Sunday, February 11, 2018

26. 2020

இன்னும் இரண்டு வினாடிகளில் ஜிப்பை இழுத்து வீட்டுக் கொண்டு தெருவில் நடக்கத் தொடங்கியிருப்பான். அதற்குள் அவனைப் பிடித்து விட்டார்கள்.

"தெருவுக்குத் தெரு கழிவறை கட்டி வைச்சிருக்காங்க  இன்னமும் பொது இடத்தில் சிறுநீர் கழிக்கிறதை  நிறுத்த மாட்டீங்களா?" என்றார் அவனைப் பிடித்த சுகாதார அலுவலர்.

"உங்கள் கழிவறைகள் யூஸர் ஃ ப்ரண்ட்லியா இல்லையே! காசு போட்டாத்தான் கதவு திறக்கும்.சில்லறை இல்லாட்டா  என்ன செய்யறது?"

"சில்லறை இல்லாததால்தான் கழிவறையைப் பயன்படுத்தலியா?" என்றார் சுகாதார அலுவலர்.

"இன்னொரு காரணமும் உண்டு" என்று அவன் சொல்லிக் கொண்டிருந்தபோதே, "அதோ மொபைல் கோர்ட் வேன் வந்துடுச்சு. வா என்று அவனைத் தரதரவென்று இழுத்துக்கொண்டு போனார் அலுவலர் .

நீதிபதி இவன் முகத்தைக் கூடப் பார்க்கவில்லை. சுகாதார அலுவலர் சொன்னதைக் கேட்டுத்  தலையாட்டி விட்டு "ஐநூறு ரூபாய் அபராதம் " என்றார்.

"இங்கே வா. கவுண்ட்டர் இந்தப் பக்கம் இருக்கு" என்று அவனை வேனுக்கு மறுபுறம் அழைத்துக்கொண்டு போனார் அலுவலர்.

"இயற்கை உபாதையைத் தீர்த்துக்கிட்டதுக்கு ஐநூறு ரூபாய் அபராதமா?" என்று முணுமுணுத்துக்கொண்டே பர்ஸிலிருந்து ஐநூறு ரூபாயை எடுத்து நீட்டினான் அவன்.

"நோட்டை மட்டும் கொடுத்தா, ஆதார் எங்கே?" என்றார் பணம் வசூலிப்பவர்.

"ஆதாரா? ஆதார் கார்டை சொருகினாத்தான் டாய்லட் கதவு திறக்கும். எங்கிட்ட ஆதார் கார்டு இல்லாததாலதான் நான் டாய்லட்டையே பயன்படுத்தல. இப்ப அபராதம் கட்டறதுக்கு ஆதார் கேட்டா, நான் எங்க போறது?" என்றான் அவன்.

"சார்! ஆதார் இல்லாம நான் ஃபைன்  கலெக்ட் பண்ண முடியாது. என்ன செய்யறதுன்னு நீங்களே ஜட்ஜைக் கேளுங்க " என்றார் பணம் வசூலிப்பவர், அலுவலரிடம்

அலுவலர் மறுபக்கம் போய் நீதிபதியைப் பார்த்து விட்டு வந்தார்.

"ஜட்ஜ் என்ன சொல்றாரு?" என்றார் பணம் வசூலிப்பவர்.

"விட்டுடச் சொல்றாரு" என்ற அலுவலர் அவனைப் பார்த்து, "அதான் ஆதார் இல்லல்ல? அபராதமும் கட்ட முடியாது. அப்புறம் எதுக்கு இங்க நிக்கறே? போ!" என்றார் எரிச்சலுடன்.


Sunday, August 13, 2017

25. பயணம் (நாடகம்)


இந்த நாடகம் ஒரு பஸ்ஸுக்குள் நடப்பதாக அமைக்கப்பட்டிருக்கிறது. பஸ்ஸில் வெவ்வேறு இடங்களில் நடைபெறும் சம்பவங்களைக் காட்ட மேடையை இரண்டு பகுதிகளாகப் பிரித்துக் காட்சிகள் மாற்றி மாற்றிக் காட்டப்படலாம்.

காட்சி 1
 ஒரு பயணி 'ஹோல்டான்' என்று கூவிக்கொண்டே ஒடி வந்து நகரும் பஸ்ஸில் தொற்றிக்கொள்ளும் அசைவுகளைக் காட்டுகிறார். பஸ்ஸுக்குள் அவர் ஏறி விட்டதான தோற்றத்தை ஏற்படுத்தியபின், விளக்குகள் அணைக்கப்பட்டு, மீண்டும் விளக்குகள் எரியும்போது பஸ்ஸின் ஒரு இருக்கையில் மூவர் அமர்ந்திருக்க, கடைசியாக ஏறியவர் அந்த இருக்கையின் பக்கத்தில் நிற்கிறார்.

இருக்கையில் அமர்ந்திருப்பவருள் ஒருவர்: என்னய்யா இவ்வளவு அவசரம்? இப்படியா ஓடற பஸ்ஸில ஒடி வந்து ஏர்றது?

ஏறியவர்: ஸ்டாப்பிங்கில பஸ் நிக்கல. நான் கைகாட்டியும் நிக்காம போயிட்டாங்க. அதுதான் நிறுத்தச்  சொல்லிச் சத்தம் போட்டுக்கிட்டே ஒடி வந்து ஏறினேன்.

இன்னொருவர்: நல்ல ஆளுய்யா!

மூன்றாமவர்: ஏன், நீங்களும்  இப்படித்தானே ஏறினீங்க?

(இரண்டாமவர் மூன்றாமவரை முறைக்கிறார்.)

ஏறியவர்: ஆமாம், இந்த பஸ் எங்கே போகுது?

முதலாமவர்: சரியாப் போச்சு! அது கூடத்  தெரியாமயா  இந்த பஸ்ல ஏறின?....ஆமாம் நீ எங்கே போகணும்?

ஏறியவர்:  இன்னும் தீர்மானிக்கல!

இரண்டாமவர்: எங்க போறதுன்னு கூடத் தீர்மானிக்காம ஏன்யா இந்த பஸ்ல ஏறின?

ஏறியவர்: எவ்வளவு நேரம்தான் பஸ்ஸுக்காகக்  காத்துக்கிட்டிருக்கறது?  ரொம்ப நேரமா எந்த பஸ்ஸும் வரல. அப்புறம் இந்த பஸ் வந்தது. அதனால இதிலேயே ஏறிட்டேன் - இந்த பஸ் எங்கே போகுதோ அங்கேயே போயிக்கலாம்னு!

மூன்றாமவர்:  அதுவும் சரிதான்! வேணும்னா வழியில இறங்கி வேற பஸ்ல போய்க்கிட்டாப் போச்சு! அப்படி நெனைச்சுத்தான் நானும் ஏறினேன்.

ஏறியவர் (முதலாமவரைப் பார்த்து):  நீங்க எங்கே போறீங்க?

முதலாமவர்: ம்ம்ம்ம்... எனக்கு எப்படித் தெரியும்?

இரண்டாமவர்: என்னது? எங்கே போறதுன்னு தெரியாமயா பஸ்ல ஏறினீங்க?

முதலாமவர்: பஸ் எங்கே போகுதோ அங்கே போய்க்கறேன். வழியிலேயே இறங்கினாலும் இறங்கிடுவேன்! அது சரி, இந்த பஸ் எங்கே போகுது?

இரண்டாமவர்:  என்னைக் கேட்டா? கண்டக்டரைத்தான் கேக்கணும்!

ஏறியவர்: அப்ப உங்களுக்கும் நீங்க போற இடம் தெரியாதுன்னு சொல்லுங்க! அப்ப, கண்டக்டரைக் கேக்கலாமா?

முதலாமவர்: கண்டக்டருக்கு எப்படித் தெரியும்? அவரா பஸ்ஸை ஓட்றாரு? டிரைவரைத்தான் கேக்கணும்!

மூன்றாமவர்: டிரைவர் எங்கே?

இரண்டாமவர்: அவரோட சீட்ல இருப்பாரு.

ஏறியவர்: அவரோட சீட்டு எங்கே?

முதலாமவர்: இது கூடத் தெரியாதா? முன்னாலதான் இருக்கும்!

ஏறியவர்: இங்கேயிருந்து பாத்தா தெரியலியே?

மூன்றாமவர்: அப்ப முன்னால போய்ப் பாரு!

ஏறியவர்: முன்னால போக முடியாது போலருக்கே! ஒரே இருட்டா இருக்கு. எதுவுமே தெரியல!

இரண்டாமவர்: அப்ப கண்டக்டரையே கேட்டுப் பாரு!

ஏறியவர்: கண்டக்டர் எங்கே இருப்பாரு?

முதலாமவர்: அவர் எங்கே வேணும்னாலும் இருப்பாரு!

ஏறியவர்: அவரை எப்படித் தேடறது?

இரண்டாமவர்: நீ இருந்த இடத்திலேயே இரு. அவரே உன்னைத் தேடி வருவாரு. எப்படியும் டிக்கட் கொடுக்கணும் இல்ல?

மூன்றாமவர்: அவரு வர மாட்டாரு. நீதான் அவரைத் தேடித் போகணும்!

ஏறியவர்: ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரிச் சொல்றீங்களே!

முதலாமவர்: நாங்க அப்படித்தான் சொல்லுவோம். நீதான் உனக்கு எது சரிங்கறதைத் தீர்மானிக்கணும்!

ஏறியவர்: ஆமாம், நீங்கள்ளாம்  டிக்கட் வாங்கிட்டீங்களா?

இரண்டாமவர்: ஏன்யா, நீதான் கண்டக்டரா? நீ எதுக்கு எங்களை டிக்கட் வாங்கிட்டீங்களான்னு கேக்கற?

ஏறியவர்: என்ன இது, ஒண்ணுமே புரியலையே! தலையைச் சுத்துது. ஏங்க, நான் பஸ்ல ஏறி இவ்வளவு நேரமாச்சே, எனக்கு யாராவது ஒக்கார எடம் கொடுக்க மாட்டீங்களா?

(மூவரும் பெரிதாகச் சிரிக்கிறார்கள்.)

ஏறியவர்: எதுக்காகச் சிரிக்கிறீங்க?

முதலாமவர்: ஏம்ப்பா, யாராவது ஒன்னைக் கூப்பிட்டு ஒக்கார எடம்  கொடுப்பாங்களா? நீயாதான் எடம் புடிச்சுக்கணும்!

மூன்றாமவர்: அழுத புள்ளதான் பால் குடிக்கும்!

இரண்டாமவர்:  கேளுங்கள் தரப்படும்!

ஏறியவர்:  அப்ப, எனக்கு ஒக்காரக் கொஞ்சம் எடம்  கொடுங்களேன், ப்ளீஸ்!

மூவரும் சேர்ந்து:  இங்கே இடமே இல்ல.

முதலாமவர்: வேற எங்கியாவது போ!

மூன்றாமவர்: நாங்களே இங்க நெருக்கமா ஒக்காந்துக்கிட்டிருக்கோமே, தெரியல?

இரண்டாமவர்:  இங்கே இன்னொரு ஆள் வேற வர வேண்டியிருக்கு.

ஏறியவர்:  வேற எங்கியாவது எடம் இருக்கா?

முதலாமவர்: போய்ப்பார்!

மூன்றாமவர்: முயற்சி திருவினையாக்கும்!

இரண்டாமவர்:  தேடுபவன் கண்டடைவான்!

காட்சி 2 
(பஸ்ஸில் கடைசியாக ஏறியவர் - இவரை அகரம் என்று அழைக்கலாம் - மேடைக்குள் நுழையும்போது பஸ்ஸில் சிலர் கீழே உட்கார்ந்திருக்கிறார்கள். இவர்களை இகரம், உகரம், மகரம், சிகரம் போன்ற பெயர்களால் அழைக்கலாம்.)

அகரம்: ஐயா! நீங்கள்ளாம்  ஏன் இங்கே உக்காந்துக்கிட்டிருக்கீங்க?

இகரம்:  பின்னே வேற என்ன பண்ணச்  சொல்றே?

அகரம்:  ஏன் கீழே உக்காந்துக்கிட்டிருக்கீங்கன்னு கேட்டேன்.

உகரம்:  எங்களுக்கு சீட் கொடு. அங்க போயி உக்காந்துக்கறோம்!

அகரம்:  அப்பிடின்னா, உங்களுக்கு உக்கார சீட் இல்லாததாலதான் கீழே உக்காந்திருக்கீங்களா?

மகரம்: ஆமாம், பாத்தா தெரியல?

அகரம்(சுற்றுமுற்றும் பார்த்து விட்டு) :  அங்கல்லாம் நிறைய சீட் காலியா இருக்கற மாதிரி இருக்கே?

சிகரம்:  காலியாயிருக்குன்னு உனக்கு எப்படித் தெரியும்?

அகரம்:  அங்க யாரும் உக்காந்திருக்கலியே?

இகரம்:  யாரும் உக்காந்திருக்கலேன்னா காலியாயிருக்குன்னு அர்த்தமா??

அகரம்:  பின்னே?.

உகரம்:  அதையெல்லாம் யாராவது ரிசர்வ் பண்ணியிருப்பாங்க!

சிகரம்:  இல்லேன்னா, ஒத்தருக்கே ரெண்டு மூணு சீட்டு இருக்கும்!

அகரம்:  அது எப்படி? இங்கே இத்தனை பேரு உக்கார இடமில்லாம இருக்கறப்ப, சில பேருக்கு மட்டும் ரெண்டு மூணு சீட்டா? இது என்ன அக்கிரமம்? இதை நீங்க தட்டிக் கேக்க வேண்டாமா?

மகரம்:  நீயேதான் தட்டிக் கேளேன் அவங்களை!

அகரம்:  நிச்சயமா தட்டிக் கேக்கத்தான் போறேன். மொதல்ல நான் கொஞ்சம் உக்காரணும். எனக்குக் கால் வலிக்குது. கொஞ்சம் நகர்ந்து எனக்கு இடம் விடறீங்களா?

இகரம்:  என்ன நீ இங்கே உக்காரப் போறியா?

உகரம்:  அது அவ்வளவு சுலபம் இல்லப்பா!.

மகரம்:  இங்கே எங்கே இடம் இருக்கு?

அகரம்:  அதுதான் இவ்வளவு இடம் இருக்கே!

சிகரம்:  இடம் இருந்தா, நீ வந்து உக்காந்துடறதா? அதெல்லாம் எங்க எடம்ப்பா!

அகரம்:  என்னது உங்க இடமா?  நீங்கள்ளாம் ஒக்காந்தது  போக மீதி இருக்கிற இடத்தைத்தானே நான் கேக்கறேன்?

உகரம்:  அப்படில்லாம் உக்கார முடியாது!

இகரம்:  இதை வேற சில பேருக்காக நாங்க வச்சிருக்கோம்.

அகரம்:  இங்கேயும் ரிஸர்வேஷனா? அப்ப நான்  எங்கேதான் ஒக்காரறது? வேற எங்கே இடம் இருக்கு?

மகரம்:  படிக்கட்டில  கொஞ்சம் பேரு  உக்காந்திருக்காங்க பாரு, அங்கே போய்க் கேட்டுப் பாரு!

அகரம்: படிக்கட்டில பயணம் பண்றது சட்ட விரோதமாச்சே!

இகரம்: உனக்கு சட்டத்தை மீறாம இருக்கறது முக்கியமா, ஒக்காந்து பயணம் செய்யறது முக்கியமான்னு தீர்மானம் பண்ணிக்க!

அகரம்:  படிக்கட்டில உக்கார்ந்தா, பஸ்ஸில ஏறுகிறவங்களுக்கும், பஸ்ஸிலிருந்து இறங்கறவங்களுக்கும் இடைஞ்சலா இருக்குமே!

உகரம்:  நீதான் பஸ்ஸில ஏறியாச்சே, இனிமே பஸ்ஸில ஏறப்போறவங்களைப் பத்தி உனக்கு ஏன் கவலை?.

சிகரம்:  நீ படிக்கட்டில் உட்கார்ந்தா உனக்கு இறங்கறதுக்கு வசதியா இருக்குமே! ஆமாம் நீ எங்கே போறே?

அகரம்:  அதுதான் எனக்கும் புரியல. இந்த பஸ்ல ஏன் ஏறினோம்னு கூட இருக்கு!

இகரம்:  எல்லோருக்கும் அப்படித்தான்! நாங்க மட்டும் இஷ்டப்பட்டா பஸ்ல ஏறினோம்?

சிகரம்:  நீ போய்ப் படிக்கட்டிலேயாவது ஒக்கார எடம் கிடைக்குமான்னு பாரு. பாவம் ரொம்ப  நேரமா நின்னுக்கிட்டே இருக்கே போலிருக்கே!

அகரம்:  படிக்கட்டிலேயும் இடம் கிடைக்காட்டா என்ன செய்யறது?

மகரம்:  படிக்கட்டிலிருந்து குதிச்சிட வேண்டியதுதான். சில பேரு அப்படித்தான் பண்றாங்க!

உகரம்:  அடுத்த ஸ்டாப்பிங் வர வரை கூடப் பொறுக்க முடியாதவங்க!

அகரம்:  ஏன் அப்படிச் செய்யணும்? உள்ளே இவ்வளவு இடம் காலியா இருக்கறப்ப ஏன் சில பேர் தரையிலேயும், படிக்கட்டிலேயும் உட்கார்ந்து பயணம் செய்யணும்? இதை எதிர்த்து நான் போராடப் போறேன்.

(அங்கே இப்போது இன்னொருவர் வருகிறார். அவரைப் 'பச்சை' என்று அழைக்கலாம்)

பச்சை:  சபாஷ் தம்பி! உன்னைப் போன்ற எழுச்சி மனப்பான்மை கொண்டவர்கள்தான் நமக்குத் தேவை! என்னுடன் வா. நாம் ஒரு புதிய அமைப்பை உருவாக்குவோம்!

(தரையில் உட்கார்ந்திருந்தவர்கள் அவசரமாக எழுந்து பச்சைக்கு வணக்கம் தெரிவித்து விட்டு, சில பேர் கை கூப்பிக்கொண்டும், சில பேர்  கை  கட்டிக் கொண்டும் நிற்கிறார்கள்.)

அகரம்:  ஐயா! நீங்க யாரு?

உகரம்:  ஏம்ப்பா, இவரையா யாருன்னு கேக்கறே? இவரை உனக்குத் தெரியாது?

இகரம்:  இவர்தாம்ப்பா தலைவரு!.

சிகரம்:  நம்ம தலைவரு!

அகரம்:  ஓ! அப்படியா? இவங்களுக்கு நீதி கிடைக்க நீங்களாவது உதவி செய்யக் கூடாது?

பச்சை: தம்பி! என்ன இப்படிக் கேட்டுட்டே? நான் மூச்சுக்காத்தா  சுவாசிக்கிறதே இவங்களுடைய பிரச்னையைத்தான்.  நான் வெளியே விடுகிற மூச்சு இவங்களோட அவல நிலையை நினைச்சு நான் விடுகிற பெருமூச்சுதான்!

அகரம்: இவர்களுக்காக என்ன செய்யப் போறீங்க?

பச்சை:  என்ன செய்யப் போறேனா? இவர்களுக்காக நான் செஞ்சிருக்கிற தியாகங்களும், தீரச்செயல்களும் என்னென்னன்னு இவர்களையே கேட்டுப்  பாரு!

(கை கூப்பிக்கொண்டும், கை கட்டிக்கொண்டும் நிற்பவர்கள் தலையாட்டுகிறார்கள்.)

பச்சை:  தனி ஒருவனுக்கு இருக்கை  இல்லையெனில் இந்த பஸ்ஸையே கொளுத்திடுவோம்கிறதுதான் நம்ம தாரக மந்திரம்!. வா, போகலாம்!.

அகரம்:  எங்கே?

காட்சி 3 
(நாலு பேர் உட்காரக் கூடிய ஒரு இருக்கை. அது காலியாக இருக்கிறது. அகரமும், பச்சையும் அங்கே வருகிறார்கள்.)

பச்சை:  வா தம்பி, ஒக்காரு!

அகரம்:  இது யாரோட சீட்டு?

பச்சை:  என்னோடதுதான் ?

அகரம்:  ஒங்களோடதா? நாலு பேரு உட்காருகிற சீட்டாச்சே இது?  வேற யாராவது இருக்காங்களா?

பச்சை:  இல்லை. இது என்னோட சீட்டு மட்டும்தான். ஒக்காரு.

அகரம்:  என்ன சார் இது? ஒக்கார எடம் இல்லாதவங்களுக்காகப் போராடறதா சொல்லிட்டு நீங்களே இவ்வளவு பெரிய இடத்தை வச்சுக்கிட்டிருக்கீங்களே?

பச்சை:  தம்பி! புரியாம பேசாதே! சுவரை வச்சுக்கிட்டுத்தான் சித்திரம் வரையணும்.அடிப்படை வலுவாக இல்லாத எந்த அமைப்பும் டீசல் இல்லாத பஸ் மாதிரின்னு என்னோட அரசியல் ஆசான் சொல்லியிருக்காரு. நமக்கு அடிப்படை வசதிகளை அமைச்சுக்காட்டா, மத்தவங்களுக்காக நம்மால எப்படிப் போராட்ட முடியும்? உன்னை மாதிரி துடிப்புள்ள நண்பர்கள் வரப்ப அவங்களை ஒக்காத்தி வச்சுப் பேச இடம் வேண்டாமா? நெருக்கடியில் பயணம் செஞ்சுக்கிட்டு பிரச்னைகளைப் பத்தி சிந்திக்கக் கூட முடியாது. அப்புறம் எங்கே பிரச்னைகளைத் தீர்க்கிறது? நான் சௌகரியமாப் பயணம் செஞ்சாத்தான் மத்தவங்க பிரச்னையைத் தீர்க்கிற வலுவும் மனநிலையும் எனக்குக் கிடைக்கும். புரியுதா?

அகரம்:  புரிய ஆரம்பிச்சிருக்கு! (சுற்றுமுற்றும் பார்த்தபடி) ஆமாம், இந்த பஸ்ஸில மொத்தம் எத்தனை பேரு உக்காரலாம்?

பச்சை:  அறுபது பேர்.

அகரம்:  எத்தனை பேர் உக்காந்திருக்காங்க?

பச்சை:  இருபது பேர்.

அகரம்:  அப்படீன்னா இன்னும் நாற்பது பேர் ஒக்கார எடம் இருக்கே?

பச்சை:  ஆனா அறுபதுபேர் சீட்டு இல்லாம நின்னுக்கிட்டிருக்காங்களே? இன்னும் கூட சில பேரு பஸ்ல ஏறுவாங்க!.

அகரம்:  ஆனா இன்னும் நாற்பது பேர் ஒக்காரலாமே?.

பச்சை:  மீதி இருபது பேரு என்ன பண்ணுவாங்க?

அகரம்:  அப்ப உட்கார்ந்திருக்கிறவங்களும் எழுந்து நிக்கட்டும். எல்லோருமே நின்னுக்கிட்டுப் பயணம் பண்ணுவோம்!

பச்சை:  இது கூட நல்லாத்தான் இருக்கு! நான் இந்த யோசனையைச் சொன்னா, நின்னுக்கிட்டிருக்கிற நாற்பது பேரும் என்னை ஆதரிப்பாங்க..

அகரம்:  ஆனா உட்கார்ந்துக்கிட்டிருக்கிற இருபது  பேரும் உங்களை எதிர்ப்பாங்களே?

பச்சை: எதிர்த்தா என்ன? அறுபது பேர்ல நாற்பது பேர் நம்ம பக்கம். இருபது பேர் எதிர்ப்பக்கம். பெரும்பான்மை நமக்குத்தான்.

அகரம்:  அந்த இருபது பேர்ல நீஙகளும் ஒருத்தர்ங்கறதை  மறந்துட்டீங்களா?

பச்சை:  ஓ! (தனக்குள்)  அப்ப நானும் இல்ல நிக்க வேண்டியிருக்கும்!  (வெளியில்) ஆங்.. ஆமாம்...இல்ல..  நீ சொல்றது நல்ல யோசனைதான் ஆனா நடைமுறைக்கு ஒத்து வராது.

அகரம்:  ஏன்?

பச்சை:  நம்ம நோக்கமெல்லாம் நிற்கிறவங்களை உட்கார வைக்கறதா இருக்கணுமே தவிர, உட்கார்ந்திருக்கிறவங்களை நிற்க வைக்கிறதா இருக்கக் கூடாது. இது நெகட்டிவ் அப்ரோச். எதிர்மறையான சிந்தனை!

அகரம்:  கொஞ்ச நேரம் முன்னால நீங்களே இது நல்ல யோசனைன்னு சொன்னீங்களே?

பச்சை:  'எதிர்மறை எண்ணங்கள் கதிர்வீச்சைப் போல் அவ்வப்போது நம்மை வந்து தாக்கும். வெள்ளமென வரும் இத்தகைய எண்ணங்களை நாம்தான் திசை திருப்பி ஆக்கப்பணி என்னும் வயல்களில் பாய்ச்சி வளம் சேர்க்க வேண்டும்' என்று தீர்க்கதரிசியான என் அரசியல் ஆசான் அன்றே சொல்லி வைத்திருக்கிறார்.

அகரம்:  அப்ப உங்களோட ஆக்கபூர்வமான சிந்தனைதான் என்ன?

பச்சை:  உட்கார இடம் கிடைக்காதவர்கள் நீதி கேட்டுப் போராட்டம் நடத்த வேண்டியதுதான்!

அகரம்:  எவ்வளவு காலம் போராடறது?

பச்சை: வெற்றி கிடைக்கும் வரை!

அகரம்:  அதுக்குள்ளே பயணமே முடிஞ்சுட்டா?

பச்சை:  அப்புறம் போராட்டத்துக்கு அவசியமே இருக்காது.  (பார்வையாளர்களைப்  பார்த்து) அநேகமா அப்படித்தான் நடக்கும்னு நினைக்கிறேன்.

காட்சி 4
(மேடையில் அகரம் தனியே நிற்கிறார். அப்போது தோளில் பையுடன் ஒருவர் அங்கே வருகிறார். அவரை மஞ்சள் என்று அழைக்கலாம்.)

மஞ்சள்:  ஏன்யா, நீ எங்கே போகணும்?

அகரம்:  நீங்கதான் இந்த பஸ்ஸோட கண்டக்டரா?

மஞ்சள்:  ஆமாம். காசை எடு. எங்கே ஏறினே?

அகரம்:  நான் ஏறினப்ப உங்களைத் தேடினேன். உங்களைக் காணோம்.

மஞ்சள்:  அதைப்பத்தி இப்ப என்ன? காசைக் கொடுத்து டிக்கட்டை வாங்கு முதல்ல.

அகரம்:  எங்கே போறதுன்னே இன்னும் தெரியலியே!

மஞ்சள்:  அப்புறம் ஏன்யா பஸ்ஸில ஏறின? எங்கியாவது ஒரு இடத்துக்கு டிக்கட் வாங்கிக்க.

அகரம்:  ஆமாம், நீதான் கண்டக்டர்னு நான் எப்படி நம்பறது? 

மஞ்சள்:  நான்தானே டிக்கட் கேக்கறேன்? கண்டக்டர்தானே டிக்கட் கேப்பான்!

அகரம்: அப்ப டிக்கட் கேக்கறவங்கள்ளாம் கண்டக்டரா?

மஞ்சள்:  ஏன் வேற யாராவது உன்கிட்ட டிக்கட் கேட்டாங்களா என்ன?

அகரம்:  நீ இப்படிக் கேக்கறதைப் பாத்தா, நீதான் கண்டக்டரான்னே எனக்கு சந்தேகமா இருக்கு!

மஞ்சள்:  சந்தேகப்படாதேப்பா! மனுஷனுக்கு நம்பிக்கை வேணும். என்னைப் பாத்தா கண்டக்டர்னு தெரியல?

அகரம்:  தெரியலியே!

மஞ்சள்: இதோ பாரு. டிக்கட் எல்லாம் வச்சிருக்கேன். 

அகரம்:  சரி, நீதான் கண்டக்டர்னா ஒக்கார எனக்கு ஒரு இடம் பிடிச்சுத் தர முடியுமா உன்னால?

மஞ்சள்:  என்ன ஆளுய்யா நீ? டிக்கட் குடுக்கறதுதான் என் வேலை. எங்கியாவது எடம்  இருந்தா போய் உக்காந்துக்க. இல்லாட்டி நின்னுக்கிட்டே வா. இல்லாட்டி பஸ்ஸிலிருந்து இறங்கிடு.

(அப்போது அங்கே இன்னொருவர் வருகிறார். அவரைக் கருப்பு என்று அழைக்கலாம்,)

கருப்பு:  என்னய்யா தகராறு இங்கே?

மஞ்சள்:  இந்த ஆளு பஸ்ஸில ஏறிட்டு டிக்கட் வாங்க மாட்டேன்னு தகராறு பண்றாரு.

அகரம்:  நான் தகராறு ஒண்ணும் பண்ணல. டிக்கட் வாங்கினா எனக்கு உட்கார இடம் கொடுக்கணும்னுதான் கேட்டேன்.

மஞ்சள்: இப்படித்தான் தகராறு பண்றாரு. 

கருப்பு:  சரி, சரி. நான் பாத்துக்கறேன். நீ போ!

(மஞ்சள் போகிறார்.)

கருப்பு:  ஏம்ப்பா பஸ்ஸில ஏறிட்டு டிக்கட்  வாங்க மாட்டேன்னா எப்படி?

அகரம்:  நீங்க யாரு சார்? இந்த பஸ்ஸோட ஓனரா?

கருப்பு (பெரிதாகச் சிரித்து விட்டு):  ஓனரா? நீ என்னப்பா பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சொல்றே! ஓனர்னு ஒருத்தர் இருக்காறாங்கறதே சந்தேகம்தான்! அப்படி ஓருத்தர் இருக்காருன்னு சில பேரு சொல்றாங்க.  சில பேரு அதை நம்பறாங்க. சில பேரு நம்ப மட்டேங்கறாங்க.

அகரம்:  அப்ப நீங்க யாரு? நீங்க சொன்னதுமே அந்த ஆளு போயிட்டாரே!

கருப்பு:  அதுதான் நான்! நான் இந்த பஸ்ஸுக்குள்ளே ஒரு செல்வாக்குள்ள ஆளு.

அகரம்:  ஒங்க செல்வாக்கை  உபயோகிச்சு நீங்க எனக்கு ஒரு சீட் வாங்கித்தர முடியுமா? ரொம்ப நேரமா நிக்கறேன் சார். காலெல்லாம் வலிக்குது!

கருப்பு:  உன் காரியத்திலேயே குறியா இருக்கியே!  நீ இன்னும் டிக்கட் கூட வாங்கலே!

அகரம்:  வாங்கறேன் சார். எனக்கு உக்கார ஒரு எடம்  பிடிச்சுக் கொடுங்க!

கருப்பு:  டிக்கட் வாங்கறியா? உன்னால அது முடியுமா?

அகரம்:  ஏன் சார்?

கருப்பு:  டிக்கட் என்ன விலை தெரியுமா உனக்கு?

அகரம்:  என்ன விலை?

கருப்பு (கைகளை விரித்துக் காட்டி):  நூறு ரூபா!

அகரம்:  என்னது ஒரு டிக்கட் நூறு ரூபாயா?

கருப்பு:  ஆமாம்!

அகரம்:  இந்த பஸ்ஸில இருக்கிறவங்க எல்லாரும் நூறு ரூபா கொடுத்து டிக்கட் வாங்கி இருக்காங்களா?!

கருப்பு:  அப்படியெல்லாம் பொதுப்படையாகக் கேட்கக் கூடாது தம்பி! இந்த பஸ் கிளம்பின இடத்தில ஏறினவங்க டிக்கட்டே வாங்கியிருக்க மாட்டாங்க. ஏன்னா அப்பல்லாம் டிக்கட்டே கிடையாது. அப்புறம் பஸ்ஸில கூட்டம் ஏற ஏற  டிக்கட் வாங்கணும்னு ஒரு முறை வந்துச்சு. டிக்கட்டோட விலை ஆரம்பத்திலே  ஒரு பைசா, ரெண்டு பைசான்னு இருந்தது. அப்புறம் ஒரு ரூபா, ரெண்டு ரூபா, பத்து ரூபான்னு ஏறி இப்ப நூறு ரூபா ஆயிருக்கு.

அகரம்:  அக்கிரமமா இருக்கே! நூறு ரூபா கொடுத்து எத்தனை பேரால டிக்கட் வாங்க முடியும்?

கருப்பு:  வாங்க முடிஞ்சவங்க வாங்குவாங்க. முடியாதவங்க வித்தவுட்ல வருவாங்க. யாராவது டிக்கட் கேட்டா பயந்து போய் பஸ்ஸிலிருந்து குதிச்சுடுவாங்க. அதோட அவங்க பயணமே முடிஞ்சு போயிடும். இன்னும் சில பேரு இருக்காங்க. அவங்க கிட்ட யாராவது டிக்கட் கேட்டா அவங்க கத்தியைக் காட்டுவாங்க. கண்டக்டர், டிக்கட் செக்கர் எல்லாருமே அவங்ககிட்ட பயந்துகிட்டு அவங்ககிட்டயே வர மாட்டாங்க. இன்னும் சில பேரு கெஞ்சிக் கூத்தாடி கண்டக்டர் அவங்களைக் கீழ இறக்கி விடற வரையிலும் கொஞ்ச தூரமாவது பயணம் பண்ணுவாங்க.

அகரம்:  இந்த மாதிரி எதையுமே செய்ய முடியாதவங்க அல்லது செய்ய விரும்பாதவங்க?

கருப்பு:  அவங்களுக்காகத்தான் நான் இருக்கேன்!

அகரம்:  நீங்க எப்படி உதவுவீங்க?

கருப்பு :  நீ டிக்கட்டே வாங்க வேண்டாம். எங்கிட்ட பத்து ரூபா கொடுத்துடு. உன்கிட்ட யாரும் டிக்கட் கேக்க மாட்டாங்க..

அகரம்:  ஒங்ககிட்ட  நான்  எதுக்குப் பணம் கொடுக்கணும்? நீங்க யாரு?

கருப்பு:  நான் யாரா இருந்தா உனக்கென்ன? நான் சொன்னதும் கண்டக்டர் போயிட்டதை நீ பாத்த இல்ல?

அகரம்:  எனக்கு ஒரே குழப்பமா இருக்கு!

கருப்பு:  நான்தான் இந்த பஸ்ஸோட ஒனர்னே வச்சுக்கயேன்!

(அப்போது தொப்பி அணிந்த ஒருவர் இன்னொருவரைப் பிடித்து அடித்து இழுத்துக்கொண்டு வருகிறார்.அடிப்பவரை சிவப்பு என்றும் அடிபடுபவரை வெள்ளை என்றும் அழைப்போம்.)

அகரம் (திடுக்கிட்டு):  ஏன் இப்படி இவரைப்போட்டு அடிக்கிறீங்க?

சிவப்பு:  இவன் டிக்கட் வாங்காம பிரயாணம் பண்றான். அதோட இன்னொருத்தர் சீட்ல உட்கார்ந்து வேற வந்திருக்கான்.

(அகரம் பயத்துடன் கருப்பைப் பார்க்க, அவர் சிரிக்கிறார்.)

அகரம்:  அதுக்காக இப்படிப் போட்டு அடிப்பீங்களா?

சிவப்பு:  வேற என்ன செய்யச் சொல்றே? அதுக்காகத்தானே எனக்கு சம்பளம் கொடுத்து வேலைக்கு வச்சிருக்காங்க? தப்புப் பண்ணினா தண்டனை கொடுக்க வேண்டாமா? இந்த அடியெல்லாம் ஒரு ஆரம்பம்தான். இதுக்கு மேலே அவனுக்கு தண்டனையும் உண்டு.

அகரம்:  என்ன தண்டனை?

சிவப்பு:  அதோ இருக்கே அந்தப் பெரிய பொட்டி அதுக்குள்ளே இவனைப் போட்டுப் பூட்டிடுவோம்!

அகரம்:  குத்தம் செஞ்சவங்களை உள்ளே போட்டுப் பூட்டினீங்கன்னா அவங்களால மூச்சுக்கூட விட முடியாதே?

சிவப்பு:  அதுக்கெல்லாம் பொட்டியில ஓட்டை போட்டு காத்துப் போக வழி பண்ணி இருக்காங்க. அதைத்தவிர அப்பப்ப அவங்களைக் கொஞ்ச நேரம் வெளியில எடுத்து விடுவோம்.

அகரம்:  குத்தம் செய்யறவங்களைப் பொட்டிக்குள்ள வச்சுப் பூட்டறதனால என்ன பயன்?

சிவப்பு:  அப்பதானே குத்தம் செய்யணும்னு நினைக்கிறவங்களுக்கு ஒரு பயம் இருக்கும்? அதோட இவனை மாதிரி ஆளுங்களை வெளிய விட்டா, இவங்க மத்தவங்க சீட்டையெல்லாம் திருடிடுவாங்க. சீட்டில் உக்காந்து போற பயணிகளுக்குப் பாதுகாப்பே இல்லாம போயிடும். அதனாலதான் இவனை மாதிரி ஆளுங்களையெல்லாம் நாங்க பெட்டிக்குள்ள பூட்டி வச்சு பஸ்ஸுக்குள்ள சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கிறோம்.

(சிவப்பு வெள்ளையைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளிக்கொண்டு போகிறார்)

அகரம்:  வேடிக்கையைப் பாத்தீங்களா? ஒத்தன் டிக்கட் வாங்கலைங்கறதுக்காக அவனைப் பாதுகாப்பா  ஒரு பெட்டிக்குள்ள வச்சு அவன் போக வேண்டிய இடத்துக்கு அவனை அழைச்சுக்கிட்டுப் போறாங்க!  வேற ஒருத்தரோட சீட்டில் உக்காந்துக்கிட்டாங்கறதுக்காக அவனுக்குத் தனியா இடம் கொடுத்துப் பாதுகாப்பா அழைச்சிக்கிட்டுப் போறாங்க.?

கருப்பு:  அப்ப நீயும் அவனை மாதிரியே டிக்கட் வாங்காம பயணம் பண்றியா?

அகரம்:  அய்யய்யோ! வேணாங்க. இந்தாங்க பத்து ரூபா. ஆனா ஒரு வேண்டுகோள்.  எனக்கு உட்கார ஒரு இடம் வேணும்.

கருப்பு:  அதுக்கு நீ இன்னொரு பத்து ரூபா கொடுக்கணுமே!

அகரம்:  இந்தாங்க!.

கருப்பு:  வா! உனக்கு ஒரு சீட்டு ஏற்பாடு பண்ணித்த தரேன்..

காட்சி 5
(அகரம் கருப்புடன் மேடையில் பிரவேசிக்கும்போது, மேடையில் இருவர் அமரும் இருக்கை இருக்கிறது. அதில் ஒருவர் எங்கோ பார்த்தபடி அமர்ந்திருக்கிறார்.)

கருப்பு:  இதோ, இதான் உன் சீட். இங்க உக்காரு!

அகரம்:  தாங்க்ஸ் சார்!

(பச்சை போக யத்தனிக்கிறார்.)

அகரம் (எழுந்து):  சார்! ஒரு நிமிஷம்.

கருப்பு:  என்னப்பா?

அகரம்:  இல்லே..வந்து.. பணம் கொடுத்தேன். நீங்க டிக்கட் எதுவும் கொடுக்கலியே!

கருப்பு:  டிக்கட்டா? எதுக்கு?

அகரம்:  இல்லே! இப்பத்தான் ஒரு ஆளை அவர்கிட்ட டிக்கட் இல்லைன்னு சொல்லி இழுத்துக்கிட்டுப் போனாங்க...அது மாதிரி எனக்கும் ஆயிடக்  கூடாதில்ல?

கருப்பு:  ஒங்கிட்ட யாரும் டிக்கட் கேக்க மாட்டாங்க. அப்படி யாராவது கேட்டா என்னைக் கூப்பிடு. நான் இந்த பஸ்ஸுக்குள்ளேயேதானே இருக்கேன்? அதோ பாரு. அங்கதான் நான் உக்காந்திருப்பேன்.

அகரம்:  இருட்டா இருக்கே, அங்கியா?

கருப்பு:  இருட்டா இருந்தா என்ன? ஒரு குரல் கொடு . நான் வந்துடுவேன்!

அகரம்:  ஒருவேளை நீங்க எனசுக்கு முன்னாலேயே இறங்கிப் போயிட்டா?

கருப்பு (சிரித்து):  இந்த பஸ்ல கடைசி வரை நான் இருப்பேன். ஏன்னா என்னோட சேவை எல்லோருக்கும் தேவையாச்சே?

அகரம்:  ஒங்களை எப்படிக் கூப்பிடறது? ஒங்க பேர் கூட எனக்குத் தெரியாதே!

கருப்பு:  ம்ம்ம்.. மாமான்னு கூப்பிடு. வேண்டாம். ஒரு மாதிரியா இருக்குல்ல? அங்க்கிள்னு  கூப்பிடு! எங்கே இருந்தாலும் ஒடி வந்துடுவேன்.

(போகிறார்)

(சில நொடிகள் விளக்கு அணைந்து மீண்டும் எரியும்போது அகரம் இருக்கையில் அமர்ந்திருக்கிறான். அவன் பக்கத்தில் உட்கார்ந்திருந்தவர் - இத்தனை நேரமும் வேறு எங்கோ வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தவர் - இப்போது அவனை நோக்கித் திரும்புகிறார். அவர் பெயரை நீலம் என்று வைத்துக்கொள்ளலாம்.)

நீலம்: தம்பி, எங்கே போறே?

அகரம்:  (தனக்குள்) மறுபடியும் இதே கேள்வியா? (உரக்க) எங்கேயோ போறேன்! இந்த பஸ் எங்கே போகுதுன்னே யாருக்கும் தெரியலே! நான் எங்கே போனா என்ன?

நீலம்: நீ எங்கே வேணா போயிக்க. ஆனா இப்ப கொஞ்சம் எழுந்திருக்கிறாயா? நான் காலை நீட்டிக்கணும்.

அகரம்:  என்னது? நீங்க காலை நீட்டிக்கறதுக்காக நான் எழுந்து நிக்கணுமா? ஏன் நீங்க எழுந்திருங்களேன்! நான் காலை நீட்டி உக்காந்துக்கறேன்!

(இப்போது பச்சை அங்கே வருகிறார்.)

பச்சை: என்னப்பா! ஒரு வழியா உட்கார எடம் பிடிச்சுட்டியா? சாமர்த்தியசாலிதான்ப்பா நீ!

அகரம்:  வாங்க! நல்ல சமயத்துலதான் வந்திருக்கீங்க. இந்த ஆளு என் சீட்டில காலை நீட்டிக்கணுமாம். அதுக்காக என்னை எழுந்து நிக்கச் சொல்றாரு! நீங்க தட்டிக் கேட்க வேண்டிய இன்னொரு அநீதி இது!

பச்சை: அப்படியா? (நீலத்திடம்) ஏன் அப்படிச் சொன்னீங்க?

நீலம் (புன்சிரிப்புடன்):  ஏன் அதுல என்ன தப்பு?

பச்சை: என்ன தப்பா? நீங்க காலை நீட்டிக்கணுங்கறதுக்காக இன்னொரு மனுஷன் தன்னோட சீட்டையே இழக்கணும்னா அது எப்படிப்பட்ட அநீதி? தனி ஒருவனுக்கு சீட் இல்லையெனில்....

நீலம்:  நிறுத்துப்பா! இதையெல்லாம் நிறையக்  கேட்டுட்டேன். நான் யாருன்னு தெரிஞ்சா எங்கிட்ட நீ இப்படிப் பேச மாட்டே!

பச்சை: யாரு நீங்க?

நீலம்:  அதுக்கு முன்னால நீ யாருன்னு சொல்லு!

பச்சை: நான் யாரா?  என்னைத் தெரியாதவங்க இந்த பஸ்லியே இருக்க முடியாதே!

நீலம்:  நீ யாருன்னே உன்னால சொல்ல முடியல! நீ யாருங்கறது உனக்கே தெரியாதப்போ, நீ யாருங்கறது மத்தவங்களுக்குத் தெரிஞ்சு என்ன பிரயோஜனம்?

பச்சை: சாமி!

நீலம்:  ஆங்! இப்பதான் உனக்கு நான் யாருன்னு புரிஞ்சிருக்கு! நீ இப்ப கூப்பிட்டியே அதுதான் நான். சாமி...கடவுள்...

அகரம்: இல்லை. நீங்க  ஒரு ஏமாத்துப் பேர்வழி!

பச்சை: ஆமாம். 'கடவுள்ங்கறது ஒரு ஏமாத்துக்காரன் மனதில் உருவான கற்பனை' என்று என்னோட ஆசான் சொல்லியிருக்காரு!

அகரம்:  இல்லை. கடவுள் உண்டு. ஆனா அது இவர் இல்லை.

நீலம்:  நீங்க ரெண்டு பேருமே முட்டாள்கள். உங்களையெல்லாம் நல்லா மூளைச்சலவை பண்ணியிருக்காங்க.  நாம ஒவ்வொத்தருமே கடவுள்தான். இதை யார் புரிஞ்சுக்கறாங்களோ அவங்களைத்தான் கடவுள்னு மத்தவங்க எல்லாம் ஏத்துக்கணும். நீங்க ரெண்டு பெரும் இதைப்  புரிஞ்சுக்கலை. ஆனா நான் புரிஞ்சுக்கிட்டிருக்கேன். அதனால நான்தான் கடவுள்!

அகரம்: கடவுள்ங்கறவர் இந்த பஸ்ஸுக்குள்ள இல்ல. அவர் எங்கேயோ இருந்துக்கிட்டு இந்த பஸ்ஸை இயக்கறாரு.


பச்சை:  முட்டாள்தனம்! இந்த பஸ்ஸை இயக்கறது அதோட எஞ்சின். எஞ்சினை இயக்கறது அதுக்குள்ளே இருக்கற எண்ணெய். பஸ்ஸை இயக்குகிறவர் டிரைவர்.  வெளியிலிருந்து ஒத்தர் இந்த பஸ்ஸை எப்படி இயக்க முடியும்?

அகரம்:  எஞ்சினையும் டிரைவரையும் இயங்க வைக்கிறது யாரு?

நீலம்:  நான்தான்!

அகரம், பச்சை இருவரும் ஒரே குரலில்: என்னது நீங்களா?


நீலம்:  எனக்காகத்தானே  இந்த பஸ் இயங்குது?  எனக்காக, உனக்காக, நமக்காக. நாம எல்லாரும் இறங்கிப் போயிட்டா இந்த பஸ் இயங்குமா? இந்த பஸ்ஸு க்குள்ள  இருந்துக்கிட்டு அதை இயக்கறது நாமதான். இந்த ஞானம் உங்களுக்கு வரலே. ஞானம் வந்த நான்தான் கடவுள்!

(அகரம், பச்சை இருவரும் சில வினாடிகள் மௌனமாக யோசிக்கிறார்கள்.)

பச்சை:  நீங்க எங்கே போறீங்க?

நீலம்:  நான் எங்கேயும் போகலே ! ஒரே இடத்திலதான் இருக்கேன். இந்த பஸ்தான் போகுது.

பச்சை (நீலத்தின் அருகில் வந்து அவர் காதில்): சாமி! நீங்க கடவுள்னு நான் ஏத்துக்கறேன். இந்த பஸ்ல இருக்கறவங்க எல்லோரும் எனக்கு கட்டுப்பட நீங்கதான் உதவணும்!


நீலம்:  அப்ப உனக்குக்கடவுள் நம்பிக்கை வந்துடுச்சா?

பச்சை:  நான் கடவுளை நம்பறதுங்கறது கடவுள் என்னை நம்பறதைப்  பொறுத்துத்தான்! நான் என்ன செய்யணும் சொல்லுங்க?

நீலம்:  இவனை எழுந்து போகச் சொல்லு. எனக்குத் தனிமை வேணும். நிறைய இடம் வேணும். இந்தப் பகுதி முழுக்க என்னோடது. இங்க யாரும் வரக்கூடாது.

பச்சை:  (தனக்குள்) ஒருத்தருக்கு இவ்வளவு இடமா? (வெளியில்) சாமி! இவன் பாவம். ரொம்ப நேரம் நின்னுக்கிட்டே வந்திருக்கான். இப்பதான் இவனுக்கு உக்கார இடம் கிடைச்சிருக்கு. அவன் பாட்டுக்கு ஒரு ஓரமா உக்காந்துக்கிட்டு இருக்கட்டுமே!

நீலம்:  ஒன்னோட சீட்ல நிறைய இடம் இருக்கே! அங்கே இவனை உட்கார வைக்கலாமே!

பச்சை:  சரி சரி. (அகரத்திடம்) இங்க பாருப்பா!! இது சாமியோட இடம். நீ வேற எங்கியாவது போ.

அகரம்:  நான் எதுக்குப் போகணும்? இது என்னோட எடம்!

பச்சை:  இது சாமியோட இடம்.

அகரம்:  அவருதான் இங்க உக்காந்திருக்காரே? அவருக்குப் பக்கத்திலதான் நான் உக்காந்திருக்கேன்?  என் இடத்தையும் அவர் ஏன் கேக்கறாரு?

பச்சை:  மரியாதையாச்  சொன்னா போக மாட்டே?

அகரம்:  நான் எங்கே போறது? பணம் கொடுத்து இந்த இடத்தை வாங்கியிருக்கேன்.

பச்சை:  பணம் கொடுத்தியா? யாருகிட்ட? அது இருக்கட்டும். உன்கிட்ட டிக்கட் இருக்கா முதல்ல? ஏன் முழிக்கறே? டிக்கட் இல்லாம பிரயாணம் பண்ணிக்கிட்டு தகராறா பண்றே?

அகரம்:  என்கிட்டே டிக்கட் கேட்க நீங்க யாரு? உங்ககிட்ட டிக்கட் இருக்கா? இந்தப் போலிக் கடவுள்கிட்ட டிக்கட் இருக்கா?

நீலம்: இவன் ரொம்ப ஆபத்தானவன். இவனை மொதல்ல அப்புறப்படுத்து!

பச்சை:  டேய்! மரியாதையா இங்கேயிருந்து போறியா.. இல்லை..?

அகரம்:  ஐயோ! என்ன கொடுமை இது? நான் அவரைக் கூப்பிடுறேன். மாமா.....இல்லை..அங்க்கிள்...

பச்சை:  யாருடா அது அங்க்கிள்?

அகரம்:  அவருதான் எனக்கு இங்க இடம் பிடிச்சுக் கொடுத்தாரு.

பச்சை: ஓ! அவனா? அவன் ஏன் வரப்போறான் இப்ப?

அகரம்:  குரல் கொடுத்தா வருவேன்னாரே?

பச்சை: என் குரலைக் கேட்டதும் எங்கியாவது ஓடியிருப்பான்!

அகரம்:  இல்ல. அவரு இங்கேதான் இருப்பாரு. அங்க்கிள் ..அங்க்கிள்!

(அழைத்துக்கொண்டே போகிறான். அவன் திரையிலிருந்து மறைந்த சில வினாடிகளில் 'டமால் என்று ஒரு சத்தம் கேட்கிறது.)

பச்சை:  என்ன ஆச்சு?

நீலம்:  அவன் பஸ்ஸிலிருந்து கீழே விழுந்திருப்பான்.

பச்சை:  அடப்பாவமே!

நீலம்: இதில பாவப்படறதுக்கு என்ன இருக்கு?  எல்லோரும் எங்கேயாவது இறங்க வேண்டியதுதானே? காலால இறங்காம அவன் உடம்பால் இறங்கியிருக்கான். அவ்வளவுதான்! சில பேரு நிதானமா இறங்குவாங்க. சில பேரு வேகமா இறங்குவாங்க. சில பேரு தடுமாறிக்கிட்டே இறங்குவாங்க. சில பேரு இவனை மாதிரி விழுவாங்க. சில பேரு வேணும்னே குதிப்பாங்க. சில பேரை யாராவது புடிச்சுத் தள்ளி விடுவாங்க. ஆகக்கூடி எல்லோருமே எதோ ஒரு சமயத்தில பஸ்ஸிலிருந்து இறங்கித்தான் ஆகணும்?

பச்சை:  நாம எப்ப இறங்கப் போறோம்?

நீலம்:  சபாஷ்! உனக்கும் ஞானம் வர ஆரம்பிச்சிடுச்சே!

காட்சி 6
(கீழே விழுந்து கிடக்கும்  அகரத்தின் மீது வெளிச்சம் விழுகிறது. அகரம் மெல்ல எழுந்திருக்கிறான்.)

அகரம்:  எனக்கு என்ன ஆச்சு? ஓடற பஸ்ஸிலிருந்து விழுந்துட்டேன் போலிருக்கு. என்  பயணம் என்ன ஆறது? முடிஞ்சு போச்சா? அப்ப நான் போக வேண்டிய இடம்? அதோ இன்னொரு பஸ்  வருதே. அதில ஏறிப் போகலாமா? எங்கே போறது? எங்கேயாவது... எங்கே போறதுங்கறதா முக்கியம்? எங்கேயாவது போய்க்கிட்டுத்தான்  இருக்கணும் - பயணம் முடியற வரை. பயணம் எப்ப முடியும்? ஒருவேளை முடிஞ்சு போச்சோ? ஓ! இந்த பஸ்ஸும் நிக்காம போகுதே! ஹோல்டான்...ஹோல்டான்...

(அகரம் ஓடும் பஸ்ஸைத் தொடர்ந்து ஒடி அதில் ஏற முயல்வது போன்ற அசைவுகளைச்  செய்கிறான். சட்டென்று அசைவுகள் நின்று உறைந்து போகிறான்.)

பின்னணியில் பாடல் ஒலிக்கிறது:

எங்கே வாழ்க்கை தொடங்கும்?
அது எங்கே எவ்விதம் முடியும்?
இதுதான் பாதை இதுதான் பயணம்
என்பது யாருக்கும் தெரியாது.
பாதையெல்லாம் மாறி வரும்
பயணம் முடிந்து விடும்....

(பாடல் சட்டென்று நிற்க, திரை விழுகிறது.)

(1988ஆம் ஆண்டு எழுதப்பட்டது.)
Monday, July 24, 2017

24. மகன் தந்தைக்கு....


"எல்லோரும் வந்து விட்டார்களா?" என்றார்  வக்கீல்.

அறையில் கூடியிருந்த ஒவ்வொருவரும் மற்றவர்கள் மீது பார்வையைச் சுழல விட்டனர்.

ஃப்ரேம் இல்லாத மூக்கு கண்ணாடி அணிந்திருந்த நடுத்தர வயதுக்காரர் புன்முறுவலுடன் வக்கீலைப் பார்த்தார். "என்ன கேட்டீர்கள்?"

அவர் ஹியரிங் எயிட் அணிந்திருக்கிறாரா என்று கூர்ந்து பார்த்த வக்கீல் "சம்பந்தப்பட்ட எல்லோரும் வந்து விட்டார்களா என்று கேட்டேன்" என்றார் உரக்க.

"இப்போதுதான் உங்கள் கேள்வி லீகலி கரெக்ட்" என்றார் கண்ணாடிக்காரர்     புன்னகை மாறாமல். "உண்மையில், இங்கே சம்பந்தமே இல்லாத சில பேர் கூட வந்திருக்கிறார்கள்."

"பிள்ளை இல்லாதவரின் சொத்துக்கு யாரும் ஏகபோக உரிமை கொண்டாட வேண்டாம்" என்றாள் சற்றே வயதான ஒரு அம்மாள். 

அதற்கு மேல் வாக்குவாதத்தை வளர்த்த விடாமல் வக்கீல் இடைமறித்தார். "சம்பந்தப்பட்டவர்கள் யார் என்பது  நான் உயிலைப் படித்ததுமே தெரிந்து விடப் போகிறது. அதற்குள் ஏன் வீணான சர்ச்சைகள்? நான் உயிலைப் படிக்கலாமா?"

"ப்ளீஸ் கோ அஹெட். ஆனால் ஒரு வேண்டுகோள். உங்கள் லீகல் வளவளாவையெல்லாம் தவிர்த்து விட்டு, உயிலின் முக்கியமான பகுதியைப் படித்தால் போதும், உங்கள் கையிலுள்ள பேப்பர் கற்றையின் கனத்தைப் பார்த்தால் எனக்குக்  கவலையாக இருக்கிறது"  என்றார் இன்னொருவர்.

"நீங்கள் ஒருவர் மாற்றி ஒருவர் பேசுவதை நிறுத்தினால், நான் உயிலைப் படிக்க ஆரம்பிக்கிறேன்.  இந்த உயிலை, காலஞ்சென்ற சுந்தரம் தன் கைப்பட எழுதியிருக்கிறார். அவர் சட்டம் படிக்காதவர் என்பது உங்களுக்குத் தெரியும். அதனால் இந்த உயிலில் லீகல் வளவளாவெல்லாம் இல்லை. உயிலின் வாசகம் ஒரு வாக்கியத்தில் முடிந்து விடுகிறது. .ஆனால்."

சஸ்பென்ஸ் வைத்துத் தன் பேச்சை நிறுத்தி விட்டு வக்கீல் கூடியிருந்தவர்களைப் பார்த்தார். 

வியப்பு தூவப்பட்ட முகங்களில் புருவங்கள் கேள்விக்குறிகளாகியிருந்தன.

"ஆனால், உயிலின் பின்குறிப்பாக, ஒரு கதை இருக்கிறது."

"கதையா?"

"மாமா ஒரு கதாசிரியர் என்பது இத்தனை நாட்களாக நமக்குத் தெரியாமல் போய் விட்டதே!"

"ஒருவேளை இந்தக் கதையை யார் பத்திரிகையில் பிரசுரிக்கச் செய்கிறாரோ அவருக்குத்தான் சொத்து என்று உயில் எழுதியிருப்பாரோ?"

கேலி ததும்பிய விமர்சனங்கள் அவரவர் மனப்போக்குப்படி வெளிப்பட்டன.

"உங்கள் செவிப்புலன்களைக் கூர்மையாக்கிக் கொள்ளுங்கள். நான் இப்போது உயிலின் முக்கியப் பகுதியைப் படிக்கப் போகிறேன்" என்று  வக்கீல் அறிவித்த அக்கணமே நிசப்தத்தின் ஆட்சி துவங்கியது.

அடுத்த சில வினாடிகளில் அனைவரின் செவிப்புலன்களும் வெடிகுண்டுத் தாக்குதலுக்கு ஆளாயின.

அதிர்ச்சியும், ஏமாற்றமும் கடுமையான சொற்களில் வெளிப்பட்டன.

"ஃபென்டாஸ்டிக்!"

"சுந்தரம் எப்போதுமே கொஞ்சம் மனநிலை சரியில்லாதவன் மாதிரிதான்  இருப்பான். ஆனால் இந்த அளவுக்கு அவனுக்கு மூளை குழம்பியிருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை!"

"ஹிப்போக்ரஸி ஆஃப்  த ஹையஸ்ட் ஆர்டர்!"

"நம் எல்லோரையும் முட்டாளாக்குவதற்காக அவர் செய்த பைத்தியக்காரத்தனம்!"

ஊசிச்சரம் போல் வந்து தெறித்த ஏமாற்றத்தின் வெடிப்புகளை வக்கீல் ரசித்துக் கொண்டிருந்தார்.

"உயிலைப் பற்றிய உங்கள் விமர்சனம் முடிந்து விட்டதா? இப்போது நான் கோயிலின் பின்குறிப்பை - கதையைப் படிக்கப் போகிறேன்.அதைப் படித்ததும் என் கடமை முடிந்து விடும். உயிலை விமர்சித்தது போல் கதையையும் விமர்சித்தால் உங்கள் கடமையும் முடிந்து விடும். 'வளவளாவைக் கேட்க விரும்பாதவர்கள் எழுந்து போகலாமே!"

வக்கீல் சில வினாடிகள் தாமதித்தார். யாரும் எழுந்து போகவில்லை. ஒரு புதிரின் விடையைத் தெரிந்து கொள்ளும் ஆவலுடன் அனைவரும் அமர்ந்திருப்பதாகத் தோன்றியது.

வக்கீல் உயிலின் பின்குறிப்பைப் படிக்க ஆரம்பித்தார்.

ப்போது அவனுக்கு வயது பன்னிரண்டு இருக்கும்.ஆறாவது வகுப்ப்பில் படித்துக்  கொண்டிருந்தான். வயதுக்கேற்ற உடல் வளர்ச்சி இல்லாததால் உருவத்தில் சிறியவனாகத் தோன்றினாலும் அவன் அறிவு மட்டும் அவன் வயதுக்கு மீறி வளர்ந்திருந்தது.

வகுப்பில் ஆசிரியர் ஒரு விஷயத்தை விளக்கும்போது அவர் விளக்கத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே அவர் சொல்ல வந்த கருத்தை முழுமையாகப் புரிந்து கொண்டு விடுவான்.அவருடைய விரிவான விளக்கங்கள் எல்லாம் அவனுக்குத் தேவையற்றவையாகப் படும்.

ஆசிரியர் விளக்கம் அளித்துக்கொண்டிருக்கும்போதே அவன் சிந்தனை முன்னேறிச் சென்று, அந்த விஷயத்தின் ஆழமான பகுதிகளுக்குச் சென்று துழாவி விட்டு வந்து விடும். ஆசிரியர் ஒரு விஷயத்தை விளக்கி முடித்திருக்கும்போது, தான் சொல்லிக் கொடுத்த விஷயத்தைத் தன்னை விடவும் நுணுக்கமாக அறிந்து கொண்டுள்ள மாணவன் ஒருவன் வகுப்பில் இருப்பதை அவர் அறிந்திருக்க மாட்டார்.

குறிப்பாக, விஞ்ஞானப் பாடங்களில் அவனுக்கு இருந்த ஆர்வம் பிரமிப்பூட்டுவதாக இருந்தது. சோதனைக்கூடத்தில் சில எளிய பரிசோதனைகளை விஞ்ஞான ஆசிரியர், எதோ தாமே அவற்றை உருவாக்கிய பெருமிதத்துடன் செய்து காட்டி விளக்கும்போது, அவன் கண்களை அகல விரித்தபடி அவற்றை  கவனிப்பான்.

ஒரு விசைப்பலகை போல் தண்ணீர்த் தொட்டியில் நீந்திப் பாயும் சோடியம் கொழுந்தின் எழிலையும், ரசாயனச் சேர்க்கைகள் விளைவிக்கும் வர்ண ஜாலங்களையம் காணும்போது எதோ ஒரு தனி உலகுக்குப் பயணம் செய்வது போன்ற உணர்வு ஏற்படும். அந்தத் தருணங்களில், பிறவி எடுத்ததன் பயனையே அடைந்து விட்டதாகத் தோன்றும். இரவில் தூக்கம் பிடிக்காமல் அந்த இனிய அனுபவங்களை அசை போடும்போது அவனுக்கு உடல் சிலிர்க்கும்.

விஞ்ஞானத்தின் விந்தைகளை அவன் மேலும் மேலும் உணர ஆரம்பித்தபோது பக்தர்கள் தெய்வ தரிசனத்தின்போது அடையும் பரவச நிலை அவனை ஆட்கொள்ளத் தொடங்கியது.

து ஆங்கில வகுப்பு. அதில் நியூட்டனைப் பற்றிய ஒரு பாடம் வந்திருந்தது. நவீன விஞ்ஞானத்தின் சிற்பிகளில் ஒருவர் என்ற அளவில் நியூட்டனைப் பற்றி அவன் முன்பே  ஓரளவு அறிந்து வைத்திருந்ததால்  அந்தப் பாடத்தில் அவன் அதிக ஆர்வம் செலுத்தினான்.

நியூட்டன் எப்படி உலகம் புகழும் விஞ்ஞானி ஆனார்? மரத்திலிருந்து ஆப்பிள் விழுந்ததைப்  பார்த்து புவி ஈர்ப்பு விசை இருப்பதை (தற்செயலாக!)க்  கண்டு பிடித்தவர் என்று மட்டுமே பரவலாக அறியப்பட்டிருந்த அவரைப் பற்றிய உண்மைகளை அந்தப் பாடத்தில் படித்தபோது அவனுக்குப் பெரும் பிரமிப்பு ஏற்பட்டது. ஒரு லட்சிய வாழ்க்கைக்கான வித்தையும் அந்தப் பாடம் அவன் மனதில் ஊன்றி விட்டது.

நியூட்டன்! இள வயதிலேயே எவ்வளவு விஞ்ஞான ஆர்வம் அந்தச் சிறுவனுக்கு! சிறு கருவிகளையும், உபகரணங்களையும் கழற்றி மாற்றுவதில் உண்டான ஆர்வத்தில் துவங்கி, காற்றில் இயங்கும் இயந்திரங்கள், வானத்தை அருகில் காட்டும் தொலைநோக்கிக் கருவிகள் என்று படிப்படியாகப் பல கருவிகளை இரவும் பகலும் உழைத்து உருவாக்கும் அளவுக்கு வளர்ந்த திறமை, பிற்காலத்தில் மாபெரும் விஞ்ஞான உண்மைகளை உலகுக்கு எடுத்துரைக்கும் அளவுக்கு வளர்ந்தது.

திடீரென்று தான் நியூட்டனாக மாறி விட்ட ஒரு பிரமையில் அவன் லயித்துப் பார்த்தான். 'நான் நியூட்டனாக இருந்தால் இப்போது என்ன செய்து கொண்டிருப்பேன்?' என்று தன்னையே கேட்டுக்கொண்டான்.  கேள்விக்கு விடை கிடைக்கவில்லை. ஆனால் அந்தக் கேள்வி அவன் மனதில் திரும்பத் திரும்ப எழுந்து இனம் புரியாத ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தியது.

அதற்குப் பிறகு விஞ்ஞானத்தில் அவனது ஆர்வம் இன்னும் பல மடங்காயிற்று. உலகையும், அதை இயக்கும் சக்திகளையும், உலகில் உள்ள பல்வகைப் பொருட்களையும் பற்றி உடனே தெரிந்து கொண்டு வீட வேண்டும் என்று ஒரு துடிப்பு.

அவனுடைய விஞ்ஞானப்  பாடப்புத்தகங்களால் அவனது ஆர்வப்பசியைத் தணிக்க முடியவில்லை. முன்பு பிரமிப்பூட்டிய பரிசோதனைகள் எல்லாம் இப்போது சிறுபிள்ளை விளையாட்டுகளாகத் தோன்றின. பள்ளி நூல்நிலையத்தில் இருந்த விஞ்ஞானப் புத்தகங்களுடன் அவன் செய்துகொண்ட அறிமுகம் நாளடைவில் இணைபிரியாத நட்பாக மாறியது. இந்த நண்பர்கள் அவனைப் பல அற்புதமான உலகங்களுக்கெல்லாம் அழைத்துச் சென்றனர்.

காலத்தின் ஓட்டத்தில் அவன் வகுப்புகளை இயந்திரமாகக் கடந்து கொண்டிருந்தான். பாடப்புத்தகங்களில் அவன் அதிகம் அக்கறை செலுத்தாததால்,  அதிக மதிப்பெண்கள் பெறாவிட்டாலும், தேர்ச்சி பெற்று அடுத்த வகுப்புகளுக்குச் சென்று கொண்டிருந்தான்.

ருநாள் செய்திப் பத்திரிகையைப் புரட்டிக்கொண்டிருந்தபோது, தற்செயலாக ஒரு செய்தி அவன் கவனத்தைக் கவர்ந்தது. அந்த ஆண்டு நோபல் பரிசு பெற்றவர்களைப் பற்றிய செய்தி அது. பௌதிகம், ரசாயனம், கணிதம் உட்படப் பல்வேறு துறைகளிலும் நோபல் பரிசு பெற்றவர்களின் பட்டியல் அடங்கிய செய்தி அது..

அந்தச் செய்தியைப் படித்ததும் , எதோ ஒரு உணர்வினால் தீண்டப்பட்டவனாக ஒரு கணம் அவன் கண்களை மூடி ஒருவித லயிப்பில் ஆழ்ந்தான். சில தெளிவற்ற உருவங்கள் அவன் மனதில் வந்து போயின. உருவங்கள் தெளிவற்று இருந்தாலும் அவனால்அந்த  நபர்களை அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. நியூட்டன், ஐன்ஸ்டீன், சி,வி,ராமன்.....இன்னும்  பலர்.

அப்போது மின்னல்போல அவன் மனதில் ஒரு ஆசை எழுந்தது. எழுந்த வேகத்திலேயே அது வேகமாக வளர்ந்து ஒரு தீவிர நம்பிக்கையாக, நிச்சயம் அடைந்தே தீர வேண்டிய ஒரு லட்சியமாக உருமாறியது,

'நான் நோபல் பரிசு பெற வேண்டும்.'

ஒரு லட்சியத்தை உணர்ந்து ஏற்றுக்கொண்டதும், அவன் வாழ்க்கைக்கு ஒரு புதிய அர்த்தம் பிறந்து விட்டதாகத் தோன்றியது. அந்த லட்சியத்தை எப்படி அடையப்போகிறோம் என்பதைப்பற்றி அவன் யோசிக்கவில்லை. லட்சியத்தை எப்படியும் அடைந்தே தீர வேண்டும் என்பதை ஒரு விதியாக அவனே வகுத்துக்கொண்ட பிறகு,  எப்படி என்ற சிந்தனையே அவசியமற்றதாக ஆயிற்று.

வன்  எஸ்.எஸ்.எல்,சி தேர்வு எழுதியதும், கல்லூரியில் சேர்வது பற்றித் தன் தந்தையிடம் பேச நினைத்தான். ஆனால் அவனை முந்திக்கொண்டு அவன் தந்தை "படிச்சது போதும். நாளையிலிருந்து நீயம் என்னோட கடைக்கு வந்து வியாபாரத்தைக் கத்துக்க" என்றார்.

தன் விஞ்ஞான ஆர்வத்தையும், லட்சியத்தையும் பற்றி அவன் பேசியது அவன் தந்தையின் காதுகளில் ஏறவில்லை. "என்ன படிப்புப் படிச்சாலும், படிப்பு முடிஞ்சதும்  வியாபாரத்தை நீதானே பாத்துக்கணும்? அதுக்கு எதுக்குப் படிக்கணும்? நம்ம வியாபாரத்தைப் பாத்துக்கறதுக்கு எஸ் எஸ் எல் சியே போதும்." என்று அடித்துச் சொல்லி விட்டார்.

ஒரு வருடம் தந்தை சொன்னபடி வியாபாரத்தைப் பார்த்துக்கொண்டு விட்டு அதற்குப் பிறகு தனக்கு வியாபாரத்தில் ஆர்வம் இல்லை என்று சொல்லி விட்டு அடுத்த ஆண்டு கல்லூரியில் சேரலாம் என்று முடிவு செய்தான். வேறு வழி இல்லையே!

ஆனால் அடுத்த சில மாதங்களிலேயே அவன் தந்தை இறந்து விட்டார். தந்தைக்கு ஒரே மகன் என்ற நிலையில் வியாபாரத்தையும் பார்த்துக்கொண்டு, தாய்க்கு ஆதரவாகவும் இருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டான்.

வியாபாரப்  பொறுப்பு ஒரு பெரும் சுமையாக வெளியிலிருந்து அவனை அழுத்த, அடக்கி வைக்கப்பட்ட விஞ்ஞான ஆர்வம் மற்றோரு பெரும் சுமையாக உள்ளிருந்து அழுத்தியது. இயந்திரம்  போல வாழ்க்கையை ஒட்டிக்கொண்டிருந்தான்.

ப்போது அவனுடைய வயதில் பல வருடங்கள் கூடி விட்டன. அவனுக்கு ஒரு பிள்ளை பிறந்து பள்ளியில் படித்துக்கொண்டிருந்தான். இனி அவனை 'அவர்' என்றே குறிப்பிடுகிறேன்.

சுமையாகத் தொழில் விழுந்த குடும்பப் பொறுப்பும் மனதில் புதைந்து அழுத்திக் கொண்டிருந்த ஏமாற்றமும் ஒருசேர அவரை அழுத்திக் கொண்டிருந்த நிலையில்  அவரால் வாழ்க்கையில் பெரிதாக எதையும் சாதிக்க முடியவில்லை. வியாபாரம் பெரிதாக முன்னேறாவிட்டாலும் அவர் தந்தை போட்டு வைத்திருந்த பலமான அஸ்திவாரத்தின் பலத்தில் தாக்குப் பிடித்துக்கொண்டிருந்தது.

'சாதனைகளை புரியக்கூடிய திறமையை இறைவன் எனக்கு கொடுத்திருந்தும்  அந்தத் திறமையைப் பயன்படுத்தாமல் வீணாக்கி விட்டேனே!' என்று ஆங்கிலக் கவிஞர் மில்டன் புலம்பியதைப் போல் அவர் உள்மனமும் அவரது லட்சியக்கனவின் சிதைந்த துகள்களை நினைத்து  எப்போதும் புலம்பிக் கொண்டே இருந்தது.

பள்ளியில் படித்துக்கொண்டிருந்த அவர் மகன் ஒருநாள் அவரிடம் உற்சாகத்துடன் ஒடி வந்தான்.

"அப்பா!..அப்பா!..."

"என்னடா?"

"அப்பா! நம் வீட்டில் இனிமேல் நெருப்புப் பேட்டி வாங்க வேண்டாம்."

"என்?" என்றார் அவர் புரியாமல்

"நெருப்புக்குச்சி இல்லாமலே நெருப்பை வரவழைக்கும் வழியை நான் கண்டு பிடித்து விட்டேன்!"

அவர் மனதில் இன்னதென்று தெரியாத ஒரு சிலிர்ப்பு. மழைத்துளி மண்ணில் விழும் சமயம் குப்பென்று ஒரு மணம் எழுந்து மழை வரப்போவதை உணர்த்துவது போல், எதோ ஒரு பெரிய நிகழ்வின் முன்னோடியாக அவர் மனதுக்குள் உற்சாக உற்று பெருக்கெடுத்தது.

"சொல்லு."

அவன் சொல்லவில்லை. செய்து காட்டினான்.

அது அப்படி ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. ஒரு லென்ஸின் மூலம் சூரிய ஒளியை  சிறிதளவு பஞ்சின் மீது பாய்ச்சி அதைப்  பற்றி எறியச்செய்யும் சாதாரணச் செயல்தான்.

ஆனால் அதைச் செய்வதில் அவன் காட்டிய ஆர்வமும் , உற்சாகமம் எப்போதோ அடைத்துப் போன அவர் மனக்கதவுகளையும் சாளரங்களை  சடார் சடாரென்று அடித்துத் திறந்தன.

"டேய் நியூட்டன்!"

அவர் அவனைத் தூக்கிப் பந்தாடினார். அவரது லட்சியம் நிறேவேறாமலா போய் விட்டது? யார் சொன்னது?

அவரது லட்சியத்தை நிறைவேற்ற, இதோ ஒருவன் - அவரது ரத்தத்துக்கும்   சதைக்கும் சொந்தம் கொண்டாடக்கூடிய ஒருவன், அவருடைய மகன் - வந்து விட்டானே!  அவருடைய தோல்வியை வெற்றியாக்கி, அவர் எய்தியதை  எட்டிப்பிடித்து அவருக்கு வெற்றி தேடித் தரப்போகிறான்.

பல வருடங்களுக்குப் பின் அவர் ஒரு புதிய உற்சாகத்தை உணர்ந்தார்.

தனது லட்சியத்தை அவனிடம் அவர் பலமுறை சொல்லி அதை அவன்தான் நிறைவேற்ற வேண்டும் என்று  திரும்பத் திரும்பக் கூறி வந்தார். நாள் ஆக ஆக, அவனுக்கு அவர் கூறியதன் பொருள் விளங்கத்  தொடங்கியது.

அவன் மீது அவருக்குப்  புதிய நம்பிக்கை ஏற்பட்டக் காரணமான அந்த நிகழ்ச்சியை அவர் வர்ணிக்கும்போதெல்லாம் அவனுக்குச் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. பூதக்கண்ணாடியை வைத்துக்கொண்டு அவன் விளையாட்டாகச் செய்த ஒரு செயலை அவர் விஞ்ஞான  ஆர்வமென்று புரிந்து கொண்டதை என்ன வென்று சொல்வது! விஞ்ஞானப் பாடம் என்றால் தனக்கு வேப்பங்காய் என்று தந்தையிடம் சொல்லி அவரைப் பெருத்த ஏமாற்றத்துக்கு ஆளாக்க அவனுக்கு மனம் துணியவில்லை.

ஆயினும் ஒருநாள் அது அவருக்குத் தெரிந்து விட்டது. விஞ்ஞானப் பாடத்தில்  தேர்ச்சி பெறாததால் அவனால் அடுத்த வகுப்புக்குப் போக முடியவில்லை. உடைந்த பொம்மையை ஓட்ட வைத்த பின் அது மீண்டும் உடைந்தும் குழந்தைக்கு ஏற்படும் ஏமாற்றத்தைப் போல் அவருக்குப் பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டது.

அந்த அதிர்ச்சி அவரைச் சற்று அதிகமாகவே தாக்கி அவரது உடல் நிலை மனநிலை இரண்டையும் ஒருங்கே பாதித்தது. தன் பரம்பரைக்கு நோபல் பரிசு கிடைக்கும் வாய்ப்பு  சமீபத்தில் இல்லை என்ற சாதாரண உண்மை அவரை அந்த அளவுப்பு பாதித்திருக்க வேண்டியதில்லை!

ற்று அதிசயமான ஒற்றுமையுடன் அவனும் அவன் தந்தையைப் போலவே குடும்பப் பொறுப்பை ஏற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டான் - அவன் தந்தையின் திடீர் மரணத்தினால். ஆயினும் ஒரு வித்தியாசம் இருந்தது. குடும்பப் பொறுப்பை ஏற்க வேண்டிய கட்டாயத்தால் தன் படிப்பு தடைப்பட்டுப் போனது அவன் தந்தைக்கு ஏமாற்றமாக இருந்தது. ஆனால் குடும்பப் பொறுப்பை ஏற்பதற்காகப் படிப்பைக் கைவிடுவது அவனுக்கு மிகவும்  ஆறுதலாக இருந்தது!

ஒருவேளை தன்னிடம் எதிர்பார்ப்பை உருவாக்கிக் கொள்ளாமல் அதனால் கிடைத்த ஏமாற்றத்தால் பாதிக்கப்படாமல் இருந்திருந்தால் அவர் இன்னும் சில ஆண்டுகள் உயிரோடு இருந்திருப்பாரோ என்று அவனுக்குச் சில சமயம் தோன்றும். தான் தவறு எதுவும் செய்யவில்லை என்று அவன் உணர்ந்தாலும், தந்தையைப் பெரிய ஏமாற்றத்துக்கு ஆளாக்கி விட்டோமே என்ற மனக்குறை அவனை வாட்டிக்கொண்டே இருந்தது.

காலம் எதற்கும் கவலைப்படாமல்  எல்லாச் சுமைகளையும் ஏற்றுப் பறந்துகொண்டே இருந்தது

தொழில் துறைக்கென்று ஒரு நோபல் பரிசு ஏற்படுத்தப்படவில்லை.  அப்படி ஏற்படுத்தப்பட்டிருந்தால் அந்தப் பரிசை அவன் வென்றிருக்க வாய்ப்பு உண்டு. தொழிலிலும், வியாபாரத்திலும் அவன் செய்த சாதனைகள் அத்தனை!

இந்தியாவின் மிக முக்கியமான தொழிலதிபர்களின் ஒருவனாக அவன் கருதப்பட்டான். 'பிசினஸ் இந்தியா' பத்திரிகை  ஒருமுறை அவனை ஆண்டின் சிறந்த தொழிலதிபராகத் தேர்ந்தெடுத்தது. ஃபார்ச்சூன் பத்திரிகையின் உலகின் தலைசிறந்த 500 நிறுவனங்களில் அவனுடைய நிறுவனமும் இடம் பெற்றது. அவனுக்குக் கிடைத்த பரிசுகள், பாராட்டுக்கள், கௌரவங்கள் பலப்பல. அத்தனையும் உள்ளே நைந்து போன உள்ளத்துடன் வெளியே சிரித்தும், பேசியும், உதவியும், வாழ்ந்தும் அவன் நிகழ்த்தியவை.

இந்த வெற்றிகளின் பின்னணியில், தந்தையின் லட்சியத்துக்குத் துணை போக முடியாத குற்றஉணர்வின் நிழல் அவனை விடாமல் துரத்தி அவன் வாழ்வையே அர்த்தமற்றதாக உணரச் செய்தது. தனது வாழ்க்கையையே அர்த்தமற்றதாக அவன் கருதியதால் அர்த்தமுள்ள வாழ்க்கையுடன் தொடர்புடையதாகக் கருதப்படும்  திருமணத்திலும், குடும்ப வாழ்க்கையிலும் அவன் ஈடுபடவில்லை.

தன் தந்தையின்  சிதைத்து போன  கனவுகளின் துகள்களைக் காற்றில் கைகளை  அளைந்து பிடிக்க முயலும் மாயைச் சிந்தனைகளில் அவன் ஈடுபட்டிருந்தபோதுதான் ஒரு மின்னலைப் போல் அந்த வெளிச்சம் அவன் மனதுக்குள் புகுந்தது.

அவனுக்கு ஒரு வழி தோன்றி விட்டது. தன தந்தையின் லட்சியத்தை அவனால் நேரடியாக நிறைவேற்ற முடியாவிட்டாலும், வேறு வழியில் அதற்கு ஒரு பரிகாரம் செய்யும் யோசனை அவனுக்குத் தோன்றி விட்டது.

ஒரு பெரிய விஞ்ஞானியாகி நோபல் பரிசு பெற வேண்டும் என்று அவன் தந்தை கனவு கண்டார். தன்னால் அது முடியாது என்ற நிலை வந்தபோது, தன மகன் மூலம் தன லட்சியம் நிறைவேறும் என்று எதிர்பார்த்து ஏமாந்தார். அவனால் அந்தப் பாதையில் அடியெடுத்துக்கூட வைக்க முடியவில்லை.

ஆனால் இந்த உலகம் நோபல் பரிசையும் அவன் தந்தையையும் இணைத்துப் பேசும்படி அவனால் செய்ய முடியும். செய்யத்தான் போகிறான்.

தனால்தான்......

என் தந்தையின் நினைவாக 'சதாசிவம் மெமோரியல் இன்டர்நேஷனல் ப்ரைஸ் ஃபார் சயன்ஸ்' என்ற பரிசை உருவாக்கி  ஒவ்வொரு ஆண்டும் விஞ்ஞானத்தின் பல பிரிவுகளிலும் சிறந்த விஞ்ஞானிகளைத் தேர்ந்தெடுத்து அவர்கள் ஒவ்வொருவருக்கும் நோபல் பரிசுக்கு இணையான, சமமான பரிசை  வழங்குவதற்காக ஒரு டிரஸ்டை ஏற்படுத்தி ஷெட்யூல் 1ல் குறிப்பிடப்பட்டுள்ள என்னுடைய எல்லா அசையும், அசையா சொத்துக்களையும்  அந்த டிரஸ்டுக்கே எழுதி  வைக்கிறேன். டிரஸ்ட் உறுப்பினர்களை நியமிப்பது, டிரஸ்டை நிர்வகிப்பது போன்ற விவரங்கள் ஷெட்யூல் 2ல் கொடுக்கப்பட்டுள்ளன....:

வக்கீல் ஒரு நிமிடம் படிப்பதை நிறுத்தி விட்டு அமர்ந்திருந்தவர்களின் முகத்தைப் பார்த்தார்.

'த்சூ' என்று யாரோ சூழ் கொட்டினார்கள்.

(1982ஆம் ஆண்டில் எழுதப்பட்டது.)


Tuesday, May 16, 2017

23. கணவன் அமைவதெல்லாம்

கல்யாணத்துக்கு முன்பு மாதவனைப் பற்றி கீதா கேள்விப்பட்டதெல்லாம் அவன் மிகவும் எளிமையானவன், எல்லோரிடமும் அன்பாகப் பழகுபவன் என்பதுதான். அவளைவிட வசதிக் குறைவான குடும்பத்தைச் சேர்ந்தவன் என்றாலும் அவள் பெற்றோர்  மாதவனுக்கு அவளை மணமுடித்ததற்குக் காரணமும் அவனுக்கு இருந்த நல்ல பெயர்தான்.

ஆனால் திருமணத்துக்குப் பிறகு, மாதவன் தன்னைக் கல்யாணம் செய்து கொண்டது பணத்துக்காகத்தானோ என்ற எண்ணம் அவளுக்குத் தோன்ற ஆரம்பித்தது. தன் பெற்றோர்களுக்கு எப்படி அவன் நோக்கம் தெரியாமல் போனது என்றும் அவள் வியந்தாள்.

தன் பெற்றோர் மற்றும் சகோதரர்களுடன் வசித்து வந்த மாதவன், திருமணம் முடிந்து ஓரிரு மாதங்களிலேயே தனிக்குடித்தனம் அமைத்து விட்டான். கீதாவுக்கு இதில் விருப்பமில்லை. அவன் பெற்றோர்கள் தன்னைத்தான் இதற்குக் காரணமாக நினைப்பார்கள் என்று அவள் சொன்னதை அவன் பொருட்படுத்தவில்லை.
கணவன் அமைவதெல்லாம்

"எல்லாம் உன் சந்தோஷத்துக்குத்தான்" என்றான்.

"எனக்கு எல்லோரும் சேர்ந்து இருப்பதுதான் சந்தோஷம்" என்றாள் கீதா.

"உனக்கு எது நல்லது என்று எனக்குத்தான் தெரியும்" என்று சொல்லி விவாதத்தை முடித்து விட்டான் மாதவன்.

அவன் பெற்றோர்கள் முதலில் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தாலும், மாதவன் தன முடிவில் பிடிவாதமாக இருந்ததால் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை.

தனிக்குடித்தனம் போனதும், உறவினர்களின் வீடுகளுக்குச் செல்லும் படலம் துவங்கியது.

முதலில் தன் உறவினர்கள் வீடுகளுக்குத்தான் செல்ல வேண்டும் என்று அவன் சொன்னபோது அவள் மறுக்க வில்லை.

ஆனால் மாதவனின் உறவினர்கள் வீடுகளுக்குப் போகும்போது எந்த ஒரு பரிசுப் பொருளும் வாங்கிச் செல்லக் கூடாது என்று அவன் பிடிவாதமாக இருந்ததை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சின்னக் குழந்தைகள் இருக்கும் வீடுகளுக்கு சிறு பிஸ்கட் பாக்கெட் வாங்கி செல்வதைக் கூட அவன் அனுமதிக்கவில்லை.

மாதவனின் உறவினர்கள் வீடுகளுக்குச் சென்று  முடித்ததும் அவள் உறவினர்கள் வீடுகளுக்குச் செல்லும் முறை துவங்கியது. ஆனால் அவள் உறவினர்கள் வீடுகளுக்குப் போகும்போது மட்டும் விலையுயர்ந்த பரிசுப் பொருட்கள், தின்பண்டங்கள் என்று அவனுடைய  வசதிக்கு மீறியே வாங்கிச் சென்றான்.

'தன் உறவினர்களை மதிக்கவில்லை. என் உறவினர்களிடம்  நல்ல பெயர் வாங்குவதில் .முனைப்பாக இருக்கிறார். என் உறவினர்கள் என்பதால் அவர்களைக் கவர நினைக்கிறார். தன் உறவினர்கள்  சாதாரண நிலையில் இருப்பவர்கள் என்பதால்  அவர்களை அலட்சியம் செய்கிறார். என்ன ஒரு  மனப்பான்மை இது!"

பொறுக்காமல் அவனிடமே இது பற்றிக் கேட்டு விட்டாள்.

"உன் உறவினர்கள் பணக்காரர்கள் என்பதால் அவர்கள் நம்மை, குறிப்பாக உன்னை, மதிக்க வேண்டும் என்பதற்காகத்தான் அவர்கல் அந்தஸ்துக்கு ஏற்ற வகையில் விலையுயர்ந்த பரிசுப்  பொருட்களை வாங்கிச் சென்றேன்" என்றான் மாதவன்.

"உங்கள் உறவினர்களைப்  பார்க்கப் போகும்போது  அவர்களுக்கு  எதுவும் வாங்கிச் செல்லக்கூடாது என்று ஏன் பிடிவாதமாக இருந்தீர்கள்?"

"நீ வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவள் என்பதால் அவர்கள் நம் வீட்டுக்கு வரும்போது தங்கள் சக்திக்கு மீறிப்  பணம் செலவழித்துப் பொருட்கள் வாங்கி வருவார்கள். நாம் அவர்கள் வீட்டுக்குப் போகும்போது வெறும் கையுடன் போனால், அவர்கள் நம் வீட்டுக்கு வரும்போதும் வெறும் கையுடன் வருவதில் அவர்களுக்கு இந்தத் தயக்கமும் இருக்காது அல்லவா? அதுதான் அப்படிச் செய்தேன்."

கீதா முதல்முறையாகத் தன் கணவனைப் புதிய மரியாதையுடன் பார்த்தாள். இவ்வளவு நல்ல உள்ளம் படைத்தவனைப் பணத்தாசை பிடித்தவன் என்று தவறாக நினைத்த்து விட்டோமே என்று நினைத்து சங்கடப்பட்டாள். ஆயினும் ஒரு நெருடல்.

"அது சரி.  கல்யாணத்துக்குப் பிறகு, உங்கள் பெற்றோர்களைப்  பிரிந்து நாம் தனியாக வாழ  வேண்டும் என்று ஏன் பிடிவாதமாக இருந்தீர்கள்? உங்கள் பெற்றோர் எவ்வளவு வேதனைப்பட்டிருப்பார்கள்?"

"உண்மைதான்.ஆனால் நாம் என் பெற்றோர்களுடன் சேர்ந்து வாழ்ந்திருந்தால், சில சங்கடங்களும், மனவருத்தங்களும்   ஏற்பட்டிருக்கும். உன்னைப்பற்றி எனக்குத் தெரியும். ஆனால் நீ ஒரு பெரிய இடத்துப் பெண் என்ற  உணர்வு என் பெற்றோரிடம் எப்போதும் இருந்து கொண்டே இருந்திருக்கும். நீ இயல்பாகச் செய்கிற செயல்கள் கூடத்  தவறாகத் தோன்றியிருக்கும். எப்படியும் சில மாதங்களுக்குப் பிறகு மனக்கசப்புடன் பிரிய நேரிட்டிருக்கும். அதை விட முதலிலேயே சுமுகமாகப் பிரிவது நல்லது என்று நினைத்தேன். என் பெற்றோருக்குப் பொருளாதார ரீதியில் எந்த சிரமமும் ஏற்படாமல் பார்த்துக்கொண்டு வருகிறேன்."

எப்போதும்  மற்றவர்களின் மனம் வருந்தக்கூடாது என்ற சிந்தனையிலேயே செயல்பட்டு வரும் தன கணவனிடமிருந்து தான் நிறையக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்தாள் கீதா.

(1991ஆம் ஆண்டு எழுதப்பட்டது)

Monday, May 8, 2017

22. சரளா சம்மதிப்பாளா?


முதன் முதலில் சரளாவைப் பார்த்தபோதே ரகுவுக்கு அந்த எண்ணம் வந்து விட்டது.

ஒரு பார்ட்டியில்தான் முதலில் அவளைப் பார்த்தான் ரகு. அவன் நண்பன் பாஸ்கர் அவளை அறிமுகப்படுத்தியபோது, இந்த பாஸ்கருக்கு இவ்வளவு அதிர்ஷ்டமா என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை. உடனேயே கமலாவின் நினைவு வந்து எரிச்சல் ஊட்டியது.

சரளா ஒன்றும் பெரிய அழகி இல்லை. ஏன், அழகு என்று பார்த்தால், சரளாவை விடக் கமலாவுக்கு ஐந்து மதிப்பெண்கள் அதிகமாகவே கொடுக்கலாம்.

ஆனால், அந்தச் சிரித்த முகம், உற்சாகம், இனிமையாகப் பழகும் தன்மை, அவள் உதட்டில் கொஞ்சும் ஆங்கிலம் இவை எல்லாம் சேர்ந்து அவளுக்கு அளிக்கும் கவர்ச்சி இருக்கிறதே......ம்...கமலாவும் இருக்கிறாளே! கடுகடு முகம், கரகரத்த குரல், பல  நாட்கள் தூக்கம் இல்லாதது போல் சோர்வைச் சுமந்து நிற்கும் கண்கள், தெளிவில்லாத குரல், உற்சாகம் இல்லாத தோற்றம்..

கமலாவை நினைத்தால் கொஞ்சம் பாவமாக இருந்தது. என்னதான் அவளைத் தனக்குப் பிடிக்கவில்லை என்பதை அவள் உணரும் அளவுக்கு வெளிப்படுத்தியிருந்தாலும், அவளுக்குக் கிடைக்கப் போகும் அதிர்ச்சி, மறுபுறம் நண்பன் பாஸ்கருக்குத் தான் செய்யப் போகும் துரோகம், இவை இரண்டுக்கும் இடையே சரளா படிந்து வருவாளா என்ற சந்தேகம் ஆகியவற்றுக்கிடையே அவன் மனம் அல்லாடியது.

ஆனாலும் ஒரு நம்பிக்கை இருந்தது.

'பாஸ்கர் ஏதோ பிஸினஸ் பண்ணுவதாக பாவனை செய்து கொண்டு வாழ்க்கையை ஓட்டுகிறான். நானோ பிஸினஸில் நன்கு காலூன்றி நாலு பேர் மதிக்க வாழ்பவன். சரளா புத்திசாலி. பிராக்டிகலாகச் சிந்திப்பவள். நிச்சயம் ஒரு நல்ல முடிவு எடுப்பாள்'

'கமலாதான் பாவம். அவளுக்கு வேறு வழி கூட இல்லை. என்ன செய்வது. அவள் தலைவிதி. அவளுடைய அழகுக்கு, அவளுக்கு  மட்டும் சரளாவின் துடிப்பிலும், புத்திசாலித்தனத்திலும் பாதி இருந்திருந்தால் கூட அவளை மகாராணி மாதிரி வைத்துக் கொண்டிருப்பேனே!'

மதிய உணவுக்கு பாஸ்கர் வீட்டுக்குப் போய் விடுவான் என்று தெரிந்து, அந்த நேரத்தில் பாஸ்கரின் அலுவலகத்துக்குப் போனான். சரளாவைப் பார்த்து சில நிமிடங்கள் பேசியதில் அவள் சம்மதம் தெரிவித்து விட்டாள். அவளைப் பற்றிய ரகுவின் கணிப்பு பொய்க்கவில்லை.

இனிமேல் சரளாதான் அவன் ஆஃபிஸ் ரிசப்ஷனிஸ்ட். கமலாவுக்கு மூன்று மாதம் சம்பளம் கொடுத்து வீட்டுக்கு அனுப்பி விட வேண்டியதுதான்!

(1990ஆம் ஆண்டு எழுதப்பட்டது.)

Sunday, May 7, 2017

21. அவளுக்கும் தமிழ் என்று பேர்!"இவர்தான் என் அப்பா" என்றாள் தமிழ்மொழி.  


அவள் அதைச் சொல்லியிருக்க வேண்டிய அவசியமேயில்லை. சேரன் செங்குட்டுவனைப் போல் அலை அலையாக வளர்ந்து படர்ந்திருந்த 'ராஜபார்ட்' தலைமுடியும் ('சேரன் செங்குட்டுவனை நீ பார்த்திருக்கிறாயா?' என்று கேட்டு மடக்காதீர்கள் - ஏதோ ஒரு சினிமாவில் பார்த்த மாதிரி ஞாபகம்!), நெற்றியில் பெரிதாக இடப்பட்டிருந்த குங்குமத் திலகமும் (கவனிக்கவும் - பொட்டு இல்லை, திலகம்!), மாநகராட்சி துப்புரவாளரின் வேலையைக் கச்சிதமாகச் செய்து கொண்டிருந்த, அடியில் பழுப்புக்  கறை படிந்திருந்த வெள்ளை வேட்டியும், தானும் அந்தப் பொதுச் சேவையில் ஈடுபட முயன்று சில அங்குல இடைவெளியில் தோற்று விட்ட நீண்ட துண்டும் அவரை இனம் காட்டாவிட்டாலும், அவர் ஒரு கையில் எழுத்தாணியைப்  பிடிப்பது போல் பிடித்திருந்த நீள் பேனாவும், மறு கையில் வைத்திருந்த கசங்கிய ஓலைச்சுவடிகளும், அவரது இடது கண் மீது அமர்ந்திருந்த பூதக்கண்ணாடியும், நான் முன்பே கற்பனை செய்து வைத்திருந்த தமிழ்மொழியின் தகப்பனாரை அடையாளம் காட்டி விட்டன.

"வணக்கம்" என்றேன் நான்.

அவர் என்னை கவனிக்காமல், தன் கையிலிருந்த சுவடியை மிகவும் சிரத்தையுடன் சுரண்டிக் கொண்டிருந்தார். எழுத்துக்கள் மறைந்து விட்டன போலும்! சுரண்டினால் எழுத்துக்கள் மேலும் அழிந்தல்லவா போகும்? ஒருவேளை மொத்தமாக அழிந்து விட்டால், தொல்லை விட்டது என்று நிம்மதியாக இருக்கலாம் என்று நினைத்தாரோ என்னவோ!

திடீரென்று அவர் முகம் பிரகாசமானது. வாயிலிருந்து இனம் புரிந்து கொள்ள முடியாத ஒலிகள் வெளிப்பட்டன. எழுத்துக்களைக் கண்டு பிடித்து அவற்றைக் கூட்டி ஒரு வழியாக ஓலைச் சுவடியில் எழுதியிருந்ததைப்  படித்து விட்டார் போலும்!

ஓலைச் சுவடியை உயரத் தூக்கியபடியே "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்!" என்று உரத்த குரலெடுத்துப் பாட ஆரம்பித்து விட்டார்.

நான் கொஞ்சம் பயத்துடனேயே தமிழ்மொழியின் கரத்தை அழுத்தமாகப் பற்றினேன்."தமிழ்! (என்ன ஒரு பெயர் வைத்திருக்கிறார் இந்தப் பச்சைக் கிளிக்கு, செல்லமாகச் சுருக்கிக்  கூப்பிடக்கூட முடியாமல்!) உன் அப்பா ஒரு தமிழ்ப் பைத்தியம் என்று நீ சொன்னபோது, அவருக்குத் தமிழில் அளவு கடந்த ஆர்வம் இருப்பதைத்தான் அப்படிச் சொல்கிறாய் என்று நினைத்தேன். இப்போது அவர் நடந்து கொள்வதைப்  பார்த்தால் நீ சொன்ன தமிழ்ப் பைத்தியம் என்பது, பைத்தியங்களில் ஒரு ரகம் மாதிரி அல்லவா இருக்கிறது!"

"உஸ்ஸ்ஸ்....."  என்றாள் தமிழ்மொழி. ஒரு கணம் சமையற்கட்டிலிருந்து பிரஷர் குக்கரின் சத்தம் வருகிறதோ என்று நினைத்தேன்.

"அப்பாவுக்கு அளவு  கடந்த உற்சாகம் ஏற்பட்டு விட்டால் இந்தப் பாட்டைத்தான் பாடுவார்!" என்றாள் தமிழ் எனக்கு மட்டும் கேட்கும் குரலில்.

இவள் தன் உதட்டில் விரலை வைத்து உஸ்ஸுவதுதான் எவ்வளவு அழகாக இருக்கிறது! 'தமிழ்! இன்னொரு முறை உஸ்ஸேன்!'

என் கவனத்தைத் தமிழ்மொழியிடமிருந்து அவள் தந்தையின் பக்கம் திருப்பியபோது, அவர் என்னையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார்.

"செந்தமிழ்ச் சிங்கமே! யார் நீ?" என்றார். (இவர் பேசுவதுதான் சிங்கம் கர்ஜிப்பதுபோல் இருக்கிறது. ஆனால் என்னைச் சிங்கம் என்கிறார்!)

"உங்களுக்கு ஐம்பது மார்க் சார்" என்று ஆரம்பித்தேன்.

"உஸ்ஸ்ஸ்.."  

உஸ்ஸியது தமிழ் இல்லை. அவள் அப்பா!

"அருள் கூர்ந்து என்னை ஐயா என்றே அழை. ஆங்கிலம் தவிர்த்து அருமைத்தமிழ் பேணுவோம்!" என்றார் அவர்.

"நீங்கள் விரும்பாவிட்டால் நான் விளிக்கவில்லை ஐயா.. " என்றேன் நான். "என் பெயர் செந்தமிழ்ச் சிங்கம் இல்லை, துளசிங்கம்."

"துளசிங்கம்..பைந்தமிழ்ப் பெயர். துளசிங்கம்.. இளசிங்கம்....(போர்க்)கள சிங்கம்.."

"இதென்ன அசிங்கம்?" என்று தமிழ்மொழியின் காதில் மெல்ல ஓதினேன். அவள் தன் விரலை வைத்து என்னை அடக்கினாள் (ஆனால் உஸ்ஸவில்லை!)

"என் வினாவுக்கு நீ இன்னும் விடை பகரவில்லையே! நீ யாவன்?" என்றார் தமிழின் தந்தை. 

'என்ன இது எவன், அவன் என்றெல்லாம் மரியாதை இல்லாமல்.....'

"என் பெயர் துளசிங்கம்."

"அதை முன்பே கூறி விட்டாய் மகனே!"

"நான் உங்கள் மகன் இல்லை, மருமகன் அதாவது வருங்கால மருமகன் " என்று வாய்ப்பை நழுவ விடாமல் என்னையும் என் காதலையும் ஒருங்கே அறிமுகப்படுத்திக் கொண்டேன்.

தமிழ்மொழி திருப்தியுடன் என்னை ஒரு கண்ணால் பார்த்தாள். இன்னொரு கண்ணால் பயத்துடன் தன் தந்தையைப் பார்த்தாள்.

'தமிழ் இப்படி என்னை ஒரு கண்ணாலும், உன் அப்பாவை இன்னொரு கண்ணாலும் பார்க்காதே! நீ அப்படிப் பார்க்கும்போது உன் முகம் பார்ப்பதற்கு மிகவும் கண்றாவியாக இருக்கிறது!'

நான் சொன்னதைக் கேட்டு, அவர் சிறிதும் வியப்பையோ, கோபத்தையோ வெளிப்படுத்தவில்லை. ஒரு பெருமூச்சு விட்டபடியே "ம்...வீரமும், காதலும் தமிழன் உடன்பிறந்தவை!" என்றார்.

என்ன சொல்ல வருகிறார் இவர்? தமிழ்மொழி போன்ற சர்வாதிகாரப் போக்கு கொண்ட ஒரு பெண்ணைக் காதலிப்பதற்கு வீரம் வேண்டும் என்கிறாரா?

"என்னைப்பற்றித் தமிழ்மொழி உன்னிடம் எடுத்து இயம்பியிருப்பாள்!" என்று அவர் தொடர்ந்தார்.

"ஆமாம். சொல்லியிருக்கிறாள். நீங்கள் ஒரு தமிழ்ப்பித்து.. அதாவது தமிழ் மீது உங்களுக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு என்று. பேராசிரியர் மீனாட்சிசுந்தரம் என்றால் தமிழ்ப் புலவர்களிடையே தனிமதிப்பு..."

"தம்பி என்ன சொன்னாய்?" என்று இடைமறித்தார் பேராசிரியர்.

"பேராசிரியர் மீனாட்சி...."

பேராசிரியரின் விழிகள் போர்முரசு கேட்ட வீரனின் விழிகள் போல் சிவந்தன. "தமிழ்மொழி! இதற்குத்தானா உன் தாய் உன்னைப் பத்துத் திங்கள் சுமந்து பெற்றாள்? நான் பதினெட்டு வருடம் உன்னைப் போற்றிப் போற்றி வளர்த்தேன்? (பேராசிரியர் பெரிய ஆள்தான்! சந்தடி சாக்கில் தமிழ்மொழியின் வயதைச்  சில (பல!) வருடங்கள் குறைத்து விட்டார்!) நீ எனக்கு இப்படி ஒரு துரோகம் செய்வாய் என்று நான் கனவிலும் கருதினேனில்லை. "

"என்ன ஆயிற்று?" என்று குறுக்கே பாய்ந்தேன் புரியாமல்.

பேராசிரியர் கண்கள் கலங்க என்னைப் பார்த்தார். "தம்பி! நீ தனித் தமிழில் பெயர் பெற்றிருக்கும் பேற்றினைப் பெற்றிருக்கிறாய். அப்பேற்றைப் பெறாத நான் என் பெயரைக் கன்னித் தமிழில் (ஆமாம் அது என்ன கன்னித் தமிழ்? தமிழ் மிகவும் தொன்மையான மொழி என்கிறார்களே, இன்னுமா அதற்குக் கல்யாணம் ஆகவில்லை?) கயல்விழிக் கட்டழகர் என்று மாற்றி வைத்துக்கொண்டிருக்கிறேன். இவள் என் தூய தமிழ்ப் பெயரை மறைத்து, மறைந்து விட்ட என் பழைய பெயரை மயானத்திலிருந்து மீட்டு மாயை செய்திருக்கிறாள்!"

"அது சரி. அது என்ன கயல்விழிக் கட்டழகர்? கயல்விழி அழகர் என்பதுதானே சரியான மொழிபெயர்ப்பு?"  என்று என் தமிழறிவை வெளிப்படுத்தினேன்.

பேராசிரியரிடம் உற்சாகம் திரும்பி விட்டது. "அங்குதான் நீ தவறு செய்கிறாய். நீ என்ன, பெரும் தமிழ்ப் புலவர்களே செய்யும் தவறு இது! மீனாட்சிசுந்தரம் என்றால் மீனாட்சியை மணந்த சுந்தரம் என்று பொருள். அதாவது கயல்விழியைக் கட்டிக்கொண்ட அழகர். அதனால்தான் கயல்விழிக் கட்டழகர் என்று வைத்துக் கொண்டிருக்கிறேன். புரிகிறதா?" என்றார் பெருமையுடன்.   

பேராசிரியரின் நுண்ணிய சிந்தனையை நான் வியந்தேன். சும்மா இல்லாமல், "ஓ! இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை" என்று என் இலக்கண அறிவை வெளிப்படுத்தினேன்.

பேராசிரியர் என்னை ஒருமாதிரி பார்த்தார். நான் சொன்னது தவறா அல்லது அவருக்கே இந்த இலக்கணக் குறிப்பு சரியாகத் தெரியவில்லையா?    

எதனாலோ பேராசிரியருக்கு என்மீது ஒரு பிடிப்பு ஏற்பட்டு விட்டது. அதனால் என் கைகளுக்கும் அவர் கரங்களுக்குள் விடுவித்துக்கொள்ள முடியாதபடி ஒரு பிடிப்பு ஏற்பட்டு விட்டது!

"தம்பி! இதுவரை வேறு யாரும் என் பெயரின் பொருளைத் தெரிந்து கொள்வதில் இவ்வளவு ஆர்வம் காட்டியதில்லை. இதிலிருந்தே உன் தமிழ்ப்பற்றை நான் புரிந்து கொண்டு விட்டேன். என் லட்சியத்தை நீதான் நிறைவேற்றி வைக்க வேண்டும்" என்றார் உணர்ச்சி ததும்பிய குரலில்.  

ஆகக்கூடி, தமிழ்மொழியின் கழுத்தில் மூன்று முடிச்சுப் போடும் உரிமை எனக்குத்தான்! காரியம் இவ்வளவு சுலபமாகக் கைகூடி விட்ட உற்சாகத்தில் பேராசிரியரின் லட்சியம் என்னவாக இருக்குமோ என்பதைப் பற்றி நான் அப்போது நினைத்துப் பார்க்கவில்லை. 

பெருமிதத்துடன் தமிழ்மொழியைப் பார்த்தேன். அவள் பயத்துடன் க.கட்டழகரைப் பார்த்துக் கொண்டிருந்தாள். இவளுக்கு எதற்கெடுத்தாலும் பயம், எல்லோரிடமும் பயம் - என்னைத் தவிர!

பேராசிரியர் தொண்டையைக் கனைத்துக் கொண்டார். "தம்பி! கரம்பு மலைக் கருணை வள்ளல்  முத்துக்கருப்பண்ணனைப் பற்றி நீ நிச்சயம் செவி மடுத்திருப்பாய்.."   

போச்சு! பேராசிரியர் போராசிரியராக - ஸாரி, அறுவையாசிரியராக உருவெடுத்து விட்டார். 'என் செவி எதையும் மடுக்கவில்லை. இப்போது நான் கொஞ்சம் படுத்தால் தேவலை. ஆளை விடுங்கள் சார், அதாவது ஐயா!' என்று சொல்ல நினைத்து ஆனால் சொல்லாமல் மௌனம் காத்தேன்.

"கடையேழு வள்ளல்களுக்குப் பிறகு, சடையப்ப வள்ளலுக்கு இணையான புகழுடன் வாழ்ந்தவர் அவர். என் முப்பாட்டனாரின் பாட்டனான வரகவி வம்பனை வாழ்நாள் முழுவதும் ஆதரித்த ஆண்தகை அவர்!"

"அவர்கள் இருவருமே இப்போது செத்துப் போய் விட்டார்கள் அல்லவா?" என்றேன் நான் கொட்டாவியை அடக்கியபடி.

"ஆம். அவர்கள் மறைந்துதான் விட்டார்கள். ஆனால் அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த அன்புக்கும் உறவுக்கும் அழியாத சான்றாக வரகவி  வம்பன் படைத்த காவியம் என்றும் அழியாது, அழியவும் விட மாட்டேன்" என்றார் க.கட்டழகர் உணர்ச்சி நிரம்பி வழிந்த குரலில்.

"கவலைப்படாதீர்கள். அழியாத மையினால் அந்தக் காவியத்தைப் பிரதி எடுத்து விடலாம்" என்றேன் நான் ஆறுதலாக.

"அதுதானே முடியவில்லை! முடியாமல்தானே தவிக்கிறேன்!" என்றார் பேராசிரியர் பொருமலுடன். 

"ஏன்?" நான் பொறுமையிழந்து கொண்டிருந்தேன்.  

"அந்தக் காவியம் என்னிடம் இல்லையே! அந்தக் காவியம் எங்கோ மறைந்து விட்டது.  என் முப்பாட்டனாரின் பாட்டனார் வரகவி வம்பன் ஆசுகவியாக மொழிந்ததை, அவர் யாரைப் பற்றிப் பாடினாரோ அந்த வள்ளல்  முத்துக்கருப்பண்ணரே தன் கைப்பட ஓலைச் சுவடியில் எழுதி வைத்ததாக வரலாற்றுச் சான்றுகள் மொழிகின்றன. அந்தச் சுவடிகள் அவர் பின்தோன்றிகளிடம்தான் இருக்க வேண்டும். ஆனால் அவர்களைப் பற்றி எந்த ஒரு குறிப்பும் கிடைக்கவில்லை." 

குறிப்புக் கிடைத்து விட்டால் மட்டும் என்னவாம்? யார் அந்தச் சுவடிகளை அடுப்பில் போட்டு வெந்நீர் வைத்துக் குளித்தார்களோ!

பேராசிரியரின் முகம் இறுகியது. "தம்பி! அந்தக் காவியம் எங்கு மறைந்திருந்தாலும் அதை மீட்டுத் தமிழ் கூறும் நல்லுலகுக்குப் பரிசாக வழங்க வேண்டும். அதுதான் என் வாழ்க்கை லட்சியம்" என்று போர் முழக்கம் போல் அறிவித்தார்.

'வாழ்க்கை லட்சியம்' என்ற வார்த்தைகளைக் கேட்டதும் என் தலையில் யாரோ ஓங்கி அடித்தாற்போல் இருந்தது. 'இவருடைய இந்த வாழ்க்கை லட்சியத்தைத்தான், நான் நிறைவேற்ற வேண்டும் என்று சற்று முன் சொல்லிக்கொண்டிருந்தாரா? அடக்  கடவுளே!

பேராசிரியர் வெளிப்படையாகவே சொல்லி விட்டார் "தம்பி! என் மூதாதை வரகவி வம்பன் எழுதிய அந்த அழியா இலக்கியத்தின் பெயர் 'முத்துக்கருப்பண்ணன் பிள்ளைத்தமிழ்.' அந்த நூலோ அல்லது அதன் நகலோ ஏதாவது நூலகத்திலோ அல்லது வேறு எந்த நபரிடமோ இருக்க வேண்டும் என்று என் உள்ளுணர்வு உரைக்கிறது. நீதான் அதைத் தேடித் கொணர வேண்டும். உன்னால் அது முடியும், முடிய வேண்டும். இதுதான் தமிழ்மொழிக்கு நீ போடப்போகும் பரிசம். (இவர் எந்தத் தமிழ்மொழியைச் சொல்கிறார்?') வெற்றியுடன் வா வீரனே! தமிழ்த்தாய் உனக்குத் துணையிருப்பாள்."

தமிழ்த்தாய் துணையிருப்பாளாமே! தான் சிறுமியாக இருந்தபோதே தன் தாய் இறந்து விட்டதாகத் தமிழ்மொழி என்னிடம் சொல்லியிருக்கிறாளே! இறந்து போனவரின் ஆவியுடன் உரையாடி உதவி கேட்கச் சொல்கிறாரா பேராசிரியர்?     

அது இருக்கட்டும். பேராசிரியர் கொஞ்சம் பசையுள்ளவர், தமிழ் அவர் ஒரே பெண் என்பதால், சீர் செனத்தி என்று கொடுத்து வசதியாகக் கல்யாணம் செய்து கொடுப்பார் என்று பார்த்தால், பழந்தமிழர் வழக்கத்தைப் புதுப்பித்து என்னையே பரிசம் போடச் சொல்லி விட்டாரே!  

நான் ஏமாற்றத்துடன் தமிழ்மொழியைப்பார்த்தேன். அவள் என்னைப் பார்க்க முடியாமல் நீர் மல்கும் கண்களைத் திருப்பிக் கொண்டாள். எப்படியும் என்னால் அவள் அப்பா குறிப்பிட்ட 'காவியத்தைக்' கண்டு பிடிக்க முடியாது, எங்கள் காதல் அவ்வளவுதான் என்று முடிவு செய்து விட்டாள் போலும்!  

'தமிழ்! கலங்காதே! உன் அப்பா கேட்ட அந்தப் பிதற்றல் காவியத்தை எங்கிருந்தாலும் கொணர்வேன். இயலாவிட்டால், உன் அப்பாவை மனநோய் மருத்துவ மனைக்கு அனுப்பி விட்டுப் பரிசம் போடாமல் ஓசியிலேயே உன் கரம் பிடிப்பேன். இது தமிழ்  மேல் - நீ இல்லை, அந்த ஒரிஜினல் தமிழ் மேல் - ஆணை!  

ரண்டு மாதங்கள் தமிழ்நாடு பூராவும் அலைந்து திரிந்ததுதான் மிச்சம். இரண்டு ஜோடிப் புதுச் செருப்புகள் தேய்ந்து மூன்றாவது ஜோடியும் வாங்கியாகி விட்டது.

பல்கலைக் கழக நூலகத்தின் பழங்கால ஏட்டுச் சுவடிப் பகுதி, திருவான்மியூர் உ.வே.சா. நூலகம், தஞ்சை சரஸ்வதி மஹால் என்று எத்தனையோ நூலகங்களில் தேடி விட்டேன். எத்தனையோ பிள்ளைத்தமிழ்களைச் சந்தித்து விட்டேன். ஆனால் இந்த நாசமாய்ப் போன மு.க.பி.த. (முத்துக்கருப்பண்ணன் பிள்ளைத்தமிழ்) மட்டும் எங்கேயும் கிடைக்கவில்லை.  

இந்தச் சனியனைத் தேடி அலைந்ததில் என் அரைகுறைத் தமிழறிவு ஒரு குழப்பமான நிலைக்கு வந்ததுதான் மிச்சம். ஓய்ந்து போய், சலிப்படைந்து, தமிழ்மொழி எனக்குக் கிடைக்காமால் போய்விட்டால், இந்த மூஞ்சியை வேறு இந்தப் பெண் ஏற்றுக்கொள்வாள் என்ற விரக்தியான நிலைக்கு வந்த பிறகுதான், என் நண்பன் மலர்ச்சோலையின் நினைவு வந்தது.

புஷ்பவனம் என்ற பெயரை மலர்ச்சோலை என்று மாற்றி வைத்துக்கொண்டதில் துவங்கி, எல்லாவற்றிலும் அவன் க.கழகரின் இன்னொரு பதிப்புதான்.

இத்தனை நாட்களாக அவன் நினைவு வராமல் போய் விட்டதே! முதலிலேயே அவன் உதவியை நாடியிருந்தால் ஏதாவது தகவல் கிடைத்திருக்குமா என்னவோ!

மலர்ச்சோலையைத் தேடித் போனபோது, குப்பைகளுக்கு நடுவே அவனைக் கண்டுபிடித்தேன். குப்பைகள் அவன் எழுதிக் குவித்த கவிதைகள்!

விஷயத்தைச் சொன்னதும் அவன் பெரிதாகச் சிரித்தான். "இவ்வளவுதானே? இதில் என்ன பிரச்னை? பேராசிரியரோ அந்த நூலைப் படித்ததில்லை. நாமே போலியாக ஒரு நூலைத் தயாரித்துக் கொண்டு போய்க் கொடுத்து, அதுதான் 'மு.க.பி.த' என்று சொன்னால் அவருக்கு என்ன தெரியப் போகிறது?"

அட! எனக்கு இந்த யோசனை தோன்றாமல் போய் விட்டதே! எத்தனை அலைச்சல், எத்தனை செலவு! எல்லாவற்றுக்கும் மேல், எத்தனை நூல்களைப்  படிக்க வேண்டியிருந்தது! வாழ்நாள் முழுவதும் அனுபவிக்க வேண்டிய அறுவையை இந்த இரண்டு மாதங்களில் அனுபவிக்க நேர்ந்து விட்டதே!

"அது சரி. போலியாக ஒரு நூலை எப்படித் தயாரிப்பது?"

"அந்தக் கவலை உனக்கு வேண்டாம். அந்த முத்துக்கருப்பண்ணன் எந்த ஊர், எப்படிப்பட்ட ஆள் என்று மட்டும் சொல்லு. இன்னும் இரண்டு நாளில் 'மு.க.பி.த' என்ற 'காவியத்தை நான்  எழுதிக் கொடுக்கிறேன். என்னிடம் என் தாத்தா காலத்து நோட்டு ஒன்று இருக்கிறது. அதில் சில பக்கங்கள்தான் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. மீதமுள்ள தாள்களை நான் பயன்படுத்திக் கொள்கிறேன். பக்கங்கள் பழுப்பு நிறத்தில் இருப்பதால், பேராசிரியருக்குச் சந்தேகம் வராது." என்றான் மலர்ச்சோலை.

சொன்னபடியே, இரண்டு நாட்களில் நூலை எழுதியும் கொடுத்து விட்டான்.

மிழ்மொழிக்குப் பரிசம் போடப் போகும்போது வெறும் கையுடன் போகலாமா? அட, ஒரு வெற்றிலை பாக்குப் பழத்துடன் இந்த 'மு.க.பி.த'வை வைத்துக் கொடுக்கலாம் என்றால் கூட, கையில் அதற்குக் கூடக் காசில்லை. 

காசுக்கு என்ன வழி என்று யோசித்தபோது, பரண்மீது தூசியால் முழுவதும் மறைக்கப்பட்டிருந்த பழைய பேப்பர்கள் கண்ணில் பட்டன. இடத்தை அடைக்கிறதே என்று எப்போதோ  மேலே தூக்கிப் போட்டது இப்போது உதவப் போகிறது!

மேலிருந்து அவற்றை எடுத்துத் தூசி தட்டினேன். மக்கும் நிலையில் இருந்த அவற்றைப் பழைய பேப்பர் கடையில் வாங்கி கொள்வார்களா?

எரிச்சலாக வந்தது. எரிச்சல் அனைத்தும் பேராசிரியர் மேல் திரும்பியது. அவர் மட்டும் இதை மு.க.பி.த இல்லை என்று சொல்லி விடட்டும். இரண்டு மாதம் சுற்றி அலைந்ததற்கு டிராவலிங் அலவன்ஸ், கண்டதையெல்லாம் படித்து அறுவையை அனுபவித்ததற்கு அறுவை மற்றும் பொறுமை அலவன்ஸ் என்று அவரிடம் கறந்து விட வேண்டியதுதான்!

வாசலில் காலடியோசை கேட்டது.

எதிர்பாராத மகிழ்ச்சி! பேராசிரியரும் அவர் பெற்ற திருமகளும் என் வீடு தேடி வந்து விட்டார்களே!

அடேயப்பா  இரண்டு மாதத்தில் இன்னும் இரண்டு சுற்றுப் பெருத்து விட்டாளே  இவள்! (ஏற்கெனவே பல சுற்று இருந்தவள்!) தலைவனைப் பிரிந்தால், தலைவி கைவளைகள் நழுவி விழும் அளவுக்கு இளைக்க வேண்டும் என்பதல்லவா தமிழ்ப் பெண்ணின் இலக்கணம்? அப்படியானால், இவள் தமிழ்ப்பெண் இல்லையா? அல்லது இதெல்லாம் தமிழ்ப் புலவர்கலின் 'கப்ஸாவா?'

"வெற்றியுடன் திரும்பினாயா வீரனே?" என்றார் பேராசிரியர் என் எரிச்சலைக் கிளப்பும் வகையில்.

மலர்ச்சோலை எழுதிக் கொடுத்த டூப்ளிகேட் மு.க.பி.தவை எடுத்து அவர் கையில் கொடுப்பதற்குள், நான் பரணிலிருந்து இறக்கிய குப்பையைப் பார்த்து விட்டு அதைக் கிளறத் தொடங்கினார்.

ஏற்கெனவே மக்கிப்போயிருந்த காகிதங்கள் அவர் கைபட்டுப் பொடிப்பொடியாக நொறுங்கி விடப் போகின்றனவே என்று பயந்து நான் அவரைத் தடுப்பதற்குள், அவர் ஒரு தாளை எடுத்துப் பார்த்து விட்டு, "இதுதான், இதேதான்!" என்று ஆர்க்கிமிடிஸ் போலக் கூவினார்.

சரிதான். இவரைக் கீழ்ப்பாக்கத்துக்கு அனுப்புவதில் ஒன்றும் சிரமம் இருக்காது!

"தம்பி  நான் நினைத்ததை நீ முடித்து விட்டாய். நான் கேட்டதை நீ கொடுத்து விட்டாய். நீ வள்ளலிலும் வள்ளல். இதுதான் நான் கேட்ட பிள்ளைத்தமிழ்!"

"இதுவா?" என் எரிச்சல் உற்சாகமாக மாறியது.

"இதுவேதான். இது எங்கே கிடைத்தது?"

அது நீண்ட காலமாக என் வீட்டுப் பரணில் இருந்ததாக நான் சொன்னதும், பேராசிரியர் கூரைக்கும் பூமிக்குமாகக் குதித்து டார்வினின் பரிணாமத் தத்துவத்தை 'டெமான்ஸ்ட்ரேட்' செய்து காட்டினார்.

'அப்படியானால், கரம்பு மலைக் கருணை வள்ளல் முத்துக்கருப்பண்ணன் பரம்பரையில் வந்தவனா நீ?" என்றார் வியப்புடன். 

"அப்படியா?" என்றேன். யார் கண்டார்கள் கரம்பு மலையையும், முத்துக்கருப்பண்ண வள்ளலையும்!

"என்ன விந்தை! எப்படியோ வரகவி வம்பனின் பரம்பரையும், அவருக்கு வாழ்வளித்த வள்ளலின் பரம்பரையும் திருமண உறவால் இணைந்து விட்டனவே!"

திருமண உறவு என்று பேராசிரியர் கூறியது என் காதில் தேன் பாய்ந்தது போல் இருந்தது. (அப்படித்தானே சொல்ல வேண்டும்?). அப்பாடா! அவருக்குப் பிள்ளைத்தமிழ் கிடைத்து விட்டது. எனக்கும் பெண்தமிழ் கிடைத்து விட்டாள்!

பேராசிரியர் மு.க.பி.தவைச் சுவைக்க ஆரம்பித்தார்.

கொத்துக் கொத்தாய்க் கொத்தவரை காய்க்கும் 
           சித்தர் வாழ்க் கரம்பு மலையில் 
சத்தான தமிழ்ப் பற்றில் பித்தான - வள்ளல் 
           முத்துக்கருப்பண்ண முத்தே நீ வாழி!

கவிதையைச் சுவைத்த உற்சாகத்தில் பேராசிரியர்,

"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் 
இனிதாவதெங்குங் காணோம்!" 

என்று உரக்கக் கூவினார்.

பேராசிரியரின் கூற்றின் உண்மையைச் சோதிக்க என் கைகள் கட்டழகர் பெற்ற கட்டழகியை நோக்கி நீண்டன.                                                                                                                    
(1982 ஆம் ஆண்டு எழுதப்பட்டது)


Saturday, September 17, 2016

20. இரண்டு கொலை ஒரு விடுதலை

 "இந்தச் செய்தியைப் பார்த்தீர்களா?" என்றான் ராம்கி.

ஆனந்த், ராம்கியிடமிருந்து பேப்பரை வாங்கிப் பார்த்தான்.

ரசிகர் தற்கொலை 
பிரபல நடிகை நளினாவின் மர்மச்  சாவைத் தொடர்ந்து அவரது மற்றொரு ரசிகர் நேற்று இன்னமும் கட்டி முடிக்கப்படாத ஒரு கட்டிடத்தின்  மொட்டை மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு முன்பே ஒரு பெண் ரசிகை தன் அபிமான நடிகையின் மறைவைத் தாங்க முடியாமல் தூக்கு மாட்டிக்கொண்டு இறந்தது தெரிந்ததே. நளினாவின் மறைவைத் தொடர்ந்து நிகழ்ந்த இரண்டாவது தற்கொலை ஆகும் இது.

"இதைப்  பற்றி என்ன நினைக்கிறீர்கள்" என்றான் ராம்கி.

"விவரமாக ஒன்றும் போடவில்லையே! இறந்தவர் ஆண் என்பதால் அவர் புகைப்படத்தைக் கூடப்  பிரசுரிக்கவில்லை! நடிகையின் மரணத்தை மர்மச்சாவு என்பதும், மற்ற இரண்டு மரணங்களையும் தற்கொலை என்று எழுதுவதும், புலன் விசாரணைக்கு முன்பே, அனுமானத்தின் அடிப்படையில், இவர்கள் ஒரு முடிவுக்கு வந்து விட்டதைத்தான் காட்டுகிறது."

"ஒரு பிரைவேட் டிடக்டிவ்  என்ற முறையில் நளினாவின் மரணத்தைப் பற்றி நீங்கள் ஆராய்ந்து வருகிறீர்களே, உங்கள் விசாரணையில் ஏதாவது முன்னேற்றம் உண்டா?"

"இல்லை. ஒன்றும் நிச்சயமாகச்  சொல்ல முடியவில்லை. போலீஸ் தரப்பில் தற்கொலை என்று சொல்லி விடுவார்கள் போலிருக்கிறது. வேறு மாதிரி நினைப்பதற்கான தடயம் எதுவும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை."

" உங்களுக்குக் கிடைத்திருக்கிறதா?"

"போலீசுக்கே கிடைக்காதபோது எனக்கு எப்படிக் கிடைக்கும்? அவர்கள் இடத்தைக் காலி செய்த பிறகுதானே நான் அங்கு போனேன்!  நளினாவின் அண்ணன் வற்புறுத்தியதால்தான் இந்தக் கேஸை எடுத்துக் கொண்டேன். அவர் என்னவோ ரொம்பப் பிடிவாதமாக இது கொலைதான் என்று நம்புகிறார். போலீசில் இதை ஒரு தற்கொலை என்று முடிவு செய்து கேஸை முடித்து விடுவார்கள் என்று  பயந்துதான் என்னிடம் வந்தார்."

"ஜனங்கள் கொலை என்றுதான் பேசிக்கொள்கிறார்கள்."

"ஒரு இயல்பான சாவைக் கூட கொலை என்று சொல்வதில்தான்   ஜனங்களுக்கு ஒரு எக்ஸைட்மென்ட் இருக்கும். ஜனங்கள் பேசிக்கொள்வதை வைத்து நாம் எந்த முடிவுக்கும் வர முடியாது. எனக்கு வேண்டியவை தடயங்களும், உண்மையும்தான்."

"உங்களுக்கு ஆட்சேபணை இல்லாவிட்டால், இந்தக் கேஸில் இதுவரை நீங்கள் ஆராய்ந்து கண்டுபிடித்த விஷயங்களை என்னிடம் பகிர்ந்து கொள்ள முடியுமா?"

தன்னுடைய அலுவலகம் இருக்கும் அதே கட்டிடத்தில் இருக்கும் இன்னொரு  அலுவலகத்தில் டைப்பிஸ்டாகப் பணி புரியும் அந்த இளைஞனுக்கு, துப்புத் துலக்குவதில் உள்ள ஆர்வத்தையும், தன்னிடம் இருக்கும் மதிப்பையும் நினைத்துக் கொஞ்சம் பெருமைப்பட்டுக் கொண்டான் ஆனந்த். 'இவன் கூட நாளை ஒரு பெரிய டிடக்டிவாக வரலாம், யாருக்குத் தெரியும்?'

"ஓ, சொல்கிறேன். அதற்கு முன்னால் நளினாவைப்பற்றி நீ என்ன நினைக்கிறாய் என்பதைக் கொஞ்சம் சொல். அந்தப் பின்னணியை வைத்துக் கொண்டு நான் மேலே சொல்கிறேன்."

"உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், கடந்த இரண்டு வருடங்களாக, என்னுடைய எல்லா இரவுகளும் 'அவளோடராவுகள்'தான்* - கனவுகளில்! சினிமா ரசிகர்கள் எல்லோருக்குமே அவர்தான் கனவுக்கன்னி. அழகு, எளிமை, திறமை மூன்றும் அபூர்வமாக இணைந்திருந்த அற்புத நடிகை அவர். குறுகிய காலத்திலேயே, நடிப்பில் பல சிகரங்களை அனாயாசமாகத் தொட்டு விட்டார். இவ்வளவு சீக்கிரம் இப்படி ஒரு முடிவு அவருக்கு வந்திருக்க வேண்டாம். கனவுகள் எல்லாம் பாதியிலேயே கலைந்து விட்டன."

"சரி. நளினாவின் திருமணத்தைப்பற்றி என்ன நினைக்கிறாய்?'

"அது திருமணமே இல்லை சார்! அது ஒரு மோசடி. அந்த ரத்னசபாபதிதான் நளினாவைத் தான் இயக்கிய படத்தில் அறிமுகப்படுத்தினார். அதற்குப் பிறகும் பல படங்களில் வாய்ப்புக் கொடுத்து அவரை ஒரு பெரிய நடிகையாக உருவாக்கினார். ஆனால் திருமண வயதில் மகன், மகள் எல்லாம் உள்ள அந்த அறுபது வயதுக் கிழவரை நளினா திருமணம் செய்து கொண்டதை யாராலும் ஜீரணிக்க முடியவில்லை. அவர் என்னவென்றால் நளினாவுக்காகத் தான் தன்  குடும்பத்தையே துறந்து விட்டு வந்ததாகப் பெரிய தியாகி போலப் பேசுகிறார்! திருமணத்துக்கு ஆறு மாதம் முன்பு, ஒரு விழாவில், நளினா ரத்னசபாபதியைத் தன் திரையுலகத் தந்தை என்று வர்ணித்தார்.அவரும் ஒரு குழந்தையைத் தூக்குவது போல் நளினாவைத் தூக்கித் தோளில் வைத்துக்கொண்டு போஸ் கொடுத்தார். ஆனால் ஏதோ நடந்து விட்டது. நளினாவை மிரட்டித்தான் அவரைத் திருமணத்துக்கு ஒப்புக்கொள்ள வைத்திருப்பார் என்றுதான் பலரும் நினைக்கிறார்கள்."

"ரைட். நளினாவின்  அண்ணன் ரமேஷ்பாபுவும் இப்படித்தான் சொல்கிறார். சரி. சம்பவம் நடந்த அன்றைக்கு வருவோம். இரவு ஷூட்டிங்கில் இருந்து காலை ஏழு மணிக்கு நளினா வீடு திரும்பியிருக்கிறார். சமையற்காரி ஃபிளாஸ்க்கில் காப்பி கொண்டு வந்து வைத்திருக்கிறார். நளினாவுக்கு அடிக்கடி காப்பி குடிக்கும் பழக்கம் உண்டு. அத்துடன் அவர் தனிமையை விரும்புபவர். அதனால் அடிக்கடி சமையற்காரி நளினாவின் அறைக்கு வருவதைத் தவிர்க்கவே  ஃபிளாஸ்க்கில் காப் பி வைக்கும் ஏற்பாடு. நளினா  காப்பியைக் கொஞ்சம் ருசி பார்த்து விட்டு, காப்பி கழுநீர் மாதிரி இருப்பதாகக் கோபமாகப் பேசி சமையற்காரியை வீட்டுக்குப் போகச் சொல்லியிருக்கிறார். சமையற்காரி தயங்கியபோது, "உன் மூஞ்சியைப் பார்க்கவே எனக்குப் பிடிக்கவில்லை. இரண்டு நாள் லீவ் எடுத்துக்கொள். சமையலை நான் பார்த்துக்கொள்கிறேன்." என்று கத்தியிருக்கிறார். சமையற்காரி வேறு வழியில்லாமல் வீட்டுக்குப் போய் விட்டாள். வீட்டில் வேறு வேலைக்காரி கிடையாது. வீட்டு வேலை முழுவதையும் அந்த சமையற்காரிதான் பார்த்துக்
கொண்டிருந்தாள். பன்னிரண்டு மணிக்கு ரத்னசபாபதி வந்து பார்த்தபோது  நளினா இறந்து கிடந்தார் என்பது அவருடைய வாக்குமூலம். ஃபிளாஸ்குக்குக் கீழே நளினாவின் கையெழுத்தில் தன் மரணத்துக்கு யாரும் பொறுப்பில்லை என்றும், தான் தற்கொலை செய்து கொள்வதாகவும் எழுதியிருந்த கடிதம். தற்கொலைக்கான காரணம் எதுவும் குறிப்பிடப்படவில்லை.  ஃபிளாஸ்க்கில் மீதியிருந்த காப்பியை சோதனை செய்து பார்த்ததில், அதில் 'பினோபார்பிடோன்' என்ற தூக்க மாத்திரை கலந்திருந்தது தெரிந்தது. ஃபிளாஸ்க்கின் அடியில் மாத்திரைத் துகள்கள் கொஞ்சம் கரையாமல் இருந்தன. நளினாவுக்குத் தூக்க மாத்திரை உபயோகிக்கும் பழக்கம் உண்டு. விரும்பிய நேரத்தில் தூங்க வேண்டும் என்பதற்காக டாக்டரிடம் கேட்டுத் தூக்க மாத்திரைகள் வாங்கி வைத்திருந்தார். அவர் அவற்றை அதிகம் பயன்படுத்துவதில்லை. ஆனால் அவர் அறையிலிருந்த தூக்க மாத்திரை பாட்டிலில் இருந்துதான் மாத்திரைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. பாட்டிலில் நளினாவின் கைரேகை மட்டும்தான் இருக்கிறது."

"அப்படியானால் திட்டமிட்டே சமையற்காரியை வீட்டுக்கு அனுப்பி விட்டு, நளினா  காப்பியில் தூக்க மாத்திரையைக் கலந்து அருந்தியிருக்கிறார் என்றுதானே தோன்றுகிறது?"

"அப்படித் தோன்ற வேண்டும் என்பதற்காகத்தான் இப்படிப்பட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது!"

"எனக்கு ஒன்றும் பிடிபடவில்லை சார்! இது ஒரு தற்கொலை என்பதில் என்ன சந்தேகம் இருக்க முடியும்?'

"போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டின்படி, நளினா எட்டு மணியிலிருந்து பத்து மணிக்குள் தூக்க மாத்திரையை உட்கொண்டிருக்கிறார். நிச்சயமாக .எட்டு மணிக்கு முன்னால் இல்லை. அப்படியானால், ஏழு மணிக்கு வேலைக்காரியை அனுப்பிய நளினா எட்டு மணி வரை ஏன் தாமதித்திருக்க வேண்டும்?"

"ஒரு வேளை தற்கொலை செய்து கொள்ளலாமா, வேண்டாமா என்று அவர் சற்று நேரம் யோசித்திருக்கலாம்."

"பாஸிபிள். மாத்திரையை அப்படியே விழுங்காமல் ஃபிளாஸ்க்கில் இருந்த காப்பியில் கலந்து ஏன் அருந்த வேண்டும்?"

"ஒரு மாத்திரை என்றால் அப்படியே விழுங்கி விடலாம். ஐந்தாறு அல்லது ஏழெட்டு மாத்திரைகளை அப்படியே விழுங்குவது கஷ்டம் ஆயிற்றே!"

"இந்த விளக்கமும் பொருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனால் வேறு யாரோ காப்பியில் மாத்திரையைக் கலந்திருக்கலாம் என்ற சந்தேகத்தையும் இது எழுப்புகிறது அல்லவா? மாத்திரையை தம்ளரில் கரைக்காமல் ஃபிளாஸ்க்கில் ஏன் கரைக்க வேண்டும்? அப்புறம், அந்தக் கடிதம்!"

"அதற்கென்ன? அது நளினாவின் கையெழுத்து இல்லையா?"

"அவள் கையெழுத்துதான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. கையெழுத்து நிபுணர்கள் கூட இதை உறுதி செய்து விட்டார்கள். ஆனால், கடிதத்தில் காப்பி சிந்தியதால், 'நளினா' என்ற கையெழுத்தில் முதல் இரண்டு எழுத்துக்கள் அழிந்து 'னா' மட்டும்தான் மிஞ்சி இருக்கிறது. அத்துடன்..."

"அத்துடன்?"

"இல்லை. அதை அப்புறம் சொல்கிறேன். கையெழுத்துப் போட்ட இடத்தில் மட்டும் காப்பி சிந்தி முதல் இரண்டு எழுத்துக்கள் அழிந்திருப்பதை என்னால் இயல்பாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. இன்னொரு விஷயம். நளினாவின் மேஜையின் மீது இருந்த மூன்று பேனாக்களில் எவற்றின்   இங்க்குமே  கடிதம் எழுதப்பட்ட  இங்க்குடன் ஒத்துப்போகவில்லை."

"ஒருவேளை கடிதத்தை வெளியிலிருந்து எழுதி எடுத்து வந்திருக்கலாம் இல்லையா?"

"பொதுவாக, தற்கொலை செய்து கொள்பவர்கள், தற்கொலை செய்து கொள்ளப்போகும் முன்புதான் கடிதம் எழுதுவார்கள். கடிதத்தை முன்பே எழுதி வைக்க வாய்ப்பு இல்லை. அப்படி எழுதி வைத்திருந்தால் அது யார் கண்ணிலாவது பட்டு விடக்கூடிய அபாயம் இருக்கிறது. தற்கொலை செய்து கொள்பவர்கள் இப்படிப்பட்ட ரிஸ்க் எடுக்க மாட்டார்கள். மேலும், இரண்டு வரிக் கடிதத்தைக் கடைசி நேரத்தில் எழுதுவது ஒன்றும் கடினம் இல்லையே! அதை ஏன் முன்பே எழுதி வைத்திருக்க வேண்டும்?"

"ஒருவேளை ஸ்டூடியோவில் தற்கொலை செய்து கொள்ள நினைத்துக் கடிதம் எழுதிய பிறகு, ஏதோ ஒரு காரணத்தினால் தற்கொலை செய்து கொள்ள முடியாமல் போயிருக்கலாம்."

"ஒவ்வொரு சந்தேகத்துக்கும் நீ விளக்கம் சொல்வதைப்  பார்த்தால், நீதான் நளினாவைக் கொலை செய்திருப்பாயோ என்று தோன்றுகிறது. அதனால்தான் இதைத் தற்கொலை என்று சாதிக்க முயல்கிறாயா?"

"சார்!"

"பயப்படாதே! விளையாட்டுக்குச் சொன்னேன். பொதுவாக, தவறு செய்தவர்கள்தான் இது போன்ற சந்தேகங்களுக்கெல்லாம் விளக்கம் கொடுக்க முயல்வார்கள். ஆனால் இது போன்ற விளக்கங்கள் உண்மையாக இருந்தாலும் இருக்கலாம்!"

"சார், இது ஒரு கொலையாக இருந்தால்தான் எனக்கு இதில் ஒரு ஆர்வம் இருக்கும். தற்கொலை என்று முடிவானால் சப்பென்று போய் விடும்!"

"பார்க்கலாம். உன் ஆர்வத்துக்காகவாவது இது ஒரு கொலையாகவே இருக்கும் என்று நம்புவோம்!"

"கைரேகைகள் ஏதாவது கிடைத்தனவா சார்?"

"ஃபிளாஸ்க்கிலும், தம்ளரிலும் நளினா, சமையற்காரி ஆகிய இருவரின் கைரேகைகள் மட்டுமே இருக்கின்றன. அறைக்குள் ரத்னசபாபதி உட்படப் பலரின் கைரேகைகள் இருக்கின்றன. நளினா தன் வீட்டுக்கு வருபவர்களைத் தன் அறைக்குள் அழைத்துப் பேசும் வழக்கம் கொண்டவர் என்பதால் இதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை."

"நீங்கள் என்ன சார் நினைக்கிறீர்கள்? இது தற்கொலைதானா?"

"வெல். எனக்கு இது தற்கொலையாக இருக்காது என்று தோன்றியதால்தான் நளினாவின் அண்ணன் கேட்டுக்கொண்டபடி இந்தக் கேஸை எடுத்துக்  கொண்டேன். இது கொலையாக இருக்கலாம் என்பதற்கான சந்தேகங்கள் இருக்கின்றனவே தவிர, இதுவரை வேறு தடயமோ, சாட்சியமோ கிடைக்கவில்லை. ரத்னசபாபதி மீது சந்தேகம் வருவது இயற்கை. ஆனால் அவர்தான் நளினவைக் கொலை செய்தார் என்பதை நிரூபிப்பது இம்பாஸிபிள் - கொலையைக் கண்ணால் பார்த்த சாட்சி யாராவது இருந்தால் ஒழிய! ஆனால் இப்போது உன்னிடம் பேசியதில் எனக்கு ஒரு க்ளூ கிடைத்திருக்கிறது. அதை வைத்து முயற்சி செய்யப்போகிறேன்."

"என்னிடம் பேசியதை வைத்தா? அது என்ன சார் க்ளூ? உங்களிடம் பேசியபிறகு, எனக்குக் குழப்பம்தான் அதிகமாகி இருக்கிறது?"

"அப்படித்தான் இருக்க வேண்டும்! கதைகளில் எல்லாம் அப்படித்தானே வருகிறது? ஒவ்வொரு உரையாடலின்போதும் துப்பறிபவருக்கு எதாவது க்ளூ கிடைக்கும். அவருடைய உதவியாளர் அல்லது நண்பருக்குக் குழப்பம்தான் மிஞ்சும்!"

"என்ன க்ளூ சார் அது? நான் அதைத் தெரிந்து கொள்ளலாமா?'

"அந்த க்ளூவைக் கொடுத்ததே நீதானே? நீ என்னவெல்லாம் சொன்னாய் என்று நினைத்துப் பார்த்தால் உனக்கே அது விளங்கும். சரி, நான் இப்போது நளினாவின் வீட்டுக்குப் போகிறேன். நீயும் வருகிறாயா?"

"ஓ எஸ்." என்றான் ராம்கி உற்சாகமாக. "அங்கே எதாவது தடயம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறீர்களா?'

"அப்படி எதுவும் கிடைக்க வாய்ப்பு இல்லை. போலீஸ் அங்கே ஒரு தூசியைக் கூட விட்டு வைத்திருக்க மாட்டார்கள். ஆனால் கொலை நடந்த இடத்தைப் போய்ப் பார்ப்பதில் எதாவது பலன் கிடைக்கலாம். நம்மை அறியாமலேயே சில எண்ணங்கள் நமக்குத் தோன்றலாம். உனக்கு எதாவது தோன்றினால், அதை என்னிடம் சொல். அதற்குத்தான் உன்னை அழைத்துப் போகிறேன்" என்றார் ஆனந்த்.

"எனக்கென்ன சார் தெரியும்? உங்களுக்குத் தெரியாதது என்ன எனக்குத் தெரியப்  போகிறது?"

"அப்படி இல்லை. நாம் இருவரும் ஒரு வீட்டுக்குப் போகிறோம். அங்கே சில நிமிடங்கள் இருந்து விட்டு வெளியே வருகிறோம். வீட்டுக்குள் நாம் என்ன பார்த்தோம் என்று நாம் இருவரும் தனித் தனியே ஒரு பட்டியல் போட்டால், என் பட்டியலில் இல்லாத சில பொருட்கள் உன் பட்டியலில் இருக்கும். அதாவது நான் கவனிக்காத சில விஷயங்களை நீ கவனித்திருக்கலாம். இப்போது கூட யதார்த்தமாக நீ சொன்ன ஒரு விஷயம்தான் எனக்கு க்ளூவாகத் தோன்றியது."

"அது என்ன வென்று சொல்ல மாட்டீர்கள். சரி விடுங்கள். ஆனால் நளினாவின் வீட்டில் போலீஸ் ஒரு தூசியைக் கூட விட்டு வைத்திருக்க மாட்டார்கள் என்று சொன்னீர்களே? "

"ஆமாம். ஆனால் அந்த அறை, மேஜை, கட்டில், மற்ற விஷயங்கள் எல்லாம் அப்படியேதானே இருக்கும்? அவற்றைப் பார்த்தால் எதாவது தோன்றலாம். ஏன், நளினாவின் ஆவி கூட அங்கே இருக்கலாம்!"

"அப்படி இருந்தால் கவலையே இல்லை. என்ன நடந்தது என்று அந்த ஆவியிடமே கேட்டுத் தெரிந்து கொண்டு விடலாமே!"

"என்ன பிரயோசனம்? ஆவியால் கோர்ட்டில் வந்து சாட்சி சொல்ல முடியாதே!"

ளினாவின் அறையில் விசேஷமாக ஒன்றும் இல்லை. ஆனந்த் ராம்ஜியிடம் சம்பவம் நடந்த தினத்தன்று இருந்த அமைப்பை விளக்கினான்.

"உனக்கு ஏதாவது வித்தியாசமாகத் தென்படுகிறதா பார்!"

"அப்படி எதுவும் தெரியவில்லை. இதற்கு முன்னால் இந்த அறையை நான் பார்த்ததில்லையே! ஜன்னல் கண்ணாடிதான்  புதிதாக இருக்கிறது" என்றான் ராம்ஜி.

ஆனந்த் விரலைச் சொடுக்கினான். 'இதை ஏன் யாரும் கவனிக்கவில்லை?' இது எந்த விதத்தில் புதிரை விடுவிக்கும் என்று அவனுக்குப் புலப்படாவிட்டாலும், சிக்கலின் பிரதான முடிச்சு தன் விரல்களுக்குள் சிக்கி விட்டதாக அவனுடைய உள்ளுணர்வு கூறியது.

ரண்டு நாட்கள் கழித்து ஆனந்தின்  வீட்டில் அந்தச் சிறிய மாநாடு நடந்தது. ஆனந்த், ராம்கி, நளினாவின் அண்ணன் ரமேஷ் பாபு, நளினாவின் கணவர் ரத்னசபாபதி ஆகிய நால்வர் அங்கே குழுமியிருந்தனர்.

"மிஸ்டர் ரமேஷ் பாபு! உங்கள் தங்கையின்  மரணம் கொலையா, தற்கொலையா என்று நான் சொல்வதற்கு முன்,  நான் எப்படி இந்த முடிவுக்கு வந்தேன் என்று சொல்லி விடுகிறேன். இருட்டில் துழாவிக் கொண்டிருந்த எனக்கு ஒரு சிறிய வெளிச்சத்தைக் காட்டியது இந்த ராம்கிதான்" என்று ஆரம்பித்தான்  ஆனந்த்.

"சார்!" என்றான் ராம்கி எதுவும் புரியாமல்.

"குறுக்கே பேசுவது எனக்குப் பிடிக்காது" என்று சிரித்துக்கொண்டே சொன்ன ஆனந்த் தொடர்ந்தான். "நளினாவின் அறைக்கு நானும் ராம்கியும் சென்று பார்த்தபோது, ராம்கிதான் அந்த அறையின் ஜன்னல் கண்ணாடி புதிதாகப் போடப்பட்டிருப்பதை கவனித்துச் சொன்னான். அதைக்கேட்டதும் வழக்கின் முடிச்சு அவிழ்ந்து விட்டதாக என் உள்ளுணர்வு கூறியது. மிஸ்டர் ரத்னசபாபதியை நான் இது பற்றிக் கேட்டபோது, அவர் தனக்கு எதுவும் தெரியாது என்று சொல்லி விட்டார்."

"அது உண்மைதான், மிஸ்டர் ஆனந்த்" என்று இடைமறித்தார் ரத்னசபாபதி. "இது போன்ற விஷயங்களையெல்லாம் நளினாதான் கவனித்துக் கொண்டிருந்தாள். வீட்டில் என்ன ரிப்பேர் வேலைகள் நடக்கின்றன என்று கூட நான் கவனிப்பதில்லை."

"உங்கள் கூற்றை நான் சந்தேகிக்கவில்லையே!" என்றான் ஆனந்த். "நீங்கள் அப்படிச் சொன்னதும், நான் நளினாவின் டைரி, ஃபைல்கள், கணக்குப் புத்தகங்கள் ஆகியவற்றைப் பார்த்தேன். உடைந்து போன ஜன்னல் கண்ணாடியை மாற்றுவதற்காக 'டோர்ஸ்டெப் சர்வீசஸ்' என்ற நிறுவனத்தை அவர் அணுகியிருக்கிறார் என்று தெரிந்தது. அந்த நிறுவனத்தில் விசாரித்ததில், நளினா இறந்த தேதியில்தான் கண்ணாடி மாற்றப்பட்டிருக்கிறது என்று தெரிந்தது. கண்ணாடியை மாற்றச் சொல்லி பரமசிவம் என்ற கான்ராட்க்ட்  தொழிலாளியிடம் சொல்லியிருக்கிறார்கள். அவன் காலை ஏழு மணிக்கே கண்ணாடியை மாற்றி விடுவதாகச் சொல்லி, முதல் நாள் மாலையே நிறுவனத்துக்கு வந்து கண்ணாடியை வாங்கிச் சென்றிருக்கிறான்.

" 'நளினாவின் மரணம் ஒரு கொலை என்றால் அதை நிரூபிக்கக் கண்ணால் பார்த்த சாட்சி யாராவது இருந்தால்தான்  முடியும்' என்று நான் ராம்கியிடம் விளையாட்டாகச் சொன்னேன். உண்மையாகவே ஒரு சாட்சி கிடைத்து விட்ட உற்சாகத்தில் பரமசிவத்தின் விலாசம் கேட்டபோது, இன்னொரு அதிர்ச்சித் தகவல்! இரண்டு நாட்கள் முன்பு, நளினாவின் ரசிகர் ஒருவர் ஒரு புதிய கட்டிடத்தின் மொட்டை  மாடியிலிருந்து  கீழே குதித்துத் தற்கொலை செய்து கொண்டதாக ஒரு செய்தி வெளியானதே, அந்த 'ரசிகர்'தான் பரமசிவம்!

"பரமசிவத்தின் 'தற்கொலை'க்கு என்ன காரணம் என்று கண்டுபிடிக்க வேண்டிய வேலையும் என் தலையில் விழுந்து விட்டது. நளினாவின் கொலையை பரமசிவம் நேரில் பார்த்திருக்கக் கூடும் என்பதால், அவன் கூடக்  கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று எனக்குத் தோன்றியது. நளினாவின் மரணத்தினால் மனமுடைந்துதான் பரமசிவம் தற்கொலை செய்து கொண்டிருப்பான் என்பதை நான் நம்பத் தயாராக இல்லை. முதலில் பரமசிவம் நளினாவின் ரசிகன் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை."

"ஏன் இல்லை? அவன் பர்ஸில் நளினாவின் புகைப்படம் இருந்ததே!" என்றார் ரத்னசபாபதி.

"உங்களுக்கு எப்படித் தெரியும்?"

"ம்ம்.. அதுதான் பத்திரிகைகளில் போட்டிருந்தார்களே!"

"ஓ! சரி. ஆனால் நான் விசாரித்துப் பார்த்ததில், பரமசிவத்தைத் தெரிந்தவர்கள் யாருமே அவனை நளினாவின் ரசிகன் என்று சொல்லவில்லை. அதுவும் நளினாவின் மரணத்தினால் பாதிக்கப்பட்டு, தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்குப் போகக்கூடியவன் என்று யாரும் நம்பவில்லை. அதனால் பரமசிவத்தின் மரணம் ஒரு கொலையாகத்தான் இருக்க வேண்டும், அவன் கொலை செய்யப்பட்டதற்குக் காரணம் அவன் நளினாவின் கொலையை நேரில் பார்த்ததுதான் என்ற முடிவுக்கு நான் வந்தேன்."

"அப்படியானால் நளினாவைக் கொலை செய்தவன்தான் பரமசிவத்தையும் கொலை செய்திருக்க வேண்டும்!" என்றான் ராம்கி.

அவன் கூறியதை ஆமோதிப்பது போல் தலையை ஆட்டி விட்டு, ஆனந்த் தொடர்ந்தான்: "இப்படிப் பார்ப்போம். ஷூட்டிங்கிலிருந்து வந்த நளினா இரவு முழுவதும் கண் விழித்த களைப்பில் படுத்து உறங்கிக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கே வந்த கொலையாளி ஃபிளாஸ்க்கில் தூக்க மாத்திரைகளைக் கரைக்கிறான். அப்போது வீட்டுக்கு வெளியில் இருந்து கொண்டு அறையின் ஜன்னலுக்குக் கண்ணாடி மாற்றிக்கொண்டிருந்த பரமசிவத்தைப் பார்க்கிறான். கொலையாளி தூக்க மாத்திரையைக் காப்பியில் கலந்ததைப் பரமசிவம் பார்த்தானா இல்லையா என்பது நமக்குத் தெரியாது. ஆனால் அவன் பார்த்திருந்தாலும், பார்க்காமல் இருந்திருந்தாலும், பார்த்திருப்பானோ என்ற சந்தேகம் கொலையாளிக்கு வந்திருக்கும். அதனால்தான், இரண்டு நாட்கள் கழித்து அவனையும் ஒரு புதிய கட்டிடத்தின் மொட்டை மாடியிலிருந்து கீழே தள்ளிக் கொலை செய்திருக்கிறான். பரமசிவம் நளினாவின் ரசிகன், நளினாவின் மரணத்தினால் மனமுடைந்துதான் அவன் தற்கொலை செய்து கொண்டிருக்கிறான் என்ற தோற்றத்தை உருவாக்குவதற்காக, அவன் பையில் நளினாவின் புகைப்படம், பத்திரிகையில் வந்த  நளினாவின் மரணச் செய்தி அடங்கிய பத்திரிகையிலிருந்து கிழிக்கப்பட்ட பகுதி ஆகியவற்றைச் செருகியிருக்கிறான். இந்த 'ஆதாரங்களை' வைத்துப் பத்திரிகைகளும் 'நளினாவின் ரசிகர் தற்கொலை' என்ற சுவாரஸ்யமான கதையைச் செய்தியாக வெளியிட்டு விட்டன!"

"பரமசிவம் அந்தக் கட்டிடத்தில் என்ன செய்து கொண்டிருந்தான்?" என்று கேட்டான் ரமேஷ் பாபு.

"எதோ ஒரு வீட்டில், ஜன்னல்களுக்கு கண்ணாடி பொருத்திக் கொண்டிருந்தான் என்று சுலபமாகச் சொல்லி விடலாம். ஆனால் அது உண்மையில்லை. முதலில் அது ஒரு புதிய கட்டிடம். கண்ணாடி பொருத்தும் வேலையில் ஒன்றுக்கு மேற்பட்ட தொழிலாளிகள் ஈடுபட்டிருப்பார்கள். மின்  இணைப்பு பெறப்படாத நிலையில், இரவில் அங்கே வேலைகள் நடப்பதில்லை. கொலையாளி சொல்லித்தான் அவன் அங்கே வந்திருப்பான்."

"கொலையாளி சொன்னதற்காகப் பரமசிவம் ஏன் அங்கே வர வேண்டும்?" என்றார் ரத்னசபாபதி.

நளினாவின் கொலை நடந்த சமயத்தில், கொலையாளி பரமசிவத்திடம் பேசி, அங்கே நடந்ததை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று சொல்லிப் பணம் தருவதாகச் சொல்லி இருக்கலாம். கொலையாளி பரமசிவத்தை இந்தக் கட்டிடத்துக்குக் குறிப்பிட்ட தேதியில், குறிப்பிட்ட நேரத்தில் வரச்  சொல்லியிருக்கலாம். மொட்டைமாடிக்குப் போய்ப் பேசினால்தான் ரகசியமாக இருக்கும்  என்று கொலையாளி சொன்னதை நம்பிப் பரமசிவம் அங்கு போயிருக்கிறான்."

"கொலையாளிக்கும் அந்தக் கட்டிடத்துக்கும் எதாவது தொடர்பு இருக்குமா சார்?" என்றான் ராம்கி.

"அப்படி இருக்க வேண்டும் அன்று அவசியமில்லை. பாதி முடிக்கப்பட்ட பல கட்டிடங்கள் சென்னையில் இருக்கின்றன. நாம் தெருவில் நடந்தோ வாகனத்திலோ போகும்போது இவற்றைப் பார்த்திருக்கலாம். சில கட்டிடங்களில் ஒப்புக்கு ஒரு வாட்ச்மேனைப் போட்டிருப்பார்கள். சிலவற்றில் வாட்ச்மேன் யாரும் இருக்க மாட்டார்கள். கட்டிடத்துக்குள், தண்ணீர்க்  குழாய், மின்விளக்கு போன்றவை நிறுவப்பட்டிருந்தாலொழிய, அவற்றில் திருடிக்கொண்டு போவதற்கு எதுவும் இல்லை என்பதால் சில கான்ட்ராக்டர்கள்  அலட்சியமாக இருப்பார்கள். அது போன்ற ஒரு கட்டிடம்தான் இது.  கொலையாளி பரமசிவத்தைப் பிடித்துக் கீழே தள்ளிக் கொலை செய்திருக்கிறான். பரமசிவம் நளினாவின் ரசிகன் என்று காட்ட அவன் பையில் நளினாவின் மரணச் செய்தி அடங்கிய பேப்பர் கட்டிங்கையும், நளினாவின் ஃபோட்டோவையும் திணித்திருக்கிறான். கொலையாளி தன்  பாக்கெட்டில் பண நோட்டுக்களைத் திணிக்கிறான் என்று கூடப்  பரமசிவம் நினைத்திருக்கலாம்!"

"இதெல்லாம் என்ன சார் கதை? நளினாதான், தான் தற்கொலை செய்து கொள்வதாகக் கடிதம் எழுதி வைத்திருக்கிறாளே!" என்றார் ரத்னசபாபதி.

"கதையே அங்கேதானே  இருக்கிறது? அந்தக் கடிதம் பற்றி ஆரம்பத்திலிருந்தே எனக்கு ஒரு உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது. கையெழுத்தின் முதல் பகுதியில் மட்டும் காப்பி சிந்தி இங்க் கலைந்திருந்ததும், அந்தக் கடிதம் எழுதப்பட்ட இங்க் அங்கிருந்த மூன்று பேனாக்களில் ஒன்றின் இங்க்கோடு கூட ஒத்துப்போகாமல் இருந்ததும், எனக்கு சந்தேகத்தை உண்டாக்கின. இதை நான் குறிப்பிட்டபோது, கடிதத்தை  வெளியிலிருந்து எழுதிக்கொண்டு வந்திருக்கலாமே என்று ராம்கி கேட்டான். வெளியிலிருந்தென்றால், ஒருவேளை ஸ்டுடியுவிலிருந்தா (அங்கிருந்துதானே  நளினா  வீட்டுக்கு வந்தார்!)  என்று தோன்றியதும், உடனே ஒரு பொறி தட்டியது.

"நளினா  இறப்பதற்கு முந்திய இரண்டு மூன்று தினங்களில் ஸ்டூடியோக்களில் படமாக்கப்பட்ட காட்சிகள் பற்றி விசாரித்தேன். அவர் இறந்ததற்கு இரண்டு நாட்கள் முன்பு எடுக்கப்பட்ட ஒரு காட்சியில் கதாநாயகி இதே போன்று ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டுத் தற்கொலை செய்து கொள்ள முயல்கிறாள். கதாநாயகியாக நடித்தது நளினாதான் என்று நான் சொல்ல வேண்டியதில்லை. அந்தக் கடிதத்தின் வாசகமும், நளினா  எழுதி வைத்திருந்த கடிதத்தின் வாசகமும் ஒன்றுதான். வாசகம் மட்டும் அல்ல, கடிதமும் ஒன்றுதான்! படப்பிடிப்பின்போது கடிதத்தை நளினா தானே தன்  கைப்பட எழுதியிருக்கிறார்.  கொலையாளி அந்தக் கடிதத்தை எடுத்து வைத்துக்கொண்டு, அதை நளினாவின் தற்கொலைக் கடிதமாக மாற்றி விட்டான்!"

"ஆனால் திரைப்படத்தில் கதாநாயகியின் பெயர் வேறாக இருந்திருக்குமே?" என்றான் ராம்கி.

"ஆமாம். அதிலும் கொலையாளிக்கு அதிர்ஷ்டம்தான். கதாநாயகியின் பெயர் புவனா.அதனால்தான் அதை நளினா  என்று தோன்றும்படி செய்ய முதல் இரண்டு எழுத்துக்களில் மட்டும் காப்பி சிந்தும்படி செய்திருக்கிறான் அவன். தன் விரலைப் பயன்படுத்தித்தான் கொலையாளி இதைச் செய்திருக்க வேண்டும். ஆனால் விரல் ரேகை அந்த இடத்தில் பதிந்திருக்காது.என்னுடைய யூகம் என்னவென்றால், கொலையாளி நளினாவை எப்படிக் கொல்வது என்ற யோசனையில் இருந்திருக்கிறான். இந்தக் கடிதத்தைப்  பார்த்ததும், அவரைக் கொலை செய்து விட்டு, அதைத் தற்கொலை என்று ஜோடிக்க ஒரு நல்ல வழி கிடைத்து விட்டது அவனுக்கு!"

"அப்படியானால், நீங்கள் குறிப்பிட்ட காட்சி படம் பிடிக்கப்பட்டபோது  கொலையாளி  அங்கே இருந்திருக்கிறான்." என்றான் ரமேஷ்பாபு, ரத்னசபாபதியைப் பார்த்தபடி. ரத்னசபாபதி இது எதையும் கவனிக்காத்தவர் போல் வேறு எங்கோ பார்த்துக்கொண்டிருந்தார்.

"நிச்சயமாக! பின்னே, நளினாவா அந்தக் கடிதத்தை வீட்டுக்கு எடுத்து வந்திருப்பார்?"

"சார், இந்தக் கடிதத்தைப்  பற்றி நாம் பேசிக்கொண்டிருந்தபோது, அதில் இன்னொரு விஷயம் இருப்பதாகவும், அதை அப்புறம் சொல்வதாகவும் சொன்னீர்கள்!"

"ஆமாம். கடிதத்தில் கையெழுத்து தமிழில் இருக்கிறது. நான் நளினாவின் ஃபைல்களைப் பார்த்த வரையில், அவர் பொதுவாக ஆங்கிலத்தில்தான் கையெழுத்துப் போட்டு வந்திருக்கிறார். ரசிகர்களுக்கு அனுப்பும் புகைப்படங்களில் வேண்டுமானால் தமிழில் கையெழுத்துப் போட்டிருக்கலாம். எனவே, அவர் தன்னுடைய 'தற்கொலைக் கடிதத்தில்' தமிழில் கையெழுத்துப் போட்டிருப்பது, எனக்கு சற்று விசித்திரமாகத் தோன்றியது."

"சரி. நளினாவுக்குத் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கம் இல்லாவிட்டால், அவர் ஏன் சமையற்காரியை வீட்டுக்குப் போகச் சொன்னார்?" இதைக் கேட்டதும் ராம்கிதான்.

"அப்படி யார் சொன்னது?"

"சமையற்கரிதானே அப்படிச் சொல்லியிருப்பதாக நீங்கள் சொன்னீர்கள்?'

"ஆமாம். ஆனால் சமையற்காரி சொன்னது உண்மையா பொய்யா என்று எப்படித் தெரியும்? அதைப் பொய் என்று சொல்லக்கூடிய ஒரே நபர் நளினாதானே?"

"அப்படியானால் சமையற்காரி பொய் சொல்லியிருக்கிறாளா? அவளும் இந்தக் கொலைக்கு உடந்தையா?" என்றான் ரமேஷ் பாபு கோபத்துடன்.

"உடந்தையாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. சமையற்காரி வழக்கம் போல் 8 மணிக்கு வீட்டுக்குப்  போயிருக்கலாம். அதற்குப் பிறகு கொலை நடந்திருக்கலாம். கொலையாளி பணம் கொடுத்தோ, மிரட்டியோ சமையற்காரியை இப்படிச் சொல்லச் சொல்லியிருக்கலாம். நளினாவின் மரணம் தற்கொலை என்பதற்கு ஒரு வலுவான சாட்சியாக அமைந்து விட்டதே சமையல்காரியின் வாக்குமூலம்!"

"வெரி  குட்  மிஸ்டர் ஆனந்த்!" என்றான் ரமேஷ்பாபு "ஆனால் கொலையாளி யார் என்று நீங்கள் இதுவரை சொல்லவேயில்லையே?"

"நான் ஏன் சொல்ல வேண்டும்? அதுதான் மிஸ்டர் ரத்னசபாபதியே குற்றத்தை ஒப்புக்கொண்டு விட்டாரே!" என்றான் ஆனந்த்.

"நான் எங்கே ஒப்புக்கொண்டேன்? நான் எ ந்தக் குற்றமும் செய்யவில்லை, எதையும் செய்ததாக ஒப்புக்கொள்ளவுமில்லை. உங்கள் கற்பனைக்கு ஒரு அளவே இல்லை போலிருக்கிறது" என்றார் ரத்னசபாபதி.

"அப்படியா? சற்றுமுன், பரமசிவம் நளினாவின் ரசிகன் இல்லை என்று நான் சொன்னதற்கு, அவன் பர்ஸில்  நளினாவின் புகைப்படம் இருந்ததே என்று சொன்னீர்கள். அது எப்படி உங்களுக்குத் தெரியும் என்று நான் கேட்டதற்கு, பத்திரிகையில் போட்டிருந்ததாகச் சொன்னீர்கள். எ ந்தப் பத்திரிகையிலும் புகைப்படத்தைப் பற்றிக் குறிப்பிடவில்லை. நளினாவின் கொலைச்செய்தி வந்த பத்திரிகையின் க்ளிப்பிங் இருந்தது என்று மட்டும்தான் குறிப்பிட்டிருந்தார்கள். புகைப்படத்தைப் பற்றிப் பத்திரிகைகள் குறிப்பிடாததற்கு காரணம், போலீசார் இது பற்றிப் பத்திரிகைகளுக்குத் தெரிவிக்கவில்லை. போலீசார் தெரிவிக்காததற்குக் காரணம் அந்தப் புகைப்படம் பற்றி அவர்களுக்கு இருந்த சந்தேகம்தான்!"

"என்ன சந்தேகம் சார் அது?" என்றான் ரமேஷ் பாபு.

"சொல்கிறேன். மிஸ்டர் ரத்னசபாபதி. நளினா  ரசிகர்களுக்குத் தான் கையெழுத்துப் போட்ட புகைப்படத்தைத்தானே அனுப்புவார்?"

"ஆமாம்."

"ஆனால் பரமசிவத்தின் பர்ஸில் இருந்த புகைப்படத்தில் அவர் கையெழுத்து இல்லை."

ரத்னசபாபதி பெரிதாகச் சிரித்தார். "இது ஒரு விஷயமா சார்? நளினா வரிசையாகப் பல புகைப்படங்களில் கையெழுத்துப் போடுவாள். அப்படிப் போடும்போது, ஒரு புகைப்படத்தில் கையெழுத்துப் போடாமல் விட்டிருக்கலாம். இது மிகவும் இயல்பான விஷயம். இதையெல்லாம் ஒரு பாயின்ட் என்று எடுத்துப்  பேசுகிறீர்களே!"

"நான் சொன்ன பாயின்ட் மிகவும் பலவீனமானது என்று தெரிந்ததும் உங்களுக்கு எவ்வளவு நிம்மதி! இத்தனை நேரம் டென்ஸாக இருந்த நீங்கள் ஒரு கணத்தில் ரிலாக்ஸ் ஆகி விட்டீர்களே! ஆனால், இது என்னுடைய சந்தேகம் இல்லை. போலீசின் சந்தேகம். ஏனெனில், சமீபத்தில், ரசிகர்களுக்கு அனுப்புவதற்காக, தன் புதிய ஸ்டில் ஒன்றை 1000 பிரதிகள் எடுத்து வைத்திருந்தார் நளினா. இது ஒரு புதிய தோற்றத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம். இந்த ஆயிரத்திலிருந்து வந்ததுதான் பரமசிவம் பர்ஸிலிருந்த புகைப்படம்."

"அதனால் என்ன?" என்றார் ரத்னசபாபதி.

"என்னவா? இந்தப் புகைப்படத்தின் பிரதிகளை நளினா அவர் கொலையுண்ட அன்று காலை படப்பிடிப்பிலிருந்து வந்தபோதுதான் எடுத்து வந்திருக்கிறார். மேஜை மீது அட்டைப் பெட்டியில் அந்தப் புகைப்படங்கள் இருந்திருக்கின்றன. அவற்றில் ஒன்றைக்கூட நளினா யாருக்கும் அனுப்பியிருக்க முடியாது. போலீசார்  கொலை நடந்த அன்றே இந்தப் புகைப்படங்களை கவனித்திருக்கிறார்கள். இரண்டு நாள் கழித்து இறந்த பரமசிவத்தின் பர்ஸில் அந்தப் படங்களில் ஒன்று இருந்தது அவர்களுக்கு வியப்பாக இருந்திருக்கிறது. அதனால் அந்தப் புகைப்படம் பற்றிப் பத்திரிகைகளுக்குச் சொல்ல வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறார்கள். சொல்லுங்கள் மிஸ்டர்  ரத்னசபாபதி, பத்திரிகையில் வெளிவராத இந்தச் செய்தி உங்களுக்கு எப்படித் தெரியும்?"

ரத்னசபாபதி மௌனமாக இருந்தார்.

ஆனந்த் தொடர்ந்தார். "உங்களுக்கு இது எப்படித் தெரியும் என்றால், பரமசிவத்தின் பர்ஸில் இந்தப் புகைப்படத்தை வைத்தவரே நீங்கள்தான்! பரமசிவத்தைப் பார்க்கப் போகும்போது அவனை நளினாவின் ரசிகனாகக் காட்டி அவன்தற்கொலை செய்து கொண்டதாக ஒரு கதையை ஜோடிக்கலாமே என்ற யோசனை தோன்றியிருக்கிறது. அவசரத்தில் மேஜை மீதிருந்த அட்டைப்பெட்டியிலிருந்து ஒரு படத்தை உருவிக்கொண்டு கிளம்பி விட்டீர்கள். அது புதிய புகைப்படம், அதில் நளினா கையெழுத்திடவில்லை என்ற விவரங்களை நீங்கள் கவனிக்கவில்லை."

"இவையெல்லாம் உங்கள் ஊகம்தான். இதற்கெல்லாம் எந்த வித அடிப்படையோ, ஆதாரமோ கிடையாது. உங்களுடைய அபத்தமான கற்பனைகளுக்கெல்லாம் விளக்கம் கொடுத்துக்கொண்டு இருக்க வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை" என்றார் ரத்னசபாபதி கோபமாக.

"ஏன் ஆதாரம் இல்லை? பரமசிவத்தைச் சந்திக்க நீங்கள் போனபோது உங்கள் காரைத் தெருக்கோடியிலேயே நிறுத்தி விட்டுப் போயிருக்கிறீர்கள். உங்கள் காரை அங்கே பார்த்த சாட்சிகள் இருக்கிறார்கள்."

"இருக்கவே முடியாது. நான் அங்கே காரில் போகவில்லையே! நடந்துதானே..." ரத்னசபாபதி தனது தவறை  உணர்ந்து நிறுத்திக்கொண்டார்.

ஆனந்த் எழுந்தான். "ரமேஷ் பாபு, நான் என் ரிப்போர்ட்டை நாளை  கொடுத்து விடுகிறேன். விரும்பினால், நீங்கள் அதைப் போலீசிடம் கொடுக்கலாம். மேலே என்ன செய்வது என்று அவர்கள் முடிவு செய்து கொள்ளட்டும்" என்றான்.

"ஒரு நிமிஷம் சார்!" என்றான் ரமேஷ்பாபு "என் தங்கையை இந்த வெறிநாய் ஏன் கடித்துக் குதறியது என்று எனக்குத் தெரிய வேண்டும்."

"ரமேஷ். உன்னுடைய கோபம் எனக்குப் புரிகிறது. அதனால் உன்னுடைய தரக்குறைவான வார்த்தைகளை நான் பொறுத்துக் கொள்கிறேன்" என்றார் ரத்னசபாபதி. அவர் குரலில் ஒரு அமைதி இருந்தது. "ஆல்ரைட். நான் சொல்ல வேண்டாம் என்று நினைத்த விஷயத்தைச் சொல்லி விடுகிறேன். ரமேஷ் ,நீ நினைப்பது போல், உன்தங்கை ஒன்றும் உத்தமி இல்லை. எல்லோரும் நினைத்துக் கொ ண்டிருப்பது போல் அவள் ஒன்றும் நான் விரித்த வலையில் விழுந்து என்னைக் கல்யாணம் செய்து கொள்ளவில்லை. நான்தான் அவள் விரித்த வலையில் விழுந்து விட்டேன்."

"உங்கள் கொலையை நியாயப்படுத்த என் தங்கை மீது அவதூறு கூறப்போகிறீர்களா?" என்றான் ரமேஷ்.

ரத்னசபாபதி அவன் பேச்சைக் காதில் வாங்கிக்கொள்ளாதது போல் எல்லோரையும் பார்த்துப் பேச ஆரம்பித்தார். "தன்னைப் பல நடிகர்களும், டைரக்டர்களும் தொந்தரவு செய்வதாகவும், தனக்குத் திருமண வாழ்க்கையில் ஆர்வம் இல்லையென்றும், தான் கடைசி வரை நடித்துக்கொண்டே இருக்க விரும்புவதாகவும் சொல்லி, நான் அவளைக் கல்யாணம் செய்து கொண்டால்தான் அவளால் நிம்மதியாக இருக்க முடியும் என்று நளினா என்னிடம் மன்றாடினாள். எனக்கு மனைவி, இரண்டு மகன்கள், ஒரு மகள் ஆகியோர் இருப்பதையும், நான் அவர்களிடம் இணக்கமாகவும், பாசமாகவும் இருப்பதாகவும் சொல்லி மறுத்து விட்டேன். ஆனால் அவள் விடாமல் என்னை வற்புறுத்திக்கொண்டே இருந்தாள் . எங்கள் திருமணம் வெளி உலகை ஏமாற்றத்தான் என்றும், திருமணத்துக்குப் பிறகு, நான் என் குடும்பத்துடனேயே இருக்கலாம் என்றும் சொன்னாள். அப்போதும் நான் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. ஒருநாள், படப்பிடிப்பின்போது, ஒரு மூத்த நடிகர் அவளிடம் பலர் முன்னிலையில் மிக மோசமாக நடந்து கொண்டதாகவும், தான் தப்பி ஒடி வந்து விட்டதாகவும், அவன் காரில் துரத்தி வருவதாகவும் சொல்லி, இரவு 2 மணிக்கு என் வீட்டுக் கதவைத் தட்டினாள் . என் மனைவி கூட அவள் மீது இரக்கப்பட்டாள். இவை எல்லாமே அவளுடைய திட்டமிட்ட நாடகம் என்பது அப்போது எனக்குத் தெரியவில்லை!

"தொடர்ந்து இது போல் நளினா எனக்கு நெருக்கடி கொடுத்து வந்ததால், ஒரு கட்டத்தில் நான் அவள் விருப்பத்துக்கு ஒப்புக்கொண்டு அவளைத் திருமணம் செய்து கொண்டேன். என் குடும்பத்தினரின் முழுச் சம்மதத்துடன்தான் நான் இதைச் செய்தேன் என்று அறியாத சில பத்திரிகைகள் நான் என் குடும்பத்துக்கு துரோகம் செய்து விட்டதாக எழுதின. நான் அவற்றைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை.

"திருமணத்துக்குப் பிறகுதான் நளினாவின் உண்மையான தோற்றம் எனக்குத் தெரிய வந்தது. அவளுக்குத் திரையுலகில் பலருடனும் தொடர்பு இருந்தது. அவர்களில் எவரையும் திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் அவளுக்கு இல்லை. என்னை ஒரு கவசமாக வைத்துக்கொண்டு, நளினா காதல் லீலைகள் புரிந்து கொண்டிருந்தாள் என்பதுதான் உண்மை. நான் இதைப்பற்றி அவளிடம் நேரடியாகக் கேட்டபோது, 'உங்களைப்  போன்ற அப்பாவிகள் என் போன்ற பட்டாம்பூச்சிகளுக்குக் காவல் இருப்பதற்காகத்தான் பிறந்தவர்கள்' என்று வாய் கூசாமல் சொன்னாள்.

"பல மாதங்கள்  அவளுடைய ஆட்டங்களைப் பொறுமையாகச் சகித்துக் கொண்டே இருந்தேன். அவளைக் கொலை செய்ய வேண்டும் அல்லது நான் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று ஆத்திரம் வரும். ஆனால் சீரியஸாக அவளைக் கொலை செய்ய வேண்டும் என்று நான் நினைத்ததில்லை. படப்பிடிப்பில் அந்தக் கடிதத்தைப் பார்த்ததும்தான் அந்த எண்ணம் உதித்தது. நளினா தூக்க மாத்திரையைப் பயன்படுத்துபவள் என்பதால், அந்தக் கடிதத்தைப் பயன்படுத்தி அவள் தற்கொலை செய்து கொண்டதாகக் காட்டி விட்டால் நான் நிம்மதியாக இருக்கலாமே என்று நினைத்தேன். மிஸ்டர் ஆனந்த் சொன்னபடி வேலைக்காரியை நளினா கோபித்துக்கொண்டு வீட்டுக்கு அனுப்பியதாகச் சொல்லச் சொன்னது நான்தான். நான் செய்த கொலையை நியாயப்படுத்துவதற்காக இதையெல்லாம் சொல்லவில்லை. என் மனக்குமுறலை எல்லாம் என் நண்பர் டைரக்டர் ராஜுவிடம் நான் சொல்லிப் புலம்பியிருக்கிறேன். நீங்கள் அவரிடம் விசாரித்துக்கொள்ளலாம். அஃப் கோர்ஸ், நளினாவைக் கொலை செய்ததைப்  பற்றி அவரிடம் சொல்லவில்லை. அவளுடைய நடத்தை, அவள்   என்னைப் பயன்படுத்திக்  கொண்டது, என்னுடைய கோபம், ஆத்திரம், இயலாமை இவற்றையெல்லாம் அவரிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்."

"ஓகே. நான் சொன்னபடி என் அறிக்கையை நாளை கொடுத்து விடுகிறேன்" என்றார் ஆனந்த்.

'மிஸ்டர் ஆனந்த்! நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும். நளினா பற்றி ரத்னசபாபதி சொன்ன விஷயங்கள் என் காதுக்கும் வந்தவைதான். அவற்றை அப்போது நான் நம்பவில்லை. ரத்னசபாபதி சொன்னதை நான் நம்புகிறேன். அவருக்கு நளினாவைக் கொல்ல வேறு நோக்கம் இருக்க முடியாது. அவருக்கும் நளினவுக்கும் நடந்த திருமணம் சட்டப்படி செல்லக்கூடியதில்லை. அதனால் நளினாவின் சொத்துக்களுக்காகவோ, பணத்துக்காகவோ அவர் இந்தக் கொலையைச் செய்திருக்க முடியாது. இவரைக் கைது செய்து இவர் மீது வழக்குத் தொடர்ந்தால், நளினாவைப் பற்றிய பல கசப்பான உண்மைகள் வெளியே வரும். என் தங்கைக்கு மக்களிடையே ஒரு நல்ல இமேஜ் இருக்கிறது. அவளை ஒரு கண்ணியமான நடிகை என்றே எல்லோரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவள் பெயர் களங்கப்படுவதை நான் விரும்பவில்லை. அவளது திருமண வாழ்க்கையும், தனிப்பட்ட வாழ்க்கையும் பத்திரிகைகளிலும் கோர்ட்டிலும் சீரழிக்கப்படுவதை என்னால் சகித்துக்கொள்ள முடியாது. அதனால்..."

" 'நளினாவின் மரணம் கொலை என்பதற்கான எந்த வலுவான ஆதாரமும் எனக்குக் கிடைக்கவில்லை' என்று அறிக்கை கொடுத்து விடுகிறேன். உண்மையும் அதுதானே! உண்மையில் போலீசுக்கு நான் எந்த ரிப்போர்ட்டும் கொடுக்க வேண்டியதில்லை. நீங்கள்தான் என்னை இந்த வழக்கை விசாரிக்கச் சொன்னீர்கள். உங்களுக்குத்தான் நான் அறிக்கை கொடுக்க வேண்டும். ஆனால் நான் இந்த வழக்கில் ஈடுபட்டிப்பது போலீசுக்குத் தெரியும். அவர்கள் உங்களிடம் என் அறிக்கையைக் கேட்டால் நீங்கள் அதைக் கொடுத்து விடலாம்."

ரத்னசபாபதி நம்ப முடியாமல் ஆனந்த்தைப் பார்த்த்தார். "நீங்கள் உண்மையைத்தான் சொல்கிறீர்களா? என்னைப்பற்றி எதுவும் குறிப்பிடப் போவதில்லையா?"

"இல்லை. ஆனால் பரமசிவம் என்ற அப்பாவி பலியாகி இருக்கிறான். அதற்கு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?"

"நளினாவின் கணவன் என்ற முறையில் பரமசிவன் குடும்பத்தைப் பார்த்து ஆறுதல் சொல்லி அவர்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்வதாக வாக்களித்திருக்கிறேன். அவன் குடும்பத்துக்கு ஆகும் செலவு, அவன் குழந்தையின் படிப்பு எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன். நான் சில டிரஸ்டுகள் வைத்திருக்கிறேன். அவற்றின் மூலம் பரமசிவத்தின் குடும்பத்துக்கு என்னால் உதவி செய்ய முடியும்." என்றார் ரத்னசபாபதி.

ராம்கிக்கு மட்டும் ஆனந்தின் முடிவு ஏமாற்றத்தை அளித்தது!

(*சீமா நடித்து, ஐ.வி.சசியின் இயக்கத்தில் 1978ஆம் ஆண்டு வெளிவந்த மலையாளத் திரைப்படம்.)

(1982ஆம் ஆண்டில் எழுதப்பட்டது)