Saturday, December 20, 2025

31. கேள்வி வரும்போது பதில் ஒன்று வேண்டும்

பாலில் வந்திருந்த அந்தக் கடிதம் சற்று வித்தியாசமாக இருந்தது.

ரு மாதிரி வெளிர் நீலத்தாளில், பின்னணியில் பட்டை பட்டையாக வெள்ளை கலந்து வரிகளாகத் தெரிய, அழகாக வரிசை பிசகாமல் டைப் அடிக்கப்பட்டு இருந்தது. நான் இதுவரை பார்க்கிறாத ஒரு வகை டைப்பிங்.

 "தங்கள் மகனின்/ மகளின் பள்ளிக்கூட நுழைவு விண்ணப்பம் குறித்து... 


கீழ்க்கண்ட காரணத்துக்காக, உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருக்கிறது


வரிசையாகக் காரணங்கள் குறிப்பிடப்பட்டு, 7-ஆம் எண்ணுக்கு எதிரே குறியிடப்பட்டிருந்தது


" 7. விண்ணப்பம் முழுமையாகப் பூர்த்தி செய்யப்படவில்லை."


 இறுதியில், "தாங்கள் நேரில் வந்து, குறையைச் சரி செய்து கொள்ளலாம்' என்று முடித்து, முதல்வர் கையொப்பமிட்டிருந்தார்.


எல்லாமே கொஞ்சம் இயந்திரத்தனமாக இருப்பதாகத் தோன்றியது. நேரில் சென்றால் தான் விவரம் புரியும் என்று நினைத்துக் கொண்டேன்


 முதல்வரை நேரில் சந்திக்கப் பலர் காத்திருந்தனர்.


என் முறை வந்ததும், முதல்வரின் அறைக்குள் சென்றேன்.


"வணக்கம்."


"வாருங்கள். ஓ...நீங்களா?...உங்களை இதற்கு முன் எங்கேயோ பார்த்திருக்கிறேனே!" என்றார் முதல்வர்.


"ஆமாம். இரண்டு வருடம் முன்பு, என் மகன் குமரனின் அட்மிஷனுக்காக உங்களைச் சந்தித்திருக்கிறேன். 


'ஓ! சொல்லுங்கள். என்ன விஷயம்?"


கடிதத்தை எடுத்துக் காட்டினேன்.


மணியை அடித்து சேவகனை அழைத்துக் கடிதத்தைக் கொடுத்து அதில் குறிப்பிடப்பட்டிருந்த விண்ணப்பத்தை எடுத்து வரச் சொன்னார் முதல்வர்.


விண்ணப்பத்தை சேவகன் அவரிடம் கொண்டு கொடுத்தபோது, தொலைபேசி அடிக்கவே, விண்ணப்பத்தை என்னிடம் கொடுத்து, "எல்லாம் சரியாகப் பூர்த்தி செய்யப்பட்டிருக்கிறதா என்று பாருங்கள்' என்று என்னிடம் கூறி விட்டுத் தொலைபேசியில் பேசத் தொடங்கினார்  அவர்.


 பார்த்தேன். எல்லாம் பூர்த்தி செய்யப்பட்டு தான் இருந்தது - அநேகமாக எல்லாமே!


 முதல்வர் தொலைபேசியில் பேசி முடிக்கும் வரை காத்திருந்தேன்


 பேசி முடித்ததும், "என்ன, பார்த்தீர்களா?" என்றார் அவர்.


 "எல்லாம் பூர்த்தி செய்து இருக்கிறேனே, சார்!" என்றேன் நான்.


 அவர் விண்ணப்பத்தை வாங்கிப் பார்த்து விட்டு, "என்ன சார், மூன்றாம் நம்பருக்கான பதிலைக் காலியாக விட்டிருக்கிறீர்களே!" என்றார், சற்றே எரிச்சலுடன்.


 "அது அவசியம் பூர்த்தி செய்யப்படத்தான் வேண்டுமா?"


அவர் என்னை உற்றுப் பார்த்து விட்டு, "அதில் உங்களுக்கு என்ன சிரமம்?" என்றார்.


 "சிரமம் என்பதற்காக இல்லை. என் மகளின் ஜாதி என்ன என்ற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டியது அவசியம் இல்லை என்று நான் நினைக்கிறேன்."


 "நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். உங்கள் ஜாதி, அதன் உட்பிரிவு இதையெல்லாம் நீங்கள் குறிப்பிட வேண்டாம். பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரா, அல்லது..."


 "மன்னிக்க வேண்டும். என் கேள்வி, அதை நான் எதற்காகக் குறிப்பிட வேண்டும் என்பதுதான்."


 முதல்வர் சற்று நேரம் என்னையே உற்றுப் பார்த்தார். அவர் கண்களில் சட்டென்று ஒரு ஒளி.


 "இந்த உரையாடலை நாம் ஏற்கனவே ஒருமுறை நிகழ்த்தி இருக்கிறோம் அல்லவா?" என்றார் அவர், சிரித்துக் கொண்டே.


"ஆமாம், சார். நான்தான் முதலிலேயே சொன்னேனே, என் பையனுடைய அட்மிஷனுக்காக, இரண்டு வருடம் முன்பு உங்களைச் சந்தித்திருக்கிறேன் என்று."


"இப்போது எனக்கு எல்லாமே நன்றாக நினைவுக்கு வருகிறது. அப்போதும், இந்த ஜாதி பற்றிய கேள்வியைப் பூர்த்தி செய்யாமல் விட்டிருந்தீர்கள்!"


அவர் கண்களை இலேசாக மூடிக்கொண்டு, பழைய நிகழ்வை நினைவுகூர்வது போல் யோசித்தார்.


 என் மனமும் அந்த நிகழ்வை அசைபோட துவங்கியது.


"என் ஜாதி என்னவென்று நான் எதற்காகக் குறிப்பிட வேண்டும்?" என்றேன் நான், சற்றே கோபத்துடன்.


"நீங்கள் சலுகை பெறத் தகுதி உள்ள வகுப்பைச் சேர்ந்தவராக இருந்தால், இந்த விவரம் எங்கள் பள்ளிப் பதிவேட்டில் பதிவு செய்யப்படுவது பின்னால் உங்களுக்கு உதவக் கூடும்" என்றார் பள்ளி முதல்வர்.


"நான் சலுகை எதையும் கோரவில்லை, எதிர்காலத்தில் கோரப் போவதும் இல்லை. அப்படியானால், நான் என் ஜாதியைக் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை, அல்லவா?"


 "இல்லாவிட்டாலும் கூட, அரசின் புள்ளிவிவரங்களுக்காக இந்த விவரம் தேவைப்படலாம்!"


 "சலுகைகள் எவ்வளவு பேருக்கு வழங்கப்பட்டிருக்கின்றன என்ற புள்ளி விவரம் அரசாங்கத்துக்குப் போதுமே! சலுகை பெறாதவர்கள் பற்றிய புள்ளிவிவரங்கள் எதற்கு?"


"உங்கள் கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியாது, சார், ஒரு விஷயம், இந்த விண்ணப்பத்தை வடிவமைத்தது நான் இல்லை!" என்று சொல்லிச் சிரித்தார் முதல்வர்


 "நான் உங்களைக் குறை சொல்லவில்லை, சார். ஒருபுறம், ஜாதிகளை ஒழிப்போம் என்று கூறுகிற அரசு, மறுபுறம், ஜாதிகளைப் பற்றி நினைவூட்டி, அவற்றைப் பதிவு செய்து, ஜாதிப் பாகுபாடுகளை நிரந்தரமாக்குவதும், சற்றும் கூச்சமோ, நாகரிகமோ இல்லாமல், ஒருவனைப் பார்த்து, 'உன் ஜாதி என்ன?' என்று எழுத்து மூலம் கேட்பதும் முரண்பாடாக இல்லை? நீங்கள் சங்கடத்தோடு கேட்டது போல், 'பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரா, அல்லது வேறு வகுப்பைச் சேர்ந்தவரா?' என்று கேட்கிற நாசூக்குக் கூட இல்லாமல், 'உன் ஜாதி என்ன?' என்று பட்டவர்த்தனமாக கேட்கிற இந்த போக்குக்கு என்னால் தலை வணங்க முடியாது, சார்! என்னை மன்னியுங்கள்!" என்றேன் நான்.


அவர் கொஞ்சம் யோசித்து விட்டு, "சரி, உங்கள் விருப்பம். என்னைப் பொருத்தவரை, உங்கள் நிலையை நான் ஏற்கிறேன். இது என் நிலையில் முடிவு செய்யப்படும் விஷயம் என்பதால், இந்த விவரத்தை நீங்கள் தராததைப் பொருட்படுத்தாமலேயே, மற்ற விவரங்களின் அடிப்படையில், உங்கள் மகனுக்கு அட்மிஷன் தருகிறேன்" என்றார் முதல்வர்.


அவருடைய பெருந்தன்மையையும், பரந்த சிந்தனையையும், முடிவெடுக்கும் துணிவையும் அன்று நான் மனதார வியந்தேன்.


ரண்டு வருடங்களுக்குப் பிறகு, மீண்டும் இதே பிரச்னையை இருவரும் விவாதிக்க நேர்ந்திருப்பது, எங்கள் இருவருக்குமே சற்று வியப்பாகத்தான் இருந்தது.


 "ம்மைப் பொருத்தவரை, இந்தப் பிரச்னைக்கான முடிவு இரண்டு வருடங்களுக்கு முன்பே எடுக்கப்பட்டு விட்டதல்லவா?" என்றேன் நான்.


அவர் என்னைச் சற்றே முகவாட்டத்துடன் பார்த்து, "அந்த முடிவை என்னால் இப்போது எடுக்க முடியாது, சார்!" என்றார், உறுதியான குரலில்.


அதிர்ச்சி, கோபம், ஏமாற்றம் இவற்றில் என்னை அதிகம் பாதித்தது எது என்று கூற முடியாது


அவர் முடிவுக்கு நான் எதிர்ப்புத் தெரிவிக்குமுன், அவர் "உங்களுக்கு வந்திருக்கும் கடிதத்தை மறுபடியும் பாருங்கள். அதில் ஏதாவது வித்தியாசமாகத் தெரிகிறதா?" என்றார்.


பார்த்தேன். நான் முன்பே கவனித்தபடி, சற்றே வித்தியாசமான கடிதம்தான். ஆனால், அதற்கும் இந்தப் பிரச்சனைக்கும் என்ன தொடர்பு?


"இப்போது, விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் வேலை கம்ப்யூட்டரால் செய்யப்படுகிறது. உங்களுக்கு வந்த கடிதம் கூட கம்ப்யூட்டரால் அனுப்பப்பட்டதுதான். கம்ப்யூட்டருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் 'செக்லிஸ்டி'ன்படி, விண்ணப்பங்கள் சரிபார்க்கப்படுகின்றன விண்ணப்பம் முழுமையாக நிரப்பப்பட்டிருக்கிறதா, மாணவன் அல்லது மாணவியின் வயது குறைந்தபட்ச வரம்பைத் தாண்டி இருக்கிறதா போன்ற 15 விவரங்களை கம்ப்யூட்டர் சரி பார்த்து ஒப்புதல் செய்த பிறகுதான், விண்ணப்பங்கள் மீது நாங்கள் முடிவெடுக்க முடியும். இந்த விவரங்களில் ஒரு சிறிய குறை இருந்தாலும், கம்ப்யூட்டர் விண்ணப்பத்தை நிராகரித்து விடும். நீங்கள் சொல்லும் விளக்கத்தை மனிதனாகிய என்னால் ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால் கம்ப்யூட்டரைப் பொருத்தவரை, உங்கள் விண்ணப்பம் முழுமையாகப் பூர்த்தி செய்யப்படாத ஒன்றுதான். உங்கள் விளக்கத்தைப் புரிந்து கொள்கிற விதத்தில் கம்ப்யூட்டர் புரொக்ராம் செய்யப்படவில்லை. இப்போது உள்ள தொழில்நுட்பத்தின்படி அப்படிச் செய்யவும் முடியாது. எனவே, விண்ணப்பத்தை நீங்கள் முழுமையாக நிரப்பினால்தான், அதை என்னால் பரிசீலிக்க முடியும்."


முதல்வர் தன் நிலையை விளக்கி முடித்தார். என்னிடம் அவருக்கு பதில் இல்லை.


21-ஆம் நூற்றாண்டை நோக்கி நாம் வேகமாக முன்னேறிக் கொண்டிருப்பதாக அடிக்கடி சொல்லப்படுவதைப் பற்றி, முதல் முறையாக என் மனதில் இலேசான கவலை எழுந்தது.


(1995-ஆம் ஆண்டு எழுதப்பட்டது.)



Saturday, October 11, 2025

30. அவன் செய்த சிபாரிசு

கனமான இரும்புக் கதவைத் திறந்து, அவன் உள்ளே அடி எடுத்து வைத்தான் - அவன் அம்மா சொன்னபடி ஞாபகமாக வலது காலை முதலில் எடுத்து வைத்தான், 

கேட்டைத் திறப்பதற்கு முன்பு, வெளியே மங்கலான எழுத்துக்கள் அறிவித்துக் கொண்டிருந்த பெயரை, மிகுந்த பிரயாசையுடன், ஒருமுறைக்கு இருமுறையாகத் திரும்பத் திரும்ப படித்துத் திருப்தி செய்து கொண்டான்

இது போன்ற காம்பவுண்ட் கேட் போட்ட வீடுகளுக்குள் நுழைவது என்றாலே அவனுக்குத் தயக்கம்தான் .

சில சமயங்களில், கேட்டை.த் திறப்பதற்கு முன்பே, வராந்தாவில் இருந்து யாராவது “யார் வேணும்?” என்று அதிகாரமாக விசாரிப்பார்கள். அந்தக்  கேள்விக்கு பதில் சொல்வது அவனுக்கு மிகவும் சங்கடமாக இருக்கும்

“ஒரு சிபாரிசுக்காகத் திரு ......ஐப் பார்க்க வந்திருக்கிறேன்” என்று வெளியில் இருந்தபடியே, உள்ளே இருப்பவர்களுக்குத் தெளிவாகக் கேட்கும்படி எப்படி பதில் சொல்ல முடியும்?

அதிலும், பெரும்பாலானவர்கள் கேள்வி கேட்டு விட்டு, பதிலைக் கேட்டு அறிந்து கொள்வதில் கவனமாக இருக்க மாட்டார்கள். எனவே, அவர்கள் செவியில் விழுவது மட்டுமின்றி, ஏறும்படியும் பதிலளிப்பது மிகவும் கடினமான காரியம்தான்.

கேள்வி கேட்பவர்கள், பெரும்பாலும், உள்ளே வருபவரைக் கூடியவரை தடுத்து நிறுத்துவதுதான் தங்கள் நோக்கம் என்பது போல்தான் நடந்து கொள்வார்கள்.

அப்படியே அவர்கள் உணரும்படி பதிலளித்தாலும், அதற்குக் கிடைக்கக் கூடிய வரவேற்பைப் பற்றி ஒருவித சந்தேகமும் இல்லை.

பத்துக்கு ஒன்பது சந்தர்ப்பங்களில், அவர்கள் வெளியே நிற்பவரை உள்ளே வர முடியாதவாறு, அங்கிருந்தபடியே ஏதாவது சொல்லித் திருப்பி அனுப்பி விடுவார்கள். எதுவுமே சொல்லாமல், மௌனமாகத் தங்கள் அதிப்தியை வெளிப்படுத்துவதோடு திருப்தி அடைபவர்கள் வெகு சிலர்தான்

பல சந்தர்ப்பங்களில், ‘நாய் ஜாக்கிரதை’ என்ற அறிவிப்பையும், அந்த அறிவிப்பை மெய்ப்பிக்கும் வண்ணம், கதவைத் திறந்ததுமே, பாய்ந்து வெளிப்பட்டுத் தனது எஜமான விசுவாசத்தை வெளிப்படுத்தும் நாய்களையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

வேறு சில சமயங்களில், இலேசாகத் திறந்தால் கூடக் கிரீச்சிட்டு, உள்ளே நுழைபவரைக் காட்டிக் கொடுக்கும் கதவுகள், உள்ளிருந்து யாரையாவது வெளிப்படச் செய்து, கதவை ஓசைப்படுத்தி, அந்த வீட்டின் அமைதியை பங்கப்படுத்தியதற்கு ஆட்சேபம் தெரிவிக்கும் தோரணைகளைச் சந்திக்க வைக்கும்.

இவ்வாறு, காம்பவுண்ட் கேட்கள், பெரும்பாலும், அவனைப் போன்ற மனிதர்களுக்குப் பிரதிகூலமாகவே செயல்படுவதால், அவற்றை அவன் வெறுத்தான்.

ஆயினும், அவன் ஓரளவு தயக்கத்துடனும், தாழ்வு மனப்பான்மையுடனுமே நுழைய வேண்டி வீடுகள் எல்லாவற்றிலும் அவனுடைய ‘எதிரி’ தவறாமல் இடம் பெற்று அவனைச் சங்கடத்துக்கு உள்ளாக்காமல் இருப்பதே இல்லை

இப்போதும், ஒரு சிபாரிசுக்காக, ஒரு பெரிய பெரிய மனிதரைப் பார்ப்பதற்காகத்தான் அவன் அந்த வீட்டில் நுழைந்தான். அதிர்ஷ்டவசமாக, அந்த வீட்டில் நாய் இல்லை வராந்தாவில் நின்று கொண்டு, அவனை யாரும் கேள்வி கேட்கவில்லை. கதவுகள் கிரீச்சிட்டு அவனைச் சங்கடத்துக்கு உள்ளாக்கவில்லை.

வராந்தாவில் நின்றபடியே, அவன் அழைப்பு மணியை மெல்ல அழுத்தினான். அது ஓசையை எழுப்பியதாகத் தோன்றவில்லை. அதனால், இன்னொரு முறை சற்று அழுத்தமாகவே .பட்டனை அழுத்தினான். இப்போது, பஸ்ஸர் திடீரென்று காட்டுத்தனமாக அலறியது.

அவன் சட்டென்று கையை இழுத்துக் கொண்டான். ஆயினும், அந்த பட்டன் எங்கோ சிக்கிக் கொண்டு அழுந்தியபடி இருந்ததால், வெளியே மீண்டு வர மறுத்தது.  

அதன் ஓசை அவனுக்கே நாராசமாக இருந்தது. உள்ளே இருப்பவர்களுக்கு எப்படி இருக்கும் என்பதையும், தான் வந்த காரியத்தின் மீது அந்த நாராசம் எப்படிப் பிரதிபலிக்கக் கூடும் என்பதையும் நினைத்துப் பார்த்தபோது, அவன் உடல் திடீரென்று வியர்த்தது.

வியர்வையில் நனைந்து அழுக்காகி விடப் போகிறதே என்று அஞ்சியபடி, அன்று காலைதான், கரி போட்ட இஸ்திரிப் பெட்டியில், அவன் அக்கா தன் கை நோக அழுத்திக் கொடுத்த அவன் சட்டையின் கைகளை, தன் உடல் மீது படாதவாறு, இலேசாக இழுத்து, அந்தரத்தில் நிலைக்க வைக்க முயன்றான்.

இஸ்திரிப் பெட்டி பற்றிய நினைவு வந்ததும், இஸ்திரி போட்டுக் கொடுத்த பிறகு, அவன் அக்கா சொன்னது நினைவுக்கு வந்தது.

 ‘இன்டர்வியூக்கு எங்காவது போக வேண்டுமென்றால், டெ.ரிகாட்டன் சட்டை இருந்தால்தான் நல்லது, உனக்கு வேலை கிடைத்ததும், முதலில் ஒரு செட் டெரிகாட்டன் டரஸ் வாங்கிக் கொள்’ என்று அவள் சொன்னதும், அதற்கு, ‘வேலை கிடைத்த பின், ஏது இன்டர்வியூ? அப்புறம் டெரிகாட்டனுக்கு என்ன அவசியம்?’ என்று அவன் சிரித்துக் கொண்டே கேட்டதும், அடுத்த மாதம் ‘அரியர்ஸ்’ தொகை வந்தால், அதில் கண்டிப்பாக அவனுக்கு டெரிகாட்டன் டிரஸ் வாங்கி கொடுத்து விடுவதாக அவன் தந்தை உறுதி கூறியதும், கண நேரத்தில் அவன் நினைவில் வந்து போயின.

அந்தக் கண நேரத்தில், அவன் மனதை விட்டு அகன்றிருந்த பஸ்ஸரின் நாராச ஒலி, புயல் காற்றில் அடித்துத் திறக்கும் ஜன்னலைப் போல், மீண்டும் அவன் மனதைக் கிழித்துக் கொண்டு பிரவேசித்தது. அதைப் பொறுக்க முடியாமல், அவன் தன் முஷ்டியால் அந்த பட்டன் மீது ஒருமுறை வேகமாகக் குத்தினான்.  

அவனே எதிர்பாராத வண்ணம்,  பஸ்ஸர் ஒலி நின்றது, அதே சமயம், கதவு திறக்கப்பட்டு, பூதாகரமான சரீரத்துடன் ஒரு பெண்மணி வெளிப்பட்டாள்.

அவளுடைய உடையிலிருந்தும், பாவனைகளிலிருந்தும் அதிகார தோரணையை வெளிப்படுத்தும் மூக்குக் கண்ணாடியிலிருந்தும், அவள்தான் அந்த இல்லத்தின் தலைவி என்பது ஊகத்துக்கு அவசியம் இன்றித் தெரிந்தது

எலுமிச்சம் பழம் போன்ற உருண்டையான விழிகள் அந்தக் கருத்த கண்ணாடிக்குள் இருந்து சுழன்று அவனை நோக்கி விழித்தன

“யாருப்பா நீ? அறிவு இருக்கா?”

இரண்டு கேள்விகளுக்கும் சேர்த்து எப்படி பதில் சொல்வது என்று உடனடியாக அவனுக்கு விளங்காததால், ஒரு கணம் மௌனமாக நின்றான்.

அந்தப் பெண்மணிக்கு திடீரென்று கோபம் வந்தது. அவன் ஏதோ நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்தைச் செய்து விட்டது போல், அவனை அவள் ஒருவிதக் கடுமையான இகழ்ச்சியுடன் பார்த்தாள் அவள்.  

“நான் கேட்கிறது உனக்குக் காதில விழல? இந்த பஸ்ஸர் அலறியதைக் கேட்டு உனக்கு காது செவிடாயிடுச்சா?”

திடீரென்று அவன் குரல் உயர்ந்தது.

“பஸ்ஸரை அழுத்தத் தெரியாதவர்கள் எல்லாம் ஏன் அழுத்துகிறீர்கள்?...”

அதற்கு மேல் அவள் பேசியதை, அவன் காதில் வாங்கிக் கொள்ளவில்லை

‘யாராவது ஒரு எலக்ட்ரீஷியனை அமர்த்தி, இந்த பஸ்ஸரின் சிகிச்சை சரி செய்யுங்கள்!’ என்று சொல்ல வேண்டும் போல் இருந்தது

“எங்கே வந்தே?” என்று அவள் கடைசியாக விஷயத்துக்கு வந்தாள்.

”திரு சிவ பாலசுப்பிரமணியனைப் பார்க்க வேண்டும்.”

அவள் புருவத்தை நெரித்தாள் – அந்தப் பெயரைக் கேள்விப்படாதது போல். பிறகு, “யாரு?...ஓ...எஸ் பி எஸ் மணியா? அப்படிச் சொன்னால்தானே புரியும்?" என்றாள்.

அவனுக்குச் சிரிப்பு வந்தது. அடக்கிக் கொண்டான். கணவன் பெயரைச் சொல்லாத பெண்கள் முன்பு இருந்தார்கள். இப்போது நாகரீகம் மாறி விட்டது. பெண்கள் புருஷன் பெயரே தெரியாதவர்களாக இருக்கிறார்கள்!

உள்ளே போகத் திரும்பியவள், ஏதோ நினைவு வந்தது போல் திரும்பி, “என்ன விஷயம்?” என்றாள்.  

அவனுக்கு திடீரென்று சலிப்பு வந்தது. வேலை தேடி .சிபாரிசுக்கு வந்திருப்பதாக ஒவ்வொருவரிடமும் பறையடித்து அறிவிக்க அவன் விரும்பவில்லை.  என்ன ஆனாலும் ஆகட்டும் என்ற துணிவுடன், “அதை அவரிடம்தான் சொல்ல வேண்டும்!” என்று அடக்கமாக, ஆனால் உறுதியுடன் அறிவித்தான்.

அவனிடமிருந்து  அப்படி ஒரு பதிலை அவள் எதிர்பார்க்கவில்லை அதிர்வால், அவள் மூக்கு மட்டும் திடீரென்று தனியாகச் சிவந்தது அவனுக்கு வேடிக்கையாக இருந்தது

ஏதோ சொல்வதற்கு அவள் உதடுகள் துடித்தன. ஆனால், என்ன சொல்வதென்று தெரியாததாலோ என்னவோ, ஒரு நிமிடம் கழித்துப் பற்களை அழுத்திக் கொண்டு “உன் பெயர் என்ன?” என்றாள்.  

“பாலசுப்பிரமணியம்” என்றான் அவன். சட்டென்று ஏதோ நினைவு வந்தவன் போல், “சுருக்கமாக, பி எஸ் மணி” என்றான்.

தான் வந்த விஷயத்தை அவளிடம் சொல்லாமல் வெற்றிகரமாக மறுத்ததும், சிவபாலசுப்பிரமணியம் என்ற பெயரை அவள் அறியாத பெயர் போல் காட்டிக் கொண்டதற்குப் பணிவாக பதிலடி கொடுத்து விட்ட திருப்தியும், அவன் மனதில் உற்சாகத்தையும், பெருமித்ததையும் கிளர்ந்தெழச் செய்தன.  

அவனுடைய கேலியை அவள் கவனிக்கவில்லை. “அப்பாயின்ட்மென்ட் வைத்துக் கொள்ளாமல், அவர் யாரையும் பார்ப்பதில்லையே!” என்றாள்.  

"இல்லை. நான் வருவது அவருக்கு ஃபோன் மூலமாக அறிவிக்கப்பட்டிருக்கும்.”

அவனுக்கு அப்பாயின்ட்மெண்ட் கொடுப்பதா வேண்டாமா என்று தீர்மானம் செய்ய முடியாமல், அவள் சில விநாடிகள் தயங்கினாள்.

அதற்குள், உள்ளிருந்து, “யார் அங்கே?” என்று கேட்டபடியே, அவர் - எஸ் பி எஸ் மணி வந்து விட்டார். அவருடைய மனைவி என்று அவன் ஊகித்த அந்தப் பெண்மணி, ஏதோ விடுதலை பெற்றது போல் சட்டென்று அகன்றாள்.  

“நமஸ்காரம்” என்றான் அவன், “வணக்கம் என்று சொல்வதா, நமஸ்காரம் என்று சொல்வதா என்று சற்று நேரம் தயங்கி விட்டு.  

“உட்கார்” என்றார் அவர்.

அவருடைய உபசரிப்பில் அதிகார தோரணை பரவி இருந்தாலும், அவர் அவனை உட்காரச் சொன்னது அவனுக்குப் பெரும் ஆறுதலாக இருந்தது

அவர் ஏதாவது கேட்பார் என்று அவன் காத்திருந்தான். ஆனால், அவர் தன் முன் ஏதோ ஈயோ, வண்டோ உட்கார்ந்திருப்பது போன்ற உதாசீனத்துடன், அன்றைய தினசரியின் பக்கங்களை அலட்சியத்துடன் புரட்டி மேய்ந்தார்

சில நிமிடங்களுக்குப் பிறகு, பத்திரிகையை டீபாய் மீது எறிந்து விட்டு, “நியூஸ் பார்த்தாயா? வேலை கிடைக்காதவர்கள் ஒரு மகாநாடு நடத்துகிறார்கள். அதற்குத் தலைமை தாங்கப் போவது ஒரு மந்திரி. அவரும் வேறு வேலை எதுவும் இல்லாதவர்தானே? எனவே, இது முழுக்க முழுக்க வேலை இல்லாதவர்களின் மாநாடாக அமைந்து விட்டது. எப்படி?” என்று அவனிடம் மிகவும் சுவாதீனமாகச் சொல்லிச் சிரித்தார்

முதலில் அவர் காட்டிய உதாசீனமும், இப்போது காட்டும் சுவாதீனமும்  ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல், அவனுடைய மன உணர்வுகளை முற்றிலும் மாறுபட்ட லயத்துடன் தீண்டி, அவனைத் திகைப்பில் ஆழ்த்தின

அவன் இலேசாகப் புன்னகைத்தான்

“மிஸ்டர் கணபதி உங்களுக்கு ஃபோன் செய்திருப்பார் என்று நினைக்கிறேன்” என்று தயக்கத்துடன் ஆரம்பித்தான்

“ஃபோனா? எதுவும் வரவில்லையே! நீ எந்த கணபதியைச் சொல்கிறாய்?” என்று அவர் புருவத்தைச் சுருக்கினார்.

அவன் விவரம் சொன்னான்.  

“ஓ, அவனா? வடிகட்டின முட்டாளாயிற்றே அவன்!” என்று தனது அபிப்பிராயத்தை பகிரங்கமாக அறிவித்தார்

அவருடைய விமரிசனம் செல்லமானதா, அல்லது இகழ்ச்சியானதா என்பது அவனுக்குப் புரியவில்லை. அதைப் பொருத்துதான் அவரது சிபாரிசின்  வலுவும் அமைந்திருக்கும் என்று உணர்ந்ததால், அவன் இலேசாகக்  கவலை கொள்ளத் தொடங்கினான்.

அவரது சுவாதீனத்தைப் பயன்படுத்திக் கொண்டு, அவன் சற்று தைரியத்துடன், “ஏன் சார் அப்படிச் சொல்கிறீர்கள்? அவர் ரொம்ப நல்லவராயிற்றே!” என்றான்.  

அவர் ஹோஹோவென்று சிரித்தார்.

“உனக்கு சிபாரிசு பண்ணி இருப்பதால், அவன் நல்லவனாகி விடுவானா? மை டியர் யங் மேன்! நல்லவனாக இருப்பது வேறு, முட்டாளாக இல்லாமல் இருப்பது வேறு. அண்ட், ஃபார் தட் மேட்டர், கணபதி முட்டாள் என்பதில் வேண்டுமானால் இரண்டு வித அபிப்பிராயங்கள் இருக்கலாமே தவிர, அவன் ஒரு வடிகட்டின ராஸ்கல் என்பதில் இரண்டு வித அபிப்பிராயங்கள் எப்போதுமே இருந்ததில்லை."

அவன் முகம் சுரத்திழந்து வருவதை ஒருவித ரசனையுடன் அவர் கவனித்தார்

“சரி, விஷயத்துக்கு வருவோம். நீ வந்த விஷயத்தை கடகடவென்று சொல், பார்க்கலாம்” என்றார் அவர்.

அவன் பெரிதும் ஆறுதல் அடைந்தவனாகத் தான் வந்த விஷயத்தை விளக்கினான். “சார்! மாருதி அண்ட் கோவில் ஒரு கிளார்க் வேலை காலியாக இருக்கிறது. நீங்கள் சொன்னால் அது கிடைக்கும் என்று மிஸ்டர் கணபதி சொன்னார்.”

“மாருதியா? அதில் எனக்கு யாரையும் தெரியாதே! சஞ்சய் காந்தியைப் பிடிக்க வேண்டும். யாராவது எம்.பியைப் பிடித்தால்...”

“எக்ஸ்கியூஸ் மீ, சார்! நான் சொல்வது அந்த மாருதி இல்லை இங்கே மெட்ராஸில் இருக்கிற சிறிய கம்பெனி தான் சார் அது. மிஸ்டர் நாதன்தான் அதோட புரொப்ரைட்டர்.”

“ஓ, யூமீன் தட் ரெட்ச்சட் ஒன்! நீ ஒருவன்தான் அதை கம்பெனி என்று சொல்கிறாய்.  அது ஒரு ராட்டன் ஃபர்ம். என்னைக் கேட்டால், அங்கே வேலை செய்வதை விடப் பிச்சைக்காரர் நல விடுதி எதிலாவது இருக்கலாம் என்பேன்!”

அவருடைய மனோபாவம் அவனுக்குச்  சரியாக விளங்கவில்லை அவர் தமாஷ் பேர்வழியா அல்லது நாசுக்காகத் தட்டிக் கழிக்கிறாரா?

“சார்! நான் எஸ்.எஸ்.எல்.சி. பாஸ் செய்திருக்கிறேன். எனக்கு ஏதாவது .ஒரு வேலை இப்போது அவசியம் வேண்டும். வீட்டில் ரொம்ப கஷ்டம், சார். அக்காவுக்குக் கல்யாணம் செய்ய வேண்டும். அப்பா பி.டபிள்யூ.டியில் கிளார்க். அடுத்த மாசம் ரிடயர் ஆகிறார், அப்புறம் நான்தான் குடும்பத்தைக் காப்பாத்தணும்.”

“த்ஸு, த்ஸு. வெரி பேட். இந்த ரிடயர்மென்ட் ஏஜை எல்லாம் உயர்த்த வேண்டும். .ஃபிஃப்டி ஃபைவ் இஸ் ரிடிகுலஸ்லி லோ! விலைவாசி உயர்ந்தால், பஞ்சப்படியை உயர்த்துகிறார்கள். ஆனால், சராசரி இந்தியனின் ஆயுள் உயர்ந்திருக்கும்போது, ரிடயர்மென்ட் ஏஜை உயர்த்த வேண்டாமா? நான் கூட இன்னும் இரண்டு வருடத்தில் ரிடயர் ஆகிறேன். ஆனால், இப்போதும் நான் எவ்வளவு சுறுசுறுப்பாகவும், யங்காகவும், ஹெல்த்தியாகவும் இருக்கேன், பார்த்தாயா? நான் எதற்கு ரிடயர் ஆக வேண்டும். பை தி வே, நீங்கள் – மாணவர்களைச் சொல்கிறேன் – எதற்கெல்லாமோ போராட்டம் நடத்துகிறீர்களே, இந்த ரிடயர்மென்ட் ஏஜை வைத்ததும் போராட்டம் நடத்த கூடாதா?”

அவருக்கு நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாகப் போய்க் கொண்டிருந்தது. “சார், நான் மாணவன் இல்லையே! வேலை தேடி அலையும் இளைஞன்!”

“ஓ, ஐ ஃபர்காட்!” என்றார் அவர், வருந்தும் குரலில். “ஆல்ரைட்! நீ என்ன ஃபர்ம்னு சொன்ன? மாருதி அண் கோ! கே ஆர் நாதன்தானே? ரைட்டோ!" என்றார்.

இன்னமும் அவரிடம் நிறையப் பேசித் தனது நிலையை விரிவாக விளக்கி, அவரிடம் பரிதாபத்தை வரவழைத்து, காரியத்தைச் சாதித்து கொள்ள வேண்டும் என்று அவனுக்குத் தோன்றியது. ஆனால், என்ன பேசுவது என்று புரியவில்லை, அவர் வேறு “ரைட்’ கொடுத்து விட்டார்

“நான் வரட்டுமா, சார்?”

அவன் எழுந்தான். அவர் கவனிக்கவில்லை. ஏதோ யோசித்துக் கொண்டிருந்தார்.

“சார்!”

“ஓ, நீயா? நீ இன்னும் போகவில்லை? நான் ரைட்டோ சொல்லி அரை மணி நேரம் ஆகி விட்டது!”

திடீரென்று அவர் சீறியது ஏன் என்பது அவனுக்குப் புரியவில்லை

”அவரிடம் சொல்கிறீர்களா, சார்?” என்று அவன் மீண்டும் ஞாபகப்படுத்தினான்

”நான் முன்பே சொல்லியாகி விட்டது.”

“சார்!”

“உன் கேள்விக்கு முன்பே பதில் சொல்லியாகி விட்டது என்று சொன்னேன்,  யூ ஸ்டுபிட் யங் மேன்!”

‘ஸ்டுபிட் ஃபூல் என்று சொல்ல வந்து, கண நேர மனமாற்றத்தால், வார்த்தையை அவர் மாற்றியதாக அவனுக்குத் தோன்றியது

தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, அவன் கடைசியாக கேட்டான்: “இந்த வேலை கிடைக்குமா, சார்?”

அவர் அவன் முகத்தைப் பார்த்தார். திடீரென்று அவர் கண்களில் பரிதாபம் சுரந்தது போல் தெரிந்தது. சட்டென்று எழுந்து, அவன் தோளில் தட்டினார். “டோன்ட் ஒர்ரி! காட் இஸ் கிரேட். தினமும் தபால்காரரை எதிர்பார்! நல்ல செய்தி கண்டிப்பாக வரும்” என்றார், ஆறுதலாக.

அவன் மனதில் இருந்த ஏமாற்றம் அத்தனையும் திடீரென்று வெளியேறி, அதில் உற்சாகம் புகுந்து கொண்டது, அவன் கையில் அவர் அப்பாயின்மென்ட் ஆர்டரே கொடுத்து விட்டது போல். ’பின்னே அவர் சொன்னதற்கு வேறு என்ன அர்த்தம்?’

“வருகிறேன், சார்! தாங்க் யூ வெரி மச், சார்!” என்று திரும்பத் திரும்ப அவரை வணங்கிக் கொண்டே, அவன் வெளியேறினான்.  

அவன் கேட்டைத் திறந்தபோது, “காப்பி சாப்பிடுகிறாயா?” என்று அவர் விசாரித்தார். அவன் பணிவுடன் மறுத்து விட்டு, அவர் பெருந்தன்மையை வியந்தபடி, வெளியே நடந்தான்.

அவன் வெளியேறியதும், அவர் உள்ளே திரும்பி, டெலிஃபோனிடம் வந்தார்

“ஹலோ!”

“ஹலோ , மாருதியா?”

“ஆமாம், சார். நீங்க?”

“நாதன் இருக்கிறானா?”

“பேசுவது யார் என்று...”

“அந்த முட்டாளைக் கூப்பிடு!”

அவர் பொறுமையின்றிக் கத்தினார்

“ஹலோ, நாதன் ஹியர்!” என்று ஐந்து வினாடிகளுக்குப் பிறகு, எரிச்சலுடன் பதில் வந்தது

“ஏண்டா, முட்டாள்! மேஜை மேல் இருக்கும் ஃபோனை துரை எடுத்துப் பேச மாட்டாரோ? அதற்கென்று ஒரு ஆளா?”

“யார் சார் பேசறது? ஓ, நீங்களா? குட் மார்னிங், சார்! சௌக்கியமா?”

“உன் பிசினஸ் ஒழுங்காக நடக்கும் வரை, யார் சௌக்கியமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் உனக்கு என்ன?”

“அது சரி. என்ன சார், விஷயம்? அபூர்வமாக ஃபோன் செய்கிறீர்களே!”

“உன் கம்பெனியில் ஒரு வேகன்சி இருக்கிறதாமே! என்னிடம் ஏன் சொல்லவில்லை?”

‘அவரிடம் ஏன் சொல்ல வேண்டும்?’ என்று நாதன் யோசிப்பது போல், அரை நிமிடம் மௌனம் நிலவியது

“அதற்கு என்ன, சார்?” உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாராவது...”

“எவ்வளவு சம்பளம் கொடுப்பாய்?”

“அதெல்லாம் வழக்கம் போல் தான், சார்! ஆரம்பத்தில் 120 ரூபாய் கொடுப்போம். அப்புறம் திறமையைப் பொருத்து, உயர்த்திக் கொடுப்போம். உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா?”

“உன் கஞ்சத்தனத்தைக் கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டு, 150 ரூபாய் கொடுப்பாயா?”

“பையன் யார், சார்?”

“நம் பையன்தான்.”

“உங்கள் பையன்... அவன் ஏதோ பி.காம், இல்லை? இதற்கு எஸ்.எஸ்.எல்.சி போதுமே!”

“ஏன், பி.காம் என்றால் கசக்கிறதா? என் பையன் பி.காம்தான். இன்னும் பாஸ்  செய்யவில்லை இன்னும் இரண்டு அட்டெம்ப்ட் ஆவது ஆகும். அதுவரையில் வீட்டில் சும்மா இருப்பானேன் என்றுதான். நாளைக்கு அனுப்பட்டுமா?”

“நாளைக்கா?”

“என்னடா தயக்கம்? என் பேச்சுக்கு அவ்வளவுதான் மதிப்பா? நாளைக்குக் காலை 10 மணிக்கு அங்கே வருவான். ஓகே? சரி வச்சுடு.”

“யாரோடு பேசினீர்கள்?” என்று கேட்டுக் கொண்டே வந்தாள் அவரது மனைவி

”உன் உதவாக்கரைப் பிள்ளைக்கு வேலை கேட்டுத்தான் பேசினேன்!” என்றார் அவர், சலிப்புடன்.

“கிடைத்து விட்டதா? யார் சிபாரிசு?”

அவர் ஒரு நிமிடம் யோசித்தபின், ”சிபாரிசா? சற்று முன், இங்கே ஒரு பையன் வந்தானே, அவன் சிபாரிசுதான்!” என்று சொல்லிச் சிரித்தார்.

அடுத்த பதிவு: 31. கேள்வி வரும்போது பதில் ஒன்று வேண்டும்

முந்தைய பதிவு: 29. அவமானம் யாருக்கு?

29. அவமானம் யாருக்கு?

ந்தச் சிறிய ஹோட்டலுக்குள் அந்தப் பெண் தயங்கிக் கொண்டே நுழைந்தாள் அங்கே கூட்டம் அதிகம் இல்லை. ஒன்றிரண்டு மேஜைகளைத் தவிர, மற்றவை எல்லாம் காலியாகவே இருந்தன. 

ஃபேமிலி ரூம் இருக்கிறதா என்று பார்ப்பது போல், அவள் சுற்றுமுற்றும் பார்த்தாள். அங்கே அப்படி எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை. 

”இங்கே வந்து உட்காருங்கள், அம்மா!” என்று ஒரு சர்வர் அவளை அழைத்தான். அவள் அவனைத் திரும்பிப் பார்த்து விட்டு, மறுபடியும் கொஞ்சம் தயங்கி விட்டு, அவன் காட்டிய இடத்துக்குப் போனாள். அது ஒரு ஓரமாக இருந்தது. பக்கத்து மேஜைகள் எல்லாமே காலியாக இருந்தன. 

சற்றுத் தள்ளி அமர்ந்திருந்த முத்துசாமி அவளை கவனித்தார் அவளுக்கு வயது 25க்குள் இருக்கும் என்று தோன்றியது. ஏதோ ஒரு அலுவலகத்தில் வேலை செய்யும் பெண் போல் தோற்றமளித்தாள். 

இது போன்ற ஒரு சிறிய ஹோட்டலுக்கு அவள் தனியாக வந்திருப்பது அவருக்கு வியப்பாக இருந்தது. உடன் வேலை செய்யும் மற்ற பெண்களுடன் வந்திருக்கலாமே! ஒருவேளை இவள் வேலை செய்யும் இடத்தில், இவளைத் தவிர வேறு பெண்கள் இல்லாமல் இருக்கலாம், அல்லது அவர்கள் எல்லோரும் தங்கள் வீட்டிலிருந்து மதிய உணவு கட்டி எடுத்து வந்திருக்கலாம்.

பக்கத்தில் பெரிய ஹோட்டல்களில், பெண்களுக்கு வசதியாக, ஃபேமிலி ரூம்கள இருக்குமே! அவற்றை விட்டு விட்டு, அவள் இந்தச் சின்ன ஹோட்டலுக்கு ஏன் வந்தாள்?

அவளுடைய செய்கை அவருக்குச் சற்று விசித்திரமாக இருந்தது. 

தனியே வரும் பெண்களை, இளைஞர்களும், ரவுடிகளும் சீண்டுவதை அடிக்கடி பார்த்து, அதனால் சீற்றமடைந்தவர் அவர். பெண்கள் வெளியே பயமில்லாமல் நடமாடவே நம் நாடு லாயக்கற்றது என்ற எண்ணம் அவருக்கு உண்டு. அதனாலேயே, தன் பெண்ணின் படிப்பை எஸ்.எஸ்.எல்.சியோடு நிறுத்தி விட்டு, அவளை வீட்டிலேயே இருத்திக் கொண்டார் அவர். 

தான் போகிற இடங்களிலெல்லாம், தனியாக வரும் பெண்களை யாராவது அணுகி வம்பு செய்கிறார்களா என்று கவலையோடு கவனிப்பதை அவரால் தவிர்க்க முடியவில்லை. தான் இந்தப் பெண்களுக்கு ‘பாடிகார்டா’ என்று அவரே வேடிக்கையாக நினைத்துக் கொண்டாலும், இந்த விஷயத்தில் தனது கவலையையும்  மன உந்துதலையும் அவரால் புறக்கணிக்க இயலவில்லை. 

இப்போது, அந்தப் பெண் கொஞ்சம் சுவாதீனம் அடைந்து விட்டதாகத் தோன்றியது. முதலில் இருந்த மருட்சி இப்போது நீங்கி இருந்தது.

கைப்பையைத் திறந்து, அதில் இருந்த கைக்குட்டையை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டாள்.

‘முட்டாள் பெண்ணே! உன் கைப்பையை இப்படிப் பொது இடத்தில் திறந்து பார்க்காதே! அதில் நீ வைத்திருக்கக் கூடிய பணத்துக்கும், விலை உயர்ந்த பொருட்களுக்கும் ஆபத்து ஏற்படக் கூடும். அதோ பார்! அந்த கிளீனர் பையன் மேஜையைத் துடைக்கிற சாக்கில், அந்தப் பக்கம் வந்து, உன் பையை எட்டிப் பார்க்கிறான்!’ 

அவளே அங்கே அழைத்து உபசரித்து உட்கார வைத்த சர்வர், இப்போது தண்ணீர் எடுத்துக் கொண்டு அவளிடம் வந்தான். வழக்கமாகச் செய்வது போல், விரலை தம்ளருக்குள் விடாமல், நாசூக்காக அவன் தம்ளரை எடுத்து வந்து வைத்ததைப் பார்த்த முத்துசாமி, பல்லைக் கடித்தார்.

‘அயோக்கியன்கள்! ஒரு இளம் பெண்ணைக் கண்டாலே இவன்களுக்கெல்லாம் ஒரு இது வந்து விடுகிறது!’

‘என்ன சாப்பிடறீங்க?’

‘என்ன இருக்கு?’

‘இட்லி, பொங்கல், வடை, தோசை, பூரி, போண்டா, பஜ்ஜி, ரவா தோசை...’

‘ம்.. சரி.ரெண்டு இட்லி.’

‘இவ்வளவுதானே பேச வேண்டும்? இதற்கு எவ்வளவு நேரம் ஆகும்?’ என்று முத்துசாமி மனதுக்குள் கணக்குப் போட்டுப் பார்த்தார்.

அவர் கணக்கில் வந்த நேரத்தை விட அதிகமான நேரத்துக்கு அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள் - அதாவது அவன் பேசிக் கொண்டிருந்தான். ‘அந்த முட்டாள் பெண் கேட்டுக் கொண்டிருக்கிறாள்!’

அவர்கள் பேச்சு அவருக்குக் காதில் விழவில்லை.

‘ஆனால், ஒரு சர்வருக்கு ஒரு வாடிக்கையாளரிடம் இவ்வளவு நேரம் பேச என்ன இருக்கிறது?’

அவள் ஏதோ சொல்ல, அவன் சிரித்துக் கொண்டே உள்ளே போனான். திரும்பி வரும்போது, ஒரு பிளேட்டில் ஜாங்கிரி எடுத்துக் கொண்டு வந்தான்.

‘இதற்குத்தான் இவ்வளவு நேரம் உபசாரம் செய்தானோ? ஏதோ, வியாபாரத்தையாவது நன்றாக நடக்கச் செய்கிறானே!’

இனிப்பை வைத்து விட்டு, அங்கேயே நின்றான். அவள் ஏதோ சொல்ல (அடுத்த ஐட்டத்துக்கு ஆர்டர்?), இவன் ஏதோ பதில் சொன்னான்.

‘போண்டா வேண்டாம், அது போன வாரம் போட்டது!’

மறுபடி அவள் ஏதோ சொல்லி, அவனைப் ‘போ’ என்று சைகை காட்டினாள்.

‘அப்பாடா! இப்போதுதான் அவள் ரியாக்ட் பண்ணுகிறாள்!'

அவன் முகம் சுருங்கி விட்டது போல் தோன்றியது. உள்ளே போவது போல் போய் விட்டு, மறுபடியும் திரும்பி வந்தான். அவள் மீண்டும் அவனை சைகை காட்டி அனுப்பி விட்டாள்.

சற்று நேரம் கழித்து, ஒரு தோசையை எடுத்துக் கொண்டு வந்தான். மறுபடி அவளிடம் ஏதோ பேச்சு. மறுபடியும் அவள் விரட்டினாள். அதற்குப் பிறகு, காப்பி கொண்டு வந்து வைத்து விட்டு, பில்லை எடுத்து வந்தான். 

அப்போதுதான், முத்துசாமி அதை கவனித்தார் அந்தப் பெண் தன் கழுத்தை வருடியபோது, மஞ்சள் கயிறு வெளியே தெரிந்தது.

அடப்பாவி! கல்யாணமான பெண்ணிடமா, இந்தப் போக்கிரி பல்லிளிக்கிறான்?

அவள் எழுந்திருந்தபோது, அவன் பில் கொடுக்கும் சாக்கில், அவள் கைகளைப் பற்றினான். அவள் சட்டென்று தன்னை விடுவித்துக் கொண்டு, வேகமாகப் போய் விட்டாள்.

அவள் பில்லுக்குப் பணம் கொடுத்து விட்டு வெளியேறும் வரை காத்திருந்த முத்துசாமி, எழுந்திருந்து அந்த சர்வரிடம் சென்றார்.

“ஏண்டா, அயோக்கியப் பயலே! கல்யாணமான பெண்ணிடமா, உன் கைவரிசையைக் காட்டுகிறாய்?” என்று சொல்லி, அவனைப் பளீரென்று அறைந்தார்.

மாலையில், அவன் வீட்டுக்குத் திரும்பியபோது, அவன் மனைவி கேட்டாள். “ஏதோ மத்தியானம் கொஞ்சம் பேசிக் கொண்டிருக்கலாமே என்று ஹோட்டலுக்கு வரச் சொன்னீர்கள். அதற்காக, அப்படியா பல பேர் முன்னிலையில் நெருக்கம் காட்டுவது? என் கணவர் ஒரு ஹோட்டல் சர்வர் என்று தெரிந்தால், எனக்கு எவ்வளவு அவமானம்?” என்றாள்.

“நீ என் மனைவி என்று மற்றவர்களுக்குத் தெரிந்தால், அது உனக்கு அவமானம். தெரியாததால், எனக்கு அவமானம்!” என்றான் அவன்.

அடுத்த பதிவு: அவன் செய்த சிபாரிசு 

முந்தைய பதிவு: சிறைக்குப் போகும் கண்டம் 

 

Thursday, October 9, 2025

28. சிறைக்குப் போகும் கண்டம்!

விமானம் கிளம்ப இன்னும் அரை மணி நேரம் இருந்தது. விமான நிலைய லவுஞ்ச்சில் உட்கார்ந்திருந்த கோபாலன், சுற்றுப்புறத்தைப் பற்றிய பிரக்ஞையை மறந்து, சிந்தித்துக் கொண்டிருந்தார்.

நேற்று ஏதோ நேரம் இருந்தது என்று தமது பழைய நண்பர் ராமனைப் பார்க்கப் போனதால் வந்த வினைதான் எல்லாம். கை ரேகை நிபுணரான ராமன் சும்மா இல்லாமல், விளையாட்டாக கோபாலனின் கையைப் பார்க்க ஆரம்பித்தார். 

முதலில் அசிரத்தையாகப் பலன் கேட்டு வந்த கோபாலன், சில விஷயங்களை ராமன் கண்ணால் பார்த்தது போல் நுணுக்கமாக, கச்சிதமாக விவரிக்க ஆரம்பித்ததும், வியப்பில் ஆழ்ந்து விட்டார். ஆர்வம் பெருக மேலும் கேட்டு வந்த போதுதான், ராமன் அந்த வெடியை எடுத்து வீசினார். 

கோபாலா, நான் கேட்கிறேன் என்று தப்பா நினைச்சுக்காதே! நீ என்ன பிசினஸ் பண்ற?” 

மேனேஜ்மென்ட் கன்சல்டன்ட்.” 

சட்ட விரோதமா ஏதாவது செய்யறியா?” 

சேச்சே!” 

வருமான வரி ஏய்ப்பு ஏதாவது செஞ்சிருக்கியா?” 

“100 சதவீதம் நேர்மையான இன்கம் டாக்ஸ் ரிட்டர்னுக்கு ஒரு சாம்பிள் வேணும்னா, என் ரிடர்னைத்தான்  காட்ட முடியும். ஆமாம், என்ன இது? எதுக்கு இப்படி எல்லாம் கேக்கற?” 

ராமன் முகத்தைக் கவிழ்த்தபடி, சற்று நேரம் யோசனை செய்தார். 

கோபாலா, ஐ ஆம் சாரி. இந்தத் தொழில்ல உண்மையைச் சொல்லிடணும். எதையும் மறைக்கக் கூடாது. உன் கை ரேகைப்படி, உன்னைச் சிறைக்கு அனுப்பக் கூடிய கண்டம் ஒண்ணு இருக்கு!” 

வாட்?” 

அதனாலதான் கேட்டேன். நீ ஏதாவது தப்புக் காரியம் செஞ்சிருக்கியான்னு! வேற ஏதாவது, மது மாது இது மாதிரி?” 

ஸ்டாப் இட்! உனக்குத் தெரியும், என்னைப் பத்தி. என் வாழ்க்கையில ஒரே லட்சியம் நேர்மை, தூய்மை, உண்மை இதுதான். நேர்மையா இருந்தும், நான் வசதியா இருக்கிறது கடவுளோட கருணை.” 

இரு, இரு. நான் உன்னை சந்தேகப்படல ஆனா, ரேகை பொய் சொல்லாதே!”

அப்படின்னா, நான் ஜெயிலுக்குப் போவேன்னு சொல்றியா? 

"அதைத்தான் சொல்ல வரேன். போவேன்னு நிச்சயமா சொல்ல முடியாது. சில விஷயங்கள்ள பிராபபிலிடிதான் இருக்கும். நிச்சயம் நடக்கும்னு சொல்ல முடியாது. இந்த சமயத்தில உனக்குச் சிறைக்குப் போற கண்டம் இருக்கு அப்படின்னு தான் சொன்னேன். ஆனா, போகத்தான் வேணும்னு அவசியமில்லை.” 

குழப்பற!” 

குழப்பல. தெளிவாச் சொல்றேன். கண்டம் என்கிறது ஒரு அபாயம்தான். நான் உனக்குச் சொன்னது ஒரு அபாய அறிவிப்புதான். நீ எச்சரிக்கையா இருந்தா, உன்னால  அபாயத்தைத் தவிர்க்க முடியும்.” 

எப்படி?” 

மின்சாரக் கம்பின்னு தெரியாம தொட்டா, ஷாக் அடிக்கும். ஆனா, அபாயம்னு போர்டு இருந்தா, விலகிப் போயிடுவோம், இல்ல? அது மாதிரிதான்.” 

ஓ! அப்படின்னா, சிறைக்குப் போற மாதிரி காரியம்  எதுவும் செய்யக் கூடாதுன்னு சொல்ற. அப்படித்தானே?” 

எக்ஸாக்ட்லி.”  

நான் ஏற்கனவே அப்படித்தானே இருக்கேன்!”  

ராமனிடம் ஜம்பமாகப் பேசிவிட்டாரே தவிர, அவர் விடுத்த ‘அபாய எச்சரிக்கை’ ஒரு லேசான பயமாக கோபாலனின் மனதில் செலோடேப் மாதிரி ஒட்டிக் கொண்டது - அகற்ற முடியாமல், எப்போதும் உறுத்திக் கொண்டே. 

ராமனின் சோதிடம் தவறாக இருக்க முடியாது ஆனால், தான் எதற்காகச் சிறைக்குப் போக வேண்டும்? 

முதல் நாள் ராமனிடமிருந்து விடைபெற்றது முதல், பம்பாய்க்குப் போக விமான நிலையத்தில் காத்திருக்கும் இந்த நேரம் வரை, அந்தக் கேள்வி ஒரு வண்டாக அவர் மனதைச் சுற்றி வந்து, அவரை நிலை கொள்ளாமல் அடித்து வந்தது.

அவர் விமானத்தில் ஏறி, விமானமும் கிளம்பி விட்டால், மனம் வேறு திசையில் திரும்பி விடும். அதுவரை நேரத்தைத் தள்ள வேண்டுமே! 

பக்கத்தில் கிடந்த செய்தித்தாளை எடுத்துக் கண்களை வலுக்கட்டாயமாகச் செய்திகளின் மீது செலுத்தினார் கோபாலன். 

அமெரிக்கப் பயணக் கைதிகள் விடுதலை!’ 

செய்தியை விரிவாகப் படித்தவருக்கு, சுருக்கென்று ஏதோ உரைத்த மாதிரி இருந்தது. 

ஒரு வருடத்துக்கும் மேலாக ஈரானில் சிறைப்பட்டிருந்த அமெரிக்கர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.’ 

சிறைப்பட்டிருந்த!’ 

ராமன் சொன்ன ‘எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ என்பதற்கு அவருக்குப் புது அர்த்தங்கள் புரிந்தன. அவர் செல்லப் போகும் இந்த விமானம் கூடக்  கடத்தப்பட்டு, அவர் ஒரு பணையக் கைதியாக பல நாட்கள், ஏன் பல மாதங்கள் கூட, வைக்கப்பட்டும் நிலை வரலாம்! 

சிறைக்குப் போகும் கண்டம்! 

பம்பாய்க்கு ரயிலிலேயே போய்விடுவது என்று முடிவு செய்து, விமான டிக்கெட்டை கேன்சல் செய்ய எழுந்து போனார் கோபாலன்.