Thursday, October 9, 2025

28. சிறைக்குப் போகும் கண்டம்!

விமானம் கிளம்ப இன்னும் அரை மணி நேரம் இருந்தது. விமான நிலைய லவுஞ்ச்சில் உட்கார்ந்திருந்த கோபாலன், சுற்றுப்புறத்தைப் பற்றிய பிரக்ஞையை மறந்து, சிந்தித்துக் கொண்டிருந்தார்.

நேற்று ஏதோ நேரம் இருந்தது என்று தமது பழைய நண்பர் ராமனைப் பார்க்கப் போனதால் வந்த வினைதான் எல்லாம். கை ரேகை நிபுணரான ராமன் சும்மா இல்லாமல், விளையாட்டாக கோபாலனின் கையைப் பார்க்க ஆரம்பித்தார். 

முதலில் அசிரத்தையாகப் பலன் கேட்டு வந்த கோபாலன், சில விஷயங்களை ராமன் கண்ணால் பார்த்தது போல் நுணுக்கமாக, கச்சிதமாக விவரிக்க ஆரம்பித்ததும், வியப்பில் ஆழ்ந்து விட்டார். ஆர்வம் பெருக மேலும் கேட்டு வந்த போதுதான், ராமன் அந்த வெடியை எடுத்து வீசினார். 

கோபாலா, நான் கேட்கிறேன் என்று தப்பா நினைச்சுக்காதே! நீ என்ன பிசினஸ் பண்ற?” 

மேனேஜ்மென்ட் கன்சல்டன்ட்.” 

சட்ட விரோதமா ஏதாவது செய்யறியா?” 

சேச்சே!” 

வருமான வரி ஏய்ப்பு ஏதாவது செஞ்சிருக்கியா?” 

“100 சதவீதம் நேர்மையான இன்கம் டாக்ஸ் ரிட்டர்னுக்கு ஒரு சாம்பிள் வேணும்னா, என் ரிடர்னைத்தான்  காட்ட முடியும். ஆமாம், என்ன இது? எதுக்கு இப்படி எல்லாம் கேக்கற?” 

ராமன் முகத்தைக் கவிழ்த்தபடி, சற்று நேரம் யோசனை செய்தார். 

கோபாலா, ஐ ஆம் சாரி. இந்தத் தொழில்ல உண்மையைச் சொல்லிடணும். எதையும் மறைக்கக் கூடாது. உன் கை ரேகைப்படி, உன்னைச் சிறைக்கு அனுப்பக் கூடிய கண்டம் ஒண்ணு இருக்கு!” 

வாட்?” 

அதனாலதான் கேட்டேன். நீ ஏதாவது தப்புக் காரியம் செஞ்சிருக்கியான்னு! வேற ஏதாவது, மது மாது இது மாதிரி?” 

ஸ்டாப் இட்! உனக்குத் தெரியும், என்னைப் பத்தி. என் வாழ்க்கையில ஒரே லட்சியம் நேர்மை, தூய்மை, உண்மை இதுதான். நேர்மையா இருந்தும், நான் வசதியா இருக்கிறது கடவுளோட கருணை.” 

இரு, இரு. நான் உன்னை சந்தேகப்படல ஆனா, ரேகை பொய் சொல்லாதே!”

அப்படின்னா, நான் ஜெயிலுக்குப் போவேன்னு சொல்றியா? 

"அதைத்தான் சொல்ல வரேன். போவேன்னு நிச்சயமா சொல்ல முடியாது. சில விஷயங்கள்ள பிராபபிலிடிதான் இருக்கும். நிச்சயம் நடக்கும்னு சொல்ல முடியாது. இந்த சமயத்தில உனக்குச் சிறைக்குப் போற கண்டம் இருக்கு அப்படின்னு தான் சொன்னேன். ஆனா, போகத்தான் வேணும்னு அவசியமில்லை.” 

குழப்பற!” 

குழப்பல. தெளிவாச் சொல்றேன். கண்டம் என்கிறது ஒரு அபாயம்தான். நான் உனக்குச் சொன்னது ஒரு அபாய அறிவிப்புதான். நீ எச்சரிக்கையா இருந்தா, உன்னால  அபாயத்தைத் தவிர்க்க முடியும்.” 

எப்படி?” 

மின்சாரக் கம்பின்னு தெரியாம தொட்டா, ஷாக் அடிக்கும். ஆனா, அபாயம்னு போர்டு இருந்தா, விலகிப் போயிடுவோம், இல்ல? அது மாதிரிதான்.” 

ஓ! அப்படின்னா, சிறைக்குப் போற மாதிரி காரியம்  எதுவும் செய்யக் கூடாதுன்னு சொல்ற. அப்படித்தானே?” 

எக்ஸாக்ட்லி.”  

நான் ஏற்கனவே அப்படித்தானே இருக்கேன்!”  

ராமனிடம் ஜம்பமாகப் பேசிவிட்டாரே தவிர, அவர் விடுத்த ‘அபாய எச்சரிக்கை’ ஒரு லேசான பயமாக கோபாலனின் மனதில் செலோடேப் மாதிரி ஒட்டிக் கொண்டது - அகற்ற முடியாமல், எப்போதும் உறுத்திக் கொண்டே. 

ராமனின் சோதிடம் தவறாக இருக்க முடியாது ஆனால், தான் எதற்காகச் சிறைக்குப் போக வேண்டும்? 

முதல் நாள் ராமனிடமிருந்து விடைபெற்றது முதல், பம்பாய்க்குப் போக விமான நிலையத்தில் காத்திருக்கும் இந்த நேரம் வரை, அந்தக் கேள்வி ஒரு வண்டாக அவர் மனதைச் சுற்றி வந்து, அவரை நிலை கொள்ளாமல் அடித்து வந்தது.

அவர் விமானத்தில் ஏறி, விமானமும் கிளம்பி விட்டால், மனம் வேறு திசையில் திரும்பி விடும். அதுவரை நேரத்தைத் தள்ள வேண்டுமே! 

பக்கத்தில் கிடந்த செய்தித்தாளை எடுத்துக் கண்களை வலுக்கட்டாயமாகச் செய்திகளின் மீது செலுத்தினார் கோபாலன். 

அமெரிக்கப் பயணக் கைதிகள் விடுதலை!’ 

செய்தியை விரிவாகப் படித்தவருக்கு, சுருக்கென்று ஏதோ உரைத்த மாதிரி இருந்தது. 

ஒரு வருடத்துக்கும் மேலாக ஈரானில் சிறைப்பட்டிருந்த அமெரிக்கர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.’ 

சிறைப்பட்டிருந்த!’ 

ராமன் சொன்ன ‘எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ என்பதற்கு அவருக்குப் புது அர்த்தங்கள் புரிந்தன. அவர் செல்லப் போகும் இந்த விமானம் கூடக்  கடத்தப்பட்டு, அவர் ஒரு பணையக் கைதியாக பல நாட்கள், ஏன் பல மாதங்கள் கூட, வைக்கப்பட்டும் நிலை வரலாம்! 

சிறைக்குப் போகும் கண்டம்! 

பம்பாய்க்கு ரயிலிலேயே போய்விடுவது என்று முடிவு செய்து, விமான டிக்கெட்டை கேன்சல் செய்ய எழுந்து போனார் கோபாலன்.

 

No comments:

Post a Comment