Saturday, September 26, 2026

33. க்யூ

ஆங்கில ஐ போல் நேராக இருந்த க்யூ, சற்று நேரத்தில் தன் முதுகைக் கூனிக் கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாகக் கேள்விக்குறி வடிவத்திற்கு மாறிக் கொண்டிருந்தது.

கேள்விக்குறியின் நேர்கோடு வடிவ அடிப்பகுதியில் நின்றுகொண்டிருந்த ராமநாதனின் மனதில் கவலைசிறிதாகத் தோன்றிப் பின் வளர்ந்தது. 

க்யூ நேராக நின்றபோது அநேகமாக டிக்கட் கிடைக்கலாம் என்ற நம்பிக்கை இருந்தபோதே, ஒருவேளை கிடைக்காமல் போய் விடுமோ என்ற சந்தேகமும் அவ்வப்போது அவர் மனதைக் குடைந்து கொண்டிருந்தது.

பின்பு, சிலரின் சோம்பல் முரிவுகளும், பலரின் குறுக்கு வழி முயற்சிகளுமாகச் சேர்ந்து, க்யூவின் முதுகை வளைத்ததும், நம்பிக்கை பெரும்பான்மை இழந்து, சந்தேகத்தின் ஆட்சி மேலோங்கியது.

க்யூவில் தனக்கு முன் இருந்தவர்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டே போவது நிஜமான காட்சியா, அல்லது முதுமை அடைந்து விட்ட கண் கண்ணாடியின் துணையை வேண்டி ஏங்குவதன் பிரதிபலிப்பா?

இந்தக் குழப்பம் மிகச் சிறிது நேரமே நீடித்தது.

சில நிமிடங்களிலேயே, க்யூ அகலவாட்டிலும் லேசாக வளரத் துவங்கி, நீளப்பகுதியை அலட்சியம் செய்ததும், நிலைமை அவருக்குப் புரிந்து விட்டது. 

தடி எடுப்பவனின் ஆட்சிக்கே தண்டல் என்ற நிலை தோன்றி விட்டதை அறிந்ததும், க்யூ சட்டென்று கலைந்து கடலாக மாறிக் கடல் அலையாக மாறி, டிக்கட் கவுன்ட்டர் என்னும் கரையை நோக்கி மோத ஆரம்பித்தது.

மோதிய வேகத்தில், சில அலைகள் பின்னுக்குத் தள்ளப்படுவதும், பின்னர் அவை மீண்டும் முன் வந்து மோதுவதுமாகக் கடலுக்கு ஒரு தத்ரூபமான உருவகம் அங்கே உருவானது. 

இந்த மோதலில், ஒரு அலையாகக் கலந்து கொள்ள முடியாத ராமநாதன், தரைதட்டி விட்ட கப்பல் போல் தனித்து நின்றார்.

 இந்த வயதில், இந்த சினிமா ஆசை தனக்குத் தேவைதானா என்ற எண்ணம் அவர் மனதில் எழுந்தது. ஒரு திரைப்படம் பார்க்க, அவர் இது போல்  க்யூவில் நின்று டிக்கட் வாங்க நிற்பது தெரிந்தால், அவருக்கு அறிமுகமானவர்கள் அவரை ஏளனமாக நினைக்கக் கூடும்.

ஆனால், மற்ற பலரைப் போல், மது, மாது என்று அலையாமல், சினிமா ஆசைக்கு மட்டுமே தான் ஆளாகி இருப்பது அவருக்குச் சற்றுப் பெருமையாகக் கூட இருந்தது.

அவருடைய சினிமாப் பைத்தியத்தை அவ்வப்போது கண்டிக்கும் அவர் மனைவி சகுந்தலாவுக்குக் கூட, அவளுடைய சகோதரர்களுக்கு இருப்பது போல், மதுப் பழக்கம் அவருக்கு இல்லாதது உள்ளூர ஆறுதலாகத்தான் இருக்கும். ஆயினும், அதை வெளிக்காட்டாமல், தன்னை அவ்வப்போது கண்டித்து, மனைவி என்ற தன் உரிமையை நிலைநாட்டிக் கொள்கிறாள்!

இந்தப் படம் கூட மனைவியின் பெருமை பேசும் ஒரு படம்தான். நல்ல படம் என்று பத்திரிகை விமரிசனங்கள் சான்றளித்திருந்ததால்தான், அவர் இந்தப் படத்தைப் பார்க்க விழைந்தார். 

அவர் கண்கள் உயர்ந்து, எதிரில் இருந்த பெரிய அறிவிப்புப் பலகையைப் பார்த்தன. ஒரு பெருமூச்சு தாராளமாக வெளியே வந்தது.

இன்றைக்குத்தான் இந்தப் படம் கடைசி! அதற்குள் ஏன் நம்பிக்கை இழக்க வேண்டும்?

இப்போதும் கூட டிக்கெட் கிடைக்கலாம் என்று, போன நம்பிக்கையைக் கைதட்டிக் கூப்பிட்டு நிறுத்த முயன்றார் அவர்.

எப்படியும் இந்தப் படத்தை இன்று பார்த்தாக வேண்டும் என்ற திடமான எண்ணத்தை மனதில் வளர்த்துக் கொண்டு (நன்றி டாக்டர் உதயமூர்த்தி!), கவுண்டரை நோக்கிச் சில அடிகள் முன்னேறினார் அவர்.

அப்போது, கவுன்ட்டரைத் தொட முயன்று, விசையுடன் பின்தள்ளப்பட்ட அலை ஒன்று அவர் மீது விழுந்து, அவரைத் தரையில் வீழ்த்தியது.

உள்ளுணர்வின் உந்துதலால், பர்ஸ் இருக்கும் வலது பான்ட் பாக்கெட்டை ஒரு கையாலும், இடது கையில் மேய்ந்து கொண்டிருந்த ஃபேவர்லூபா கைக்கடிகாரத்தை இன்னொரு கையாலும் அழுத்திக் கொண்டு, கீழே ஊன்றுவதற்குக் கை இல்லாமல், முழங்காலைத் தரையில் ஊன்றி  எழுந்து நின்றார் அவர். 

நம்பிக்கையை இருக்கச் சொல்வதா, அல்லது போகச் சொல்வதா என்று அவர் தீர்மானிப்பதற்குள், கவுன்ட்டர் காலி ஆகி விட்டது.

இவ்வளவு நேரம் சிரித்துக் கொண்டிருந்த கவுன்ட்டரின் வாயை, ஹவுஸ்ஃபுல்l என்ற ஆங்கில போர்டு அழுத்தி மூடியது.

ராமநாதனுக்கு ஏமாற்றம், அழுகை ஆத்திரம் எல்லாம் மாறும் விகிங்களில் கலந்து, மனதுக்குள் நுழைந்து நடனமாட ஆரம்பித்தன.

(1969-ஆம் ஆண்டு எழுதப்பட்டது.)

32. பணம் சம்பாதிக்கப் பத்து வழிகள் 

Friday, September 25, 2026

32. பணம் சம்பாதிக்கப் பத்து வழிகள்


எச்சரிக்கை:
இந்தக் கட்டுரையைப் படித்து முடித்ததும், நீங்கள் பணம் சம்பாதிக்கும் திறமையைப் பெற்று விடலாம் என்று எதிர்பார்த்தால், அதற்கு இந்தக் கட்டுரை ஆசிரியர் பொறுப்பல்ல.

‘பணம் சம்பாதிக்கப் பத்து வழிகள்’

இந்தத் தலைப்பில் ஒரு பத்திரிகையில் வந்த விளம்பரத்தைப் படித்ததும், என் உடலில் ஒரு சுறுசுறுப்பு ஏற்பட்டு, நரம்புகள் எல்லாம் வேகமாகத் துடிக்க ஆரம்பித்தன. (அதாவது, இந்த கட்டுரையின் தலைப்பைப் படித்ததும், உங்களுக்கு ஏற்பட்ட அதே அனுபவம்தான்!)

இதுதான் அந்த விளம்பரம்:

'நிறையப் பணம் சம்பாதித்துப் பத்தாதிபதி, நூறாதிபதி ஆயிராதிபதி, லட்சாதிபதி, கோடியாதிபதி இப்படி ஏதாவது ஒரு பதி ஆக விரும்புகிறீர்களா? ‘பணம் சம்பாதிக்கப் பத்து வழிகள்’ என்ற தலைப்பில் நாங்கள் நடத்தப் போகும் வகுப்பில் சேர்ந்து கொள்வதற்கான விண்ணப்பப் படிவத்தைப் பெற, 10 ரூபாய் போஸ்டல் ஆர்டருடனும், ரூ.1:50  தபால் தலை ஒட்டிய சுயவிலாசமிட்ட கவருடனும் எங்களுக்கு எழுதுங்கள். எங்கள் வகுப்புகள் முற்றிலும் இலவசமானவை. விலாசம்: பரோபகாரி, த.பெ.எண் 000, சென்னை – 000000'.

‘பரோபகாரி’யின் பரோபகார சிந்தை என்னை மெய்சிலிர்க்க வைத்தது. பணம் சம்பாதிப்பது பற்றி இலவச வகுப்புகள் நடத்தும் இவரைப் போல் ஊருக்கு ஒருவர் இருந்து விட்டால்... வேண்டாம். அப்புறம் எல்லோருமே பணக்கார்கள் ஆகி விடுவார்களே!

அந்த விளம்பரத்துக்கு அனுப்பப்பட்ட முதல் பதில் என்னுடையதாகத்தான் இருந்திருக்கும். பணக்காரன் ஆகப் போகும் மகிழ்ச்சிக் கனவுகளில், என் மனைவியின் ஆட்சேபணையையும், என் பாக்கெட் மணியில் (என் மனைவி எனக்கு மனம் உவந்து வழங்குவது) பத்து ரூபாய் துண்டு விழுவதையும் கூட நான்  பொருட்படுத்தவில்லை.

பத்து நாட்கள் கழித்து, விண்ணப்பப் படிவம் வந்தது. விண்ணப்ப.ப் படிவத்தைப் பூர்த்தி செய்வதில் ஒன்றும் சிரமம் இருக்கவில்லை. ஆனால், படிவத்துடன் இணைக்கப்பட்டிருந்த கடித்ததின் வாசகங்கள் அதிர்ச்சி அளித்தன.

‘படிவத்தை அனுப்பி இருக்கிறோம். முன்பே தெரிவித்தபடி, வகுப்பு முற்றிலும் இலவசம்தான். ஆனால், வகுப்பை நாங்கள் ஒரு பெரிய ஹோட்டலில் நடத்த விரும்புவதால், கொஞ்சம் செலவாகிறது. அத்துடன், கடிதப் போக்குவரத்து, பேப்பர், பேனா போன்ற செலவுகளும் இருக்கின்றன. இவற்றுக்காக மட்டும் நீங்கள் 150 ரூபாய் கொடுக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். இன்று அந்தத் தொகை உங்களுக்குக் கணிசமானதாகத் தோன்றலாம். ஆனால், இன்னும் சில நாட்களில், பணத்தில் புரளும்போது, இந்தத் தொகை உங்களுக்கு ஒரு பொருட்டாகத் தோன்றாது.

                                                                                                உங்கள் சேவகன்

                                                                                                  பரோபகாரி

கடிதத்தின் கடைசி வரை என் சோர்வைப் போக்கிவிட்டது பணத்தில் எப்படிப் புரள்வது என்பதைப் பல கோணங்களில் கற்பனை செய்து மகிழ்ந்தபின்தான், புரள்வதற்கு முன் 150 ரூபாய் புரட்ட வேண்டுமே என்ற கவலை எழுந்தது.

நிதி மந்திரியை (நிதி மந்திரி, பிரதம மந்திரி மற்றும் எல்லா இலாகா மந்திரியும் அவள்தான்!) அணுகி, என் கோரிக்கை மனுவைத் தாக்கல் செய்தேன். கடும் கண்டனத்துடன் என் மனு நிராகரிக்கப்பட்டது.  நான் பணம் சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் திருப்பிக் கொடுத்து விடுவதாகச் சொல்லிக் கெஞ்சிக் கூத்தாடி வாங்கினேன். அது நான் சம்பாதித்த பணம்தான் என்று எனக்கு அப்போது நினைவு வரவில்லை. (பொதுவாக, ஒவ்வொரு மாதமும் 1-ஆம் தேதி மாலை அதை நான் மறந்து விடுவது வழக்கம். நான் மறக்காவிட்டாலும், என் மனைவி  அடியோடு மறந்து விடுவாள்.)

விண்ணப்பம் அனுப்பிப் பத்து நாட்களுக்குப் பிறகு, ஒரு கடிதம் வந்தது.

”இந்த வகுப்பில் பங்கு கொள்ளத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிர்ஷ்டசாலிகளில் நீங்களும் ஒருவர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். சில அசந்தர்ப்பங்களால், நிகழ்ச்சியை ஹோட்டலில் நடத்த முடியவில்லை. வரும் 24-ஆம் தேதி ஞாயிறு மாலை 4 மணிக்கு மெரினா பீச்சில் நிகழ்ச்சி நடைபெறும். பங்கேற்பவர்களுக்குப் பட்டாணி சுண்டல் இலவசமாக வழங்கப்படும். தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறவும்.

விரைவிலேயே, பணக் குவியலில் படுத்து உருளப் போகும் உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்!

                                                                                பொதுநலத் தொண்டன்
                                                                                               பரோபகாரி.

என் ரத்தம் கொதித்தது. அடப்பாவிகளா! ஹோட்டலில் வகுப்பு என்று சொல்லிச் சுளையாக 150 ரூபாய் வாங்கி விட்டுத் திறந்தவெளி பீச்சில் பட்டாணி சுண்டல் பார்ட்டி என்று அறிவித்து ஏமாற்றி விட்டார்களே என்ற ஆத்திரம் பொங்கியது. ஆனல், மறுபடியும் கடிதத்தின் கடைசி வரி உற்சாகமூட்டியது. ‘பணக் குவியலில் படுத்து உருளப் போகும்...’

ஞாயிற்றுக்கிழமை மாலை நான்கு மணிக்குக் கடற்கரைக்குப் போனபோது, அங்கே, குறிப்பிட்ட இடத்தில், சுண்டல் விற்கும் பையனைக் கூடக் காணோம்.

சற்று நேரம் கழித்து, ஒவ்வொருவராக வர ஆரம்பித்தார்கள். மொத்தம் 50 பேர். இவ்வளவு பெரிய நகரமான சென்னையில், பணக்காரர் ஆக வேண்டும் என்ற ஆசை 50 பேருக்குத் தான் இருக்கிறது என்பது வியப்பாக இருந்தது. உற்சாகமாகவும் இருந்தது. இது போன்ற ரகசியங்கள் ரொம்ப பேருக்குத் தெரிந்து விடக் கூடாது, இல்லையா?

சரியாக நாலரை மணிக்கு, ராகு காலம் துவங்கியதும், இரண்டு பேர் ஒரு ஆட்டோவில் வந்து இறங்கினார்கள். ஒருவர் கையில் ஒரு பெட்டி இருந்தது.

எங்களை மணலில் உட்காரச் சொல்லி விட்டு, இருவரில் ஒருவர்  பேச ஆரம்பித்தார்.

”நண்பர்களே! இந்த நகரத்தின் மிகவும் சுறுசுறுப்பான, உற்சாகம் மிகுந்த, முன்னேறும் ஆர்வமுள்ள 50 பேரை இங்கே சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இப்போது, நமது கோர்ஸ் டைரக்டர் டாக்டர் பிரதாப் வகுப்பைத் துவக்குவார்.”

டாக்டர் பிரதாப் எழுந்தார்.  தனது பிரீஃப் கேசைத் திறந்து, தாம் எழுதி வைத்திருந்த குறிப்புத் தாட்களை எடுத்து வைத்துக் கொண்டார்.

“நண்பர்களே! நான் நடத்தும் கோர்ஸ் உங்களுக்குப் புரிவதற்கு ஏதுவாக, ‘திடீர்ப் பணக்காரர் ஆவது எப்படி?’ என்ற புத்தகம் ஒன்றை இங்கே கொண்டு வந்திருக்கிறோம். உலகப் புகழ் பெற்ற பொருளாதார நிபுணர் ஒருவரால் எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தை நீங்கள் எல்லோரும் வாங்க வேண்டும். யானை வாங்கியவர்கள், அங்குசம் வாங்கத் தயங்கலாமா?” என்றார்.

யானையை யார் வாங்கினார்கள்? யானை வாங்கப் பணம்தான் கட்டி இருக்கிறோம்!.

நான் ஒரு புத்தகம் வாங்கிக் கொண்டேன். 1957ஆம் ஆண்டு அச்சிடப்பட்டு, விலை ரூபாய் 1- 4 -0 (ஒரு ரூபாய் நாலு அணா) என்று போட்டிருந்தது அதன் மேல், ரூபாய் 15 என்று ரப்பர் ஸ்டாம்ப் குத்தப்பட்டிருந்தது. எங்களுக்குப் பத்து ரூபாய்க்கு மலிவு விலையில் கொடுக்கிறார்களாம்!

அநேகமாக எல்லோரும் புத்தகம் வாங்கி விட்டோம். என் பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு  தாடிக்காரர் மட்டும் புத்தகம் வாங்காததுடன், அசிரத்தையாகவும் இருந்தார்.

“நீங்கள் வாங்கவில்லையா?” என்றேன் நான்.

“நான் எதற்கு வாங்க வேண்டும்? இந்தப் புத்தகத்தை எழுதியதே நான்தானே?” என்றார் அவர்.

எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. ’திடீர்ப் பணக்காரர் ஆவது எப்படி?’ என்று ஊருக்கு உபதேசித்து விட்டு, ‘உலகப் புகழ் பெற்ற இந்தப் பொருளாதார மேதை’ வேட்டியின் கிழிசலை மறைத்துக் கட்டிக் கொண்டு (அதாவது மறைத்ததாக நினைத்துக் கொண்டு. அவரால் கிழிசலை மறைக்க முடிந்திருந்தால், அது எப்படி என் கண்ணுக்குத் தெரிந்திருக்கும்?), இந்தப் புத்தகம் அச்சிடப்பட்ட ஆண்டில் வாங்கிய சட்டையைப் போட்டுக் கொண்டு, என் பக்கத்தில் எளிமையுடன் உட்கார்ந்திருக்கிறார்! 

நான் அவரைத் துருவித் துருவிக் கேட்டபோது, அவர் சொன்ன விவரங்கள் என்னை திடுக்கிடச் செய்தன. .

இந்தப் பிரதிகள் எல்லாம் 1957-இல் அச்சடிக்கப்பட்ட பிரதிகள்தானாம். விலை போகாமல் இவரிடம் இருந்தவற்றை விற்றுத் தருவதாகச் சொல்லி இவரிடமிருந்து வாங்கிக் கொண்டிருக்கிறார் பரோபகாரி. விற்பனையாகும் பிரதிகளுக்கு, ஒரு பிரதிக்கு 50 பைசா வீதம் இவருக்குப் பணம் கொடுக்கப் போகிறார்கள்.

என் நம்பிக்கை தேய்ந்து கொண்டே வந்தது. ஆயினும், பத்து வழிகள் சொல்லப் போகிறார்களே, அவற்றில் ஏதேனும் ஒன்றை உபயோகித்துப் பணம் சம்பாதிக்க முடிந்தால், இதெல்லாம் ஒரு பொருட்டல்லவே!

டாக்டர் பிரதாப் பத்து வழிகளை விவரிக்க ஆரம்பித்தார். அவற்றை இங்கே சுருக்கமாகக் கொடுக்கிறேன்.

 

1.   ஓய்வு நேரங்களில் என்ன செய்கிறீர்கள்? கொஞ்சம் ‘மேக்கப்’ போட்டுக் கொண்டு, எங்காவது பிளாட்ஃபாரத்திலோ, ரயிலிலோ, ஸ்டேஷனிலோ, ஒரு அலுமினியக் குவளையை வைத்துக் கொண்டு உட்கார்ந்தால், எவ்வளவோ சம்பாதிக்கலாம். இரண்டு மணி நேரம் முயன்றால் கூடப் பத்து ரூபாய் சம்பாதிக்கலாம். மற்றவர்களுக்குத் தெரியாமல் தன்னை மறைத்துக் கொண்டு பிச்சை எடுப்பதைப் பற்றியும், மற்ற டெக்னிக்குகள் பற்றியும் தெரிந்து கொள்ள விரும்புவோர், அடுத்த வாரம் இதே இடத்தில் நாங்கள் நடத்தப் போகும் ‘பிச்சைத் தொழில் செய்து பணக்காரர் ஆகும் வழி’ என்ற வகுப்பில் கலந்து கொள்ளலாம். சலுகைக் கட்டணம் ரூபாய் 100 தான்.

2.  தெருவில் போகும்போது,  கீழே குனிந்து பார்த்துக் கொண்டே வாருங்கள். ஒவ்வொரு நாளும், இரண்டு பைசா நாணயம் முதல், பெரிய புதையல் வரை, ஏதாவது ஒன்று கிடைக்காமல் போகாது.

3.  தெருவில், வீட்டில், பறக்கும் காகிதங்களை எல்லாம் சேகரித்து வையுங்கள். சிலரைப் போல் குப்பைத் தொட்டிகளை.த் தேடிப் போக வேண்டாம். உங்கள் கைக்கு வரும் காலில் இடரும் காகிதங்களைச் சேர்த்தாலே, ஒரு நாளில் இரண்டு மூன்று கிலோ காகிதங்கள் தேறும்.

4.   ரேடியோ, பேப்பர்களில் வரும் காணாமல் போனவர்கள் பற்றிய விவரங்களை உன்னிப்பாபாக கவனித்து வைத்துக் கொண்டு தெருவில் போவோர், வருவோரை எல்லாம் உற்றுப் பாருங்கள். வாரத்துக்கு ஒருவராவது சிக்குவார். ஒரே தடவையில் கூட சன்மானமாகப் பத்தாயிரம் ரூபாய் கிடைக்கலாம் - அதிர்ஷ்டம் இருந்தால்.

5.  ரயில், பீச், சினிமா தியேட்டர் மற்றும் பொது இடங்களில், எல்லாரையும் கவனித்துக் கொண்டு வாருங்கள். யாராவது ஒரு பொருளை மறந்து விட்டு விட்டுப் போனால், அதை எடுத்துக் கொண்டு அவர்கள் பின்னால் போய், அவர்களிடம் கொடுங்கள். வெறும் தேங்க்ஸை வாங்கிக் கொண்டு வந்து விடாதீர்கள். ஹி ஹி என்று இளியுங்கள். அதுவும் அவர்களுக்குப் புரியாவிட்டால், பளிச்சென்று கேட்டு வாங்குங்கள் - உங்கள் சேவைக்குக் கூலி. கர்சீஃபுக்கு 10 பைசா என்று ஆரம்பித்து, பொருளின் மதிப்புக்குத் தகுந்த மாதிரி ரேட் வைத்துக் கொள்ளலாம். விலை மதிப்பு அதிகம் உள்ள பொருளாக இருந்தால், அதை நீங்கள் திருப்பிக் கொடுக்க வேண்டாம். ஆனால், இதை நாங்கள் சொல்லக் கூடாது!

 

பிரசாத் ஆறாவது வழியைச் சொல்ல ஆரம்பிப்பதற்குள், நான் எழுந்தேன். 

“நிறுத்து, ஐயா! மீதமுள்ள ஐந்து வழிகளையும், நீ சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீ சொல்லப் போகும் எந்த வழியுமே பயனளிக்கப் போவது இல்லை!” என்றேன் நான், கொதிப்புடன்.

பிரதாப் திகைத்து நிற்க, கூட்டத்தில் ஒருவர் எழுந்து நின்று, “உட்காருய்யா! அவர் சொல்லி முடிக்கட்டும்!” என்று என்னை அதட்டினார். 

நான் விடாமல், “இந்தப் பத்து வழியையும் தாண்டிப் பதினோராவது வழி ஒன்று இருக்கிறது. அந்த வழிதான் சுலபமான, நிச்சயமான வழி” என்றேன்.

பிரதாப் ஆவலுடன், “என்ன அது?” என்றார்.

“இது போன்ற கோர்ஸ்கள் நடத்துவதுதான்!” என்று சொல்லி விட்டு, நான் வெளியேறினேன்.

நான் போவதற்குள்ளேயே, கூட்டம் என்னை வெளியேறும்படி கூச்சல் போட்டது. நான் போகத் துவங்கியதும், பிரதாபைப் பார்த்து “மற்ற ஐந்து வழிகள் என்ன?” என்று கேட்டது. 

பிரதாப் தொடர்ந்து பேச ஆரம்பித்தார். ஆர்வம் மிக்க, துடிப்புள்ள, முன்னேறும் ஆசை கொண்ட மனிதர்கள் அவர் பேச்சை ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தனர். 

சற்று தூரம் போய் நான் திரும்பிப் பார்த்தபோது, பட்டாணி சுண்டல் விநியோகம் நடந்து கொண்டிருந்தது. ‘அடாடா! இன்னும் சற்று நேரம் கழித்து வெளியேறி இருக்கலாமே!’ என்று நினைத்துக் கொண்டேன்.

(1970-களின் துவக்கத்தில் எழுதப்பட்டது.)