தபாலில் வந்திருந்த அந்தக் கடிதம் சற்று வித்தியாசமாக இருந்தது.
ஒரு மாதிரி வெளிர் நீலத்தாளில், பின்னணியில் பட்டை பட்டையாக வெள்ளை கலந்து வரிகளாகத் தெரிய, அழகாக வரிசை பிசகாமல் டைப் அடிக்கப்பட்டு இருந்தது. நான் இதுவரை பார்க்கிறாத ஒரு வகை டைப்பிங்.
"தங்கள் மகனின்/ மகளின் பள்ளிக்கூட நுழைவு விண்ணப்பம் குறித்து...
கீழ்க்கண்ட காரணத்துக்காக, உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருக்கிறது
வரிசையாகக் காரணங்கள் குறிப்பிடப்பட்டு, 7-ஆம் எண்ணுக்கு எதிரே குறியிடப்பட்டிருந்தது
" 7. விண்ணப்பம் முழுமையாகப் பூர்த்தி செய்யப்படவில்லை."
இறுதியில், "தாங்கள் நேரில் வந்து, குறையைச் சரி செய்து கொள்ளலாம்' என்று முடித்து, முதல்வர் கையொப்பமிட்டிருந்தார்.
எல்லாமே கொஞ்சம் இயந்திரத்தனமாக இருப்பதாகத் தோன்றியது. நேரில் சென்றால் தான் விவரம் புரியும் என்று நினைத்துக் கொண்டேன்
முதல்வரை நேரில் சந்திக்கப் பலர் காத்திருந்தனர்.
என் முறை வந்ததும், முதல்வரின் அறைக்குள் சென்றேன்.
"வணக்கம்."
"வாருங்கள். ஓ...நீங்களா?...உங்களை இதற்கு முன் எங்கேயோ பார்த்திருக்கிறேனே!" என்றார் முதல்வர்.
"ஆமாம். இரண்டு வருடம் முன்பு, என் மகன் குமரனின் அட்மிஷனுக்காக உங்களைச் சந்தித்திருக்கிறேன்.
'ஓ! சொல்லுங்கள். என்ன விஷயம்?"
கடிதத்தை எடுத்துக் காட்டினேன்.
மணியை அடித்து சேவகனை அழைத்துக் கடிதத்தைக் கொடுத்து அதில் குறிப்பிடப்பட்டிருந்த விண்ணப்பத்தை எடுத்து வரச் சொன்னார் முதல்வர்.
விண்ணப்பத்தை சேவகன் அவரிடம் கொண்டு கொடுத்தபோது, தொலைபேசி அடிக்கவே, விண்ணப்பத்தை என்னிடம் கொடுத்து, "எல்லாம் சரியாகப் பூர்த்தி செய்யப்பட்டிருக்கிறதா என்று பாருங்கள்' என்று என்னிடம் கூறி விட்டுத் தொலைபேசியில் பேசத் தொடங்கினார் அவர்.
பார்த்தேன். எல்லாம் பூர்த்தி செய்யப்பட்டு தான் இருந்தது - அநேகமாக எல்லாமே!
முதல்வர் தொலைபேசியில் பேசி முடிக்கும் வரை காத்திருந்தேன்
பேசி முடித்ததும், "என்ன, பார்த்தீர்களா?" என்றார் அவர்.
"எல்லாம் பூர்த்தி செய்து இருக்கிறேனே, சார்!" என்றேன் நான்.
அவர் விண்ணப்பத்தை வாங்கிப் பார்த்து விட்டு, "என்ன சார், மூன்றாம் நம்பருக்கான பதிலைக் காலியாக விட்டிருக்கிறீர்களே!" என்றார், சற்றே எரிச்சலுடன்.
"அது அவசியம் பூர்த்தி செய்யப்படத்தான் வேண்டுமா?"
அவர் என்னை உற்றுப் பார்த்து விட்டு, "அதில் உங்களுக்கு என்ன சிரமம்?" என்றார்.
"சிரமம் என்பதற்காக இல்லை. என் மகளின் ஜாதி என்ன என்ற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டியது அவசியம் இல்லை என்று நான் நினைக்கிறேன்."
"நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். உங்கள் ஜாதி, அதன் உட்பிரிவு இதையெல்லாம் நீங்கள் குறிப்பிட வேண்டாம். பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரா, அல்லது..."
"மன்னிக்க வேண்டும். என் கேள்வி, அதை நான் எதற்காகக் குறிப்பிட வேண்டும் என்பதுதான்."
முதல்வர் சற்று நேரம் என்னையே உற்றுப் பார்த்தார். அவர் கண்களில் சட்டென்று ஒரு ஒளி.
"இந்த உரையாடலை நாம் ஏற்கனவே ஒருமுறை நிகழ்த்தி இருக்கிறோம் அல்லவா?" என்றார் அவர், சிரித்துக் கொண்டே.
"ஆமாம், சார். நான்தான் முதலிலேயே சொன்னேனே, என் பையனுடைய அட்மிஷனுக்காக, இரண்டு வருடம் முன்பு உங்களைச் சந்தித்திருக்கிறேன் என்று."
"இப்போது எனக்கு எல்லாமே நன்றாக நினைவுக்கு வருகிறது. அப்போதும், இந்த ஜாதி பற்றிய கேள்வியைப் பூர்த்தி செய்யாமல் விட்டிருந்தீர்கள்!"
அவர் கண்களை இலேசாக மூடிக்கொண்டு, பழைய நிகழ்வை நினைவுகூர்வது போல் யோசித்தார்.
என் மனமும் அந்த நிகழ்வை அசைபோட துவங்கியது.
"என் ஜாதி என்னவென்று நான் எதற்காகக் குறிப்பிட வேண்டும்?" என்றேன் நான், சற்றே கோபத்துடன்.
"நீங்கள் சலுகை பெறத் தகுதி உள்ள வகுப்பைச் சேர்ந்தவராக இருந்தால், இந்த விவரம் எங்கள் பள்ளிப் பதிவேட்டில் பதிவு செய்யப்படுவது பின்னால் உங்களுக்கு உதவக் கூடும்" என்றார் பள்ளி முதல்வர்.
"நான் சலுகை எதையும் கோரவில்லை, எதிர்காலத்தில் கோரப் போவதும் இல்லை. அப்படியானால், நான் என் ஜாதியைக் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை, அல்லவா?"
"இல்லாவிட்டாலும் கூட, அரசின் புள்ளிவிவரங்களுக்காக இந்த விவரம் தேவைப்படலாம்!"
"சலுகைகள் எவ்வளவு பேருக்கு வழங்கப்பட்டிருக்கின்றன என்ற புள்ளி விவரம் அரசாங்கத்துக்குப் போதுமே! சலுகை பெறாதவர்கள் பற்றிய புள்ளிவிவரங்கள் எதற்கு?"
"உங்கள் கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியாது, சார், ஒரு விஷயம், இந்த விண்ணப்பத்தை வடிவமைத்தது நான் இல்லை!" என்று சொல்லிச் சிரித்தார் முதல்வர்
"நான் உங்களைக் குறை சொல்லவில்லை, சார். ஒருபுறம், ஜாதிகளை ஒழிப்போம் என்று கூறுகிற அரசு, மறுபுறம், ஜாதிகளைப் பற்றி நினைவூட்டி, அவற்றைப் பதிவு செய்து, ஜாதிப் பாகுபாடுகளை நிரந்தரமாக்குவதும், சற்றும் கூச்சமோ, நாகரிகமோ இல்லாமல், ஒருவனைப் பார்த்து, 'உன் ஜாதி என்ன?' என்று எழுத்து மூலம் கேட்பதும் முரண்பாடாக இல்லை? நீங்கள் சங்கடத்தோடு கேட்டது போல், 'பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரா, அல்லது வேறு வகுப்பைச் சேர்ந்தவரா?' என்று கேட்கிற நாசூக்குக் கூட இல்லாமல், 'உன் ஜாதி என்ன?' என்று பட்டவர்த்தனமாக கேட்கிற இந்த போக்குக்கு என்னால் தலை வணங்க முடியாது, சார்! என்னை மன்னியுங்கள்!" என்றேன் நான்.
அவர் கொஞ்சம் யோசித்து விட்டு, "சரி, உங்கள் விருப்பம். என்னைப் பொருத்தவரை, உங்கள் நிலையை நான் ஏற்கிறேன். இது என் நிலையில் முடிவு செய்யப்படும் விஷயம் என்பதால், இந்த விவரத்தை நீங்கள் தராததைப் பொருட்படுத்தாமலேயே, மற்ற விவரங்களின் அடிப்படையில், உங்கள் மகனுக்கு அட்மிஷன் தருகிறேன்" என்றார் முதல்வர்.
அவருடைய பெருந்தன்மையையும், பரந்த சிந்தனையையும், முடிவெடுக்கும் துணிவையும் அன்று நான் மனதார வியந்தேன்.
இரண்டு வருடங்களுக்குப் பிறகு, மீண்டும் இதே பிரச்னையை இருவரும் விவாதிக்க நேர்ந்திருப்பது, எங்கள் இருவருக்குமே சற்று வியப்பாகத்தான் இருந்தது.
"நம்மைப் பொருத்தவரை, இந்தப் பிரச்னைக்கான முடிவு இரண்டு வருடங்களுக்கு முன்பே எடுக்கப்பட்டு விட்டதல்லவா?" என்றேன் நான்.
அவர் என்னைச் சற்றே முகவாட்டத்துடன் பார்த்து, "அந்த முடிவை என்னால் இப்போது எடுக்க முடியாது, சார்!" என்றார், உறுதியான குரலில்.
அதிர்ச்சி, கோபம், ஏமாற்றம் இவற்றில் என்னை அதிகம் பாதித்தது எது என்று கூற முடியாது
அவர் முடிவுக்கு நான் எதிர்ப்புத் தெரிவிக்குமுன், அவர் "உங்களுக்கு வந்திருக்கும் கடிதத்தை மறுபடியும் பாருங்கள். அதில் ஏதாவது வித்தியாசமாகத் தெரிகிறதா?" என்றார்.
பார்த்தேன். நான் முன்பே கவனித்தபடி, சற்றே வித்தியாசமான கடிதம்தான். ஆனால், அதற்கும் இந்தப் பிரச்சனைக்கும் என்ன தொடர்பு?
"இப்போது, விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் வேலை கம்ப்யூட்டரால் செய்யப்படுகிறது. உங்களுக்கு வந்த கடிதம் கூட கம்ப்யூட்டரால் அனுப்பப்பட்டதுதான். கம்ப்யூட்டருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் 'செக்லிஸ்டி'ன்படி, விண்ணப்பங்கள் சரிபார்க்கப்படுகின்றன விண்ணப்பம் முழுமையாக நிரப்பப்பட்டிருக்கிறதா, மாணவன் அல்லது மாணவியின் வயது குறைந்தபட்ச வரம்பைத் தாண்டி இருக்கிறதா போன்ற 15 விவரங்களை கம்ப்யூட்டர் சரி பார்த்து ஒப்புதல் செய்த பிறகுதான், விண்ணப்பங்கள் மீது நாங்கள் முடிவெடுக்க முடியும். இந்த விவரங்களில் ஒரு சிறிய குறை இருந்தாலும், கம்ப்யூட்டர் விண்ணப்பத்தை நிராகரித்து விடும். நீங்கள் சொல்லும் விளக்கத்தை மனிதனாகிய என்னால் ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால் கம்ப்யூட்டரைப் பொருத்தவரை, உங்கள் விண்ணப்பம் முழுமையாகப் பூர்த்தி செய்யப்படாத ஒன்றுதான். உங்கள் விளக்கத்தைப் புரிந்து கொள்கிற விதத்தில் கம்ப்யூட்டர் புரொக்ராம் செய்யப்படவில்லை. இப்போது உள்ள தொழில்நுட்பத்தின்படி அப்படிச் செய்யவும் முடியாது. எனவே, விண்ணப்பத்தை நீங்கள் முழுமையாக நிரப்பினால்தான், அதை என்னால் பரிசீலிக்க முடியும்."
முதல்வர் தன் நிலையை விளக்கி முடித்தார். என்னிடம் அவருக்கு பதில் இல்லை.
21-ஆம் நூற்றாண்டை நோக்கி நாம் வேகமாக முன்னேறிக் கொண்டிருப்பதாக அடிக்கடி சொல்லப்படுவதைப் பற்றி, முதல் முறையாக என் மனதில் இலேசான கவலை எழுந்தது.
(1995-ஆம் ஆண்டு எழுதப்பட்டது.)
