Sunday, June 26, 2016

16. ஓடும் பஸ்ஸில்

 என்னுடைய 21ஆம் வயதில் தேன்மழை என்ற மாதபத்திரிகையின் நவம்பர் 1972 இதழில் என்னுடைய முதல் கதை புகைப்படத்துடன் பிரசுரமானது. 'பாரவி' என்ற என் புனைபெயரில் வெளியான 'ஓடும் பஸ்ஸில்' என்ற அந்த சிறுகதையின் ஸ்கேன் செய்யப்பட்ட வடிவில் இங்கே கொடுக்கப்பட்டிருக்கிறது.




Friday, June 10, 2016

15. நேர்முகத் தேர்வு - மறைமுக விடை


திரும்பத்திரும்ப யோசித்த பிறகும் ராமானுஜத்தால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.

சக்திவேலா, சரவணனா?

சக்திவேல், சரவணன் இருவரும் ராமானுஜத்தின் தொழில் நிறுவனத்தின் தலைமைப் பதவிக்கான நேர்முகத் தேர்வில் இறுதிக் கட்டத்துக்கு வந்தவர்கள்.

ராமானுஜம் இருவரையும் இரண்டு முறை இண்டர்வியூ செய்து விட்டார். மதிப்பெண் போடுவதென்றால், ஒருவரை விட இன்னொருவருக்கு ஒரு மதிப்பெண் கூட அதிகமாகப் போட முடியாது,

இருவரும் இருவிதப் பின்னணியைக் கொண்டவர்கள்.

சக்திவேல் பிரசித்தி பெற்ற கல்வி நிறுவனத்தில் எம்.பி.ஏ படித்தவன். அனுபவம் சில வருடங்களே என்றாலும், குறுகிய காலத்திலேயே தன்  திறமையைச் சிறப்பாக வெளிக்காட்டியவன்.

சரவணன் விஞ்ஞானப் பட்டதாரி. எம்.பி.ஏ  இல்லை. ஆயினும் அவனது இயல்பான திறமையும், விரிவான அனுபவமும் பல எம்.பி.ஏக்களைப் பின்னுக்குத் தள்ளி அவனை இறுதித் தேர்வுக்குக் கொண்டு வந்து விட்டன.

இன்று எப்படியும் முடிவு செய்து விடலாம்  என்று நினைத்து, இருவரையும் அழைத்துத் தனித் தனியே பேசிப் பார்த்தார்.

சக்திவேலிடம் பேசியபோது, 'இவன்தான் நமக்கு ஏற்றவன். இவனையே தேர்ந்தெடுத்து விடலாம்' என்று நினைத்தார். சரவணனிடம் பேசாமலேயே அவனைத் திருப்பி அனுப்பி விடலாம் என்று கூட நினைத்தார். ஆயினும், அழைத்து விட்டுப் பேசாமல் அனுப்பினால் முறையாக இருக்காது என்று நினைத்து அவனிடமும் பேசிப் பார்த்தார்.

சரவணனிடம் பேசியபோது, இவ்வளவு அருமையான ஒரு நபரைத் தவற விட நினைத்தோமே என்று தோன்றியது.

இருவரையும் இண்டர்வியூ செய்தபிறகு, இருவரையும் அரைமணி நேரம் காத்திருக்கச் சொன்னார். அரைமணி நேரம் கழித்து, பெண் பார்த்து விட்டுப் போகும் மாப்பிள்ளை வீட்டார் சொல்வது போல், தொலைபேசி மூலம் தகவல் சொல்வதாகத் தன் உதவியாளர் மூலம் தகவல் சொல்லி அனுப்பி விட்டார்.

இருவருக்கும் ஏமாற்றம் - எரிச்சலும் கூட. 'என் இந்தக் கிழவன் இப்படி வதைக்கிறான்?' என்று சலித்துக் கொண்டிருப்பார்கள்.

இருவரும் போய்ச் சில நிமிடங்கள் ஆகியிருக்கும். நினைவு அவர்களையே சுற்றிச் சுற்றி வந்தது.

இருப்புக் கொள்ளாமல், ஜன்னலருகே போய்த் திரையை விலக்கி வெளியே பார்த்தார். கீழே தெரிந்த சாலையில் வழக்கம் போல் போக்குவரத்து அதிகமாக இருந்தது. சாலையைக் கடப்பதற்காகப பலர் காத்துக் கொண்டிருந்தனர். அந்தக் கூட்டத்தில் சக்திவேலும், சரவணனும் கூட இருந்தனர்.

'சட்! மனதைத் திருப்பலாம் என்று வெளியே பார்த்தால், இங்கேயும் இந்த இருவருமா?' என்று சலித்துக்கொண்டே திரும்ப நினைத்தவர், எதோ ஒரு ஆர்வத்தால் உந்தப்பட்டவராக அங்கேயே நின்றார்.

ஒரு சிலர் சாலையைக் கடக்க முயன்று போக்குவரத்தின் வேகம் கண்டு பின் வாங்கினர். அது பாதசாரிகள் சாலையைக் கடக்கும் இடம் என்றாலும், வாகன ஓட்டிகள் பாதசாரிகளுக்கு வழி விடாமல் வேகமாகச் சென்று கொண்டிருந்தனர். சாலையைக் கடக்க முயலும் பாதசாரிகளை அச்சுறுத்துவதற்காகவே, வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களின் வேகத்தை அதிகரித்தனர்.

சட்டென்று ஒரு நபர் முன்னால் அடி எடுத்து வைத்தார். மற்றவர்களைத் தன்னைப் பின் தொடருமாறு சைகை காட்டினார். வாகனங்களைக் கை காட்டி நிறுத்தும்படி சைகை காட்டியபடியே தயக்கமின்றி நடந்தார்.

மற்றவர்கள் அவரைப் பின் தொடர, வாகனங்கள்  வேகத்தைக் குறைத்தும், சடன் பிரேக் போட்டும் நின்றன. பாதசாரிகள் நிதானமாகச் சாலையைக் கடந்தனர்.

ராமானுஜத்துக்குத் தெளிவு பிறந்து விட்டது. ஒரு பிரச்னை எழும்போது, முனைப்புடனும், துணிவுடனும் செயல் பட்டு, மற்றவர்களை வழி நடத்தித் தன் தலைமைப் பண்பை வெளிப்படுத்திய சரவணன்தான் அவருடைய தேர்வு!

Sunday, February 7, 2016

14. மணமகளே வா!

அறைக்கதவு சத்தமில்லாமல் திறந்து மூடியது. கட்டிலில் உட்கார்ந்திருந்த சங்கர் நிமிர்ந்து பார்த்தான். பூமியில் கால் படாமல் நடந்து வரும் தேவதை போல் சத்தமில்லாமல் நடந்து வந்தாள் அவள். பூரணமான முதல் இரவு அலங்காரம். மேடுபள்ளம் பார்த்து நடப்பதிலேயே கவனம் இருப்பது போல் தலை தொங்கி இருந்தது.

அவளை அப்படியே தூக்கிப் படுக்கையில் கிடத்தினான். முகவாயை நிமிர்த்தி முகத்தைப் பார்த்தான். ஏராளமான பட்டுப்புடவைக்கு நடுவே இடையே கொஞ்சமாகத் தெரிந்த முகத்தின் சிவப்பு இரட்டிப்பாயிருந்தது. பெண்கள் நாணம் கொள்வது தங்கள் நிறத்தை மிகைப்படுத்தக் காட்டத்தானோ என்று நினைத்துக் கொண்டான்.

வெறியூட்டும் அழகு. ஆனால், இதை மெதுவாக, நிதானமாக, அணு அணுவாக அனுபவிக்க வேண்டும். இரவு முழுவதும் எதற்காக இருக்கிறது?

"ஷீலா!"

"ம்..." துரத்திலிருந்து கேட்பதுபோல் அவள் குரல் கேட்டது.

"என்னை உனக்குப் பிடிச்சிருக்கா?"

அவள் பதில் சொல்லவில்லை. வெட்கமா? அல்லது 'பிடிக்கவில்லை என்று சொன்னால் விட்டு விடவா போகிறான்?' என்ற நினைப்பா? அல்லது 'என் அபிப்பிராயத்க்தை யார் கேட்டார்கள்?' என்று மனதுக்குள் குமுறலா?

அவன் சற்றும் எதிபாராத வகையில் அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு தன் இதழ்களால் அவன் முகத்தில்...

ஓ! பாலசந்தர் பட நாயகி போல் மறைமுகமாக பதில் சொல்லி விட்டாள். 'தாங்க் யூ!'

"எனக்கு ஒரு சந்தேகம்."

'என்ன' என்பது போல் அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.

"முதல் இரவுக்கு இவ்வளவு அலங்காரங்கள் என்? அவ்வளவையும் இப்போது கலைக்கத்தானே போகிறேன்?"

அவள் கைகளால் தன் முகத்தை மூடிக் கொண்டாள். 'ரொம்பவும்தான் வெட்கப்பட வைக்கிறான்' என்று நினைத்துக் கொள்வாளோ?

மிக மென்மையான மஞ்சள் நிறக் கைகளையும், விரல்களையும் பார்த்தான். வெண்டைக்காய்க்கு லேடீஸ் ஃ பிங்கர் என்று பெயர் வைத்தவன் ஒரு அருமையான கலா ரசிகனாக இருக்க வேண்டும் என்று தோன்றியது. சிறு வயதில் அம்மா வெண்டைக்காய் நறுக்கும்போது பிஞ்சு வெண்டைக் காய்களைப் படக் படக் என்று ஒடித்துத் தின்றிருக்கிறான். அது போல் இந்த விரல்களையும்...


அவள் விரல்களை இழுத்துத் தன் உதடுகளில் பதித்துக்கொள்ளத்தான் முடிந்தது.

பார்த்து ரசித்தது போதும். இனி..

அவள் சேலைத்தலைப்பை மெல்ல விலக்கினான். அவள்   மீண்டும் தன் கைகளில் முகத்தை மறைத்துக் கொண்டாள். நீல நிற ரவிக்கை அவனுக்கு நல்வரவு கூறியது. ஏராளமான இடையில் செழுமையான மடிப்புகள்.

முகத்தழகை மட்டுமே பார்த்து அவளைத் தேர்ந்தெடுத்திருந்தாலும், எல்லா விதங்களிலுமே அவள் ஒரு முதல் தர அழகிதான் என்ற உணர்வில் அவன் புளகாங்கிதம் அடைந்தான்.

இறுக்கமான கேசத்தை மடியில் பற்றி அதன் அடியைத் தேடி அலைந்தான். அவள் முதுகினுடே ஊர்ந்த விரல்கள் முதுகுக்குக் கிழே அவள் பின்னல் வந்து முடிவதைத் தொட்டு உணர்ந்தன.

இனியும் அவனுக்குப் பொறுமை இல்லை. தம்புராவின் உறையை நீக்கிச் சுருதி சேர்க்க வேண்டியதுதான்.

விடிகாலையில் அவன் கண் விழித்தபோது, அவள் முகம் கழுவி உடை உடுத்தித் தன்னைச் சரி செய்து கொண்டிருந்தாள். முகத்தில் இப்போது நாணம் இல்லை. இலேசாகக் களைப்புத் தெரிந்தது.

"என்ன அதற்குள்?" என்று அவள் கையைப் பற்றினான்.

அவள் வெடுக்கென்று தன் கையை இழுத்துக் கொண்டாள். "பொழுது விடியப் போகிறது, தெரியும் இல்லையா? இப்போது மணி ஐந்தரை."

அவன் பெருமூச்சுடன் எழுந்தான். கழற்றி வைத்திருந்த தன பாண்ட் பாக்கெட்டைத் துழாவியபடியே . "ரொம்ப நன்றி ஷீலா! உண்மையாகவே நேற்று இரவு எனக்கு முதல் இரவுதானோ என்று  தோன்றுகிறது. எப்படி உன்னால்  இவ்வளவு அருமையாக ..."

"ஒவ்வொரு கஸ்டமரும் ஒவ்வொரு வகை. நீங்கள் முதல் இரவு மனைவி போல் நடந்து கொள்ள வேண்டும் என்று விரும்பியதால் அப்படி நடந்து கொண்டேன். உங்களைத் திருப்திப் படுத்துவதுதானே என் கடமை? வருகிறேன்" என்று கிளம்பினாள், அவன் கொடுத்த நூரு ரூபாயைத் தன் ரவிக்கைக்குள் திணித்தபடியே.

('ராணி' வார இதழ் 19/6/83இல், 'விஸ்வாமித்திரன்' என்ற புனைபெயரில் வெளியானது.)




Friday, February 5, 2016

13. சங்கிலிக் கணுக்கள்


வேலைக்குச் சேர்ந்த முதல் நாளே அனுராதா என்ற தன் பெயரை அனு என்று சுருக்கிச் செல்வகணபதி அழைத்தது அவளுக்குப் பிடிக்கவில்லை.

செல்வகணபதி அவளுடைய முதலாளி. அவள் வேலையில் சேர்ந்தபோது அவர் மானேஜிங் டைரக்டர் - எம்.டி. அவள் அவருடைய பி.ஏ. இருபது வருடங்களுக்குப் பிறகு அவள் எக்ஸிக்யூடிவ் செகரெட்டரி என்ற நிலைக்கு உயர்ந்து விட்டாள். செல்வகணபதி இன்னும் எம்.டியாகத்தான் இருக்கிறார்!

என்னதான் பதவி உயர்ந்தாலும் இப்போதும் அவள் செல்வகணபதியின் உதவியாளர்தான். ஆனால் நிறைய வித்தியாசங்கள் உண்டு. இப்போது அவளே சிலருக்கு மேலதிகாரி.அவளை விட உயர்ந்த பதவியில் இருக்கும் பொது மேலாளர் (ஜி.எம்.) கூட அவளிடம் சற்று மரியாதையாகத்தான் நடந்து கொள்கிறார். பரமசிவனின் கழுத்தில் இருக்கும் பாம்பாயிற்றே!

இதையெல்லாம் விடப் பெரிய வித்தியாசம், இப்போதெல்லாம் அவள் செல்வகணபதி கூப்பிட்ட குரலுக்கு ஓட வேண்டியதில்லை. ஆரம்பத்தில் அறைக்கு வெளியே தட்டெழுத்து எந்திரத்தின் முன் அமர்ந்துகொண்டு, சுருக்கெழுத்து உபகரணங்களுடன் அவருக்குச் சேவை செய்யக் காத்திருந்தது போன்ற நிலைமை இப்போது இல்லை.

அவளுக்கென்று தனி அறை. அவள் வாய்மொழியாக வடிக்கும் கடிதங்களைக் காகிதங்களில் ஏற்றும் உதவியாளர்கள் என்று அவளுக்கே ஒரு சாம்ராஜ்யம் இருக்கிறது. முக்கியமான அலுவல் இருந்தால் ஒழிய செல்வகணபதியின் அறைக்கு அவள் செல்ல வேண்டியதில்லை. ஏன், இரண்டு மூன்று நாட்கள் அவரைச் சந்திக்க வேண்டிய தேவை இல்லாமல் கூடக் கழிந்திருக்கின்றன.

ஏசியின் இதமான குளிர் உடலுக்கு இதமளித்தாலும், எப்போதும் அவள் உள்ளே கனன்று கொன்டிருக்கும் வெப்பம் அவளைச் சங்கடப்படுத்திக்கொண்டுதான் இருந்தது. அந்த நெருப்பு என்றாவது அணையுமா என்று தெரியவில்லை.

'நான் கொண்ட நெருப்பு
அணைக்கின்ற நெருப்பு
யார் அணைப்பாரோ?
இறைவனின் பொறுப்பு'

என்ற திரைப்படப் பாடல் வரிகள் அடிக்கடி அவள் நினைவில் வந்து போகும். அவள் கொண்ட நெருப்பை அணைக்கின்ற ஆள் அவளுடனேயே இருந்துகொண்டுதான் இருக்கிறான். ஆனாலும்...

இருபது வருடங்களுக்கு முன்பு நடந்த அந்தச் சம்பவத்தை ஒவ்வொரு நாளும் எத்தனை முறை நினைக்க வேண்டியிருக்கிறது! ஒரு ஆழமான காயம் தொடர்ந்து ஏற்படுத்தும் குத்துவலி போல் நிரந்தரமான வேதனையைக் கொடுத்துக் கொண்டிருக்கும் நினைவு! இந்த வேதனையைச் சுமந்து கொண்டு எப்படி  இவ்வளவு காலம் இயல்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று சில சமயங்களில் அவளுக்கு வியப்பாக இருக்கும்.

திருமணத்துக்கு முன்பு அவள் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தாள். திருமணத்துக்குப் பிறகு ஏற்பட்ட இடமாற்றம் காரணமாக வேலையை விட நேர்ந்தது. வேலைக்குப் போகாமல் வீட்டில் தன்னிச்சையாகப் பொழுதைக் கழிப்பதில் ஒரு சுகம் இருந்தது. இந்த சுகத்தைக் கொஞ்ச நாள் அனுபவிப்போமே என்று வேலைக்குப் போவதைப் பற்றி அவள் யோசிக்கவில்லை. அவள் கணவன் மூர்த்தியும்  அது  பற்றிப் பேசவில்லை. பிறகு பிரசவம், குழந்தை என்று சில  வருடங்கள் ஒடி விட்டன.

சுகன்யாவுக்கு மூன்று வயது நெருங்கியபோதுதான் அனுராதாவுக்கு மீண்டும் வேலைக்குப் போக வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. ஒரு சில மாதங்களில் சுகன்யாவை மழலையர் பள்ளியில்  சேர்க்க வேண்டும். அதற்குப் பிறகு தான் வேலைக்குப் போவதில் ஒன்றும் சிரமம் இருக்காது என்று அவளுக்குத் தோன்றியது. வேலைக்குப் போவதற்கான பொருளாதாரக் காரணங்கள் எதுவும் இல்லை என்பதால் மூர்த்தி மறுப்பு சொல்வானோ என்று பயந்தாள். ஆனால் மூர்த்தி, "உனக்கு எது பிடித்திருக்கிறதோ அப்படிச் செய்து கொள்" என்று சொல்லி விட்டான்.

எனக்கெனவே மூன்று ஆண்டுகள்  பழகியதில் மூர்த்தியின் புரிந்து கொள்கிற மனப்பான்மையும், மற்றவர்களைச் சங்கடப்படுத்தக் கூடாது என்ற சிந்தனையையும் கண்டுணர்ந்து பெருமிதம் கொண்டிருந்தவளுக்கு, அவன் மீது இருந்த மதிப்பு மேலும் கூடியது.

ஆனால் அவள் எதிர்பார்த்தபடி உடனே வேலை கிடைத்து விடவில்லை. அவள் படிப்பு, அனுபவம், அறிவுக்கூர்மை இவற்றையும் தாண்டி, அவளை வேலைக்கு அமர்த்திக் கொள்வதில் பலருக்கும் ஒரு பொதுவான தயக்கம் இருந்ததை அவள் உணர்ந்தாள். 'ஒருவேளை நான் பொழுதுபோக்குக்காக  வேலைக்கு வருகிறேன், நிலைத்து நிற்க மாட்டேன் என்று  தயங்குகிறார்களோ?'

ஒருவேளை இனி தனக்கு வேலை கிடைக்காதோ என்ற சந்தேகமும் அவளைப் பற்றிக் கொண்டது. அப்படி வேலை  கிடைக்காமல் போனால்  தனக்குப் பெரிய பதிப்பு எதுவும் இல்லை என்பதை அவள் உணர்ந்திருந்தாலும் அது ஒரு அவமானகரமான விஷயமாகத்  தோன்றியது. 'என்னை எப்படி நிராகரிக்கலாம்?' என்ற அகம்பாவச் சிந்தனையின் வெளிப்பாடோ இது என்றும் தோன்றியது. எப்படியிருந்தாலும் தன முயற்சியில் வெற்றி அடையாமல் விடுவதில்லை என்பதில் அவள் உறுதியாக இருந்தாள்.

நான்கு ஐந்து மாதங்கள் முயன்ற பிறகு அவளுக்கு இந்த வேலை கிடைத்தது. செல்வகணபதி அவளைக் கேட்டது ஒரே ஒரு கேள்விதான். 
"மிஸஸ் அனுராதா, நீங்கள் இந்த வேளையில் தொடர்ந்து இருப்பீர்களா?"

"இருப்பேன். நிச்சயமாக இருப்பேன்," என்று உறுதி அளித்து விட்டு உற்சாகத்துடன் வேலையில் சேர்ந்தாள்.

நேர்காணலின்போது 'மிஸஸ் அனுராதா' என்று மரியாதையாக அழைத்தவர், வேலையில் சேர்ந்த முதல் நாளே 'அனு கொஞ்சம் வரியா? ஒரு லெட்டர் டிக்டேட்  பண்ணணும்' என்று உரிமை எடுத்துக் கொண்டார்.

'அன்றே இதற்கு நான் எதிர்ப்புத் தெரிவித்திருக்க வேண்டும். என் பெயரைச் சுருக்கிக் கூப்பிடுவது  எனக்குப் பிடிக்காது' என்று சொல்லியிருக்க வேண்டும். 'நான் திருமணமானவள். நீங்களும் தொண்டுக் கிழவர்  அல்ல. எனவே என்னை 'நீ' என்று ஒருமையில் அழைக்க வேண்டாம்' என்று பணிவாகச் சொல்லியிருக்கலாம்'

அன்று அப்படிச் சொல்லியிருந்தால், அந்த அசம்பாவிதம் நடந்திருக்காதோ என்னவோ?

அலுவலகத்தில் எல்லாம் மிக இயல்பாகவும், சரியாகவுமே நடந்து வந்தன. செல்வகணபதி அவளுடைய உழைப்பை மதித்தார், வெளிப்படையாகப் பாராட்டினார்.

ன்று ஒரு முக்கியமான வாடிக்கையாளருடன் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடாகியிருந்தது. வெளியூரிலிருந்து வரும் அவருக்கு ஓட்டலில் அறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  ஓட்டலில் அவரை செல்வகணபதி சந்தித்துப் பேசுவதாக ஏற்பாடு. இது போன்ற முக்கியமான சந்திப்புகளின்போது அனுராதாவும் உடனிருக்க வேண்டியிருக்கும். சந்திப்பின்போது எடுக்கப்படும் சில முக்கிய முடிவுகளை உடனுக்குடன் குறித்துக் கொள்வது அவளது பொறுப்பு.

அன்று  அவர்கள் ஓட்டலுக்குச் சென்றபோது அந்த வாடிக்கையாளர் வந்திருக்கவில்லை. இருவரும் ஓட்டல் அறையிலேயே சற்று நேரம் காத்திருந்தபோது வாடிக்கையாளரிடமிருந்து  ஓட்டலுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. ஏதோ ஒரு தடங்கலினால் தான்  வருவது தாமதப்படும் என்று தெரிவித்திருந்தார்.

அவர் வரும் வரை அங்கேயே காத்திருப்பதா  அல்லது அலுவலகத்துக்குப் போய்விட்டு அப்புறம் வருவதா என்று அவர்கள் விவாதித்துக் கொண்டிருக்கும்போதே  சற்றும் எதிர்பாராமல் செல்வகணபதி அவள் கைகளைப் பற்றினார்.

அதற்குப் பிறகு நடந்தவற்றை, பிறகு நினைத்துப் பார்த்தபோது அவளுக்கே சில விஷயங்கள் தெளிவாக இல்லை. ஒரு முக்கிய வாடிக்கையாளரைச் சந்திக்கப் போகிறோம் என்பதால் அவள் தன்னைச் சற்று அதிகமாக அலங்கரித்துக் கொண்டிருந்தாள். அந்த அலங்காரம் செல்வகணபதியிடம் சலனத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.

ஆனால் நான்  ஏன்  நடந்ததைத் தடுக்கவில்லை? தடுக்க முயற்சி செய்ததாகத்தான் தோன்றியது. ஆனால் அது பலவீனமான முயற்சி என்று அவளுக்கே தெரிந்தது. அவள் இன்னும் சற்று ஆவேசமாகத் தடுத்திருந்தால் செல்வகணபதி பின்வாங்கி இருக்கலாம். நான் ஏன் அப்படிச் செய்யவில்லை? முதலாளி  என்ற விசுவாசமா அல்லது பயமா? இந்த வேலை போய்விட்டால் மீண்டும் வேலை கிடைக்காது என்ற எச்சரிக்கை உணர்வா அல்லது...... இது ஒன்றும் தவறில்லை என்று ஆழ்மனத்தில் தோன்றிய சமாதானமா?

எப்படியோ, எல்லாம் திடீரென்று நடந்து முடிந்து விட்டது. அவள் அதிர்ந்து நின்றபோது, " ஐ ஆம் சாரி அனு. நீ இப்போது வீட்டுக்குப் போய் விடு. பிறகு பேசிக் கொள்ளலாம்." என்ற செல்வகணபதி, டிரைவரை அழைத்துத் தன காரிலேயே அவளை வீட்டில் கொண்டு விடச் செய்தார்.

அடுத்த நாள் அவள் வேலைக்குப் போகவில்லை. மூர்த்தியிடம், "உடம்பு சரியில்லை, அசதியாக இருக்கிறது " என்றாள். உண்மையாகவே உடலிலும், மனதிலும் ஒரு அசதி வந்து குடிபுகுந்திருந்தது.

அதற்கு அடுத்த நாள் அவள் அலுவலகத்துக்குப் போனபோது ஒரு முடிவுடன்தான் போனாள். வேலையே விட்டு விலகுவதைத் தவிர வேறு வழி இருப்பதாக அவளுக்குத் தோன்றவில்லை. மூர்த்தியிடம் அப்புறம்தான் சொல்ல வேண்டும். வேலை பிடிக்கவில்லை என்று சொல்லிக்கொள்ளலாம். நிர்வாக இயக்குனரின் அணுகுமுறை சரியில்லை என்று கோடி காட்டி, விட்டு விடலாம். 'ஏன் என்னிடம் சொல்லாமல் வேலையே விட்டாய்?' என்று கேட்கிற ஆள் இல்லை மூர்த்தி. ஆனாலும் அவள் திடீரென்று விலகியதற்கு ஏதேனும் காரணம் இருக்க வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொள்வான்.
சீக்கிரமே வேறு வேலை தேடிக்கொள்ளலாம். அதில் ஒன்றும் பிரச்னை இருக்காது என்று தோன்றியது.

அன்று அவள் அலுவலகத்தை அடைந்தபோது அவள் இருக்கையில் ஒரு இளைஞன் உட்கார்ந்திருந்தான். அனுராதாவுக்குச் சற்று அதிர்ச்சியாகவே இருந்தது. நான் விலகுவதற்குள் செல்வகணபதியே என்னை அனுப்பி விட்டாரா?

அவளைப் பார்த்ததும் அவன் எழுந்து நின்றான். "மேடம், நீங்கள்தான் மிஸஸ் அனுராதா என்று நினைக்கிறேன். நீங்கள்  வந்ததும் சார் உங்களை உள்ளே வரச் சொன்னார்."

அனுராதா செல்வகணபதியின் அறைக்குள் நுழைந்தாள்.
"உட்கார் அனுராதா" என்றார் செல்வகணபதி. 'அனு' விரிந்து 'அனுராதா' ஆகியிருந்ததை அவள் கவனித்தாள். 'இனிமேல் நீ இங்கே வேலை செய்வது சரியாக இருக்காது. அதனால் விலகிக் கொள்' என்று செல்வகணபதி சொல்வதற்கு முன்னால்  தான் முந்திக்கொள்ள வேண்டும் என்ற துடிப்பில், முன்பே எழுதி வைத்திருந்த பதவி விலகல் கடிதத்தைக் கைப்பையிலிருந்து எடுத்து அவர் முன் நீட்டினாள்.

"நீ இப்படி ஒரு முடிவுக்கு வருவாய் என்று எனக்குத் தெரியும். அதனால்தான் நேற்றே வேறொரு ஏற்பாடு செய்து விட்டேன்."

"பார்த்தேன்"  என்றாள் அனுராதா சுருக்கமாக.

"ஆனால் நீ நினைக்கிற  மாதிரி இல்லை. புதிதாக வந்திருக்கிற சேகர்  உனக்கு பதிலாக இல்லை, உனக்கு உதவியாக" என்றார் செல்வகணபதி.

அனுராதா புருவங்களை உயர்த்தினாள்.

"நடந்த சம்பவம் மிகவும் வேதனைக்குரியது. நான் அதை நியாயப்படுத்த விரும்பவில்லை.  தவறு முழுவதும் என்னுடையதுதான். அடிப்படையான தவறு உன்னை இதுபோன்ற சந்திப்புகளுக்கு அழைத்துச் செல்வது என்ற நடைமுறையை உருவாக்கியது. சந்தர்ப்பங்களின்மீது பழி போட முடியாது என்றாலும் சந்தர்ப்பங்கள் தவறு நடப்பதற்கான வாய்ப்பை அதிகமாக்குகின்றன என்பதை மறுக்க முடியாது. அதனாலதான் இந்த மாற்று ஏற்பாடு."

அனுராதா பதில் சொல்லவில்லை. செல்வகணபதியின்  மீது இருந்த கோபம் தணியாவிட்டாலும அவர் உண்மையாகவே நடந்ததற்கு வருந்துகிறார் என்று தோன்றியது. ஆனால் அதனால் என்ன பயன்?

"வேலையை விட்டு விலக நீ முடிவு செய்திருப்பது இயல்பான செயல்தான். ஆனால் அதனால் என்ன பயன் என்று ஒரு நிமிடம் யோசித்துப் பார். நீ இங்கேயே தொடர்ந்து வேலை செய்யலாம். உன் வேலைப் பொறுப்புகளைக் கொஞ்சம் மாற்றப் போகிறேன். இத்தனை நாள் நீ செய்த வேலையை இனி சேகர் செய்வான். உனக்குச் சில நிர்வாகப் பொறுப்புகளைக் கொடுக்கப் போகிறேன். உனக்கு நம் நிறுவனத்தின் செயல்பாடுகள் பற்றி நன்றாகத் தெரியும்.  அனுபவமும்  இருக்கிறது. இயல்பான புத்திசாலித்தனமும் இருக்கிறது. நிச்சயம் உன் புதிய பொறுப்பில், உன்னால் நம் நிறுவனத்துக்குப் பயனுள்ள விதத்தில் செயல் பட முடியும் என்று  நினைக்கிறேன்."

அனுராதா அமைதியாக இருந்தாள்.

"உனக்கு யோசிக்க நேரம் வேண்டுமென்றால்......"

"இல்லை. உங்கள் யோசனைப்படியே செய்யுங்கள்" என்று சொல்லிவிட்டு வெளியே சென்றாள். வெளியே செல்ல அறைக்கதவைத் திறந்தவள் சற்றே திரும்பி, "என் இருக்கையில் சேகர் உட்கார்ந்திருக்கிறார். எனக்கு வேறொரு இருக்கைக்கு ஏற்பாடு செய்யுங்கள்" எனறாள்.

"இனிமேல் நீ என் பி.ஏ. இல்லை, எக்ஸிக்யூடிவ் செகரெட்டரி. அதனால் உனக்கு ஒரு தனி அறை ஏற்பாடு செய்கிறேன்" என்றார் செல்வகணபதி.

அதற்குப் பிறகு அவள் அலுவலக வாழ்க்கையே மாறி விட்டது. புதிய பொறுப்பில் அவள் காட்டிய ஆர்வமும், ஈடுபாடும், உற்சாகமான உழைப்பும் நிறுவனத்தின் செயல்பாட்டில் கணிசமான முன்னேற்றங்களுக்கு வழி வகுத்தன. செல்வகணபதியுடனான  சந்திப்புகள் மிகவும் குறைந்து விட்டன. அவர் அவளைக் கூப்பிடுவதையே பெரும்பாலும் தவிர்த்து வந்தார். அவள் தானாகத்தான் தேவைப்படும்போது  அவர் அறைக்குச் சென்று அவரிடம் பேசிவிட்டு வந்தாள். அவளுடைய பதவி, ஊதியம், செல்வாக்கு, மதிப்பு எல்லாமே வேகமாக உயர்ந்தன.

அதற்குப் பிறகு செல்வகணபதி ஒருமுறை கூட அவளை அனு என்று அழைத்ததில்லை - அனுராதாதான். மற்றவர்களுக்கு அவள் 'அனு மேடம்' ஆகி விட்டாள்.

ஆனாலும் உள்ளிருந்து வாட்டும் நோய்போல் அந்தச் சம்பவம் அவளை உறுத்திக்கொண்டே  இருந்தது. மூர்த்தியிடம் அதை மறைத்ததை அவனுக்குச் செய்த பெரிய அநீதியாகக் கருதினாள்.

அவள் குடும்ப வாழ்க்கையிலும் பல மாறுதல்கள். சுகன்யா பொறியியல் பட்டம் முடித்துவிட்டு மேல்படிப்புக்கு அமெரிக்காவுக்குச் சென்று விட்டாள். இன்னும் சில வருடங்களில் அவளுக்குத் திருமணம் செய்ய வேண்டும்.
அன்று இரவு மூர்த்தி மிகவும் உற்சாகமாகக் காணப்பட்டான். "அனு, நீ ஒரு விஷயத்தையே அடியோடு மறந்து விட்டாய் என்று நினைக்கிறேன்" என்றான்.

"எதை?"

"நமக்குக் கல்யாணமான விஷயத்தைத்தான்."

"உங்களுக்குப் பெண் ஒருத்தி இருக்கிறாள் என்பதை மறந்து விட்டுப் பேசுகிறீர்களா அல்லது அவள் இங்கே இல்லை என்கிற தைரியத்தில் பேசுகிறீர்களா?"

"இரண்டும் இல்லை. கல்யாணமானவர்கள் எல்லாம் திருமண தினம் என்று ஒன்றைக் கொண்டாடுவார்களாமே, கேள்விப்பட்டிருக்கிறாயா?"

"என்ன விளையாடுகிறீர்கள்? நாமும்தான் கொண்டாடி வருகிறோம். நம்முடைய அடுத்த திருமண தினம் ..... ஒ! இந்த மாதக் கடைசியில் வருகிறதே, மறந்து விட்டேன்."

"அதைத்தான் நான் சொன்னேன்."

"ஒகே!"

"இப்போதும் நீ ஒன்றை மறந்து விட்டாய்!"

"எதை?'

"நமக்குக் கல்யாணம் ஆகி இருபத்தைந்து வருடம் ஆகப் போகிறது என்பதை."

"மறக்கவில்லை. அதற்கு என்ன விசேஷமாக ஏதேனும் செய்ய வேண்டுமா?"

"பின்னே வேண்டாமா? சுகன்யா இங்கே இருந்திருந்தால் ஜமாய்த்திருப்பாள். அவள் இல்லாததால் சிம்பிளாக ஒரு கிராண்ட் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்யலாம் என்று பார்க்கிறேன்."

"சிம்பிளாக கிராண்ட் பார்ட்டியா? ஜமாயுங்கள்!"

"கொஞ்சம் பேரைத்தான் கூப்பிடப் போகிறேன். அதனால்தான் சிம்பிள் என்று சொன்னேன். ஆனால் பார்ட்டி கிராண்டாக நட்சத்திர ஓட்டலில் நடக்கும்! யார் யாரைக் கூப்பிட வேண்டும் என்று இப்போதே பட்டியல் போட ஆரம்பித்து விடு. குறிப்பாக உன் எம்.டி யைக் கூப்பிட வேண்டும். அவரை நான் பார்த்ததே இல்லை."

அனுராதாவிடமிருந்து சற்றும் எதிர்பாராத விதத்தில் ஒரு விம்மல் வெடித்தது.
மூர்த்தி அதிர்ந்து போய் விட்டான். "என்ன ஆச்சு அனு?"

இரண்டு நிமிடங்கள் குலுங்கிக் குலுங்கி அழுதபின் இருபது  ஆண்டுகளாக மனதில் அழுத்தி வைத்திருந்த துயரத்தை வாந்தி எடுப்பதுபோல் கொட்டித தீர்த்தாள்.

மூர்த்தி அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தான். அவள் சொல்லி முடித்ததும், "சரி போய்த் தூங்கு. காலையில் பேசிக்கொள்ளலாம்" என்றான்.

அனுவுக்குத்  திடுக்கென்றது. சம்பவம் நடந்தவுடன் செல்வகணபதி, "இப்போது வீட்டுக்குப் போ. அப்புறம் பேசிக்கொள்ளலாம்" என்று சொன்னது நினைவுக்கு வந்தது. இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை. ஆனாலும் மனம் லேசாகியிருந்தது. இருபது ஆண்டுகளாக மனதை அழுத்திக் கொண்டிருந்த சுமை இப்போது இறங்கி விட்டதல்லவா?

காலையில் வழக்கம்போல் மூர்த்திக்குக் காப்பி கொண்டுபோய்க் கொடுத்தாள். பேப்பர் படித்துக் கொண்டிருந்த மூர்த்தி காப்பி  தம்ளரை வாங்கி டீபாயில் வைத்தான்.சட்டென்று எழுந்து அவளை இறுகத் தழுவிக்கொண்டு அவள் முகம் முழுவதும் முத்த மழை பொழிந்தான். 
"அனு, ஐ லவ் யூ"

அனுவுக்கு மீண்டும் அழுகை பீரிட்டு வந்தது.

"இத்தனை வருடங்களாக இந்த வலியோடு நீ இருந்ததை நினைத்தால்தான் எனக்கு வேதனையாக இருக்கிறது" என்றான் மூர்த்தி. "காயம் ஏற்பட்டால் அதற்கு மருந்து போட வேண்டும். அதை மூடி வைத்து வலியோடு வாழ்ந்திருக்கிறாய். உன்னுடைய சங்கடம் எனக்குப் புரிகிறது. ஆனாலும் இவ்வளவு காலம் நீ இப்படி ஒரு மனச்சுமையோடு வாழ்ந்திருப்பது எனக்கு வலி ஏற்படுத்துகிறது."

"நீங்கள் ரொம்ப அற்புதமானவர். நான் மிகவும் கொடுத்து வைத்தவள்."

"எந்த ஒரு சங்கிலியும் அதன் மிகவும் பலவீனமான கணுவின் அளவுக்குத்தான் வலிமை பெற்றிருக்கும் என்று சொல்வார்கள். ஒரு கணு வலுவிழந்து விட்டால் அது சங்கிலியையே வலுவற்றதாக்கி விடும். பாதிக்கப்பட்ட கணுவை வெட்டி விட்டு மற்ற கணுக்களை இணைத்தால்தான் சங்கிலி வலுவாக இருக்கும். பல நிகழ்வுகளால் உருவாக்கப்படும் உறவுச் சங்கிலிக்கும் இது பொருந்தும்"

சில நாட்கள் கழித்து நடந்த அவர்கள் திருமண வெள்ளிவிழா விருந்தில் பங்கேற்ற செல்வகணபதியிடம் மூர்த்தி இயல்பாக, உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்தான்.



Monday, February 9, 2015

12. அடுத்த மாதம்

ந்த பாங்க் சற்று உயரத்தில் இருந்தது. கிட்டத்தட்ட அரைமாடி உயரம். நீளமான படிக்கட்டுக்கள். உட்கார்ந்து ஓய்வெடுக்கத் தூண்டும் அளவுக்கு விஸ்தாரமாக, காற்றோட்டமாக இருந்தன. "இங்கே யாரும் உட்காரக் கூடாது" என்று ஒரு பலகை எச்சரித்தது. படிக்கட்டுகளுக்கு மேல் கண்ணாடிக் கத்வுகளுக்குள் தெரிந்த பாங்க் அலுவலகத்தைப் பார்த்து அவன் பெருமூச்சு விட்டான்.

அந்தப் படிகளில் ஏற வேண்டிய சிரமத்தை நினைத்து அல்ல. படிகளில் ஏறி, உள்ளே சென்று, மானேஜரைச் சந்தித்து அவன் பேச வேண்டிய விஷயத்தை நினைத்து. இதுவரை எட்டு பாங்க்குகளுக்குப் போய் வந்தாகி விட்டது. எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியான சம்பாஷணைகள், ஒரே மாதிரியான ஆச்சரியம், ஒரே விதமான அனுதாபப் பார்வைகள், கைவிரிப்புகள், கண்ணியத் திரைக்குப் பின்னால் கைகொட்டிச் சிரிக்கும் கேலியான சிந்தனைகள். 'சுத்தப் பைத்தியக்காரனாக இருப்பான் போலிருக்கிறதே!'

இந்த பாங்க்கில் என்ன சொல்லப் போகிறார்களோ? இங்கே மட்டும் புதிதாக வேறென்ன சொல்லிவிடப் போகிறார்கள்?

அன்றைக்கு சனிக்கிழமை  என்பது அவனுக்கு நினைவில்லை. வேலைக்குப் போய்க்கொண்டிருந்தால் வார விடுமுறை தினத்தை முன் அறிவிக்கும் சனிக்கிழமை அவன் கவனத்தில் இருந்திருக்கும். எங்கோ வெளியே போய் விட்டு அப்போதுதான் உள்ளே நுழைந்த பியூன் நேரம் 11-05ஐ நெருங்கிவிட்டதைக் கண்டு பதைத்து அவசரமாக ஷட்டரை இறக்கித் தரைக்கு மேல் ஓரடி இடைவெளி விட்டு நிறுத்தினான். கதவை மூடுவதற்குள் ஒரு விநாடியில்  தன்னை முந்திக்கொண்டு குனிந்து கடைசி 'வாடிக்கையாளராக' உள்ளே நுழைந்து விட்ட இவனை எரிச்சலோடு பார்த்து ஒருமுறை சூள் கொட்டிவிட்டுப் போனான்.

கண்ணாடித் தடுப்புகளுக்குப் பின்னே திடீரென்று 'சுறுசுறுப்பு' உற்பத்தியாகியது. கவுண்ட்டர்கள் மூடப்பட்டும், பாஸ் புத்தகங்கள் விசிறியடிக்கப்பட்டும், லெட்ஜர்கள் படபடவென்று கதவுகளைப்போல் அறைந்து சாத்தப்பட்டும், இரண்டு மணி நேரக் 'கடின' உழைப்பின் ஆயாசங்கள் சோம்பல் முறிப்புகளிலும், கொட்டாவிகளிலும், 'அப்பாடா'க்களிலும் வெளிப்பட்டன. 'அக்கவுண்ட்டை'  'க்ளோஸ்' பண்ணி விட்டால் , பிறகு திங்கட்கிழமை காலை பத்து மணி வரை விடுதலை!

அவன் பரபரப்புடன் மானேஜரின் அறையை நோக்கிப் போனான், உள்ளே - நல்ல வேளையாக - மானேஜர் இருந்தார். அவருடன் இன்னும் சிலரும் இருந்தார்கள். மேஜை மீதிருந்த காப்பி முலாம் பூசிய கண்ணாடித் தம்ளர்களும், உரத்த சிரிப்புகளும் உள்ளே இருந்தவர்கள் மானேஜருக்கு நெருக்கமானவர்கள் என்று உணர்த்தின.

அவன் அறைக்கு வெளியே ஓரமாக நின்றான். பாங்க் மூடுகிற நேரத்துக்கு வந்திருக்கும் தன்னால்  மானேஜரைப் பார்க்க முடியுமா என்ற கவலை இலேசாக எழுந்தது. அவரைப் பார்த்தால் மட்டும்  என்ன பலன் கிடைத்து விடப் போகிறது என்ற ஆறுதலான சலிப்பு எழுந்து கவலையைத் தணித்தது.

மானேஜரின் நண்பர்கள் விடைபெற்று எழுந்தனர். அறை காலியாகி அடுத்தாற்போல் யாரும் வருவதற்கு முன் அவன் சடாரென்று உள்ளே நுழைந்தான். செய்து முடிக்க வேண்டிய வேலைகளை நினைத்துப் புருவத்தை நெரித்துக் கொண்டிருந்த மானேஜரின் முன் சென்று வணக்கம் தெரிவித்தான்.

"எஸ்.. என்ன வேண்டும் உங்களுக்கு?"

அவன் தொண்டையைக் கனைத்துக் கொண்டான். 'எப்படி ஆரம்பிப்பது?' என்று யோசிக்க ஆரம்பித்து, உடனேயே, தான் யோசித்து முடித்துப் பேசும் வரை காத்திருக்க அவருக்குப் பொறுமையோ, நேரமோ இருக்காது என்ற உணர்வினால் உந்தப்பட்டு அவசரமாகப் பேச ஆரம்பித்தான்.

"சார், என் பெயர் கிருஷ்ணமூர்த்தி. பி.காம் படித்திருக்கிறேன். பாஸ் பண்ணி ஐந்து வருடம் ஆகி விட்டது. இத்தனை நாட்களாக எனக்கு வேலை கிடைக்கவில்லை. என் குடும்பத்தைக் காப்பாற்ற என்னைத் தவிர வேறு யாரும் இல்லை. அப்பா ஓய்வு பெற்று உடல் நிலை தளர்ந்து வீட்டில் இருக்கிறார்.அக்கா, தம்பி, தங்கைகள் என்று நாலு பேர் உண்டு....இருங்கள். சுய தொழில் ஆரம்பிக்க நான் கடன் கேட்கப் போவதில்லை. எனக்கு இப்போதுதான் ஒரு வேலை கிடைத்திருக்கிறது..."

"வெரி கிளாட்!" என்று இடை மறித்தார் மானேஜர். 'இதைச் சொல்லி விட்டுப் போகத்தான் வந்தாயா? என்னிடம் ஏன் இதைச் சொல்ல வேண்டும்?' என்ற கேள்விகள் கண்ணியம் காரணமாக அவரது வாயிலிருந்து வெளிவராமல் கண்கள் வழியே வர முயன்றன.

"..ஒரு விசித்திரமான சூழ்நிலை. இத்தனை நாளாகக் குடும்பச் செலவுக்காக எங்கள் எல்லா உடைமைகளையும்  விற்று விட்டோம். இனி நாளைக்கு எதுவுமே இல்லை என்ற நிலை வந்தபோதுதான் இந்த 'அப்பாயின்ட்மென்ட் ஆர்டர்' வந்தது. நான் இந்த வேலயில் அடுத்த வாரம் சேர வேண்டும். அதன் பிறகு சம்பளம் வர ஒரு மாதமாகும். என் முதல் சம்பளம் என் கைக்கு வரும் வரையில் என் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்கு என்னிடம் ஒரு ரூபாய் கூட இல்லை. எல்லோரிடமும் ஏற்கனவே கடன் வாங்கியாகி விட்டது. இனிமேல் வேறு யாரிடமும் போய்க் கடன் கேட்பதற்கும் வழியில்லை."

அவனுடைய கதையைக் கேட்பதில் அவருக்கு அக்கறை இல்லாவிட்டாலும், ஆர்வம் தூண்டப்பட்டவராக, அவர் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தார்.

"கணக்குப் போட்டுப் பார்த்தேன். என் முதல் சம்பளம் கைக்கு வரும் வரை எங்கள் குடும்பச் செலவுக்குக் குறைந்தது ஐநூறு ரூபாயாவது வேண்டும். அடமானம் வைப்பதற்கு எங்களிடம் ஒரு பொருளும் இல்லை. யாரிடமும் கடன் கேட்கவும் வழியில்லை. நினைத்துப் பார்த்தால் ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது. எங்களுக்குச் சொந்தமான, விலை போகக் கூடிய, கடைசித் துரும்பு வரை அடகு வைத்தோ விலைக்கு விற்றோ  இழந்த பிறகு, 'இனி எதுவுமே இல்லை' என்று சுத்தமாகத் துடைக்கப்பட்ட நிலைக்கு வந்த சமயம், நான் எப்போதோ முயற்சி செய்து மறந்து கூடப் போய்விட்ட இந்த வேலைக்கு ஆர்டர் வந்திருக்கிறது."

மானேஜர் பொறுமையைக் கொஞ்சம் இழந்தவராக இடை மறித்தார். "வாழ்க்கையில் இது போன்ற அனுபவங்கள் சகஜம் மிஸ்டர்...உங்கள் பெயர் என்ன சொன்னீர்கள்?...எஸ்...   கிருஷ்ணமூர்த்தி! இந்த உலகத்தில் யாருமே, இல்லாமையால் அடியோடு நசித்துப்போய் விடுவதில்லை. ஏதாவது ஒரு உதவி அல்லது ஆதரவு அவ்வப்போது கிடைத்துக்கொண்டுதான் இருக்கும். பல சமயங்களில் நமது கஷ்டங்கள் தீர்க்கப்படுவதற்குக் காரணமே மேலும் பல கஷ்டங்களை அனுபவிக்க நம்மைத் தயார்ப் படுவதற்குத்தானோ என்று கூடத் தோன்றும்.... எனிவே தட் இஸ் பிஸைட் த பாயின்ட்... அண்ட் பை தி வே இன்று சனிக்கிழமை எனக்குத் தலைமேல் வேலை இருக்கிறது. நீங்கள் இன்னும் விஷயத்தைச் சொல்லவேயில்லை."

"அதற்குத்தான் வருகிறேன் சார்" என்றான் அவன் அவசரமாக. யாராவது இடையூறாக வந்து விடுவார்களோ என்று அச்சத்துடன் ஒருமுறை கண்களைச் சுழற்றிப் பார்த்தான். "நான் சொன்ன மாதிரி, என் முதல் மாதச் சம்பளம் வரும் வரை என் குடும்பத்தைக் காப்பாற்ற எனக்கு ஒரு வழியும் இல்லை. நானும் எல்லா விதத்திலும் முயன்று பார்த்து விட்டேன்...உங்கள் பாங்க்கிலிருந்து நீங்கள் எனக்கு ஐநூறு ரூபாய் கடன் கொடுத்து உதவ முடியுமா?"

இதைச் சொல்லி முடித்ததும், ஏதோ குற்றம் இழைத்து விட்டதுபோல் மானேஜரைப் பார்த்தான். அவரும் அவனைச் சற்று விசித்திரமாகப் பார்த்தார். "மிஸ்டர்! நீங்கள் படித்தவர். பாங்க்குகளைப் பற்றிய விவரங்கள், விதிமுறைகள்  உங்களுக்கு ஓரளவு தெரிந்திருக்கும். இது போன்ற கடன்கள் எதுவும் எங்களால் கொடுக்க முடியாது. சிறிய அளவில் நீங்கள் ஏதாவது தொழில் தொடங்குவதாக இருந்தால்.."

"எக்ஸ்க்யூஸ் மீ சார்" என்று அவன் இடை மறித்தான். இவர் அவன் இதுவரை சந்தித்த மற்ற பாங்க் மானேஜர்களீடமிருந்து வேறுபட்டவராக இருக்கிறார். அவன் நிலைமையைப் புரிந்து கொண்டிருக்கிறார். கேலி செய்யவில்லை. பேச்சில் அலட்சியமோ கோபமோ இல்லை. அமைதியாகத் தமது நிலையை விளக்குகிறார். இதுவே அவனுக்குத் தெம்பூட்டியது.

"பிஸினஸில் ஒருவருக்கு லாபம் வருமா வராதா என்ற நிச்சயமற்ற நிலைமையில் கூட அவருக்குக் கடன் கொடுக்கிறீர்கள். இதோ என்னுடைய அப்பாயின்ட்மென்ட் ஆர்டர். உறுதியான வேலை. நிச்சயமான சம்பளம். இந்தச் சம்பளத்திலிருந்து என்னால் கண்டிப்பாக உங்கள் கடனை அடைக்க முடியும். இதை ஒரு உறுதிப்பாடாக எடுத்துக்கொண்டு நிங்கள் எனக்குக் கடன் கொடுத்து உதவக்கூடாதா?"

"நோ! நோ!..உங்களுக்குப் புரியவில்லை. பாங்க்கின் விதிமுறைகள் நீங்கள் சொல்கிற லாஜிக்குக்கு உட்பட்டவை இல்லை...பை தி வே, நான் உங்களை ஒன்று கேட்கலாமா? இந்த வேலை உங்களுக்குக் கிடைக்காமல் போயிருந்தால் நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்?"

அவன் ஒரு சில விநாடிகள் அவரை உற்றுப் பார்த்து விட்டுத் தன் சட்டைப் பையிலிருந்து ஒரு காகிதத்தை எடுத்து அவரிடம் காட்டினான். "இதோ பார்த்தீர்களா? இது 'பினோபார்பிடான்' என்ற தூக்க மாத்திரைக்கான பிரிஸ்கிரிப்ஷன். என் அப்பாவுக்கு டாக்டர் எழுதிக் கொடுத்தது. இதை நாலைந்து கடைகளில் காட்டித் தேவையான அளவுக்குத் தூக்க மாத்திரைகளை வாங்கி எல்லோரும் சாப்பிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருப்போம். மாத்திரை வாங்கப் பணம் ஏது என்று கேட்காதீர்கள்! எனக்கு வேலை கிடைத்தால் திருப்பதி உண்டியலில் சேர்ப்பதாகப் பிரார்த்தித்துக்கொண்டு என் அம்மா அவ்வப்போது உண்டியலில் போட்டுச் சேர்த்து  வைத்திருக்கிற பணத்தைப் பயன்படுத்திக் கொண்டிருப்போம். ஏன், இப்போது கூடப் பல பாங்க்குகளில் கடன் கேட்டுப் பார்த்து அவர்கள் எல்லோரும் கை விரித்த பிறகுதான் உங்களிடம் வந்திருக்கிறேன். இப்போது நீங்களும் இல்லையென்று சொல்லி விட்டால், இந்த பிரிஸ்கிரிப்ஷன் தான் எங்களைக் 'காப்பாற்றப்' போகிறது.

மானேஜரின் முகம் ஒரு மாதிரி ஆகி விட்டது. இவனிடம் ஏன் இந்தக் கேள்வியைக் கேட்டோம் என்று நினைத்திருப்பாரோ என்னவோ! ஒரு நிமிடம் ஏதோ யோசனை செய்து விட்டு அப்புறம் சொன்னார். "மிஸ்டர் கிருஷ்ணமூர்த்தி! நீங்கள் கேட்கிற உதவியை இந்த பாங்க்கின் மானேஜராக என்னால் செய்ய முடியாது. பட் ஐ வாட் டு ஹெல்ப் யூ.  இன்று சாயந்திரம் ஆறு மணிக்கு என் வீட்டுக்கு வாருங்கள். உங்களுக்கு இந்த உதவியை என்னால் தனிப்பட்ட முறையில் செய்ய முடியும். பாங்க்கில் கடன் வாங்கினால் எப்படித் திருப்பிச் செலுத்திவீர்களோ அது போல இந்தக் கடனையும் மாதத் தவணைகளில் கட்டி விடுங்கள்!"

அவன் அவரை நம்ப முடியாத பிரமிப்புடன் பார்த்தான். அளவு கடந்த வியப்பினாலும், எதிபாராத மகிழ்ச்சியினாலும் திடீரென்று வாயடைத்துப்போய்ப் பேச்சு வர மறுத்தது."சார்!...நான்..ஓ!..கொஞ்சம் கூட இதை எதிர்பார்க்கவில்லை. உங்களுக்கு நான் எவ்வளவு நன்றி தெரிவித்தாலும் போதாது...தாங்க் யூ ஸோ மச் சார் ரியலி சார் நீங்கள் ஒரு..."

அவருடைய வீட்டு விலாசத்தை வாங்கிக்கொன்டு அவன் விடை பெற்றுக்கொண்டான்.
வன் வேலைக்குப் போக ஆரம்பித்து மூன்று மாதங்கள் ஆகி விட்டன. பாங்க் மானேஜர் கடனாகக் கொடுத்த பணத்தை வைத்து முதல் மாதச் செலவுகளைச் சமாளித்து விட்டான். கடன் தொகையான ஐநூறு ரூபாயை வட்டியுடன் சேர்த்து ஆறு மாதத் தவணைகளில் கொடுப்பதாக ஒப்புக் கொண்டிருந்தான்.

ஆனால் முதல் மாதம் அவனால் பணம் கொடுக்க முடியவில்லை. முதல் மாதச் செலவுகள் அதிகமாகி விட்டதால், வேறு சில சிறிய கடன்கள் சேர்ந்து விட்டன. பாங்க் மானேஜரை நேரில் பார்த்து விளக்கியபோது அவர் பெருந்தன்மையுடன் அவனது விளக்கத்தை ஏற்றுக்கொண்டார்.

இப்போது இரண்டாவது மாதச் சம்பளம் வந்து விட்டது. இந்த மாதமும் ஒரு சிக்கல். அவன் தனக்கு மிக அவசியமாகச் சில உடைகள் வாங்கும்படி நேர்ந்து விட்டதால் மறுபடி பற்றாக்குறை ஏற்பட்டு விட்டது.

இந்த முறை அவரை நேரில் பார்த்துச் சொல்ல அவனுக்குச் சங்கடமாக இருந்தததால் தொலைபேசியில் தனது நிலையைச் சொல்லி வருந்தினான். அவருக்குச் சற்று  ஏமாற்றமாக இருந்தாலும் அவனைக் குறை கூறவில்லை.

மூன்றாவது மாதம் நிச்ச்யம் அவருக்குப் பணம் கொடுத்து விட வேண்டும் என்றுதான் இருந்தான். ஆனால் மீண்டும் சில பிரச்னைகள்! அவன் அப்பாவுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதால் மருத்துவச் செலவுகள் கணிசமான தொகையை விழுங்கி விட்டன. இந்த முறை அவரிடம் பேச அவனுக்குத் துணிவு வரவில்லை. ஒரு கடிதம் மட்டும் எழுதினான்.

ன்றைக்கு அவன் சற்றும் எதிர்பாராத விதமாக பாங்க் மானேஜர் அவன் வீட்டுக்கு  வந்து விட்டார்.

இப்போது அவர் கடன் கொடுத்து ஆறு மாதங்களுக்கு மேல் ஆகி விட்டது. இன்னும் ஒரு தவணை கூட அவன் திருப்பிச் செலுத்தவில்லை. மாதாமாதம் ஏதாவது செலவு வந்து குறுக்கிட்டு விடுகிறது. ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி வருந்துவது அவனுக்கு தர்மசங்கடமாக இருந்ததால், கடந்த இரண்டு மாதங்களாக அவன் அவருக்குக் கடிதம் கூட எழுதவில்லை.

ஆனாலும் இப்போது கூட அடுத்த மாதம் அவருக்குக் கண்டிப்பாகப் பணம் கொடுத்து விட வேண்டும் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தான். ஆனால் அதற்குள் அவரே வந்து விட்டார்.

"வாருங்கள் சார். உட்காருங்கள்" என்று அவன் சங்கடத்தை மறைத்துக்கொண்டு அவரை வரவேற்றான்.

காப்பி கொடுத்து உபசரித்த பிறகு அவன் தயக்கத்துடன் ஆரம்பித்தான்.  :ஐ ஆம் ஸோ சாரி!"

அவர் அவனைப் பேச அனுமதிக்காமல், "மிஸ்டர் கிருஷ்ணமூர்த்தி! ரேடியோ, சோஃபா செட் எல்லாம் எப்போது வாங்கினீர்கள்?"  என்றார்.

ரேடியோ போன மாதம், சோஃபா செட் அதற்கு முந்தின மாதம். எல்லாம் தவணைதான் சார். இந்தத் தவணைத் தொகைகளே நிறைய ஆகி விடுவதால்தான் உங்கள் பணம் அப்படியே நிற்கிறது... அடுத்த மாதம்...கண்டிப்பாக.."

"அதாவது அடுத்த மாதம் நீங்கள் தவணை முறையில் டெலிவிஷன் வாங்காமல் இருந்தால்!"

அவன் மௌனமாக இருந்தான்.

சற்று நேரம் கழித்து அவர் கேட்டார். "நான் ஒன்று கேட்கிறேன். நீங்கள் என்னிடம் பாங்கிலிருந்து கடன் கொடுக்க முடியுமா என்று கேட்டுத்தானே வந்தீர்கள்? ஒருவேளை பாங்க் விதிமுறைகளின்படி கடன் கொடுப்பது சாத்தியமாக இருந்து நான் பாங்க்கிலிருந்தே உங்களுக்குக் கடன் கொடுத்திருந்தால், பாங்க்குக்குக் கட்ட வேண்டிய தவணைகளைக் கட்டாமல் இருந்திருப்பீர்களா?"

அவன் மௌனமாக இருந்தான்.

அவர் விடவில்லை. "அப்போது வேறு என்ன செலவு இருந்தாலும் பாங்க்குக்குக் கட்ட வேண்டிய தவணைகளை ஒழுங்காகக் கட்டியிருப்பிர்கள் இல்லையா?"

அவன் அதற்கு மேலும் மௌனமாக இருக்க முடியாமல் 'ம்ம்ம்.' என்று முனகினான்.

அதற்குப் பிறகு சிறிது நேரம் இருவரும் பேசவில்லை.



Sunday, December 2, 2012

11. தேவை ஒரு காரணம்


தினமும் எப்படியோ தாமதமாகி விடுகிறது.

மூர்த்திக்கு அலுவலகம் பத்து மணிக்குத்தான். மெதுவாக எழுந்து, குளித்து, சாப்பிட்டு நேரத்துக்கு அலுவலகத்துக்குப் போவது சுலபமானதாகத்தான் இருக்க வேண்டும்.

ஆனால் அப்படி இல்லை.

தினமும் அவன் அலுவலகத்துக்குள் நுழையும்போது நேரம் 10-10 அல்லது 10-15 ஆகி விடுகிறது.

இத்தனைக்கும் மூர்த்தி அலுவலகத்துக்குப் போவது அவனுடைய ஸ்கூட்டரில்தான். அதனால் பஸ்ஸுக்காகக் காத்து நின்று தாமதம் ஏற்படுவது என்பதும் இல்லை.

மூர்த்தி தினமும் நினைத்துக் கொள்வான் - நாளை முதல் தாமதமாகப் போகக்கூடாது என்று. ஆனால் அந்த 'நாளை' இன்னும் வரவில்லை!

நினைத்துப் பார்த்தால் அவனுக்கு வியப்பாகத்தான் இருக்கிறது. காலையில் ஆறரை மணிக்கு எழுந்து நிதானமாக எட்டு மணிக்குக் குளிக்கப்போகும்போது, 'இன்னும் நிறைய நேரம் இருக்கிறது. இன்றைக்குச் சீக்கிரம் போய் விடலாம்' என்றுதான் தோன்றும்.

ஆனால் அடுத்த ஒன்றரை மணி நேரத்துக்குள் ஏதாவது நிகழ்ந்து விடுகிறது.

யாராவது நண்பர்கள், விருந்தாளிகள் வருவார்கள். அல்லது எதையாவது தேட ஆரம்பித்து,  போவதே தெரியாமல் நேரம் பறந்து விடும். அடித்துப் பிடித்து அலுவலகம் சென்றடைவதற்குள் மணி பத்தைத் தாண்டி விடும்.

'தாமதமாக வருவது என்பது உனக்கு ஒரு பழக்கமாகப் போய் விட்டது. பழக்கங்களைக் கை விடுவது கடினம்' என்பார் அவனுடைய அலுவலகத்தின் முந்தைய நிர்வாகி சிரித்துக்கொண்டே.

இப்போது அவர் இல்லை.  அவர் இடத்தில் புதிதாக வந்திருப்பவருக்கு மிகவும் பிடித்த ஆங்கில வார்த்தை 'டிஸிப்ளின்.' பிடிக்காத வார்த்தை (எல்லா மொழிகளிலும்) 'நகைச்சுவை.' அவர் அந்த அலுவலகத்துக்கு வந்த புதிதில், அவர் 'டிஸிப்ளின்' 'டிஸிப்ளின்' என்று திரும்பத் திரும்பச் சொன்னதைக் கேட்டு, ஒருமுறை மூர்த்தி விளையாட்டாக, " 'கடமை, கண்ணியம், கட்டுப்பாடு' என்று சொன்ன அண்ணாவின் கடைசித் தம்பியா சார் நீங்கள்? அவர் சொன்ன மூன்று வார்த்தைகளில் கடைசி வார்த்தையை மட்டும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறீர்களே?" என்று சொல்லப்போக, அலுவலகத்தில் அரசியல் பேசுவது, அதிகப்பிரசங்கித்தனம் செய்வது  ஆகிய இரண்டு கட்டுப்பாடு மீறிய செயல்களை அவன் செய்து விட்டதாக அவர் சுட்டிக் காட்டினார்.

அவர் நிர்வாகத்தில் தாமதமாக வருவது ஒரு பெரும் குற்றமாகக் கருதப்பட்டது. ஆயினும், மூர்த்தியால் அவ்வளவு சுலபமாகத் தன் பழக்கத்தை மாற்றிக்கொள்ள முடியவில்லை.

தாமதமாக வந்த ஒவ்வொரு நாளும் நிர்வாகியின் முன் போய் நின்று காரணம் சொல்ல வேண்டியிருந்தது.

இன்றைக்கும் தாமதமாகி விட்டது. அநேகமாக எல்லா விதமான இயல்பான காரணங்களையும் முன்பே சொல்லியாகி விட்டது.

'இன்று ஒருநாள் ஒரு நம்பத்தக்க காரணத்தைச் சொல்லி விட வேண்டும். நாளை முதல் நிச்சயம் தாமதமாக வரப்போவதில்லை' என்று முடிவு செய்து கொண்டான்.

நிர்வாகியின் முன் நின்றபோது ஒரு அருமையான காரணம் மனதில்  தோன்றி விட்டது. "சார்! சொன்னால் நம்ப மாட்டீர்கள். இன்றைக்கு நான் ஒன்பதே முக்கால் மணிக்கெல்லாம் அலுவலகத்தில் இருந்திருக்க வேண்டும். பாதி தூரம் வந்ததும்தான் தெரிந்தது - மேஜை டிராயர் சாவியை வீடிலேயே மறந்து வைத்து விட்டேன் என்று. மறுபடியும் வீட்டுக்குப் போய் எடுத்து வந்ததில்  பத்து நிமிடம் தாமதமாகி விட்டது."

நிர்வாகி ஏதும் சொல்லத் தோன்றாமல் தலையசைத்தார்.

மூர்த்தி வெற்றிக் களிப்புடன் தன் இருக்கைக்குப் போனான். சாவியை எடுப்பதற்காக பேண்ட் பைக்குள் கை விட்டதும்தான், மேஜை சாவியை வீட்டிலேயே வைத்து விட்டு வந்தது தெரிந்தது!

Saturday, November 17, 2012

10. நாளைய செய்தி இன்றே!

பொதுவாகவே எதையும் உடனே நம்பி விடாதாவன் நான். எதையுமே தீர விசாரித்து விட்டுத்தான் நான் ஒரு முடிவுக்கு வருவேன்.

அதனால்தான் பிரபல மாஜிக் நிபுணர் சுரேந்திராவின் சில சாதனைகளை என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை.

தற்செயலாக அவரை ஒரு பார்ட்டியில் சந்தித்தபோது அவரது அறிமுகம் எனக்குக் கிடைத்தது. நான் ஒரு பத்திரிகையாளன் என்று அறிந்ததும், என்னுடன் நெருக்கமாகப் பழகுவதில் அவர் ஆர்வம் காட்டினார்.

அந்தப் பார்ட்டிக்குப் பிறகும் எங்கள் தொடர்பு நீடித்தது. 

சில நாட்கள் பழக்கத்துக்குப் பிறகு, ஒருநாள் சற்று உரிமை எடுத்துக் கொண்டு அவரிடம் கேட்டேன். 

"உண்மையைச் சொல்லுங்கள் சுரேந்திரா. உங்கள் சாதனைகள் எல்லாம் மக்களைக் கவர்வதற்காக நீங்கள் செய்கிற சின்ன ஏமாற்று வேலைதானே?" ('சின்ன' என்ற பெயர்ச்சொல் சுரேந்திரா அதிகம் புண்பட்டு விடக்கூடாது என்பதற்காக என்னால் அனிச்சையாகச் சேர்க்கப்பட்டது!)

சுரேந்திராவின் முகம் சட்டென்று வாடி விட்டது. 

"ராகவ், நீங்கள் இப்படிக் கேட்பீர்கள் என்று நான் எதிர்பர்க்கவில்லை. என்னுடைய 'மாஜிக் காட்சிகளில்' நான் செய்பவை எல்லாம் தந்திரங்கள்தான். அதைத் தவிர, தனிப்பட்ட முறையில் நான் ஒரு கிளார்வாயன்ட். நீங்கள் எதை ஏமாற்று வேலை என்று சொல்கிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை" என்றார் வருத்தமும் கோபமும் கலந்த குரலில்.

" 'கிளார்வாயன்ட்' என்றால்...?"

"பின்னால் நடக்கப் போகும் சில விஷயங்களை மனதால் உணர்ந்து கூறும் ஆற்றல்" என்று 'கிளார்வாயன்ஸியை' வரையறுத்தார் சுரேந்திரா.

நான் பெரிதாகச் சிரித்து, "கடைசியில் நீங்கள் ஜோசியத்தையும் விட்டு வைக்கவில்லையா?" என்றேன்.

"ஜோதிடக்கலை என்பது வேறு. அது ஒருவகை விஞ்ஞானம். அதற்கென்று சில விதிகள், வரைமுறைகள், சூத்திரங்கள் எல்லாம் இருக்கின்றன. ஜோதிடத்தை ஒரு பாடமாக, ஆர்வமுள்ளவர்கள்  யார் வேண்டுமானாலும் படித்து ஒரு ஜோதிடர் ஆக முடியும். மற்ற துறைகளில் இருப்பதுபோல் ஜோதிடத்திலும் மிகத் திறமையானவர்கள் என்று ஒரு சிலரே இருப்பார்கள். 

"ஆனால் 'வரும் பொருள் உரைத்தல்' என்று சொல்லக் கூடிய கிளார்வாயன்ஸி இவ்வுலகில் விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலருக்கு மட்டுமே இறைவன் அளித்திருக்கும் ஒரு வரம். ஒருவருக்கு இயல்பாகவே அமைந்தாலொழிய இந்த ஆற்றலைப் பெறுவது என்பது பெரும்பாலும் இயலாத ஒரு செயல்.

"தற்காலத்தில், கிளார்வாயன்ஸியைக் கூடக் கற்பிக்கிறோம் என்று சிலர் இறங்கியிருக்கிறார்கள். இவ்வாறு கற்றுக் கொடுக்க முனைபவர்களுக்கே இந்த ஆற்றல் இருக்கிறதா என்பது கேள்விவிக்குறிதான்!" என்று சுருக்கமாக(!) ஒரு விரிவுரை ஆற்றினார் சுரேந்திரா.

"உங்களுக்கு இந்த ஆற்றல் இருக்கிறது என்பதை எப்படிக் கண்டறிந்தீர்கள்?"

"சில நிகழ்ச்சிகள் அவை நடப்பதற்குச் சிறிது காலம் முன்பே என் மனதில் தோன்றியிருக்கின்றன என்ற உணர்வு எனக்குச் சிலமுறை ஏற்பட்டது. அதன் பிறகு என் மனதில் தோன்றும் சில குறிப்பிட்ட நிகழ்வுகளை ஒரு டயரியில் குறித்து வைத்துக் கொள்ள ஆரம்பித்தேன். சிறிது காலம் கழித்து அவை உண்மையாகவே நிகழ்ந்தபோது என் ஆற்றலை உறுதிப்படுத்திக் கொண்டேன். அதன் பிறகு என் ஆரூடங்களை வெளிப்படையாகச் சொல்ல ஆரம்பித்தேன்."

"குறிப்பாக நீங்கள் சொன்னபடி நடந்த சில விஷயங்கள்?"

"ராஜீவ் காந்தி மரணம், தேவ கவுடா பதவி இழந்தது..."

"மன்னியுங்கள். இது போன்ற பல அரசியல் நிகழ்வுகளை, பல்வகையான ஜோதிட முறைகளின்படி கண்டறிந்து சொன்னதாகக் கூறிக் கொள்பவர்கள் பலர் இருக்கிறார்கள்."

"சரி. நான் ஒரு பந்தயத்துக்கு ஒப்புக் கொள்கிறேன். இன்று தேதி பத்து. வரும் இருபதாம் தேதி 'ஹிந்து' பத்திரிகையின் தலைப்புச் செய்தி எதுவாக இருக்கும் என்பதை ஒரு பேப்பரில் எழுதி உங்கள் முன்பே ஒரு கவரில் போட்டு சீல் செய்து கொடுக்கிறேன். இருபதாம் தேதி காலை ஹிந்து பத்திரிகையின் தலைப்புச் செய்தி எது என்று பார்த்து விட்டு, அதன் பிறகு இந்தக் கவரைத் திறந்து பார்த்து, இரண்டும் ஒன்றாக இருந்தால் அன்று இரவு செம்பியன் ஹோட்டலில் எனக்கு ஒரு பெரிய விருந்து கொடுப்பீர்களா?"

பந்தயத்தை ஏற்றுக் கொண்டேன்.

"இருபதாம் தேதி நடக்கப் போகும், இந்தப் பேப்பரில் எழுதாத இன்னொரு நிகழ்வை உங்களுக்கு நான் இப்போது சொல்லப் போகிறேன்" என்றார் சுரேந்திரா

"என்ன அது?" என்றேன்

"இருபதாம் தேதி இரவு செம்பியன் ஹோட்டலில் நீங்கள் எனக்கு ஒரு பெரிய விருந்து கொடுக்கப் போகிறீர்கள்" என்றார் அவர் சிரித்தபடி.

அடுத்த சில நிமிடங்களில் அவர் கொடுத்த சீல் வைத்த கவருடன் வெளியேறினேன்.

ருபதாம் தேதி காலை ஹிந்து பத்திரிகையில் மட்டுமல்ல எல்லா பத்திரிகைகளிலும் ஒரே செய்திதான் வந்திருந்தது. டில்லிக்கு அருகே 19ஆம் தேதி நள்ளிரவு நடந்த கோரமான ரயில் விபத்தைப் பற்றிய செய்திதான் அது.

இந்தச் செய்தியை சுரேந்திராவால் நிச்சயம் 'முன் உணர்ந்திருக்க' முடியாது என்ற நிச்சயத்துடன் நான் பாதுகாப்பாக வைத்திருந்த சுரேந்திராவின் 'ஆரூடம்' அடங்கிய சீல் வைத்த கவரைப் பிரித்துப் படித்தேன்.

என்னால் நம்ப முடியவில்லை. ரயில் விபத்து குறித்த செய்தியைத்தான் சுரேந்திரா எழுதியிருந்தார்!

சுரேந்திரா பந்தயத்தில் ஜெயித்து விட்டார். அவர் எழுதிக் கொடுத்த ஆரூடம் பலித்து விட்டது. 

ஆனால் அவர் வாயால் சொன்ன ஆரூடம் பலிக்கவில்லை. என்னால் அவருக்கு இருபதாம் தேதி இரவு செம்பியன் ஹோட்டலில் விருந்து கொடுக்க முடியவில்லை - இரண்டு காரணங்களால்.

முதல் காரணம், முதல் நாள் இரவு நடந்த ஒரு தீ விபத்தில் செம்பியன் ஹோட்டல் பெரும் சேதம் அடைந்து தற்காலிகமாக முடப்பட்டு விட்டது.

இரண்டாவது காரணம், 19-ஆம் தேதி இரவு சுரேந்திரா மாரடைப்பால் இறந்து போய் விட்டார்.