Monday, October 29, 2012

8. ஆற்றங்கரை மரம்

பூஞ்சோலை ஸ்டேஷனில் ரயில் நின்றபோது ரகுவையும் சேர்த்து மூன்று பேர் இறங்கினார்கள். ரயிலில் இருந்தவர்களில் பத்து சதவீதத்தினர் இறங்கினார்கள் என்றும் சொல்லலாம்! 

முப்பது பேர் பயணம் செய்வதற்காக, எட்டு பெட்டிகளுடன், இந்தத் தடத்தில் தினமும் இந்த ரயிலை விடுகிறது மத்திய அரசாங்கம்.

லாப நஷ்டத்தைக் கருதாமல் மக்கள் வசதியைக் கருத்தில் கொள்ளும் ரயில்வே நிர்வாகத்தின் செயல்பாட்டைப் பாராட்ட வேண்டும் என்று நினைத்தான் ரகு.

ரயில்வேயின் உயர் அதிகாரி ஒருவர் ஒருநாள் திடீரென்று விழித்துக் கொண்டு இந்த ரயிலை நிறுத்தி விடலாம். அப்புறம் இந்த 60 கிலோமீட்டர் பாதையில் உள்ள பத்து ரயில் நிலையங்களுக்கு என்ன வேலை? 

ஒருவேளை இந்த ரயிலை நிறுத்தினால் இந்தப் பத்து ரயில் நிலையங்களையும் மூட வேண்டியிருக்குமே என்பதற்காகத்தான் இந்த ரயில் விடப்படுகிறதோ?

ஆனால் முன்பு இப்படியில்லை. முன்பு என்றால், ஒரு முப்பது வருடங்கள் முன்பு. அவன் சிறுவனாக, பள்ளி மாணவனாக இருந்தபோது. அப்போதெல்லாம் இந்த ரயிலில் கூட்டம் இருக்கும். உட்கார இடமில்லாமல் சிலர் நின்று கொண்டு கூட வருவார்கள்

இத்தனைக்கும், எட்டு கிலோமீட்டர் (அப்போது ஐந்து மைல் என்று சொல்வார்கள்) தொலைவில் இருக்கும் அவனுடைய கிராமத்திலிருந்து இந்த ஸ்டேஷனுக்கு வந்து ரயில் ஏறுவது என்பது எப்போதோ ஒருமுறை நடக்கிற விஷயம்தான். 

ரயிலில் ஏறி ஊருக்குப் போகப் போகிறோம் என்ற எதிர்பார்ப்பே அந்தக் கால வாழ்க்கையின் மிகப் பெரிய சந்தோஷங்களில் ஒன்று. ரயில் பயணம் பற்றிய நினைவின் கிளுகிளுப்பில் பயணத்துக்கு முதல் நாள் இரவு முழுவதும் உறக்கமே வராது.

பழைய நிகழ்ச்சிகள் ஒரு வேகமான நினைவோட்டமாக அவன் மனதில் ஓடின.

எந்த ஊருக்குப் போவதானாலும் அவனுடைய கிராமத்திலிருந்து ஐந்து மைல் தள்ளி இருக்கும் பூஞ்சோலை ஸ்டேஷனுக்குத்தான் வர வேண்டும். 

பல வருடங்களுக்குப் பிறகுதான் அவன் ஊருக்கு பஸ் வசதி வந்தது. அதனால் ரயில்வே ஸ்டேஷன் போவதற்கு மாட்டு வண்டி ஒன்றுதான் வழி.

பயண ஏற்பாடுகள் பத்து நாட்கள் முன்பே தொடங்கி விடும். துணிகளைத் துவைத்துக் காய வைத்து மடித்துப் பெட்டியில் அடுக்கி வைத்தல், போகும் இடத்துக்கு எடுத்துச் செல்வதற்கும், வழியில் உண்பதற்கும் என்று வகைவகையான பலகாரங்கள், உணவுவகைகள் பற்றித் திட்டமிடுதல், நான்கைந்து பெண்களின் உதவியோடு அவன் அம்மாவும், பாட்டியும் நான்கைந்து நாட்கள் ஓயாமல் வேலை செய்து உணவுவகைகளைத் தயார் செய்தல், பாத்திரங்களிலும், துணிமூட்டைகளிலும் அவற்றை நிரப்புதல் என்று ஏகப்பட்ட வேலைகள் - வீட்டுப் பெண்களுக்கு. ஆண்களுக்கு மாட்டு வண்டி ஏற்பாடு செய்வது ஒன்றுதான் வேலை.

ஒரு வாரம் முன்பே அவன் அப்பா வண்டிக்கு ஏற்பாடு செய்து விடுவார். ஊரில் ராமசாமி, கண்ணாயிரம் என்று இரண்டு வண்டிக்காரர்கள் இருந்தார்கள்.

கண்ணாயிரத்தின் வண்டியை அவனுக்குக் கட்டோடு பிடிக்காது. ஆமை வேகத்தில் நடக்கும் மாடுகள். (இந்த பாசஞ்சர் ரயிலைக் கூட அவன் ஊர்க்காரர்கள் 'கண்ணாயிரம் வண்டி' என்றுதான் சொல்வார்கள்!) பலமான சத்தங்களுடன், ஏகப்பட்ட ஆட்டங்களுடன், அசைந்து அசைந்து செல்லும் பழுது பார்க்கப்படாத வண்டி. ஐந்து மைல் பிரயாணம் செய்து ஸ்டேஷனில் போய் இறங்குவதற்குள் உடம்பெல்லாம் வலி எடுத்து விடும்.

ராமசாமியின் வண்டி இதற்கு நேர் எதிர். வில் வண்டி என்றால் அதுதான். பார்ப்பதற்கே கட்டுமஸ்தாக, கம்பீரமாக இருக்கும். ராமசாமி தார்க்குச்சியை உயர்த்தி 'டிர்ர்ர்..' என்று சப்தம் எழுப்பியதுமே மாடுகள் பறக்கத் துவங்கி விடும். பூஞ்சோலை ஸ்டேஷனில் நிற்காமல் போகும் எக்ஸ்பிரஸ் ரயில் போல அப்படி ஒரு வேகம்! 

இவ்வளவு வேகத்துக்கும் வண்டியில் ஒரு சிறு ஆட்டம் இருக்க வேண்டுமே! ஊஹூம். சும்மா ரோடுக்கு மேல் மிதந்து போகிற மாதிரி அற்புதமான சவாரி. வண்டி ஸ்டேஷனை அடைந்தவுடன், வண்டிப் பயணம் முடிந்து  விட்டதே என்று ஏக்கமாக இருக்கும்.

வண்டிக்காரர்களும் வண்டியைப் போலத்தான். வண்டி ஓட்டும்போது ராமசாமி உற்சாகமாகச் சிரித்துப் பேசிக்கொண்டே வருவான். அவனுக்கு இரண்டு பெண்டாட்டிகள் என்று இவன் நண்பர்கள் சிலர் சொல்வார்கள். 

ராமசாமியிடம் இதுபற்றிக் கேட்க ரகுவுக்கு ஆசை. ஆனால் ஏதோ ஒரு தயக்கம். என்னதான் உற்சாகமாகப் பேசினாலும், ராமசாமி கொஞ்சம் முரட்டுத்தனமானவன். கோபம் வந்தால் தார்க்குச்சியை மாடுகளின் மீது வேகமாகப் பாய்ச்சி விடுவான். அதனாலேயே ரகுவுக்கு அவனிடம் உள்ளூர ஒரு பயம் உண்டு.

இதற்கு மாறாக, கண்ணாயிரம் சுரத்து இல்லாமல் இருப்பான். அதிகம் பேச மாட்டான். பேச்சில் அலுப்புதான் தெரியும். மாடுகளை ஒன்றும் செய்ய மாட்டான். அதட்டக் கூட மாட்டான். அவை பாட்டுக்குத் தம் மனம் போல் போய்க் கொண்டிருக்கும். ரகு அவனிடம் ஏதாவது கேட்டால் சிடுசிடுப்பான்.

இப்போது நினைத்துப் பார்க்கும்போது ரகுவுக்கு அவர்கள் இருவருமே அப்படித்தான் இருந்திருக்க முடியும் என்று தோன்றியது. அந்த இருவரின் வண்டிகளும், மாடுகளும், வண்டியோட்டும் விதமும் அவர்கள் வாழ்க்கையின் பிரதிபலிப்பாக இருந்திருக்கக் கூடும்.

ஸ்டேஷனுக்கு வெளியே வந்தான் ரகு. வெறிச்சோடியிருந்தது. முன்பெல்லாம் ஸ்டேஷனுக்கு வெளியே பஸ் நிற்கும். இப்போது பஸ் இந்தப் பக்கம் வருவதில்லை. ஸ்டேஷன் பக்கம் திரும்பாமல் மெயின் ரோடில் நேரே போய் விடுகிறது. 

உலகத்தில் எல்லாமே அவசரமாகிக் கொண்டு வருகின்றன. மனிதர்களைப் போலவே இயக்கங்களும் அலட்சிய பாவத்தை வளர்த்துக் கொள்கின்றன. 'உன்னை ஏற்றிக் கொள்வதற்காக நான் ஸ்டேஷனுக்கெல்லாம் வர முடியாது. மெயின் ரோடுக்கு வந்து ஏறிக் கொள்' என்கிறது பஸ்!

இவன் ஊருக்கு வருவதாக பால்ய நண்பன் கிருஷ்ணனுக்கு எழுதியபோது அவனும் இப்படித்தான் பதில் எழுதியிருந்தான். 

'நீ நேரே பஸ் பிடித்து  வீட்டுக்கு வந்து விடு. நான் கொஞ்சம் பக்கத்து ஊர் வரை போய் விட்டு வர வேண்டியிருக்கிறது. வீட்டில் என் மனைவி இருப்பாள். நான் வர தாமதமானால் சாப்பிட்டு விட்டு ஓய்வெடுத்துக் கொள்.'

நல்ல வேளை. 'நான் வருவதற்குள் உன் வேலை முடிந்து விட்டால், நீ ஊருக்குக் கிளம்பி விடு' என்று எழுதவில்லை.

இதே கிருஷ்ணனுடன் சேர்ந்து இந்த கிராமத்தில் எவ்வளவு காலம் சுற்றியிருக்கிறான்! ரகுவையும் கிருஷ்ணனையும் தனியே பார்க்க முடியாது என்று மற்றவர்கள் சொல்கிற அளவுக்கு நெருக்கம். இத்தனைக்கும் இருவரின் குடும்பத்துக்கும் பொருளாதார அந்தஸ்தில் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு!

கிருஷ்ணனின் அப்பா மளிகைக் கடையில் கணக்கு எழுதிப் பிழைப்பு நடத்தியவர். ரகுவின் குடும்பமோ அந்த ஊரிலேயே அதிக செல்வமும், செல்வாக்கும், மதிப்பும் நிறைந்த குடும்பம். 

அவன் தாத்தா பொன்னம்பலத்தின் பெயரைச் சொன்னவர்கள் யாரும் அந்த ஊரில் இல்லை. 'பெரிய ஐயா' என்றுதான் அவரைச் சொல்வார்கள். ரகுவின் வீட்டு மனிதர்களுக்கும் கூட அவர் 'பெரிய ஐயா' ஆகி விட்டார். 

அந்தக் காலத்தில் அந்த ஊரிலேயே மிகப் பெரிய வீடு ரகுவின் வீடுதான். (பிற்காலத்தில் சில புதுப் பணக்காரர்கள் இன்னும் பெரிதாக, நவீனமாக வீடுகளைக் கட்டிக் கொண்டார்கள்) வீட்டு உறுப்பினர் யார், வேலைக்காரர் யார், விருந்தினர் யார் என்று இனம் காண முடியாத அளவுக்கு வீடு முழுவதும் நிறைந்திருக்கும் கூட்டம்.

சமையலறையில் குடும்ப உறுப்பினர்களுக்காகச் செய்யப்படும் சமையலைத் தவிர, வீட்டு முற்றத்தில் கோட்டை அடுப்பை வைத்து நாள் முழுவதும் பெரும் கலயங்களில் சோறும், குழம்பும் பொங்கிக் கொண்டிருக்க, வீட்டுக் கூடத்தில் ஒரு புறம் சாப்பாட்டுப் பந்தி, மறு புறம் காய்கறிகள் நறுக்குதல் என்று அமர்க்களப்படும்.

நினைத்துப் பார்த்தபோது ரகுவுக்கு எல்லாமே மலைப்பாக இருந்தது. அவன் சென்னையில் வசிக்கும் ஒற்றைப் படுக்கையறைக் குடியிருப்புக்கு எப்போதாவது ஒரு விருந்தாளி வந்து விட்டாலே இவன் மனைவிக்கு மூச்சு முட்டி விடும். இரண்டு முறை குக்கர் வைத்து, மிக்ஸியில் எதையோ அரைத்து, எரிவாயு அடுப்பில் ஒரு குழம்பு வைப்பதற்குள் பெரிய சோர்வு வந்து விடுகிறது அவன் மனைவிக்கு.

அவனுக்கும்தான்!

பட்ஜெட்டில் ஏற்கெனவே விழுந்திருக்கும் துண்டு இன்னும் சற்று அகலமாக விரிந்து கொள்ளும்போது, எப்படி அதை நிரப்பப் போகிறோம் என்ற கவலை. இவர்கள் இருவரின் கவலைகளும் இவர்கள் முகத்தில் பிரதிபலிக்கும்போது 'முகம் திரிந்து நோக்கக் குழையும் விருந்து' என்ற வள்ளுவரின் கூற்றை அறியாமலேயே அதன்படி செயல்படும் விருந்தாளி அடுத்த வேளைச் சாப்பாட்டுக்குள் ஊருக்குக் கிளம்பி விடுவார்.

விருந்தாளி கிளம்பிச் சென்றதும், அவர் இவன் வகையாக இருந்தால் இவன்  மனைவி இவன் மீதும், இவன் மனைவி வகையாக இருந்தால் இவன் தன் மனைவி மீதும் குற்றம் சொல்லி ஒரு சிறிய சண்டை போட்டுக் கொள்வார்கள். 

ஆனால் விருந்தாளி கிளம்பிச் சென்றதில் இருவருக்குமே நிம்மதிதான் என்பது இருவருக்குமே தெரியும். 

'இப்போதே இப்படி இருக்கிறதே, இன்னும் ஒரு குழந்தை பிறந்தால் எப்படிச் சமாளிக்கப் போகிறோம்?' என்ற இவர்கள் கவலையை அறிந்துதானே என்னவோ இவர்கள் வாழ்க்கையில் இன்னும் குழந்தை பிரவேசிக்கவில்லை!

மெல்ல நடந்து மெயின் ரோடுக்கு வந்தான். வழியில் ஒரு மாட்டு வண்டி நின்றிருந்தது. அசப்பில் பார்த்தால் வண்டிக்காரன் கண்ணாயிரம் போல் இருந்தான். 

'ஒருவேளை கண்ணாயிரத்தின் மகனாக இருப்பானோ? சேச்சே! வண்டிக்காரனின் மகன் வண்டிக்காரனாகத்தான் இருக்க வேண்டுமா என்ன? என்ன ஒரு பிரபுத்துவ நோக்குச் சிந்தனை!'

இவன் வண்டியைத் தாண்டிச் சென்றபோது, 'வண்டி வேண்டுமா?' என்பதுபோல் வண்டிக்காரன் இவனைப் பார்த்தான். 

'அனேகமாக எல்லா ஊர்களுக்கும் பஸ் வசதி இருக்கும் இந்தக் காலத்தில் மாட்டு வண்டியில் யார் போவார்கள்? ஒருவேளை மெயின் ரோட் வரை நடக்க முடியாதவர்கள் பஸ் நிறுத்தம் வரை போவதற்கு இந்த வண்டியைப் பயன் படுத்தலாம்.' 

கடந்து போன காலத்தின் அடையாளமாக நின்ற வண்டிக்காரனை வியப்புடனும், பரிதாபத்துடனும் பார்த்தபடி ரகு விரைந்தான்.

சில நிமிடங்கள் காத்திருந்த பின் பஸ் வந்தது. சென்னை பஸ்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பது போல் பஸ் நிரம்பி வழிந்தது. 

குண்டும் குழியுமான சாலைகளில் நெருக்கமாக நின்றபடியே 20 நிமிடப் பயணம். ரகுவுக்கு கண்ணாயிரத்தின் வண்டியில் பயணம் செய்தது நினைவுக்கு வந்தது.

"பெருங்குடி எல்லாம் இறங்குங்க" என்று கண்டக்டர் அறிவித்ததும், ரகு முண்டியடித்து இறங்கினான். தரையில் கால் வைத்ததும் சிலீர் என்ற உணர்வு உடலில் பரவியது. 

பஸ் கிளம்பிச் சென்றதும் எதிரே பரந்திருந்த ஊரைப் பார்த்தான். ஊரில் அதிக மாற்றம் இல்லை - புதிதாக முளைத்திருந்த ஒரு சில கடைகளைத் தவிர.

மெயின் ரோடில் இருந்து பிரிந்த சாலையில் நடந்து கிருஷ்ணன் வீட்டை அடைந்தான். 

போகும்போது எதிர்ப்பட்டவர்களும், திண்ணைகளில் உட்கார்ந்திருந்தவர்களும் இவனை உற்றுப் பார்த்தனர். 

15 வருடம் கழித்து ஊருக்கு வந்தவனை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. இவனுக்குச் சிலரை அடையாளம் தெரிந்தாலும் காட்டிக் கொள்ளாமல் மேலே நடந்தான்.

கிருஷ்ணன் வீடு திறந்திருந்தது. தயங்கியபடியே உள்ளே நுழைந்தான். 

ஒரு காலத்தில் எப்போது நினைத்தாலும் சுதந்திரமாக உள்ளே போய் வந்த வீடுதான். ஆனால் இப்போது அந்த சுதந்திர உணர்வு இல்லை. அனுமதியின்றி அந்நியர் வீட்டில் நுழையும் தயக்கம்தான் இருந்தது. 

காலடி ஓசை கேட்டு, "யாரது?" என்று அதட்டலான ஆண்குரல் வந்தது. கிருஷ்ணன்தான். நல்ல வேளை வீட்டில் இருக்கிறான்!

"யாரு நீங்க?"

"என்ன கிருஷ்ணா? என்னைத் தெரியலையா?"

"அடேடே ரகுவா? வா வா!"

ரகுவுக்குச் சற்று ஏமாற்றமாக இருந்தது. 'நான் வருவேன் என்று தெரிந்திருந்தும் ஒரு எதிர்பார்ப்பு இல்லையே! ஏதோ எதிர்பாராமல் வந்து விட்ட விருந்தாளியை வரவேற்பது போல் அல்லவோ பேசுகிறான்!'

"நீ எங்கேயோ பக்கத்து ஊருக்குப் போகப் போறதா எழுதியிருந்தியே?"

"போகலை. அதை விடு கழுதை. நாளைக்குப் பாத்துக்கலாம். எப்படி இருக்கே? பாத்து ரொம்ப நாள் ஆச்சு. ம்ம்ம்.. நீ எல்லாம் மெட்ராஸ்ல செட்டில் ஆயிட்டே. வசதியான வாழ்க்கை. ஆஃபீஸ், சினிமா, பீச், டிவி, கிளப்னு உல்லாசமா இருப்பீங்க. நம்மள மாதிரி வயக்காட்டில கெடந்து அல்லல் பட வேண்டியதில்லை!"

ரகுவுக்கு இதற்கு எப்படி பதில் அளிப்பது என்று புரியவில்லை. சிறு வயது முதல் நெருக்கமாகப் பழகிய இரு நண்பர்களிடையே பதினைந்து வருடங்கள் கழித்து நடக்கும் சந்திப்பில், எதிர்ப்புறத்தில் நட்பின் சாயை சிறிதும் இல்லை!

'கிருஷ்ணன் எங்கே?' என்று கேட்டால் 'ரகுவோட சுத்திக்கிட்டிருப்பான்' என்று பதில் வரும் அளவுக்கு இருந்த நட்புக்கு என்ன ஆயிற்று? கால இடைவெளி அவ்வளவு கொடியதா?

சம்பிரதாய விசாரிப்புகள், குளியல், சாப்பாட்டுக்குப் பிறகு பழைய நெருக்கத்தைக் கொண்டு வர ரகு முயன்றான். 

"கிருஷ்ணா! உனக்கு ஞாபகம் இருக்கா? கோடைக்காலத்தில ஆற்று மணல்லே உட்கார்ந்து பேசியும், வெளையாடியும் எவ்வளவு சந்தோஷமா சாயங்கால வேளைகளைக் கழிச்சிருப்போம்!"

"அதையெல்லாம் விடுப்பா. இப்பல்லாம் எப்பவுமே கோடைதான். ஆத்துல எப்பவுமே தண்ணி கெடையாது. கர்நாடகாக்காரன் விட்டாத்தானே? மழை பேஞ்சா வெவசாயம். இல்லாட்டி காய்ச்சல்தான்."

ரகுவுக்கு மேலே எப்படித் தொடர்வது என்று தெரியவில்லை. "சரி. நீ எப்படி இருக்கே?" என்று மட்டும் கேட்டு வைத்தான்.

"ஏதோ இருக்கேன். என்னை மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் எப்பவுமே கஷ்டம்தான். அந்தக் காலத்திலே ஒங்க குடும்பம் ஊரிலேயே பணக்காரக் குடும்பம். ஆனா எங்கப்பா மளிகைக் கடையிலே கணக்கு எழுதிக்கிட்டு, கால் வயத்துக் கஞ்சிக்குக் கூடச் சம்பாதிக்க முடியாத ஏழை..."

"ஆனா நாம எவ்வளவு நெருக்கமாப் பழகினோம்! அப்படி வித்தியாசம் எல்லாம் பாக்கலியே?"

"என்ன இருந்தாலும் பணக்காரன் பணக்காரன்தான். ஏழை ஏழைதான். இப்ப பாரு. நீ படிச்சு மெட்ராஸ்ல நல்ல வசதியா இருக்கே. நான் பாரு இந்த கிராமத்திலேயே கெடந்து உழல்றேன்."

இதற்கு மேல் பேச்சை வளர்த்த விரும்பாமல், ரகு சற்று வெளியே போய் வரலாம் என்று கிளம்பினான். விரைவாக நடந்து அவனுடைய பழைய வீட்டுக்கு வந்தான். தான் பிறந்து, தவழ்ந்து, வளர்ந்து, விளையாடி, வாழ்ந்த வீட்டைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் கால்கள் எட்டி நடை போட்டன. வீட்டை நெருங்க நெருங்க ஒரு படபடப்பு. தெருவில் பல வீடுகள் உருமாறியிருந்தன.

அவனுடைய வீட்டின் முன் வந்து நின்று வீட்டை நிமிர்ந்து பார்த்தான். உடல் முழுவதும் இனம் தெரியாத ஒரு உணர்வு பரவியது. நல்லவேளையாக அவன் வீடு உருமாறவில்லை. வீட்டைப் பார்த்துக் கொண்டே நின்றபோது பழைய நினைவுகள் மனதுக்குள் மழையாகப் பொழிந்தன.

அதோ அந்த திண்டு வைத்த திண்ணையில் கம்பீரமாகச் சாய்ந்து கொண்டு, தெருவில் போவோர் வருவோரையெல்லாம் அழைத்துப் பேசிக் கொண்டிருக்கும் பெரிய ஐயா, அவரிடம் ஏதோ கேட்க நினைத்து, தைரியம் வராமல் சற்றுத் தள்ளி ஒதுங்கி நிற்கும் இவன் அப்பா, சந்தைக் கடைக்குள் போவதுபோல் உள்ளேயும் வெளியேயும் போய் வந்து கொண்டிருக்கும் மனிதர்கள்...

திடீரென்று அந்தக் காட்சி மறைந்து அதே திண்ணையில் பெரிய ஐயா வெட்டி வீழ்த்தப்பட்ட மரம்போல் வீழ்ந்து கிடக்கும் காட்சி...

அந்த நாள் ரகுவுக்கு நன்றாக நினைவிருக்கிறது. அன்று பொங்கல். பொங்கல் தினம் என்றாலே இவனுக்கு ஏக குஷி. பண்ணையாட்கள், குத்தகைக்காரர்கள் என்று பலரும் தங்கள் வயல்களிலும், தோட்டங்களிலும் விளைந்த காய்கறிகளையும், பழங்களையும் கூடை கூடையாகக் கொண்டு வந்து கொடுத்து விட்டு, காலியான கூடைகள் நிறைய அரிசி, நெல், வெல்லம் மற்றும் பணம் என்று வாங்கிக் கொண்டு மகிழ்ச்சியாகத் திரும்பிப் போவது ஒரு கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

ஒருபுறம் வந்தவர்கள் கொண்டு வந்த காய்கறிக் குவியல்கள், மறுபுறம் அவர்களுக்குக் கொடுப்பதற்கான அரிசிக் குவியல் என்று கூடம் நிரம்பி வழியும். சீப்பு சீப்பாக வரும் வாழைப் பழங்களை இவனும் நண்பர்களும் கணக்கில்லாமல் வாரம் முழுவதும் தின்றாலும் பழங்கள் தீர்ந்து போகாமல் அழுகிப் போய்க் குப்பைக்குத்தான் போகும்.

திண்ணையில் உட்கார்ந்து கொண்டு எல்லாவற்றையும் பெருமிதமாகப் பார்த்துக் கொண்டிருந்த பெரிய ஐயா சட்டென்று மார்பைப் பிடித்துக் கொண்டு திண்ணையில் சாய்ந்தார். எல்லாம் கண நேரத்தில் நடந்து முடிந்து விட்டது. பெரிய ஐயாவின் நெடிய உடல் ஒரு பெரிய மரம் வேரோடு சாய்வது போல் சாய்ந்து விட்டது.

அதற்குப் பிறகு நடந்த நிகழ்ச்சிகள் எல்லாமே கண் மூடித் திறப்பதற்குள் நடந்தது போல்தான் இருந்தது. நடப்பது என்ன என்று இவனுக்குச் சரியாக விளங்கவும் இல்லை.

இவன் அப்பாவும், பெரியப்பாக்களும், சித்தப்பாக்களும் போட்டுக் கொண்ட பாகப் பிரிவினைச் சண்டைகள், எங்கிருந்தோ வந்து பங்கு கேட்ட  ஒன்று விட்ட உறவுகள், திடீரென்று முளைத்த கடன்காரர்கள், ஜீப்பில் வந்து கடன் பத்திரத்தைக் காட்டி மிரட்டிய கூட்டுறவு வங்கி அதிகாரிகள் என்று பல பூகம்பங்கள் ஒன்றுக்குப் பின் ஒன்றாக வந்து இவனுடைய உலகத்தையே புரட்டிப் போட்டு விட்டன. எல்லாவற்றையும் பைசல் செய்தபின் எதுவும் மிஞ்சவில்லை என்று ஆனதும், இவன் அப்பா குடும்பத்தோடு சென்னைக்குப் போய் அங்கேயே ஒரு வேலை தேடிக்கொண்டு, பிறகு இவன் தலையெடுத்து, அப்பா காலமாகி, பிறகு அம்மாவும்...

"நீங்க...நீ...ரகுதானே?"

குரல் கேட்டு திடுக்கிட்ட ரகு நினைவிலிருந்து விழித்துக் கொண்டான். வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்தபடியே அவனை விசாரித்த மனிதர்...அட...சபாபதி!

"...ஹலோ சபாபதி! சௌக்கியமா?"

"என்னடா ஹலோ கிலோ எல்லாம்? ஃபோன்லயா பேசறே? வாடா உள்ளே" என்றான் சபாபதி உற்சாகமாக.

ஆற்றில் முங்கி எழுந்தது போல் ஒரு புத்துணர்ச்சி ரகுவின் உடலில் சிலீரென்று பாய்ந்தது. கிருஷ்ணனின் பட்டும் படாத பேச்சினால் நொந்திருந்த மனதுக்கு, சபாபதியின் மாறாத நட்புணர்வு ஒரு இதமான மருந்தாக அமைந்தது.

"...இது உன் வீடா?"

"ஒன்னோட வீடுதான்! யார் யார் கையோ மாறி இப்ப எங்கிட்ட வந்திருக்கு."

உள்ளே நுழைந்தபோது ரகுவின் மனதில் நிறைந்திருந்தது மகிழ்ச்சியா துயரமா என்று அவனால் இனம் காண முடியவில்லை.

"சிவகாமி. நம்ம வீட்டுக்கு யார் வந்திருக்காங்கன்னு தெரியுமா? நம்ம பெரிய ஐயாவோட பேரன். ரகு. இலையைப் போடு."

"வேண்டாம். நான் சாப்பிட்டாச்சு."

"எங்கே? உன் உயிர் நண்பன் கிருஷ்ணன் வீட்லயா?" சபாபதி கேலியாகச் சிரித்தான்.

"ஆமாம். ஒங்கிட்ட ஒண்ணு கேக்கணும்...கிருஷ்ணன் எப்படி இருக்கான் இப்ப?"

"பாத்தியா? நான் எப்படி இருக்கேன்னு கேக்க மாட்டே! எங்கிட்டயே கிருஷ்ணனைப் பத்தி விசாரிக்கறே!"

"தப்பா நெனைக்காதே சபாபதி... கிருஷ்ணன் எங்கிட்ட நடந்துக்கிட்டது ஒரு மாதிரியா இருந்தது. முன்னை மாதிரி நெருக்கம் இல்ல அவன் கிட்டே. எங்கிட்டேயிருந்து வெலகிப் போக விரும்பற மாதிரி இருக்கு அவனோட பேச்சு, நடத்தை எல்லாம். அதுதான் கேட்டேன்....ஆமாம் நீ என்ன பண்ணிக்கிட்டிருக்கே? மொதல்லேயே கேக்காதது என் தப்புத்தான்."

"விடுப்பா. நான் சும்மா வெளையாட்டுக்குச் சொன்னேன். அதைப் போய்ப் பெரிசா எடுத்துக்கிட்டு...என்னைப் பத்திக் கேட்டே இல்லே? நான் பூஞ்சோலையிலே பாங்க்கிலே பியூனா இருக்கேன். நம்ம படிப்புக்கு அவ்வளவுதான்! ஆனா எனக்கு வேலை புடிச்சிருக்கு. என்னோட தகுதிக்கு அதிகமாகவே சம்பளம். இங்க கொஞ்சம் நெலம் இருக்கு. சந்தோஷமா இருக்கேன்...ம்ம்ம்... கிருஷ்ணனைப் பத்திக் கேட்டே இல்லே? அவனுக்கென்ன? நல்லாத்தான் இருக்கான்! கிராம அதிகாரி. கவர்மென்ட் சம்பளம். அதைத் தவிர வெவசாயம். சின்னதா ஒரு ரைஸ் மில் கூட வச்சிருக்கான்... ஆமாம். என்ன திடீர்னு இவ்வளவு நாள் கழிச்சு ஊர் ஞாபகம்? மாரியம்மன் கோவிலுக்கு ஏதாவது வேண்டுதலா?"

"அதெல்லாம் இல்லேப்பா. ஒன்னைப் பார்த்தது நல்லதாப் போச்சு. கிருஷ்ணன்கிட்ட என்னால ஃப்ரீயாப் பேச முடியும்னு தோணலே...எங்கப்பா காலத்திலேயே ஊர்ல இருந்த எல்லா நிலங்களையும் வித்துட்டு வந்துட்டாருன்னுதான் நெனச்சுக்கிட்டிருந்தேன். ஆனா தரிசு நெலம் ஒண்ணு இருக்கறதா அப்பா அடிக்கடி சொல்லிக்கிட்டிருப்பாரு. ஆனா அதுக்குப் பத்திரம் எதுவும் இல்லையாம். பட்டா மட்டும்தான் இருக்கு. அதை வித்தா கொஞ்சம் பணம் கெடைக்குமேன்னுதான் வந்தேன்....ஒங்கிட்ட சொல்றதுக்கென்ன? ஏதோ மெட்ராஸ் போய்ப் படிச்சேன்னு பேரே தவிர நான் ஒண்ணும் பெரிய உத்தியோகத்தில இல்லை. ஏதோ ஒரு சாதாரண வேலையிலதான் இருக்கேன். இருக்கறது வாடகை வீடுதான். வாங்கற சம்பளம் குடும்பச் செலவுக்கே சரியா இருக்கு. கடன் வாங்காம மாசத்தை ஓட்டினா அதுவே ஒரு சாதனைங்கற மாதிரிதான் என்னோட வாழ்க்கை போய்க்கிட்டிருக்கு. அதுதான் இந்த நெலத்தை வித்தால் கொஞ்சமாவது பணம் தேறுமேன்னு..."

வாக்கியத்தை முடிப்பதற்குள் ரகுவுக்குத் தொண்டை கம்மியது. சிரமப்பட்டு அழுகை வராமல் சமாளித்தான்.

ரகுவின் குரல் கம்மியதை சபாபதி கவனித்து விட்டான். ரகுவின் அருகில் வந்து அவன் தோளைத் தொட்டான். "ரகு! பாவம்டா நீ! நான் இதை எதிர்பாக்கல. இங்க நாங்க எல்லோருமே நீ ரொம்ப வசதியா இருக்கறதா நெனச்சுக்கிட்டிருக்கோம். பெரிய ஐயாவின் வாரிசுக்கா இந்த நிலைமைன்னு ஒரு புறம் தோணினாலும், என் பால்ய சினேகிதன் இப்படி இருக்கிறது இன்னும் வருத்தமா இருக்கு. என்னை மாதிரி சாதாரணக் குடும்பத்தில பொறந்தவங்க கூட வசதியா இருக்கச்சே பெரிய குடும்பத்தில பொறந்த நீ எப்படியோ இல்ல இருக்கணும்? கவலப்படாதே. நல்ல நேரம் வந்தா எல்லாம் சரியாயிடும். நான் இதை வெறும் வார்த்தைக்காகச் சொல்லலே! நாங்கள்ளாம் எவ்வளவோ கீழ் மட்டத்தில இருந்து இப்ப முன்னுக்கு வரலியா?"

ரகுவுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. உயிர் நண்பனாக இருந்த கிருஷ்ணன் அந்நியன் போல் பழகும்போது சிறு வயதில் ஓரளவே நெருக்கமாக இருந்த சபாபதி உண்மையான அக்கறையோடும் அன்போடும் பேசுகிறான்!

"ஆனா நீ நெனச்சு வந்த காரியம் நடக்கறது கஷ்டம்"

"ஏன் அப்படிச் சொல்றே?" என்றான் ரகு துணுக்குற்று.

"ஏன்னா ஒன்னோட தரிசு நெலத்திலதான் கிருஷ்ணன் ரைஸ் மில் கட்டியிருக்கான்!"

"அது எப்படி? பட்டா எங்கப்பா பேரில இருக்கே?"

"அதையெல்லாம் அவன் மாத்தியிருப்பான். அவன்தானே வில்லேஜ் ஆஃபிஸர்? ஒங்கிட்டயும் முறையான டாகுமென்ட் இல்லையே! கேட்டா அது பொறம்போக்கு நெலம்னு சொல்லுவான். இது மாதிரி நெறைய பேரோட நெலத்தை அவன் கபளீகரம் பண்ணியிருக்கான்."

"சட்டப்படி நான் எதுவும் செய்ய முடியாதா?"

"அது எனக்குத் தெரியாது. ஆனா ரொம்பக் கஷ்டம்னு நெனக்கறேன். உள்ளுர்ல இருக்கிறவங்களே அவன்கிட்ட நெலத்தைப் பறி கொடுத்துட்டுப் பேசாம இருக்காங்க. ஒன்னால என்ன செய்ய முடியும்? பணம் காசு சேர்ந்ததால இப்ப அவன் கிட்ட ஆள்பலம், அரசியல் செல்வாக்கு எல்லாம் வேற இருக்கு."

"அடக்கடவுளே!"

"மனசு ஒடஞ்சு போகாம முயற்சி பண்ணு. உன் விஷயத்தில் அவன் கொஞ்சம் இரக்கம் காட்டலாம். நான் ஏதாவது உதவி செய்யணும்னா சொல்லு. அவனை நேரடியா எதிர்த்து என்னால எதுவும் செய்ய முடியாதுன்னாலும் என்னால முடிஞ்ச உதவியை ஒனக்குச் செய்யறேன்."

"சபாபதி! இதை நான் எதிர்பார்க்கலே!"

"எதை?" என்று சபாபதி சிரித்தான். "சரி அதை விடு. ரொம்ப நாள் கழிச்சு ஒன்னைப் பாக்கறேன். இன்னிக்கு ராத்திரி ஒனக்கு நம்ம வீட்டிலதான் சாப்பாடு. சரியா?"

ரகு இயந்திரமாகத் தலையை ஆட்டினான்.

"ஒன்னைப் பார்த்ததும் ஆத்து மணலில் நாம எல்லாரும் உட்கார்ந்து ஜாலியாப் பேசினதும் வெளையாடினதும் ஞாபகம் வருது. வா கொஞ்சம் ஆத்தங்கரைக்குப் போயிட்டு வரலாம். வெயில் கூடத் தணிஞ்சிருக்கு" என்று அழைத்தான் சபாபதி.

"வெயில் இருந்தாத்தான் என்ன? ஆத்தங்கரையிலதான் பெரிய அரச மரம் இருக்கே! அதோட நிழல்லே இந்த கிராமம் முழுக்க நிக்கலாமே! அதுக்குப் பக்கத்தில ஒரு இடிஞ்சு போன மடம் இருக்குமே - நாமெல்லாம் ஆண்டி மடம்னு சொல்லுவோமே - அந்த மடம் இன்னும் இருக்கா?" என்றான் ரகு உற்சாகம் திரும்பியவனாக.

"மடம் இருக்கு. என்ன, இன்னும் இடிஞ்சு போய்க் குட்டிச் சுவரா இருக்கு. ஆனா..."

"ஆனா என்ன?" என்றான் ரகு.

"வா. போய்ப் பார்க்கலாம்."

ஆற்றை ஒட்டிய சாலை ஒரு மேட்டில் ஏறி அங்கிருந்து சரிவாகக் கீழே இறங்கி ஆற்றங்கரையில் போய் முடியும். மேடான சாலையில் நின்று பார்க்கும்போது கம்பீரமாக நடந்து செல்லும் ஆற்றின் அழகும், கரையில் உள்ள தோப்புகளும், படித்துறையும், இடிந்து போன மடமும், எல்லாவற்றுக்கும் மேலாக, ஓங்கி உயர்ந்து நிற்கும் அந்த அரச மரமும் ஒரு அற்புதமான காட்சியாகக் கண் முன் விரியும்.

ஆனால் இப்போது ரகு அந்த மேட்டிலிருந்து பார்க்கும்போது அவனால் நீர் வற்றிய ஆற்றுப் படுகையைத்தான் பார்க்க முடிந்தது. அந்தக் காட்சியின் சோகம் மனதை அப்பியபோதே ஏதோ உறுத்தியது...ஒங்கி உயர்ந்து நின்று, வந்தவர்களுக்கெல்லாம் வஞ்சனையின்றி நிழல் கொடுத்த அந்த அரச மரம் எங்கே?

"பத்து நாள் முன்னால அடிச்ச பெரிய காத்தில மரம் விழுந்துடுச்சு. வறண்ட காத்து மழையைக் கொண்டு வராததோடு, எத்தனையோ வருஷமா இருந்த இந்த மரத்தையும் சாய்ச்சிடுச்சு" என்றான் சபாபதி.

"எங்கே அந்த மரம்? கீழே விழுந்து கிடக்கா?"

"மரம் விழுந்ததுமே ஆளுக்கு ஆள் கோடாலியை எடுத்துக்கிட்டு வந்து கொஞ்சம் கொஞ்சமா மொத்த மரத்தையும் பொளந்து எடுத்துக்கிட்டுப் போயிட்டாங்க. என்ன மிச்சம் இருக்கப் போவுது? வா, கிட்ட போய்ப் பார்க்கலாம்."

அவர்கள் அருகில் சென்றபோது மரத்தின் ஒரு சில வேர்க்கால்கள் உதிரியாய்க் கிடக்க, அருகே உதிர்ந்த இலைகள் காய்ந்து சருகாகியிருந்தன. எஞ்சியிருந்த அடிப்பகுதியைச் சில சிறுவர்கள் சிறிது சிறிதாகப் பிய்த்துக் கொண்டிருந்தார்கள்.



No comments:

Post a Comment