வேண்டியதில்லை!"

ரகுவுக்கு இதற்கு எப்படி பதில் அளிப்பது என்று புரியவில்லை. சிறு வயது முதல் நெருக்கமாகப் பழகிய இரு நண்பர்களிடையே பதினைந்து வருடங்கள் கழித்து நடக்கும் சந்திப்பில், எதிர்ப்புறத்தில் நட்பின் சாயை சிறிதும் இல்லை!

'கிருஷ்ணன் எங்கே?' என்று கேட்டால் 'ரகுவோட சுத்திக்கிட்டிருப்பான்' என்று பதில் வரும் அளவுக்கு இருந்த நட்புக்கு என்ன ஆயிற்று? கால இடைவெளி அவ்வளவு கொடியதா?

சம்பிரதாய விசாரிப்புகள், குளியல், சாப்பாட்டுக்குப் பிறகு பழைய நெருக்கத்தைக் கொண்டு வர ரகு முயன்றான். 

"கிருஷ்ணா! உனக்கு ஞாபகம் இருக்கா? கோடைக்காலத்தில ஆற்று மணல்லே உட்கார்ந்து பேசியும், வெளையாடியும் எவ்வளவு சந்தோஷமா சாயங்கால வேளைகளைக் கழிச்சிருப்போம்!"

"அதையெல்லாம் விடுப்பா. இப்பல்லாம் எப்பவுமே கோடைதான். ஆத்துல எப்பவுமே தண்ணி கெடையாது. கர்நாடகாக்காரன் விட்டாத்தானே? மழை பேஞ்சா வெவசாயம். இல்லாட்டி காய்ச்சல்தான்."

ரகுவுக்கு மேலே எப்படித் தொடர்வது என்று தெரியவில்லை. "சரி. நீ எப்படி இருக்கே?" என்று மட்டும் கேட்டு வைத்தான்.

"ஏதோ இருக்கேன். என்னை மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் எப்பவுமே கஷ்டம்தான். அந்தக் காலத்திலே ஒங்க குடும்பம் ஊரிலேயே பணக்காரக் குடும்பம். ஆனா எங்கப்பா மளிகைக் கடையிலே கணக்கு எழுதிக்கிட்டு, கால் வயத்துக் கஞ்சிக்குக் கூடச் சம்பாதிக்க முடியாத ஏழை..."

"ஆனா நாம எவ்வளவு நெருக்கமாப் பழகினோம்! அப்படி வித்தியாசம் எல்லாம் பாக்கலியே?"

"என்ன இருந்தாலும் பணக்காரன் பணக்காரன்தான். ஏழை ஏழைதான். இப்ப பாரு. நீ படிச்சு மெட்ராஸ்ல நல்ல வசதியா இருக்கே. நான் பாரு இந்த கிராமத்திலேயே கெடந்து உழல்றேன்."

இதற்கு மேல் பேச்சை வளர்த்த விரும்பாமல், ரகு சற்று வெளியே போய் வரலாம் என்று கிளம்பினான். விரைவாக நடந்து அவனுடைய பழைய வீட்டுக்கு வந்தான். தான் பிறந்து, தவழ்ந்து, வளர்ந்து, விளையாடி, வாழ்ந்த வீட்டைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் கால்கள் எட்டி நடை போட்டன. வீட்டை நெருங்க நெருங்க ஒரு படபடப்பு. தெருவில் பல வீடுகள் உருமாறியிருந்தன.

அவனுடைய வீட்டின் முன் வந்து நின்று வீட்டை நிமிர்ந்து பார்த்தான். உடல் முழுவதும் இனம் தெரியாத ஒரு உணர்வு பரவியது. நல்லவேளையாக அவன் வீடு உருமாறவில்லை. வீட்டைப் பார்த்துக் கொண்டே நின்றபோது பழைய நினைவுகள் மனதுக்குள் மழையாகப் பொழிந்தன.

அதோ அந்த திண்டு வைத்த திண்ணையில் கம்பீரமாகச் சாய்ந்து கொண்டு, தெருவில் போவோர் வருவோரையெல்லாம் அழைத்துப் பேசிக் கொண்டிருக்கும் பெரிய ஐயா, அவரிடம் ஏதோ கேட்க நினைத்து, தைரியம் வராமல் சற்றுத் தள்ளி ஒதுங்கி நிற்கும் இவன் அப்பா, சந்தைக் கடைக்குள் போவதுபோல் உள்ளேயும் வெளியேயும் போய் வந்து கொண்டிருக்கும் மனிதர்கள்...

திடீரென்று அந்தக் காட்சி மறைந்து அதே திண்ணையில் பெரிய ஐயா வெட்டி வீழ்த்தப்பட்ட மரம்போல் வீழ்ந்து கிடக்கும் காட்சி...

அந்த நாள் ரகுவுக்கு நன்றாக நினைவிருக்கிறது. அன்று பொங்கல். பொங்கல் தினம் என்றாலே இவனுக்கு ஏக குஷி. பண்ணையாட்கள், குத்தகைக்காரர்கள் என்று பலரும் தங்கள் வயல்களிலும், தோட்டங்களிலும் விளைந்த காய்கறிகளையும், பழங்களையும் கூடை கூடையாகக் கொண்டு வந்து கொடுத்து விட்டு, காலியான கூடைகள் நிறைய அரிசி, நெல், வெல்லம் மற்றும் பணம் என்று வாங்கிக் கொண்டு மகிழ்ச்சியாகத் திரும்பிப் போவது ஒரு கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

ஒருபுறம் வந்தவர்கள் கொண்டு வந்த காய்கறிக் குவியல்கள், மறுபுறம் அவர்களுக்குக் கொடுப்பதற்கான அரிசிக் குவியல் என்று கூடம் நிரம்பி வழியும். சீப்பு சீப்பாக வரும் வாழைப் பழங்களை இவனும் நண்பர்களும் கணக்கில்லாமல் வாரம் முழுவதும் தின்றாலும் பழங்கள் தீர்ந்து போகாமல் அழுகிப் போய்க் குப்பைக்குத்தான் போகும்.

திண்ணையில் உட்கார்ந்து கொண்டு எல்லாவற்றையும் பெருமிதமாகப் பார்த்துக் கொண்டிருந்த பெரிய ஐயா சட்டென்று மார்பைப் பிடித்துக் கொண்டு திண்ணையில் சாய்ந்தார். எல்லாம் கண நேரத்தில் நடந்து முடிந்து விட்டது. பெரிய ஐயாவின் நெடிய உடல் ஒரு பெரிய மரம் வேரோடு சாய்வது போல் சாய்ந்து விட்டது.

அதற்குப் பிறகு நடந்த நிகழ்ச்சிகள் எல்லாமே கண் மூடித் திறப்பதற்குள் நடந்தது போல்தான் இருந்தது. நடப்பது என்ன என்று இவனுக்குச் சரியாக விளங்கவும் இல்லை.

இவன் அப்பாவும், பெரியப்பாக்களும், சித்தப்பாக்களும் போட்டுக் கொண்ட பாகப் பிரிவினைச் சண்டைகள், எங்கிருந்தோ வந்து பங்கு கேட்ட  ஒன்று விட்ட உறவுகள், திடீரென்று முளைத்த கடன்காரர்கள், ஜீப்பில் வந்து கடன் பத்திரத்தைக் காட்டி மிரட்டிய கூட்டுறவு வங்கி அதிகாரிகள் என்று பல பூகம்பங்கள் ஒன்றுக்குப் பின் ஒன்றாக வந்து இவனுடைய உலகத்தையே புரட்டிப் போட்டு விட்டன. எல்லாவற்றையும் பைசல் செய்தபின் எதுவும் மிஞ்சவில்லை என்று ஆனதும், இவன் அப்பா குடும்பத்தோடு சென்னைக்குப் போய் அங்கேயே ஒரு வேலை தேடிக்கொண்டு, பிறகு இவன் தலையெடுத்து, அப்பா காலமாகி, பிறகு அம்மாவும்...

"நீங்க...நீ...ரகுதானே?"

குரல் கேட்டு திடுக்கிட்ட ரகு நினைவிலிருந்து விழித்துக் கொண்டான். வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்தபடியே அவனை விசாரித்த மனிதர்...அட...சபாபதி!

"...ஹலோ சபாபதி! சௌக்கியமா?"

"என்னடா ஹலோ கிலோ எல்லாம்? ஃபோன்லயா பேசறே? வாடா உள்ளே" என்றான் சபாபதி உற்சாகமாக.

ஆற்றில் முங்கி எழுந்தது போல் ஒரு புத்துணர்ச்சி ரகுவின் உடலில் சிலீரென்று பாய்ந்தது. கிருஷ்ணனின் பட்டும் படாத பேச்சினால் நொந்திருந்த மனதுக்கு, சபாபதியின் மாறாத நட்புணர்வு ஒரு இதமான மருந்தாக அமைந்தது.

"...இது உன் வீடா?"

"ஒன்னோட வீடுதான்! யார் யார் கையோ மாறி இப்ப எங்கிட்ட வந்திருக்கு."

உள்ளே நுழைந்தபோது ரகுவின் மனதில் நிறைந்திருந்தது மகிழ்ச்சியா துயரமா என்று அவனால் இனம் காண முடியவில்லை.

"சிவகாமி. நம்ம வீட்டுக்கு யார் வந்திருக்காங்கன்னு தெரியுமா? நம்ம பெரிய ஐயாவோட பேரன். ரகு. இலையைப் போடு."

"வேண்டாம். நான் சாப்பிட்டாச்சு."

"எங்கே? உன் உயிர் நண்பன் கிருஷ்ணன் வீட்லயா?" சபாபதி கேலியாகச் சிரித்தான்.

"ஆமாம். ஒங்கிட்ட ஒண்ணு கேக்கணும்...கிருஷ்ணன் எப்படி இருக்கான் இப்ப?"

"பாத்தியா? நான் எப்படி இருக்கேன்னு கேக்க மாட்டே! எங்கிட்டயே கிருஷ்ணனைப் பத்தி விசாரிக்கறே!"

"தப்பா நெனைக்காதே சபாபதி... கிருஷ்ணன் எங்கிட்ட நடந்துக்கிட்டது ஒரு மாதிரியா இருந்தது. முன்னை மாதிரி நெருக்கம் இல்ல அவன் கிட்டே. எங்கிட்டேயிருந்து வெலகிப் போக விரும்பற மாதிரி இருக்கு அவனோட பேச்சு, நடத்தை எல்லாம். அதுதான் கேட்டேன்....ஆமாம் நீ என்ன பண்ணிக்கிட்டிருக்கே? மொதல்லேயே கேக்காதது என் தப்புத்தான்."

"விடுப்பா. நான் சும்மா வெளையாட்டுக்குச் சொன்னேன். அதைப் போய்ப் பெரிசா எடுத்துக்கிட்டு...என்னைப் பத்திக் கேட்டே இல்லே? நான் பூஞ்சோலையிலே பாங்க்கிலே பியூனா இருக்கேன். நம்ம படிப்புக்கு அவ்வளவுதான்! ஆனா எனக்கு வேலை புடிச்சிருக்கு. என்னோட தகுதிக்கு அதிகமாகவே சம்பளம். இங்க கொஞ்சம் நெலம் இருக்கு. சந்தோஷமா இருக்கேன்...ம்ம்ம்... கிருஷ்ணனைப் பத்திக் கேட்டே இல்லே? அவனுக்கென்ன? நல்லாத்தான் இருக்கான்! கிராம அதிகாரி. கவர்மென்ட் சம்பளம். அதைத் தவிர வெவசாயம். சின்னதா ஒரு ரைஸ் மில் கூட வச்சிருக்கான்... ஆமாம். என்ன திடீர்னு இவ்வளவு நாள் கழிச்சு ஊர் ஞாபகம்? மாரியம்மன் கோவிலுக்கு ஏதாவது வேண்டுதலா?"

"அதெல்லாம் இல்லேப்பா. ஒன்னைப் பார்த்தது நல்லதாப் போச்சு. கிருஷ்ணன்கிட்ட என்னால ஃப்ரீயாப் பேச முடியும்னு தோணலே...எங்கப்பா காலத்திலேயே ஊர்ல இருந்த எல்லா நிலங்களையும் வித்துட்டு வந்துட்டாருன்னுதான் நெனச்சுக்கிட்டிருந்தேன். ஆனா தரிசு நெலம் ஒண்ணு இருக்கறதா அப்பா அடிக்கடி சொல்லிக்கிட்டிருப்பாரு. ஆனா அதுக்குப் பத்திரம் எதுவும் இல்லையாம். பட்டா மட்டும்தான் இருக்கு. அதை வித்தா கொஞ்சம் பணம் கெடைக்குமேன்னுதான் வந்தேன்....ஒங்கிட்ட சொல்றதுக்கென்ன? ஏதோ மெட்ராஸ் போய்ப் படிச்சேன்னு பேரே தவிர நான் ஒண்ணும் பெரிய உத்தியோகத்தில இல்லை. ஏதோ ஒரு சாதாரண வேலையிலதான் இருக்கேன். இருக்கறது வாடகை வீடுதான். வாங்கற சம்பளம் குடும்பச் செலவுக்கே சரியா இருக்கு. கடன் வாங்காம மாசத்தை ஓட்டினா அதுவே ஒரு சாதனைங்கற மாதிரிதான் என்னோட வாழ்க்கை போய்க்கிட்டிருக்கு. அதுதான் இந்த நெலத்தை வித்தால் கொஞ்சமாவது பணம் தேறுமேன்னு..."

வாக்கியத்தை முடிப்பதற்குள் ரகுவுக்குத் தொண்டை கம்மியது. சிரமப்பட்டு அழுகை வராமல் சமாளித்தான்.

ரகுவின் குரல் கம்மியதை சபாபதி கவனித்து விட்டான். ரகுவின் அருகில் வந்து அவன் தோளைத் தொட்டான். "ரகு! பாவம்டா நீ! நான் இதை எதிர்பாக்கல. இங்க நாங்க எல்லோருமே நீ ரொம்ப வசதியா இருக்கறதா நெனச்சுக்கிட்டிருக்கோம். பெரிய ஐயாவின் வாரிசுக்கா இந்த நிலைமைன்னு ஒரு புறம் தோணினாலும், என் பால்ய சினேகிதன் இப்படி இருக்கிறது இன்னும் வருத்தமா இருக்கு. என்னை மாதிரி சாதாரணக் குடும்பத்தில பொறந்தவங்க கூட வசதியா இருக்கச்சே பெரிய குடும்பத்தில பொறந்த நீ எப்படியோ இல்ல இருக்கணும்? கவலப்படாதே. நல்ல நேரம் வந்தா எல்லாம் சரியாயிடும். நான் இதை வெறும் வார்த்தைக்காகச் சொல்லலே! நாங்கள்ளாம் எவ்வளவோ கீழ் மட்டத்தில இருந்து இப்ப முன்னுக்கு வரலியா?"

ரகுவுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. உயிர் நண்பனாக இருந்த கிருஷ்ணன் அந்நியன் போல் பழகும்போது சிறு வயதில் ஓரளவே நெருக்கமாக இருந்த சபாபதி உண்மையான அக்கறையோடும் அன்போடும் பேசுகிறான்!

"ஆனா நீ நெனச்சு வந்த காரியம் நடக்கறது கஷ்டம்"

"ஏன் அப்படிச் சொல்றே?" என்றான் ரகு துணுக்குற்று.

"ஏன்னா ஒன்னோட தரிசு நெலத்திலதான் கிருஷ்ணன் ரைஸ் மில் கட்டியிருக்கான்!"

"அது எப்படி? பட்டா எங்கப்பா பேரில இருக்கே?"

"அதையெல்லாம் அவன் மாத்தியிருப்பான். அவன்தானே வில்லேஜ் ஆஃபிஸர்? ஒங்கிட்டயும் முறையான டாகுமென்ட் இல்லையே! கேட்டா அது பொறம்போக்கு நெலம்னு சொல்லுவான். இது மாதிரி நெறைய பேரோட நெலத்தை அவன் கபளீகரம் பண்ணியிருக்கான்."

"சட்டப்படி நான் எதுவும் செய்ய முடியாதா?"

"அது எனக்குத் தெரியாது. ஆனா ரொம்பக் கஷ்டம்னு நெனக்கறேன். உள்ளுர்ல இருக்கிறவங்களே அவன்கிட்ட நெலத்தைப் பறி கொடுத்துட்டுப் பேசாம இருக்காங்க. ஒன்னால என்ன செய்ய முடியும்? பணம் காசு சேர்ந்ததால இப்ப அவன் கிட்ட ஆள்பலம், அரசியல் செல்வாக்கு எல்லாம் வேற இருக்கு."

"அடக்கடவுளே!"

"மனசு ஒடஞ்சு போகாம முயற்சி பண்ணு. உன் விஷயத்தில் அவன் கொஞ்சம் இரக்கம் காட்டலாம். நான் ஏதாவது உதவி செய்யணும்னா சொல்லு. அவனை நேரடியா எதிர்த்து என்னால எதுவும் செய்ய முடியாதுன்னாலும் என்னால முடிஞ்ச உதவியை ஒனக்குச் செய்யறேன்."

"சபாபதி! இதை நான் எதிர்பார்க்கலே!"

"எதை?" என்று சபாபதி சிரித்தான். "சரி அதை விடு. ரொம்ப நாள் கழிச்சு ஒன்னைப் பாக்கறேன். இன்னிக்கு ராத்திரி ஒனக்கு நம்ம வீட்டிலதான் சாப்பாடு. சரியா?"

ரகு இயந்திரமாகத் தலையை ஆட்டினான்.

"ஒன்னைப் பார்த்ததும் ஆத்து மணலில் நாம எல்லாரும் உட்கார்ந்து ஜாலியாப் பேசினதும் வெளையாடினதும் ஞாபகம் வருது. வா கொஞ்சம் ஆத்தங்கரைக்குப் போயிட்டு வரலாம். வெயில் கூடத் தணிஞ்சிருக்கு" என்று அழைத்தான் சபாபதி.

"வெயில் இருந்தாத்தான் என்ன? ஆத்தங்கரையிலதான் பெரிய அரச மரம் இருக்கே! அதோட நிழல்லே இந்த கிராமம் முழுக்க நிக்கலாமே! அதுக்குப் பக்கத்தில ஒரு இடிஞ்சு போன மடம் இருக்குமே - நாமெல்லாம் ஆண்டி மடம்னு சொல்லுவோமே - அந்த மடம் இன்னும் இருக்கா?" என்றான் ரகு உற்சாகம் திரும்பியவனாக.

"மடம் இருக்கு. என்ன, இன்னும் இடிஞ்சு போய்க் குட்டிச் சுவரா இருக்கு. ஆனா..."

"ஆனா என்ன?" என்றான் ரகு.

"வா. போய்ப் பார்க்கலாம்."

ஆற்றை ஒட்டிய சாலை ஒரு மேட்டில் ஏறி அங்கிருந்து சரிவாகக் கீழே இறங்கி ஆற்றங்கரையில் போய் முடியும். மேடான சாலையில் நின்று பார்க்கும்போது கம்பீரமாக நடந்து செல்லும் ஆற்றின் அழகும், கரையில் உள்ள தோப்புகளும், படித்துறையும், இடிந்து போன மடமும், எல்லாவற்றுக்கும் மேலாக, ஓங்கி உயர்ந்து நிற்கும் அந்த அரச மரமும் ஒரு அற்புதமான காட்சியாகக் கண் முன் விரியும்.

ஆனால் இப்போது ரகு அந்த மேட்டிலிருந்து பார்க்கும்போது அவனால் நீர் வற்றிய ஆற்றுப் படுகையைத்தான் பார்க்க முடிந்தது. அந்தக் காட்சியின் சோகம் மனதை அப்பியபோதே ஏதோ உறுத்தியது...ஒங்கி உயர்ந்து நின்று, வந்தவர்களுக்கெல்லாம் வஞ்சனையின்றி நிழல் கொடுத்த அந்த அரச மரம் எங்கே?

"பத்து நாள் முன்னால அடிச்ச பெரிய காத்தில மரம் விழுந்துடுச்சு. வறண்ட காத்து மழையைக் கொண்டு வராததோடு, எத்தனையோ வருஷமா இருந்த இந்த மரத்தையும் சாய்ச்சிடுச்சு" என்றான் சபாபதி.

"எங்கே அந்த மரம்? கீழே விழுந்து கிடக்கா?"

"மரம் விழுந்ததுமே ஆளுக்கு ஆள் கோடாலியை எடுத்துக்கிட்டு வந்து கொஞ்சம் கொஞ்சமா மொத்த மரத்தையும் பொளந்து எடுத்துக்கிட்டுப் போயிட்டாங்க. என்ன மிச்சம் இருக்கப் போவுது? வா, கிட்ட போய்ப் பார்க்கலாம்."

அவர்கள் அருகில் சென்றபோது மரத்தின் ஒரு சில வேர்க்கால்கள் உதிரியாய்க் கிடக்க, அருகே உதிர்ந்த இலைகள் காய்ந்து சருகாகியிருந்தன. எஞ்சியிருந்த அடிப்பகுதியைச் சில சிறுவர்கள் சிறிது சிறிதாகப் பிய்த்துக் கொண்டிருந்தார்கள்.



Tuesday, October 23, 2012

7. நேர்மையும் வாழட்டும்

ரண்டு மணி நேரம் காத்திருந்த பிறகு ராமநாதனுக்கு அந்த அரசு நிறுவனத் தலைவரைப் பார்க்க அனுமதி கிடைத்தது. 

நிறுவனத் தலைவர் இளங்குமரன் ஒரே பொருளைக் குறிக்கும் இரு சுற்களைக் கொண்ட தம் பெயருக்கு ஏற்ப 'இரு மடங்கு' இளமையாகக் காட்சி அளித்தார். கன்னங்கரேலென்ற தலைமுடி, அதில் ஏராளமான சுருள்கள். 

குளிர் சாதன அமைதியில் அடக்கமாக அமர்ந்திருந்த சுருள்கள், மின் விசிறி போடப்பட்டால் அந்தக் காற்றில் அதிகம் ஆடி அசைந்து ஆடிப்பெருக்கில் உருவாகும் ஆற்றுச் சுழல்கள் போல் காட்சியளிக்குமோ என்று ராமநாதன் வியந்தார்.

குழந்தை போன்ற முகம், அதில் குறும்பு போன்ற ஒரு உணர்வு, எப்போதும் விரிந்திருக்கும் உதடுகள் வழங்கும் வசீகரப் புன்னகை. இளங்குமரன் அப்படியேதான் இருந்தார் - பத்து வருடங்களுக்கு முன்பு பார்த்தபோது இருந்ததைப் போல.

'இளங்குமரனுக்கு என்னை நினைவிருக்குமா?'

காத்திருந்தபோதெல்லாம் ராமநாதனின் மனதில் இருந்த ஒரே கவலை இதுதான். 'நினைவில்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும்!'

"வாங்க! உக்காருங்க" என்றார் இளங்குமரன், மேஜை மீது இருந்த பேப்பரிலிருந்து கண்ணை எடுக்காமலே.

ராமநாதன் உட்கார்ந்தார். ஓரிரு நிமிடங்கள் கழித்து இளங்குமரன் மெல்லத் தலையை நிமிர்த்தி ராமநாதனை நேரே பார்த்தார். அவர் கண்களில் எந்த உணர்வும் பிரதிபலிக்கவில்லை.

"சொல்லுங்க. வாட் கேன் ஐ டூ ஃபார் யூ?"

ஆங்கிலத்தில் பேசுகிறார் இளங்குமரன்! ராமநாதனுக்குச் சிரிப்பு வந்தது. பழைய சம்பவம் நினைவுக்கு வந்தது.

"யோவ் தமிழ்ல பேசுய்யா! தமிழ்நாட்டில இருந்துகிட்டு என்னய்யா இங்கிலீசு? நீ படிச்ச படிப்பை எங்கிட்ட காட்ட வேணாம்!"

பத்து வருடங்களுக்கு முன் இளங்குமரன் தன்னிடம் சொன்ன இந்த வார்த்தைகளை, தான் இப்போது திருப்பிச் சொன்னால் எப்படி இருக்கும் என்று நினத்துப் பார்த்தபோது ராமநாதனுக்கு அந்த இறுக்கமான சூழலிலும் சிரிப்பு வந்தது.

"ஐ ரெப்ரஸன்ட்" என்று ஆங்கிலத்தில் துவங்கியவர் சட்டென்று தாய்மொழிக்கு மாறினார். "நான் யூனிவர்சல் இண்டஸ்ட்ரீஸின் நிதி ஆலோசகர். (இளங்குமரன் முன்னால் பேசுகிறோம் என்பதாலோ என்னவோ தமிழ் சரளமாக வருகிறது - ஃபினான்ஷியல் கன்ஸல்டன்ட்' என்ற நெருடலான ஆங்கிலப் பிரயோகத்துக்குக் கூட!). என் கிளையன்ட் தங்கள் தொழில் விரிவாக்கத்துக்காக உங்கள் நிறுவனத்திடம் ஐம்பது கோடி ரூபாய் கடன் உதவி கேட்டிருக்கிறார்கள். ஃபைல் எம். டி.யிடமிருந்து கிளியர் ஆகி உங்களிடம் வந்திருக்கிறது என்று..."

"யெஸ்!" என்றார் இளங்குமரன் தொடர்ந்து. "ஸோ வாட் கேன் ஐ டூ ஃபார் யூ?" என்றார்.

இந்த அப்பாவித்தனமான(?) கேள்வி ராமநாதனை இலேசாகக் கவலை கொள்ளச் செய்தது.

"நீங்கள் ஃபைலை கிளியர் செய்தால், பிறகு அது போர்டுக்குப் போய் லோன் சாங்ஷன் ஆகிவிடும்" என்றார் ராமநாதன் இயல்பாக.

"ஆப்வியஸ்லி, உங்களுக்கு எங்கள் ப்ரொஸீஜர் எல்லாம் தெளிவாகத் தெரிந்திருக்கிறது" என்றார் இளங்குமரன் ஏதோ ராமநாதன் யாருக்கும் தெரியாத நடைமுறையைக் கண்டு பிடித்துச் சொல்லி விட்ட மாதிரி!

ராமநாதன் மௌனமாக இருந்தார்.

"நீங்கள் சொன்னதுபோல் நான் இதை கிளியர் செய்தால் போர்டுக்குப் போய் லோன் சாங்ஷன் ஆகி விடும்தான். ஆனால் நான் இதை ரிஜெக்ட் பண்ணினால் என்ன ஆகும்னும் உங்களுக்குத் தெரிந்திருக்குமே!"

ராமநாதனுக்கு அடிவயிற்றில் இலேசான பயம் உருவாயிற்று. 'ஒருவேளை இவர் இதை ரிஜெக்ட் செய்து விடுவாரோ?'

"சார்! எங்கள் ப்ரொபோசல் மிகவும் தெளிவாக இருக்கிறது. உங்கள் நிதி நிறுவனத்தில் பல நிலைகளைத் தாண்டி எம்.டி. வரை கிளியர் ஆகி வந்திருக்கிறது. இது இந்த மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கு உதவும் ப்ராஜக்ட். 8,000 பேருக்கு வேலை வாய்ப்பு, அரசாங்கத்துக்கு விற்பனை வரி வருவாய், ஏற்றுமதி மூலம் அந்நியச் செலாவணி..."

"யெஸ் ஐ நோ. ஃபைலை நான் படித்து விட்டேன். நீங்கள் சொல்கிற விஷயம் எல்லாம் சரிதான். ஆனாலும் என்னால் இதில் நிறையக் கொக்கிகள் போட்டு ஃபைலைக் கீழே திருப்பி அனுப்ப முடியும். மீண்டும் ஃபைல் ஒவ்வொரு படியாக ஏறி என்னிடம் வருவதற்கு மூன்று நான்கு மாதங்கள் ஆகலாம். அல்லது ஸ்ட்ரைட் அவே சில ஆட்சேபங்களை எழுப்பி உங்கள் அப்ளிகேஷனையே என்னால் ரிஜெக்ட் பண்ணி விட முடியும்."

ராமநாதனுக்கு இலேசாகக் கோபம் வந்தது. ஆனால் கோபத்தை அடக்கிக்கொண்டு, "ஆனால் நீங்கள் ஏன் இப்படிச் செய்ய வேண்டும்?" என்றார்.

"புரியவில்லையா மிஸ்டர் ராமநாதன்?"

'மிஸ்டர் ராமநாதன்! முதல் முறையாக என்னைப் பெயர் சொல்லி அழைக்கிறார். அப்படியானால் என்னை அடையாளம் கண்டு கொண்டு விட்டாரா அல்லது என்னுடைய விசிட்டிங் கார்டைப் பார்த்து என் பெயரைத் தெரிந்து கொண்டாரா?'

"புரியவில்லை சார்!"

இளங்குமரன் முன்புறமாகக் குனிந்தார். "மிஸ்டர் ராமநாதன்! உங்கள் கிளையன்ட் கேட்டிருக்கும் கடன் தொகை ஐம்பது கோடி. அதில் இரண்டு பர்ஸன்ட் எவ்வளவு என்று சொல்லுங்கள்."

பொங்கியெழுந்த சினத்தை அடக்கிக் கொண்டு ராமநாதன் மௌனமாக இருந்தார்.

"நீங்கள் கணக்கில் கொஞ்சம் வீக் போலிருக்கிறது. அமௌண்ட்டை நானே சொல்கிறேன். ஒரு கோடி. ஜஸ்ட் ஹண்ட்ரட் லாக்ஸ். அதுதான் என்னோட டர்ம்ஸ்."

"வெல்..." ராமநாதன் தயங்கினார்.

"இதற்கு கமிட் பண்ண உங்களுக்கு அதிகாரம் இல்லை என்று எனக்குத் தெரியும். எனவே உங்கள் கிளையன்ட்டிடம் பேசி விட்டு, யூ கேன் கெட் பேக் டு மி. பணத்தை எப்போது, எங்கே, எப்படிக் கொடுப்பது என்கிற விவரமெல்லாம் அப்போது சொல்கிறேன்."

"சார். நீங்கள் கேட்பது... முறையற்றது."

"இருக்கலாம். ஆனால், லோன் வேண்டுமானால் இந்த கண்டிஷனுக்கு ஒப்புக் கொள்ள வேண்டும் என்று உங்கள் கிளையன்ட்டிடம் சொல்லி விடுங்கள்."

"சார் இந்த ப்ராஜக்டில் அனுமதிகள் பெறுவதிலிருந்து எல்லாமே முறையாகச் செய்யப்பட்டிருக்கின்றன. எல்லாவற்றையும் நாங்கள் சரியாகச் செய்திருப்பதால், இந்த ப்ராஜக்டுக்கு லோன் சாங்ஷன் ஆவதில் எந்தப் பிரச்னையும் இருக்காது என்று என் கிளையன்ட்டிடம் சொல்லியிருக்கிறேன். எந்த ஒரு...லஞ்சமும் கொடுக்காமல் லோன் வாங்கித் தருவதாக என் கிளையன்ட்டிடம் சொல்லியிருக்கிறேன்."

"நீங்கள்தானே சொல்லியிருக்கிறீர்கள்? நான் சொல்லவில்லையே?" என்று பெரிதாகச் சிரித்தார் இளங்குமரன்.

அந்தச் சிரிப்பு ராமநாதனைப் பத்து ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் சென்றது.

ப்போது ராமநாதன் ஒரு வங்கியில் அதிகாரியாக இருந்தார். கடன் மனுக்களைப் பரிசீலனை செய்து அவை பற்றி முடிவெடுப்பது அவர் பொறுப்பு.

அப்போதுதான் ஒருநாள் அவரைக் காண இளங்குமரன் வந்தார் - வந்தான். பளீரென்று மின்னிய வெள்ளை உடையில் மிடுக்காக வந்து அவர் எதிரே உட்கார்ந்து கொண்டு ஒரு சிகரட்டைப் பற்ற வைத்தான்.

ராமநாதன் எரிச்சலை அடக்கிக்கொண்டு, "யெஸ், வாட் டு யூ வான்ட்?" என்றார்.

அப்போதுதான் அவனிடமிருந்து அந்த எதிர்பாராத தாக்குதல் வந்தது.

"யோவ்! தமிழ்ல பேசுய்யா. தமிழ்நாட்டில இருந்துகிட்டு என்னய்யா இங்கிலீசு? நீ படிச்ச படிப்பை எங்கிட்ட காட்ட வேணாம்."

மரியாதைக் குறைவான விளிப்பு. எரிச்சலூட்டும் பிரயோகங்கள்.

ஆயினும் ராமநாதன் பொறுமையுடன், "என்ன வேண்டும் உங்களுக்கு?" என்றார்.

"போன மாசம் எங்க பேட்டையிலேந்து அம்பது பேரு தலைக்கு10,000 ரூபா லோன் கேட்டு அப்ளிகேஷன் கொடுத்திருக்காங்க. அவங்களுக்கு லோன் இல்லேன்னு சொல்லிட்டீங்களாமே, ஏன்?"

"எங்ககிட்ட லோன் கேட்டு தினமும் பல பேரு வராங்க. வரவங்க எல்லோருக்கும் நாங்க லோன் கொடுக்கறதில்லை. எங்களுக்குத் திருப்தியா இருந்தாத்தான் கொடுப்போம். நீங்க சொல்ற அம்பது பேர் யாருன்னு எனக்குத் தெரியலே. அதுக்கு முன்னே, நீங்க யாரு, உங்களுக்கு இந்த விஷயத்தில என்ன இன்ட்ரஸ்டுன்னு எனக்குத் தெரியணும்."

"நான் யாருன்னா கேக்கறீங்க?" என்றவன் தனது பையிலிருந்து ஒரு விசிட்டிங் கார்டை எடுத்து நீட்டினான். மத்தியில் ஆளும் கட்சியின் பலவித அமைப்புகளுள் ஏதோ ஒன்றின் துணைச் செயலாளர் இளங்குமரன் என்று அது அறிவித்தது.

"அந்த அம்பது பேரு யாருன்னா கேக்கறீங்க? யோவ் ஆறுமுகம்? லிஸ்ட் வச்சிருக்கியாய்யா?" என்று தனக்குப் பின்னால் மரியாதையுடன் சற்றுத் தள்ளி நின்றிருந்த ஒருவரை இளங்குமரன் கேட்ட பிறகுதான் ராமநாதன் அந்த நபரைப் பார்த்தார். சற்றே பரிச்சயமான முகம். ஓ! சமீபத்தில் கடன் கேட்டு மொத்தமாக வந்த ஐம்பது பேரில் இவரும் ஒருவர்.

ராமநாதன் சட்டென்று "இவரோட க்ரூப்பா வந்தவங்களைத்தானே சொல்றீங்க? அவங்களுக்குக் கடன் கொடுக்க முடியாதுன்னு சொன்னபோதே அதுக்கான காரணங்களையும் அவங்ககிட்ட சொல்லிட்டோமே!" என்றார்.

"சொன்னாங்களாய்யா?" என்ற இளங்குமரன், தன் ஆள் நெளிவதைப் பார்த்து மீண்டும் ராரநாதனிடம் பாய்ந்தான். "அப்படி என்ன சார் பெரிய காரணம்? சொல்லுங்களேன். நானும் தெரிஞ்சுக்கறேன்!"

"ஐ ஆம் சாரி. சம்பந்தமில்லாத மூணாவது மனுஷங்ககிட்ட நாங்க அந்தக் காரணங்களைச் சொல்றது அவசியமும் இல்லை, முறையும் இல்லை."

"என்ன சார் பேசறீங்க? நான் யாருன்னு உங்களுக்குத் தெரியுமா? நான் இவங்களோட பிரதிநிதி. அதனால காரணத்தைத் தெரிஞ்சுக்க எனக்கு உரிமை இருக்கு."

"அப்படீன்னா நீங்கதான் அவங்களோட பிரதிநிதின்னு அவங்ககிட்டேயிருந்து ஒரு லெட்டர் வாங்கிக்கிட்டு வாங்க. அப்ப சொல்றேன்."

"நீங்க ரொம்பவும் ராங்காப் போறீங்க. என்னோட பவர் உங்களுக்குத் தெரியாது. நான் நிதியமைச்சர் கிட்டயே நேரடியா ஃபோன்ல பேசுவேன். உங்க வேலை போயிடும். ஜாக்கிரதை!"

ராமநாதன் மௌனமாகச் சிரித்தார்.

"சரி. இப்ப இந்த ஆறுமுகமும் இன்னும் சில பேரும் என்னோட வந்திருக்காங்க. அவங்களையே சொல்லச் சொல்றேன். என்னையா ஆறுமுகம், நான் உங்க பிரதிநிதிதானே?"

ஆறுமுகமும் அவனுடன் வந்திருந்த வேறு சிலரும் தலையை ஆட்டினார்கள்.

"இப்ப சொல்லுங்க. ஏன் இவருக்கு லோன் கொடுக்க மாட்டேன்னு சொன்னீங்க?"

"அவங்க வாயால சொன்னது போதுமா இல்லே லெட்டர்ல எழுதிக் கொடுக்கச் சொல்லட்டுமா?" என்றான் தொடர்ந்து இளக்காரமாக.

"வாயால் எங்கே சொன்னார்கள்? தலையைத்தானே ஆட்டினார்கள்?" என்று மனதுக்குள் சொல்லிக்கொண்ட ராமநாதன் ஆறுமுகத்திடம் திரும்பி, "ஆறுமுகம், நீங்க என்ன தொழில் செய்யறதுக்காக லோன் கேட்டீங்க?" என்றார்.

ஆறுமுகம் சற்றுத் தயங்கி விட்டு, "துணி வியாபாரம்" என்றான்.

"கொஞ்சம் இருங்கள்" என்று இளங்குமரனைப் பார்த்துச் சொன்ன ராமநாதன், பியூனை அழைத்து குறிப்பிட்ட ஃபைலைத் தருவித்தார்.

அதிலிருந்த ஒரு விண்ணப்பத்தை இளங்குமரனிடம் காட்டினார். "நீங்களே பாருங்க. அவரு துணி வியாபாரம் செய்வதற்காக லோன் கேட்டதாகச் சொன்னாரு. ஆனா அப்ளிகேஷன்ல வாடகை சைக்கிள் கடை துவங்குவதற்காகன்னு எழுதியிருக்கு" என்றார்.

இளங்குமரன் அதைப் பார்க்காமலேயே, "அதுக்கு என்ன இப்ப? இவங்கள்ளாம் கைநாட்டு. யாரோ இவங்களுக்கு லோன் அப்ளிகேஷனை பூர்த்தி பண்ணிக் கொடுத்திருக்காங்க. எழுதிக் கொடுத்தவங்க சில அப்ளிகேஷன்கள்ள தொழிலை மாத்தி எழுதி இருக்கலாம். அதைத் திருத்தி சரியா எழுதிக் கொடுத்தா சரியாப் போச்சு" என்றான்.

"அது மாதிரி செய்ய முடியாது மிஸ்டர் இளங்குமரன். இவரோட கேஸ் மாதிரியேதான் மத்த 49 அப்ளிகேஷன்லேயும் சம்பந்தம் இல்லாம எதையோ எழுதி வச்சிருக்காங்க. 

"அவங்க இப்ப செஞ்சுக்கிட்டு இருக்கிற தொழிலுக்கும் செய்யப்போறதா சொல்ற தொழிலுக்கும் சம்பந்தமே இல்லை. பத்தாயிரம் ரூபா கடனாக் குடுத்தா அதை வச்சுக்கிட்டு என்ன செய்யறதுன்னே யாருக்கும் தெரியல்லே. 

"இயந்திரங்களும் மத்த பொருட்களும் வாங்கறதுக்காக அவங்க கொடுத்த கொட்டேஷன்கள் அங்கீகரிக்கப்பட்ட கடைகளிலேயிருந்து இல்லாம, ஏதோ ஊர் பேர் தெரியாத கடைகளிலிருந்து வாங்கினதா இருக்கு. சில கடைகளுக்கு நாங்க போய் விசாரிச்சதில அப்படிப்பட்ட கடைகளே இல்லை."

"நிறுத்துங்க. இவங்கள்yqம் பொய்யான தகவல்களையும் போலியான ஆவணங்களையும் கொடுத்து பேங்க்கை ஏமாத்திக் கடன் வாங்கப் பாத்தாங்கன்னு சொல்றீங்களா?"

"அப்படீன்னு நான் சொல்ல விரும்பலை. ஆனா அவங்க அப்ளிகேஷன்கள் முறையாக இல்லை, அவங்க கொடுத்த விவரங்களும் பேப்பர்களும் சரியாக இல்லைன்னு மட்டும் சொல்லுவேன்."

"ஆறுமுகம்! ஒரு சிகரெட் பாக்கெட் வாங்கிட்டு வா. மத்தவங்கள்ளாம் வீட்டுக்குப் போங்க" என்று கூறி தன்னோடு வந்த கூட்டத்தை அப்புறப்படுத்திய இளங்குமரன் பக்கத்தில் வேறு யாராவது இருக்கிறார்களா என்று சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, மேஜையின் முன்பு குனிந்தான்.

 "நீங்க சொல்றதெல்லாம் கரெக்ட்தான் சார். உங்களுக்குத் தெரியாதது இல்லை. சிறு தொழில்களுக்கு லோன் கொடுங்கன்னு அரசாங்கம் உங்களுக்குச் சொல்லியிருக்கு. அதனால நீங்களும் இது மாதிரி லோன்கள் கொடுத்தாகணும். 

"இந்த மாதிரி லோன் எல்லாமே இப்படித்தான். இந்தக் காலத்தில பத்தாயிரம் ரூபாய் முதல் போட்டு என்ன தொழில் செஞ்சு என்ன சம்பாதிக்க முடியும்? அதனாலதான் இந்தக் கடன்கள் எல்லாம் வசூல் ஆறதில்ல. 

"நீங்க கொடுக்கற பத்தாயிரத்தில நாலோ அஞ்சோ அவங்களுக்குக் கொடுத்துட்டு மீதியை நாமெல்லாம் பங்கு போட்டுக்க வேண்டியதுதான். உங்களுக்கு மொத்தமா இருபத்தஞ்சாயிரம் ரூபா கொடுத்திடறேன்..." என்றான் ஒரு விதமாகச் சிரித்தபடியே.

"போயிட்டு வாங்க" என்றார் ராமநாதன் பொறுமையாக.

"நீங்க பயப்பட வேண்டாம். இதெல்லாம் யாருக்கும் தெரியாம பாத்துக்கறேன்..."

"கெட் அவுட்!" என்றார் ராமநாதன் கோபத்துடன்.

"இப்ப நான் போறேன். கொஞ்ச நாள்ளே நீயும் இந்த இடத்தை விட்டுப் போயிடுவே!" என்று எச்சரித்து விட்டு இளங்குமரன் கிளம்பினான். போகும்போது ராமநாதனைப் பார்த்து ஏளனமாகச் சிரித்து விட்டுப் போனான்.

இளங்குமரனின் எச்சரிக்கை வெறும் மிரட்டல் இல்லை என்பது சில வாரங்களில் தெரிந்தது. 

"ஏழைகளுக்குக் கடன் கொடுக்க ராமநாதன் 25,000 ரூபாய் லஞ்சம் கேட்டார் என்று இளங்குமரன் நிதி அமைச்சருக்கு ஒரு புகார் எழுத, புகார்க் கடிதம் வங்கியின் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து விளக்கம் கேட்டு ராமநாதன் பணியாற்றிய கிளைக்கு அனுப்பப்பட்டது.

ராமநாதன்  கடன் விண்ணப்பங்களில் அவை ஏன் நிராகரிக்கப்படுகின்றன என்பது குறித்து விளக்கமாக எழுதிப் பதிவு செய்திருந்ததால், அந்த நகல்களைத் தலைமை அலுவலகத்துக்கு அனுப்ப அவர்களும் அதை நிதி அமைச்சகத்துக்கு அனுப்ப, 'குற்றச்சாட்டில் உண்மை இல்லை" என்று நிதி அமைச்சக அதிகாரி ஒருவர் குறிப்பு எழுதியதுடன், விஷயம் ஒரு முடிவுக்கு வந்தது.

ந்தப் பத்து வருடங்களில் இளங்குமரன் எவ்வளவோ மாறி விட்டான்(ர்). கட்சியில் வளர்ந்து தலைவருக்கு நெருக்கமாகி, அரசு நிதி நிறுவனத்தின் தலைவராகலொரு அரசியல் பதவியில் நியமிக்கப்படும் அளவுக்கு உயர்ந்து விட்டார். ஆனால் அவரிடம் இரண்டு விஷயங்கள் மட்டும் மாறவில்லை.

ஒன்று, அந்த டிரேட் மார்க் வில்லன் சிரிப்பு.

மற்றொன்று. மற்றவர்களை மிரட்டிப் பணிய வைக்க நினைக்கும் குணம்.

'ஆனால் இவருடைய மிரட்டலுக்கு நான் பணியப் போவதில்லை. நடப்பது நடக்கட்டும்.'

"சார்! முடிவாக என்ன சொல்கிறீர்கள்?" என்றார் ராமநாதன்.

"முடிவு உங்கள் கையில்தான் இருக்கிறது" என்றார் இளங்குமரன் விட்டுக் கொடுக்காமல்.

"நீங்கள் மாறவில்லை!" என்றார் ராமநாதன்.

"நீங்கள் மாறியிருப்பீர்கள் என்று நான் எதிர்பார்த்தேன்!"

"மிஸ்டர் இளங்குமரன்! ஒரு வேண்டுகோள். என்மீது உள்ள பழைய கோபத்துக்காக என் கிளையன்ட்டை தண்டிக்காதீர்கள்."

"நான் யாரையும் தண்டிக்கவில்லை. நான் கேட்பது வழக்கமாக நான் கேட்கும் தண்டலைத்தான்."

ராமநாதன் எழுந்தார். "நான் வருகிறேன்....ஒருவேளை நீங்கள் உங்கள் மனதை மாற்றிக் கொள்வதானால் என்னைக் கூப்பிடுங்கள். ஏனென்றால் இந்த பிராஜக்ட் நிறைவேறாவிட்டால் அதில் இந்த நாட்டுக்கும் நஷ்டம் உண்டு."

இளங்குமரன் மௌனமாக இருந்தார். உதட்டில் மட்டும் இலேசான புன்னகை. 'எனது தோல்வியை ரசித்து அனுபவிக்கிறார் போலும். அனுபவிக்கட்டும்.'

ராமநாதன் மெல்ல எழுந்து சோர்வுடன் அறைவாசலை நோக்கி நடந்தார். அவர் கதவைப் பாதி திறந்து வெளியேற முற்படுகையில், 'மிஸ்டர் ராமநாதன்!" என்று அறைக்குள்ளிருந்து அழைப்பு வந்தது.

ராமநாதன் திரும்பி வந்தார். "என்ன?"

"நீங்கள்தானே சொன்னீர்கள், நான் என் முடிவை மாற்றிக் கொண்டால் உங்களைக் கூப்பிட வேண்டும் என்று?"

"புரியவில்லை. யூ மீன்..."

"எஸ். உங்கள் கிளையன்ட்டின் பிராஜக்ட் சாங்ஷன் ஆகப் போகிறது. கடன் வழங்க சிபாரிசு செய்து ஃபைலை போர்டுக்கு அனுப்பப் போகிறேன்."

"பட் ஹௌ? நீங்கள் கேட்ட..."

"நீங்கள் எதுவும் தர வேண்டாம். நீங்கள் மாறியிருப்பீர்களோ என்று பார்க்க விரும்பினேன். அவ்வளவுதான். நீங்கள் மாறவில்லை. 

"ஒரு வங்கி அதிகாரியாக இருந்து நேர்மையைக் கடைப்பிடிப்பதை விட ஒரு கன்ஸல்டன்ட்டாக இருந்து தன் கிளையண்ட் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை என்று நேர்மையைக் கடைப்பிடிப்பது ரொம்பவும் கஷ்டம். 

"இந்தப் பத்து வருடங்களில் நான் கற்றுக்கொண்டது ஏராளம் - ஆங்கிலம் உட்பட! நான் கற்றுக்கொண்டதில் முக்கியமானது உலகத்தில் எல்லோரும் என்னைப்போல் இருக்க முடியாது என்பதுதான். 

"இது வெறும் தத்துவம் இல்லை. ஒரு பிராக்டிகல் நெசஸிடி. உங்களைப்போன்ற நேர்மையானவர்கள் சிலரும் இந்த உலகத்துக்குத் தேவை. அப்போதுதான் என்னைப் போன்றவர்களும் சர்வைவ் பண்ண முடியும். 

"எல்லோரும் என்னைப் போலவே இருந்து விட்டால், தராசின் ஒரே தட்டில் எல்லா எடையையும் வைத்தது போல, தராசு கீழே சாய்ந்து எல்லோரும் கீழே விழ வேண்டியதுதான். 

"அதனால்தான் இந்த உலகத்தை பாலன்ஸ் செய்ய உங்களைப்போன்ற சிலர் தேவைப்படுகிறார்கள். உங்களால் எங்களை பீட் பண்ண முடியாது. பட் வீ நீட் யூ. 

"உங்களப் போன்றவர்கள் தொடர்ந்து இருந்து கொண்டிருக்க வேண்டுமானால், நேர்மையும் ஜெயிக்க வேண்டும் - சில சமயமாவது! அதனால் இந்த முறை உங்கள் நேர்மை வெல்வதற்கு நானும் ஒத்துழைக்கிறேன் - இன் மை ஓன் செல்ஃபிஷ் இன்டரஸ்ட்!"

ராமநாதன் திகைத்து நின்றார். இளங்குமரனின் வளர்ச்சி வெறும் பொருளாதார, சமூக ரீதியானது மட்டுமல்ல. சிந்தனையிலும் அவர் வளர்ந்திருக்கிறார்!

முதல் முறையாக இளங்குமரன் மீது ராமநாதனுக்கு இலேசான மதிப்பு ஏற்பட்டது - அவரது விளக்கம் அடிமனதில் கொழுந்து விட்டெரியச் செய்த கோபத்தையும் மீறி.



Saturday, July 28, 2012

6. (ஏ)மாற்றம்

பல வருடங்கள் கழித்து எங்கள் குல தெய்வத்தின் கோவிலுக்குச் சென்றேன். என் அப்பா உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தபோது என் அம்மாவின் விருப்பப்படி, என் அப்பா பிழைத்தெழுந்தால் குலதெய்வத்தின் கோவிலுக்கு வந்து அங்கப் பிரதட்சிணம் செய்வதாக வேண்டிக் கொண்டிருந்தேன்.

 குலதெய்வம் என் அப்பாவைப் பிழைக்க வைக்கவில்லை. அதனால் நானும் என் வேண்டுதலை இதுவரை நிறைவேற்றவில்லை. 

ஆனால் என் அம்மா மட்டும் அடிக்கடி 'ஒரு தடவை குலதெய்வம் கோவிலுக்குப் போய் அங்கப் பிரதட்சிணம் செய்து விட்டு வா. குடும்பத்துக்கு நல்லது' என்று சொல்லிக்கொண்டே இருந்தார்கள். பிறகு ஒருநாள் அவர்களும் போய்ச் சேர்ந்து விட்டார்கள்.

பத்து வருடங்கள் கழித்துப் பிரார்த்தனையைப் பெற்றுக்கொள்ள என் குலதெய்வம் முடிவு செய்து விட்டது போலும்! குடும்பத்தில் சிறு சிறு பிரச்னைகள் வந்ததும், "ஒரு தடவை குலதெய்வம் கோவிலுக்குப் போய் அங்கப் பிரதட்சிணம் செய்து விட்டு வாருங்கள். குடும்பத்துக்கு நல்லது" என்றாள் என் மனைவி. அன்று என் அம்மா சொன்ன அதே வார்த்தைகள்! தாய் சொல்லைத் தட்டலாம். தாரம் சொன்ன சொல்லைத் தட்ட முடியுமா? அதுதான் கிளம்பி வந்து விட்டேன்.

அதிகாலையிலேயே அங்கப் பிரதட்சிணம் செய்ய வேண்டும் என்பதால் முதல்நாள் இரவே அந்த ஊருக்கு வந்து விட்டேன். கோவில் இருந்தது ஒரு சிற்றூரில் என்றாலும் ஓரளவு புகழ் பெற்ற கோவில் என்பதால் கோவிலில் எப்போதும் கூட்டம் இருக்கும். (பக்த கோடிகள் கூடப் புகழ் பெற்ற கடவுளைத்தானே நாடுகிறார்கள்!) எனவே ஊரில் சில தங்கும் விடுதிகள் உண்டு. ஊரில் வசிப்பவர்கள் சிலரும் வெளியூர் பக்தர்களுக்குத் தங்கள் வீடுகளில் தங்க இடமளித்து உணவளிப்பதும் உண்டு. இதில் அவர்களுக்குச் சிறிதளவு வருமானமும் கிடைக்கும்.

ஊருக்கு நான் வந்து சேர்ந்தபோது பொழுது சாய்ந்து விட்டது. கோவில் வாசல் அருகே நின்று திருதிருவென்று விழித்துக் கொண்டிருந்த என்னை ஒருவர் அணுகித் தன் வீட்டில் தங்கிக் கொள்ளலாம் என்று கூறி அழைத்துச் சென்றார்.

'ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம்' என்ற ஆழ்வாரின் வாக்குக்கு இசைவாக இருந்த அந்தக் குடிலில் நுழைந்து, குளித்து உடை மாற்றிக்கொண்டு, (அந்த) இல்லத்தரசி அன்புடன் அளித்த நீர்த்த ஆனால் மணத்துடன் இருந்த காப்பியைப் பருகிய பின் கோவிலுக்குக் கிளம்பினேன்.

அந்த நேரத்தில் கோவிலில் கூட்டம் அவ்வளவாக இல்லை. மூலவரைத் தரிசித்து விட்டுப் பிரகாரம் சுற்றி வந்தபோது, ஒரு சிறிய சன்னதி கண்ணில் பட்டது. சன்னதியின் பெயர் 'நம்மாழ்வார்' என்று மங்கிய வெளிச்சத்தில் படித்ததும் ஒரு கணம் என்னை அறியாமல் உடல் சிலிர்த்தது.

'திருவாய்மொழி' கொஞ்சம் படித்ததால் நம்மாழ்வாரிடம் ஆழமான ஈடுபாடு கொண்டிருந்த நான், அநேகமாக யாருமே கண்டு கொள்ளாத அந்தச் சன்னதிக்குள் நுழைந்தேன். 

சன்னதி வாசலில், உள்ளே இருந்த விக்கிரகத்தை விட மங்கலாகத் தோன்றிய ஒரு உருவம், உள்ளே வருபவர்களுக்குச் சடாரி வைக்கத் தயாரான நிலையில் அமர்ந்திருந்தது.

குனிந்து தலையில் சடாரி வாங்கிக்கொண்ட பின், நிமிர்ந்து அவர் முகத்தைப் பார்த்ததும் ஏதோ பொறி தட்டியது. பல வருடங்களுக்கு முன் என் அப்பாவுடன் இந்தக் கோவிலுக்கு வந்தபோது அவரைச் சந்தித்தது நினைவுக்கு வந்தது. பள்ளி ஆசிரியராக இருந்த என் அப்பாவின் பழைய மாணவர் அவர்.

"சுவாமிகள் பெயர் ரங்கநாதன்தானே?" என்றேன்.

"ஆமாம். தேவரீர் யாரோ?" என்றார் அவர், கண்களை இடுக்கிக்கொண்டு.

"நான் உங்கள் பள்ளி ஆசிரியர் வரதராஜனின் பையன். பல வருடங்களுக்கு முன்பு என் அப்பாவுடன் இங்கே வந்தபோது உங்களைப் பார்த்திருக்கிறேன்" என்றேன் நான்.

இதைக் கேட்டதும் அவர் முகத்தில் பெரிய பூரிப்பு. "வரது சாரின் பையனா நீங்கள்? சார் எப்படி இருக்கிறார்?" என்றார்.

"அப்பா காலம் ஆகிப் பத்து வருடங்கள் ஆகி விட்டன" என்றேன்.

"யாரோ சொன்னார்கள். நிச்சயமாகத் தெரியாததால்தான் கேட்டேன். ரொம்ப நல்ல மனுஷன்" என்றவர், உடனே பேச்சை மாற்றி, "எங்கே தங்கி இருக்கிறீர்கள்?" என்றார்.

சொன்னேன்.

"ஓ! அவர்கள் நன்றாக கவனித்துக் கொள்வார்கள்தான். ஆனால், நீங்கள் நம் அகத்திலேயே சாப்பிடலாமே!" என்றார் அவர். இதை அவர் உபசாரத்துக்காகச் சொல்லவில்லை, உண்மையாகத்தான் சொன்னார் என்று தோன்றியது.

"இல்லை. அங்கே எனக்காகச் சாப்பாடு தயார் செய்து வைத்திருப்பார்கள்"

அதற்குப் பிறகு வெகுநேரம் என் அப்பாவைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார் அவர். பள்ளிக்கூட நாட்கள், என் அப்பா அவரிடம் அன்பு காட்டியது, அடித்தது என்று பல விஷயங்களையும் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார். பள்ளிக்கூட நாட்களுக்கு ஒரு நினைவுப் பயணம் போய் எல்லாவற்றையும் மீண்டும் அனுபவித்து உணர்ந்தது போல் பேசினார்.

பிறகு என்னைப் பற்றியும், நான் கோவிலுக்கு வந்தது பற்றியும் கேட்டறிந்தார்.

"அங்கப்பிரதட்சிணமா? காலையில் 5 மணிக்கு வந்து திருக்குளத்தில் நீராடி விட்டு அங்கப்பிரதட்சிணம் செய்தபிறகு நேரே சன்னதிக்கு வரலாம். அதிகாலையில் விஸ்வரூப தரிசனம். கூட்டம் இருக்கும். ஆனால் அங்கப் பிரதட்சிணம் செய்பவர்களுக்கு வரிசை கிடையாது. பெருமாளை தரிசிக்க அவர்களுக்குத்தான் முன்னுரிமை" என்றார் அவர்.

நேரமாகி விட்டதால் அவரிடம் விடை பெற்றேன். "ரொம்ப சந்தோஷம்" என்று இரு கைகளையும் மேலே தூக்கி வணங்கினார். அவர் சற்றே அதிகப்படியான மரியாதை காட்டியதாக எனக்குத் தோன்றியது.

நான் தங்கியிருந்த இடத்துக்கு வந்ததும், "ஏன் இவ்வளவு நேரம்? இந்த நேரத்தில் அவ்வளவாகக் கூட்டம் கூட இருந்திருக்காதே?" என்றார் .வீட்டுக்காரர். 

ரங்கநாதனைச் சந்தித்துப் பேசியது பற்றிச் சொன்னேன்.

"அவருக்குப் பணம் ஏதாவது கொடுத்தீர்களா?" என்றார் வீட்டுக்காரர்.

"பணமா, எதற்கு?" என்றேன் புரியாமல்.

"அவரைப் போன்றவர்களுக்குக் கோவிலில் இருந்து என்ன வருமானம் வந்து விடப் போகிறது? நீங்கள்தான் பார்த்திருப்பீர்களே - அவர் இருக்கிற சன்னதிக்குப் பல பேர் வரக் கூட மாட்டார்கள். உங்களைப் போன்றவர்கள் கொடுப்பதை வைத்துத்தான் அவர்கள் வாழ்க்கை ஓடுகிறது!"

"என் அப்பாவுக்குத் தெரிந்தவர் என்ற முறையில்தான் அவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவருக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றவில்லை!"

"நீங்கள் ஒரு ஐம்பது ரூபாய் கொடுத்திருந்தால் அவர் மிகவும் சந்தோஷப்பட்டிருப்பார்."

"நாளைக்குப் பார்த்துக் கொடுத்து விடுகிறேன்" என்றேன் நான். 

அவர் தலைக்கு மேல் கைகளைத் தூக்கி என்னை வணங்கிய காட்சி என் நினைவுக்கு வந்தது. ஏமாற்றத்தாலும், விரக்தியினாலும்தான் அப்படிச் செய்தாரா?

மறுநாள் காலை அங்கப் பிரதட்சிணம் முடித்துப் பெருமாள் சன்னதிக்கு அருகே போனபோது ரங்கநாதன் அங்கே நின்று கொண்டிருந்தார்.

அவரைப் பார்த்துப் புன்னகை செய்தேன். அவர் முகத்தில் சலனம் இல்லை. திடீரென்று என்னப் பார்த்து உரத்த குரலில், "கொஞ்சம் பின்னால் போங்கள். இவ்வளவு பேர் வரிசையில் நிற்பது தெரியவில்லையா?" என்றார் சற்றுக் கடுமையாக.

"அங்கப் பிரதட்சிணம் செய்தவர்கள் நேராகப் போகலாம்" என்று சொன்னார்களே?" என்றேன். 'சொன்னீர்களே' என்று கூடச் சொல்லியிருக்கலாம்! எனக்கு முன்னே, சிலர் அங்கப் பிரதட்சிணம் செய்ததன் அடையாளமான மண் படிந்த வேட்டியுடன் உள்ளே போய்க் கொண்டிருந்தார்கள்

அவர் முகம் கடுகடுத்தது. "அங்கப் பிரதட்சிணம் செய்து விட்டால் நேரே சொர்க்க வாசலுக்கே போகலாமே! இங்கே ஏன் வருகிறீர்கள்? உங்களுக்கு முன்னால் இவ்வளவு பேர் அர்ச்சனைத் தட்டுடன் நிற்பது தெரியவில்லை? நீங்கள் எல்லாம் படித்தவர்கள்!" என்று பெரும் குரலெடுத்துக் கூவினார்.

முன்னே நின்றிருந்த அர்ச்சகர்களும், வரிசையில் நின்றவர்களும் சற்றே ஆச்சரியத்துடன் எங்களைப் பார்க்க, "நீங்கள் எல்லாம் படித்தவர்கள்" என்று அவர் எந்த அர்த்தத்தில் சொன்னார் என்று நான் யோசிக்கத் துவங்கினேன்.

(Written in January, 2010)