Sunday, December 2, 2012

11. தேவை ஒரு காரணம்


தினமும் எப்படியோ தாமதமாகி விடுகிறது.

மூர்த்திக்கு அலுவலகம் பத்து மணிக்குத்தான். மெதுவாக எழுந்து, குளித்து, சாப்பிட்டு நேரத்துக்கு அலுவலகத்துக்குப் போவது சுலபமானதாகத்தான் இருக்க வேண்டும்.

ஆனால் அப்படி இல்லை.

தினமும் அவன் அலுவலகத்துக்குள் நுழையும்போது நேரம் 10-10 அல்லது 10-15 ஆகி விடுகிறது.

இத்தனைக்கும் மூர்த்தி அலுவலகத்துக்குப் போவது அவனுடைய ஸ்கூட்டரில்தான். அதனால் பஸ்ஸுக்காகக் காத்து நின்று தாமதம் ஏற்படுவது என்பதும் இல்லை.

மூர்த்தி தினமும் நினைத்துக் கொள்வான் - நாளை முதல் தாமதமாகப் போகக்கூடாது என்று. ஆனால் அந்த 'நாளை' இன்னும் வரவில்லை!

நினைத்துப் பார்த்தால் அவனுக்கு வியப்பாகத்தான் இருக்கிறது. காலையில் ஆறரை மணிக்கு எழுந்து நிதானமாக எட்டு மணிக்குக் குளிக்கப்போகும்போது, 'இன்னும் நிறைய நேரம் இருக்கிறது. இன்றைக்குச் சீக்கிரம் போய் விடலாம்' என்றுதான் தோன்றும்.

ஆனால் அடுத்த ஒன்றரை மணி நேரத்துக்குள் ஏதாவது நிகழ்ந்து விடுகிறது.

யாராவது நண்பர்கள், விருந்தாளிகள் வருவார்கள். அல்லது எதையாவது தேட ஆரம்பித்து,  போவதே தெரியாமல் நேரம் பறந்து விடும். அடித்துப் பிடித்து அலுவலகம் சென்றடைவதற்குள் மணி பத்தைத் தாண்டி விடும்.

'தாமதமாக வருவது என்பது உனக்கு ஒரு பழக்கமாகப் போய் விட்டது. பழக்கங்களைக் கை விடுவது கடினம்' என்பார் அவனுடைய அலுவலகத்தின் முந்தைய நிர்வாகி சிரித்துக்கொண்டே.

இப்போது அவர் இல்லை.  அவர் இடத்தில் புதிதாக வந்திருப்பவருக்கு மிகவும் பிடித்த ஆங்கில வார்த்தை 'டிஸிப்ளின்.' பிடிக்காத வார்த்தை (எல்லா மொழிகளிலும்) 'நகைச்சுவை.' அவர் அந்த அலுவலகத்துக்கு வந்த புதிதில், அவர் 'டிஸிப்ளின்' 'டிஸிப்ளின்' என்று திரும்பத் திரும்பச் சொன்னதைக் கேட்டு, ஒருமுறை மூர்த்தி விளையாட்டாக, " 'கடமை, கண்ணியம், கட்டுப்பாடு' என்று சொன்ன அண்ணாவின் கடைசித் தம்பியா சார் நீங்கள்? அவர் சொன்ன மூன்று வார்த்தைகளில் கடைசி வார்த்தையை மட்டும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறீர்களே?" என்று சொல்லப்போக, அலுவலகத்தில் அரசியல் பேசுவது, அதிகப்பிரசங்கித்தனம் செய்வது  ஆகிய இரண்டு கட்டுப்பாடு மீறிய செயல்களை அவன் செய்து விட்டதாக அவர் சுட்டிக் காட்டினார்.

அவர் நிர்வாகத்தில் தாமதமாக வருவது ஒரு பெரும் குற்றமாகக் கருதப்பட்டது. ஆயினும், மூர்த்தியால் அவ்வளவு சுலபமாகத் தன் பழக்கத்தை மாற்றிக்கொள்ள முடியவில்லை.

தாமதமாக வந்த ஒவ்வொரு நாளும் நிர்வாகியின் முன் போய் நின்று காரணம் சொல்ல வேண்டியிருந்தது.

இன்றைக்கும் தாமதமாகி விட்டது. அநேகமாக எல்லா விதமான இயல்பான காரணங்களையும் முன்பே சொல்லியாகி விட்டது.

'இன்று ஒருநாள் ஒரு நம்பத்தக்க காரணத்தைச் சொல்லி விட வேண்டும். நாளை முதல் நிச்சயம் தாமதமாக வரப்போவதில்லை' என்று முடிவு செய்து கொண்டான்.

நிர்வாகியின் முன் நின்றபோது ஒரு அருமையான காரணம் மனதில்  தோன்றி விட்டது. "சார்! சொன்னால் நம்ப மாட்டீர்கள். இன்றைக்கு நான் ஒன்பதே முக்கால் மணிக்கெல்லாம் அலுவலகத்தில் இருந்திருக்க வேண்டும். பாதி தூரம் வந்ததும்தான் தெரிந்தது - மேஜை டிராயர் சாவியை வீடிலேயே மறந்து வைத்து விட்டேன் என்று. மறுபடியும் வீட்டுக்குப் போய் எடுத்து வந்ததில்  பத்து நிமிடம் தாமதமாகி விட்டது."

நிர்வாகி ஏதும் சொல்லத் தோன்றாமல் தலையசைத்தார்.

மூர்த்தி வெற்றிக் களிப்புடன் தன் இருக்கைக்குப் போனான். சாவியை எடுப்பதற்காக பேண்ட் பைக்குள் கை விட்டதும்தான், மேஜை சாவியை வீட்டிலேயே வைத்து விட்டு வந்தது தெரிந்தது!

No comments:

Post a Comment