Sunday, January 16, 2011

4. எலி

காலையிலிருந்து வேலை ஏதுமில்லாமல் சும்மா அலைந்து கொண்டிருந்த சுப்பிரமணி 'இன்றைக்கும் பட்டினிதான் போலிருக்கு' என்று சலித்துக் கொண்டபோதுதான் அவனைத் தேடிக்கொண்டு பொன்னன் வந்தான். லாரியில் அரிசி மூட்டைகளை ஏற்றி இறக்க ஆள் வேண்டும் என்று அவன் சொன்னது  இவனுக்கு அரை வயிற்றுக்குக்  கஞ்சி குடித்து விட்ட மாதிரி இருந்தது.

காலையிலிருந்து சிங்கிள் டீக்குக் கூட வழியில்லை  என்று பொன்னனிடம் முறையிட்டு அவன் அரை மனதுடன் கடனாக வாங்கித் தந்த டீயைக்  குடித்தவுடன் உடம்பில் புதிய தென்பு வந்து விட்டதாகத் தோன்றியது.

டீ குடித்ததும் இரண்டு பேருமாக லாரி ஷெட்டுக்குப் போனார்கள். இன்னும் இரண்டு ஆட்கள் தயாராக இருப்பதாகவும், தான் மேஸ்திரியிடம் சொல்லி, சுப்பிரமணியைக்  கூப்பிட்டு வருவதாகச் சொல்லி, இன்னொரு ஆளைக் கூப்பிடாமல் மேஸ்திரியை நிறுத்தியதாகவும், பொன்னன் சொல்லியிருந்தான். அவன் செய்திருப்பதாகச் சொல்லிக் கொள்கிற சிபாரிசின் விலை குறைந்த பட்சம் இரண்டு ரூபாய் கைமாற்றாகவாவது  இருக்கும் என்று சுப்பிரமணிக்குத் தெரியும். அவன் மௌனமாக இருந்து விட்டான்.

பொன்னன்  சொன்னபடி  பார்த்தால், லாரி ஷெட்டில் ஏற்கெனவே ஆட்களும் மேஸ்திரியும் தங்களுக்காகக் காத்திருக்க வேண்டும் என்று சுப்பிரமணி நினைத்துக் கொண்டான். அதனால் நடையைச்  சற்று வேகமாகவே போட்டான். ஆனால் பொன்னன் என்னவோ அவசரப்படவில்லை.

லாரி ஷெட்டுக்குப் போனதும் வாசலில் தொங்கிய பூட்டைப் பார்த்ததும் சுப்பிரமணியின் வயிற்றுக்குள் போன டீ நேரே  தலைக்கு ஏறி அவனைக் கலக்கியது. பொன்னன் கூட ஒரு கணம் அயர்ந்துதான் போய் விட்டான். ஆனால் உடனேயே சமாளித்துக்கொண்டு , "ஓஹோ! இந்த ஷெட்டிலே ஒரே ஒரு கிளார்க்தானே உண்டு! எங்கேயாவது டீ குடிக்கப் போயிருப்பான். இப்போ வந்துருவான்." என்றான்.

சுப்பிரமணிக்கு நம்பிக்கை ஏற்படவில்லை.

"அதுக்குள்ளே இதை மூட மாட்டாங்களே? நிறைய டயம் இருக்குது. அதோடு, மேஸ்திரி வேறே என்னை இங்கே வரச் சொன்னானே! அதுக்குள்ளே அவனால சாத்திக்கிட்டுப் போயிருக்கவும் முடியாது" என்று மறுபடியும் உறுதியளித்தான் பொன்னன். இதை அவன் சுப்பிரமணிக்குச்  சொன்னதுடன், தனக்குத்தானேயும் சொல்லிக் கொண்டது போல் தோன்றியது.

அவன் சொன்னது போலவே பதினைந்து நிமிஷம் கழித்து ஒரு ஆள் வந்து கதவைத் திறந்தான். வாசலில் இவர்கள் இருவரும் நின்று கொண்டிருந்தது அவனுக்கு எரிச்சலாக இருந்தது. "சே! அஞ்சு நிமிஷம் அந்தண்டை இந்தண்டை போக விட மாட்டாங்க. என்ன பொழப்புடா இது!" என்று அலுத்துக் கொண்டான்.

சுப்பிரமணிக்கு இன்னும் சந்தேகம் முழுவதுமாகத்  தெளியவில்லை. "ஏங்க, இங்கே ஆளுங்க வந்து அரிசி மூட்டைகளை எடுத்துக்கிட்டுப் போயிட்டாங்களா?" என்றான்.

அந்த கிளார்க்குக்கு ஏன் இவ்வளவு கோபம் வர வேண்டும் என்பது சுப்பிரமணிக்குப் புரியவில்லை. "யோவ், என்னய்யா கேக்கறே? இங்கே எத்தனையோ பேரோட அரிசி மூட்டைங்க கிடக்கு. யாரு என்னன்னு சொல்லாம மொட்டையாக் கேட்டா என்னாய்யா தெரியும் எனக்கு? ஒன்னைச் சேர்ந்த ஆளுங்க யாருன்னு நான் கண்டேனா?" என்று  எரிந்து விழுந்தான்.

இதற்கு பதில் சொல்ல சுப்பிரமணி யோசிப்பதற்குள் ஒரு லாரி அந்தச் சந்தில் திரும்பி அவர்கள் மீது இடிக்கிற மாதிரி வந்து நின்றது.

"நம்ம லாரிதான்!" என்றான் பொன்னன்  கொஞ்ச நேரம் முன்பு இறங்கிப் போயிருந்த சுரத்து இப்போது அவனிடம் திரும்பி வந்திருந்தது.

லாரியிலிருந்து மேஸ்திரி இறங்கி வந்தான். லாரியின்  பின்னிருந்து ஆட்கள் தொப் தொப்பென்று  குதித்து வருவார்கள் என்று இவர்கள் பார்த்தார்கள். யாரும் வரவில்லை.

"என்ன ரெடியா?" என்றான் மேஸ்திரி, ஏதோ இவர்கள் அவனைக் காக்க வைத்து விட்ட மாதிரி.

"மத்த ஆளுங்கல்லாம் வரலியா?" என்றான் பொன்னன்.

"மத்த ஆளுங்களா? அதான் ஒங்கிட்ட  சொல்லியிருந்தேனே! நீ ஏன் அழைச்சுக்கிட்டு வரல்லே?" மேஸ்திரியின் குரலில் கடுகடுப்பு ஏறியது.

பொன்னன் ஒரு தடவை மென்று விழுங்கி விட்டு, "நான் ஒரு ஆளைத்தானே அழச்சுக்கிட்டு வரதாச்  சொன்னேன்?" என்றான் தயங்கிக்கொண்டே. 

மேஸ்திரிக்குக் கோபம் வந்து விட்டது. "என்னடா, வெளையாட்டுப் பண்றீங்களா? ஆள் கூட்டிக்கிட்டு வரேன்னுட்டு ஒரு ஆளோட வந்து நிக்கறியேடா  ஒதவாக்கரை?......." 

அதற்குப் பிறகு மேஸ்திரி பேசிய பேச்சுக்கள்  எழுதக் கூடியதாக இருக்கவில்லை.

பொன்னனை இவ்வளவு சுவாதீனமாக வசைபாடும் அளவுக்கு மேஸ்திரியோடு அவ்வளவு நெருக்கம் பொன்னனுக்கு எப்படி வந்தது என்று சுப்பிரமணி யோசித்துக் கொண்டிருந்தபோதே மேஸ்திரி அவனிடம் திரும்பினான்.

"என்னய்யா  வேடிக்கை பாத்துக்கிட்டிருக்க? போய் கிடுகிடுன்னு மூட்டையை ஏத்தற வழியப் பாருங்கடா தீவட்டிப் பசங்களா!"

சுப்பிரமணிக்குச் சுரீரென்று உறைத்தது. மேஸ்திரி தன்னுடைய 'சுவாதீனத்தை' அவனிடமும் காட்ட ஆரம்பித்து விட்டான். சூடாகப் பதில் சொல்ல வேண்டும். குறைந்தது  'மரியாதையாய்ப் பேசய்யா!' என்றாவது  சொல்லித் தன் சுய கௌரவம் புறக்கணிக்கப்பட்டதற்கு   எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என்று தோன்றியது. ஆனாலும் காலையிலிருந்து வேலை எதுவும் இல்லாமல் இருக்கும் நிலைமையையும், இரவில் தன் குடும்பத்தை எதிர்நோக்க வேண்டிய சூழ்நிலையையும் நினைத்துப் பேசாமல் இருந்து விட்டான்.

"ரெண்டு பேரா எப்படி ஏத்த முடியும்?" என்று மட்டும் கேட்டு வைத்தான்.

"முடிஞ்சா ஏத்து, இல்லேன்னா போ. நான்  எப்படியாவது பாத்துக்கறேன்" என்றான் மேஸ்திரி நிர்த்தாட்சண்யமாக.

பொன்னன் ஏதோ முணுமுணுத்துவிட்டு, "வேற யாராவது ஆளுங்க கெடைக்கறாங்களான்னு பாத்துட்டு வரேன்" என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான்.

"பத்து நிமிஷம்தான் டயம். அதுக்குள்ளே  வரலைன்னா,  .....ச்சுன்னு லாரியைத் திருப்பி அனுப்பி விடுவேன்" என்று மேஸ்திரி எச்சரித்தான்.

சற்று நேரம் கழித்துப் பொன்னன் திரும்பி வந்தபோது,  கூட ஒரு ஆளையும் அழைத்து வந்தான். "ஒரு ஆள்தான் கெடைச்சான்" என்றான் பொதுவாக.

மேஸ்திரி "..உம்..உம்.." என்றான். ஆமோதிப்பை விட, 'சீக்கிரம் ஆகட்டும்' என்ற தொனியே அதில்  மேலோங்கியிருந்தது.

பொன்னன் லாரி மீது  ஏறி நின்று  கொள்ள, சுப்பிரமணியும், பொன்னன் அழைத்து வந்த ஆளும் மூட்டைகளைச் சுமந்து வந்தார்கள்.

ஒவ்வொரு மூட்டையாகத் தூக்கிப் போய் லாரியின் மீது நின்று கொண்டிருந்த பொன்னனிடம் கொடுக்கக் கொடுக்க, சிறிது நேரத்தில் சுப்பிரமணியின் நரம்புகள் கிளர்ச்சி செய்ய ஆரம்பித்தன. அவனுக்குப் பாதி உயிர் போய்விட்டதாகத் தோன்றியபோது, பாதி மூட்டைகள் கூட ஏற்றி முடிக்கப்படவில்லை.

லாரி மீது நின்று கொண்டிருந்த பொன்னனுடன் வேலையை மாற்றிக் கொள்ளலாமா என்று நினைத்துப் பார்த்தான். முதலில் பொன்னன் அதற்கு இணங்க மாட்டான். ஒருவேளை அவன் இணங்கினாலும், மேலே நின்றுகொண்டு மூட்டைகளை வாங்கி அடுக்குவது  தன்னால் இயலாது என்று அவனுக்குத் தோன்றியது.

எப்படியோ ஒரு வழியாக எல்லா மூட்டைகளையும் ஏற்றியாகி விட்டது. சுப்பிரமணிக்குக் கையும் காலும் அசைவற்று நின்றன. முகத்தில் வழிந்த வியர்வையைத் துடைத்துக் கொள்ளக்கூடக் கை மேலே எழும்பவில்லை.

தளர்வுடன்  நடந்து லாரியில் ஏறி உட்கார்ந்து கொண்டான். இந்த மூட்டைகளை இன்னொரு இடத்தில் கீழே இறக்கி,  தூக்கிச் சென்று அடுக்கி வைக்க வேண்டும். நினைத்துப்  பார்க்கவே அவனுக்கு மலைப்பாக இருந்தது.

தயக்கத்துடன் மேஸ்திரியிடம், "என்னண்ணே? இறக்கற இடத்திலாவது ஆளுங்க இருப்பாங்களா?" என்றான். இவன் அண்ணன் முறை கொண்டாடியது மேஸ்திரியின் 'சுவாதீனத்தை' இன்னும் அதிகமாகி விட்டது. ஆனால் இப்போது  அவனிடம் கடுகடுப்பு குறைந்திருந்தது. பாதி வேலை ஆகி விட்டதல்லவா! பாதி வேலையைச் செய்தவர்கள் மீதி வேலையையும் செய்துதானே ஆக வேண்டும்? எனவே மேஸ்திரியைப் பொருத்தவரை வேலை முடிந்த மாதிரிதான்!

"சட்டியிலே இருந்தாத்தானேடா அகப்பையில  வரும்? அங்க மட்டும் எங்கேயிருந்து ஆளுங்க வருவாங்க? நீங்க மூணு பேருதான்!"  என்று மேஸ்திரி இரக்கமில்லாமல் பதில் சொன்னபோது, சுப்பிரமணிக்கு உடலில் மீதம் இருந்த கொஞ்ச நஞ்சத் தென்பும் அகன்று விட்டது. தான் கடைசியாக எப்போது சாப்பிட்டோம் என்று நினைத்துப் பார்த்தான்.

ஒரு வழியாக லாரி கிளம்பியது. வழியில் இரண்டு இடங்களில் போலீஸ்காரர்களும், இன்னொரு  இடத்தில் செக் போஸ்ட் அதிகாரிகளும் லாரியைச் சற்று நேரம் மடக்கி வைத்திருந்தார்கள். மேஸ்திரியின் கையிலிருந்து அவர்கள் கைக்கு ஏதோ மாறியதாக சுப்பிரமணியின் பஞ்சடைந்த  கண்களுக்குத் தெரிந்தது.

ஒரு வழியாக மூட்டைகளை இறக்க வேண்டிய இடத்துக்கு வந்து சேர்ந்தார்கள். ஒரு பழைய வீட்டின் முகப்பு கிடங்காக மாற்றப்பட்டிருந்தது.

நல்லவேளையாக மூட்டைகளை இறக்குவதில் அதிக சிரமம் இருக்கவில்லை. சற்று உயரமான வராந்தாவை ஒட்டி லாரியை நிறுத்தி, ஒவ்வொரு மூட்டையாக இறக்கி இழுத்து உள்ளே கொண்டு போனார்கள்.

உள்ளே இருட்டாக இருந்த அறையில் ஏற்கெனவே அரிசி மூட்டைகள் இருந்தன. வழியெல்லாம் அரிசி இறைந்து கோலப்புள்ளிகளைப்போல் சிதறிக் கிடந்தது.

சுப்பிரமணி உள்ளே நுழைந்ததும் பல சிறு சப்தங்கள் எழும்பின. சப்தத்தைத் தொடர்ந்து ஒரு பெரிய எலி மூட்டைகளுக்கிடையிலிருந்து வெளியே வந்தது. பெருச்சாளியோ என்று நினைக்கும் அளவுக்குப் பருத்திருந்த அந்த எலி தலையை உயர்த்திக் கண்களை உருட்டி அவனை விறைத்துப் பார்த்தது. உடல் அசதியான அந்த நிலையிலும் அவனுக்கு அது வேடிக்கையாக இருந்தது.

அந்த எலியின் பார்வையில் ஒரு மனிதனின்  பார்வையில் இருக்கும் கம்பீரம் இருந்தது. நிமிர்ந்த, நேர் கொண்ட பார்வை! தனது சாம்ராஜ்யத்துக்குள் புகுந்து தன்னைத் தொந்தரவு செய்துவிட்ட அவனைக் கண்டனத்துடன் நோக்கும் பார்வை!

ஒரு சில வினாடிகள் அவனை உற்றுப் பார்த்து விட்டு, ஒரு வித அலட்சியத்துடன் அந்த எலி மூட்டைகளின் இடுக்கில் புகுந்து மறைந்தது.

இருட்டு சற்றே பழகியபின் பார்வை சற்றுக் கூர்மையானதும், அரை முழுவதும் இறைந்து கிடந்த நெல்மணிகளை அவனால் தெளிவாகப் பார்க்க முடிந்தது. எத்தனை அரிசி! அவற்றை மொத்தமாகத் திரட்டினால், அவனுடைய குடும்பம் முழுவதும் ஒரு வாரத்துக்குப் பட்டினி இல்லாமல் வயிறாரச் சாப்பிடலாம் என்று அவன் கணக்குப் போட்டான்.  இங்கே அது இந்த எலிக்கு உணவாக இருக்கிறது! அந்த எலி நெடுநாட்களாக இங்கேயே இருந்து கொண்டு, இந்த அரிசியை ஒரு சேமிப்பாகக் கருதி வாழ்ந்து வருகிறது என்று அவன் நினைத்துக் கொண்டான்.

மூட்டைகளை இறக்கி முடிப்பதற்குள் அவனுடைய பொறுமை பலமுறை நழுவி விட்டது. சீக்கிரமாக வேலையை முடித்து விட்டுக் கூலியை வாங்கிக்கொண்டு போய், இரண்டு நாட்களாகச் சரியான் உணவில்லாமல் வாடிக்கொண்டிருக்கும் மனைவிக்கும், குழந்தைகளுக்கும், தனக்கும் அரை வயிற்றுக் கஞ்சிக்காவது வழி செய்ய வேண்டும் என்று அவசரப் பட்டுக்கொண்டிருந்தான். 

மேஸ்திரி உள்ளே போய் ஏதோ பேசிவிட்டு வந்தான். "சரி வாங்க. லாரியிலேயே திரும்பிப் போய்விடலாம்" என்றான். கூலியைப் பற்றி  எதுவும் பேசவில்லை. லாரியிலிருந்து இறங்கிப் போகும்போது தருவானாக்கும் என்று சுப்பிரமணி நினைத்துக் கொண்டான்.

லாரியில் பயணம் செய்து, மூட்டைகளை  ஏற்றிய இடத்தில், மேஸ்திரியைத் தவிர மற்ற மூன்று பேரும்  இறங்கினார்கள். மேஸ்திரி லாரியிலிருந்து இறங்காமலேயே, ஒரு தடவை உதட்டை ஈரப்படுத்திகொண்டு, "அப்போ  கூலியை  நாளைக்கு வாங்கிக்கிறியா?" என்றான் பொன்னனிடம், "மொதலாளி கடையைப்  பூட்டிக்கிட்டுப் போயிட்டாரில்ல?"

சுப்பிரமணியின் காலியான அடிவயிற்றிலிருந்து ஏதோ கிளம்பித் தொண்டையில் வந்து அடைத்துக் கொண்டது. அவன் ஏற்றி இறக்கிய அத்தனை மூட்டைகளும் ஒருசேர அவன் முதுகில் அமர்ந்து அழுத்தின.  இரண்டு நாள் பட்டினியால் வாடிப் போயிருந்த தன் மனைவி குழந்தைகளின் முகத்தை மனதில் நினைத்துப் பார்த்தான். அவை காலையில் பார்த்த முகங்கள். இப்போது இன்னும் எவ்வளவு வாடியிருக்குமோ?

திடீரென்று அவன் கண்முன்பு, நினைத்தபோதெல்லாம் அரிசியைக் கொறித்துத் தின்றுகொண்டு, கவலையற்றுத் திரிந்து கொண்டு அவனைத் தலையை நிமிர்த்திப் பார்த்து முறைத்த அந்த எலியின் முகம் தோன்றியது.

 '1/4 - மலர்மன்னன் வெளியீடு' (தற்காலத் தமிழ் இலக்கியம் மற்றும் பண்பாட்டிற்கான காலாண்டு இதழ்)' ஏப்ரல் - ஜூன் 1982 இதழில் வெளியானது. எழுதியவர் - விஜயசாரதி
'அலைகள் ' மே 15, 1989 (ஆசிரியர்: ஞாநி) இதழில் மீண்டும் வெளியிடப்பட்டது.'

1 comment: