Sunday, May 7, 2017

21. அவளுக்கும் தமிழ் என்று பேர்!"இவர்தான் என் அப்பா" என்றாள் தமிழ்மொழி.  


அவள் அதைச் சொல்லியிருக்க வேண்டிய அவசியமேயில்லை. சேரன் செங்குட்டுவனைப் போல் அலை அலையாக வளர்ந்து படர்ந்திருந்த 'ராஜபார்ட்' தலைமுடியும் ('சேரன் செங்குட்டுவனை நீ பார்த்திருக்கிறாயா?' என்று கேட்டு மடக்காதீர்கள் - ஏதோ ஒரு சினிமாவில் பார்த்த மாதிரி ஞாபகம்!), நெற்றியில் பெரிதாக இடப்பட்டிருந்த குங்குமத் திலகமும் (கவனிக்கவும் - பொட்டு இல்லை, திலகம்!), மாநகராட்சி துப்புரவாளரின் வேலையைக் கச்சிதமாகச் செய்து கொண்டிருந்த, அடியில் பழுப்புக்  கறை படிந்திருந்த வெள்ளை வேட்டியும், தானும் அந்தப் பொதுச் சேவையில் ஈடுபட முயன்று சில அங்குல இடைவெளியில் தோற்று விட்ட நீண்ட துண்டும் அவரை இனம் காட்டாவிட்டாலும், அவர் ஒரு கையில் எழுத்தாணியைப்  பிடிப்பது போல் பிடித்திருந்த நீள் பேனாவும், மறு கையில் வைத்திருந்த கசங்கிய ஓலைச்சுவடிகளும், அவரது இடது கண் மீது அமர்ந்திருந்த பூதக்கண்ணாடியும், நான் முன்பே கற்பனை செய்து வைத்திருந்த தமிழ்மொழியின் தகப்பனாரை அடையாளம் காட்டி விட்டன.

"வணக்கம்" என்றேன் நான்.

அவர் என்னை கவனிக்காமல், தன் கையிலிருந்த சுவடியை மிகவும் சிரத்தையுடன் சுரண்டிக் கொண்டிருந்தார். எழுத்துக்கள் மறைந்து விட்டன போலும்! சுரண்டினால் எழுத்துக்கள் மேலும் அழிந்தல்லவா போகும்? ஒருவேளை மொத்தமாக அழிந்து விட்டால், தொல்லை விட்டது என்று நிம்மதியாக இருக்கலாம் என்று நினைத்தாரோ என்னவோ!

திடீரென்று அவர் முகம் பிரகாசமானது. வாயிலிருந்து இனம் புரிந்து கொள்ள முடியாத ஒலிகள் வெளிப்பட்டன. எழுத்துக்களைக் கண்டு பிடித்து அவற்றைக் கூட்டி ஒரு வழியாக ஓலைச் சுவடியில் எழுதியிருந்ததைப்  படித்து விட்டார் போலும்!

ஓலைச் சுவடியை உயரத் தூக்கியபடியே "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்!" என்று உரத்த குரலெடுத்துப் பாட ஆரம்பித்து விட்டார்.

நான் கொஞ்சம் பயத்துடனேயே தமிழ்மொழியின் கரத்தை அழுத்தமாகப் பற்றினேன்."தமிழ்! (என்ன ஒரு பெயர் வைத்திருக்கிறார் இந்தப் பச்சைக் கிளிக்கு, செல்லமாகச் சுருக்கிக்  கூப்பிடக்கூட முடியாமல்!) உன் அப்பா ஒரு தமிழ்ப் பைத்தியம் என்று நீ சொன்னபோது, அவருக்குத் தமிழில் அளவு கடந்த ஆர்வம் இருப்பதைத்தான் அப்படிச் சொல்கிறாய் என்று நினைத்தேன். இப்போது அவர் நடந்து கொள்வதைப்  பார்த்தால் நீ சொன்ன தமிழ்ப் பைத்தியம் என்பது, பைத்தியங்களில் ஒரு ரகம் மாதிரி அல்லவா இருக்கிறது!"

"உஸ்ஸ்ஸ்....."  என்றாள் தமிழ்மொழி. ஒரு கணம் சமையற்கட்டிலிருந்து பிரஷர் குக்கரின் சத்தம் வருகிறதோ என்று நினைத்தேன்.

"அப்பாவுக்கு அளவு  கடந்த உற்சாகம் ஏற்பட்டு விட்டால் இந்தப் பாட்டைத்தான் பாடுவார்!" என்றாள் தமிழ் எனக்கு மட்டும் கேட்கும் குரலில்.

இவள் தன் உதட்டில் விரலை வைத்து உஸ்ஸுவதுதான் எவ்வளவு அழகாக இருக்கிறது! 'தமிழ்! இன்னொரு முறை உஸ்ஸேன்!'

என் கவனத்தைத் தமிழ்மொழியிடமிருந்து அவள் தந்தையின் பக்கம் திருப்பியபோது, அவர் என்னையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார்.

"செந்தமிழ்ச் சிங்கமே! யார் நீ?" என்றார். (இவர் பேசுவதுதான் சிங்கம் கர்ஜிப்பதுபோல் இருக்கிறது. ஆனால் என்னைச் சிங்கம் என்கிறார்!)

"உங்களுக்கு ஐம்பது மார்க் சார்" என்று ஆரம்பித்தேன்.

"உஸ்ஸ்ஸ்.."  

உஸ்ஸியது தமிழ் இல்லை. அவள் அப்பா!

"அருள் கூர்ந்து என்னை ஐயா என்றே அழை. ஆங்கிலம் தவிர்த்து அருமைத்தமிழ் பேணுவோம்!" என்றார் அவர்.

"நீங்கள் விரும்பாவிட்டால் நான் விளிக்கவில்லை ஐயா.. " என்றேன் நான். "என் பெயர் செந்தமிழ்ச் சிங்கம் இல்லை, துளசிங்கம்."

"துளசிங்கம்..பைந்தமிழ்ப் பெயர். துளசிங்கம்.. இளசிங்கம்....(போர்க்)கள சிங்கம்.."

"இதென்ன அசிங்கம்?" என்று தமிழ்மொழியின் காதில் மெல்ல ஓதினேன். அவள் தன் விரலை வைத்து என்னை அடக்கினாள் (ஆனால் உஸ்ஸவில்லை!)

"என் வினாவுக்கு நீ இன்னும் விடை பகரவில்லையே! நீ யாவன்?" என்றார் தமிழின் தந்தை. 

'என்ன இது எவன், அவன் என்றெல்லாம் மரியாதை இல்லாமல்.....'

"என் பெயர் துளசிங்கம்."

"அதை முன்பே கூறி விட்டாய் மகனே!"

"நான் உங்கள் மகன் இல்லை, மருமகன் அதாவது வருங்கால மருமகன் " என்று வாய்ப்பை நழுவ விடாமல் என்னையும் என் காதலையும் ஒருங்கே அறிமுகப்படுத்திக் கொண்டேன்.

தமிழ்மொழி திருப்தியுடன் என்னை ஒரு கண்ணால் பார்த்தாள். இன்னொரு கண்ணால் பயத்துடன் தன் தந்தையைப் பார்த்தாள்.

'தமிழ் இப்படி என்னை ஒரு கண்ணாலும், உன் அப்பாவை இன்னொரு கண்ணாலும் பார்க்காதே! நீ அப்படிப் பார்க்கும்போது உன் முகம் பார்ப்பதற்கு மிகவும் கண்றாவியாக இருக்கிறது!'

நான் சொன்னதைக் கேட்டு, அவர் சிறிதும் வியப்பையோ, கோபத்தையோ வெளிப்படுத்தவில்லை. ஒரு பெருமூச்சு விட்டபடியே "ம்...வீரமும், காதலும் தமிழன் உடன்பிறந்தவை!" என்றார்.

என்ன சொல்ல வருகிறார் இவர்? தமிழ்மொழி போன்ற சர்வாதிகாரப் போக்கு கொண்ட ஒரு பெண்ணைக் காதலிப்பதற்கு வீரம் வேண்டும் என்கிறாரா?

"என்னைப்பற்றித் தமிழ்மொழி உன்னிடம் எடுத்து இயம்பியிருப்பாள்!" என்று அவர் தொடர்ந்தார்.

"ஆமாம். சொல்லியிருக்கிறாள். நீங்கள் ஒரு தமிழ்ப்பித்து.. அதாவது தமிழ் மீது உங்களுக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு என்று. பேராசிரியர் மீனாட்சிசுந்தரம் என்றால் தமிழ்ப் புலவர்களிடையே தனிமதிப்பு..."

"தம்பி என்ன சொன்னாய்?" என்று இடைமறித்தார் பேராசிரியர்.

"பேராசிரியர் மீனாட்சி...."

பேராசிரியரின் விழிகள் போர்முரசு கேட்ட வீரனின் விழிகள் போல் சிவந்தன. "தமிழ்மொழி! இதற்குத்தானா உன் தாய் உன்னைப் பத்துத் திங்கள் சுமந்து பெற்றாள்? நான் பதினெட்டு வருடம் உன்னைப் போற்றிப் போற்றி வளர்த்தேன்? (பேராசிரியர் பெரிய ஆள்தான்! சந்தடி சாக்கில் தமிழ்மொழியின் வயதைச்  சில (பல!) வருடங்கள் குறைத்து விட்டார்!) நீ எனக்கு இப்படி ஒரு துரோகம் செய்வாய் என்று நான் கனவிலும் கருதினேனில்லை. "

"என்ன ஆயிற்று?" என்று குறுக்கே பாய்ந்தேன் புரியாமல்.

பேராசிரியர் கண்கள் கலங்க என்னைப் பார்த்தார். "தம்பி! நீ தனித் தமிழில் பெயர் பெற்றிருக்கும் பேற்றினைப் பெற்றிருக்கிறாய். அப்பேற்றைப் பெறாத நான் என் பெயரைக் கன்னித் தமிழில் (ஆமாம் அது என்ன கன்னித் தமிழ்? தமிழ் மிகவும் தொன்மையான மொழி என்கிறார்களே, இன்னுமா அதற்குக் கல்யாணம் ஆகவில்லை?) கயல்விழிக் கட்டழகர் என்று மாற்றி வைத்துக்கொண்டிருக்கிறேன். இவள் என் தூய தமிழ்ப் பெயரை மறைத்து, மறைந்து விட்ட என் பழைய பெயரை மயானத்திலிருந்து மீட்டு மாயை செய்திருக்கிறாள்!"

"அது சரி. அது என்ன கயல்விழிக் கட்டழகர்? கயல்விழி அழகர் என்பதுதானே சரியான மொழிபெயர்ப்பு?"  என்று என் தமிழறிவை வெளிப்படுத்தினேன்.

பேராசிரியரிடம் உற்சாகம் திரும்பி விட்டது. "அங்குதான் நீ தவறு செய்கிறாய். நீ என்ன, பெரும் தமிழ்ப் புலவர்களே செய்யும் தவறு இது! மீனாட்சிசுந்தரம் என்றால் மீனாட்சியை மணந்த சுந்தரம் என்று பொருள். அதாவது கயல்விழியைக் கட்டிக்கொண்ட அழகர். அதனால்தான் கயல்விழிக் கட்டழகர் என்று வைத்துக் கொண்டிருக்கிறேன். புரிகிறதா?" என்றார் பெருமையுடன்.   

பேராசிரியரின் நுண்ணிய சிந்தனையை நான் வியந்தேன். சும்மா இல்லாமல், "ஓ! இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை" என்று என் இலக்கண அறிவை வெளிப்படுத்தினேன்.

பேராசிரியர் என்னை ஒருமாதிரி பார்த்தார். நான் சொன்னது தவறா அல்லது அவருக்கே இந்த இலக்கணக் குறிப்பு சரியாகத் தெரியவில்லையா?    

எதனாலோ பேராசிரியருக்கு என்மீது ஒரு பிடிப்பு ஏற்பட்டு விட்டது. அதனால் என் கைகளுக்கும் அவர் கரங்களுக்குள் விடுவித்துக்கொள்ள முடியாதபடி ஒரு பிடிப்பு ஏற்பட்டு விட்டது!

"தம்பி! இதுவரை வேறு யாரும் என் பெயரின் பொருளைத் தெரிந்து கொள்வதில் இவ்வளவு ஆர்வம் காட்டியதில்லை. இதிலிருந்தே உன் தமிழ்ப்பற்றை நான் புரிந்து கொண்டு விட்டேன். என் லட்சியத்தை நீதான் நிறைவேற்றி வைக்க வேண்டும்" என்றார் உணர்ச்சி ததும்பிய குரலில்.  

ஆகக்கூடி, தமிழ்மொழியின் கழுத்தில் மூன்று முடிச்சுப் போடும் உரிமை எனக்குத்தான்! காரியம் இவ்வளவு சுலபமாகக் கைகூடி விட்ட உற்சாகத்தில் பேராசிரியரின் லட்சியம் என்னவாக இருக்குமோ என்பதைப் பற்றி நான் அப்போது நினைத்துப் பார்க்கவில்லை. 

பெருமிதத்துடன் தமிழ்மொழியைப் பார்த்தேன். அவள் பயத்துடன் க.கட்டழகரைப் பார்த்துக் கொண்டிருந்தாள். இவளுக்கு எதற்கெடுத்தாலும் பயம், எல்லோரிடமும் பயம் - என்னைத் தவிர!

பேராசிரியர் தொண்டையைக் கனைத்துக் கொண்டார். "தம்பி! கரம்பு மலைக் கருணை வள்ளல்  முத்துக்கருப்பண்ணனைப் பற்றி நீ நிச்சயம் செவி மடுத்திருப்பாய்.."   

போச்சு! பேராசிரியர் போராசிரியராக - ஸாரி, அறுவையாசிரியராக உருவெடுத்து விட்டார். 'என் செவி எதையும் மடுக்கவில்லை. இப்போது நான் கொஞ்சம் படுத்தால் தேவலை. ஆளை விடுங்கள் சார், அதாவது ஐயா!' என்று சொல்ல நினைத்து ஆனால் சொல்லாமல் மௌனம் காத்தேன்.

"கடையேழு வள்ளல்களுக்குப் பிறகு, சடையப்ப வள்ளலுக்கு இணையான புகழுடன் வாழ்ந்தவர் அவர். என் முப்பாட்டனாரின் பாட்டனான வரகவி வம்பனை வாழ்நாள் முழுவதும் ஆதரித்த ஆண்தகை அவர்!"

"அவர்கள் இருவருமே இப்போது செத்துப் போய் விட்டார்கள் அல்லவா?" என்றேன் நான் கொட்டாவியை அடக்கியபடி.

"ஆம். அவர்கள் மறைந்துதான் விட்டார்கள். ஆனால் அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த அன்புக்கும் உறவுக்கும் அழியாத சான்றாக வரகவி  வம்பன் படைத்த காவியம் என்றும் அழியாது, அழியவும் விட மாட்டேன்" என்றார் க.கட்டழகர் உணர்ச்சி நிரம்பி வழிந்த குரலில்.

"கவலைப்படாதீர்கள். அழியாத மையினால் அந்தக் காவியத்தைப் பிரதி எடுத்து விடலாம்" என்றேன் நான் ஆறுதலாக.

"அதுதானே முடியவில்லை! முடியாமல்தானே தவிக்கிறேன்!" என்றார் பேராசிரியர் பொருமலுடன். 

"ஏன்?" நான் பொறுமையிழந்து கொண்டிருந்தேன்.  

"அந்தக் காவியம் என்னிடம் இல்லையே! அந்தக் காவியம் எங்கோ மறைந்து விட்டது.  என் முப்பாட்டனாரின் பாட்டனார் வரகவி வம்பன் ஆசுகவியாக மொழிந்ததை, அவர் யாரைப் பற்றிப் பாடினாரோ அந்த வள்ளல்  முத்துக்கருப்பண்ணரே தன் கைப்பட ஓலைச் சுவடியில் எழுதி வைத்ததாக வரலாற்றுச் சான்றுகள் மொழிகின்றன. அந்தச் சுவடிகள் அவர் பின்தோன்றிகளிடம்தான் இருக்க வேண்டும். ஆனால் அவர்களைப் பற்றி எந்த ஒரு குறிப்பும் கிடைக்கவில்லை." 

குறிப்புக் கிடைத்து விட்டால் மட்டும் என்னவாம்? யார் அந்தச் சுவடிகளை அடுப்பில் போட்டு வெந்நீர் வைத்துக் குளித்தார்களோ!

பேராசிரியரின் முகம் இறுகியது. "தம்பி! அந்தக் காவியம் எங்கு மறைந்திருந்தாலும் அதை மீட்டுத் தமிழ் கூறும் நல்லுலகுக்குப் பரிசாக வழங்க வேண்டும். அதுதான் என் வாழ்க்கை லட்சியம்" என்று போர் முழக்கம் போல் அறிவித்தார்.

'வாழ்க்கை லட்சியம்' என்ற வார்த்தைகளைக் கேட்டதும் என் தலையில் யாரோ ஓங்கி அடித்தாற்போல் இருந்தது. 'இவருடைய இந்த வாழ்க்கை லட்சியத்தைத்தான், நான் நிறைவேற்ற வேண்டும் என்று சற்று முன் சொல்லிக்கொண்டிருந்தாரா? அடக்  கடவுளே!

பேராசிரியர் வெளிப்படையாகவே சொல்லி விட்டார் "தம்பி! என் மூதாதை வரகவி வம்பன் எழுதிய அந்த அழியா இலக்கியத்தின் பெயர் 'முத்துக்கருப்பண்ணன் பிள்ளைத்தமிழ்.' அந்த நூலோ அல்லது அதன் நகலோ ஏதாவது நூலகத்திலோ அல்லது வேறு எந்த நபரிடமோ இருக்க வேண்டும் என்று என் உள்ளுணர்வு உரைக்கிறது. நீதான் அதைத் தேடித் கொணர வேண்டும். உன்னால் அது முடியும், முடிய வேண்டும். இதுதான் தமிழ்மொழிக்கு நீ போடப்போகும் பரிசம். (இவர் எந்தத் தமிழ்மொழியைச் சொல்கிறார்?') வெற்றியுடன் வா வீரனே! தமிழ்த்தாய் உனக்குத் துணையிருப்பாள்."

தமிழ்த்தாய் துணையிருப்பாளாமே! தான் சிறுமியாக இருந்தபோதே தன் தாய் இறந்து விட்டதாகத் தமிழ்மொழி என்னிடம் சொல்லியிருக்கிறாளே! இறந்து போனவரின் ஆவியுடன் உரையாடி உதவி கேட்கச் சொல்கிறாரா பேராசிரியர்?     

அது இருக்கட்டும். பேராசிரியர் கொஞ்சம் பசையுள்ளவர், தமிழ் அவர் ஒரே பெண் என்பதால், சீர் செனத்தி என்று கொடுத்து வசதியாகக் கல்யாணம் செய்து கொடுப்பார் என்று பார்த்தால், பழந்தமிழர் வழக்கத்தைப் புதுப்பித்து என்னையே பரிசம் போடச் சொல்லி விட்டாரே!  

நான் ஏமாற்றத்துடன் தமிழ்மொழியைப்பார்த்தேன். அவள் என்னைப் பார்க்க முடியாமல் நீர் மல்கும் கண்களைத் திருப்பிக் கொண்டாள். எப்படியும் என்னால் அவள் அப்பா குறிப்பிட்ட 'காவியத்தைக்' கண்டு பிடிக்க முடியாது, எங்கள் காதல் அவ்வளவுதான் என்று முடிவு செய்து விட்டாள் போலும்!  

'தமிழ்! கலங்காதே! உன் அப்பா கேட்ட அந்தப் பிதற்றல் காவியத்தை எங்கிருந்தாலும் கொணர்வேன். இயலாவிட்டால், உன் அப்பாவை மனநோய் மருத்துவ மனைக்கு அனுப்பி விட்டுப் பரிசம் போடாமல் ஓசியிலேயே உன் கரம் பிடிப்பேன். இது தமிழ்  மேல் - நீ இல்லை, அந்த ஒரிஜினல் தமிழ் மேல் - ஆணை!  

ரண்டு மாதங்கள் தமிழ்நாடு பூராவும் அலைந்து திரிந்ததுதான் மிச்சம். இரண்டு ஜோடிப் புதுச் செருப்புகள் தேய்ந்து மூன்றாவது ஜோடியும் வாங்கியாகி விட்டது.

பல்கலைக் கழக நூலகத்தின் பழங்கால ஏட்டுச் சுவடிப் பகுதி, திருவான்மியூர் உ.வே.சா. நூலகம், தஞ்சை சரஸ்வதி மஹால் என்று எத்தனையோ நூலகங்களில் தேடி விட்டேன். எத்தனையோ பிள்ளைத்தமிழ்களைச் சந்தித்து விட்டேன். ஆனால் இந்த நாசமாய்ப் போன மு.க.பி.த. (முத்துக்கருப்பண்ணன் பிள்ளைத்தமிழ்) மட்டும் எங்கேயும் கிடைக்கவில்லை.  

இந்தச் சனியனைத் தேடி அலைந்ததில் என் அரைகுறைத் தமிழறிவு ஒரு குழப்பமான நிலைக்கு வந்ததுதான் மிச்சம். ஓய்ந்து போய், சலிப்படைந்து, தமிழ்மொழி எனக்குக் கிடைக்காமால் போய்விட்டால், இந்த மூஞ்சியை வேறு இந்தப் பெண் ஏற்றுக்கொள்வாள் என்ற விரக்தியான நிலைக்கு வந்த பிறகுதான், என் நண்பன் மலர்ச்சோலையின் நினைவு வந்தது.

புஷ்பவனம் என்ற பெயரை மலர்ச்சோலை என்று மாற்றி வைத்துக்கொண்டதில் துவங்கி, எல்லாவற்றிலும் அவன் க.கழகரின் இன்னொரு பதிப்புதான்.

இத்தனை நாட்களாக அவன் நினைவு வராமல் போய் விட்டதே! முதலிலேயே அவன் உதவியை நாடியிருந்தால் ஏதாவது தகவல் கிடைத்திருக்குமா என்னவோ!

மலர்ச்சோலையைத் தேடித் போனபோது, குப்பைகளுக்கு நடுவே அவனைக் கண்டுபிடித்தேன். குப்பைகள் அவன் எழுதிக் குவித்த கவிதைகள்!

விஷயத்தைச் சொன்னதும் அவன் பெரிதாகச் சிரித்தான். "இவ்வளவுதானே? இதில் என்ன பிரச்னை? பேராசிரியரோ அந்த நூலைப் படித்ததில்லை. நாமே போலியாக ஒரு நூலைத் தயாரித்துக் கொண்டு போய்க் கொடுத்து, அதுதான் 'மு.க.பி.த' என்று சொன்னால் அவருக்கு என்ன தெரியப் போகிறது?"

அட! எனக்கு இந்த யோசனை தோன்றாமல் போய் விட்டதே! எத்தனை அலைச்சல், எத்தனை செலவு! எல்லாவற்றுக்கும் மேல், எத்தனை நூல்களைப்  படிக்க வேண்டியிருந்தது! வாழ்நாள் முழுவதும் அனுபவிக்க வேண்டிய அறுவையை இந்த இரண்டு மாதங்களில் அனுபவிக்க நேர்ந்து விட்டதே!

"அது சரி. போலியாக ஒரு நூலை எப்படித் தயாரிப்பது?"

"அந்தக் கவலை உனக்கு வேண்டாம். அந்த முத்துக்கருப்பண்ணன் எந்த ஊர், எப்படிப்பட்ட ஆள் என்று மட்டும் சொல்லு. இன்னும் இரண்டு நாளில் 'மு.க.பி.த' என்ற 'காவியத்தை நான்  எழுதிக் கொடுக்கிறேன். என்னிடம் என் தாத்தா காலத்து நோட்டு ஒன்று இருக்கிறது. அதில் சில பக்கங்கள்தான் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. மீதமுள்ள தாள்களை நான் பயன்படுத்திக் கொள்கிறேன். பக்கங்கள் பழுப்பு நிறத்தில் இருப்பதால், பேராசிரியருக்குச் சந்தேகம் வராது." என்றான் மலர்ச்சோலை.

சொன்னபடியே, இரண்டு நாட்களில் நூலை எழுதியும் கொடுத்து விட்டான்.

மிழ்மொழிக்குப் பரிசம் போடப் போகும்போது வெறும் கையுடன் போகலாமா? அட, ஒரு வெற்றிலை பாக்குப் பழத்துடன் இந்த 'மு.க.பி.த'வை வைத்துக் கொடுக்கலாம் என்றால் கூட, கையில் அதற்குக் கூடக் காசில்லை. 

காசுக்கு என்ன வழி என்று யோசித்தபோது, பரண்மீது தூசியால் முழுவதும் மறைக்கப்பட்டிருந்த பழைய பேப்பர்கள் கண்ணில் பட்டன. இடத்தை அடைக்கிறதே என்று எப்போதோ  மேலே தூக்கிப் போட்டது இப்போது உதவப் போகிறது!

மேலிருந்து அவற்றை எடுத்துத் தூசி தட்டினேன். மக்கும் நிலையில் இருந்த அவற்றைப் பழைய பேப்பர் கடையில் வாங்கி கொள்வார்களா?

எரிச்சலாக வந்தது. எரிச்சல் அனைத்தும் பேராசிரியர் மேல் திரும்பியது. அவர் மட்டும் இதை மு.க.பி.த இல்லை என்று சொல்லி விடட்டும். இரண்டு மாதம் சுற்றி அலைந்ததற்கு டிராவலிங் அலவன்ஸ், கண்டதையெல்லாம் படித்து அறுவையை அனுபவித்ததற்கு அறுவை மற்றும் பொறுமை அலவன்ஸ் என்று அவரிடம் கறந்து விட வேண்டியதுதான்!

வாசலில் காலடியோசை கேட்டது.

எதிர்பாராத மகிழ்ச்சி! பேராசிரியரும் அவர் பெற்ற திருமகளும் என் வீடு தேடி வந்து விட்டார்களே!

அடேயப்பா  இரண்டு மாதத்தில் இன்னும் இரண்டு சுற்றுப் பெருத்து விட்டாளே  இவள்! (ஏற்கெனவே பல சுற்று இருந்தவள்!) தலைவனைப் பிரிந்தால், தலைவி கைவளைகள் நழுவி விழும் அளவுக்கு இளைக்க வேண்டும் என்பதல்லவா தமிழ்ப் பெண்ணின் இலக்கணம்? அப்படியானால், இவள் தமிழ்ப்பெண் இல்லையா? அல்லது இதெல்லாம் தமிழ்ப் புலவர்கலின் 'கப்ஸாவா?'

"வெற்றியுடன் திரும்பினாயா வீரனே?" என்றார் பேராசிரியர் என் எரிச்சலைக் கிளப்பும் வகையில்.

மலர்ச்சோலை எழுதிக் கொடுத்த டூப்ளிகேட் மு.க.பி.தவை எடுத்து அவர் கையில் கொடுப்பதற்குள், நான் பரணிலிருந்து இறக்கிய குப்பையைப் பார்த்து விட்டு அதைக் கிளறத் தொடங்கினார்.

ஏற்கெனவே மக்கிப்போயிருந்த காகிதங்கள் அவர் கைபட்டுப் பொடிப்பொடியாக நொறுங்கி விடப் போகின்றனவே என்று பயந்து நான் அவரைத் தடுப்பதற்குள், அவர் ஒரு தாளை எடுத்துப் பார்த்து விட்டு, "இதுதான், இதேதான்!" என்று ஆர்க்கிமிடிஸ் போலக் கூவினார்.

சரிதான். இவரைக் கீழ்ப்பாக்கத்துக்கு அனுப்புவதில் ஒன்றும் சிரமம் இருக்காது!

"தம்பி  நான் நினைத்ததை நீ முடித்து விட்டாய். நான் கேட்டதை நீ கொடுத்து விட்டாய். நீ வள்ளலிலும் வள்ளல். இதுதான் நான் கேட்ட பிள்ளைத்தமிழ்!"

"இதுவா?" என் எரிச்சல் உற்சாகமாக மாறியது.

"இதுவேதான். இது எங்கே கிடைத்தது?"

அது நீண்ட காலமாக என் வீட்டுப் பரணில் இருந்ததாக நான் சொன்னதும், பேராசிரியர் கூரைக்கும் பூமிக்குமாகக் குதித்து டார்வினின் பரிணாமத் தத்துவத்தை 'டெமான்ஸ்ட்ரேட்' செய்து காட்டினார்.

'அப்படியானால், கரம்பு மலைக் கருணை வள்ளல் முத்துக்கருப்பண்ணன் பரம்பரையில் வந்தவனா நீ?" என்றார் வியப்புடன். 

"அப்படியா?" என்றேன். யார் கண்டார்கள் கரம்பு மலையையும், முத்துக்கருப்பண்ண வள்ளலையும்!

"என்ன விந்தை! எப்படியோ வரகவி வம்பனின் பரம்பரையும், அவருக்கு வாழ்வளித்த வள்ளலின் பரம்பரையும் திருமண உறவால் இணைந்து விட்டனவே!"

திருமண உறவு என்று பேராசிரியர் கூறியது என் காதில் தேன் பாய்ந்தது போல் இருந்தது. (அப்படித்தானே சொல்ல வேண்டும்?). அப்பாடா! அவருக்குப் பிள்ளைத்தமிழ் கிடைத்து விட்டது. எனக்கும் பெண்தமிழ் கிடைத்து விட்டாள்!

பேராசிரியர் மு.க.பி.தவைச் சுவைக்க ஆரம்பித்தார்.

கொத்துக் கொத்தாய்க் கொத்தவரை காய்க்கும் 
           சித்தர் வாழ்க் கரம்பு மலையில் 
சத்தான தமிழ்ப் பற்றில் பித்தான - வள்ளல் 
           முத்துக்கருப்பண்ண முத்தே நீ வாழி!

கவிதையைச் சுவைத்த உற்சாகத்தில் பேராசிரியர்,

"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் 
இனிதாவதெங்குங் காணோம்!" 

என்று உரக்கக் கூவினார்.

பேராசிரியரின் கூற்றின் உண்மையைச் சோதிக்க என் கைகள் கட்டழகர் பெற்ற கட்டழகியை நோக்கி நீண்டன.                                                                                                                    
(1982 ஆம் ஆண்டு எழுதப்பட்டது)


No comments:

Post a Comment