Friday, August 5, 2016

18. கிண்டி வந்து விட்டது!


ராமரத்தினத்துக்கு இருப்புக் கொள்ளவில்லை. எவ்வளவுதான் கோபமாயிருந்தாலும் ருக்மிணியை அவர் கை நீட்டி அடித்திருக்கக் கூடாது. முப்பது வருட தாம்பத்தியத்தில் ருக்மிணியை அவர் கை நீட்டி அடித்தது இதுதான் முதல் தடவை.

இந்தத் தடவை மட்டும் ஏன் அவர் அவளை அடிக்க வேண்டும்? அப்படி அவள் என்ன சொல்லி விட்டாள்? 'உங்களைக் கல்யாணம் செய்து கொண்டு இந்த முப்பது வருடமாக நான் எதைக் கண்டேன்?' என்று எல்லா மனைவிமார்களும் மனப்பாடம் செய்வதுபோல் ஒப்பிக்கும் அதே நான்சென்ஸ்தானே?' ஆனால் அதை நான்சென்ஸ் என்று ஒதுக்கித் தள்ளாமல் அவர் ஏன் உணர்ச்சி வசப்பட்டார்?

சம்பவம் முழுவதும் அவர் கண்முன் நிழலாடியது.

அவள் அப்படிச் சொன்னதும் அவருக்குக் குபீரென்று கோபம் பொங்கி எழுந்தது. அவரை அறியாமலேயே அவரது கை அவள் கன்னத்தில் அழுத்தமாகப் பதிந்தது. 

சற்றும் எதிர்பாராத இந்தத் தாக்குதலினால் அதிர்ச்சி அடைந்த ருக்மிணி அழக்கூட மறந்தவளாக விழிகள் பிதுங்க விழித்தாள். 

அப்புறம்..அப்புறம்.. அதை நினைக்கவே அவருக்கு அவமானமாக இருந்தது.

"உன் மனதில் நீ என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறாய், நாயே?"

சே! 'ருக்கு,' 'ருக்கு' என்று ஆசையாக அழைத்த அதே நாவால் 'நாயே' என்று அவளை அழைக்க அவருக்கு எப்படி மனம் வந்தது?

இனம் புரியாத ஒரு உணர்ச்சியில் அவர் தன் வாயில் அடக்கி வைத்திருந்த புகையிலையை ஜன்னலுக்கு வெளியே துப்பினார் - தாம் ஓடும் ரயிலில் உட்கார்ந்திருக்கிறோம் என்பதையே மறந்து.

"யாருப்பா அது புகையிலைச் சாத்தை வெளியில துப்பறது? அறிவு கெட்ட..."

அதற்குப்பின் வந்த வசை மொழியில் அவர் கவனம் நிலைக்கவில்லை.

ருக்கு, ருக்கு! என்னை மன்னித்து விடு. ஏதோ கோபத்தில்....

தன் செய்கையை உணர்ந்த மறு கணமே அவர் வாய் மூடி மௌனியானார்.

ருக்மிணி அவரைப் பார்த்த பார்வையை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இந்த முப்பது வருடங்களில் எத்தனையோ முறை அவள் அவரைக் கோபத்துடன் பார்த்திருக்கிறாள்.ஆனால் ஒரு முறை  கூட இது போல இகழ்ச்சியாகப் பார்த்ததில்லை.

"ஓ! உங்களுக்கு வெறி அந்த அளவுக்கு ஏறிடுச்சா? என்ன சொன்னீங்க? நாய்..நாய்.  ஆமாம். நான் நாய்தான். இந்த நாயோடத்தானே முப்பது வருஷம் குடித்தனம் நடத்தி  மூணு பெண்களையும் மூணு பிள்ளைகளையும் பாரபட்சம் இல்லாமல் பெத்து வச்சிருக்கீங்க? இப்பதான் நான் நாய்னு உங்களுக்குத் புரிஞ்சுதோ? ஏன் நாய்னா உங்களுக்கு பிடிக்காதோ? ஒருவேளை நான் குதிரையா இருந்திருந்தா உங்களுக்குத் பிடிச்சிருக்குமோ என்னவோ? பேசாம இந்த நாயை அடிச்சு விரட்டிட்டு ஒரு குதிரையைக் கல்யாணம் பண்ணிக்கங்களேன்!"

நாக்கைச்  சாட்டையாகச் சுழற்றி ஒவ்வொரு வார்த்தையாலும் அவரை விளாசி விட்டு அவள் விம்மி அழ ஆரம்பித்தாள்.  

ராமரத்தினம் கோபத்திலும் இயலாமையிலும்  துண்டை உதறி வீட்டுக் கிளம்பியவர்தான். 

நிறைய பேர் இறங்கினார்கள். அதை விட அதிகமான பேர் ஏறினார்கள். ரயில்பெட்டியில் நெரிசல் அதிகமாகியது.

ராமரத்தினம் நினைவுகளைக் கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டு வெளியே எட்டிப் பார்த்தார்.

எழும்பூர்.

ஏதோ ஒரு பிளாட்பாரத்திலிருந்து ஒரு ரயில் பெரிதாக ஊதிவிட்டுக் கிளம்பியது.

'ஒருவேளை, ருக்கு கோபித்துக்கொண்டு  ஊருக்குப் போயிருப்பாளோ?'

'சே  சே ! அவள் அப்படியெல்லாம் போகக்கூடியவள் இல்லை. அத்துடன் அவளிடம் பணம் எது?'

அன்று காலை சண்டையே  பண விவகாரத்தில்தான் ஆரம்பித்தது. அவர் அவளுடைய இரட்டை வடச் சங்கிலியைக் கேட்கப்போய்தான்  அவள் பிடித்துக் கொண்டாள்.

எவ்வளவுதான் நினைவிலிருந்து அகற்ற முயன்றாலும், அன்று காலை நடந்த நிகழ்ச்சிகள் அவர் மனத்தைச் சுற்றிச் சுற்றி வந்தன.

"எதுக்கு சங்கிலி?" அவள் குரலில் எவ்வளவு ஆக்ரோஷம்!

அவரும் கொஞ்சம் பொறுமையாக பதில் சொல்லியிருக்கலாம்!

"அதைப்பத்தி உனக்கென்ன? அடக்கமான பொண்ணா லட்சணமா கேட்டவுடன்  கழட்டிக் கொடுப்பாயா..."

"புருஷனுக்கு ஏத்தாப்பலத்தானே பொண்டாட்டியும் இருக்க முடியும்?"

"ஒனக்கு வாய் ரொம்ப நீளமாய்க்கிட்டே வருது!" 

"சிலருக்கு வாய் நீளம், சிலருக்குக்  கை நீளம். நீங்க பணம் கட்டற குதிரைகளுக்குக் கொஞ்சம் கால் நீளமாக இருந்திருக்கலாம்!"

"ஷட் அப்! யாரைப் பாத்துக்க கை நீளம் னு சொல்றே?"

"நான் உங்களைத்தான் சொன்னேன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்? போன வாரம் எனக்குத் தெரியாம பீரோவில் இருந்த வெள்ளி டம்ளரை எடுத்துக்கிட்டுப் போனீங்களே, அது ஞாபகம் வந்துடுச்சோ?"

அப்போதே அவர் கையை ஓங்கி இருக்க வேண்டியவர்தான். காரியம் ஆக வேண்டுமே என்பதற்காகத் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டார்.

"இதோ பார். நீ எனக்குச் சொந்தம். நீ பிறந்த வீட்டிலிருந்து எடுத்துக்கிட்டு வந்த பொருள்களும் எனக்குத்தான் சொந்தம். நான் உன்னைக் கேட்டுத்தான் எதையும் எடுத்துக்கிட்டுப் போகணும்னு அவசியம் இல்லை. இப்போ சங்கிலியைக் கழட்டிக் கோடு சீக்கிரம். நேரமாச்சு."

"நேரம் ஆனா  ஆகட்டுமே! நீங்க ஓடினா, அங்கே உங்க குதிரையும் ஓடிடுமோ? அது அசைஞ்சு அசைஞ்சு நடந்து கடைசியாத்தானே வரப்போகுது!"

"உஸ்ஸ் .. என் பொறுமையைச் சோதிக்காதே!"

சட்டென்று அவள் முகம் இறுகியது. "இங்க பாருங்க. உங்களுக்கு ஏற்கெனவே ரெண்டு பொண்ணுங்க கல்யாணத்துக்குத் தயாரா நிக்கறாங்க. மூணாவது பொண்ணும் இன்னைக்குக் காலையிலே தயாராயிட்டா. இன்னிக்கு உங்க ஞாபகம் எல்லாம் இங்கே இருக்காதுங்கறதுனாலதான் இதை உங்க கிட்டே சொல்லலே. இன்னிக்கு நீங்க ரேசுக்குப் போக வேண்டாம், இன்னியிலிருந்து போக வேண்டாம்."

அவர் பொறுமை எல்லை கடந்தது. அவர் மனைவி நாசூக்காகத் தெரிவித்த தகவல் அவரிடம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

"அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? சங்கிலியை எடு, சீக்கிரம்!"

"முடியாது."

"என்ன?"

அப்போதுதான் அவள் அதைச் சொன்னாள் . "உங்களைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டு..."

"நான்சென்ஸ்."

"நான் எனக்குன்னு எதையும் கேக்கல. நம்ம பெண்களுக்காகவும் பிள்ளைகளுக்காகவும் நீங்க எதையும் சேர்த்து வைக்கல. இருந்ததையும் துடைச்சதுதான் மிச்சம். இந்தச் சங்கிலி ஒண்ணுதான் மிச்சம் இருக்கு. இதை மட்டும் வச்சிக்கிட்டு எதையும் செய்ய முடியாதுங்கறது எனக்குத் தெரியும். வெள்ளத்திலே அடிச்சுக்கிட்டுப் போனாலும் கையில புடிச்சுக்க சின்னக் கட்டையாவது இருந்தாத்தான்  ஒரு ஆறுதலும் நம்பிக்கையும் இருக்கும். அது மாதிரிதான் இந்தச் சங்கிலி. இதைக் குடுக்க மாட்டேன்."

இப்போது நினைத்துப் பார்த்தபோது ருக்மிணி தப்பாக எதுவுமே சொல்லவில்லை என்று தோன்றியது. மனைவி தனக்கு  உபதேசம் செய்வதாவது என்ற ஆண்பிள்ளைத் திமிரினாலும், அவள் நகையைக் கொடுக்க மறுத்த ஆத்திரத்தினாலும்தான் அவர் கையை ஓங்கி விட்டார்.

அவருக்குக் கை நீளம் என்று அவள் குத்திக் காட்டியது எவ்வளவு உண்மை - அவள் வேறொரு அர்த்தத்தில் சொல்லியிருந்தாலும்!

வண்டி மீண்டும் நின்றது. சேத்துப்பட்டு.  அடுத்தது நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், மாம்பலம், சைதாப்பேட்டை, கிண்டி.

கையிலிருந்த ரேஸ் டிப்ஸ் புத்தகத்தைப் பார்த்தார்.

ருக்மிணி சங்கிலியைக் கொடுக்க மறுத்து விட்டாலும், அவர் கையில் போட்டிருந்த அரைப்பவுன் மோதிரம் கை கொடுத்தது. அது கூட ருக்மிணியின் அப்பா போட்டதுதான்!

பிராட்வேயில் அவர் வழக்கமாக அடகு வைக்கும் கடையில் அறுபது ரூபாய்தான்  கிடைத்தது. ரேஸ் ஜோதிடத்தில் புலமை பெற்றிருப்பதாகச் சொல்லிக்கொண்ட அவருடைய அலுவலக நண்பர் கேசவமூர்த்தியிடம் ஆலோசனை பெற்றுக்கொண்டு  கோட்டை ஸ்டேஷனில் ரயில் ஏறி விட்டார்.

டிப்ஸ் புத்தகத்தை அவர் கண்கள் வெறுமையாக நோக்கிக்கொண்டிருந்தன. அதை அவர் பலமுறை படித்து மனப்பாடம் செய்தாகி விட்டது. 'ஹெலன் ஆஃப் டிராய்',' ப்ளூ மூன்' இந்த இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பது என்பதுதான் அவருடைய பிரச்னை.

இந்த இரண்டு குதிரைகளில் ஒன்று இன்று நிச்சயம் ஜெயிக்கும். அவர் இன்று ஜெயிக்காமல் விடப்போவதில்லை.

இத்தனை வருடங்களாக ஒருமுறை கூட அவர் பணம் கட்டிய குதிரை வெற்றி பெற்றதில்லை. இன்றுமா அப்படி ஆகி விடும்? 'முயற்சி வெற்றி பெறும்' என்று வள்ளுவர் சொல்லியிருக்கிறாரே!  'சூதாடக்கூடாது' என்று கூடத்தான் வள்ளுவர் சொல்லியிருக்கிறார்.  ஆனால் இது சூதாட்டமா? சே! இதென்ன குழப்பம்!

டிப்ஸ் புத்தகத்தை மூடி வைத்தார். குதிரைகள் ஓடும் தோற்றமும், ருக்மிணியின் ஆக்ரோஷமான முகமும் ஒருங்கே அவர் கண் முன் நின்றன.

பாவம் ரூக்மிணி! அவளும்தான் இத்தனை வருடங்களாக எவ்வளவு பொறுமையாக இருந்திருக்கிறாள்! அவர் கொண்டு வந்து கொடுக்கும் பணத்தில் அவள் எப்படிக் குடித்தனம் நடத்துகிறாள் என்பது அவருக்கு ஒரு புரியாத புதிர்தான்.

காலையில் அவள் சொன்னதெல்லாம் மீண்டும் அவர் நினைவுக்கு வந்தது. மூன்று பெண்கள்! அவர்களுக்கு அவர் என்ன வழி செய்யப் போகிறார்?

திடீரென்று அந்தப் பிரச்னை அவர்முன் விஸ்வரூபம் எடுத்து நின்றது. இத்தனை நாள் - ஏன் இன்று காலை வரை, சற்று முன் வரை கூட அவரால் எப்படி இத்தனை அலட்சியமாக இருக்க முடிந்தது?

கடவுளே! இத்தனை வருடங்களாகக் குதிரைப் பந்தயம் ஆடியதில் ஒரு முறையாவது அவருக்கு ஜாக்பாட் விழுந்திருக்கக்கூடாதா?

இதுவரை ரேசுக்குப் போனதில் அவர் எத்தனை ரூபாய் தோற்றிருப்பார்? பத்தாயிரம் ரூபாய் இருக்குமா அல்லது ஒரு லட்சம் ரூபாயாய்க் கூட இருக்குமோ? அவரால் அனுமானிக்க முடியவில்லை.

எது எப்படியானாலும் இதுதான் அவர் விளையாடப்  போகிற கடைசி ரேஸ். இதில் அவர் ஜெயித்தாலும் சரி, தோற்றாலும் சரி. 'ப்ளூமூன்' மீது சத்தியம். சே! சத்தியம் செய்யும்போது கூட ரேஸ் குதிரை நினைவுதானா? இப்படிக் குதிரைகள் நினைவாகவே இருந்தால் ரேஸ் பழக்கத்தை விடுவது எப்படி?

ஆனால் இதுவரை ஒருமுறை கூட அவர் இந்தப் பழக்கத்தை விட்டு விட வேண்டும் என்று நினைத்ததில்லை. இன்று இந்த நினைவு வந்ததே ஒரு முன்னேற்றம்தான்.

சட்டென்று அவருக்கு ஒரு எண்ணம் தோன்றியது.

இன்றே இந்தப் பழக்கத்தை விட்டு விட்டால் என்ன? இன்று மட்டும் என் ரேசுக்குப் போக வேண்டும்?

ருக்மிணியின் கண்ணீர் வடிந்த முகம் அவர் நினைவுக்கு வந்தது. அதைத் தொடர்ந்து தாவணி போட்டுக்கொண்டு நின்ற மூன்று 'குதிரைகளின்' ஏக்கமான முகங்கள்!

அவர் உடலில் புது ரத்தம் பாய்ந்தது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது.

ஆமாம். அவர் இன்று ரேசுக்குப் போக போவதில்லை.

தன்னுடைய இந்த முடிவு ருக்மிணிக்குத் தெரிந்தால் அவள் எவ்வளவு சந்தோஷப்படுவாள்!

ரயில் பாலத்தைத் தாண்டி நுங்கம்பாக்கம் ஸ்டேஷனை நெருங்கி வேகம் குறைந்தது.

ராமரத்தினத்தின் மனதில் எண்ண ஓட்டங்கள் அதிகரித்தன.
'கிண்டியில் இறங்கி குரோம்பேட்டைக்கு டிக்கட் வாங்கிக்கொண்டு அடுத்த ரயிலில் குரோம்பேட்டை போய்விட வேண்டும்.'

குரோம்பேட்டையிலிருந்து பீச் ஸ்டேஷன் வரை ரிட்டர்ன் டிக்கட் வாங்கியிருப்பது நினைவு வந்தது.

'கிண்டியில் இறங்க வேண்டியதில்லை. இறங்கினால் சபலம் தட்டி ரேசுக்குப் போனாலும் போய் விடுவேன்! கிண்டியில் இறங்காமல் நேரே குரோம்பேட்டைக்குப் போய் விட வேண்டும்'.

ருக்மிணிக்கு மல்லிகைப்பூ மிகவும் பிடிக்கும் என்பது எங்கேயோ புத்தகத்தில் படித்த விஷயம் போல் நினைவுக்கு வந்தது.

 'குரோம்பேட்டை ஸ்டேஷனில் ஒரு முழம் மல்லிகைப்பூ வாங்கிக்கொண்டு  போக வேண்டும். அதை நானே அவள் தலையில் வைத்து விட  வேண்டும். இத்தனை வருட மணவாழ்க்கையில் ஒருநாள் கூட நான் எனது அன்பை இதுபோன்ற செயல்களால் வெளிப்படுத்தியதில்லை. ருக்மிணி எவ்வளவு மகிழ்ந்து போவாள்!'

ந்திரனுக்குக் கால் கடுத்தது. இன்று பார்த்து ரயிலில் ஒரே நெரிசல். இந்த ஞாயிற்றுக்கிழமையில் ஏன்தான் ரேஸ் வைக்கிறார்களோ?

அவனுக்குப் பின்னே நின்று கொண்டிருந்த இரண்டு பேர் இரண்டு குதிரைகளில் எது ஜெயிக்கும் என்று பந்தயம் கட்டிக் கொண்டிருந்தார்கள். குதிரைப் பந்தயத்தில் தோற்பதோடு இந்தப் பந்தயத்தில் வேறு தோற்க வேண்டுமா?

இன்று காலை முதலே அவனுக்கு எதுவும் சரியாக அமையவில்லை. எழுந்ததுமே  தலைவலி.பால்காரன் வரவில்லை என்று சொல்லி அம்மா காப்பிக்குக் கை விரித்து விட்டாள். இன்று பார்த்துத்தானா பாங்க் கிளார்க் வேலைக்கான தேர்வு வேறு இருக்க வேண்டும்?

ஒன்பது மணிக்குத் தேர்வு. ஏழரை மணிக்கே பழைய சோற்றைத் தின்று விட்டுக் கிளம்பி விட்டான்.  பையன் பாங்க் வேலைக்காகப் பரீட்சை எழுதப் போகிறானே, வாய்க்கு ருசியாக எதாவது சிற்றுண்டி செய்து கொடுக்க வேண்டும் என்று அம்மாவுக்குத் தோன்றவில்லை! தினமும் சுறுசுறுப்பாக இயங்கும் அம்மாவுக்கு கூட ஞாயிற்றுக்கிழமை வந்தால் ஒரு சோம்பல் வந்து விடுகிறது. தினமும் ஐந்து மணிக்கு எழுந்து விடுவாள், இன்று ஏழு மணிக்கு அவன் எழுப்பியபிறகுதான் எழுந்தாள்.

பல புத்தகங்களையும், கைடுகளையும் படித்து அவன் தன் மூளையில் ஏற்றிக்கொண்டிருந்த விஷயங்கள் எல்லாம் எங்கே மறந்து விடுமோ என்ற பயத்தில் புத்தகத்தைப் படித்துக்கொண்டே சாலையில் நடந்து கொண்டிருந்தபோது, அவனைத் தேர்வு எழுத விடக்கூடாது என்று தீர்மானித்தவர் போல் ஒரு கார்க்காரர்  அவன் மீது மோதுவது போல் வர, ஒரு லாங் ஜம்ப் செய்து அவரது முயற்சியை முறியடித்தான்.

ரயில் நிலையத்தில் அவன் மாடிப்படியில் வேகமாக இறங்கிக்   கொண்டிருந்தபோதே அவன் போக வேண்டிய ரயில் கிளம்பி விட்டது. அவன் மூச்சிரைக்க ஒடி வந்து அதில் தொற்றிக்கொண்டபோது, அவன் கையைப் பிடித்து இழுத்து உள்ளே தள்ளிய முரட்டு ஆசாமி அவனது அவசரத்தைப் புரிந்து கொள்ளக் கொஞ்சம் கூட முயற்சி செய்யாமல் "ஏம்ப்பா! உன் அப்பாவுக்கு நீ ஒரே பையனா, இல்லை நீ போய் விட்டாலும் வேறு யாராவது இருப்பார்களா?" என்று எகத்தாளமாகப் பேசியதில் அவன் படபடப்பு* அதிகமாகி விட்டது.

போகும்போதுதான் நின்று கொண்டே பயணம் செய்ய வேண்டியிருந்தது என்றால், வரும்போதும் அப்படித்தானா? தேர்வு எழுதிய பள்ளி வகுப்பறையின் குறுகிய பெஞ்ச்சுகளில் உட்கார்ந்ததில் உடல் முழுவதும் வலி எடுத்தது. (பாவம், பள்ளி மாணவர்கள் தினமும் ஆறு ஏழு  மணி நேரம் எப்படித்தான்இந்தக் குறுகிய பெஞ்ச்சுகளில் உட்கார்ந்திருக்கிறார்களோ?ஒருவேளை அந்த பெஞ்ச்சுகள் ஆரம்ப வகுப்புகளில் படிக்கும், வயதிலும், உருவிலும் சிறிய மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்டிருக்கலாம்!

போதும் போதாதற்கு, தேர்வை அவ்வளவு நன்றாக எழுதவில்லையோ என்ற மனக்கிலேசமும், நுங்கம்பாக்கம் ஸ்டேஷனில் ரயிலுக்காகபி பதினைந்து நிமிடங்கள் நின்றதால் ஏற்பட்ட கால்வலியும் சேர்ந்து கொள்ள, சற்று நேரம் உட்கார வேண்டும் போலிருந்தது. அப்போதுதான் சானடோரியத்தில் இறங்கி வீட்டுக்கு இருபது நிமிடங்கள் நடக்க முடியும்.

சந்திரன் பெட்டி முழுவதும் நோட்டமிட்டான். அவனுக்குக் கொஞ்சம் தள்ளி ஜன்னலோர சீட்டில் ஒரு நடுத்தர வயதுக்காரர் கையில் ரேஸ் புத்தகத்துடன் அரைக்கண் மூடியபடி அமர்ந்திருந்தார். ரேஸில் தான் பணம் கட்டிய குதிரை ஜெயிப்பது போல் கனவு கண்டு கொண்டிருப்பார் போலும்! அவர் கிண்டியில் இறங்கி விடுவார். அப்போது காலியாகும் சீட்டில் உட்கார்ந்து கொள்ளலாம்.

கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து அவரது பெஞ்ச்சுக்கு அருகில் வந்து நின்றான். வண்டி சைதாப்பேட்டையிலிருந்து கிளம்பியது. கிண்டியில் இறங்க வேண்டிய சிலர் சீட்டிலிருந்து எழுந்து வாசல் நோக்கி நகர ஆரம்பித்தார்கள். நிறையே பேர் இறங்கப் போவதாகத் தோன்றியது. தான் முதலில் நின்றிருந்த இடத்திலேயே நின்றிருந்தால் அங்கேயே இடம் கிடைத்திருக்கும். இங்கே வந்திருக்கவே வேண்டாம்.

வண்டி கிண்டி ஸ்டேஷனை நெருங்கி விட்டது. ஆனால் அவர் இறங்க யத்தனித்ததாகத் தெரியவில்லை. ஒருவேளை தூங்கி விட்டாரோ? பாவம் ஸ்டேஷனை விட்டு விடப்  போகிறார்.

சந்திரன் அவர் அருகில் நின்று அவரை உலுக்கி எழுப்பினான். "சார் கிண்டி வந்து விட்டது. இறங்கவில்லையா?"

கனவிலிருந்து விழித்தவர் போல் ராமரத்தினம் கண் விழித்தார். "ஆமாம்..கிண்டி..ஓ!.." என்று முனகிக்கொண்டே சீட்டிலிருந்து எழுந்து அவசரமாக இறங்கி வாசலை நோக்கி விரைந்தார்.

காலியான சீட்டில் சந்திரன் உட்கார்ந்து கொண்டான். வண்டி கிண்டியிலிருந்து கிளம்பியபோது அவர் படிக்கட்டில் ஏறிக்கொண்டிருந்ததைப்  பார்த்தான்.

*இன்றய இளைஞர்களுக்கு 'டென்ஷன்' என்றால்தான் புரியும்!

(1973ஆம் ஆண்டில் எழுதப்பட்டது.)


No comments:

Post a Comment