Tuesday, August 2, 2011

5. ஆறு மனமே ஆறு

தொழிலதிபர் சிதம்பரத்துக்கு இந்தப் பிரச்னைக்கு எப்படித் தீர்வு காண்பது என்றே தெரியவில்லை. அவருடைய தொழில் நிறுவனத்தை அவரது மூத்த மகன் இந்திரன்தான் நிர்வகித்து வந்தான். இளைய மகன் திலீபனும் டைரக்டர் என்ற முறையில் நிர்வாகத்தில் பங்கு பெற்றிருந்தான்.

கடந்த சில வருடங்களாகவே இருவருக்கும் ஒத்துப் போகவில்லை. பெரியவன் தன்னை லட்சியம் செய்வதில்லை, எனவே பிசினஸை இரண்டாகப் பிரித்துத் தனக்கு ஒரு தனி நிறுவனம் அமைத்துத் தர வேண்டும் என்று திலீபன் முறையிட்டு வந்தான். மூத்தவன் இந்திரனோ, நிறுவனத்தைப் பங்கிடக் கூடாது, வேண்டுமானால், அலுவலகத்தில் திலீபனுக்குக் கொஞ்சம் பெரிதாக ஒரு கேபின் கொடுத்து விடலாம் என்றான்.

ஆரம்பத்தில் சிதம்பரம் இந்த விவகாரத்தைக் கண்டு கொள்ளாமல் அலட்சியமாக இருந்து விட்டார். விளைவு? சகோதரர்கள் இருவருக்கும் விரோதம் முற்றி அடிதடி வரை போய் விட்டது. 

"பங்கு பிரிக்காவிட்டால் தீக்குளிப்பேன்" என்று இளைய மகன் திலீபன் மிரட்ட, "நிறுவனத்தை இரண்டாகப்  பிரித்தால், நான் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டேன்" என்று மூத்த மகன் இந்திரன் எச்சரிக்க, நிலைமை கை மீறிப் போய்விட்டதை உணர்ந்தார் சிதம்பரம் . 

அவர் என்ன சொன்னாலும் அதற்கு எதிர்ப் பேச்சு பேசும் அவர் மனைவி பாரதியோ, "பேசாமல் திலீபன் கேட்டபடி நிறுவனத்தை இரண்டாகப் பிரித்து விடுங்கள். இல்லாவிட்டால்..." என்று மிரட்டி விட்டுப் போய் விட்டாள். 

என்ன செய்வது என்று மண்டையை உடைத்துக் கொண்டிருந்தபோதுதான் சிதம்பரத்துக்கு அவருடைய ஒய்வு பெற்ற ஆடிட்டர் ஸ்ரீராமனின் நினைவு வந்தது. உடனே ஸ்ரீராமனை அழைத்து அவரிடம் விஷயத்தைச் சொன்னார்.

"கவலைப்படாதீர்கள் சார்!" என்றார் ஸ்ரீராமன். "இன்னும் ஆறு மாதங்களில் இந்தப் பிரச்னைக்கு ஒரு ஒரு தீர்வு கண்டு பிடித்து விடுகிறேன்"

பிள்ளைகள் இருவருக்கும் இந்த ஏற்பாடு அறவே பிடிக்கவில்லை. இந்த மனிதர் பாட்டுக்கு நிறுவனத்தை இரண்டாகப் பிரி என்று சொல்லி விடப் போகிறாரே என்ற பயம் இந்திரனுக்கு. இரண்டாகப் பிரித்தால் பிரச்னை வரும் என்று சொல்லி விடப் போகிறாரே என்ற கவலை திலீபனுக்கு. சிதம்பரத்தின் மனைவி பாரதியும் இது வேண்டாத வேலை என்று தன் கருத்தைத் தெரிவித்தாள்.

சொன்னபடி ஆறாவது மாத இறுதியில் தன் அறிக்கையைக் கொடுத்து விட்டார் ஸ்ரீராமன். இந்த ஆறு மாதங்களில் அவர் நாடு முழுவதும் பரவியிருக்கும் நிறுவனத்தின் பல கிளைகளுக்கும் சென்று, ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், நிறுவனத்துக்கு காஃபி, டீ சப்ளை செய்பவர்கள் என்று பல தரப்பினருடன் பேசி, அவர்கள் கருத்துக்களையெல்லாம் கேட்டு அறிந்து கொண்டார்.

"என்ன சிபாரிசு செய்திருக்கிறீர்கள்?" என்றார் சிதம்பரம், ஸ்ரீராமன் கொடுத்த கனமான அறிக்கைப் புத்தகத்தை வாங்கியபடியே.

"அறிக்கையைப் படியுங்கள். விவரமாக எழுதியிருக்கிறேன்" என்றார் ஸ்ரீராமன் பிடி கொடுக்காமல்.

"பார்த்தாலே தெரிகிறதே!" என்றார் சிதம்பரம், அறிக்கையின் கனத்தை உணர்ந்தபடி." முழுவதும் படிக்க எனக்கு நேரமில்லை. சுருக்கமாகச் சொல்லுங்களேன்" என்றார் தொடர்ந்து.

"ஆறு யோசனைகள் சொல்லியிருக்கிறேன். இவற்றில் ஏதாவது ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்" என்று ஆரம்பித்தார் ஸ்ரீராமன்.

"ஆறு யோசனைகள் எதற்கு? இது என்ன ஆண்டவன் கட்டளையா? நான் உங்களிடம் ஒரு தெளிவான முடிவைத்தானே குறிப்பிடச் சொன்னேன்?"

"பொறுங்கள். ஆறு யோசனைகளுமே செயல்படுத்தக் கூடிய தீர்வுகள்தான். முதல் யோசனை, நிறுவனத்தைப் பங்கு போடாமலேயே, திலீபனுக்கு ஒரு பெரிய பொறுப்பைக் கொடுப்பது. இரண்டாவது யோசனை, நிறுவனத்தை இரண்டாகப் பிரித்து இரண்டு பிள்ளைகளுக்கும் கொடுத்து விட்டு, ஹைதர் காலக் கட்டடமான தலைமை அலுவலகத்தை நீங்களே வைத்துக் கொள்வது.  மூன்றாவது யோசனை, நிறுவனத்தை இரண்டாகப் பிரித்து, ஹைதர் காலக் கட்டடத்தை இந்திரனுக்குக் கொடுப்பது. நான்காவது..."

"கொஞ்சம் இருங்கள். தலை சுற்றுகிறது."

"ஏன் உங்களுக்கு ரத்த அழுத்தம் உண்டா?"

"இத்தனை நாள் இல்லை. இப்போது வந்திருக்கும் போலிருக்கிறது...இருக்கட்டும். இந்த ஆறு யோசனைகளில் எது சிறந்தது என்று நீங்கள் நினைக்கீறீர்கள்?"

"ஐந்தாவதைத்தான். அது என்னவென்றால்... நிறுவனத்தைப் பிரிக்காமலேயே ஒரு தனிப்பிரிவை உருவாக்கி, அதை உங்கள் இரண்டாவது மகன் திலீபனிடம் ஒப்படைப்பது."

"இப்போதுதான் ரத்த அழுத்தம் கொஞ்சம் குறைந்த மாதிரி இருந்தது. மறுபடி.... அதாவது நீங்கள் சொல்வது, 'சம்சாரம் அது மின்சாரம்' படத்தில் விசு ஒரு கோட்டைப் போட்டு வீட்டைப் பிரிப்பாரே, அது மாதிரியா?"

"மன்னிக்க வேண்டும். நான் சினிமா பார்ப்பதில்லை."

'ஆனால் சினிமாவுக்குக் கதை எழுதுவீர்கள் போலிருக்கிறது. அதனால்தான் ஒரு பிரச்னைக்கு ஆறு பிளாட் கொடுத்திருக்கிறீர்கள்!' என்று சிதம்பரம் மனதில் நினைத்துக்கொண்டார். "அப்படியானால் நீங்கள் இந்த ஒரு யோசனையை மட்டும் கொடுத்திருக்கலாமே?" என்றார்.'

'அப்படியெல்லாம் சுலபமாகச் செய்திருந்தால் ஆறு மாத அவகாசம் எதற்கு? உங்கள் கம்பெனி செலவில் உங்கள் அலுவலகங்களைப் பார்க்கும் சாக்கில் இந்தியா முழுவதும் விமானத்தில் சுற்றி, ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் தங்கி, உல்லாசமாக இருந்திருக்க முடியுமா, அல்லது இப்படியெல்லாம் என் நேரத்தைச் செலவழித்ததற்காக, உங்களிடம் இவ்வளவு பெரிய தொகையை ஃபீஸாகத்தான் கறந்திருக்க முடியுமா?' என்று மனதில் நினைத்த ஸ்ரீராமன், "அது எப்படி சார்? முடிவு செய்ய வேண்டியவர் நீங்கள். நான் உங்களுக்குச் சில யோசனைகள் சொல்லி, அவற்றிலிருந்து நீங்கள் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதுதானே முறையாக இருக்கும்? மேலும், என் கருத்தை நீங்கள் ஏற்றுக்கொள்ள  வேண்டும் என்ற அவசியம் இல்லையே?" என்று நீண்ட விளக்கம் அளித்தார்.

'உங்கள் அறிக்கையையே நான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவசியம் இல்லை' என்று மனதுக்குள் கறுவிய சிதம்பரம், "சரி சார். நன்றி. நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று விடை கொடுத்தார்.

"வருகிறேன். வேறு எதாவது அசைன்மென்ட் இருந்தால் சொல்லுங்கள். அடுத்த ஆறு மாதங்கள் நான் ஃப்ரீயாகத்தான் இருப்பேன்" என்று கிளம்பினார் ஸ்ரீராமன்.

'நீங்கள் ஃப்ரீயாக இருந்தால்தான் மற்றவர்களுக்கு நல்லது' என்று முணுமுணுத்த சிதம்பரம் சீக்கிரமே ஒரு முடிவு செய்தார்.

பிள்ளைகள் இருவரையும் ஒன்றாக அழைத்து அறிக்கையை அவர்களிடம் கொடுத்தார். 'இதைப்  படித்து ஆராய எனக்கு நேரம் இல்லை, பொறுமையும் இல்லை. நீங்கள் இதைப் படித்து ஆராய்ந்து  இதன் சாராம்சத்தை எனக்கு விளக்க வேண்டும். எழுதிக் கொடுத்தாலும் சரிதான். இந்த அறிக்கையை ஆராய்வதில் உங்கள் நுண்ணறிவு வெளிப்பட வேண்டும்" என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்தார். ரத்த அழுத்தம் வெகுவாகக் குறைந்து விட்டாற்போல் இருந்தது.

சில மாதங்களுக்குப், பிறகு தன் நிறுவனத்தின் பொது மேலாளரை அழைத்தார் சிதம்பரம். "கம்பெனி எப்படிப் போய்க்கொண்டிருக்கிறது?" என்றார்.

"சார், நான் சொன்னால் நீங்கள் தப்பாக நினைக்கக் கூடாது. மூன்று மாதங்களாக, உங்கள் பிள்ளைகள் இருவரும் நிர்வாகத்தில் தலையிடுவதே இல்லை. அதனால் கம்பெனி நன்றாக முன்னேறிக் கொண்டிருக்கிறது" என்றார் பொது மேலாளர் கொஞ்சம் தயக்கத்துடன்.

"ஏன் தலையிடுவதில்லை? அவர்களுக்குள் சண்டை போட்டுக் கொள்வதிலேயே நேரம் போய் விடுகிறதா?"

"அவர்கள் இப்போது சண்டை போட்டுக்கொள்வதே இல்லை சார். இரண்டு பேரும் ரொம்ப ஒற்றுமை. ஒரே கேபினில் இரண்டு சீட் போட்டுப் பக்கத்துப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். எப்போது பார்த்தாலும் கையில் ஒரு தடிமனான புத்தகத்தை வைத்துக்கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள்  விவாதம் எதுவும் இல்லை. ஏதோ நகைச்சுவை நாவலைப் படிப்பது போல் சொல்லிச் சொல்லிச் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருமுறை அது என்ன புத்தகம் என்று கேட்டேன். 'இதுவா? சொதப்பல் ஸ்ரீராமன் ரிபோர்ட்' என்று சொல்லி விழுந்து விழுந்து சிரித்தார்கள். எனக்கு எதுவும் புரியவில்லை. கம்பெனி விஷயமாக ஏதாவது கேட்டால், 'நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். எங்களைத் தொந்தரவு செய்யாதீர்கள்' என்கிறார்கள்."

"ஒகே" என்றார் சிதம்பரம்.

சிதம்பரத்திடமிருந்து அறிக்கை வாங்கிக்கொண்டு போய் ஆறு மாதம் கழித்து இந்திரனும், திலீபனும் சேர்ந்து தந்தையைப் பார்க்க வந்தார்கள். திலீபன் கையில் ஸ்ரீராமன் அறிக்கைப் புத்தகம் திரும்பத் திரும்பப் படிக்கப்பட்டதால் நைந்து, தொய்ந்து, தளர்ந்து உயிர் போகும் நிலையில் இருந்தது.

"அப்பா இந்த அறிக்கை..." என்று ஆரம்பித்தான் இந்திரன்.

"அதைக் கிழித்துப் போட்டு விட்டு - அது ஏற்கெனவே கிட்டத்தட்ட கிழிந்த நிலையில்தான் இருக்கிறது - வேலையைப் பாருங்கள். கடந்த ஆறு மாதமாக கம்பெனி எப்படி நடக்கிறதோ அப்படியே நடக்கட்டும். அதுதான் உங்களுக்கும் நல்லது, எனக்கும் நல்லது, கம்பெனிக்கும் நல்லது!" என்றார் சிதம்பரம்.

ஆடிட்டர் ஸ்ரீராமன் ஆறு மாதம் ஆராய்ச்சி செய்து தெரிவித்த ஆறு தீர்வுகளையும் தாண்டி ஏழாவதாக ஒரு தீர்வு கிடைத்து விட்ட திருப்தி அவருக்கு.
  Date of writing: Jan 10, 2011.
விஜயசாரதி