ஆரம்ப எழுத்தாளர் அண்ணாமலை நிறைய சிறுகதைகளையும் கட்டுரைகளையும் எழுதிப் பார்த்தார். எதுவும் பிரசுரம் ஆகவில்லை. அதன் பிறகு, புராணக் கதைகள் எழுதிப் பார்க்கலாம் என்று முயற்சி செய்தார் அதன் விளைவுதான் இந்தக் கதை.
ஒரு விஷயம் - அண்ணாமலைக்குப் புராண அறிவு அவ்வளவாக இல்லை. அத்துடன் அவரது கற்பனையும், அன்றாட அரசியல் செய்திகளும்
அவர் எழுத்தை பாதித்திருக்கின்றன.
லட்சிய உறவு கொண்ட சிவபெருமானுக்கும், அன்னை பராசக்திக்கும் இடையே, சிறிது
காலமாகவே இடைவெளி அதிகரித்து வந்தது. சிவபெருமான் எவ்வளவுதான் பணிந்து போகத் தயாராக
இருந்தாலும், அம்மையார் அவரை அலட்சியம் செய்வது அதிகரித்து வந்தது.
அன்னையின் சாம்ராஜ்யத்துக்கு உட்பட்ட குறுநிலம் ஒன்றை ஆண்டு வந்த
தட்சன், ஒரு பெரிய வேத மாநாடு நடத்தத் திட்டமிட்டு, அதற்கு அம்மையாரையும் அழைத்திருந்தான்.
ஆனால் சிவபெருமான், தனக்குச் சரியான அழைப்பு இல்லை என்று பொருமிக் கொண்டிருந்தார். வேத முதல்வனான தனக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், வேத மகாநாடா என்ற ஆத்திரத்தில் அவர் தட்சனை ஏசிப் பேச, தட்சனும், அவரது சகாக்களும் சிவபெருமானைக் கிண்டல் செய்து பேசி வந்தனர்.
தன்னை ஆதரித்து நிற்க வேண்டிய அம்மையார் மாநாட்டுக்குப் போவதா என்று வெதும்பிய
சிவபெருமான், அம்மையாரைத் தடுத்து நிறுத்த முயற்சி செய்கிறார்:
சிவபெருமான்: பராசக்தி! தட்சனுக்கு வேதத்தைப் பற்றி என்ன தெரியும்? வேதவழி வந்தவனே
இல்லையே அவன்! நான்தானே வேத முதல்வன்?
அம்மையார்: அதை பற்றி எனக்கென்ன? உங்கள் சண்டையில் என்னை இழுக்காதீர்கள்
நான்தான் எல்லோருக்கும் தலைவர்.. என்னை வணங்கி நிற்பவர்களுக்கு நான் அருள்
புரிவேன். அவ்வளவுதான்
சிவபெருமான்: நாம் இணைவதை அவன் எதிர்த்ததை மறந்து விட்டாயா?
அம்மையார்: தட்சன் எதிர்த்தது உங்களைத்தானே தவிர, என்னை அல்ல என்பது எனக்குத் தெரியாதா? ஏன், உங்களுடன் இணைவதற்கு முன் நானும் தட்சனும் ஒரே குடும்பமாகத்தானே இருந்தோம்?
சிவபெருமான்: அவன் மோசமானவன். நாராயணனைச் சிறையில் வைத்தானே!
அம்மையார்: நான்தான் வைக்கச் சொன்னேன்.
சிவபெருமான்: என்ன, நீயா? நாராயணன் உன் உடன்பிறப்பு இல்லையா?
அம்மையார்: இந்த உடன்பிறப்பு, ரத்தம் இதெல்லாம் உங்களுக்குத்தான்! எனக்கு இல்லை.
சிவபெருமான்: நாராயணனை ஏன் சிறை வைக்கச் சொன்னாய்?
அம்மையார்: என்னை எதிர்ப்பவர்கள் சிலருக்கு அவர் தலைமை தாங்கி நடத்த முயன்றார்.
சிவபெருமான்: என்ன இருந்தாலும், அவர் நமது நண்பர் இல்லையா?
அம்மையார்: நண்பராக இருந்தால், தட்சனை எதிர்த்து நாம் போரிட்டபோது,
நடுநிலை வகித்து நம்மைக் கவிழ்த்திருப்பாரா?
சிவபெருமான்: நடுநிலை வகித்தவரைப் பகைக்கிறாய். எதிரியுடன் இணைகிறாயே!
அம்மையார்: என் எதிரியே ஆனாலும், எனக்கு அடிமை செய்தால், அவர்களுக்கு நான் துணை புரிவேன்.
சிவபெருமான்: அப்படியானால், மாநாட்டுக்குப் போகத்தான் போகிறாயா?
அம்மையார்: ஆமாம்.
சிவபெருமான்: அங்கே என்னை அவதூறு பேசுவார்கள் அதைக் கேட்டுக்
கொண்டிருக்கப் போகிறாயா.?
அம்மையார்: என்னைப் போற்றுவார்களே! அதைக் கேட்டுக் கொண்டிருப்பேன்
சிவபெருமான்: அம்மையாரே! நீ என்னைக் கைவிட்டு விடுவாய் என்று அஞ்சுகிறேன்.
அம்மையார் பதில் சொல்லாமல் சிரித்தார்
சிவபெருமான்: என் துணையால்தான் உனக்கு ஒரு முறை வெற்றி கிடைத்தது
என்பதை மறந்து விடாதே
அம்மையார்: இப்படி நீங்கள் சொல்லிக் கொண்டு திரியக் கூடாது என்பதற்காகத்தான்,
உங்களோடு சேர்ந்ததால்தான் ஒரு முறை எனக்குத்
தோல்வி கிடைத்தது என்று முன்பே சொல்லி விட்டேன்
சிவபெருமான்: உன் பிள்ளை சுப்பிரமணியனைக் கொஞ்சம் கண்டித்து வைக்க வேண்டும். அவர் ரொம்பவும் ‘எம்பி’க் குதிக்கிறார் பெரிய பிள்ளை கரிமுகத்து மூத்தனார் பரவாயில்லை.
அம்மையார்: மூத்தனாருக்கு நான் அதிக இடம் கொடுத்தால், உங்கள் கை ஓங்கும்
என்று பார்க்கிறீர்களா?
சிவபெருமான்: எப்போதும் உன் ‘கை’ தானே ஓங்கி இருக்கிறது!
அம்மையார்: சரி, நேரமாகிறது நான் மாநாட்டுக்குக் கிளம்புகிறேன்.
சிவபெருமான்: அப்புறம், இன்னொரு விஷயம். என்னுடைய குதிரைகளை அந்த
தட்சன் மாநாட்டில் காட்சிப் பொருளாக வைக்கப் போகிறானாமே!
அம்மையார்: அஸ்வமேத யாகம் செய்யப் போகிறானோ, என்னவோ!
சிவபெருமான்: நீ மாநாட்டுக்குப் போகத்தான் போகிறாய்! போய்விட்டு வந்ததும், உன்னிடம் தட்சன் மீது ஒரு புகார் மனு கொடுக்கிறேன். அதையாவது கவனி
அம்மையார்: நேரம் இருந்தால் பார்க்கிறேன்.
சிவபெருமான்: என் நேரம் நன்றாக இருந்தாலா?
(இருவரும் சிரிக்கிறார்கள்.)
No comments:
Post a Comment