Monday, August 15, 2016

19. ஓரிரு சம்பவங்கள்

 பாலகிருஷ்ணன் காலையில் கண் விழித்ததும் வழக்கம் போல் நேர்ப்பார்வையில் விழும்படி மாட்டப்பட்டிருந்த அம்பாளின் படத்தைப் பார்த்தார். பிறகு சுவர்க்கடிகாரத்தைப் பார்த்தார். சொல்லி வைத்தாற்போல் மணி 6. கடந்த பல வருடங்களாக இந்த 6 மணி சந்திப்பு தவறாமல் நடந்து வருகிறது. 

கடிகாரத்துக்குக் கீழே மாட்டப்பட்டிருந்த காலண்டரின் மீது பார்வை தன்னிச்சையாகப் படிந்தது. தேதி 24. இருபத்து நாலு...ஏதோ நெருடுகிற மாதிரி ஒரு உணர்வு. அது என்னவென்று புரிந்து கொள்ளும் முன்பே அவர் படுக்கையிலிருந்து எழுந்து விட்டார். நேராக வாசற்கதவை நோக்கி நடந்... நின்றார். கதவுக்கடியில் பேப்பர் இல்லை.

ஐந்தரை மணிக்கெல்லாம் பேப்பர் வந்து விடுமே! இன்று என்ன? சற்றுமுன் இலேசாகத் தலைகாட்டிய உள்ளுணர்வு இப்போது மனக்கதவை இடித்துத் திறந்து கொண்டு வெளிப்பட்டது. மை காட்! இன்று 24ஆம் தேதி. இன்று பந்த்!

அவரை திடீரென்று ஒரு சோர்வு பற்றியது. இன்று அவரது நேர அட்டவணைக்கும் கதைவடைப்புதான். சாப்பாடு ஒரு பிரச்னை. முதலில் காப்பி போட்டுக் குடிக்கலாம். பிறகு யோசிக்கலா...ஓ! மை குட்னெஸ்! இன்று பால் கூட வரவில்லை. வராது. பால் வழங்கும் அரசு நிறுவனம் இன்று பால் வழங்கப் போவதில்லை என்று நேற்றே அறிவித்து விட்டது. சென்ற முறை நடந்த பந்த்தின்போது நடந்த வன்முறைகளில் அவர்கள் லாரிகள் சேதமாகி விட்டனவாம்.

அந்தப் பகுதியில் பால்காரர்கள் என்று யாரும் வருவதாகத் தெரியவில்லை. விஞ்ஞானமும், தொழில் நுட்பமும் வசதிகளைத் தருகின்றனவோ இல்லையோ, பழைய அமைப்புகளைத் தரை மட்டமாகி விடுகின்றன. 

அடுப்பைப் பற்ற வைத்து வெந்நீர் போட்டு டிகாக் ஷன் தயாரித்துச் சர்க்கரை போட்டுக் குடித்தார். கசப்பாக இருந்தாலும் காப்பியின் மணம் ஒரு புத்துணர்ச்சியைத் தந்தது. 

பேப்பர் இல்லாததால் மீண்டும் போய்க் கட்டிலில் படுத்துக் கொண்டார். மனதில் குருட்டு யோசனைகள் பல திசைகளிலும் ஓடின.

'வயதான காலத்தில் தனியே இருப்பது ஒரு கொடுமைதான். ஆனால் நான் தனியே இல்லை. என் மகளுடைய  குடும்பத்துடன் இருக்கிறேன். மகள்,  குடும்பத்துடன் அரசாங்கத் செலவில் உல்லாசப் பயணம் போய் விட்டாள். மாப்பிள்ளையின் விடுமுறைப் பயணச் சலுகையில் (எல்.டி.சி) மாமனாரையும் அழைத்துச் செல்ல விதிமுறைகள் இடம் கொடுக்கவில்லை. ஒரே மகளைப் பெற்று மாப்பிளையுடன் வாழும் மாமனார்களுக்குச்  சலுகை காட்டி இருக்கலாம் அரசாங்க விதிமுறைகள்! ஆனால் அப்படி இருந்தாலும் என்னால் போயிருக்க முடியுமா? டாக்டர் எனக்கு இருப்பதாகச் சொல்லும் வியாதிகளின் பட்டியல் அவர் எழுதிக் கொடுத்த மருந்துச் சீட்டை விட நீளமாக இருக்கிறதே!'

பேத்தியின் நினைவு வந்தது.

தீப்தி (என்ன ஒரு பெயர்! கேட்டால் மாடர்னாக இருக்க வேண்டும் என்பார்கள். நான் அழகாக மஹேஸ்வரி என்று வைக்கச் சொன்னேன் - அம்பாளின் பெயர்! கேட்கவில்லை.) இப்போது தீப்தி என்ன செய்து கொண்டிருப்பாள்? இப்போது அவர்கள் சிம்லாவில் இருப்பார்கள். குழந்தைக்குக் குளிர் தாங்குமோ என்னவோ! குழந்தைக்கு யார் கதை சொல்வார்கள்?

இன்று சாப்பாட்டுக்கு என்ன வழி? மகள்  ஊருக்குப் போனதிலிருந்து 'திருநெல்வேலி மெஸ்'ஸில்தான்  சாப்பிட்டு வருகிறார். (அது என்ன 'திருநெல்வேலி மெஸ்', 'திருநெல்வேலி அல்வா' என்கிற மாதிரி? இப்படியெல்லாம் ஏதாவது ஒரு ஊர்ப்பெயரை வைத்து ஏமாற்றுவது வழக்கமாகி விட்டது!) 

இன்று மெஸ் திறக்கிறானோ என்னவோ? திறக்காவிட்டால் கொலைப்பட்டினிதான். 'ஒரு சாதம் வடிக்கவாவது கற்றுக்கொள்ளுங்கள்' என்று சாவித்திரி எத்தனையோ தடவை சொல்லியிருக்கிறாள். அப்போதெல்லாம் ஆண்பிள்ளைத் திமிரில் அதெல்லாம் அனாவசியம் என்று ஒதுக்கி விட்டார்.

ம்.  அவளும் போய்ச் சேர்ந்து விட்டாள். இப்போது கூட கண்ணுக்குத் தெரியாமல் எங்காவது அந்தரத்தில் நின்று கொண்டு, "நான் எவ்வளவோ அடித்துக்கொண்டேன். கேட்டீர்களா?" என்று சொல்லிக் காட்டிக்கொண்டிருக்கிறாளோ என்னவோ!

பத்து மணிக்கு மெஸ்ஸுக்குப் போய்ப் பார்க்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு கொஞ்சம் கண்ணயர்ந்தார்.

மாதங்கி பஸ்ஸிலிருந்து இறங்கியபோது மணி ஒன்பதரை ஆகியிருந்தது.  பஸ்ஸை ஊருக்கு வெளியிலேயே எங்கேயோ நிறுத்தி விட்டார்கள். இன்று எதோ பந்த்தாம்! அதற்காக வெளியூரிலிருந்து வரும் பஸ்களை ஊருக்குள் வர விடாமல் தடுத்து நிறுத்த வேண்டுமா என்ன?

இதுபோல் மற்றவர்களுக்குத் தொல்லை கொடுப்பவர்களை மூட்டைப்பூச்சிகள் நிறைந்த கட்டிலில் படுக்க வைத்து எழுந்து போக முடியாமல் இறுக்கமாகக் கட்டிப்போட வேண்டும் என்று நினைத்தாள். தனக்கு இப்படிப் புதுமையாக (கோணங்கித்தனமாக!) யோசனைகள்  தோன்றுவதை நினைத்தபோது உடனே சிரிப்பு வந்தது. மனச் சலிப்பைச் சற்றே குறைத்தது.

இங்கிருந்து அவள் அக்கா வீடு  இரண்டு கிலோமீட்டருக்கு மேல் இருக்கும்.நடந்து போவதைத் தவிர வேறு வழி இல்லை. பெட்டியை வேறு தூக்கிக்கொண்டு நடக்க வேண்டும். ஒரு ரிக் ஷாவுக்கோ, மாட்டு வண்டிக்கோ கூட வழி இல்லை.

மூட்டை முடிச்சுகளுடன் சகபயணிகள் தவித்துத் திணறியபடி நடக்கத்  தொடங்கியதைப் பார்த்ததும் அவள் ரத்தம் கொதித்தது. இதற்குக்  காரணமானவர்களைப் பிடித்துக்கட்டி.... (என்ன தண்டனை கொடுக்கலாம்?)

'பந்த்' என்று தெரிந்த பிறகு அவள் கிளம்பியிருக்கவே மாட்டாள். பொழுது விடிவதற்குள் வந்து சேர்ந்து விடலாம் என்ற நம்பிக்கையில் கிளம்பியது தவறாகி விட்டது. வரும் வழியில் பஸ்ஸில் ஏதோ பழுது ஏற்பட்டதால் வெடித்ததால் மூன்று மணி நேரத்துக்கு மேல் தாமதம் ஆகி, இப்படி வந்து மாட்டிக்கொள்ளும்படி ஆகி விட்டது.

ஒரு விதத்தில் பார்த்தால், இவ்வளவு தூரம் வந்து சேர்ந்ததே அதிர்ஷ்டம்தான். இடையில் எங்காவது மாட்டிக்கொண்டிருந்தால் என்ன செய்திருக்க முடியும்?

அவள் பெட்டியைத் தூக்கிக்கொண்டு மெல்ல நடக்க ஆரம்பித்தாள்.

"இன்னிக்கு பந்த். வெளியே எங்கேயும் போக வேண்டாம். ஃபிரண்ட் வீடு என்ன வேண்டிக் கிடக்கு?"

ரமேஷ் சத்தம் போட்ட அப்பாவைப் பார்த்தான். 'எதற்கெடுத்தாலும் ஒரு சத்தம்! மெதுவாகவே ஆட்சேபிக்கத் தெரியாது இவருக்கு. வக்கீலாக இருந்திருந்தால், கோர்ட்டில் சத்தம் போட்டு நல்ல வக்கீல் என்று தன்னைக் காட்டிக்கொள்ள முயன்றிருக்கலாம்!  தனியார் நிறுவன ஊழியராக இருந்து கொண்டு அலுவலகத்தில் மேலதிகாரிகளுக்குப் பயந்து வாயை மூடிக்கொண்டு இருந்து விட்டு வீட்டில் வந்து கத்தித் தீர்க்கிறார்!'

"இல்லை அப்பா, அடுத்த வரம் மாத்ஸ் டெஸ்ட் இருக்கு. அதுக்கு ரெண்டு பேருமா சேர்ந்து கணக்குப் போட்டுப் பாக்கப் போறோம்." 

'இப்படிக் கூசாமல் புளுகுவதைத் தவிர வேறு வழி இல்லை. விடுமுறை நாளும் அதுவுமாக  வீட்டில் இருந்தால், 'படி, படி' என்று பிடுங்கி எடுத்து விடுவாரே!'

"சரி, சரி. ஒழிஞ்சு போ. ஜாக்கிரதை!"

"பைக்கை எடுத்துக்கிட்டுப் போறேன்."

"பைக்கைத் தொட்டேன்னா காலை ஒடைச்சுடுவேன், ராஸ்கல்! புதுசா வாங்கின வண்டியைப் பாழ்  பண்ணலேன்னா ஒனக்கு மனசாகாதே!" 

"இல்லேப்பா, டவுன் பஸ் எல்லாம் ஓடலே."

"நடந்து போறது! கால் வணங்காதே! சரி, சரி, ஒழி!"

ஒழிந்தான்.

மெஸ் மூடித்தான் இருந்தது. அடைக்கப்பட்டிருந்த கதவுகள் தூரத்திலிருந்தே புலப்பட்டன. பாலகிருஷ்ணன் பலவந்தமாக இழுத்துப் பிடித்துக்கொண்டிருந்த நம்பிக்கை நழுவிக் கீழே விழுந்தது.

இத்தனை தூரம் நடந்து வராமலாவது இருந்திருக்கலாம் என்று நொந்துகொண்டே அவர் திரும்பிப் போக யத்தனித்தபோது, மூடப்பட்ட மெஸ்ஸின் கதவுகளில் ஒன்று எதிர்பாராமல் கொஞ்சமாகத் திறந்து கொள்ள, மெஸ் முதலாளி நாராயணனின் முகம் மட்டும் வெளிப்பட்டது. 

எங்கே திறந்த கதவு மீண்டும் மூடிக்கொண்டு விடுமோ என்று பயந்தவராக, பாலகிருஷ்ணன் ஓட்டமும் நடையுமாக மெஸ்ஸை நோக்கி விரைந்தார். அவரைப் பார்த்து விட்ட நாராயணன் கையை அசைத்து அவரை வரவேற்றான். பாலகிருஷ்ணன் கதவுக்கு அருகே வந்ததும், அவர் கையைப் பிடித்து வேகமாக உள்ளே இழுத்தான். பாலகிருஷ்ணன் உள்ளே வந்ததும் கதவு மூடப்பட்டது.  

"என்ன இன்னைக்கு பந்த் இல்லையா?" என்றார் பாலகிருஷ்ணன் புதிய உற்சாகத்துடன். உள்ளிருந்து வந்த சுவையான சாப்பாட்டின் நறுமணமும், உள்ளே இருட்டில் இரண்டு மூன்று பேர் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த காட்சியும் அவர் உற்சாகத்துக்குத்  தூபம் போட்டன.

"என்ன 'பந்த்தா' இருந்தா என்ன சார், உங்களையெல்லாம் கைவிட்டு விடுவேனா?" என்றான் நாராயணன். (ஒருநாள் வருமானத்தைத்தான் விட்டு விட முடியுமா என்ன?)

பாலகிருஷ்ணன் அம்பாளுக்கும், நாராயணனுக்கும் மனதுக்குள் நன்றி செலுத்தி விட்டுச் சாப்பிட உட்கார்ந்தார்.

மாதங்கி அந்தத் தெருமுனையில் திரும்பியபோது, இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த அந்த இளைஞனைப் பார்த்தாள். இளைஞனா? - இல்லை! பையன். பதினைந்து அல்லது பதினாறு வயதுப் பையன். 

பெட்டியைத் தூக்கிக்கொண்டு நடப்பது அவளுக்கு மிகுந்த சிரமமாக இருந்தது. பாதி தூரம்தான் வந்திருக்கிறாள். இன்னும் பாதி  தூரம் நடக்க வேண்டுமே என்ற எண்ணம் மலைப்பாக இருந்தது. பெட்டியைக் கீழே வைக்கச் சொல்லி மூளையிடமிருந்து உடனே உத்தரவு வராவிட்டால், உடம்பிலிருந்து கழன்று கொள்ளப் போவதாக அவளது இரண்டு கைகளும் மாற்றி மாற்றி மிரட்டிக் கொண்டிருந்தன. பெட்டியைக் கைக்குக் கை மாற்றிச் சமாளிக்கும் வேலை இனியும் நடக்காது போலிருக்கிறதே என்று அவள் மூளை கவலைப்படத்  தொடங்கியது.

'இந்தப் பையனிடம் லிஃப்ட் கேட்டால்  என்ன? என்னை விட ஐந்தாறு வயது இளையவனான இவன் பின்னால் பைக்கில் உட்கார்ந்து போவதில் ஒன்றும் தப்பில்லை.'

பைக் அருகில் வந்ததும் மாதங்கி அவனைக் கை காட்டி நிறுத்தினாள். அவன் சற்று வியப்புடன் பைக்கை நிறுத்தினான்.

"நான் தாண்டவராயன் தெருவுக்குப்  போகணும். என்னைக் கொஞ்சம் கொண்டு விட்டுடறியா?"  என்றாள் அவள் உரிமையுடன்.

"ஓ! உக்காருங்க!" என்றான் அவன் உற்சாகத்துடன்.

'உக்காருங்க அக்கா' என்று சொல்லியிருக்கலாம் என்று மாதங்கிக்குத் தோன்றியது. 

ற்ற நாட்களை விட இன்று சாப்பாடு நன்றாக இருப்பதாக பாலகிருஷ்ணனுக்குத் தோன்றியது.

வழக்கம் போல் கப்பில் ரசம் வாங்கி குடித்துக்கொண்டிருந்தபோது வாசல் பக்கம் பெரிதாகக் கூச்சல் கேட்டது.

தொடர்ந்து படபடவென்று கதவு தட்டப்படும் சத்தம்.

ஆபத்தை உணர்ந்து உடல் விறைத்துக்கொள்கிற பூனை போல் நாராயணன் பரபரப்படைந்தான்.

"எல்லாரும் சட்டுனு கை கழுவிக்கங்க" என்று அவசரப்படுத்தி விட்டு, வாசல் கதவைத் திறக்கப் போனான்.

கப்பில் மீதி இருந்த ரசத்தைக் குடித்து விட்டு எழுந்திருப்பதா அல்லது உடனேயே எழுந்திருப்பதா என்று பாலகிருஷ்ணன் யோசித்துக் கொண்டிருந்தபோதே, கதவை நாராயணன் இலேசாகத் திறக்க, வெளியே நின்று கதவைத்தட்டிக்கொண்டிருந்தவர்கள் பிடித்துத் தள்ளியதில் கதவு படாரென்று திறந்து கொண்டது. திமுதிமுவென்று நாலைந்து பேர் நாராயணனைத் தள்ளி விட்டு ஒடி வந்தனர். 

"ஏண்டா, ஊர் முழுக்க பந்த், நீ திருட்டுத்தனமா மெஸ்ஸா நடத்தறே?" என்று விசாரித்து விட்டு ஒருவன் தன் கையிலிருந்த உருட்டுக்கட்டையால் நாராயணன் தலையில் ஒன்று போட்டான். 

"டேய் சாப்பாட்டு ராமன்களா , வாங்கடா  வெளியே!" 

உள்ளே கூச்சலும் குழப்பமும் அதிகரித்து, மேசை நாற்காலிகள் சேதப்படுத்தபடத் தொடங்கியதும், பாலகிருஷ்ணன் கை கழுவும் எண்ணத்தைக் கை விட்டு, வாசலை நோக்கி ஓடினார்.

"அதோ முதலாளி ஓடறான் பாரு, பிடிங்கடா அவனை!" என்று யாரோ கூவ, "நான் முதலாளி இல்லை" என்று எழும்பாத குரலில் அவர் கூவ முயன்றபோதே பாலகிருஷ்ணனின் ரத்தக் கொதிப்பு ஏறியது.

"பிடிடா, பிடிடா" என்று யாரோ கூவ, ஒருவன் இலக்கின்றித் தன்  கையிலிருந்த கட்டையைச் சுழற்ற, அது பாலகிருஷ்ணன் கழுத்தைத் தாக்கியது. வாசற்படியின் மீது நின்றுக்கொண்டிருந்தபோது அவர் மீது விழுந்த அந்த அடி அவரை நிலை குலையச் செய்தது. கொஞ்சம் தடுமாறி, கொஞ்சம் இடறி, கொஞ்சம் சமாளித்து, கொஞ்சம் தடுக்கி விடப்பட்டுக் குப்புற விழுந்தார். மெஸ்ஸுக்கு வெளியில் இருந்த பாதையின் சரிவில் உருண்டு சாலைக்குத் தள்ளப்பட்டார். 

சாலையில் போக்குவரத்து இல்லாத தைரியத்திலும், பின்னால் ஒரு இளம்பெண் உட்கார்ந்திருக்கும் உற்சாகத்திழும் கொஞ்சம் வேகமாகவே பைக்கை ஓட்டி வந்த ரமேஷ், அந்தக் குறுகிய தெருவில் திரும்பியபோது அவனுக்குச் சில அடிகள் முன்பு திடீரென்று ஒரு வயதானவர் ஒரு கட்டிடத்தின் வாசலிலிருந்து உருண்டு சாலையில் விழுவதைக் கவனித்ததும், சாலையின் ஓரமாக வந்து கொண்டிருந்தவன், பைக்கை ஒடித்துத் திரும்பிச் சாலையின் மையப்பகுதிக்குச் செல்ல முயன்றான்.

வேகத்தைக் குறைக்காமல், பதட்டத்தில் பைக்கை அவசரமாக ஒடித்துத் திருப்பியதில், வண்டி வளைந்து வளைந்து ஒடி சாலையின் எதிர்ச்சாரியில் இருந்த குப்பைத்தொட்டியின் மீது மோதி நின்றது. பின்னால் உட்கார்ந்திருந்த மாதங்கி வண்டியிலிருந்து தூக்கி எறியப்பட்டாள். அவள் தலை எதோ கடினமான பொருளின் மீது மோதிய நிலையில் கீழே விழு ந் தாள். 

ரமேஷ் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றபோதே மெஸ்ஸிலிருந்து நாலைந்து பேர் கையில் கட்டைகளுடன் அவனை நோக்கி ஒடி வந்தனர். 

"ஏண்டா, பந்த் அன்னைக்குக் காதலியோடு ஊர் சுத்த வேண்டியிருக்கா  உனக்கு?" என்றபடியே ரமேஷின் கன்னத்தில் பளீரென்று அறைந்தான் ஒருவன்.

"சார், அவங்க என் அக்கா மாதிரி சார்!" என்று அலறினான் ரமேஷ்.
     
நினைவு தப்பிக்கொண்டிருந்த மாதங்கிக்கு  இது காதில் விழுந்ததும் எதோ ஒரு திருப்தியில் அவள் உதடு விரிய, அந்த உணர்விலேயே மயங்கிப் போனாள்.

"சின்னப்பையன்கிட்ட என்னடா பேச்சு?" 

"அவன் வண்டியைக் கொளுத்தி விட்டுட்டாப்  போச்சு" என்றான் ஒரு கர்மவீரன். மற்றவர்கள் இந்த யோசனைக்கு உற்சாகமாக ஆதரவு தெரிவித்தார்கள். 

"ஐயையோ! வேண்டாம் சார், விட்டுடுங்க!" என்று ரமேஷ் அலறியது வியர்த்தமாகியது. 

பைக்கின் மீது எழுந்த ஜ்வாலை ரமேஷின் வயிற்றுக்குள் பாய்ந்தபோது, மனதில் அவன் அப்பா வந்து '"கிளம்பும்போதே சொன்னேனே கேட்டியா?" என்றார். 
பாலகிருஷ்ணன் எங்கேயோ பறந்து கொண்டிருந்தார். அழுத்தம் மிகுந்து ரத்தக்குழாய்கள் புடைத்துக்கொள்ள, ரத்தத்தின் வேகம் இதயத்தை அழுத்தி நினைவுகளை வேகமாக வெளியே விரட்டிக்கொண்டிருந்தது. இறக்கப்போகிறோம் என்ற நிச்சயமான உண்மை அதிர்ச்சியையம் கலக்கத்தையும் ஏற்படுத்தியது. 

'நான் இப்போது செத்தால் எனக்கு கொள்ளி வைக்கக்கூட யாரும் இல்லை. என் மகள் ஊரில் இருந்தபோது இது நடந்திருக்கலாம். ஆனால் என் மகள்  ஊரில் இருந்திருந்தால் நான் என் இந்த மெஸ்ஸுக்கு வந்து மாட்டிக்கொண்டிருக்க...இப்போது நான் எங்கே இருக்கிறேன்? இந்தாப்பா..சூடா ஒரு கப் ரசம்! 

கடைசியாக அவருக்கு நினைவு இருந்தபோது அவர் பேத்தி தீப்தி அவரிடம் வந்து, "தாத்தா! பாம்பா மாறின ராஜகுமாரன் அப்புறம் என்ன ஆனான் தாத்தா?" என்று கேட்டாள்.

ன்று இரவு தொலைக்காட்சியில்  செய்தி படித்தபெண்மணி, "ஓரிரு சம்பவங்களைத் தவிர, பொதுவாக இன்று பந்த் அமைதியாகவே நடந்தது" என்று புன்னகை மாறாமல் அறிவித்தாள் . 

(1989 ஆம் ஆண்டு எழுதப்பட்டது)


Friday, August 5, 2016

18. கிண்டி வந்து விட்டது!


ராமரத்தினத்துக்கு இருப்புக் கொள்ளவில்லை. எவ்வளவுதான் கோபமாயிருந்தாலும் ருக்மிணியை அவர் கை நீட்டி அடித்திருக்கக் கூடாது. முப்பது வருட தாம்பத்தியத்தில் ருக்மிணியை அவர் கை நீட்டி அடித்தது இதுதான் முதல் தடவை.

இந்தத் தடவை மட்டும் ஏன் அவர் அவளை அடிக்க வேண்டும்? அப்படி அவள் என்ன சொல்லி விட்டாள்? 'உங்களைக் கல்யாணம் செய்து கொண்டு இந்த முப்பது வருடமாக நான் எதைக் கண்டேன்?' என்று எல்லா மனைவிமார்களும் மனப்பாடம் செய்வதுபோல் ஒப்பிக்கும் அதே நான்சென்ஸ்தானே?' ஆனால் அதை நான்சென்ஸ் என்று ஒதுக்கித் தள்ளாமல் அவர் ஏன் உணர்ச்சி வசப்பட்டார்?

சம்பவம் முழுவதும் அவர் கண்முன் நிழலாடியது.

அவள் அப்படிச் சொன்னதும் அவருக்குக் குபீரென்று கோபம் பொங்கி எழுந்தது. அவரை அறியாமலேயே அவரது கை அவள் கன்னத்தில் அழுத்தமாகப் பதிந்தது. 

சற்றும் எதிர்பாராத இந்தத் தாக்குதலினால் அதிர்ச்சி அடைந்த ருக்மிணி அழக்கூட மறந்தவளாக விழிகள் பிதுங்க விழித்தாள். 

அப்புறம்..அப்புறம்.. அதை நினைக்கவே அவருக்கு அவமானமாக இருந்தது.

"உன் மனதில் நீ என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறாய், நாயே?"

சே! 'ருக்கு,' 'ருக்கு' என்று ஆசையாக அழைத்த அதே நாவால் 'நாயே' என்று அவளை அழைக்க அவருக்கு எப்படி மனம் வந்தது?

இனம் புரியாத ஒரு உணர்ச்சியில் அவர் தன் வாயில் அடக்கி வைத்திருந்த புகையிலையை ஜன்னலுக்கு வெளியே துப்பினார் - தாம் ஓடும் ரயிலில் உட்கார்ந்திருக்கிறோம் என்பதையே மறந்து.

"யாருப்பா அது புகையிலைச் சாத்தை வெளியில துப்பறது? அறிவு கெட்ட..."

அதற்குப்பின் வந்த வசை மொழியில் அவர் கவனம் நிலைக்கவில்லை.

ருக்கு, ருக்கு! என்னை மன்னித்து விடு. ஏதோ கோபத்தில்....

தன் செய்கையை உணர்ந்த மறு கணமே அவர் வாய் மூடி மௌனியானார்.

ருக்மிணி அவரைப் பார்த்த பார்வையை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இந்த முப்பது வருடங்களில் எத்தனையோ முறை அவள் அவரைக் கோபத்துடன் பார்த்திருக்கிறாள்.ஆனால் ஒரு முறை  கூட இது போல இகழ்ச்சியாகப் பார்த்ததில்லை.

"ஓ! உங்களுக்கு வெறி அந்த அளவுக்கு ஏறிடுச்சா? என்ன சொன்னீங்க? நாய்..நாய்.  ஆமாம். நான் நாய்தான். இந்த நாயோடத்தானே முப்பது வருஷம் குடித்தனம் நடத்தி  மூணு பெண்களையும் மூணு பிள்ளைகளையும் பாரபட்சம் இல்லாமல் பெத்து வச்சிருக்கீங்க? இப்பதான் நான் நாய்னு உங்களுக்குத் புரிஞ்சுதோ? ஏன் நாய்னா உங்களுக்கு பிடிக்காதோ? ஒருவேளை நான் குதிரையா இருந்திருந்தா உங்களுக்குத் பிடிச்சிருக்குமோ என்னவோ? பேசாம இந்த நாயை அடிச்சு விரட்டிட்டு ஒரு குதிரையைக் கல்யாணம் பண்ணிக்கங்களேன்!"

நாக்கைச்  சாட்டையாகச் சுழற்றி ஒவ்வொரு வார்த்தையாலும் அவரை விளாசி விட்டு அவள் விம்மி அழ ஆரம்பித்தாள்.  

ராமரத்தினம் கோபத்திலும் இயலாமையிலும்  துண்டை உதறி வீட்டுக் கிளம்பியவர்தான். 

நிறைய பேர் இறங்கினார்கள். அதை விட அதிகமான பேர் ஏறினார்கள். ரயில்பெட்டியில் நெரிசல் அதிகமாகியது.

ராமரத்தினம் நினைவுகளைக் கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டு வெளியே எட்டிப் பார்த்தார்.

எழும்பூர்.

ஏதோ ஒரு பிளாட்பாரத்திலிருந்து ஒரு ரயில் பெரிதாக ஊதிவிட்டுக் கிளம்பியது.

'ஒருவேளை, ருக்கு கோபித்துக்கொண்டு  ஊருக்குப் போயிருப்பாளோ?'

'சே  சே ! அவள் அப்படியெல்லாம் போகக்கூடியவள் இல்லை. அத்துடன் அவளிடம் பணம் எது?'

அன்று காலை சண்டையே  பண விவகாரத்தில்தான் ஆரம்பித்தது. அவர் அவளுடைய இரட்டை வடச் சங்கிலியைக் கேட்கப்போய்தான்  அவள் பிடித்துக் கொண்டாள்.

எவ்வளவுதான் நினைவிலிருந்து அகற்ற முயன்றாலும், அன்று காலை நடந்த நிகழ்ச்சிகள் அவர் மனத்தைச் சுற்றிச் சுற்றி வந்தன.

"எதுக்கு சங்கிலி?" அவள் குரலில் எவ்வளவு ஆக்ரோஷம்!

அவரும் கொஞ்சம் பொறுமையாக பதில் சொல்லியிருக்கலாம்!

"அதைப்பத்தி உனக்கென்ன? அடக்கமான பொண்ணா லட்சணமா கேட்டவுடன்  கழட்டிக் கொடுப்பாயா..."

"புருஷனுக்கு ஏத்தாப்பலத்தானே பொண்டாட்டியும் இருக்க முடியும்?"

"ஒனக்கு வாய் ரொம்ப நீளமாய்க்கிட்டே வருது!" 

"சிலருக்கு வாய் நீளம், சிலருக்குக்  கை நீளம். நீங்க பணம் கட்டற குதிரைகளுக்குக் கொஞ்சம் கால் நீளமாக இருந்திருக்கலாம்!"

"ஷட் அப்! யாரைப் பாத்துக்க கை நீளம் னு சொல்றே?"

"நான் உங்களைத்தான் சொன்னேன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்? போன வாரம் எனக்குத் தெரியாம பீரோவில் இருந்த வெள்ளி டம்ளரை எடுத்துக்கிட்டுப் போனீங்களே, அது ஞாபகம் வந்துடுச்சோ?"

அப்போதே அவர் கையை ஓங்கி இருக்க வேண்டியவர்தான். காரியம் ஆக வேண்டுமே என்பதற்காகத் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டார்.

"இதோ பார். நீ எனக்குச் சொந்தம். நீ பிறந்த வீட்டிலிருந்து எடுத்துக்கிட்டு வந்த பொருள்களும் எனக்குத்தான் சொந்தம். நான் உன்னைக் கேட்டுத்தான் எதையும் எடுத்துக்கிட்டுப் போகணும்னு அவசியம் இல்லை. இப்போ சங்கிலியைக் கழட்டிக் கோடு சீக்கிரம். நேரமாச்சு."

"நேரம் ஆனா  ஆகட்டுமே! நீங்க ஓடினா, அங்கே உங்க குதிரையும் ஓடிடுமோ? அது அசைஞ்சு அசைஞ்சு நடந்து கடைசியாத்தானே வரப்போகுது!"

"உஸ்ஸ் .. என் பொறுமையைச் சோதிக்காதே!"

சட்டென்று அவள் முகம் இறுகியது. "இங்க பாருங்க. உங்களுக்கு ஏற்கெனவே ரெண்டு பொண்ணுங்க கல்யாணத்துக்குத் தயாரா நிக்கறாங்க. மூணாவது பொண்ணும் இன்னைக்குக் காலையிலே தயாராயிட்டா. இன்னிக்கு உங்க ஞாபகம் எல்லாம் இங்கே இருக்காதுங்கறதுனாலதான் இதை உங்க கிட்டே சொல்லலே. இன்னிக்கு நீங்க ரேசுக்குப் போக வேண்டாம், இன்னியிலிருந்து போக வேண்டாம்."

அவர் பொறுமை எல்லை கடந்தது. அவர் மனைவி நாசூக்காகத் தெரிவித்த தகவல் அவரிடம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

"அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? சங்கிலியை எடு, சீக்கிரம்!"

"முடியாது."

"என்ன?"

அப்போதுதான் அவள் அதைச் சொன்னாள் . "உங்களைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டு..."

"நான்சென்ஸ்."

"நான் எனக்குன்னு எதையும் கேக்கல. நம்ம பெண்களுக்காகவும் பிள்ளைகளுக்காகவும் நீங்க எதையும் சேர்த்து வைக்கல. இருந்ததையும் துடைச்சதுதான் மிச்சம். இந்தச் சங்கிலி ஒண்ணுதான் மிச்சம் இருக்கு. இதை மட்டும் வச்சிக்கிட்டு எதையும் செய்ய முடியாதுங்கறது எனக்குத் தெரியும். வெள்ளத்திலே அடிச்சுக்கிட்டுப் போனாலும் கையில புடிச்சுக்க சின்னக் கட்டையாவது இருந்தாத்தான்  ஒரு ஆறுதலும் நம்பிக்கையும் இருக்கும். அது மாதிரிதான் இந்தச் சங்கிலி. இதைக் குடுக்க மாட்டேன்."

இப்போது நினைத்துப் பார்த்தபோது ருக்மிணி தப்பாக எதுவுமே சொல்லவில்லை என்று தோன்றியது. மனைவி தனக்கு  உபதேசம் செய்வதாவது என்ற ஆண்பிள்ளைத் திமிரினாலும், அவள் நகையைக் கொடுக்க மறுத்த ஆத்திரத்தினாலும்தான் அவர் கையை ஓங்கி விட்டார்.

அவருக்குக் கை நீளம் என்று அவள் குத்திக் காட்டியது எவ்வளவு உண்மை - அவள் வேறொரு அர்த்தத்தில் சொல்லியிருந்தாலும்!

வண்டி மீண்டும் நின்றது. சேத்துப்பட்டு.  அடுத்தது நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், மாம்பலம், சைதாப்பேட்டை, கிண்டி.

கையிலிருந்த ரேஸ் டிப்ஸ் புத்தகத்தைப் பார்த்தார்.

ருக்மிணி சங்கிலியைக் கொடுக்க மறுத்து விட்டாலும், அவர் கையில் போட்டிருந்த அரைப்பவுன் மோதிரம் கை கொடுத்தது. அது கூட ருக்மிணியின் அப்பா போட்டதுதான்!

பிராட்வேயில் அவர் வழக்கமாக அடகு வைக்கும் கடையில் அறுபது ரூபாய்தான்  கிடைத்தது. ரேஸ் ஜோதிடத்தில் புலமை பெற்றிருப்பதாகச் சொல்லிக்கொண்ட அவருடைய அலுவலக நண்பர் கேசவமூர்த்தியிடம் ஆலோசனை பெற்றுக்கொண்டு  கோட்டை ஸ்டேஷனில் ரயில் ஏறி விட்டார்.

டிப்ஸ் புத்தகத்தை அவர் கண்கள் வெறுமையாக நோக்கிக்கொண்டிருந்தன. அதை அவர் பலமுறை படித்து மனப்பாடம் செய்தாகி விட்டது. 'ஹெலன் ஆஃப் டிராய்',' ப்ளூ மூன்' இந்த இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பது என்பதுதான் அவருடைய பிரச்னை.

இந்த இரண்டு குதிரைகளில் ஒன்று இன்று நிச்சயம் ஜெயிக்கும். அவர் இன்று ஜெயிக்காமல் விடப்போவதில்லை.

இத்தனை வருடங்களாக ஒருமுறை கூட அவர் பணம் கட்டிய குதிரை வெற்றி பெற்றதில்லை. இன்றுமா அப்படி ஆகி விடும்? 'முயற்சி வெற்றி பெறும்' என்று வள்ளுவர் சொல்லியிருக்கிறாரே!  'சூதாடக்கூடாது' என்று கூடத்தான் வள்ளுவர் சொல்லியிருக்கிறார்.  ஆனால் இது சூதாட்டமா? சே! இதென்ன குழப்பம்!

டிப்ஸ் புத்தகத்தை மூடி வைத்தார். குதிரைகள் ஓடும் தோற்றமும், ருக்மிணியின் ஆக்ரோஷமான முகமும் ஒருங்கே அவர் கண் முன் நின்றன.

பாவம் ரூக்மிணி! அவளும்தான் இத்தனை வருடங்களாக எவ்வளவு பொறுமையாக இருந்திருக்கிறாள்! அவர் கொண்டு வந்து கொடுக்கும் பணத்தில் அவள் எப்படிக் குடித்தனம் நடத்துகிறாள் என்பது அவருக்கு ஒரு புரியாத புதிர்தான்.

காலையில் அவள் சொன்னதெல்லாம் மீண்டும் அவர் நினைவுக்கு வந்தது. மூன்று பெண்கள்! அவர்களுக்கு அவர் என்ன வழி செய்யப் போகிறார்?

திடீரென்று அந்தப் பிரச்னை அவர்முன் விஸ்வரூபம் எடுத்து நின்றது. இத்தனை நாள் - ஏன் இன்று காலை வரை, சற்று முன் வரை கூட அவரால் எப்படி இத்தனை அலட்சியமாக இருக்க முடிந்தது?

கடவுளே! இத்தனை வருடங்களாகக் குதிரைப் பந்தயம் ஆடியதில் ஒரு முறையாவது அவருக்கு ஜாக்பாட் விழுந்திருக்கக்கூடாதா?

இதுவரை ரேசுக்குப் போனதில் அவர் எத்தனை ரூபாய் தோற்றிருப்பார்? பத்தாயிரம் ரூபாய் இருக்குமா அல்லது ஒரு லட்சம் ரூபாயாய்க் கூட இருக்குமோ? அவரால் அனுமானிக்க முடியவில்லை.

எது எப்படியானாலும் இதுதான் அவர் விளையாடப்  போகிற கடைசி ரேஸ். இதில் அவர் ஜெயித்தாலும் சரி, தோற்றாலும் சரி. 'ப்ளூமூன்' மீது சத்தியம். சே! சத்தியம் செய்யும்போது கூட ரேஸ் குதிரை நினைவுதானா? இப்படிக் குதிரைகள் நினைவாகவே இருந்தால் ரேஸ் பழக்கத்தை விடுவது எப்படி?

ஆனால் இதுவரை ஒருமுறை கூட அவர் இந்தப் பழக்கத்தை விட்டு விட வேண்டும் என்று நினைத்ததில்லை. இன்று இந்த நினைவு வந்ததே ஒரு முன்னேற்றம்தான்.

சட்டென்று அவருக்கு ஒரு எண்ணம் தோன்றியது.

இன்றே இந்தப் பழக்கத்தை விட்டு விட்டால் என்ன? இன்று மட்டும் என் ரேசுக்குப் போக வேண்டும்?

ருக்மிணியின் கண்ணீர் வடிந்த முகம் அவர் நினைவுக்கு வந்தது. அதைத் தொடர்ந்து தாவணி போட்டுக்கொண்டு நின்ற மூன்று 'குதிரைகளின்' ஏக்கமான முகங்கள்!

அவர் உடலில் புது ரத்தம் பாய்ந்தது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது.

ஆமாம். அவர் இன்று ரேசுக்குப் போக போவதில்லை.

தன்னுடைய இந்த முடிவு ருக்மிணிக்குத் தெரிந்தால் அவள் எவ்வளவு சந்தோஷப்படுவாள்!

ரயில் பாலத்தைத் தாண்டி நுங்கம்பாக்கம் ஸ்டேஷனை நெருங்கி வேகம் குறைந்தது.

ராமரத்தினத்தின் மனதில் எண்ண ஓட்டங்கள் அதிகரித்தன.
'கிண்டியில் இறங்கி குரோம்பேட்டைக்கு டிக்கட் வாங்கிக்கொண்டு அடுத்த ரயிலில் குரோம்பேட்டை போய்விட வேண்டும்.'

குரோம்பேட்டையிலிருந்து பீச் ஸ்டேஷன் வரை ரிட்டர்ன் டிக்கட் வாங்கியிருப்பது நினைவு வந்தது.

'கிண்டியில் இறங்க வேண்டியதில்லை. இறங்கினால் சபலம் தட்டி ரேசுக்குப் போனாலும் போய் விடுவேன்! கிண்டியில் இறங்காமல் நேரே குரோம்பேட்டைக்குப் போய் விட வேண்டும்'.

ருக்மிணிக்கு மல்லிகைப்பூ மிகவும் பிடிக்கும் என்பது எங்கேயோ புத்தகத்தில் படித்த விஷயம் போல் நினைவுக்கு வந்தது.

 'குரோம்பேட்டை ஸ்டேஷனில் ஒரு முழம் மல்லிகைப்பூ வாங்கிக்கொண்டு  போக வேண்டும். அதை நானே அவள் தலையில் வைத்து விட  வேண்டும். இத்தனை வருட மணவாழ்க்கையில் ஒருநாள் கூட நான் எனது அன்பை இதுபோன்ற செயல்களால் வெளிப்படுத்தியதில்லை. ருக்மிணி எவ்வளவு மகிழ்ந்து போவாள்!'

ந்திரனுக்குக் கால் கடுத்தது. இன்று பார்த்து ரயிலில் ஒரே நெரிசல். இந்த ஞாயிற்றுக்கிழமையில் ஏன்தான் ரேஸ் வைக்கிறார்களோ?

அவனுக்குப் பின்னே நின்று கொண்டிருந்த இரண்டு பேர் இரண்டு குதிரைகளில் எது ஜெயிக்கும் என்று பந்தயம் கட்டிக் கொண்டிருந்தார்கள். குதிரைப் பந்தயத்தில் தோற்பதோடு இந்தப் பந்தயத்தில் வேறு தோற்க வேண்டுமா?

இன்று காலை முதலே அவனுக்கு எதுவும் சரியாக அமையவில்லை. எழுந்ததுமே  தலைவலி.பால்காரன் வரவில்லை என்று சொல்லி அம்மா காப்பிக்குக் கை விரித்து விட்டாள். இன்று பார்த்துத்தானா பாங்க் கிளார்க் வேலைக்கான தேர்வு வேறு இருக்க வேண்டும்?

ஒன்பது மணிக்குத் தேர்வு. ஏழரை மணிக்கே பழைய சோற்றைத் தின்று விட்டுக் கிளம்பி விட்டான்.  பையன் பாங்க் வேலைக்காகப் பரீட்சை எழுதப் போகிறானே, வாய்க்கு ருசியாக எதாவது சிற்றுண்டி செய்து கொடுக்க வேண்டும் என்று அம்மாவுக்குத் தோன்றவில்லை! தினமும் சுறுசுறுப்பாக இயங்கும் அம்மாவுக்கு கூட ஞாயிற்றுக்கிழமை வந்தால் ஒரு சோம்பல் வந்து விடுகிறது. தினமும் ஐந்து மணிக்கு எழுந்து விடுவாள், இன்று ஏழு மணிக்கு அவன் எழுப்பியபிறகுதான் எழுந்தாள்.

பல புத்தகங்களையும், கைடுகளையும் படித்து அவன் தன் மூளையில் ஏற்றிக்கொண்டிருந்த விஷயங்கள் எல்லாம் எங்கே மறந்து விடுமோ என்ற பயத்தில் புத்தகத்தைப் படித்துக்கொண்டே சாலையில் நடந்து கொண்டிருந்தபோது, அவனைத் தேர்வு எழுத விடக்கூடாது என்று தீர்மானித்தவர் போல் ஒரு கார்க்காரர்  அவன் மீது மோதுவது போல் வர, ஒரு லாங் ஜம்ப் செய்து அவரது முயற்சியை முறியடித்தான்.

ரயில் நிலையத்தில் அவன் மாடிப்படியில் வேகமாக இறங்கிக்   கொண்டிருந்தபோதே அவன் போக வேண்டிய ரயில் கிளம்பி விட்டது. அவன் மூச்சிரைக்க ஒடி வந்து அதில் தொற்றிக்கொண்டபோது, அவன் கையைப் பிடித்து இழுத்து உள்ளே தள்ளிய முரட்டு ஆசாமி அவனது அவசரத்தைப் புரிந்து கொள்ளக் கொஞ்சம் கூட முயற்சி செய்யாமல் "ஏம்ப்பா! உன் அப்பாவுக்கு நீ ஒரே பையனா, இல்லை நீ போய் விட்டாலும் வேறு யாராவது இருப்பார்களா?" என்று எகத்தாளமாகப் பேசியதில் அவன் படபடப்பு* அதிகமாகி விட்டது.

போகும்போதுதான் நின்று கொண்டே பயணம் செய்ய வேண்டியிருந்தது என்றால், வரும்போதும் அப்படித்தானா? தேர்வு எழுதிய பள்ளி வகுப்பறையின் குறுகிய பெஞ்ச்சுகளில் உட்கார்ந்ததில் உடல் முழுவதும் வலி எடுத்தது. (பாவம், பள்ளி மாணவர்கள் தினமும் ஆறு ஏழு  மணி நேரம் எப்படித்தான்இந்தக் குறுகிய பெஞ்ச்சுகளில் உட்கார்ந்திருக்கிறார்களோ?ஒருவேளை அந்த பெஞ்ச்சுகள் ஆரம்ப வகுப்புகளில் படிக்கும், வயதிலும், உருவிலும் சிறிய மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்டிருக்கலாம்!

போதும் போதாதற்கு, தேர்வை அவ்வளவு நன்றாக எழுதவில்லையோ என்ற மனக்கிலேசமும், நுங்கம்பாக்கம் ஸ்டேஷனில் ரயிலுக்காகபி பதினைந்து நிமிடங்கள் நின்றதால் ஏற்பட்ட கால்வலியும் சேர்ந்து கொள்ள, சற்று நேரம் உட்கார வேண்டும் போலிருந்தது. அப்போதுதான் சானடோரியத்தில் இறங்கி வீட்டுக்கு இருபது நிமிடங்கள் நடக்க முடியும்.

சந்திரன் பெட்டி முழுவதும் நோட்டமிட்டான். அவனுக்குக் கொஞ்சம் தள்ளி ஜன்னலோர சீட்டில் ஒரு நடுத்தர வயதுக்காரர் கையில் ரேஸ் புத்தகத்துடன் அரைக்கண் மூடியபடி அமர்ந்திருந்தார். ரேஸில் தான் பணம் கட்டிய குதிரை ஜெயிப்பது போல் கனவு கண்டு கொண்டிருப்பார் போலும்! அவர் கிண்டியில் இறங்கி விடுவார். அப்போது காலியாகும் சீட்டில் உட்கார்ந்து கொள்ளலாம்.

கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து அவரது பெஞ்ச்சுக்கு அருகில் வந்து நின்றான். வண்டி சைதாப்பேட்டையிலிருந்து கிளம்பியது. கிண்டியில் இறங்க வேண்டிய சிலர் சீட்டிலிருந்து எழுந்து வாசல் நோக்கி நகர ஆரம்பித்தார்கள். நிறையே பேர் இறங்கப் போவதாகத் தோன்றியது. தான் முதலில் நின்றிருந்த இடத்திலேயே நின்றிருந்தால் அங்கேயே இடம் கிடைத்திருக்கும். இங்கே வந்திருக்கவே வேண்டாம்.

வண்டி கிண்டி ஸ்டேஷனை நெருங்கி விட்டது. ஆனால் அவர் இறங்க யத்தனித்ததாகத் தெரியவில்லை. ஒருவேளை தூங்கி விட்டாரோ? பாவம் ஸ்டேஷனை விட்டு விடப்  போகிறார்.

சந்திரன் அவர் அருகில் நின்று அவரை உலுக்கி எழுப்பினான். "சார் கிண்டி வந்து விட்டது. இறங்கவில்லையா?"

கனவிலிருந்து விழித்தவர் போல் ராமரத்தினம் கண் விழித்தார். "ஆமாம்..கிண்டி..ஓ!.." என்று முனகிக்கொண்டே சீட்டிலிருந்து எழுந்து அவசரமாக இறங்கி வாசலை நோக்கி விரைந்தார்.

காலியான சீட்டில் சந்திரன் உட்கார்ந்து கொண்டான். வண்டி கிண்டியிலிருந்து கிளம்பியபோது அவர் படிக்கட்டில் ஏறிக்கொண்டிருந்ததைப்  பார்த்தான்.

*இன்றய இளைஞர்களுக்கு 'டென்ஷன்' என்றால்தான் புரியும்!

(1973ஆம் ஆண்டில் எழுதப்பட்டது.)


Sunday, July 3, 2016

17. தாமதம்

மாலை வகுப்பு முடிந்து வெளியே வரும்போதே இருட்டத் தொடங்கியிருந்தது. நேரம் என்னவோ ஐந்தரை மணிதான். குளிருக்கு பயந்து முன்னமே விடை பெற்றுக்கொண்டு விட்ட சூரியன்!

இரண்டு  மூன்று பேராகச் சேர்ந்து மற்றவர்கள் கலைய, அரவிந்தன் தனியாக நின்றான். தனியாக நின்றபோதுதான் தனியாக நிற்கும் மற்றொரு நபரைக் கவனித்தான். அந்த ஆண்கள் கூட்டத்தில் எப்படியோ தனி ஆளாக இடம் பெற்றுவிட்ட ஒரே பெண் - பெண்மணி. அவள் - அவர்கள் பெயர் கூட .....ஆங் விமலா.

சற்றுத் தள்ளி வேறு புறம் பார்த்துக்கொண்டு நின்றவளை வலுவில் அணுகிப் பேசுவது குறித்துக் கொஞ்சம் தயக்கத்துடனேயே அவளை நெருங்கினான்.

காலடிச் சத்தம் கேட்டுத் திரும்பியவள் முகத்தில் அனிச்சையாகத் தோன்றிய பய உணர்ச்சி கண நேர ரசாயன மாற்றத்தில் புன்னகையாக உருமாறியது.

"ஹலோ" என்றாள் அவள்.

"என்ன இப்படித் தனியாக...?"

"எல்லோரும் போய் விட்ட பிறகு மீதம் இருப்பவர்கள் தனியாகத்தானே இருக்க முடியும்?"

அவளது இயல்பான பேச்சினால் இறுக்கம் தளரப் பெற்றவனாக அவன் சிரித்தான்.

மேலே என்ன பேசுவது என்று யோசித்து விட்டு, "எங்கே, ரூமுக்குத்தானே போகிறீர்கள்?" என்றான் அரவிந்தன்.

அவள் பதில் சொல்லாமல் தலையாட்டினாள்.

"இந்த க்ரூப்பில் நீங்கள் தனியாக வந்து மாட்டிக் கொண்டிருக்கக் கூடாது" என்றான் அவன்.

"தனியாக எங்கே? அதுதான் இருபத்தைந்து பேர் இருக்கிறோமே!"

"ஐ மீன், இந்த க்ரூப்பில் நீங்கள் ஒருவர்தான் பெண்."

"ஆமாம். காலையில் வகுப்பைத் துவக்கும்போது கோர்ஸ் டைரக்டர் 'லேடீஸ் அண்ட் ஜென்டில்மென்' என்று துவங்கி விட்டு, அப்புறம், 'ஐ மீன் லேடி அண்ட்  ஜெண்டில்மேன்' என்று மாற்றி, மீண்டும் 'ஐ மீன் ஜெண்டில்மென்' என்று திருத்திக் கொண்டு மீண்டும் 'ஐ மீன் லேடி அண்ட் ஜெண்டில்மென்' என்று மிகவும் சிரமப்பட்டு விளித்ததைப் பார்க்கப் பரிதாபமாகத்தான் இருந்தது" என்று அவள் சிரிக்காமல் சொன்னபோது, அவன் குபீரென்று சிரித்து விட்டான்.

அப்போதுதான் தான் செய்ய வந்த வேலை நினைவுக்கு வந்தவனாக கடிகாரத்தைப் பார்த்தான்.

"நீங்கள் கடிகாரத்தைப் பார்ப்பதைப் பார்த்தால் அவசரமாக எங்கேயோ போகிறவரை நான் தடுத்து நிறுத்தி வைத்து விட்டிருப்பதாகத் தோன்றுகிறது." என்றாள் அவள்.

அவன் சட்டென்று மீண்டும் இறுக்கமாகி, "அப்படி ஒன்றும் இல்லை. நான் கொஞ்சம் ஜி.பி.ஒ. வரை போக வேண்டியிருக்கிறது. என் மனைவிக்கு எழுதிய கடிதத்தை போஸ்ட் பண்ண வேண்டும். உணவு இடைவேளையின்போது பக்கத்தில் இருக்கும் போஸ்ட் பாக்ஸில் போட மறந்து விட்டேன். இப்போது நேரமாகி விட்டதால் ஜி.பி.ஓவில் போஸ்ட் செய்தால்தான் இன்றைய தபாலில் போகும்" என்றான்.

"அதற்கு ஏன் இவ்வளவு சங்கடப்படுகிறீர்கள்? விளக்கம் கேட்க உங்கள் மனைவி கூடப் பக்கத்தில் இல்லையே! உங்களிடமிருந்து தினம் கடிதம் வராவிட்டால் உங்கள் மனைவி மிகவும் கவலைப் படுவார்களோ? உங்கள் மீது அவ்வளவு அன்பு போலிருக்கிறது!"

அவன் வெளியே தெரியாமல் மூச்சை ஆழமாக இழுத்து விட்டான்.

ஆமாம். மிகவும் அன்புதான். அன்பு என்று சொன்னால் போதாது. அன்பு வெறி என்றுதான் சொல்ல வேண்டும்! ஆனால் இலக்குத் தெரியாத அன்பு. அன்பு என்பது செலுத்தப்படுபவர்களின் உள்ளத்தைத் தொட வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளாத அன்பு. உள்ளத்தைத் தொடுவதற்கு பதில் உள்ளத்தைத் துளைத்து அங்கே நிலை பெறும் முயற்சியில் அம்பாக மாறி விடுகிற அன்பு!

அவனுடைய விருப்பங்கள், ஆர்வம், இலட்சியங்கள், மனப்போக்கு இவற்றைப் பிடிவாதமாகப் புரிந்து கொள்ள மறுக்கும் அன்பு. அவனுக்கு மனம், அறிவு போன்றவை இருப்பதை அலட்சியம் செய்து, வெளியே இருக்கும் கூட்டின் மீது பொழியப்படும் அன்பு. செலுத்தப்படும் நபரிடமிருந்து பிரதிபலிப்பாக அன்புக்குப் பதிலாக எரிச்சல், ஆத்திரம்,வெறுப்பு, இயலாமை, ஏமாற்றம் ஆகியவற்றையே வெளிக்கொணரும் அன்பு!

"என்ன யோசனை? மனைவி ஞாபகத்தில் ஆழ்ந்து விட்டீர்களா?"

"ஆமாம். அவள் ஞாபகம்தான்" சுதாரித்துக்கொண்டு அவளைப் பார்த்தான்.

இது போன்று யோசித்துக்  கொண்டிருக்கும் சந்தர்ப்பங்களில் "என்ன யோசனை?" என்று கூடக் கேட்க மாட்டாள் அவன் மனைவி லக்ஷ்மி. "என்னங்க, உடம்பு சரியில்லையா? ஆஃபீசுக்கு லீவு போட்டுடுங்களேன்! டாக்டர்கிட்டே போயிட்டு வாங்க. உடம்பு விஷயத்தில் அலட்சியமா இருக்காதீங்க" என்று படபடவென்று அவன் பதிலை எதிர்பாராமலேயே பொரிந்து தள்ளி விடுவாள்.  எரிச்சல் தாங்காமல், 'இந்த இடத்தை விட்டு எங்காவது போனால் சரி' என்று சட்டையை மாட்டிக்கொண்டு கிளம்பி விடுவான் அவன்.

"நீங்கள் ஜி.பி.ஒ. போவதாக இருந்தால் இந்தக் கடிதத்தையும் தபாலில் சேர்த்து விடுகிறீர்களா? - இஃப் யூ டோன்ட் மைண்ட்" என்று கைப்பையிலிருந்து ஒரு கடிதத்தை எடுத்து நீட்டினாள் விமலா.

"ஒ! வித் ப்ளெஷர்" என்று அதை வாங்கிக் கொண்டவன் "யாருக்கு இந்தக் கடிதம்?" என்றான். கேட்ட பிறகுதான் அப்படிக் கேட்டிருக்க வேண்டாமோ என்று தோன்றியது.

"ஏன், நீங்கள் உங்கள் மனைவிக்கு எழுதுவது போல நான் என் கணவருக்கு எழுதக் கூடாதா?" என்றாள் விமலா.

அவள் பேச்சிலும் சிரிப்பிலும் தளும்பிய குறும்பிலிருந்து அவள் உண்மையாகச் சொல்கிறாளா, அல்லது விளையாட்டுக்காகச் சொல்கிறாளா என்று அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.

"நாளை வகுப்பில் சந்திக்கலாம்" என்று சொல்லி அவள் அவனிடம் விடை பெற்றுக் கொண்டாள்.

அவள் விடைபெற்றுச் சென்றவுடனேயே லக்ஷ்மியைப் பற்றிய நினைவுகள் அவன் மனதை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டன.

வெவ்வேறு அரசு அலுவலகங்களிலிருந்து இளநிலை அதிகாரிகள் இருபத்தைந்து பேரைத் தேர்ந்தெடுத்து நிர்வாக இயல் பயிற்சிக்காக ஹைதராபாதில் உள்ள ஒரு பிரபல பயிலகத்துக்கு இரண்டு வாரங்கள் அவர்களை அனுப்பி வைத்திருந்தது அரசு.

தங்கும் அறைகள், உணவகம் ஆகியவை கூடிய பயிலகத்தில் முதல் நாள் வகுப்புகள் முடிந்ததும் துவங்கிய அவர்கள் சந்திப்பு தினமும் தொடர்ந்தது. வகுப்பில் போதிக்கப்பட்ட சித்தாத்தங்கள், வழிமுறைகள் ஆகியவற்றைப் பற்றி விவாதித்துக் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வது இருவருக்கும் ஒரு தினசரி நிகழ்ச்சியாக நடந்து வந்தது.

அவ்வப்போது விமலா அவனுடைய 'அன்பான மனைவி'யைப் பற்றி விசாரிப்பாள்.

"என்ன சார், உங்கள் மனைவியிடமிருந்து கடிதம் வந்து கொண்டிருக்கிறதா?"

"ஓ! இன்று கூட வந்தது. எண்ணெய்  தேய்த்துக் கொள்கிறீர்களா, அதற்கான வசதிகள் எல்லாம் அங்கே இருக்கிறதா?' என்று கேட்டு எழுதி இருக்கிறாள்...அது இருக்கட்டும், அன்று ஒரு கடிதம் கொடுத்து அதைத் தபாலில் சேர்க்கச் சொன்னீர்களே, அது உங்கள் கணவருக்குத்தானா?"

"ஏன்,அதில் என்ன சந்தேகம் உங்களுக்கு?"

"அதில்லை. அன்று நீங்கள் எதோ விளையாட்டுக்காகச் சொன்ன மாதிரி இருந்தது."

அவள் அவனைச் சில வினாடிகள் குறுகுறுப்புடன் பார்த்து விட்டு, "உங்கள் சந்தேகம் என்ன என்பது எனக்குப் புரிகிறது. எனக்குக் கல்யாணம் ஆகி விட்டது" என்றாள். அவள் முகத்தில் எப்போதும் இருக்கும் சிரிப்பு மறைந்து விட்டாற்போலிருந்தது.

"ஓ!"

தனக்குக் கல்யாணம் ஆகி விட்டதை அவள் உறுதிப்படுத்தியது தனக்கு ஏன் இவ்வளவு ஏமாற்றத்தை அளிக்க வேண்டும் என்பது அவனுக்குப் புரியவில்லை.

"உங்கள் கணவரிடமிருந்து பதில் வந்ததா?"

"அதற்கெல்லாம் அவருக்கு நேரம் எது? அவர் சார்பில் அவருடைய அந்தரங்கக் காரியதரிசி எழுதினால்தான் உண்டு!"

"ஓ! உங்கள் கணவர் மிகவும் பிஸியான மனிதர் என்று சொல்லுங்கள். என்ன செய்கிறார் அவர்?"

"அதுதான் நீங்களே சொல்லி விட்டீர்களே, பிஸியான மனிதர் என்று. பிஸினஸ்மேன்."

'பிஸினஸ்மேன்கள் கல்யாணம் செய்து கொள்ளக்கூடாது என்று சட்டம் இயற்றினால் தேவலை' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள் விமலா. அந்த நினைப்பின் அழுத்தம் அவள் கணவன் பலராமன் பற்றிய சிந்தனைகளைத் தூண்டியது.

'இதோ இந்த அந்நியன் இந்த ஐந்து நாட்களில் என்னிடம் பேசிய அளவுக்குக் கூட இந்த ஐந்து வருட தாம்பத்தியத்தில் மொத்தமாக என்னிடம் பேசியிருப்பாரா பலராம்? அவர் என்னிடம் பேசியதில் பெரும்பகுதி தொலைபேசிக் கம்பி வழியாகத்தான். குடும்ப வாழ்க்கைக்கு நேரம் ஒதுக்க முடியாதவர்களுக்கு மனைவி எதற்கு? சமூக அந்தஸ்துக்காகவா?'

"என்ன மௌனமாகி விட்டிர்கள்? கணவரைப் பற்றிய நினைவுகளில் முழ்கி விட்டீர்களோ?" என்றான் அரவிந்தன்.

"ஆமாம். அவர் நினைவு வந்ததும் மௌனமும் வந்து விட்டது."

எதேச்சையாக வந்த பதிலில் தன்னை அறியாமலேயே புகுந்து விட்ட உண்மை அவளை வாய்விட்டுச் சிரிக்க வைத்தது.

 முதல் வார இறுதியில் வந்த விடுமுறை நாளில் இருவரும் வெளியே சென்றார்கள். கோல்கொண்டா கோட்டை, சாலார் ஜங் மியூஸியம், பப்ளிக் கார்ட்னஸ், பிர்லா மந்திர், டாங்க்  பண்ட் என்று  பல இடங்களுக்கும் அழைத்துச் சென்ற டூரிஸ்ட் பஸ்ஸில்  சென்றார்கள். பஸ்ஸில் தனித்தனியே உட்கார்ந்து வந்ததால் பேச அதிக சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

மியூசியத்தைச் சுற்றிப் பார்க்கும்போது விமலா கேட்டாள்: "இந்த இடத்துக்கு உங்கள் மனைவியுடன் வந்திருக்க வேண்டும் என்று தோன்றவில்லையா?"

அவன் உடனே பதில் சொல்லவில்லை. என்ன சொல்வது என்று யோசிப்பது போல் தோன்றியது.

சில வினாடிகளுக்குப் பிறகு, "நீங்கள் கேட்பதில் அர்த்தம் இருக்கிறது" என்றான்.

அவன் என்ன சொல்ல விழைந்தான் என்று அவளுக்குப் புரியவில்லை.

கண்ணாடி அறை என்ற பகுதியில் அழகிய வேலைப்பாடுடன் கூடிய கண்ணாடிகளைப் பார்த்துக் கொண்டிருந்தபோது அரவிந்தன் சொன்னான் "என் மனைவி என்னுடன் இந்த மியூசியத்துக்கு வந்திருந்தால் அவளுக்கு இந்த அறையைப் பார்ப்பதில்தான் ஆர்வம் அதிகமாக இருந்திருக்கும்."

"ஏன், அலங்காரப் பிரியையா உங்கள் மனைவி?"

'அப்படி இல்லை. மற்ற இடங்களில் உள்ள கலைப்படைப்புகளை ரசிப்பதில் அவளுக்கு ஆர்வம் இருக்காது."

அவளுக்கு ஆர்வம் உள்ள விஷயம் என்று ஏதாவது ஒன்று இருக்குமா என்று கடந்த ஏழு வருடங்களாகத் தேடிய அழுத்தத்தின் சோர்வை அப்போது அவன் உணர்ந்தான்.

அவன் அப்படி ஒன்றும் பெரிய கலாரசிகனோ, இலக்கிய ஆர்வலனோ இல்லை. ஆயினும், சராசரி ரசனை கூட இல்லாத ஒரு பெண்ணுடன் வாழ்கை நடத்துவதில் ஏற்படும் சோர்வு - அப்பப்பா!

தன்னுடன் தன் கணவன் அதிகம் பேசுவதில்லை என்று அவன் மீது அவன் மனைவி லக்ஷ்மிக்கு ஒரு குறை உண்டு. எதைப்பற்றிப் பேசுவது - அவள் அழகைப் பற்றி, அவர்களுடைய குழந்தையைப் பற்றி, குடும்ப வரவு செலவு பற்றி, அண்டை வீட்டுச் செய்திகள் பற்றி? தினமும் எவ்வளவு நேரம் பேச முடியும்? அவன் அலுவலகத்தில் நடந்த விஷயங்கள் பற்றிப் பேசினால் அதைக் கேட்பதில் அவளுக்கு ஆர்வமோ அவன் சொல்வதைப் புரிந்துகொண்டு ரசிப்பதில் ஈடுபாடோ கிடையாது. அப்புறம் ஏன் கணவன் தன்னிடம் அதிகம் பேசுவதில்லை என்று குறைப்பட்டுக் கொள்ள வேண்டும்? 

சராசரி மனிதர்களின் ஆர்வ மையமான சினிமா விஷயத்தில் கூட அவளது ரசனை மேலோட்டமாகக் கூட இல்லை. கதாநாயகியை வில்லன் துரத்தினால், "கடவுளே! அவளைக் காப்பாத்தேன்!" என்று தியேட்டரிலேயே வாய் விட்டு வேண்டிக் கொள்கிற குழந்தைத்தனம்!

"வாருங்கள். மணி பன்னிரண்டு ஆகப் போகிறது. மியூசிகல்  க்ளாக்கில்  மணி அடிப்பதைப்  பார்க்க வேண்டாமா?" என்று விமலா அவன் சிந்தனையைக் கலைத்தாள்.

ரண்டாவது வாரம் மிக வேகமாகவே பறந்தது.

கடைசி நாளுக்கு முதல் நாள்.

"ஆச்சரியம். என் கணவரிடமிருந்து கடிதம் வந்திருக்கிறது" என்றாள் விமலா.

"என்னவென்று? உங்கள் வரவை ஆவலுடன் எதிர்பார்க்கிறாராமா?"

"ஆன்  தி அதர் ஹேண்ட், என்னை வர வேண்டாம் என்று எழுதி இருக்கிறார்!"

"என்ன?"

"பயப்படாதீர்கள்! அவர் பிசினஸ் விஷயமாக நாளை இரவு இங்கே வருகிறாராம். நாளை மறு நாள் இரவு அவருடனேயே போகலாம் என்று எழுதியிருக்கிறார்."

"எதிர்பாராத சந்தர்ப்பம்தான்."

"ஆனால், நான் திட்டமிட்டபடி நாளை இரவே கிளம்புவதாக இருக்கிறேன். அவருக்கு ஒரு தந்தி கொடுத்து விட வேண்டியதுதான்."

"ஏன் அப்படி?" என்றான் அரவிந்தன், திகைப்புடன்.

"வாட் இஸ் தி யூஸ்? அவர் இங்கே தங்கப் போகிற 24 மணி நேரத்தில் 25 மணி நேரத்துக்கு எங்கேஜ்மென்ட் வைத்திருப்பார். என்னுடைய எங்கேஜ்மென்ட் எப்போதோ முடிந்து போன ஒன்றுதானே! இங்கே ஹோட்டல் அறையில் தனியாகக் கொட்டுக் கொட்டென்று உட்கார்ந்திருப்பதற்கு பதிலாக ஊருக்குப் போய் வீட்டிலேயே உட்கார்ந்திருக்காலாம். அது பழகிப் போனதாகவாவது இருக்கும்."

ஏதோ சொல்ல நினைத்து வாய் திறந்து விட்டுப் பிறகு என்ன சொல்வதென்று தெரியாமல் வாயை  மூடிக் கொண்டான் அரவிந்தன். அவன் முகத்தில் தெரிந்த பச்சாதாபத்தைப் பார்த்தபோதுதான் விமலாவுக்குத் தன் மனக்குமுறல்களைக் கொட்டி விட்டோமோ என்று தோன்றியது.

"ஐ ஆம் சாரி" என்றாள்.

"அது நான் சொல்ல வேண்டியது" என்றான் அரவிந்தன்.

கடைசி நாள் வகுப்புகள் முடிந்த பிறகு, ஊருக்குக் கிளம்புமுன் இன்னொரு முறை பிர்லா மந்திர் போக வேண்டும் என்று விமலா விரும்பினாள். இருவரும் போனார்கள்.

அன்று கோவிலில் கூட்டம் அதிகம் இல்லாமல் அமைதியாக இருந்தது. நிதானமாகப் படிகளில் ஏறிப் பிரகாரத்தில் நடந்தபோது அரவிந்தனைச் சட்டென்று ஒரு வெறுமை பற்றியது.

"விமலா!" முதல் முறையாக அவளைப் பெயர் சொல்லி அழைத்தான்.

"சொல்லுங்கள்."

"இந்த அழகான, அற்புதமான, ஆனந்தமான இடத்துக்கு நாம் இருவரும் இனி சேர்ந்து  வரப் போவதில்லை என்ற நினைவு எனக்குத் தாங்க முடியாததாக இருக்கிறது." என்றான் அவன்.

"ஆமாம்" என்றாள் அவள். "வர முடியாது என்பதில்லை. ஆனால், சந்தர்ப்பம் கிடைப்பது அரிது."

நிதானமாகப் பெருமாளைத்  திருப்தியுடன் சேவித்து விட்டு வெளியே வந்து படிகளில் சற்று நேரம் அமர்ந்து விட்டு விடுதிக்குத் திரும்பும் வரை இருவரும் பேசவில்லை.

விமலாதான் முதலில் ஊருக்குக் கிளம்பினாள். அரவிந்தன்தான் ஆட்டோ ரிக்‌ஷாவை அழைத்து வந்து அவள் பெட்டியை அதில் வைத்தான். ஆட்டோ ரிக்‌ஷாவில்  ஏறுமுன், விமலா ஒருமுறை அரவிந்தனின் கண்களை நேராகப் பார்த்து, "நைஸ் மீட்டிங் யூ!" என்றாள்.

அரவிந்தன் பதில் சொல்லவில்லை.

இறுக்கத்தைத் தளர்த்த விரும்பியவளாக, "ஆனால், நீங்கள் அப்படி நினைக்கவில்லை போலிருக்கிறதே!" என்றாள் விமலா.

"இல்லை. இன்னும் ஏழெட்டு வருடங்களுக்கு முன் உங்களைச் சந்தித்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமே என்று நினைத்துக் கொண்டேன்" என்றான் அரவிந்தன். பார்வை அவளை நோக்கி இருந்தாலும், அது எங்கோ தொலைவில் நிலை குத்தி இருந்தது.

விமலா ஆட்டோவில் ஏறிக்கொண்டாள்.

(1990ஆம் ஆண்டு எழுதப்பட்டது.) 







"






















Sunday, June 26, 2016

16. ஓடும் பஸ்ஸில்

 என்னுடைய 21ஆம் வயதில் தேன்மழை என்ற மாதபத்திரிகையின் நவம்பர் 1972 இதழில் என்னுடைய முதல் கதை புகைப்படத்துடன் பிரசுரமானது. 'பாரவி' என்ற என் புனைபெயரில் வெளியான 'ஓடும் பஸ்ஸில்' என்ற அந்த சிறுகதையின் ஸ்கேன் செய்யப்பட்ட வடிவில் இங்கே கொடுக்கப்பட்டிருக்கிறது.




Friday, June 10, 2016

15. நேர்முகத் தேர்வு - மறைமுக விடை


திரும்பத்திரும்ப யோசித்த பிறகும் ராமானுஜத்தால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.

சக்திவேலா, சரவணனா?

சக்திவேல், சரவணன் இருவரும் ராமானுஜத்தின் தொழில் நிறுவனத்தின் தலைமைப் பதவிக்கான நேர்முகத் தேர்வில் இறுதிக் கட்டத்துக்கு வந்தவர்கள்.

ராமானுஜம் இருவரையும் இரண்டு முறை இண்டர்வியூ செய்து விட்டார். மதிப்பெண் போடுவதென்றால், ஒருவரை விட இன்னொருவருக்கு ஒரு மதிப்பெண் கூட அதிகமாகப் போட முடியாது,

இருவரும் இருவிதப் பின்னணியைக் கொண்டவர்கள்.

சக்திவேல் பிரசித்தி பெற்ற கல்வி நிறுவனத்தில் எம்.பி.ஏ படித்தவன். அனுபவம் சில வருடங்களே என்றாலும், குறுகிய காலத்திலேயே தன்  திறமையைச் சிறப்பாக வெளிக்காட்டியவன்.

சரவணன் விஞ்ஞானப் பட்டதாரி. எம்.பி.ஏ  இல்லை. ஆயினும் அவனது இயல்பான திறமையும், விரிவான அனுபவமும் பல எம்.பி.ஏக்களைப் பின்னுக்குத் தள்ளி அவனை இறுதித் தேர்வுக்குக் கொண்டு வந்து விட்டன.

இன்று எப்படியும் முடிவு செய்து விடலாம்  என்று நினைத்து, இருவரையும் அழைத்துத் தனித் தனியே பேசிப் பார்த்தார்.

சக்திவேலிடம் பேசியபோது, 'இவன்தான் நமக்கு ஏற்றவன். இவனையே தேர்ந்தெடுத்து விடலாம்' என்று நினைத்தார். சரவணனிடம் பேசாமலேயே அவனைத் திருப்பி அனுப்பி விடலாம் என்று கூட நினைத்தார். ஆயினும், அழைத்து விட்டுப் பேசாமல் அனுப்பினால் முறையாக இருக்காது என்று நினைத்து அவனிடமும் பேசிப் பார்த்தார்.

சரவணனிடம் பேசியபோது, இவ்வளவு அருமையான ஒரு நபரைத் தவற விட நினைத்தோமே என்று தோன்றியது.

இருவரையும் இண்டர்வியூ செய்தபிறகு, இருவரையும் அரைமணி நேரம் காத்திருக்கச் சொன்னார். அரைமணி நேரம் கழித்து, பெண் பார்த்து விட்டுப் போகும் மாப்பிள்ளை வீட்டார் சொல்வது போல், தொலைபேசி மூலம் தகவல் சொல்வதாகத் தன் உதவியாளர் மூலம் தகவல் சொல்லி அனுப்பி விட்டார்.

இருவருக்கும் ஏமாற்றம் - எரிச்சலும் கூட. 'என் இந்தக் கிழவன் இப்படி வதைக்கிறான்?' என்று சலித்துக் கொண்டிருப்பார்கள்.

இருவரும் போய்ச் சில நிமிடங்கள் ஆகியிருக்கும். நினைவு அவர்களையே சுற்றிச் சுற்றி வந்தது.

இருப்புக் கொள்ளாமல், ஜன்னலருகே போய்த் திரையை விலக்கி வெளியே பார்த்தார். கீழே தெரிந்த சாலையில் வழக்கம் போல் போக்குவரத்து அதிகமாக இருந்தது. சாலையைக் கடப்பதற்காகப பலர் காத்துக் கொண்டிருந்தனர். அந்தக் கூட்டத்தில் சக்திவேலும், சரவணனும் கூட இருந்தனர்.

'சட்! மனதைத் திருப்பலாம் என்று வெளியே பார்த்தால், இங்கேயும் இந்த இருவருமா?' என்று சலித்துக்கொண்டே திரும்ப நினைத்தவர், எதோ ஒரு ஆர்வத்தால் உந்தப்பட்டவராக அங்கேயே நின்றார்.

ஒரு சிலர் சாலையைக் கடக்க முயன்று போக்குவரத்தின் வேகம் கண்டு பின் வாங்கினர். அது பாதசாரிகள் சாலையைக் கடக்கும் இடம் என்றாலும், வாகன ஓட்டிகள் பாதசாரிகளுக்கு வழி விடாமல் வேகமாகச் சென்று கொண்டிருந்தனர். சாலையைக் கடக்க முயலும் பாதசாரிகளை அச்சுறுத்துவதற்காகவே, வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களின் வேகத்தை அதிகரித்தனர்.

சட்டென்று ஒரு நபர் முன்னால் அடி எடுத்து வைத்தார். மற்றவர்களைத் தன்னைப் பின் தொடருமாறு சைகை காட்டினார். வாகனங்களைக் கை காட்டி நிறுத்தும்படி சைகை காட்டியபடியே தயக்கமின்றி நடந்தார்.

மற்றவர்கள் அவரைப் பின் தொடர, வாகனங்கள்  வேகத்தைக் குறைத்தும், சடன் பிரேக் போட்டும் நின்றன. பாதசாரிகள் நிதானமாகச் சாலையைக் கடந்தனர்.

ராமானுஜத்துக்குத் தெளிவு பிறந்து விட்டது. ஒரு பிரச்னை எழும்போது, முனைப்புடனும், துணிவுடனும் செயல் பட்டு, மற்றவர்களை வழி நடத்தித் தன் தலைமைப் பண்பை வெளிப்படுத்திய சரவணன்தான் அவருடைய தேர்வு!

Sunday, February 7, 2016

14. மணமகளே வா!

அறைக்கதவு சத்தமில்லாமல் திறந்து மூடியது. கட்டிலில் உட்கார்ந்திருந்த சங்கர் நிமிர்ந்து பார்த்தான். பூமியில் கால் படாமல் நடந்து வரும் தேவதை போல் சத்தமில்லாமல் நடந்து வந்தாள் அவள். பூரணமான முதல் இரவு அலங்காரம். மேடுபள்ளம் பார்த்து நடப்பதிலேயே கவனம் இருப்பது போல் தலை தொங்கி இருந்தது.

அவளை அப்படியே தூக்கிப் படுக்கையில் கிடத்தினான். முகவாயை நிமிர்த்தி முகத்தைப் பார்த்தான். ஏராளமான பட்டுப்புடவைக்கு நடுவே இடையே கொஞ்சமாகத் தெரிந்த முகத்தின் சிவப்பு இரட்டிப்பாயிருந்தது. பெண்கள் நாணம் கொள்வது தங்கள் நிறத்தை மிகைப்படுத்தக் காட்டத்தானோ என்று நினைத்துக் கொண்டான்.

வெறியூட்டும் அழகு. ஆனால், இதை மெதுவாக, நிதானமாக, அணு அணுவாக அனுபவிக்க வேண்டும். இரவு முழுவதும் எதற்காக இருக்கிறது?

"ஷீலா!"

"ம்..." துரத்திலிருந்து கேட்பதுபோல் அவள் குரல் கேட்டது.

"என்னை உனக்குப் பிடிச்சிருக்கா?"

அவள் பதில் சொல்லவில்லை. வெட்கமா? அல்லது 'பிடிக்கவில்லை என்று சொன்னால் விட்டு விடவா போகிறான்?' என்ற நினைப்பா? அல்லது 'என் அபிப்பிராயத்க்தை யார் கேட்டார்கள்?' என்று மனதுக்குள் குமுறலா?

அவன் சற்றும் எதிபாராத வகையில் அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு தன் இதழ்களால் அவன் முகத்தில்...

ஓ! பாலசந்தர் பட நாயகி போல் மறைமுகமாக பதில் சொல்லி விட்டாள். 'தாங்க் யூ!'

"எனக்கு ஒரு சந்தேகம்."

'என்ன' என்பது போல் அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.

"முதல் இரவுக்கு இவ்வளவு அலங்காரங்கள் என்? அவ்வளவையும் இப்போது கலைக்கத்தானே போகிறேன்?"

அவள் கைகளால் தன் முகத்தை மூடிக் கொண்டாள். 'ரொம்பவும்தான் வெட்கப்பட வைக்கிறான்' என்று நினைத்துக் கொள்வாளோ?

மிக மென்மையான மஞ்சள் நிறக் கைகளையும், விரல்களையும் பார்த்தான். வெண்டைக்காய்க்கு லேடீஸ் ஃ பிங்கர் என்று பெயர் வைத்தவன் ஒரு அருமையான கலா ரசிகனாக இருக்க வேண்டும் என்று தோன்றியது. சிறு வயதில் அம்மா வெண்டைக்காய் நறுக்கும்போது பிஞ்சு வெண்டைக் காய்களைப் படக் படக் என்று ஒடித்துத் தின்றிருக்கிறான். அது போல் இந்த விரல்களையும்...


அவள் விரல்களை இழுத்துத் தன் உதடுகளில் பதித்துக்கொள்ளத்தான் முடிந்தது.

பார்த்து ரசித்தது போதும். இனி..

அவள் சேலைத்தலைப்பை மெல்ல விலக்கினான். அவள்   மீண்டும் தன் கைகளில் முகத்தை மறைத்துக் கொண்டாள். நீல நிற ரவிக்கை அவனுக்கு நல்வரவு கூறியது. ஏராளமான இடையில் செழுமையான மடிப்புகள்.

முகத்தழகை மட்டுமே பார்த்து அவளைத் தேர்ந்தெடுத்திருந்தாலும், எல்லா விதங்களிலுமே அவள் ஒரு முதல் தர அழகிதான் என்ற உணர்வில் அவன் புளகாங்கிதம் அடைந்தான்.

இறுக்கமான கேசத்தை மடியில் பற்றி அதன் அடியைத் தேடி அலைந்தான். அவள் முதுகினுடே ஊர்ந்த விரல்கள் முதுகுக்குக் கிழே அவள் பின்னல் வந்து முடிவதைத் தொட்டு உணர்ந்தன.

இனியும் அவனுக்குப் பொறுமை இல்லை. தம்புராவின் உறையை நீக்கிச் சுருதி சேர்க்க வேண்டியதுதான்.

விடிகாலையில் அவன் கண் விழித்தபோது, அவள் முகம் கழுவி உடை உடுத்தித் தன்னைச் சரி செய்து கொண்டிருந்தாள். முகத்தில் இப்போது நாணம் இல்லை. இலேசாகக் களைப்புத் தெரிந்தது.

"என்ன அதற்குள்?" என்று அவள் கையைப் பற்றினான்.

அவள் வெடுக்கென்று தன் கையை இழுத்துக் கொண்டாள். "பொழுது விடியப் போகிறது, தெரியும் இல்லையா? இப்போது மணி ஐந்தரை."

அவன் பெருமூச்சுடன் எழுந்தான். கழற்றி வைத்திருந்த தன பாண்ட் பாக்கெட்டைத் துழாவியபடியே . "ரொம்ப நன்றி ஷீலா! உண்மையாகவே நேற்று இரவு எனக்கு முதல் இரவுதானோ என்று  தோன்றுகிறது. எப்படி உன்னால்  இவ்வளவு அருமையாக ..."

"ஒவ்வொரு கஸ்டமரும் ஒவ்வொரு வகை. நீங்கள் முதல் இரவு மனைவி போல் நடந்து கொள்ள வேண்டும் என்று விரும்பியதால் அப்படி நடந்து கொண்டேன். உங்களைத் திருப்திப் படுத்துவதுதானே என் கடமை? வருகிறேன்" என்று கிளம்பினாள், அவன் கொடுத்த நூரு ரூபாயைத் தன் ரவிக்கைக்குள் திணித்தபடியே.

('ராணி' வார இதழ் 19/6/83இல், 'விஸ்வாமித்திரன்' என்ற புனைபெயரில் வெளியானது.)




Friday, February 5, 2016

13. சங்கிலிக் கணுக்கள்


வேலைக்குச் சேர்ந்த முதல் நாளே அனுராதா என்ற தன் பெயரை அனு என்று சுருக்கிச் செல்வகணபதி அழைத்தது அவளுக்குப் பிடிக்கவில்லை.

செல்வகணபதி அவளுடைய முதலாளி. அவள் வேலையில் சேர்ந்தபோது அவர் மானேஜிங் டைரக்டர் - எம்.டி. அவள் அவருடைய பி.ஏ. இருபது வருடங்களுக்குப் பிறகு அவள் எக்ஸிக்யூடிவ் செகரெட்டரி என்ற நிலைக்கு உயர்ந்து விட்டாள். செல்வகணபதி இன்னும் எம்.டியாகத்தான் இருக்கிறார்!

என்னதான் பதவி உயர்ந்தாலும் இப்போதும் அவள் செல்வகணபதியின் உதவியாளர்தான். ஆனால் நிறைய வித்தியாசங்கள் உண்டு. இப்போது அவளே சிலருக்கு மேலதிகாரி.அவளை விட உயர்ந்த பதவியில் இருக்கும் பொது மேலாளர் (ஜி.எம்.) கூட அவளிடம் சற்று மரியாதையாகத்தான் நடந்து கொள்கிறார். பரமசிவனின் கழுத்தில் இருக்கும் பாம்பாயிற்றே!

இதையெல்லாம் விடப் பெரிய வித்தியாசம், இப்போதெல்லாம் அவள் செல்வகணபதி கூப்பிட்ட குரலுக்கு ஓட வேண்டியதில்லை. ஆரம்பத்தில் அறைக்கு வெளியே தட்டெழுத்து எந்திரத்தின் முன் அமர்ந்துகொண்டு, சுருக்கெழுத்து உபகரணங்களுடன் அவருக்குச் சேவை செய்யக் காத்திருந்தது போன்ற நிலைமை இப்போது இல்லை.

அவளுக்கென்று தனி அறை. அவள் வாய்மொழியாக வடிக்கும் கடிதங்களைக் காகிதங்களில் ஏற்றும் உதவியாளர்கள் என்று அவளுக்கே ஒரு சாம்ராஜ்யம் இருக்கிறது. முக்கியமான அலுவல் இருந்தால் ஒழிய செல்வகணபதியின் அறைக்கு அவள் செல்ல வேண்டியதில்லை. ஏன், இரண்டு மூன்று நாட்கள் அவரைச் சந்திக்க வேண்டிய தேவை இல்லாமல் கூடக் கழிந்திருக்கின்றன.

ஏசியின் இதமான குளிர் உடலுக்கு இதமளித்தாலும், எப்போதும் அவள் உள்ளே கனன்று கொன்டிருக்கும் வெப்பம் அவளைச் சங்கடப்படுத்திக்கொண்டுதான் இருந்தது. அந்த நெருப்பு என்றாவது அணையுமா என்று தெரியவில்லை.

'நான் கொண்ட நெருப்பு
அணைக்கின்ற நெருப்பு
யார் அணைப்பாரோ?
இறைவனின் பொறுப்பு'

என்ற திரைப்படப் பாடல் வரிகள் அடிக்கடி அவள் நினைவில் வந்து போகும். அவள் கொண்ட நெருப்பை அணைக்கின்ற ஆள் அவளுடனேயே இருந்துகொண்டுதான் இருக்கிறான். ஆனாலும்...

இருபது வருடங்களுக்கு முன்பு நடந்த அந்தச் சம்பவத்தை ஒவ்வொரு நாளும் எத்தனை முறை நினைக்க வேண்டியிருக்கிறது! ஒரு ஆழமான காயம் தொடர்ந்து ஏற்படுத்தும் குத்துவலி போல் நிரந்தரமான வேதனையைக் கொடுத்துக் கொண்டிருக்கும் நினைவு! இந்த வேதனையைச் சுமந்து கொண்டு எப்படி  இவ்வளவு காலம் இயல்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று சில சமயங்களில் அவளுக்கு வியப்பாக இருக்கும்.

திருமணத்துக்கு முன்பு அவள் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தாள். திருமணத்துக்குப் பிறகு ஏற்பட்ட இடமாற்றம் காரணமாக வேலையை விட நேர்ந்தது. வேலைக்குப் போகாமல் வீட்டில் தன்னிச்சையாகப் பொழுதைக் கழிப்பதில் ஒரு சுகம் இருந்தது. இந்த சுகத்தைக் கொஞ்ச நாள் அனுபவிப்போமே என்று வேலைக்குப் போவதைப் பற்றி அவள் யோசிக்கவில்லை. அவள் கணவன் மூர்த்தியும்  அது  பற்றிப் பேசவில்லை. பிறகு பிரசவம், குழந்தை என்று சில  வருடங்கள் ஒடி விட்டன.

சுகன்யாவுக்கு மூன்று வயது நெருங்கியபோதுதான் அனுராதாவுக்கு மீண்டும் வேலைக்குப் போக வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. ஒரு சில மாதங்களில் சுகன்யாவை மழலையர் பள்ளியில்  சேர்க்க வேண்டும். அதற்குப் பிறகு தான் வேலைக்குப் போவதில் ஒன்றும் சிரமம் இருக்காது என்று அவளுக்குத் தோன்றியது. வேலைக்குப் போவதற்கான பொருளாதாரக் காரணங்கள் எதுவும் இல்லை என்பதால் மூர்த்தி மறுப்பு சொல்வானோ என்று பயந்தாள். ஆனால் மூர்த்தி, "உனக்கு எது பிடித்திருக்கிறதோ அப்படிச் செய்து கொள்" என்று சொல்லி விட்டான்.

எனக்கெனவே மூன்று ஆண்டுகள்  பழகியதில் மூர்த்தியின் புரிந்து கொள்கிற மனப்பான்மையும், மற்றவர்களைச் சங்கடப்படுத்தக் கூடாது என்ற சிந்தனையையும் கண்டுணர்ந்து பெருமிதம் கொண்டிருந்தவளுக்கு, அவன் மீது இருந்த மதிப்பு மேலும் கூடியது.

ஆனால் அவள் எதிர்பார்த்தபடி உடனே வேலை கிடைத்து விடவில்லை. அவள் படிப்பு, அனுபவம், அறிவுக்கூர்மை இவற்றையும் தாண்டி, அவளை வேலைக்கு அமர்த்திக் கொள்வதில் பலருக்கும் ஒரு பொதுவான தயக்கம் இருந்ததை அவள் உணர்ந்தாள். 'ஒருவேளை நான் பொழுதுபோக்குக்காக  வேலைக்கு வருகிறேன், நிலைத்து நிற்க மாட்டேன் என்று  தயங்குகிறார்களோ?'

ஒருவேளை இனி தனக்கு வேலை கிடைக்காதோ என்ற சந்தேகமும் அவளைப் பற்றிக் கொண்டது. அப்படி வேலை  கிடைக்காமல் போனால்  தனக்குப் பெரிய பதிப்பு எதுவும் இல்லை என்பதை அவள் உணர்ந்திருந்தாலும் அது ஒரு அவமானகரமான விஷயமாகத்  தோன்றியது. 'என்னை எப்படி நிராகரிக்கலாம்?' என்ற அகம்பாவச் சிந்தனையின் வெளிப்பாடோ இது என்றும் தோன்றியது. எப்படியிருந்தாலும் தன முயற்சியில் வெற்றி அடையாமல் விடுவதில்லை என்பதில் அவள் உறுதியாக இருந்தாள்.

நான்கு ஐந்து மாதங்கள் முயன்ற பிறகு அவளுக்கு இந்த வேலை கிடைத்தது. செல்வகணபதி அவளைக் கேட்டது ஒரே ஒரு கேள்விதான். 
"மிஸஸ் அனுராதா, நீங்கள் இந்த வேளையில் தொடர்ந்து இருப்பீர்களா?"

"இருப்பேன். நிச்சயமாக இருப்பேன்," என்று உறுதி அளித்து விட்டு உற்சாகத்துடன் வேலையில் சேர்ந்தாள்.

நேர்காணலின்போது 'மிஸஸ் அனுராதா' என்று மரியாதையாக அழைத்தவர், வேலையில் சேர்ந்த முதல் நாளே 'அனு கொஞ்சம் வரியா? ஒரு லெட்டர் டிக்டேட்  பண்ணணும்' என்று உரிமை எடுத்துக் கொண்டார்.

'அன்றே இதற்கு நான் எதிர்ப்புத் தெரிவித்திருக்க வேண்டும். என் பெயரைச் சுருக்கிக் கூப்பிடுவது  எனக்குப் பிடிக்காது' என்று சொல்லியிருக்க வேண்டும். 'நான் திருமணமானவள். நீங்களும் தொண்டுக் கிழவர்  அல்ல. எனவே என்னை 'நீ' என்று ஒருமையில் அழைக்க வேண்டாம்' என்று பணிவாகச் சொல்லியிருக்கலாம்'

அன்று அப்படிச் சொல்லியிருந்தால், அந்த அசம்பாவிதம் நடந்திருக்காதோ என்னவோ?

அலுவலகத்தில் எல்லாம் மிக இயல்பாகவும், சரியாகவுமே நடந்து வந்தன. செல்வகணபதி அவளுடைய உழைப்பை மதித்தார், வெளிப்படையாகப் பாராட்டினார்.

ன்று ஒரு முக்கியமான வாடிக்கையாளருடன் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடாகியிருந்தது. வெளியூரிலிருந்து வரும் அவருக்கு ஓட்டலில் அறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  ஓட்டலில் அவரை செல்வகணபதி சந்தித்துப் பேசுவதாக ஏற்பாடு. இது போன்ற முக்கியமான சந்திப்புகளின்போது அனுராதாவும் உடனிருக்க வேண்டியிருக்கும். சந்திப்பின்போது எடுக்கப்படும் சில முக்கிய முடிவுகளை உடனுக்குடன் குறித்துக் கொள்வது அவளது பொறுப்பு.

அன்று  அவர்கள் ஓட்டலுக்குச் சென்றபோது அந்த வாடிக்கையாளர் வந்திருக்கவில்லை. இருவரும் ஓட்டல் அறையிலேயே சற்று நேரம் காத்திருந்தபோது வாடிக்கையாளரிடமிருந்து  ஓட்டலுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. ஏதோ ஒரு தடங்கலினால் தான்  வருவது தாமதப்படும் என்று தெரிவித்திருந்தார்.

அவர் வரும் வரை அங்கேயே காத்திருப்பதா  அல்லது அலுவலகத்துக்குப் போய்விட்டு அப்புறம் வருவதா என்று அவர்கள் விவாதித்துக் கொண்டிருக்கும்போதே  சற்றும் எதிர்பாராமல் செல்வகணபதி அவள் கைகளைப் பற்றினார்.

அதற்குப் பிறகு நடந்தவற்றை, பிறகு நினைத்துப் பார்த்தபோது அவளுக்கே சில விஷயங்கள் தெளிவாக இல்லை. ஒரு முக்கிய வாடிக்கையாளரைச் சந்திக்கப் போகிறோம் என்பதால் அவள் தன்னைச் சற்று அதிகமாக அலங்கரித்துக் கொண்டிருந்தாள். அந்த அலங்காரம் செல்வகணபதியிடம் சலனத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.

ஆனால் நான்  ஏன்  நடந்ததைத் தடுக்கவில்லை? தடுக்க முயற்சி செய்ததாகத்தான் தோன்றியது. ஆனால் அது பலவீனமான முயற்சி என்று அவளுக்கே தெரிந்தது. அவள் இன்னும் சற்று ஆவேசமாகத் தடுத்திருந்தால் செல்வகணபதி பின்வாங்கி இருக்கலாம். நான் ஏன் அப்படிச் செய்யவில்லை? முதலாளி  என்ற விசுவாசமா அல்லது பயமா? இந்த வேலை போய்விட்டால் மீண்டும் வேலை கிடைக்காது என்ற எச்சரிக்கை உணர்வா அல்லது...... இது ஒன்றும் தவறில்லை என்று ஆழ்மனத்தில் தோன்றிய சமாதானமா?

எப்படியோ, எல்லாம் திடீரென்று நடந்து முடிந்து விட்டது. அவள் அதிர்ந்து நின்றபோது, " ஐ ஆம் சாரி அனு. நீ இப்போது வீட்டுக்குப் போய் விடு. பிறகு பேசிக் கொள்ளலாம்." என்ற செல்வகணபதி, டிரைவரை அழைத்துத் தன காரிலேயே அவளை வீட்டில் கொண்டு விடச் செய்தார்.

அடுத்த நாள் அவள் வேலைக்குப் போகவில்லை. மூர்த்தியிடம், "உடம்பு சரியில்லை, அசதியாக இருக்கிறது " என்றாள். உண்மையாகவே உடலிலும், மனதிலும் ஒரு அசதி வந்து குடிபுகுந்திருந்தது.

அதற்கு அடுத்த நாள் அவள் அலுவலகத்துக்குப் போனபோது ஒரு முடிவுடன்தான் போனாள். வேலையே விட்டு விலகுவதைத் தவிர வேறு வழி இருப்பதாக அவளுக்குத் தோன்றவில்லை. மூர்த்தியிடம் அப்புறம்தான் சொல்ல வேண்டும். வேலை பிடிக்கவில்லை என்று சொல்லிக்கொள்ளலாம். நிர்வாக இயக்குனரின் அணுகுமுறை சரியில்லை என்று கோடி காட்டி, விட்டு விடலாம். 'ஏன் என்னிடம் சொல்லாமல் வேலையே விட்டாய்?' என்று கேட்கிற ஆள் இல்லை மூர்த்தி. ஆனாலும் அவள் திடீரென்று விலகியதற்கு ஏதேனும் காரணம் இருக்க வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொள்வான்.
சீக்கிரமே வேறு வேலை தேடிக்கொள்ளலாம். அதில் ஒன்றும் பிரச்னை இருக்காது என்று தோன்றியது.

அன்று அவள் அலுவலகத்தை அடைந்தபோது அவள் இருக்கையில் ஒரு இளைஞன் உட்கார்ந்திருந்தான். அனுராதாவுக்குச் சற்று அதிர்ச்சியாகவே இருந்தது. நான் விலகுவதற்குள் செல்வகணபதியே என்னை அனுப்பி விட்டாரா?

அவளைப் பார்த்ததும் அவன் எழுந்து நின்றான். "மேடம், நீங்கள்தான் மிஸஸ் அனுராதா என்று நினைக்கிறேன். நீங்கள்  வந்ததும் சார் உங்களை உள்ளே வரச் சொன்னார்."

அனுராதா செல்வகணபதியின் அறைக்குள் நுழைந்தாள்.
"உட்கார் அனுராதா" என்றார் செல்வகணபதி. 'அனு' விரிந்து 'அனுராதா' ஆகியிருந்ததை அவள் கவனித்தாள். 'இனிமேல் நீ இங்கே வேலை செய்வது சரியாக இருக்காது. அதனால் விலகிக் கொள்' என்று செல்வகணபதி சொல்வதற்கு முன்னால்  தான் முந்திக்கொள்ள வேண்டும் என்ற துடிப்பில், முன்பே எழுதி வைத்திருந்த பதவி விலகல் கடிதத்தைக் கைப்பையிலிருந்து எடுத்து அவர் முன் நீட்டினாள்.

"நீ இப்படி ஒரு முடிவுக்கு வருவாய் என்று எனக்குத் தெரியும். அதனால்தான் நேற்றே வேறொரு ஏற்பாடு செய்து விட்டேன்."

"பார்த்தேன்"  என்றாள் அனுராதா சுருக்கமாக.

"ஆனால் நீ நினைக்கிற  மாதிரி இல்லை. புதிதாக வந்திருக்கிற சேகர்  உனக்கு பதிலாக இல்லை, உனக்கு உதவியாக" என்றார் செல்வகணபதி.

அனுராதா புருவங்களை உயர்த்தினாள்.

"நடந்த சம்பவம் மிகவும் வேதனைக்குரியது. நான் அதை நியாயப்படுத்த விரும்பவில்லை.  தவறு முழுவதும் என்னுடையதுதான். அடிப்படையான தவறு உன்னை இதுபோன்ற சந்திப்புகளுக்கு அழைத்துச் செல்வது என்ற நடைமுறையை உருவாக்கியது. சந்தர்ப்பங்களின்மீது பழி போட முடியாது என்றாலும் சந்தர்ப்பங்கள் தவறு நடப்பதற்கான வாய்ப்பை அதிகமாக்குகின்றன என்பதை மறுக்க முடியாது. அதனாலதான் இந்த மாற்று ஏற்பாடு."

அனுராதா பதில் சொல்லவில்லை. செல்வகணபதியின்  மீது இருந்த கோபம் தணியாவிட்டாலும அவர் உண்மையாகவே நடந்ததற்கு வருந்துகிறார் என்று தோன்றியது. ஆனால் அதனால் என்ன பயன்?

"வேலையை விட்டு விலக நீ முடிவு செய்திருப்பது இயல்பான செயல்தான். ஆனால் அதனால் என்ன பயன் என்று ஒரு நிமிடம் யோசித்துப் பார். நீ இங்கேயே தொடர்ந்து வேலை செய்யலாம். உன் வேலைப் பொறுப்புகளைக் கொஞ்சம் மாற்றப் போகிறேன். இத்தனை நாள் நீ செய்த வேலையை இனி சேகர் செய்வான். உனக்குச் சில நிர்வாகப் பொறுப்புகளைக் கொடுக்கப் போகிறேன். உனக்கு நம் நிறுவனத்தின் செயல்பாடுகள் பற்றி நன்றாகத் தெரியும்.  அனுபவமும்  இருக்கிறது. இயல்பான புத்திசாலித்தனமும் இருக்கிறது. நிச்சயம் உன் புதிய பொறுப்பில், உன்னால் நம் நிறுவனத்துக்குப் பயனுள்ள விதத்தில் செயல் பட முடியும் என்று  நினைக்கிறேன்."

அனுராதா அமைதியாக இருந்தாள்.

"உனக்கு யோசிக்க நேரம் வேண்டுமென்றால்......"

"இல்லை. உங்கள் யோசனைப்படியே செய்யுங்கள்" என்று சொல்லிவிட்டு வெளியே சென்றாள். வெளியே செல்ல அறைக்கதவைத் திறந்தவள் சற்றே திரும்பி, "என் இருக்கையில் சேகர் உட்கார்ந்திருக்கிறார். எனக்கு வேறொரு இருக்கைக்கு ஏற்பாடு செய்யுங்கள்" எனறாள்.

"இனிமேல் நீ என் பி.ஏ. இல்லை, எக்ஸிக்யூடிவ் செகரெட்டரி. அதனால் உனக்கு ஒரு தனி அறை ஏற்பாடு செய்கிறேன்" என்றார் செல்வகணபதி.

அதற்குப் பிறகு அவள் அலுவலக வாழ்க்கையே மாறி விட்டது. புதிய பொறுப்பில் அவள் காட்டிய ஆர்வமும், ஈடுபாடும், உற்சாகமான உழைப்பும் நிறுவனத்தின் செயல்பாட்டில் கணிசமான முன்னேற்றங்களுக்கு வழி வகுத்தன. செல்வகணபதியுடனான  சந்திப்புகள் மிகவும் குறைந்து விட்டன. அவர் அவளைக் கூப்பிடுவதையே பெரும்பாலும் தவிர்த்து வந்தார். அவள் தானாகத்தான் தேவைப்படும்போது  அவர் அறைக்குச் சென்று அவரிடம் பேசிவிட்டு வந்தாள். அவளுடைய பதவி, ஊதியம், செல்வாக்கு, மதிப்பு எல்லாமே வேகமாக உயர்ந்தன.

அதற்குப் பிறகு செல்வகணபதி ஒருமுறை கூட அவளை அனு என்று அழைத்ததில்லை - அனுராதாதான். மற்றவர்களுக்கு அவள் 'அனு மேடம்' ஆகி விட்டாள்.

ஆனாலும் உள்ளிருந்து வாட்டும் நோய்போல் அந்தச் சம்பவம் அவளை உறுத்திக்கொண்டே  இருந்தது. மூர்த்தியிடம் அதை மறைத்ததை அவனுக்குச் செய்த பெரிய அநீதியாகக் கருதினாள்.

அவள் குடும்ப வாழ்க்கையிலும் பல மாறுதல்கள். சுகன்யா பொறியியல் பட்டம் முடித்துவிட்டு மேல்படிப்புக்கு அமெரிக்காவுக்குச் சென்று விட்டாள். இன்னும் சில வருடங்களில் அவளுக்குத் திருமணம் செய்ய வேண்டும்.
அன்று இரவு மூர்த்தி மிகவும் உற்சாகமாகக் காணப்பட்டான். "அனு, நீ ஒரு விஷயத்தையே அடியோடு மறந்து விட்டாய் என்று நினைக்கிறேன்" என்றான்.

"எதை?"

"நமக்குக் கல்யாணமான விஷயத்தைத்தான்."

"உங்களுக்குப் பெண் ஒருத்தி இருக்கிறாள் என்பதை மறந்து விட்டுப் பேசுகிறீர்களா அல்லது அவள் இங்கே இல்லை என்கிற தைரியத்தில் பேசுகிறீர்களா?"

"இரண்டும் இல்லை. கல்யாணமானவர்கள் எல்லாம் திருமண தினம் என்று ஒன்றைக் கொண்டாடுவார்களாமே, கேள்விப்பட்டிருக்கிறாயா?"

"என்ன விளையாடுகிறீர்கள்? நாமும்தான் கொண்டாடி வருகிறோம். நம்முடைய அடுத்த திருமண தினம் ..... ஒ! இந்த மாதக் கடைசியில் வருகிறதே, மறந்து விட்டேன்."

"அதைத்தான் நான் சொன்னேன்."

"ஒகே!"

"இப்போதும் நீ ஒன்றை மறந்து விட்டாய்!"

"எதை?'

"நமக்குக் கல்யாணம் ஆகி இருபத்தைந்து வருடம் ஆகப் போகிறது என்பதை."

"மறக்கவில்லை. அதற்கு என்ன விசேஷமாக ஏதேனும் செய்ய வேண்டுமா?"

"பின்னே வேண்டாமா? சுகன்யா இங்கே இருந்திருந்தால் ஜமாய்த்திருப்பாள். அவள் இல்லாததால் சிம்பிளாக ஒரு கிராண்ட் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்யலாம் என்று பார்க்கிறேன்."

"சிம்பிளாக கிராண்ட் பார்ட்டியா? ஜமாயுங்கள்!"

"கொஞ்சம் பேரைத்தான் கூப்பிடப் போகிறேன். அதனால்தான் சிம்பிள் என்று சொன்னேன். ஆனால் பார்ட்டி கிராண்டாக நட்சத்திர ஓட்டலில் நடக்கும்! யார் யாரைக் கூப்பிட வேண்டும் என்று இப்போதே பட்டியல் போட ஆரம்பித்து விடு. குறிப்பாக உன் எம்.டி யைக் கூப்பிட வேண்டும். அவரை நான் பார்த்ததே இல்லை."

அனுராதாவிடமிருந்து சற்றும் எதிர்பாராத விதத்தில் ஒரு விம்மல் வெடித்தது.
மூர்த்தி அதிர்ந்து போய் விட்டான். "என்ன ஆச்சு அனு?"

இரண்டு நிமிடங்கள் குலுங்கிக் குலுங்கி அழுதபின் இருபது  ஆண்டுகளாக மனதில் அழுத்தி வைத்திருந்த துயரத்தை வாந்தி எடுப்பதுபோல் கொட்டித தீர்த்தாள்.

மூர்த்தி அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தான். அவள் சொல்லி முடித்ததும், "சரி போய்த் தூங்கு. காலையில் பேசிக்கொள்ளலாம்" என்றான்.

அனுவுக்குத்  திடுக்கென்றது. சம்பவம் நடந்தவுடன் செல்வகணபதி, "இப்போது வீட்டுக்குப் போ. அப்புறம் பேசிக்கொள்ளலாம்" என்று சொன்னது நினைவுக்கு வந்தது. இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை. ஆனாலும் மனம் லேசாகியிருந்தது. இருபது ஆண்டுகளாக மனதை அழுத்திக் கொண்டிருந்த சுமை இப்போது இறங்கி விட்டதல்லவா?

காலையில் வழக்கம்போல் மூர்த்திக்குக் காப்பி கொண்டுபோய்க் கொடுத்தாள். பேப்பர் படித்துக் கொண்டிருந்த மூர்த்தி காப்பி  தம்ளரை வாங்கி டீபாயில் வைத்தான்.சட்டென்று எழுந்து அவளை இறுகத் தழுவிக்கொண்டு அவள் முகம் முழுவதும் முத்த மழை பொழிந்தான். 
"அனு, ஐ லவ் யூ"

அனுவுக்கு மீண்டும் அழுகை பீரிட்டு வந்தது.

"இத்தனை வருடங்களாக இந்த வலியோடு நீ இருந்ததை நினைத்தால்தான் எனக்கு வேதனையாக இருக்கிறது" என்றான் மூர்த்தி. "காயம் ஏற்பட்டால் அதற்கு மருந்து போட வேண்டும். அதை மூடி வைத்து வலியோடு வாழ்ந்திருக்கிறாய். உன்னுடைய சங்கடம் எனக்குப் புரிகிறது. ஆனாலும் இவ்வளவு காலம் நீ இப்படி ஒரு மனச்சுமையோடு வாழ்ந்திருப்பது எனக்கு வலி ஏற்படுத்துகிறது."

"நீங்கள் ரொம்ப அற்புதமானவர். நான் மிகவும் கொடுத்து வைத்தவள்."

"எந்த ஒரு சங்கிலியும் அதன் மிகவும் பலவீனமான கணுவின் அளவுக்குத்தான் வலிமை பெற்றிருக்கும் என்று சொல்வார்கள். ஒரு கணு வலுவிழந்து விட்டால் அது சங்கிலியையே வலுவற்றதாக்கி விடும். பாதிக்கப்பட்ட கணுவை வெட்டி விட்டு மற்ற கணுக்களை இணைத்தால்தான் சங்கிலி வலுவாக இருக்கும். பல நிகழ்வுகளால் உருவாக்கப்படும் உறவுச் சங்கிலிக்கும் இது பொருந்தும்"

சில நாட்கள் கழித்து நடந்த அவர்கள் திருமண வெள்ளிவிழா விருந்தில் பங்கேற்ற செல்வகணபதியிடம் மூர்த்தி இயல்பாக, உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்தான்.