Tuesday, October 23, 2012

7. நேர்மையும் வாழட்டும்

ரண்டு மணி நேரம் காத்திருந்த பிறகு ராமநாதனுக்கு அந்த அரசு நிறுவனத் தலைவரைப் பார்க்க அனுமதி கிடைத்தது. 

நிறுவனத் தலைவர் இளங்குமரன் ஒரே பொருளைக் குறிக்கும் இரு சுற்களைக் கொண்ட தம் பெயருக்கு ஏற்ப 'இரு மடங்கு' இளமையாகக் காட்சி அளித்தார். கன்னங்கரேலென்ற தலைமுடி, அதில் ஏராளமான சுருள்கள். 

குளிர் சாதன அமைதியில் அடக்கமாக அமர்ந்திருந்த சுருள்கள், மின் விசிறி போடப்பட்டால் அந்தக் காற்றில் அதிகம் ஆடி அசைந்து ஆடிப்பெருக்கில் உருவாகும் ஆற்றுச் சுழல்கள் போல் காட்சியளிக்குமோ என்று ராமநாதன் வியந்தார்.

குழந்தை போன்ற முகம், அதில் குறும்பு போன்ற ஒரு உணர்வு, எப்போதும் விரிந்திருக்கும் உதடுகள் வழங்கும் வசீகரப் புன்னகை. இளங்குமரன் அப்படியேதான் இருந்தார் - பத்து வருடங்களுக்கு முன்பு பார்த்தபோது இருந்ததைப் போல.

'இளங்குமரனுக்கு என்னை நினைவிருக்குமா?'

காத்திருந்தபோதெல்லாம் ராமநாதனின் மனதில் இருந்த ஒரே கவலை இதுதான். 'நினைவில்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும்!'

"வாங்க! உக்காருங்க" என்றார் இளங்குமரன், மேஜை மீது இருந்த பேப்பரிலிருந்து கண்ணை எடுக்காமலே.

ராமநாதன் உட்கார்ந்தார். ஓரிரு நிமிடங்கள் கழித்து இளங்குமரன் மெல்லத் தலையை நிமிர்த்தி ராமநாதனை நேரே பார்த்தார். அவர் கண்களில் எந்த உணர்வும் பிரதிபலிக்கவில்லை.

"சொல்லுங்க. வாட் கேன் ஐ டூ ஃபார் யூ?"

ஆங்கிலத்தில் பேசுகிறார் இளங்குமரன்! ராமநாதனுக்குச் சிரிப்பு வந்தது. பழைய சம்பவம் நினைவுக்கு வந்தது.

"யோவ் தமிழ்ல பேசுய்யா! தமிழ்நாட்டில இருந்துகிட்டு என்னய்யா இங்கிலீசு? நீ படிச்ச படிப்பை எங்கிட்ட காட்ட வேணாம்!"

பத்து வருடங்களுக்கு முன் இளங்குமரன் தன்னிடம் சொன்ன இந்த வார்த்தைகளை, தான் இப்போது திருப்பிச் சொன்னால் எப்படி இருக்கும் என்று நினத்துப் பார்த்தபோது ராமநாதனுக்கு அந்த இறுக்கமான சூழலிலும் சிரிப்பு வந்தது.

"ஐ ரெப்ரஸன்ட்" என்று ஆங்கிலத்தில் துவங்கியவர் சட்டென்று தாய்மொழிக்கு மாறினார். "நான் யூனிவர்சல் இண்டஸ்ட்ரீஸின் நிதி ஆலோசகர். (இளங்குமரன் முன்னால் பேசுகிறோம் என்பதாலோ என்னவோ தமிழ் சரளமாக வருகிறது - ஃபினான்ஷியல் கன்ஸல்டன்ட்' என்ற நெருடலான ஆங்கிலப் பிரயோகத்துக்குக் கூட!). என் கிளையன்ட் தங்கள் தொழில் விரிவாக்கத்துக்காக உங்கள் நிறுவனத்திடம் ஐம்பது கோடி ரூபாய் கடன் உதவி கேட்டிருக்கிறார்கள். ஃபைல் எம். டி.யிடமிருந்து கிளியர் ஆகி உங்களிடம் வந்திருக்கிறது என்று..."

"யெஸ்!" என்றார் இளங்குமரன் தொடர்ந்து. "ஸோ வாட் கேன் ஐ டூ ஃபார் யூ?" என்றார்.

இந்த அப்பாவித்தனமான(?) கேள்வி ராமநாதனை இலேசாகக் கவலை கொள்ளச் செய்தது.

"நீங்கள் ஃபைலை கிளியர் செய்தால், பிறகு அது போர்டுக்குப் போய் லோன் சாங்ஷன் ஆகிவிடும்" என்றார் ராமநாதன் இயல்பாக.

"ஆப்வியஸ்லி, உங்களுக்கு எங்கள் ப்ரொஸீஜர் எல்லாம் தெளிவாகத் தெரிந்திருக்கிறது" என்றார் இளங்குமரன் ஏதோ ராமநாதன் யாருக்கும் தெரியாத நடைமுறையைக் கண்டு பிடித்துச் சொல்லி விட்ட மாதிரி!

ராமநாதன் மௌனமாக இருந்தார்.

"நீங்கள் சொன்னதுபோல் நான் இதை கிளியர் செய்தால் போர்டுக்குப் போய் லோன் சாங்ஷன் ஆகி விடும்தான். ஆனால் நான் இதை ரிஜெக்ட் பண்ணினால் என்ன ஆகும்னும் உங்களுக்குத் தெரிந்திருக்குமே!"

ராமநாதனுக்கு அடிவயிற்றில் இலேசான பயம் உருவாயிற்று. 'ஒருவேளை இவர் இதை ரிஜெக்ட் செய்து விடுவாரோ?'

"சார்! எங்கள் ப்ரொபோசல் மிகவும் தெளிவாக இருக்கிறது. உங்கள் நிதி நிறுவனத்தில் பல நிலைகளைத் தாண்டி எம்.டி. வரை கிளியர் ஆகி வந்திருக்கிறது. இது இந்த மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கு உதவும் ப்ராஜக்ட். 8,000 பேருக்கு வேலை வாய்ப்பு, அரசாங்கத்துக்கு விற்பனை வரி வருவாய், ஏற்றுமதி மூலம் அந்நியச் செலாவணி..."

"யெஸ் ஐ நோ. ஃபைலை நான் படித்து விட்டேன். நீங்கள் சொல்கிற விஷயம் எல்லாம் சரிதான். ஆனாலும் என்னால் இதில் நிறையக் கொக்கிகள் போட்டு ஃபைலைக் கீழே திருப்பி அனுப்ப முடியும். மீண்டும் ஃபைல் ஒவ்வொரு படியாக ஏறி என்னிடம் வருவதற்கு மூன்று நான்கு மாதங்கள் ஆகலாம். அல்லது ஸ்ட்ரைட் அவே சில ஆட்சேபங்களை எழுப்பி உங்கள் அப்ளிகேஷனையே என்னால் ரிஜெக்ட் பண்ணி விட முடியும்."

ராமநாதனுக்கு இலேசாகக் கோபம் வந்தது. ஆனால் கோபத்தை அடக்கிக்கொண்டு, "ஆனால் நீங்கள் ஏன் இப்படிச் செய்ய வேண்டும்?" என்றார்.

"புரியவில்லையா மிஸ்டர் ராமநாதன்?"

'மிஸ்டர் ராமநாதன்! முதல் முறையாக என்னைப் பெயர் சொல்லி அழைக்கிறார். அப்படியானால் என்னை அடையாளம் கண்டு கொண்டு விட்டாரா அல்லது என்னுடைய விசிட்டிங் கார்டைப் பார்த்து என் பெயரைத் தெரிந்து கொண்டாரா?'

"புரியவில்லை சார்!"

இளங்குமரன் முன்புறமாகக் குனிந்தார். "மிஸ்டர் ராமநாதன்! உங்கள் கிளையன்ட் கேட்டிருக்கும் கடன் தொகை ஐம்பது கோடி. அதில் இரண்டு பர்ஸன்ட் எவ்வளவு என்று சொல்லுங்கள்."

பொங்கியெழுந்த சினத்தை அடக்கிக் கொண்டு ராமநாதன் மௌனமாக இருந்தார்.

"நீங்கள் கணக்கில் கொஞ்சம் வீக் போலிருக்கிறது. அமௌண்ட்டை நானே சொல்கிறேன். ஒரு கோடி. ஜஸ்ட் ஹண்ட்ரட் லாக்ஸ். அதுதான் என்னோட டர்ம்ஸ்."

"வெல்..." ராமநாதன் தயங்கினார்.

"இதற்கு கமிட் பண்ண உங்களுக்கு அதிகாரம் இல்லை என்று எனக்குத் தெரியும். எனவே உங்கள் கிளையன்ட்டிடம் பேசி விட்டு, யூ கேன் கெட் பேக் டு மி. பணத்தை எப்போது, எங்கே, எப்படிக் கொடுப்பது என்கிற விவரமெல்லாம் அப்போது சொல்கிறேன்."

"சார். நீங்கள் கேட்பது... முறையற்றது."

"இருக்கலாம். ஆனால், லோன் வேண்டுமானால் இந்த கண்டிஷனுக்கு ஒப்புக் கொள்ள வேண்டும் என்று உங்கள் கிளையன்ட்டிடம் சொல்லி விடுங்கள்."

"சார் இந்த ப்ராஜக்டில் அனுமதிகள் பெறுவதிலிருந்து எல்லாமே முறையாகச் செய்யப்பட்டிருக்கின்றன. எல்லாவற்றையும் நாங்கள் சரியாகச் செய்திருப்பதால், இந்த ப்ராஜக்டுக்கு லோன் சாங்ஷன் ஆவதில் எந்தப் பிரச்னையும் இருக்காது என்று என் கிளையன்ட்டிடம் சொல்லியிருக்கிறேன். எந்த ஒரு...லஞ்சமும் கொடுக்காமல் லோன் வாங்கித் தருவதாக என் கிளையன்ட்டிடம் சொல்லியிருக்கிறேன்."

"நீங்கள்தானே சொல்லியிருக்கிறீர்கள்? நான் சொல்லவில்லையே?" என்று பெரிதாகச் சிரித்தார் இளங்குமரன்.

அந்தச் சிரிப்பு ராமநாதனைப் பத்து ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் சென்றது.

ப்போது ராமநாதன் ஒரு வங்கியில் அதிகாரியாக இருந்தார். கடன் மனுக்களைப் பரிசீலனை செய்து அவை பற்றி முடிவெடுப்பது அவர் பொறுப்பு.

அப்போதுதான் ஒருநாள் அவரைக் காண இளங்குமரன் வந்தார் - வந்தான். பளீரென்று மின்னிய வெள்ளை உடையில் மிடுக்காக வந்து அவர் எதிரே உட்கார்ந்து கொண்டு ஒரு சிகரட்டைப் பற்ற வைத்தான்.

ராமநாதன் எரிச்சலை அடக்கிக்கொண்டு, "யெஸ், வாட் டு யூ வான்ட்?" என்றார்.

அப்போதுதான் அவனிடமிருந்து அந்த எதிர்பாராத தாக்குதல் வந்தது.

"யோவ்! தமிழ்ல பேசுய்யா. தமிழ்நாட்டில இருந்துகிட்டு என்னய்யா இங்கிலீசு? நீ படிச்ச படிப்பை எங்கிட்ட காட்ட வேணாம்."

மரியாதைக் குறைவான விளிப்பு. எரிச்சலூட்டும் பிரயோகங்கள்.

ஆயினும் ராமநாதன் பொறுமையுடன், "என்ன வேண்டும் உங்களுக்கு?" என்றார்.

"போன மாசம் எங்க பேட்டையிலேந்து அம்பது பேரு தலைக்கு10,000 ரூபா லோன் கேட்டு அப்ளிகேஷன் கொடுத்திருக்காங்க. அவங்களுக்கு லோன் இல்லேன்னு சொல்லிட்டீங்களாமே, ஏன்?"

"எங்ககிட்ட லோன் கேட்டு தினமும் பல பேரு வராங்க. வரவங்க எல்லோருக்கும் நாங்க லோன் கொடுக்கறதில்லை. எங்களுக்குத் திருப்தியா இருந்தாத்தான் கொடுப்போம். நீங்க சொல்ற அம்பது பேர் யாருன்னு எனக்குத் தெரியலே. அதுக்கு முன்னே, நீங்க யாரு, உங்களுக்கு இந்த விஷயத்தில என்ன இன்ட்ரஸ்டுன்னு எனக்குத் தெரியணும்."

"நான் யாருன்னா கேக்கறீங்க?" என்றவன் தனது பையிலிருந்து ஒரு விசிட்டிங் கார்டை எடுத்து நீட்டினான். மத்தியில் ஆளும் கட்சியின் பலவித அமைப்புகளுள் ஏதோ ஒன்றின் துணைச் செயலாளர் இளங்குமரன் என்று அது அறிவித்தது.

"அந்த அம்பது பேரு யாருன்னா கேக்கறீங்க? யோவ் ஆறுமுகம்? லிஸ்ட் வச்சிருக்கியாய்யா?" என்று தனக்குப் பின்னால் மரியாதையுடன் சற்றுத் தள்ளி நின்றிருந்த ஒருவரை இளங்குமரன் கேட்ட பிறகுதான் ராமநாதன் அந்த நபரைப் பார்த்தார். சற்றே பரிச்சயமான முகம். ஓ! சமீபத்தில் கடன் கேட்டு மொத்தமாக வந்த ஐம்பது பேரில் இவரும் ஒருவர்.

ராமநாதன் சட்டென்று "இவரோட க்ரூப்பா வந்தவங்களைத்தானே சொல்றீங்க? அவங்களுக்குக் கடன் கொடுக்க முடியாதுன்னு சொன்னபோதே அதுக்கான காரணங்களையும் அவங்ககிட்ட சொல்லிட்டோமே!" என்றார்.

"சொன்னாங்களாய்யா?" என்ற இளங்குமரன், தன் ஆள் நெளிவதைப் பார்த்து மீண்டும் ராரநாதனிடம் பாய்ந்தான். "அப்படி என்ன சார் பெரிய காரணம்? சொல்லுங்களேன். நானும் தெரிஞ்சுக்கறேன்!"

"ஐ ஆம் சாரி. சம்பந்தமில்லாத மூணாவது மனுஷங்ககிட்ட நாங்க அந்தக் காரணங்களைச் சொல்றது அவசியமும் இல்லை, முறையும் இல்லை."

"என்ன சார் பேசறீங்க? நான் யாருன்னு உங்களுக்குத் தெரியுமா? நான் இவங்களோட பிரதிநிதி. அதனால காரணத்தைத் தெரிஞ்சுக்க எனக்கு உரிமை இருக்கு."

"அப்படீன்னா நீங்கதான் அவங்களோட பிரதிநிதின்னு அவங்ககிட்டேயிருந்து ஒரு லெட்டர் வாங்கிக்கிட்டு வாங்க. அப்ப சொல்றேன்."

"நீங்க ரொம்பவும் ராங்காப் போறீங்க. என்னோட பவர் உங்களுக்குத் தெரியாது. நான் நிதியமைச்சர் கிட்டயே நேரடியா ஃபோன்ல பேசுவேன். உங்க வேலை போயிடும். ஜாக்கிரதை!"

ராமநாதன் மௌனமாகச் சிரித்தார்.

"சரி. இப்ப இந்த ஆறுமுகமும் இன்னும் சில பேரும் என்னோட வந்திருக்காங்க. அவங்களையே சொல்லச் சொல்றேன். என்னையா ஆறுமுகம், நான் உங்க பிரதிநிதிதானே?"

ஆறுமுகமும் அவனுடன் வந்திருந்த வேறு சிலரும் தலையை ஆட்டினார்கள்.

"இப்ப சொல்லுங்க. ஏன் இவருக்கு லோன் கொடுக்க மாட்டேன்னு சொன்னீங்க?"

"அவங்க வாயால சொன்னது போதுமா இல்லே லெட்டர்ல எழுதிக் கொடுக்கச் சொல்லட்டுமா?" என்றான் தொடர்ந்து இளக்காரமாக.

"வாயால் எங்கே சொன்னார்கள்? தலையைத்தானே ஆட்டினார்கள்?" என்று மனதுக்குள் சொல்லிக்கொண்ட ராமநாதன் ஆறுமுகத்திடம் திரும்பி, "ஆறுமுகம், நீங்க என்ன தொழில் செய்யறதுக்காக லோன் கேட்டீங்க?" என்றார்.

ஆறுமுகம் சற்றுத் தயங்கி விட்டு, "துணி வியாபாரம்" என்றான்.

"கொஞ்சம் இருங்கள்" என்று இளங்குமரனைப் பார்த்துச் சொன்ன ராமநாதன், பியூனை அழைத்து குறிப்பிட்ட ஃபைலைத் தருவித்தார்.

அதிலிருந்த ஒரு விண்ணப்பத்தை இளங்குமரனிடம் காட்டினார். "நீங்களே பாருங்க. அவரு துணி வியாபாரம் செய்வதற்காக லோன் கேட்டதாகச் சொன்னாரு. ஆனா அப்ளிகேஷன்ல வாடகை சைக்கிள் கடை துவங்குவதற்காகன்னு எழுதியிருக்கு" என்றார்.

இளங்குமரன் அதைப் பார்க்காமலேயே, "அதுக்கு என்ன இப்ப? இவங்கள்ளாம் கைநாட்டு. யாரோ இவங்களுக்கு லோன் அப்ளிகேஷனை பூர்த்தி பண்ணிக் கொடுத்திருக்காங்க. எழுதிக் கொடுத்தவங்க சில அப்ளிகேஷன்கள்ள தொழிலை மாத்தி எழுதி இருக்கலாம். அதைத் திருத்தி சரியா எழுதிக் கொடுத்தா சரியாப் போச்சு" என்றான்.

"அது மாதிரி செய்ய முடியாது மிஸ்டர் இளங்குமரன். இவரோட கேஸ் மாதிரியேதான் மத்த 49 அப்ளிகேஷன்லேயும் சம்பந்தம் இல்லாம எதையோ எழுதி வச்சிருக்காங்க. 

"அவங்க இப்ப செஞ்சுக்கிட்டு இருக்கிற தொழிலுக்கும் செய்யப்போறதா சொல்ற தொழிலுக்கும் சம்பந்தமே இல்லை. பத்தாயிரம் ரூபா கடனாக் குடுத்தா அதை வச்சுக்கிட்டு என்ன செய்யறதுன்னே யாருக்கும் தெரியல்லே. 

"இயந்திரங்களும் மத்த பொருட்களும் வாங்கறதுக்காக அவங்க கொடுத்த கொட்டேஷன்கள் அங்கீகரிக்கப்பட்ட கடைகளிலேயிருந்து இல்லாம, ஏதோ ஊர் பேர் தெரியாத கடைகளிலிருந்து வாங்கினதா இருக்கு. சில கடைகளுக்கு நாங்க போய் விசாரிச்சதில அப்படிப்பட்ட கடைகளே இல்லை."

"நிறுத்துங்க. இவங்கள்yqம் பொய்யான தகவல்களையும் போலியான ஆவணங்களையும் கொடுத்து பேங்க்கை ஏமாத்திக் கடன் வாங்கப் பாத்தாங்கன்னு சொல்றீங்களா?"

"அப்படீன்னு நான் சொல்ல விரும்பலை. ஆனா அவங்க அப்ளிகேஷன்கள் முறையாக இல்லை, அவங்க கொடுத்த விவரங்களும் பேப்பர்களும் சரியாக இல்லைன்னு மட்டும் சொல்லுவேன்."

"ஆறுமுகம்! ஒரு சிகரெட் பாக்கெட் வாங்கிட்டு வா. மத்தவங்கள்ளாம் வீட்டுக்குப் போங்க" என்று கூறி தன்னோடு வந்த கூட்டத்தை அப்புறப்படுத்திய இளங்குமரன் பக்கத்தில் வேறு யாராவது இருக்கிறார்களா என்று சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, மேஜையின் முன்பு குனிந்தான்.

 "நீங்க சொல்றதெல்லாம் கரெக்ட்தான் சார். உங்களுக்குத் தெரியாதது இல்லை. சிறு தொழில்களுக்கு லோன் கொடுங்கன்னு அரசாங்கம் உங்களுக்குச் சொல்லியிருக்கு. அதனால நீங்களும் இது மாதிரி லோன்கள் கொடுத்தாகணும். 

"இந்த மாதிரி லோன் எல்லாமே இப்படித்தான். இந்தக் காலத்தில பத்தாயிரம் ரூபாய் முதல் போட்டு என்ன தொழில் செஞ்சு என்ன சம்பாதிக்க முடியும்? அதனாலதான் இந்தக் கடன்கள் எல்லாம் வசூல் ஆறதில்ல. 

"நீங்க கொடுக்கற பத்தாயிரத்தில நாலோ அஞ்சோ அவங்களுக்குக் கொடுத்துட்டு மீதியை நாமெல்லாம் பங்கு போட்டுக்க வேண்டியதுதான். உங்களுக்கு மொத்தமா இருபத்தஞ்சாயிரம் ரூபா கொடுத்திடறேன்..." என்றான் ஒரு விதமாகச் சிரித்தபடியே.

"போயிட்டு வாங்க" என்றார் ராமநாதன் பொறுமையாக.

"நீங்க பயப்பட வேண்டாம். இதெல்லாம் யாருக்கும் தெரியாம பாத்துக்கறேன்..."

"கெட் அவுட்!" என்றார் ராமநாதன் கோபத்துடன்.

"இப்ப நான் போறேன். கொஞ்ச நாள்ளே நீயும் இந்த இடத்தை விட்டுப் போயிடுவே!" என்று எச்சரித்து விட்டு இளங்குமரன் கிளம்பினான். போகும்போது ராமநாதனைப் பார்த்து ஏளனமாகச் சிரித்து விட்டுப் போனான்.

இளங்குமரனின் எச்சரிக்கை வெறும் மிரட்டல் இல்லை என்பது சில வாரங்களில் தெரிந்தது. 

"ஏழைகளுக்குக் கடன் கொடுக்க ராமநாதன் 25,000 ரூபாய் லஞ்சம் கேட்டார் என்று இளங்குமரன் நிதி அமைச்சருக்கு ஒரு புகார் எழுத, புகார்க் கடிதம் வங்கியின் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து விளக்கம் கேட்டு ராமநாதன் பணியாற்றிய கிளைக்கு அனுப்பப்பட்டது.

ராமநாதன்  கடன் விண்ணப்பங்களில் அவை ஏன் நிராகரிக்கப்படுகின்றன என்பது குறித்து விளக்கமாக எழுதிப் பதிவு செய்திருந்ததால், அந்த நகல்களைத் தலைமை அலுவலகத்துக்கு அனுப்ப அவர்களும் அதை நிதி அமைச்சகத்துக்கு அனுப்ப, 'குற்றச்சாட்டில் உண்மை இல்லை" என்று நிதி அமைச்சக அதிகாரி ஒருவர் குறிப்பு எழுதியதுடன், விஷயம் ஒரு முடிவுக்கு வந்தது.

ந்தப் பத்து வருடங்களில் இளங்குமரன் எவ்வளவோ மாறி விட்டான்(ர்). கட்சியில் வளர்ந்து தலைவருக்கு நெருக்கமாகி, அரசு நிதி நிறுவனத்தின் தலைவராகலொரு அரசியல் பதவியில் நியமிக்கப்படும் அளவுக்கு உயர்ந்து விட்டார். ஆனால் அவரிடம் இரண்டு விஷயங்கள் மட்டும் மாறவில்லை.

ஒன்று, அந்த டிரேட் மார்க் வில்லன் சிரிப்பு.

மற்றொன்று. மற்றவர்களை மிரட்டிப் பணிய வைக்க நினைக்கும் குணம்.

'ஆனால் இவருடைய மிரட்டலுக்கு நான் பணியப் போவதில்லை. நடப்பது நடக்கட்டும்.'

"சார்! முடிவாக என்ன சொல்கிறீர்கள்?" என்றார் ராமநாதன்.

"முடிவு உங்கள் கையில்தான் இருக்கிறது" என்றார் இளங்குமரன் விட்டுக் கொடுக்காமல்.

"நீங்கள் மாறவில்லை!" என்றார் ராமநாதன்.

"நீங்கள் மாறியிருப்பீர்கள் என்று நான் எதிர்பார்த்தேன்!"

"மிஸ்டர் இளங்குமரன்! ஒரு வேண்டுகோள். என்மீது உள்ள பழைய கோபத்துக்காக என் கிளையன்ட்டை தண்டிக்காதீர்கள்."

"நான் யாரையும் தண்டிக்கவில்லை. நான் கேட்பது வழக்கமாக நான் கேட்கும் தண்டலைத்தான்."

ராமநாதன் எழுந்தார். "நான் வருகிறேன்....ஒருவேளை நீங்கள் உங்கள் மனதை மாற்றிக் கொள்வதானால் என்னைக் கூப்பிடுங்கள். ஏனென்றால் இந்த பிராஜக்ட் நிறைவேறாவிட்டால் அதில் இந்த நாட்டுக்கும் நஷ்டம் உண்டு."

இளங்குமரன் மௌனமாக இருந்தார். உதட்டில் மட்டும் இலேசான புன்னகை. 'எனது தோல்வியை ரசித்து அனுபவிக்கிறார் போலும். அனுபவிக்கட்டும்.'

ராமநாதன் மெல்ல எழுந்து சோர்வுடன் அறைவாசலை நோக்கி நடந்தார். அவர் கதவைப் பாதி திறந்து வெளியேற முற்படுகையில், 'மிஸ்டர் ராமநாதன்!" என்று அறைக்குள்ளிருந்து அழைப்பு வந்தது.

ராமநாதன் திரும்பி வந்தார். "என்ன?"

"நீங்கள்தானே சொன்னீர்கள், நான் என் முடிவை மாற்றிக் கொண்டால் உங்களைக் கூப்பிட வேண்டும் என்று?"

"புரியவில்லை. யூ மீன்..."

"எஸ். உங்கள் கிளையன்ட்டின் பிராஜக்ட் சாங்ஷன் ஆகப் போகிறது. கடன் வழங்க சிபாரிசு செய்து ஃபைலை போர்டுக்கு அனுப்பப் போகிறேன்."

"பட் ஹௌ? நீங்கள் கேட்ட..."

"நீங்கள் எதுவும் தர வேண்டாம். நீங்கள் மாறியிருப்பீர்களோ என்று பார்க்க விரும்பினேன். அவ்வளவுதான். நீங்கள் மாறவில்லை. 

"ஒரு வங்கி அதிகாரியாக இருந்து நேர்மையைக் கடைப்பிடிப்பதை விட ஒரு கன்ஸல்டன்ட்டாக இருந்து தன் கிளையண்ட் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை என்று நேர்மையைக் கடைப்பிடிப்பது ரொம்பவும் கஷ்டம். 

"இந்தப் பத்து வருடங்களில் நான் கற்றுக்கொண்டது ஏராளம் - ஆங்கிலம் உட்பட! நான் கற்றுக்கொண்டதில் முக்கியமானது உலகத்தில் எல்லோரும் என்னைப்போல் இருக்க முடியாது என்பதுதான். 

"இது வெறும் தத்துவம் இல்லை. ஒரு பிராக்டிகல் நெசஸிடி. உங்களைப்போன்ற நேர்மையானவர்கள் சிலரும் இந்த உலகத்துக்குத் தேவை. அப்போதுதான் என்னைப் போன்றவர்களும் சர்வைவ் பண்ண முடியும். 

"எல்லோரும் என்னைப் போலவே இருந்து விட்டால், தராசின் ஒரே தட்டில் எல்லா எடையையும் வைத்தது போல, தராசு கீழே சாய்ந்து எல்லோரும் கீழே விழ வேண்டியதுதான். 

"அதனால்தான் இந்த உலகத்தை பாலன்ஸ் செய்ய உங்களைப்போன்ற சிலர் தேவைப்படுகிறார்கள். உங்களால் எங்களை பீட் பண்ண முடியாது. பட் வீ நீட் யூ. 

"உங்களப் போன்றவர்கள் தொடர்ந்து இருந்து கொண்டிருக்க வேண்டுமானால், நேர்மையும் ஜெயிக்க வேண்டும் - சில சமயமாவது! அதனால் இந்த முறை உங்கள் நேர்மை வெல்வதற்கு நானும் ஒத்துழைக்கிறேன் - இன் மை ஓன் செல்ஃபிஷ் இன்டரஸ்ட்!"

ராமநாதன் திகைத்து நின்றார். இளங்குமரனின் வளர்ச்சி வெறும் பொருளாதார, சமூக ரீதியானது மட்டுமல்ல. சிந்தனையிலும் அவர் வளர்ந்திருக்கிறார்!

முதல் முறையாக இளங்குமரன் மீது ராமநாதனுக்கு இலேசான மதிப்பு ஏற்பட்டது - அவரது விளக்கம் அடிமனதில் கொழுந்து விட்டெரியச் செய்த கோபத்தையும் மீறி.



No comments:

Post a Comment