Sunday, February 11, 2018

2020

இன்னும் இரண்டு வினாடிகளில் ஜிப்பை இழுத்து விட்டுக் கொண்டு தெருவில் நடக்கத் தொடங்கியிருப்பான். அதற்குள் அவனைப் பிடித்து விட்டார்கள்.

"தெருவுக்குத் தெரு கழிவறை கட்டி வைச்சிருக்காங்க. இன்னமும் பொது இடத்தில் சிறுநீர் கழிக்கிறதை நிறுத்த மாட்டீங்களா?" என்றார் அவனைப் பிடித்த சுகாதார அலுவலர்.

"உங்கள் கழிவறைகள் யூஸர் ஃ ப்ரண்ட்லியா இல்லையே! காசு போட்டாத்தான் கதவு திறக்கும். சில்லறை இல்லாட்டா  என்ன செய்யறது?"

"சில்லறை இல்லாததால்தான் கழிவறையைப் பயன்படுத்தலியா?" என்றார் சுகாதார அலுவலர்.

"இன்னொரு காரணமும் உண்டு" என்று அவன் சொல்லிக் கொண்டிருந்தபோதே, "அதோ மொபைல் கோர்ட் வேன் வந்துடுச்சு. வா" என்று அவனைத் தரதரவென்று இழுத்துக் கொண்டு போனார் அலுவலர்.

நீதிபதி இவன் முகத்தைக் கூடப் பார்க்கவில்லை. சுகாதார அலுவலர் சொன்னதைக் கேட்டுத் தலையாட்டி விட்டு "ஐநூறு ரூபாய் அபராதம்" என்றார்.

"இங்கே வா. கவுண்ட்டர் இந்தப் பக்கம் இருக்கு" என்று அவனை வேனுக்கு மறுபுறம் அழைத்துக்கொண்டு போனார் அலுவலர்.

"இயற்கை உபாதையைத் தீர்த்துக்கிட்டதுக்கு ஐநூறு ரூபாய் அபராதமா?" என்று முணுமுணுத்துக்கொண்டே பர்ஸிலிருந்து ஐநூறு ரூபாயை எடுத்து நீட்டினான் அவன்.

"நோட்டை மட்டும் கொடுத்தா, ஆதார் எங்கே?" என்றார் பணம் வசூலிப்பவர்.

"ஆதாரா? ஆதார் கார்டை சொருகினாத்தான் டாய்லட் கதவு திறக்கும். எங்கிட்ட ஆதார் கார்டு இல்லாததாலதான் நான் டாய்லட்டையே பயன்படுத்தல. இப்ப அபராதம் கட்டறதுக்கு ஆதார் கேட்டா, நான் எங்க போறது?" என்றான் அவன்.

"சார்! ஆதார் இல்லாம நான் ஃபைன் கலெக்ட் பண்ண முடியாது. என்ன செய்யறதுன்னு நீங்களே ஜட்ஜைக் கேளுங்க" என்றார் பணம் வசூலிப்பவர், அலுவலரிடம்

அலுவலர் மறுபக்கம் போய் நீதிபதியைப் பார்த்து விட்டு வந்தார்.

"ஜட்ஜ் என்ன சொல்றாரு?" என்றார் பணம் வசூலிப்பவர்.

"விட்டுடச் சொல்றாரு" என்ற அலுவலர் அவனைப் பார்த்து, "அதான் ஆதார் இல்லல்ல? அபராதமும் கட்ட முடியாது. அப்புறம் எதுக்கு இங்க நிக்கறே? போ!" என்றார் எரிச்சலுடன்.
(22.02.2018 அன்று எழுதப்பட்டது)