Monday, August 15, 2016

19. ஓரிரு சம்பவங்கள்

 பாலகிருஷ்ணன் காலையில் கண் விழித்ததும் வழக்கம் போல் நேர்ப்பார்வையில் விழும்படி மாட்டப்பட்டிருந்த அம்பாளின் படத்தைப் பார்த்தார். பிறகு சுவர்க்கடிகாரத்தைப் பார்த்தார். சொல்லி வைத்தாற்போல் மணி 6. கடந்த பல வருடங்களாக இந்த 6 மணி சந்திப்பு தவறாமல் நடந்து வருகிறது. 

கடிகாரத்துக்குக் கீழே மாட்டப்பட்டிருந்த காலண்டரின் மீது பார்வை தன்னிச்சையாகப் படிந்தது. தேதி 24. இருபத்து நாலு...ஏதோ நெருடுகிற மாதிரி ஒரு உணர்வு. அது என்னவென்று புரிந்து கொள்ளும் முன்பே அவர் படுக்கையிலிருந்து எழுந்து விட்டார். நேராக வாசற்கதவை நோக்கி நடந்... நின்றார். கதவுக்கடியில் பேப்பர் இல்லை.

ஐந்தரை மணிக்கெல்லாம் பேப்பர் வந்து விடுமே! இன்று என்ன? சற்றுமுன் இலேசாகத் தலைகாட்டிய உள்ளுணர்வு இப்போது மனக்கதவை இடித்துத் திறந்து கொண்டு வெளிப்பட்டது. மை காட்! இன்று 24ஆம் தேதி. இன்று பந்த்!

அவரை திடீரென்று ஒரு சோர்வு பற்றியது. இன்று அவரது நேர அட்டவணைக்கும் கதைவடைப்புதான். சாப்பாடு ஒரு பிரச்னை. முதலில் காப்பி போட்டுக் குடிக்கலாம். பிறகு யோசிக்கலா...ஓ! மை குட்னெஸ்! இன்று பால் கூட வரவில்லை. வராது. பால் வழங்கும் அரசு நிறுவனம் இன்று பால் வழங்கப் போவதில்லை என்று நேற்றே அறிவித்து விட்டது. சென்ற முறை நடந்த பந்த்தின்போது நடந்த வன்முறைகளில் அவர்கள் லாரிகள் சேதமாகி விட்டனவாம்.

அந்தப் பகுதியில் பால்காரர்கள் என்று யாரும் வருவதாகத் தெரியவில்லை. விஞ்ஞானமும், தொழில் நுட்பமும் வசதிகளைத் தருகின்றனவோ இல்லையோ, பழைய அமைப்புகளைத் தரை மட்டமாகி விடுகின்றன. 

அடுப்பைப் பற்ற வைத்து வெந்நீர் போட்டு டிகாக் ஷன் தயாரித்துச் சர்க்கரை போட்டுக் குடித்தார். கசப்பாக இருந்தாலும் காப்பியின் மணம் ஒரு புத்துணர்ச்சியைத் தந்தது. 

பேப்பர் இல்லாததால் மீண்டும் போய்க் கட்டிலில் படுத்துக் கொண்டார். மனதில் குருட்டு யோசனைகள் பல திசைகளிலும் ஓடின.

'வயதான காலத்தில் தனியே இருப்பது ஒரு கொடுமைதான். ஆனால் நான் தனியே இல்லை. என் மகளுடைய  குடும்பத்துடன் இருக்கிறேன். மகள்,  குடும்பத்துடன் அரசாங்கத் செலவில் உல்லாசப் பயணம் போய் விட்டாள். மாப்பிள்ளையின் விடுமுறைப் பயணச் சலுகையில் (எல்.டி.சி) மாமனாரையும் அழைத்துச் செல்ல விதிமுறைகள் இடம் கொடுக்கவில்லை. ஒரே மகளைப் பெற்று மாப்பிளையுடன் வாழும் மாமனார்களுக்குச்  சலுகை காட்டி இருக்கலாம் அரசாங்க விதிமுறைகள்! ஆனால் அப்படி இருந்தாலும் என்னால் போயிருக்க முடியுமா? டாக்டர் எனக்கு இருப்பதாகச் சொல்லும் வியாதிகளின் பட்டியல் அவர் எழுதிக் கொடுத்த மருந்துச் சீட்டை விட நீளமாக இருக்கிறதே!'

பேத்தியின் நினைவு வந்தது.

தீப்தி (என்ன ஒரு பெயர்! கேட்டால் மாடர்னாக இருக்க வேண்டும் என்பார்கள். நான் அழகாக மஹேஸ்வரி என்று வைக்கச் சொன்னேன் - அம்பாளின் பெயர்! கேட்கவில்லை.) இப்போது தீப்தி என்ன செய்து கொண்டிருப்பாள்? இப்போது அவர்கள் சிம்லாவில் இருப்பார்கள். குழந்தைக்குக் குளிர் தாங்குமோ என்னவோ! குழந்தைக்கு யார் கதை சொல்வார்கள்?

இன்று சாப்பாட்டுக்கு என்ன வழி? மகள்  ஊருக்குப் போனதிலிருந்து 'திருநெல்வேலி மெஸ்'ஸில்தான்  சாப்பிட்டு வருகிறார். (அது என்ன 'திருநெல்வேலி மெஸ்', 'திருநெல்வேலி அல்வா' என்கிற மாதிரி? இப்படியெல்லாம் ஏதாவது ஒரு ஊர்ப்பெயரை வைத்து ஏமாற்றுவது வழக்கமாகி விட்டது!) 

இன்று மெஸ் திறக்கிறானோ என்னவோ? திறக்காவிட்டால் கொலைப்பட்டினிதான். 'ஒரு சாதம் வடிக்கவாவது கற்றுக்கொள்ளுங்கள்' என்று சாவித்திரி எத்தனையோ தடவை சொல்லியிருக்கிறாள். அப்போதெல்லாம் ஆண்பிள்ளைத் திமிரில் அதெல்லாம் அனாவசியம் என்று ஒதுக்கி விட்டார்.

ம்.  அவளும் போய்ச் சேர்ந்து விட்டாள். இப்போது கூட கண்ணுக்குத் தெரியாமல் எங்காவது அந்தரத்தில் நின்று கொண்டு, "நான் எவ்வளவோ அடித்துக்கொண்டேன். கேட்டீர்களா?" என்று சொல்லிக் காட்டிக்கொண்டிருக்கிறாளோ என்னவோ!

பத்து மணிக்கு மெஸ்ஸுக்குப் போய்ப் பார்க்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு கொஞ்சம் கண்ணயர்ந்தார்.

மாதங்கி பஸ்ஸிலிருந்து இறங்கியபோது மணி ஒன்பதரை ஆகியிருந்தது.  பஸ்ஸை ஊருக்கு வெளியிலேயே எங்கேயோ நிறுத்தி விட்டார்கள். இன்று எதோ பந்த்தாம்! அதற்காக வெளியூரிலிருந்து வரும் பஸ்களை ஊருக்குள் வர விடாமல் தடுத்து நிறுத்த வேண்டுமா என்ன?

இதுபோல் மற்றவர்களுக்குத் தொல்லை கொடுப்பவர்களை மூட்டைப்பூச்சிகள் நிறைந்த கட்டிலில் படுக்க வைத்து எழுந்து போக முடியாமல் இறுக்கமாகக் கட்டிப்போட வேண்டும் என்று நினைத்தாள். தனக்கு இப்படிப் புதுமையாக (கோணங்கித்தனமாக!) யோசனைகள்  தோன்றுவதை நினைத்தபோது உடனே சிரிப்பு வந்தது. மனச் சலிப்பைச் சற்றே குறைத்தது.

இங்கிருந்து அவள் அக்கா வீடு  இரண்டு கிலோமீட்டருக்கு மேல் இருக்கும்.நடந்து போவதைத் தவிர வேறு வழி இல்லை. பெட்டியை வேறு தூக்கிக்கொண்டு நடக்க வேண்டும். ஒரு ரிக் ஷாவுக்கோ, மாட்டு வண்டிக்கோ கூட வழி இல்லை.

மூட்டை முடிச்சுகளுடன் சகபயணிகள் தவித்துத் திணறியபடி நடக்கத்  தொடங்கியதைப் பார்த்ததும் அவள் ரத்தம் கொதித்தது. இதற்குக்  காரணமானவர்களைப் பிடித்துக்கட்டி.... (என்ன தண்டனை கொடுக்கலாம்?)

'பந்த்' என்று தெரிந்த பிறகு அவள் கிளம்பியிருக்கவே மாட்டாள். பொழுது விடிவதற்குள் வந்து சேர்ந்து விடலாம் என்ற நம்பிக்கையில் கிளம்பியது தவறாகி விட்டது. வரும் வழியில் பஸ்ஸில் ஏதோ பழுது ஏற்பட்டதால் வெடித்ததால் மூன்று மணி நேரத்துக்கு மேல் தாமதம் ஆகி, இப்படி வந்து மாட்டிக்கொள்ளும்படி ஆகி விட்டது.

ஒரு விதத்தில் பார்த்தால், இவ்வளவு தூரம் வந்து சேர்ந்ததே அதிர்ஷ்டம்தான். இடையில் எங்காவது மாட்டிக்கொண்டிருந்தால் என்ன செய்திருக்க முடியும்?

அவள் பெட்டியைத் தூக்கிக்கொண்டு மெல்ல நடக்க ஆரம்பித்தாள்.

"இன்னிக்கு பந்த். வெளியே எங்கேயும் போக வேண்டாம். ஃபிரண்ட் வீடு என்ன வேண்டிக் கிடக்கு?"

ரமேஷ் சத்தம் போட்ட அப்பாவைப் பார்த்தான். 'எதற்கெடுத்தாலும் ஒரு சத்தம்! மெதுவாகவே ஆட்சேபிக்கத் தெரியாது இவருக்கு. வக்கீலாக இருந்திருந்தால், கோர்ட்டில் சத்தம் போட்டு நல்ல வக்கீல் என்று தன்னைக் காட்டிக்கொள்ள முயன்றிருக்கலாம்!  தனியார் நிறுவன ஊழியராக இருந்து கொண்டு அலுவலகத்தில் மேலதிகாரிகளுக்குப் பயந்து வாயை மூடிக்கொண்டு இருந்து விட்டு வீட்டில் வந்து கத்தித் தீர்க்கிறார்!'

"இல்லை அப்பா, அடுத்த வரம் மாத்ஸ் டெஸ்ட் இருக்கு. அதுக்கு ரெண்டு பேருமா சேர்ந்து கணக்குப் போட்டுப் பாக்கப் போறோம்." 

'இப்படிக் கூசாமல் புளுகுவதைத் தவிர வேறு வழி இல்லை. விடுமுறை நாளும் அதுவுமாக  வீட்டில் இருந்தால், 'படி, படி' என்று பிடுங்கி எடுத்து விடுவாரே!'

"சரி, சரி. ஒழிஞ்சு போ. ஜாக்கிரதை!"

"பைக்கை எடுத்துக்கிட்டுப் போறேன்."

"பைக்கைத் தொட்டேன்னா காலை ஒடைச்சுடுவேன், ராஸ்கல்! புதுசா வாங்கின வண்டியைப் பாழ்  பண்ணலேன்னா ஒனக்கு மனசாகாதே!" 

"இல்லேப்பா, டவுன் பஸ் எல்லாம் ஓடலே."

"நடந்து போறது! கால் வணங்காதே! சரி, சரி, ஒழி!"

ஒழிந்தான்.

மெஸ் மூடித்தான் இருந்தது. அடைக்கப்பட்டிருந்த கதவுகள் தூரத்திலிருந்தே புலப்பட்டன. பாலகிருஷ்ணன் பலவந்தமாக இழுத்துப் பிடித்துக்கொண்டிருந்த நம்பிக்கை நழுவிக் கீழே விழுந்தது.

இத்தனை தூரம் நடந்து வராமலாவது இருந்திருக்கலாம் என்று நொந்துகொண்டே அவர் திரும்பிப் போக யத்தனித்தபோது, மூடப்பட்ட மெஸ்ஸின் கதவுகளில் ஒன்று எதிர்பாராமல் கொஞ்சமாகத் திறந்து கொள்ள, மெஸ் முதலாளி நாராயணனின் முகம் மட்டும் வெளிப்பட்டது. 

எங்கே திறந்த கதவு மீண்டும் மூடிக்கொண்டு விடுமோ என்று பயந்தவராக, பாலகிருஷ்ணன் ஓட்டமும் நடையுமாக மெஸ்ஸை நோக்கி விரைந்தார். அவரைப் பார்த்து விட்ட நாராயணன் கையை அசைத்து அவரை வரவேற்றான். பாலகிருஷ்ணன் கதவுக்கு அருகே வந்ததும், அவர் கையைப் பிடித்து வேகமாக உள்ளே இழுத்தான். பாலகிருஷ்ணன் உள்ளே வந்ததும் கதவு மூடப்பட்டது.  

"என்ன இன்னைக்கு பந்த் இல்லையா?" என்றார் பாலகிருஷ்ணன் புதிய உற்சாகத்துடன். உள்ளிருந்து வந்த சுவையான சாப்பாட்டின் நறுமணமும், உள்ளே இருட்டில் இரண்டு மூன்று பேர் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த காட்சியும் அவர் உற்சாகத்துக்குத்  தூபம் போட்டன.

"என்ன 'பந்த்தா' இருந்தா என்ன சார், உங்களையெல்லாம் கைவிட்டு விடுவேனா?" என்றான் நாராயணன். (ஒருநாள் வருமானத்தைத்தான் விட்டு விட முடியுமா என்ன?)

பாலகிருஷ்ணன் அம்பாளுக்கும், நாராயணனுக்கும் மனதுக்குள் நன்றி செலுத்தி விட்டுச் சாப்பிட உட்கார்ந்தார்.

மாதங்கி அந்தத் தெருமுனையில் திரும்பியபோது, இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த அந்த இளைஞனைப் பார்த்தாள். இளைஞனா? - இல்லை! பையன். பதினைந்து அல்லது பதினாறு வயதுப் பையன். 

பெட்டியைத் தூக்கிக்கொண்டு நடப்பது அவளுக்கு மிகுந்த சிரமமாக இருந்தது. பாதி தூரம்தான் வந்திருக்கிறாள். இன்னும் பாதி  தூரம் நடக்க வேண்டுமே என்ற எண்ணம் மலைப்பாக இருந்தது. பெட்டியைக் கீழே வைக்கச் சொல்லி மூளையிடமிருந்து உடனே உத்தரவு வராவிட்டால், உடம்பிலிருந்து கழன்று கொள்ளப் போவதாக அவளது இரண்டு கைகளும் மாற்றி மாற்றி மிரட்டிக் கொண்டிருந்தன. பெட்டியைக் கைக்குக் கை மாற்றிச் சமாளிக்கும் வேலை இனியும் நடக்காது போலிருக்கிறதே என்று அவள் மூளை கவலைப்படத்  தொடங்கியது.

'இந்தப் பையனிடம் லிஃப்ட் கேட்டால்  என்ன? என்னை விட ஐந்தாறு வயது இளையவனான இவன் பின்னால் பைக்கில் உட்கார்ந்து போவதில் ஒன்றும் தப்பில்லை.'

பைக் அருகில் வந்ததும் மாதங்கி அவனைக் கை காட்டி நிறுத்தினாள். அவன் சற்று வியப்புடன் பைக்கை நிறுத்தினான்.

"நான் தாண்டவராயன் தெருவுக்குப்  போகணும். என்னைக் கொஞ்சம் கொண்டு விட்டுடறியா?"  என்றாள் அவள் உரிமையுடன்.

"ஓ! உக்காருங்க!" என்றான் அவன் உற்சாகத்துடன்.

'உக்காருங்க அக்கா' என்று சொல்லியிருக்கலாம் என்று மாதங்கிக்குத் தோன்றியது. 

ற்ற நாட்களை விட இன்று சாப்பாடு நன்றாக இருப்பதாக பாலகிருஷ்ணனுக்குத் தோன்றியது.

வழக்கம் போல் கப்பில் ரசம் வாங்கி குடித்துக்கொண்டிருந்தபோது வாசல் பக்கம் பெரிதாகக் கூச்சல் கேட்டது.

தொடர்ந்து படபடவென்று கதவு தட்டப்படும் சத்தம்.

ஆபத்தை உணர்ந்து உடல் விறைத்துக்கொள்கிற பூனை போல் நாராயணன் பரபரப்படைந்தான்.

"எல்லாரும் சட்டுனு கை கழுவிக்கங்க" என்று அவசரப்படுத்தி விட்டு, வாசல் கதவைத் திறக்கப் போனான்.

கப்பில் மீதி இருந்த ரசத்தைக் குடித்து விட்டு எழுந்திருப்பதா அல்லது உடனேயே எழுந்திருப்பதா என்று பாலகிருஷ்ணன் யோசித்துக் கொண்டிருந்தபோதே, கதவை நாராயணன் இலேசாகத் திறக்க, வெளியே நின்று கதவைத்தட்டிக்கொண்டிருந்தவர்கள் பிடித்துத் தள்ளியதில் கதவு படாரென்று திறந்து கொண்டது. திமுதிமுவென்று நாலைந்து பேர் நாராயணனைத் தள்ளி விட்டு ஒடி வந்தனர். 

"ஏண்டா, ஊர் முழுக்க பந்த், நீ திருட்டுத்தனமா மெஸ்ஸா நடத்தறே?" என்று விசாரித்து விட்டு ஒருவன் தன் கையிலிருந்த உருட்டுக்கட்டையால் நாராயணன் தலையில் ஒன்று போட்டான். 

"டேய் சாப்பாட்டு ராமன்களா , வாங்கடா  வெளியே!" 

உள்ளே கூச்சலும் குழப்பமும் அதிகரித்து, மேசை நாற்காலிகள் சேதப்படுத்தபடத் தொடங்கியதும், பாலகிருஷ்ணன் கை கழுவும் எண்ணத்தைக் கை விட்டு, வாசலை நோக்கி ஓடினார்.

"அதோ முதலாளி ஓடறான் பாரு, பிடிங்கடா அவனை!" என்று யாரோ கூவ, "நான் முதலாளி இல்லை" என்று எழும்பாத குரலில் அவர் கூவ முயன்றபோதே பாலகிருஷ்ணனின் ரத்தக் கொதிப்பு ஏறியது.

"பிடிடா, பிடிடா" என்று யாரோ கூவ, ஒருவன் இலக்கின்றித் தன்  கையிலிருந்த கட்டையைச் சுழற்ற, அது பாலகிருஷ்ணன் கழுத்தைத் தாக்கியது. வாசற்படியின் மீது நின்றுக்கொண்டிருந்தபோது அவர் மீது விழுந்த அந்த அடி அவரை நிலை குலையச் செய்தது. கொஞ்சம் தடுமாறி, கொஞ்சம் இடறி, கொஞ்சம் சமாளித்து, கொஞ்சம் தடுக்கி விடப்பட்டுக் குப்புற விழுந்தார். மெஸ்ஸுக்கு வெளியில் இருந்த பாதையின் சரிவில் உருண்டு சாலைக்குத் தள்ளப்பட்டார். 

சாலையில் போக்குவரத்து இல்லாத தைரியத்திலும், பின்னால் ஒரு இளம்பெண் உட்கார்ந்திருக்கும் உற்சாகத்திழும் கொஞ்சம் வேகமாகவே பைக்கை ஓட்டி வந்த ரமேஷ், அந்தக் குறுகிய தெருவில் திரும்பியபோது அவனுக்குச் சில அடிகள் முன்பு திடீரென்று ஒரு வயதானவர் ஒரு கட்டிடத்தின் வாசலிலிருந்து உருண்டு சாலையில் விழுவதைக் கவனித்ததும், சாலையின் ஓரமாக வந்து கொண்டிருந்தவன், பைக்கை ஒடித்துத் திரும்பிச் சாலையின் மையப்பகுதிக்குச் செல்ல முயன்றான்.

வேகத்தைக் குறைக்காமல், பதட்டத்தில் பைக்கை அவசரமாக ஒடித்துத் திருப்பியதில், வண்டி வளைந்து வளைந்து ஒடி சாலையின் எதிர்ச்சாரியில் இருந்த குப்பைத்தொட்டியின் மீது மோதி நின்றது. பின்னால் உட்கார்ந்திருந்த மாதங்கி வண்டியிலிருந்து தூக்கி எறியப்பட்டாள். அவள் தலை எதோ கடினமான பொருளின் மீது மோதிய நிலையில் கீழே விழு ந் தாள். 

ரமேஷ் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றபோதே மெஸ்ஸிலிருந்து நாலைந்து பேர் கையில் கட்டைகளுடன் அவனை நோக்கி ஒடி வந்தனர். 

"ஏண்டா, பந்த் அன்னைக்குக் காதலியோடு ஊர் சுத்த வேண்டியிருக்கா  உனக்கு?" என்றபடியே ரமேஷின் கன்னத்தில் பளீரென்று அறைந்தான் ஒருவன்.

"சார், அவங்க என் அக்கா மாதிரி சார்!" என்று அலறினான் ரமேஷ்.
     
நினைவு தப்பிக்கொண்டிருந்த மாதங்கிக்கு  இது காதில் விழுந்ததும் எதோ ஒரு திருப்தியில் அவள் உதடு விரிய, அந்த உணர்விலேயே மயங்கிப் போனாள்.

"சின்னப்பையன்கிட்ட என்னடா பேச்சு?" 

"அவன் வண்டியைக் கொளுத்தி விட்டுட்டாப்  போச்சு" என்றான் ஒரு கர்மவீரன். மற்றவர்கள் இந்த யோசனைக்கு உற்சாகமாக ஆதரவு தெரிவித்தார்கள். 

"ஐயையோ! வேண்டாம் சார், விட்டுடுங்க!" என்று ரமேஷ் அலறியது வியர்த்தமாகியது. 

பைக்கின் மீது எழுந்த ஜ்வாலை ரமேஷின் வயிற்றுக்குள் பாய்ந்தபோது, மனதில் அவன் அப்பா வந்து '"கிளம்பும்போதே சொன்னேனே கேட்டியா?" என்றார். 
பாலகிருஷ்ணன் எங்கேயோ பறந்து கொண்டிருந்தார். அழுத்தம் மிகுந்து ரத்தக்குழாய்கள் புடைத்துக்கொள்ள, ரத்தத்தின் வேகம் இதயத்தை அழுத்தி நினைவுகளை வேகமாக வெளியே விரட்டிக்கொண்டிருந்தது. இறக்கப்போகிறோம் என்ற நிச்சயமான உண்மை அதிர்ச்சியையம் கலக்கத்தையும் ஏற்படுத்தியது. 

'நான் இப்போது செத்தால் எனக்கு கொள்ளி வைக்கக்கூட யாரும் இல்லை. என் மகள் ஊரில் இருந்தபோது இது நடந்திருக்கலாம். ஆனால் என் மகள்  ஊரில் இருந்திருந்தால் நான் என் இந்த மெஸ்ஸுக்கு வந்து மாட்டிக்கொண்டிருக்க...இப்போது நான் எங்கே இருக்கிறேன்? இந்தாப்பா..சூடா ஒரு கப் ரசம்! 

கடைசியாக அவருக்கு நினைவு இருந்தபோது அவர் பேத்தி தீப்தி அவரிடம் வந்து, "தாத்தா! பாம்பா மாறின ராஜகுமாரன் அப்புறம் என்ன ஆனான் தாத்தா?" என்று கேட்டாள்.

ன்று இரவு தொலைக்காட்சியில்  செய்தி படித்தபெண்மணி, "ஓரிரு சம்பவங்களைத் தவிர, பொதுவாக இன்று பந்த் அமைதியாகவே நடந்தது" என்று புன்னகை மாறாமல் அறிவித்தாள் . 

(1989 ஆம் ஆண்டு எழுதப்பட்டது)


No comments:

Post a Comment