Saturday, September 17, 2016

20. இரண்டு கொலை ஒரு விடுதலை

 "இந்தச் செய்தியைப் பார்த்தீர்களா?" என்றான் ராம்கி.

ஆனந்த், ராம்கியிடமிருந்து பேப்பரை வாங்கிப் பார்த்தான்.

ரசிகர் தற்கொலை 
பிரபல நடிகை நளினாவின் மர்மச்  சாவைத் தொடர்ந்து அவரது மற்றொரு ரசிகர் நேற்று இன்னமும் கட்டி முடிக்கப்படாத ஒரு கட்டிடத்தின்  மொட்டை மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு முன்பே ஒரு பெண் ரசிகை தன் அபிமான நடிகையின் மறைவைத் தாங்க முடியாமல் தூக்கு மாட்டிக்கொண்டு இறந்தது தெரிந்ததே. நளினாவின் மறைவைத் தொடர்ந்து நிகழ்ந்த இரண்டாவது தற்கொலை ஆகும் இது.

"இதைப்  பற்றி என்ன நினைக்கிறீர்கள்" என்றான் ராம்கி.

"விவரமாக ஒன்றும் போடவில்லையே! இறந்தவர் ஆண் என்பதால் அவர் புகைப்படத்தைக் கூடப்  பிரசுரிக்கவில்லை! நடிகையின் மரணத்தை மர்மச்சாவு என்பதும், மற்ற இரண்டு மரணங்களையும் தற்கொலை என்று எழுதுவதும், புலன் விசாரணைக்கு முன்பே, அனுமானத்தின் அடிப்படையில், இவர்கள் ஒரு முடிவுக்கு வந்து விட்டதைத்தான் காட்டுகிறது."

"ஒரு பிரைவேட் டிடக்டிவ்  என்ற முறையில் நளினாவின் மரணத்தைப் பற்றி நீங்கள் ஆராய்ந்து வருகிறீர்களே, உங்கள் விசாரணையில் ஏதாவது முன்னேற்றம் உண்டா?"

"இல்லை. ஒன்றும் நிச்சயமாகச்  சொல்ல முடியவில்லை. போலீஸ் தரப்பில் தற்கொலை என்று சொல்லி விடுவார்கள் போலிருக்கிறது. வேறு மாதிரி நினைப்பதற்கான தடயம் எதுவும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை."

" உங்களுக்குக் கிடைத்திருக்கிறதா?"

"போலீசுக்கே கிடைக்காதபோது எனக்கு எப்படிக் கிடைக்கும்? அவர்கள் இடத்தைக் காலி செய்த பிறகுதானே நான் அங்கு போனேன்!  நளினாவின் அண்ணன் வற்புறுத்தியதால்தான் இந்தக் கேஸை எடுத்துக் கொண்டேன். அவர் என்னவோ ரொம்பப் பிடிவாதமாக இது கொலைதான் என்று நம்புகிறார். போலீசில் இதை ஒரு தற்கொலை என்று முடிவு செய்து கேஸை முடித்து விடுவார்கள் என்று  பயந்துதான் என்னிடம் வந்தார்."

"ஜனங்கள் கொலை என்றுதான் பேசிக்கொள்கிறார்கள்."

"ஒரு இயல்பான சாவைக் கூட கொலை என்று சொல்வதில்தான்   ஜனங்களுக்கு ஒரு எக்ஸைட்மென்ட் இருக்கும். ஜனங்கள் பேசிக்கொள்வதை வைத்து நாம் எந்த முடிவுக்கும் வர முடியாது. எனக்கு வேண்டியவை தடயங்களும், உண்மையும்தான்."

"உங்களுக்கு ஆட்சேபணை இல்லாவிட்டால், இந்தக் கேஸில் இதுவரை நீங்கள் ஆராய்ந்து கண்டுபிடித்த விஷயங்களை என்னிடம் பகிர்ந்து கொள்ள முடியுமா?"

தன்னுடைய அலுவலகம் இருக்கும் அதே கட்டிடத்தில் இருக்கும் இன்னொரு  அலுவலகத்தில் டைப்பிஸ்டாகப் பணி புரியும் அந்த இளைஞனுக்கு, துப்புத் துலக்குவதில் உள்ள ஆர்வத்தையும், தன்னிடம் இருக்கும் மதிப்பையும் நினைத்துக் கொஞ்சம் பெருமைப்பட்டுக் கொண்டான் ஆனந்த். 'இவன் கூட நாளை ஒரு பெரிய டிடக்டிவாக வரலாம், யாருக்குத் தெரியும்?'

"ஓ, சொல்கிறேன். அதற்கு முன்னால் நளினாவைப்பற்றி நீ என்ன நினைக்கிறாய் என்பதைக் கொஞ்சம் சொல். அந்தப் பின்னணியை வைத்துக் கொண்டு நான் மேலே சொல்கிறேன்."

"உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், கடந்த இரண்டு வருடங்களாக, என்னுடைய எல்லா இரவுகளும் 'அவளோடராவுகள்'தான்* - கனவுகளில்! சினிமா ரசிகர்கள் எல்லோருக்குமே அவர்தான் கனவுக்கன்னி. அழகு, எளிமை, திறமை மூன்றும் அபூர்வமாக இணைந்திருந்த அற்புத நடிகை அவர். குறுகிய காலத்திலேயே, நடிப்பில் பல சிகரங்களை அனாயாசமாகத் தொட்டு விட்டார். இவ்வளவு சீக்கிரம் இப்படி ஒரு முடிவு அவருக்கு வந்திருக்க வேண்டாம். கனவுகள் எல்லாம் பாதியிலேயே கலைந்து விட்டன."

"சரி. நளினாவின் திருமணத்தைப்பற்றி என்ன நினைக்கிறாய்?'

"அது திருமணமே இல்லை சார்! அது ஒரு மோசடி. அந்த ரத்னசபாபதிதான் நளினாவைத் தான் இயக்கிய படத்தில் அறிமுகப்படுத்தினார். அதற்குப் பிறகும் பல படங்களில் வாய்ப்புக் கொடுத்து அவரை ஒரு பெரிய நடிகையாக உருவாக்கினார். ஆனால் திருமண வயதில் மகன், மகள் எல்லாம் உள்ள அந்த அறுபது வயதுக் கிழவரை நளினா திருமணம் செய்து கொண்டதை யாராலும் ஜீரணிக்க முடியவில்லை. அவர் என்னவென்றால் நளினாவுக்காகத் தான் தன்  குடும்பத்தையே துறந்து விட்டு வந்ததாகப் பெரிய தியாகி போலப் பேசுகிறார்! திருமணத்துக்கு ஆறு மாதம் முன்பு, ஒரு விழாவில், நளினா ரத்னசபாபதியைத் தன் திரையுலகத் தந்தை என்று வர்ணித்தார்.அவரும் ஒரு குழந்தையைத் தூக்குவது போல் நளினாவைத் தூக்கித் தோளில் வைத்துக்கொண்டு போஸ் கொடுத்தார். ஆனால் ஏதோ நடந்து விட்டது. நளினாவை மிரட்டித்தான் அவரைத் திருமணத்துக்கு ஒப்புக்கொள்ள வைத்திருப்பார் என்றுதான் பலரும் நினைக்கிறார்கள்."

"ரைட். நளினாவின்  அண்ணன் ரமேஷ்பாபுவும் இப்படித்தான் சொல்கிறார். சரி. சம்பவம் நடந்த அன்றைக்கு வருவோம். இரவு ஷூட்டிங்கில் இருந்து காலை ஏழு மணிக்கு நளினா வீடு திரும்பியிருக்கிறார். சமையற்காரி ஃபிளாஸ்க்கில் காப்பி கொண்டு வந்து வைத்திருக்கிறார். நளினாவுக்கு அடிக்கடி காப்பி குடிக்கும் பழக்கம் உண்டு. அத்துடன் அவர் தனிமையை விரும்புபவர். அதனால் அடிக்கடி சமையற்காரி நளினாவின் அறைக்கு வருவதைத் தவிர்க்கவே  ஃபிளாஸ்க்கில் காப் பி வைக்கும் ஏற்பாடு. நளினா  காப்பியைக் கொஞ்சம் ருசி பார்த்து விட்டு, காப்பி கழுநீர் மாதிரி இருப்பதாகக் கோபமாகப் பேசி சமையற்காரியை வீட்டுக்குப் போகச் சொல்லியிருக்கிறார். சமையற்காரி தயங்கியபோது, "உன் மூஞ்சியைப் பார்க்கவே எனக்குப் பிடிக்கவில்லை. இரண்டு நாள் லீவ் எடுத்துக்கொள். சமையலை நான் பார்த்துக்கொள்கிறேன்." என்று கத்தியிருக்கிறார். சமையற்காரி வேறு வழியில்லாமல் வீட்டுக்குப் போய் விட்டாள். வீட்டில் வேறு வேலைக்காரி கிடையாது. வீட்டு வேலை முழுவதையும் அந்த சமையற்காரிதான் பார்த்துக்
கொண்டிருந்தாள். பன்னிரண்டு மணிக்கு ரத்னசபாபதி வந்து பார்த்தபோது  நளினா இறந்து கிடந்தார் என்பது அவருடைய வாக்குமூலம். ஃபிளாஸ்குக்குக் கீழே நளினாவின் கையெழுத்தில் தன் மரணத்துக்கு யாரும் பொறுப்பில்லை என்றும், தான் தற்கொலை செய்து கொள்வதாகவும் எழுதியிருந்த கடிதம். தற்கொலைக்கான காரணம் எதுவும் குறிப்பிடப்படவில்லை.  ஃபிளாஸ்க்கில் மீதியிருந்த காப்பியை சோதனை செய்து பார்த்ததில், அதில் 'பினோபார்பிடோன்' என்ற தூக்க மாத்திரை கலந்திருந்தது தெரிந்தது. ஃபிளாஸ்க்கின் அடியில் மாத்திரைத் துகள்கள் கொஞ்சம் கரையாமல் இருந்தன. நளினாவுக்குத் தூக்க மாத்திரை உபயோகிக்கும் பழக்கம் உண்டு. விரும்பிய நேரத்தில் தூங்க வேண்டும் என்பதற்காக டாக்டரிடம் கேட்டுத் தூக்க மாத்திரைகள் வாங்கி வைத்திருந்தார். அவர் அவற்றை அதிகம் பயன்படுத்துவதில்லை. ஆனால் அவர் அறையிலிருந்த தூக்க மாத்திரை பாட்டிலில் இருந்துதான் மாத்திரைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. பாட்டிலில் நளினாவின் கைரேகை மட்டும்தான் இருக்கிறது."

"அப்படியானால் திட்டமிட்டே சமையற்காரியை வீட்டுக்கு அனுப்பி விட்டு, நளினா  காப்பியில் தூக்க மாத்திரையைக் கலந்து அருந்தியிருக்கிறார் என்றுதானே தோன்றுகிறது?"

"அப்படித் தோன்ற வேண்டும் என்பதற்காகத்தான் இப்படிப்பட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது!"

"எனக்கு ஒன்றும் பிடிபடவில்லை சார்! இது ஒரு தற்கொலை என்பதில் என்ன சந்தேகம் இருக்க முடியும்?'

"போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டின்படி, நளினா எட்டு மணியிலிருந்து பத்து மணிக்குள் தூக்க மாத்திரையை உட்கொண்டிருக்கிறார். நிச்சயமாக .எட்டு மணிக்கு முன்னால் இல்லை. அப்படியானால், ஏழு மணிக்கு வேலைக்காரியை அனுப்பிய நளினா எட்டு மணி வரை ஏன் தாமதித்திருக்க வேண்டும்?"

"ஒரு வேளை தற்கொலை செய்து கொள்ளலாமா, வேண்டாமா என்று அவர் சற்று நேரம் யோசித்திருக்கலாம்."

"பாஸிபிள். மாத்திரையை அப்படியே விழுங்காமல் ஃபிளாஸ்க்கில் இருந்த காப்பியில் கலந்து ஏன் அருந்த வேண்டும்?"

"ஒரு மாத்திரை என்றால் அப்படியே விழுங்கி விடலாம். ஐந்தாறு அல்லது ஏழெட்டு மாத்திரைகளை அப்படியே விழுங்குவது கஷ்டம் ஆயிற்றே!"

"இந்த விளக்கமும் பொருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனால் வேறு யாரோ காப்பியில் மாத்திரையைக் கலந்திருக்கலாம் என்ற சந்தேகத்தையும் இது எழுப்புகிறது அல்லவா? மாத்திரையை தம்ளரில் கரைக்காமல் ஃபிளாஸ்க்கில் ஏன் கரைக்க வேண்டும்? அப்புறம், அந்தக் கடிதம்!"

"அதற்கென்ன? அது நளினாவின் கையெழுத்து இல்லையா?"

"அவள் கையெழுத்துதான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. கையெழுத்து நிபுணர்கள் கூட இதை உறுதி செய்து விட்டார்கள். ஆனால், கடிதத்தில் காப்பி சிந்தியதால், 'நளினா' என்ற கையெழுத்தில் முதல் இரண்டு எழுத்துக்கள் அழிந்து 'னா' மட்டும்தான் மிஞ்சி இருக்கிறது. அத்துடன்..."

"அத்துடன்?"

"இல்லை. அதை அப்புறம் சொல்கிறேன். கையெழுத்துப் போட்ட இடத்தில் மட்டும் காப்பி சிந்தி முதல் இரண்டு எழுத்துக்கள் அழிந்திருப்பதை என்னால் இயல்பாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. இன்னொரு விஷயம். நளினாவின் மேஜையின் மீது இருந்த மூன்று பேனாக்களில் எவற்றின்   இங்க்குமே  கடிதம் எழுதப்பட்ட  இங்க்குடன் ஒத்துப்போகவில்லை."

"ஒருவேளை கடிதத்தை வெளியிலிருந்து எழுதி எடுத்து வந்திருக்கலாம் இல்லையா?"

"பொதுவாக, தற்கொலை செய்து கொள்பவர்கள், தற்கொலை செய்து கொள்ளப்போகும் முன்புதான் கடிதம் எழுதுவார்கள். கடிதத்தை முன்பே எழுதி வைக்க வாய்ப்பு இல்லை. அப்படி எழுதி வைத்திருந்தால் அது யார் கண்ணிலாவது பட்டு விடக்கூடிய அபாயம் இருக்கிறது. தற்கொலை செய்து கொள்பவர்கள் இப்படிப்பட்ட ரிஸ்க் எடுக்க மாட்டார்கள். மேலும், இரண்டு வரிக் கடிதத்தைக் கடைசி நேரத்தில் எழுதுவது ஒன்றும் கடினம் இல்லையே! அதை ஏன் முன்பே எழுதி வைத்திருக்க வேண்டும்?"

"ஒருவேளை ஸ்டூடியோவில் தற்கொலை செய்து கொள்ள நினைத்துக் கடிதம் எழுதிய பிறகு, ஏதோ ஒரு காரணத்தினால் தற்கொலை செய்து கொள்ள முடியாமல் போயிருக்கலாம்."

"ஒவ்வொரு சந்தேகத்துக்கும் நீ விளக்கம் சொல்வதைப்  பார்த்தால், நீதான் நளினாவைக் கொலை செய்திருப்பாயோ என்று தோன்றுகிறது. அதனால்தான் இதைத் தற்கொலை என்று சாதிக்க முயல்கிறாயா?"

"சார்!"

"பயப்படாதே! விளையாட்டுக்குச் சொன்னேன். பொதுவாக, தவறு செய்தவர்கள்தான் இது போன்ற சந்தேகங்களுக்கெல்லாம் விளக்கம் கொடுக்க முயல்வார்கள். ஆனால் இது போன்ற விளக்கங்கள் உண்மையாக இருந்தாலும் இருக்கலாம்!"

"சார், இது ஒரு கொலையாக இருந்தால்தான் எனக்கு இதில் ஒரு ஆர்வம் இருக்கும். தற்கொலை என்று முடிவானால் சப்பென்று போய் விடும்!"

"பார்க்கலாம். உன் ஆர்வத்துக்காகவாவது இது ஒரு கொலையாகவே இருக்கும் என்று நம்புவோம்!"

"கைரேகைகள் ஏதாவது கிடைத்தனவா சார்?"

"ஃபிளாஸ்க்கிலும், தம்ளரிலும் நளினா, சமையற்காரி ஆகிய இருவரின் கைரேகைகள் மட்டுமே இருக்கின்றன. அறைக்குள் ரத்னசபாபதி உட்படப் பலரின் கைரேகைகள் இருக்கின்றன. நளினா தன் வீட்டுக்கு வருபவர்களைத் தன் அறைக்குள் அழைத்துப் பேசும் வழக்கம் கொண்டவர் என்பதால் இதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை."

"நீங்கள் என்ன சார் நினைக்கிறீர்கள்? இது தற்கொலைதானா?"

"வெல். எனக்கு இது தற்கொலையாக இருக்காது என்று தோன்றியதால்தான் நளினாவின் அண்ணன் கேட்டுக்கொண்டபடி இந்தக் கேஸை எடுத்துக்  கொண்டேன். இது கொலையாக இருக்கலாம் என்பதற்கான சந்தேகங்கள் இருக்கின்றனவே தவிர, இதுவரை வேறு தடயமோ, சாட்சியமோ கிடைக்கவில்லை. ரத்னசபாபதி மீது சந்தேகம் வருவது இயற்கை. ஆனால் அவர்தான் நளினவைக் கொலை செய்தார் என்பதை நிரூபிப்பது இம்பாஸிபிள் - கொலையைக் கண்ணால் பார்த்த சாட்சி யாராவது இருந்தால் ஒழிய! ஆனால் இப்போது உன்னிடம் பேசியதில் எனக்கு ஒரு க்ளூ கிடைத்திருக்கிறது. அதை வைத்து முயற்சி செய்யப்போகிறேன்."

"என்னிடம் பேசியதை வைத்தா? அது என்ன சார் க்ளூ? உங்களிடம் பேசியபிறகு, எனக்குக் குழப்பம்தான் அதிகமாகி இருக்கிறது?"

"அப்படித்தான் இருக்க வேண்டும்! கதைகளில் எல்லாம் அப்படித்தானே வருகிறது? ஒவ்வொரு உரையாடலின்போதும் துப்பறிபவருக்கு எதாவது க்ளூ கிடைக்கும். அவருடைய உதவியாளர் அல்லது நண்பருக்குக் குழப்பம்தான் மிஞ்சும்!"

"என்ன க்ளூ சார் அது? நான் அதைத் தெரிந்து கொள்ளலாமா?'

"அந்த க்ளூவைக் கொடுத்ததே நீதானே? நீ என்னவெல்லாம் சொன்னாய் என்று நினைத்துப் பார்த்தால் உனக்கே அது விளங்கும். சரி, நான் இப்போது நளினாவின் வீட்டுக்குப் போகிறேன். நீயும் வருகிறாயா?"

"ஓ எஸ்." என்றான் ராம்கி உற்சாகமாக. "அங்கே எதாவது தடயம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறீர்களா?'

"அப்படி எதுவும் கிடைக்க வாய்ப்பு இல்லை. போலீஸ் அங்கே ஒரு தூசியைக் கூட விட்டு வைத்திருக்க மாட்டார்கள். ஆனால் கொலை நடந்த இடத்தைப் போய்ப் பார்ப்பதில் எதாவது பலன் கிடைக்கலாம். நம்மை அறியாமலேயே சில எண்ணங்கள் நமக்குத் தோன்றலாம். உனக்கு எதாவது தோன்றினால், அதை என்னிடம் சொல். அதற்குத்தான் உன்னை அழைத்துப் போகிறேன்" என்றார் ஆனந்த்.

"எனக்கென்ன சார் தெரியும்? உங்களுக்குத் தெரியாதது என்ன எனக்குத் தெரியப்  போகிறது?"

"அப்படி இல்லை. நாம் இருவரும் ஒரு வீட்டுக்குப் போகிறோம். அங்கே சில நிமிடங்கள் இருந்து விட்டு வெளியே வருகிறோம். வீட்டுக்குள் நாம் என்ன பார்த்தோம் என்று நாம் இருவரும் தனித் தனியே ஒரு பட்டியல் போட்டால், என் பட்டியலில் இல்லாத சில பொருட்கள் உன் பட்டியலில் இருக்கும். அதாவது நான் கவனிக்காத சில விஷயங்களை நீ கவனித்திருக்கலாம். இப்போது கூட யதார்த்தமாக நீ சொன்ன ஒரு விஷயம்தான் எனக்கு க்ளூவாகத் தோன்றியது."

"அது என்ன வென்று சொல்ல மாட்டீர்கள். சரி விடுங்கள். ஆனால் நளினாவின் வீட்டில் போலீஸ் ஒரு தூசியைக் கூட விட்டு வைத்திருக்க மாட்டார்கள் என்று சொன்னீர்களே? "

"ஆமாம். ஆனால் அந்த அறை, மேஜை, கட்டில், மற்ற விஷயங்கள் எல்லாம் அப்படியேதானே இருக்கும்? அவற்றைப் பார்த்தால் எதாவது தோன்றலாம். ஏன், நளினாவின் ஆவி கூட அங்கே இருக்கலாம்!"

"அப்படி இருந்தால் கவலையே இல்லை. என்ன நடந்தது என்று அந்த ஆவியிடமே கேட்டுத் தெரிந்து கொண்டு விடலாமே!"

"என்ன பிரயோசனம்? ஆவியால் கோர்ட்டில் வந்து சாட்சி சொல்ல முடியாதே!"

ளினாவின் அறையில் விசேஷமாக ஒன்றும் இல்லை. ஆனந்த் ராம்ஜியிடம் சம்பவம் நடந்த தினத்தன்று இருந்த அமைப்பை விளக்கினான்.

"உனக்கு ஏதாவது வித்தியாசமாகத் தென்படுகிறதா பார்!"

"அப்படி எதுவும் தெரியவில்லை. இதற்கு முன்னால் இந்த அறையை நான் பார்த்ததில்லையே! ஜன்னல் கண்ணாடிதான்  புதிதாக இருக்கிறது" என்றான் ராம்ஜி.

ஆனந்த் விரலைச் சொடுக்கினான். 'இதை ஏன் யாரும் கவனிக்கவில்லை?' இது எந்த விதத்தில் புதிரை விடுவிக்கும் என்று அவனுக்குப் புலப்படாவிட்டாலும், சிக்கலின் பிரதான முடிச்சு தன் விரல்களுக்குள் சிக்கி விட்டதாக அவனுடைய உள்ளுணர்வு கூறியது.

ரண்டு நாட்கள் கழித்து ஆனந்தின்  வீட்டில் அந்தச் சிறிய மாநாடு நடந்தது. ஆனந்த், ராம்கி, நளினாவின் அண்ணன் ரமேஷ் பாபு, நளினாவின் கணவர் ரத்னசபாபதி ஆகிய நால்வர் அங்கே குழுமியிருந்தனர்.

"மிஸ்டர் ரமேஷ் பாபு! உங்கள் தங்கையின்  மரணம் கொலையா, தற்கொலையா என்று நான் சொல்வதற்கு முன்,  நான் எப்படி இந்த முடிவுக்கு வந்தேன் என்று சொல்லி விடுகிறேன். இருட்டில் துழாவிக் கொண்டிருந்த எனக்கு ஒரு சிறிய வெளிச்சத்தைக் காட்டியது இந்த ராம்கிதான்" என்று ஆரம்பித்தான்  ஆனந்த்.

"சார்!" என்றான் ராம்கி எதுவும் புரியாமல்.

"குறுக்கே பேசுவது எனக்குப் பிடிக்காது" என்று சிரித்துக்கொண்டே சொன்ன ஆனந்த் தொடர்ந்தான். "நளினாவின் அறைக்கு நானும் ராம்கியும் சென்று பார்த்தபோது, ராம்கிதான் அந்த அறையின் ஜன்னல் கண்ணாடி புதிதாகப் போடப்பட்டிருப்பதை கவனித்துச் சொன்னான். அதைக்கேட்டதும் வழக்கின் முடிச்சு அவிழ்ந்து விட்டதாக என் உள்ளுணர்வு கூறியது. மிஸ்டர் ரத்னசபாபதியை நான் இது பற்றிக் கேட்டபோது, அவர் தனக்கு எதுவும் தெரியாது என்று சொல்லி விட்டார்."

"அது உண்மைதான், மிஸ்டர் ஆனந்த்" என்று இடைமறித்தார் ரத்னசபாபதி. "இது போன்ற விஷயங்களையெல்லாம் நளினாதான் கவனித்துக் கொண்டிருந்தாள். வீட்டில் என்ன ரிப்பேர் வேலைகள் நடக்கின்றன என்று கூட நான் கவனிப்பதில்லை."

"உங்கள் கூற்றை நான் சந்தேகிக்கவில்லையே!" என்றான் ஆனந்த். "நீங்கள் அப்படிச் சொன்னதும், நான் நளினாவின் டைரி, ஃபைல்கள், கணக்குப் புத்தகங்கள் ஆகியவற்றைப் பார்த்தேன். உடைந்து போன ஜன்னல் கண்ணாடியை மாற்றுவதற்காக 'டோர்ஸ்டெப் சர்வீசஸ்' என்ற நிறுவனத்தை அவர் அணுகியிருக்கிறார் என்று தெரிந்தது. அந்த நிறுவனத்தில் விசாரித்ததில், நளினா இறந்த தேதியில்தான் கண்ணாடி மாற்றப்பட்டிருக்கிறது என்று தெரிந்தது. கண்ணாடியை மாற்றச் சொல்லி பரமசிவம் என்ற கான்ராட்க்ட்  தொழிலாளியிடம் சொல்லியிருக்கிறார்கள். அவன் காலை ஏழு மணிக்கே கண்ணாடியை மாற்றி விடுவதாகச் சொல்லி, முதல் நாள் மாலையே நிறுவனத்துக்கு வந்து கண்ணாடியை வாங்கிச் சென்றிருக்கிறான்.

" 'நளினாவின் மரணம் ஒரு கொலை என்றால் அதை நிரூபிக்கக் கண்ணால் பார்த்த சாட்சி யாராவது இருந்தால்தான்  முடியும்' என்று நான் ராம்கியிடம் விளையாட்டாகச் சொன்னேன். உண்மையாகவே ஒரு சாட்சி கிடைத்து விட்ட உற்சாகத்தில் பரமசிவத்தின் விலாசம் கேட்டபோது, இன்னொரு அதிர்ச்சித் தகவல்! இரண்டு நாட்கள் முன்பு, நளினாவின் ரசிகர் ஒருவர் ஒரு புதிய கட்டிடத்தின் மொட்டை  மாடியிலிருந்து  கீழே குதித்துத் தற்கொலை செய்து கொண்டதாக ஒரு செய்தி வெளியானதே, அந்த 'ரசிகர்'தான் பரமசிவம்!

"பரமசிவத்தின் 'தற்கொலை'க்கு என்ன காரணம் என்று கண்டுபிடிக்க வேண்டிய வேலையும் என் தலையில் விழுந்து விட்டது. நளினாவின் கொலையை பரமசிவம் நேரில் பார்த்திருக்கக் கூடும் என்பதால், அவன் கூடக்  கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று எனக்குத் தோன்றியது. நளினாவின் மரணத்தினால் மனமுடைந்துதான் பரமசிவம் தற்கொலை செய்து கொண்டிருப்பான் என்பதை நான் நம்பத் தயாராக இல்லை. முதலில் பரமசிவம் நளினாவின் ரசிகன் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை."

"ஏன் இல்லை? அவன் பர்ஸில் நளினாவின் புகைப்படம் இருந்ததே!" என்றார் ரத்னசபாபதி.

"உங்களுக்கு எப்படித் தெரியும்?"

"ம்ம்.. அதுதான் பத்திரிகைகளில் போட்டிருந்தார்களே!"

"ஓ! சரி. ஆனால் நான் விசாரித்துப் பார்த்ததில், பரமசிவத்தைத் தெரிந்தவர்கள் யாருமே அவனை நளினாவின் ரசிகன் என்று சொல்லவில்லை. அதுவும் நளினாவின் மரணத்தினால் பாதிக்கப்பட்டு, தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்குப் போகக்கூடியவன் என்று யாரும் நம்பவில்லை. அதனால் பரமசிவத்தின் மரணம் ஒரு கொலையாகத்தான் இருக்க வேண்டும், அவன் கொலை செய்யப்பட்டதற்குக் காரணம் அவன் நளினாவின் கொலையை நேரில் பார்த்ததுதான் என்ற முடிவுக்கு நான் வந்தேன்."

"அப்படியானால் நளினாவைக் கொலை செய்தவன்தான் பரமசிவத்தையும் கொலை செய்திருக்க வேண்டும்!" என்றான் ராம்கி.

அவன் கூறியதை ஆமோதிப்பது போல் தலையை ஆட்டி விட்டு, ஆனந்த் தொடர்ந்தான்: "இப்படிப் பார்ப்போம். ஷூட்டிங்கிலிருந்து வந்த நளினா இரவு முழுவதும் கண் விழித்த களைப்பில் படுத்து உறங்கிக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கே வந்த கொலையாளி ஃபிளாஸ்க்கில் தூக்க மாத்திரைகளைக் கரைக்கிறான். அப்போது வீட்டுக்கு வெளியில் இருந்து கொண்டு அறையின் ஜன்னலுக்குக் கண்ணாடி மாற்றிக்கொண்டிருந்த பரமசிவத்தைப் பார்க்கிறான். கொலையாளி தூக்க மாத்திரையைக் காப்பியில் கலந்ததைப் பரமசிவம் பார்த்தானா இல்லையா என்பது நமக்குத் தெரியாது. ஆனால் அவன் பார்த்திருந்தாலும், பார்க்காமல் இருந்திருந்தாலும், பார்த்திருப்பானோ என்ற சந்தேகம் கொலையாளிக்கு வந்திருக்கும். அதனால்தான், இரண்டு நாட்கள் கழித்து அவனையும் ஒரு புதிய கட்டிடத்தின் மொட்டை மாடியிலிருந்து கீழே தள்ளிக் கொலை செய்திருக்கிறான். பரமசிவம் நளினாவின் ரசிகன், நளினாவின் மரணத்தினால் மனமுடைந்துதான் அவன் தற்கொலை செய்து கொண்டிருக்கிறான் என்ற தோற்றத்தை உருவாக்குவதற்காக, அவன் பையில் நளினாவின் புகைப்படம், பத்திரிகையில் வந்த  நளினாவின் மரணச் செய்தி அடங்கிய பத்திரிகையிலிருந்து கிழிக்கப்பட்ட பகுதி ஆகியவற்றைச் செருகியிருக்கிறான். இந்த 'ஆதாரங்களை' வைத்துப் பத்திரிகைகளும் 'நளினாவின் ரசிகர் தற்கொலை' என்ற சுவாரஸ்யமான கதையைச் செய்தியாக வெளியிட்டு விட்டன!"

"பரமசிவம் அந்தக் கட்டிடத்தில் என்ன செய்து கொண்டிருந்தான்?" என்று கேட்டான் ரமேஷ் பாபு.

"எதோ ஒரு வீட்டில், ஜன்னல்களுக்கு கண்ணாடி பொருத்திக் கொண்டிருந்தான் என்று சுலபமாகச் சொல்லி விடலாம். ஆனால் அது உண்மையில்லை. முதலில் அது ஒரு புதிய கட்டிடம். கண்ணாடி பொருத்தும் வேலையில் ஒன்றுக்கு மேற்பட்ட தொழிலாளிகள் ஈடுபட்டிருப்பார்கள். மின்  இணைப்பு பெறப்படாத நிலையில், இரவில் அங்கே வேலைகள் நடப்பதில்லை. கொலையாளி சொல்லித்தான் அவன் அங்கே வந்திருப்பான்."

"கொலையாளி சொன்னதற்காகப் பரமசிவம் ஏன் அங்கே வர வேண்டும்?" என்றார் ரத்னசபாபதி.

நளினாவின் கொலை நடந்த சமயத்தில், கொலையாளி பரமசிவத்திடம் பேசி, அங்கே நடந்ததை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று சொல்லிப் பணம் தருவதாகச் சொல்லி இருக்கலாம். கொலையாளி பரமசிவத்தை இந்தக் கட்டிடத்துக்குக் குறிப்பிட்ட தேதியில், குறிப்பிட்ட நேரத்தில் வரச்  சொல்லியிருக்கலாம். மொட்டைமாடிக்குப் போய்ப் பேசினால்தான் ரகசியமாக இருக்கும்  என்று கொலையாளி சொன்னதை நம்பிப் பரமசிவம் அங்கு போயிருக்கிறான்."

"கொலையாளிக்கும் அந்தக் கட்டிடத்துக்கும் எதாவது தொடர்பு இருக்குமா சார்?" என்றான் ராம்கி.

"அப்படி இருக்க வேண்டும் அன்று அவசியமில்லை. பாதி முடிக்கப்பட்ட பல கட்டிடங்கள் சென்னையில் இருக்கின்றன. நாம் தெருவில் நடந்தோ வாகனத்திலோ போகும்போது இவற்றைப் பார்த்திருக்கலாம். சில கட்டிடங்களில் ஒப்புக்கு ஒரு வாட்ச்மேனைப் போட்டிருப்பார்கள். சிலவற்றில் வாட்ச்மேன் யாரும் இருக்க மாட்டார்கள். கட்டிடத்துக்குள், தண்ணீர்க்  குழாய், மின்விளக்கு போன்றவை நிறுவப்பட்டிருந்தாலொழிய, அவற்றில் திருடிக்கொண்டு போவதற்கு எதுவும் இல்லை என்பதால் சில கான்ட்ராக்டர்கள்  அலட்சியமாக இருப்பார்கள். அது போன்ற ஒரு கட்டிடம்தான் இது.  கொலையாளி பரமசிவத்தைப் பிடித்துக் கீழே தள்ளிக் கொலை செய்திருக்கிறான். பரமசிவம் நளினாவின் ரசிகன் என்று காட்ட அவன் பையில் நளினாவின் மரணச் செய்தி அடங்கிய பேப்பர் கட்டிங்கையும், நளினாவின் ஃபோட்டோவையும் திணித்திருக்கிறான். கொலையாளி தன்  பாக்கெட்டில் பண நோட்டுக்களைத் திணிக்கிறான் என்று கூடப்  பரமசிவம் நினைத்திருக்கலாம்!"

"இதெல்லாம் என்ன சார் கதை? நளினாதான், தான் தற்கொலை செய்து கொள்வதாகக் கடிதம் எழுதி வைத்திருக்கிறாளே!" என்றார் ரத்னசபாபதி.

"கதையே அங்கேதானே  இருக்கிறது? அந்தக் கடிதம் பற்றி ஆரம்பத்திலிருந்தே எனக்கு ஒரு உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது. கையெழுத்தின் முதல் பகுதியில் மட்டும் காப்பி சிந்தி இங்க் கலைந்திருந்ததும், அந்தக் கடிதம் எழுதப்பட்ட இங்க் அங்கிருந்த மூன்று பேனாக்களில் ஒன்றின் இங்க்கோடு கூட ஒத்துப்போகாமல் இருந்ததும், எனக்கு சந்தேகத்தை உண்டாக்கின. இதை நான் குறிப்பிட்டபோது, கடிதத்தை  வெளியிலிருந்து எழுதிக்கொண்டு வந்திருக்கலாமே என்று ராம்கி கேட்டான். வெளியிலிருந்தென்றால், ஒருவேளை ஸ்டுடியுவிலிருந்தா (அங்கிருந்துதானே  நளினா  வீட்டுக்கு வந்தார்!)  என்று தோன்றியதும், உடனே ஒரு பொறி தட்டியது.

"நளினா  இறப்பதற்கு முந்திய இரண்டு மூன்று தினங்களில் ஸ்டூடியோக்களில் படமாக்கப்பட்ட காட்சிகள் பற்றி விசாரித்தேன். அவர் இறந்ததற்கு இரண்டு நாட்கள் முன்பு எடுக்கப்பட்ட ஒரு காட்சியில் கதாநாயகி இதே போன்று ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டுத் தற்கொலை செய்து கொள்ள முயல்கிறாள். கதாநாயகியாக நடித்தது நளினாதான் என்று நான் சொல்ல வேண்டியதில்லை. அந்தக் கடிதத்தின் வாசகமும், நளினா  எழுதி வைத்திருந்த கடிதத்தின் வாசகமும் ஒன்றுதான். வாசகம் மட்டும் அல்ல, கடிதமும் ஒன்றுதான்! படப்பிடிப்பின்போது கடிதத்தை நளினா தானே தன்  கைப்பட எழுதியிருக்கிறார்.  கொலையாளி அந்தக் கடிதத்தை எடுத்து வைத்துக்கொண்டு, அதை நளினாவின் தற்கொலைக் கடிதமாக மாற்றி விட்டான்!"

"ஆனால் திரைப்படத்தில் கதாநாயகியின் பெயர் வேறாக இருந்திருக்குமே?" என்றான் ராம்கி.

"ஆமாம். அதிலும் கொலையாளிக்கு அதிர்ஷ்டம்தான். கதாநாயகியின் பெயர் புவனா.அதனால்தான் அதை நளினா  என்று தோன்றும்படி செய்ய முதல் இரண்டு எழுத்துக்களில் மட்டும் காப்பி சிந்தும்படி செய்திருக்கிறான் அவன். தன் விரலைப் பயன்படுத்தித்தான் கொலையாளி இதைச் செய்திருக்க வேண்டும். ஆனால் விரல் ரேகை அந்த இடத்தில் பதிந்திருக்காது.என்னுடைய யூகம் என்னவென்றால், கொலையாளி நளினாவை எப்படிக் கொல்வது என்ற யோசனையில் இருந்திருக்கிறான். இந்தக் கடிதத்தைப்  பார்த்ததும், அவரைக் கொலை செய்து விட்டு, அதைத் தற்கொலை என்று ஜோடிக்க ஒரு நல்ல வழி கிடைத்து விட்டது அவனுக்கு!"

"அப்படியானால், நீங்கள் குறிப்பிட்ட காட்சி படம் பிடிக்கப்பட்டபோது  கொலையாளி  அங்கே இருந்திருக்கிறான்." என்றான் ரமேஷ்பாபு, ரத்னசபாபதியைப் பார்த்தபடி. ரத்னசபாபதி இது எதையும் கவனிக்காத்தவர் போல் வேறு எங்கோ பார்த்துக்கொண்டிருந்தார்.

"நிச்சயமாக! பின்னே, நளினாவா அந்தக் கடிதத்தை வீட்டுக்கு எடுத்து வந்திருப்பார்?"

"சார், இந்தக் கடிதத்தைப்  பற்றி நாம் பேசிக்கொண்டிருந்தபோது, அதில் இன்னொரு விஷயம் இருப்பதாகவும், அதை அப்புறம் சொல்வதாகவும் சொன்னீர்கள்!"

"ஆமாம். கடிதத்தில் கையெழுத்து தமிழில் இருக்கிறது. நான் நளினாவின் ஃபைல்களைப் பார்த்த வரையில், அவர் பொதுவாக ஆங்கிலத்தில்தான் கையெழுத்துப் போட்டு வந்திருக்கிறார். ரசிகர்களுக்கு அனுப்பும் புகைப்படங்களில் வேண்டுமானால் தமிழில் கையெழுத்துப் போட்டிருக்கலாம். எனவே, அவர் தன்னுடைய 'தற்கொலைக் கடிதத்தில்' தமிழில் கையெழுத்துப் போட்டிருப்பது, எனக்கு சற்று விசித்திரமாகத் தோன்றியது."

"சரி. நளினாவுக்குத் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கம் இல்லாவிட்டால், அவர் ஏன் சமையற்காரியை வீட்டுக்குப் போகச் சொன்னார்?" இதைக் கேட்டதும் ராம்கிதான்.

"அப்படி யார் சொன்னது?"

"சமையற்கரிதானே அப்படிச் சொல்லியிருப்பதாக நீங்கள் சொன்னீர்கள்?'

"ஆமாம். ஆனால் சமையற்காரி சொன்னது உண்மையா பொய்யா என்று எப்படித் தெரியும்? அதைப் பொய் என்று சொல்லக்கூடிய ஒரே நபர் நளினாதானே?"

"அப்படியானால் சமையற்காரி பொய் சொல்லியிருக்கிறாளா? அவளும் இந்தக் கொலைக்கு உடந்தையா?" என்றான் ரமேஷ் பாபு கோபத்துடன்.

"உடந்தையாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. சமையற்காரி வழக்கம் போல் 8 மணிக்கு வீட்டுக்குப்  போயிருக்கலாம். அதற்குப் பிறகு கொலை நடந்திருக்கலாம். கொலையாளி பணம் கொடுத்தோ, மிரட்டியோ சமையற்காரியை இப்படிச் சொல்லச் சொல்லியிருக்கலாம். நளினாவின் மரணம் தற்கொலை என்பதற்கு ஒரு வலுவான சாட்சியாக அமைந்து விட்டதே சமையல்காரியின் வாக்குமூலம்!"

"வெரி  குட்  மிஸ்டர் ஆனந்த்!" என்றான் ரமேஷ்பாபு "ஆனால் கொலையாளி யார் என்று நீங்கள் இதுவரை சொல்லவேயில்லையே?"

"நான் ஏன் சொல்ல வேண்டும்? அதுதான் மிஸ்டர் ரத்னசபாபதியே குற்றத்தை ஒப்புக்கொண்டு விட்டாரே!" என்றான் ஆனந்த்.

"நான் எங்கே ஒப்புக்கொண்டேன்? நான் எ ந்தக் குற்றமும் செய்யவில்லை, எதையும் செய்ததாக ஒப்புக்கொள்ளவுமில்லை. உங்கள் கற்பனைக்கு ஒரு அளவே இல்லை போலிருக்கிறது" என்றார் ரத்னசபாபதி.

"அப்படியா? சற்றுமுன், பரமசிவம் நளினாவின் ரசிகன் இல்லை என்று நான் சொன்னதற்கு, அவன் பர்ஸில்  நளினாவின் புகைப்படம் இருந்ததே என்று சொன்னீர்கள். அது எப்படி உங்களுக்குத் தெரியும் என்று நான் கேட்டதற்கு, பத்திரிகையில் போட்டிருந்ததாகச் சொன்னீர்கள். எ ந்தப் பத்திரிகையிலும் புகைப்படத்தைப் பற்றிக் குறிப்பிடவில்லை. நளினாவின் கொலைச்செய்தி வந்த பத்திரிகையின் க்ளிப்பிங் இருந்தது என்று மட்டும்தான் குறிப்பிட்டிருந்தார்கள். புகைப்படத்தைப் பற்றிப் பத்திரிகைகள் குறிப்பிடாததற்கு காரணம், போலீசார் இது பற்றிப் பத்திரிகைகளுக்குத் தெரிவிக்கவில்லை. போலீசார் தெரிவிக்காததற்குக் காரணம் அந்தப் புகைப்படம் பற்றி அவர்களுக்கு இருந்த சந்தேகம்தான்!"

"என்ன சந்தேகம் சார் அது?" என்றான் ரமேஷ் பாபு.

"சொல்கிறேன். மிஸ்டர் ரத்னசபாபதி. நளினா  ரசிகர்களுக்குத் தான் கையெழுத்துப் போட்ட புகைப்படத்தைத்தானே அனுப்புவார்?"

"ஆமாம்."

"ஆனால் பரமசிவத்தின் பர்ஸில் இருந்த புகைப்படத்தில் அவர் கையெழுத்து இல்லை."

ரத்னசபாபதி பெரிதாகச் சிரித்தார். "இது ஒரு விஷயமா சார்? நளினா வரிசையாகப் பல புகைப்படங்களில் கையெழுத்துப் போடுவாள். அப்படிப் போடும்போது, ஒரு புகைப்படத்தில் கையெழுத்துப் போடாமல் விட்டிருக்கலாம். இது மிகவும் இயல்பான விஷயம். இதையெல்லாம் ஒரு பாயின்ட் என்று எடுத்துப்  பேசுகிறீர்களே!"

"நான் சொன்ன பாயின்ட் மிகவும் பலவீனமானது என்று தெரிந்ததும் உங்களுக்கு எவ்வளவு நிம்மதி! இத்தனை நேரம் டென்ஸாக இருந்த நீங்கள் ஒரு கணத்தில் ரிலாக்ஸ் ஆகி விட்டீர்களே! ஆனால், இது என்னுடைய சந்தேகம் இல்லை. போலீசின் சந்தேகம். ஏனெனில், சமீபத்தில், ரசிகர்களுக்கு அனுப்புவதற்காக, தன் புதிய ஸ்டில் ஒன்றை 1000 பிரதிகள் எடுத்து வைத்திருந்தார் நளினா. இது ஒரு புதிய தோற்றத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம். இந்த ஆயிரத்திலிருந்து வந்ததுதான் பரமசிவம் பர்ஸிலிருந்த புகைப்படம்."

"அதனால் என்ன?" என்றார் ரத்னசபாபதி.

"என்னவா? இந்தப் புகைப்படத்தின் பிரதிகளை நளினா அவர் கொலையுண்ட அன்று காலை படப்பிடிப்பிலிருந்து வந்தபோதுதான் எடுத்து வந்திருக்கிறார். மேஜை மீது அட்டைப் பெட்டியில் அந்தப் புகைப்படங்கள் இருந்திருக்கின்றன. அவற்றில் ஒன்றைக்கூட நளினா யாருக்கும் அனுப்பியிருக்க முடியாது. போலீசார்  கொலை நடந்த அன்றே இந்தப் புகைப்படங்களை கவனித்திருக்கிறார்கள். இரண்டு நாள் கழித்து இறந்த பரமசிவத்தின் பர்ஸில் அந்தப் படங்களில் ஒன்று இருந்தது அவர்களுக்கு வியப்பாக இருந்திருக்கிறது. அதனால் அந்தப் புகைப்படம் பற்றிப் பத்திரிகைகளுக்குச் சொல்ல வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறார்கள். சொல்லுங்கள் மிஸ்டர்  ரத்னசபாபதி, பத்திரிகையில் வெளிவராத இந்தச் செய்தி உங்களுக்கு எப்படித் தெரியும்?"

ரத்னசபாபதி மௌனமாக இருந்தார்.

ஆனந்த் தொடர்ந்தார். "உங்களுக்கு இது எப்படித் தெரியும் என்றால், பரமசிவத்தின் பர்ஸில் இந்தப் புகைப்படத்தை வைத்தவரே நீங்கள்தான்! பரமசிவத்தைப் பார்க்கப் போகும்போது அவனை நளினாவின் ரசிகனாகக் காட்டி அவன்தற்கொலை செய்து கொண்டதாக ஒரு கதையை ஜோடிக்கலாமே என்ற யோசனை தோன்றியிருக்கிறது. அவசரத்தில் மேஜை மீதிருந்த அட்டைப்பெட்டியிலிருந்து ஒரு படத்தை உருவிக்கொண்டு கிளம்பி விட்டீர்கள். அது புதிய புகைப்படம், அதில் நளினா கையெழுத்திடவில்லை என்ற விவரங்களை நீங்கள் கவனிக்கவில்லை."

"இவையெல்லாம் உங்கள் ஊகம்தான். இதற்கெல்லாம் எந்த வித அடிப்படையோ, ஆதாரமோ கிடையாது. உங்களுடைய அபத்தமான கற்பனைகளுக்கெல்லாம் விளக்கம் கொடுத்துக்கொண்டு இருக்க வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை" என்றார் ரத்னசபாபதி கோபமாக.

"ஏன் ஆதாரம் இல்லை? பரமசிவத்தைச் சந்திக்க நீங்கள் போனபோது உங்கள் காரைத் தெருக்கோடியிலேயே நிறுத்தி விட்டுப் போயிருக்கிறீர்கள். உங்கள் காரை அங்கே பார்த்த சாட்சிகள் இருக்கிறார்கள்."

"இருக்கவே முடியாது. நான் அங்கே காரில் போகவில்லையே! நடந்துதானே..." ரத்னசபாபதி தனது தவறை  உணர்ந்து நிறுத்திக்கொண்டார்.

ஆனந்த் எழுந்தான். "ரமேஷ் பாபு, நான் என் ரிப்போர்ட்டை நாளை  கொடுத்து விடுகிறேன். விரும்பினால், நீங்கள் அதைப் போலீசிடம் கொடுக்கலாம். மேலே என்ன செய்வது என்று அவர்கள் முடிவு செய்து கொள்ளட்டும்" என்றான்.

"ஒரு நிமிஷம் சார்!" என்றான் ரமேஷ்பாபு "என் தங்கையை இந்த வெறிநாய் ஏன் கடித்துக் குதறியது என்று எனக்குத் தெரிய வேண்டும்."

"ரமேஷ். உன்னுடைய கோபம் எனக்குப் புரிகிறது. அதனால் உன்னுடைய தரக்குறைவான வார்த்தைகளை நான் பொறுத்துக் கொள்கிறேன்" என்றார் ரத்னசபாபதி. அவர் குரலில் ஒரு அமைதி இருந்தது. "ஆல்ரைட். நான் சொல்ல வேண்டாம் என்று நினைத்த விஷயத்தைச் சொல்லி விடுகிறேன். ரமேஷ் ,நீ நினைப்பது போல், உன்தங்கை ஒன்றும் உத்தமி இல்லை. எல்லோரும் நினைத்துக் கொ ண்டிருப்பது போல் அவள் ஒன்றும் நான் விரித்த வலையில் விழுந்து என்னைக் கல்யாணம் செய்து கொள்ளவில்லை. நான்தான் அவள் விரித்த வலையில் விழுந்து விட்டேன்."

"உங்கள் கொலையை நியாயப்படுத்த என் தங்கை மீது அவதூறு கூறப்போகிறீர்களா?" என்றான் ரமேஷ்.

ரத்னசபாபதி அவன் பேச்சைக் காதில் வாங்கிக்கொள்ளாதது போல் எல்லோரையும் பார்த்துப் பேச ஆரம்பித்தார். "தன்னைப் பல நடிகர்களும், டைரக்டர்களும் தொந்தரவு செய்வதாகவும், தனக்குத் திருமண வாழ்க்கையில் ஆர்வம் இல்லையென்றும், தான் கடைசி வரை நடித்துக்கொண்டே இருக்க விரும்புவதாகவும் சொல்லி, நான் அவளைக் கல்யாணம் செய்து கொண்டால்தான் அவளால் நிம்மதியாக இருக்க முடியும் என்று நளினா என்னிடம் மன்றாடினாள். எனக்கு மனைவி, இரண்டு மகன்கள், ஒரு மகள் ஆகியோர் இருப்பதையும், நான் அவர்களிடம் இணக்கமாகவும், பாசமாகவும் இருப்பதாகவும் சொல்லி மறுத்து விட்டேன். ஆனால் அவள் விடாமல் என்னை வற்புறுத்திக்கொண்டே இருந்தாள் . எங்கள் திருமணம் வெளி உலகை ஏமாற்றத்தான் என்றும், திருமணத்துக்குப் பிறகு, நான் என் குடும்பத்துடனேயே இருக்கலாம் என்றும் சொன்னாள். அப்போதும் நான் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. ஒருநாள், படப்பிடிப்பின்போது, ஒரு மூத்த நடிகர் அவளிடம் பலர் முன்னிலையில் மிக மோசமாக நடந்து கொண்டதாகவும், தான் தப்பி ஒடி வந்து விட்டதாகவும், அவன் காரில் துரத்தி வருவதாகவும் சொல்லி, இரவு 2 மணிக்கு என் வீட்டுக் கதவைத் தட்டினாள் . என் மனைவி கூட அவள் மீது இரக்கப்பட்டாள். இவை எல்லாமே அவளுடைய திட்டமிட்ட நாடகம் என்பது அப்போது எனக்குத் தெரியவில்லை!

"தொடர்ந்து இது போல் நளினா எனக்கு நெருக்கடி கொடுத்து வந்ததால், ஒரு கட்டத்தில் நான் அவள் விருப்பத்துக்கு ஒப்புக்கொண்டு அவளைத் திருமணம் செய்து கொண்டேன். என் குடும்பத்தினரின் முழுச் சம்மதத்துடன்தான் நான் இதைச் செய்தேன் என்று அறியாத சில பத்திரிகைகள் நான் என் குடும்பத்துக்கு துரோகம் செய்து விட்டதாக எழுதின. நான் அவற்றைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை.

"திருமணத்துக்குப் பிறகுதான் நளினாவின் உண்மையான தோற்றம் எனக்குத் தெரிய வந்தது. அவளுக்குத் திரையுலகில் பலருடனும் தொடர்பு இருந்தது. அவர்களில் எவரையும் திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் அவளுக்கு இல்லை. என்னை ஒரு கவசமாக வைத்துக்கொண்டு, நளினா காதல் லீலைகள் புரிந்து கொண்டிருந்தாள் என்பதுதான் உண்மை. நான் இதைப்பற்றி அவளிடம் நேரடியாகக் கேட்டபோது, 'உங்களைப்  போன்ற அப்பாவிகள் என் போன்ற பட்டாம்பூச்சிகளுக்குக் காவல் இருப்பதற்காகத்தான் பிறந்தவர்கள்' என்று வாய் கூசாமல் சொன்னாள்.

"பல மாதங்கள்  அவளுடைய ஆட்டங்களைப் பொறுமையாகச் சகித்துக் கொண்டே இருந்தேன். அவளைக் கொலை செய்ய வேண்டும் அல்லது நான் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று ஆத்திரம் வரும். ஆனால் சீரியஸாக அவளைக் கொலை செய்ய வேண்டும் என்று நான் நினைத்ததில்லை. படப்பிடிப்பில் அந்தக் கடிதத்தைப் பார்த்ததும்தான் அந்த எண்ணம் உதித்தது. நளினா தூக்க மாத்திரையைப் பயன்படுத்துபவள் என்பதால், அந்தக் கடிதத்தைப் பயன்படுத்தி அவள் தற்கொலை செய்து கொண்டதாகக் காட்டி விட்டால் நான் நிம்மதியாக இருக்கலாமே என்று நினைத்தேன். மிஸ்டர் ஆனந்த் சொன்னபடி வேலைக்காரியை நளினா கோபித்துக்கொண்டு வீட்டுக்கு அனுப்பியதாகச் சொல்லச் சொன்னது நான்தான். நான் செய்த கொலையை நியாயப்படுத்துவதற்காக இதையெல்லாம் சொல்லவில்லை. என் மனக்குமுறலை எல்லாம் என் நண்பர் டைரக்டர் ராஜுவிடம் நான் சொல்லிப் புலம்பியிருக்கிறேன். நீங்கள் அவரிடம் விசாரித்துக்கொள்ளலாம். அஃப் கோர்ஸ், நளினாவைக் கொலை செய்ததைப்  பற்றி அவரிடம் சொல்லவில்லை. அவளுடைய நடத்தை, அவள்   என்னைப் பயன்படுத்திக்  கொண்டது, என்னுடைய கோபம், ஆத்திரம், இயலாமை இவற்றையெல்லாம் அவரிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்."

"ஓகே. நான் சொன்னபடி என் அறிக்கையை நாளை கொடுத்து விடுகிறேன்" என்றார் ஆனந்த்.

'மிஸ்டர் ஆனந்த்! நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும். நளினா பற்றி ரத்னசபாபதி சொன்ன விஷயங்கள் என் காதுக்கும் வந்தவைதான். அவற்றை அப்போது நான் நம்பவில்லை. ரத்னசபாபதி சொன்னதை நான் நம்புகிறேன். அவருக்கு நளினாவைக் கொல்ல வேறு நோக்கம் இருக்க முடியாது. அவருக்கும் நளினவுக்கும் நடந்த திருமணம் சட்டப்படி செல்லக்கூடியதில்லை. அதனால் நளினாவின் சொத்துக்களுக்காகவோ, பணத்துக்காகவோ அவர் இந்தக் கொலையைச் செய்திருக்க முடியாது. இவரைக் கைது செய்து இவர் மீது வழக்குத் தொடர்ந்தால், நளினாவைப் பற்றிய பல கசப்பான உண்மைகள் வெளியே வரும். என் தங்கைக்கு மக்களிடையே ஒரு நல்ல இமேஜ் இருக்கிறது. அவளை ஒரு கண்ணியமான நடிகை என்றே எல்லோரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவள் பெயர் களங்கப்படுவதை நான் விரும்பவில்லை. அவளது திருமண வாழ்க்கையும், தனிப்பட்ட வாழ்க்கையும் பத்திரிகைகளிலும் கோர்ட்டிலும் சீரழிக்கப்படுவதை என்னால் சகித்துக்கொள்ள முடியாது. அதனால்..."

" 'நளினாவின் மரணம் கொலை என்பதற்கான எந்த வலுவான ஆதாரமும் எனக்குக் கிடைக்கவில்லை' என்று அறிக்கை கொடுத்து விடுகிறேன். உண்மையும் அதுதானே! உண்மையில் போலீசுக்கு நான் எந்த ரிப்போர்ட்டும் கொடுக்க வேண்டியதில்லை. நீங்கள்தான் என்னை இந்த வழக்கை விசாரிக்கச் சொன்னீர்கள். உங்களுக்குத்தான் நான் அறிக்கை கொடுக்க வேண்டும். ஆனால் நான் இந்த வழக்கில் ஈடுபட்டிப்பது போலீசுக்குத் தெரியும். அவர்கள் உங்களிடம் என் அறிக்கையைக் கேட்டால் நீங்கள் அதைக் கொடுத்து விடலாம்."

ரத்னசபாபதி நம்ப முடியாமல் ஆனந்த்தைப் பார்த்த்தார். "நீங்கள் உண்மையைத்தான் சொல்கிறீர்களா? என்னைப்பற்றி எதுவும் குறிப்பிடப் போவதில்லையா?"

"இல்லை. ஆனால் பரமசிவம் என்ற அப்பாவி பலியாகி இருக்கிறான். அதற்கு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?"

"நளினாவின் கணவன் என்ற முறையில் பரமசிவன் குடும்பத்தைப் பார்த்து ஆறுதல் சொல்லி அவர்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்வதாக வாக்களித்திருக்கிறேன். அவன் குடும்பத்துக்கு ஆகும் செலவு, அவன் குழந்தையின் படிப்பு எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன். நான் சில டிரஸ்டுகள் வைத்திருக்கிறேன். அவற்றின் மூலம் பரமசிவத்தின் குடும்பத்துக்கு என்னால் உதவி செய்ய முடியும்." என்றார் ரத்னசபாபதி.

ராம்கிக்கு மட்டும் ஆனந்தின் முடிவு ஏமாற்றத்தை அளித்தது!

(*சீமா நடித்து, ஐ.வி.சசியின் இயக்கத்தில் 1978ஆம் ஆண்டு வெளிவந்த மலையாளத் திரைப்படம்.)

(1982ஆம் ஆண்டில் எழுதப்பட்டது)


No comments:

Post a Comment