Monday, January 3, 2011

2. ஒரு தபால்காரர் ஒய்வு பெறுகிறார்

துதான் அவருடைய கடைசி 'பீட்.' அந்தத் தெருவில்  யாருக்கும் கடிதம் எதுவும் இல்லை. ஒரே ஒரு மணி  ஆர்டர் மட்டும் இருந்தது - கோடி  வீட்டு மீனாம்பாளுக்கு.  அவள் கூடத் தெருக்கோடியில் இருந்த  தன  வீட்டின் ஒட்டுத் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு அவர் வரும் திசையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

தெருக்கோடியிலிருந்து அவர் தெருவுக்குள் திரும்பியதும், அவள் முகத்தில் படர்ந்து பரவிய மகிழ்ச்சி நூறு கஜங்களுக்கு அப்பாலிருந்த அவர் கண்களுக்குக் கூடத் தெரிந்தது. அவருடைய முப்பத்தைந்து வருட சர்வீஸில் இது போன்ற எத்தனை மலர்ச்சிகளைக் கண்டவர் அவர்! 'மணி ஆர்டர் வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள் போலிருக்கிறது.'

திடீரென்று அவர் மனதில் ஒரு சிந்தனை. அவரும் இதுவரை எத்தனையோ  மணி
ஆர்டர்களைப் பட்டுவாடா செய்திருக்கிறார். எத்தனை இருக்கும்? சுமாராக எத்தனை ரூபாய் இருக்கும்? ஒரு லட்சம் இருக்குமோ? ஏன்  ஒரு கோடியே இருக்கலாம் !
ஆனால் அவருக்கு எத்தனை மணி ஆர்டர்கள் வந்திருக்கின்றன? இந்தப் பத்துப் பதினைந்து வருடங்களில் தனக்கு ஒரு மணி ஆர்டர் கூட வந்ததாக அவருக்கு நினைவில்லை.

மீனாம்பாள்  வீட்டுக்கு அப்புறமிருந்து ஒரு வண்டி அவரை நோக்கி வந்து கொண்டிருந்தது - பார வண்டி.

என்றுமில்லாமல் இன்று அந்த வண்டியை இழுக்கும் மாடுகளைப் பார்த்ததும் அவருக்குப் பரிதாபமாக இருந்தது. அவையும்தான் எத்தனை வருடங்களாக, எத்தனை விதமான பாரங்களைஎல்லாம் சுமந்து கொண்டிருக்கின்றன! ஆனால் அவ்ற்றுக்கென்று  ஒரு சுகம், மகிழ்ச்சி, உல்லாசம் எதாவது உண்டா? ஏன், அவற்றைப் பயன்படுத்திப் பலன் அடைபவர்களிடமிருந்து ஓர் உபகாரம், ஒரு நன்றி, கேவலம் ஒரு அனுதாபத்தைத்தான் எதிர்பார்க்க முடியுமா? வைக்கோலும் தீனியும் போடுவது கூட, அவை உயிர் வாழ்ந்து, சக்தியை இழந்து விடாமல், காலம் காலமாகத்  தங்களுக்கு உழைத்துத் தேய வேண்டும் என்ற 'கரிசன'த்தினால்தானே!

போஸ்ட்மேன் பொன்னுசாமிக்குத்  தன்  நிலைமையும் அந்த மாடுகளின் நிலைமையைப் போன்றதுதான்  என்று தோன்றியது. அவரும்தான் ஊருக்காக உழைக்கிறார். அவருக்குக் கொஞ்சம் கூடத் தொடர்பில்லாத மனிதர்களின், ஏன் அவரது விரோதிகளின் கவலைகளையும், மகிழ்ச்சியையும், அதிர்ச்சியையும், கோபத்தையும், கிண்டலையும், பாசத்தையும், காதலையும் சுமக்கிறார். யாரோ இரண்டு பேர் பேசிக்கொள்வதற்காக அவர் மழையிலும், வெய்யிலிலும் அலைந்து திரிகிறார். ஆனால் அவரது நலனைப்பற்றி  யாருக்கு அக்கறை?

பாரம் சுமக்கும் மாடுகளுக்கும்,  தனக்கும் பெரிய வித்தியாசம் ஏதுமில்லை என்று அவர் நினைத்துக் கொண்டார். அவை தம் குறைகளை  வாய் விட்டுச் சொல்ல முடியாதவை. அவர் வாய் இருந்தும் அவற்றை வெளியே சொல்லிக் கொள்ளாதவர்.

மீனாம்பாள் வீட்டை அவர் நெருங்கி விட்டார். இன்று என்னவோ எல்லா மணி  ஆர்டர்களும்  பட்டுவாடா ஆகி விட்டன. ஆச்சரியம்தான்!

சற்று முன்புவரைதான் அவர் கையில் ஐநூறு ரூபாய்  பணம் இருந்தது.
கொடுத்ததெல்லாம் போக இப்போது இருநூறு ரூபாய்தான் மீதி   இருந்தது. இதையும் மீனாம்பாளிடம் கொடுத்து விட்டால் அவர் பணப்பையும் அவர் பர்சின் நிலையை அடைந்து விடும்.

திடீரென்று அவருக்கு ஆத்திரமாக வந்தது. அவர் கையில் இத்தனை பணம் புழங்குகிறது. ஆனால்  அதில்  ஒரு  நயா   பைசாவைக் கூட அவரால் எடுத்துச் செலவழிக்க முடியாது. அப்படி யார் அவர் கையைக்   கட்டி இருக்கிறார்கள்?

ஒரு வேடிக்கையான, விசித்திரமான எண்ணத்தில் அவர் லயித்துப் பார்த்தார். அவரிடம் இத்தனை பணத்தைக் கொடுக்கிறார்களே, அத்தனையையும் எடுத்துக்கொண்டு அவர் எங்காவது ஓடிவிட்டால்..? அப்படி அவர் செய்ய மாட்டார் என்ற நம்பிக்கை. குருட்டு, அசட்டு நம்பிக்கை!. அந்த நம்பிக்கையை அவரால் தகர்க்க முடியாதா என்ன?

மீனாம்பாள் வீட்டு வாசலை அவர் எட்டுவதற்குள், மீனாம்பாள் பரபரப்புடன், "என்ன அண்ணே! எனக்கு மணி ஆர்டர் வந்திருக்கா?" என்று துடித்தாள்.

அவள் குரலில்தான் எத்தனை ஆர்வம், துடிப்பு, நம்பிக்கை,கவலை!  'உலகம் ஒரு நாடகமேடை, நாமெல்லாம் நடிகர்கள்," என்ற ஷேக்ஸ்பியரின் கூற்று உண்மையானால், நாமெல்லாம் எத்தனை சிறந்த நடிகர்கள்!

திடீரென்று அவருக்குள் ஒரு குரூரமான வெறி. அவள் கேள்விக்குத் தான் 'இல்லை' என்று பதில்  சொன்னால்...? அவள் ஆர்வமும், நம்பிக்கையும் எப்படிச் சிதைந்து துடிக்கும்! அவரைப் போல் அவளும் எவ்வளவு, ஏமாற்றம், துடிதுடிப்பு, கவலை இவற்றால் தாக்கப்படுவாள்!

அவரது சிந்தனையின் குரூரம் திடீரென்று குழியில் விழுந்தாற்போல் அதிர்ந்தது. 'ஏன், உண்மையாகவே அப்படிச் செய்தால் என்ன?'

அன்று சனிக்கிழமை. சட்டப்படி என்னவோ டெலிவரி ஆகாத மணி ஆர்டர்களை சாயந்திரத்துக்குள் போஸ்ட்மாஸ்டரிடம் 'ரிடர்ன்' கொடுக்க வேண்டும்.  ஆனால் அவர் எப்போதும்   அப்படிச் செய்வதில்லையே? சில நாட்கள் தாமதமாகி விட்டால், அவர் அன்றைக்கே ரிடர்ன் கொடுக்காமல் நேரே வீட்டுக்குப்  போய் விட்டு, மறுநாள் காலை கொடுப்பது வழக்கம்தானே?

கடவுளே அவருக்கு உதவுவதற்கான சூழ்நிலைகளை உருவாக்கிக் கொடுத்திருப்பதாகத் தோன்றியது. இல்லாவிட்டால், என்றுமில்லாமல் இன்று அவருக்கு இப்படி ஒரு யோசனை தோன்றுவானேன்? நாளை ஞாயிற்றுக்கிழமை வேறு. எப்படிப்பட்ட சந்தர்ப்பம்!

கண நேரத்தில் அவர் மனம் மின்னலை விடக்  கடிய வேகத்தில் திட்டம் வகுத்தது. மீனாம்பாளிடம் மணி ஆர்டர் வரவில்லை என்று சொல்லி விடலாம். திங்கட்கிழமையன்று 'மீனாம்பாள் வீட்டில் இல்லை' என்று குறிப்பு எழுதி போஸ்ட்மாஸ்டரிடம்  கொடுத்து விடலாம். போஸ்ட் ஆபீஸ்  இருப்பது ஒரு கிராமத்தில். இது இன்னொரு கிராமம். இங்கே ஒரு மீனாம்பாள் இருப்பதே போஸ்ட் மாஸ்டருக்குத் தெரியாது. அவள் வீட்டில் இருந்தாள் என்பது மட்டும் எப்படித் தெரியப் போகிறது!

அன்றுதான் வந்ததாகச்சொல்லி திங்கட்கிழமையன்று இந்த மணி ஆர்டரை மீனாம்பாளுக்கு  டெலிவரி செய்தால், அவளுக்கும்தான் என்ன தெரியப் போகிறது?
ஆனால் ஒரே ஒரு உறுத்தல் மட்டும் இல்லாமல் போகவில்லை. திங்கட்கிழமையன்று 'ரிடர்ன்' கொடுப்பதற்குப் பணம்...?

ஒ! அதென்ன பெரிய விஷயம்? பிறந்த வீட்டுக்குப் போயிருக்கும் அவர் மனைவி எப்படியாவது பணம் வாங்கி வராமலா போய் விடுவாள்? இன்றைய உடனடித் தேவைக்கு 'வழி காட்டிய' கடவுள் அதற்கு மட்டு வழி காட்டாமலா போய் விடுவார்?

மனிதர்களுக்குத்தான் கடவுள் மீது எவ்வளவு நம்பிக்கை!

அவர் மனதை உறுதி செய்து கொண்டார். அந்தக் கணமே மனதிலிருந்த கவலைகள் எல்லாம் குப்பென்று  வியர்வையாக வெளியேறியது  போல  முகம் நீரில் மிதக்க, அவர் அதை அழுந்தத் துடைத்தார் - மனச்சாட்சியையும்தான்!

அவர் முகத்தில் நெளிந்த புன்னகை மீனாம்பாளின்  நம்பிக்கைக்கு உயிரூட்டியது.
ஆனால் அடுத்த கணமே அது சிதைந்தது. 

பொன்னுசாமி உதட்டைப்  பிதுக்கித் தலையை ஆட்டி அபிநயம் பிடித்துக் காட்டினார். அவளை நேரே பார்க்கத் துணிவில்லாமல் முகத்தை வேறு புறம் திருப்பிக்கொண்டு, "கொஞ்சம் தாகத்துக்குத் தண்ணி குடிச்சுட்டுப் போகலாம்னு தான் வந்தேன்..." என்றார்.

துடித்துக் கொண்டிருந்த  ஆவலும், நம்பிக்கையும் மண்டையிலடித்தாற்போல் அதிர்ந்து பந்தாக சுருட்டிக் கொள்ள, முகம் பிரேதமென வெளுத்திருக்க, இயந்திரமாக உள்ளே சென்று அவள் கொணர்ந்து கொடுத்த தண்ணீரைக் குடித்துக் கொண்டே, கடைக்கண்ணால் அவள் முகத்தை உற்று நோக்கிய பொன்னுசாமியின் மனதில் பச்சாதாபம் சுரந்தது.

இதென்ன விந்தை! சற்று முன் அவளைப்போன்றே துடிப்புடனும், சோர்ந்து போன மனத்துடனும் இருந்தபோது, அவள் மீது பொறாமையும் ஆத்திரமும் கொண்டார். ஆனால் இப்போது கவலைகள் நீங்கித் தெளிந்து உற்சாகத்தில் மிதந்து கொண்டிருக்கும்போது, அவள் நிலை கண்டு அவரால் எப்படி இரங்க முடிகிறது?
தம்ளரைத் திருப்பிக் கொடுக்கும்போது, சற்றே தயக்கத்துடன், "கவலைப் படாதீங்கம்மா! திங்கட்கிழமை எப்படியும் வந்துடும்" என்று அவர் கூறிய ஆறுதல் மொழியால் அவளுடைய மன வறட்சியைத் தணிக்க இயலவில்லை.

இந்த இருநூறு ரூபாயை நேரே அவர் மகனிடம் கொண்டு போய்க் கொடுக்கப் போகிறார். "போடா போ. இன்று இரவு ரயிலிலேயே கிளம்பி சென்னைக்குப் போ. உன் நண்பனிடம் சொல்லி, அவன் சொன்ன ஆளிடம் அழைத்துப் போகச் சொல். அவர் முன் இந்தப் பணத்தைத் தூக்கிப் போட்டு ,  இந்த விலைக்கு அவர் தருவதாகச் சொன்ன வேலையைக்  கேட்டு வாங்கு" என்பார். அவனுக்கு வேலை கிடைத்து விடும்....

அப்புறம்...அப்புறம்...அதை நினைக்கவே அவருக்குப் புளகாங்கிதம் ஏற்பட்டது. அவருக்கும் மணி ஆர்டர் வரும்!

அவர் வேடிக்கையாகத் தன் மகனிடம் சொல்லுவார்: "டேய், வேலை கிடைச்சதும் உங்கப்பாவை மறந்துடாதேடா! இந்தப் பணம், உங்கப்பா தன் வாழ்நாளிலேயே செய்யாத ஒரு காரியத்தைச் செய்ததால் கிடைத்ததாக்கும்! அந்தச் 'செய்கை'க்காகவாவது, மாசா மாசம் என்னை நெனைச்சு ஏதாவது அனுப்பணும்டா  நீ!'

கடைசியில் அவர் வாழ்விலும் மகிழ்ச்சி, உல்லாசம், நிம்மதி....கடவுளே! அவற்றை அவர் எப்படித்  தாங்கப்போகிறார்?

தெருக்கோடியில் பாரவண்டி அவிழ்த்து விடப்பட்டு, மாடுகள் வைக்கோல் தின்று கொண்டிருந்தன.

திங்கட்கிழமை பொழுது ஏன் விடிய வேண்டும்? பொன்னுசாமி இருப்புக் கொள்ளாமல் தவித்தார். ஆணிப் படுக்கையின் மேல் படுத்திருப்பவர்கள் இப்படித்தான் அவதிப் படுவார்களோ?

அவர் மகனை சனிக்கிழமை இரவே பணத்துடன் ஊருக்கு அனுப்பி விட்டது உண்மைதான்.

ஆனால்....

எப்படியாவது முயன்று பணம் வாங்கி வருவதற்காக அவர் பிறந்த வீட்டுக்கு அனுப்பி வைத்திருந்த அவர் மனைவி இப்படியா வெறுங்கையுடன் திரும்பி வருவாள்?

அவர் மனதின் ஒரு மூலையில் ஆரம்ப முதலே ஒண்டியிருந்த  அந்த அச்சம் திடீரென்று விரிவைடைந்து மனம் முழுவதும் வியாபித்து எழுந்த அழுத்தத்தில் இதயமே வெடிக்கப்போவது போல் அவர் உணர்ந்தார்.

ஞாயிறு போய்த் திங்களும் வந்து விட்டது. இன்னும் இரண்டு மணி நேரத்தில் அவர் போஸ்ட் மாஸ்டர் வரதராஜன் முன்னால் நிற்க வேண்டும். அப்போது அவர் என்ன செய்வார்? 'ரிடர்ன் எங்கே?' என்று போஸ்ட் மாஸ்டர் கேட்கும்போது என்ன பதில் சொல்வார்?

முதல்நாள் முழுவதும் பணத்துக்காக அவர் அலைந்து, திரிந்து, பார்த்துப் பள்ளிளித்த்துக் கெஞ்சிய மனிதர்கள் எல்லோரும் அவரைக் கைவிட்டு விட்டார்கள்.

ஆனால் கடவுளும் கூடவா அவரைக் கைவிட வேண்டும்? கடவுளே!.. உனக்கு இரக்கமில்லையா?

"சார்.."

தாழ்வாரத்தில் தலையில் கைவைத்தபடி உட்கார்ந்திருந்த பொன்னுசாமி பெரும் பாரத்தைத் தூக்குவது போல் தலையை நிமிர்த்திப் பார்த்தார்.

சிவந்த கண்களும், சோர்வடைந்த முகமும்...இந்த முகம் எங்கோ  பார்த்தாற்போல்....
"..என் பெயர் செல்லையா." என்றான் அவன்.   சட்டென்று உள்ளே வந்து அவர் எதிரே உட்கார்ந்தான்.

'செல்லையா! இந்தப் பெயர் கூட வெகு சமீபத்தில் அவருக்குப் பரிச்சயமாகி இருக்கிறது. யார்?.. யார்?....

சட்டன்று அவருக்கு நினைவுக்கு வந்து விட்டது. 'இந்தப் பெயருடையவரிடமிருந்துதான் மீனாம்பாளுக்கு மணி ஆர்டர் வந்திருந்தது!. அதை  அவரால் எப்படி மறக்க முடியும்?    இந்த ஜாடை கூட மீனாம்பாள் ஜாடைதான்.

அப்படியென்றால் இவன் மீனாம்பாளின் மகன். சென்னையில் உத்தியோகத்தில் இருப்பவன்.

வரப்போகும் அவமானத்தை உணர்ந்து, பொன்னுசாமியின் உடல் முழுவதும்  குப்பென்று எரிந்தது. அவர் எதிபார்த்துப் பயந்த நேரம் முன்னாலேயே வந்து விட்டது. இவன் மீனம்பாளுக்கு மணி ஆர்டர் அனுப்பி விட்டுத் தற்செயலாக நேரிலும்  வந்திருக்கிறான். தான் அனுப்பிய மணி ஆர்டர் வந்திருக்க வேண்டுமே, இன்னும் ஏன் டெலிவரி செய்யவில்லை என்று கேட்பதற்காகவே இப்போது இங்கே வந்திருக்கிறான்.
'எனக்கு  இது வேண்டியதுதான்.' அவமானத்தால் அவர் குறுகிப் போனார்.

"சார், என்னை..என்னை.. மன்னித்து விடுங்கள்!"

அவர் திடுக்கிட்டுத் தலை நிமிர்ந்தார். 'இதென்ன வேடிக்கை! இவன் எதற்கு என்னிடம்  மன்னிப்புக் கேட்க வேண்டும்?'

அவருடைய திகைப்பைப் பொருட்படுத்தாமல், அவன் தொடர்ந்தான். "உங்களுக்கு விவரம் தெரிந்திருக்க   நியாயம் இல்லை. சென்னையில் நான் ஒரு கம்பெனியில்  வேலை  செய்கிறேன். அந்தக் கம்பெனி மனேஜர் எனக்குத் தெரிந்தவர். அதனால் அந்தக் கம்பெனியில் என்னால் வேலை வாங்கிக் கொடுக்க முடியும். ஆனால் அந்தச் செல்வாக்கை நான் தவறாகப் பயன்படுத்தி விட்டேன். வேலை வாங்கிதருவதர்காக நான் இருநூறு ரூபாய் லஞ்சம் வாங்கினேன்."

தனது நிலையை ஒரு கணம் மறந்தவராகப் பொன்னுசாமி தனக்குள் சிரித்துக் கொண்டார். இந்தச் செல்லையாவைப் போல் இன்னும் எத்தனை பேரோ!

"நான் லஞ்சம் வாங்கியது உங்கள் பையனிடம்தான் சார்."

அவர் சற்றுத  திடுக்கிட்டார்.  'இவனுக்கு லஞ்சம் கொடுப்பதர்காகத்த்தான் இவன் அம்மாவுக்கு வந்த மணி ஆர்டர்  தொகையைப்   பயன்படுத்தினேனா? கடவுளே இதெல்லாம் உனக்கு விளையாட்டா ?'

அவர்  பேச்சிழந்து  நின்றார்.

"நான் செய்தது தவறுதான்  சார். என்னை மன்னியுங்கள். இந்தாருங்கள் உங்கள் பணம்."
அவன் இரண்டு நூறு ரூபாய் நோட்டுகளை அவரிடம் பணிவுடன் நீட்டினான்.

அவர் கண்களில் பளிச்சென்று ஒரு ஒளி. கடைசியில் கடவுள் அவருக்குக் கருணை காட்டி விட்டாரா?   'ஆனால் இவன் ஏன் பணத்தைத் திருப்பிக் கொடுக்கிறான்? ஒருவேளை இவனால் என் மகனுக்கு வேலை வாங்கிக் கொடுக்க முடியவில்லையோ? ' தன் மகனுக்கு வேலை கிடைக்கவிட்டாலும் பரவாயில்லை, தன் மானம்  பிழைத்தால்   போதும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டிருந்தாலும், இந்த எண்ணம் ஏற்படுத்திய ஏமாற்றம்  அவர் மனதில் தேங்கி, இலேசான சோர்வைக் கிளறியது.

"அப்படியானால்?..." என்றார் அவர் தயங்கி.

"இல்லை சார். நீங்கள் நினைக்கிறாற்போல்  இல்லை. உங்கள் மகனுக்கு - அவன் உங்கள் மகன் என்று, ஏன்  உங்களையே, எனக்கு நேற்றுதான் தெரியும் - வேலை கிடைக்க ஏற்பாடு செய்து விட்டேன். இன்று அவன் வேலையில்  சேர்ந்திருப்பான்."

அவர் மனதை உற்சாகமும், குழப்பமும் ஒருங்கே நிரப்பின. கடவுளுக்கு இவ்வளவு கருணை எப்படி வந்தது?

ஆனால் முழுதும் நம்பிக்கை கொள்ள முடியாமல், பணத்தை ஏன்  சார் திருப்பிக்  கொடுக்கிறீர்கள்?" என்றார்.

சட்டென்று அவன் கண்கள் பொங்கின. கடைக்கண்ணில்  சுரந்த நீர் அவசரமாகக் கன்னங்களுடன் உரையாடி விட்டு,  விழுந்தது.

"மிஸ்டர்!"

"சொல்கிறேன் சார்," என்றான் அவன். :நான் முதல் தடவையாகச்  செய்த தவறு இது. அனால் இதற்கே எனக்குத தண்டனை கிடைத்து விட்டது. என் அம்மா நேற்று காலமாகி விட்டாள்."

என்ன மீனாம்பாளா?... தண்டனை செல்லையவுக்க அல்லது அவருக்கா? இல்லாவிடில் அவர் மனமும் உடலும் இப்படி அவதிப்படுவானேன்?

'வெகுநாட்களாக,  என் தாயின் திருமாங்கல்யம் அடகில் இருந்தது. அது பரம்பரை அணிகலன் சார். என் அப்பா இறந்ததும், தன் மருமகளுக்குக் கொடுப்பதற்காக என் அம்மா அதைப் பத்திரப் படுத்தி வைத்திருந்தாள். ஆனால் ஒரு அவசரத்துக்கு இதை அடகு வைத்துப பணம் வாங்க வேண்டிய நிலைமை. வெகு நாட்களாகியும் அதை மீட்க முடியவில்லை. நேற்று அது ஏலம் போக இருந்தது. ஏலத்தில் போவதற்குள் அதை மீட்க வேண்டும் என்று பெரும்பாடு பட்டேன். பணம் கிடைக்கவில்லை. கடைசியில், அதற்காகத்தான் இந்த லஞ்சம் வாங்கவும் துணிந்தேன். இந்தப் பணத்தை நம்பி என் சம்பளப் பணம் முழுவதையும் என் அம்மாவுக்கு மணி ஆர்டர் செய்தேன். ஆனால் அது சனிக்கிழமையன்று வந்து  சேரவில்லை போலிருக்கிறது. அதனால் நகையை மீட்க முடியாமலேயே போய் விட்டது. குடும்ப நகையை இழந்த அதிர்ச்சி, ஏலம் போன அவமானம் எல்லாம் சேர்ந்து நேற்றுஎன் தாயின் உயிரைக் குடித்து விட்டன."
அவம் உணர்ச்சிகள் கட்டு மீறி, விம்மி அழுதான். "என் தவறுக்குச் சரியான தண்டனை கிடைத்து விட்டது சார்."

அவன் போய் விட்டான்.

பொன்னுசாமி உணர்ச்சிகள் மரத்தாற்போல்  அவன் உட்கார்ந்திருந்த இடத்தையே வெறித்துப் பார்த்தவாறிருந்தார்.

'அவன் செய்த தவறுக்குத் தண்டனை கொடுத்த கடவுள், எனக்கு மட்டும் ஏன் தண்டனை கொடுக்கவில்லை?'

அவர் செய்தது மாபெரும் குற்றம். பெரும் விளைவுகளுக்குக் காரணமாகி விட்ட அதற்குத் தண்டனை?

பிரான்ச் போஸ்ட்  மாஸ்டர் வரதராஜன் பொன்னுசாமியை ஆச்சரியமாகப் பார்த்தர்ர். "இதென்ன பொன்னுசாமி? ரிடையர் ஆவதற்கு இன்னும் ஆறு மாசம்தான் இருக்கும்போது,  இப்போதே ரிடையர் ஆகிறேன் என்று விண்ணப்பம் கொடுக்கிறாய்!"

"ஏன் மகனுக்கு  வேலை கிடைத்து விட்டது சார். இனிமேல் எனக்கு ஒய்வு வேண்டும்." பொன்னுசாமி மனதறிந்து பொய் சொன்னார். தான் செய்த தவறுக்குத் தானே கொடுத்துக்கொள்ளும் தண்டனைதான் அது என்று உண்மையைச் சொல்லாததது தவறுதான்.

ஆனால் இந்ததத் தவறு தண்டனைக்குரியது என்று அவர் நினைக்கவில்லை!


(தினமணி கதிர் 24.07.73  இதழில்  வெளியானது. எழுதியவர்: விஜயசாரதி)

மற்ற கதைகள்:
நான் ஒரு முட்டாளுங்க!

No comments:

Post a Comment