Saturday, September 26, 2026

33. க்யூ

ஆங்கில ஐ போல் நேராக இருந்த க்யூ, சற்று நேரத்தில் தன் முதுகைக் கூனிக் கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாகக் கேள்விக்குறி வடிவத்திற்கு மாறிக் கொண்டிருந்தது.

கேள்விக்குறியின் நேர்கோடு வடிவ அடிப்பகுதியில் நின்றுகொண்டிருந்த ராமநாதனின் மனதில் கவலைசிறிதாகத் தோன்றிப் பின் வளர்ந்தது. 

க்யூ நேராக நின்றபோது அநேகமாக டிக்கட் கிடைக்கலாம் என்ற நம்பிக்கை இருந்தபோதே, ஒருவேளை கிடைக்காமல் போய் விடுமோ என்ற சந்தேகமும் அவ்வப்போது அவர் மனதைக் குடைந்து கொண்டிருந்தது.

பின்பு, சிலரின் சோம்பல் முரிவுகளும், பலரின் குறுக்கு வழி முயற்சிகளுமாகச் சேர்ந்து, க்யூவின் முதுகை வளைத்ததும், நம்பிக்கை பெரும்பான்மை இழந்து, சந்தேகத்தின் ஆட்சி மேலோங்கியது.

க்யூவில் தனக்கு முன் இருந்தவர்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டே போவது நிஜமான காட்சியா, அல்லது முதுமை அடைந்து விட்ட கண் கண்ணாடியின் துணையை வேண்டி ஏங்குவதன் பிரதிபலிப்பா?

இந்தக் குழப்பம் மிகச் சிறிது நேரமே நீடித்தது.

சில நிமிடங்களிலேயே, க்யூ அகலவாட்டிலும் லேசாக வளரத் துவங்கி, நீளப்பகுதியை அலட்சியம் செய்ததும், நிலைமை அவருக்குப் புரிந்து விட்டது. 

தடி எடுப்பவனின் ஆட்சிக்கே தண்டல் என்ற நிலை தோன்றி விட்டதை அறிந்ததும், க்யூ சட்டென்று கலைந்து கடலாக மாறிக் கடல் அலையாக மாறி, டிக்கட் கவுன்ட்டர் என்னும் கரையை நோக்கி மோத ஆரம்பித்தது.

மோதிய வேகத்தில், சில அலைகள் பின்னுக்குத் தள்ளப்படுவதும், பின்னர் அவை மீண்டும் முன் வந்து மோதுவதுமாகக் கடலுக்கு ஒரு தத்ரூபமான உருவகம் அங்கே உருவானது. 

இந்த மோதலில், ஒரு அலையாகக் கலந்து கொள்ள முடியாத ராமநாதன், தரைதட்டி விட்ட கப்பல் போல் தனித்து நின்றார்.

 இந்த வயதில், இந்த சினிமா ஆசை தனக்குத் தேவைதானா என்ற எண்ணம் அவர் மனதில் எழுந்தது. ஒரு திரைப்படம் பார்க்க, அவர் இது போல்  க்யூவில் நின்று டிக்கட் வாங்க நிற்பது தெரிந்தால், அவருக்கு அறிமுகமானவர்கள் அவரை ஏளனமாக நினைக்கக் கூடும்.

ஆனால், மற்ற பலரைப் போல், மது, மாது என்று அலையாமல், சினிமா ஆசைக்கு மட்டுமே தான் ஆளாகி இருப்பது அவருக்குச் சற்றுப் பெருமையாகக் கூட இருந்தது.

அவருடைய சினிமாப் பைத்தியத்தை அவ்வப்போது கண்டிக்கும் அவர் மனைவி சகுந்தலாவுக்குக் கூட, அவளுடைய சகோதரர்களுக்கு இருப்பது போல், மதுப் பழக்கம் அவருக்கு இல்லாதது உள்ளூர ஆறுதலாகத்தான் இருக்கும். ஆயினும், அதை வெளிக்காட்டாமல், தன்னை அவ்வப்போது கண்டித்து, மனைவி என்ற தன் உரிமையை நிலைநாட்டிக் கொள்கிறாள்!

இந்தப் படம் கூட மனைவியின் பெருமை பேசும் ஒரு படம்தான். நல்ல படம் என்று பத்திரிகை விமரிசனங்கள் சான்றளித்திருந்ததால்தான், அவர் இந்தப் படத்தைப் பார்க்க விழைந்தார். 

அவர் கண்கள் உயர்ந்து, எதிரில் இருந்த பெரிய அறிவிப்புப் பலகையைப் பார்த்தன. ஒரு பெருமூச்சு தாராளமாக வெளியே வந்தது.

இன்றைக்குத்தான் இந்தப் படம் கடைசி! அதற்குள் ஏன் நம்பிக்கை இழக்க வேண்டும்?

இப்போதும் கூட டிக்கெட் கிடைக்கலாம் என்று, போன நம்பிக்கையைக் கைதட்டிக் கூப்பிட்டு நிறுத்த முயன்றார் அவர்.

எப்படியும் இந்தப் படத்தை இன்று பார்த்தாக வேண்டும் என்ற திடமான எண்ணத்தை மனதில் வளர்த்துக் கொண்டு (நன்றி டாக்டர் உதயமூர்த்தி!), கவுண்டரை நோக்கிச் சில அடிகள் முன்னேறினார் அவர்.

அப்போது, கவுன்ட்டரைத் தொட முயன்று, விசையுடன் பின்தள்ளப்பட்ட அலை ஒன்று அவர் மீது விழுந்து, அவரைத் தரையில் வீழ்த்தியது.

உள்ளுணர்வின் உந்துதலால், பர்ஸ் இருக்கும் வலது பான்ட் பாக்கெட்டை ஒரு கையாலும், இடது கையில் மேய்ந்து கொண்டிருந்த ஃபேவர்லூபா கைக்கடிகாரத்தை இன்னொரு கையாலும் அழுத்திக் கொண்டு, கீழே ஊன்றுவதற்குக் கை இல்லாமல், முழங்காலைத் தரையில் ஊன்றி  எழுந்து நின்றார் அவர். 

நம்பிக்கையை இருக்கச் சொல்வதா, அல்லது போகச் சொல்வதா என்று அவர் தீர்மானிப்பதற்குள், கவுன்ட்டர் காலி ஆகி விட்டது.

இவ்வளவு நேரம் சிரித்துக் கொண்டிருந்த கவுன்ட்டரின் வாயை, ஹவுஸ்ஃபுல்l என்ற ஆங்கில போர்டு அழுத்தி மூடியது.

ராமநாதனுக்கு ஏமாற்றம், அழுகை ஆத்திரம் எல்லாம் மாறும் விகிங்களில் கலந்து, மனதுக்குள் நுழைந்து நடனமாட ஆரம்பித்தன.

(1969-ஆம் ஆண்டு எழுதப்பட்டது.)

32. பணம் சம்பாதிக்கப் பத்து வழிகள் 

No comments:

Post a Comment